– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
மார்க்கத்தின் பெயரில் உருவான மார்க்க அங்கீகாரமில்லாத கொள்கைகள், வணக்க-வழிபாடுகள், சடங்கு-சம்பிரதாயங்களே “பித்அத்துக்கள்” எனப்படுகின்றன. இந்த பித்அத்தான கொள்கைகளுக்கும், நடைமுறைகளுக்கும் குர்ஆனிலோ, ஆதாரபூர்வமான ஸுன்னாவிலோ எத்தகைய அங்கீகாரமோ, வழிகாட்டல்களோ இருக்காது. மக்கள் இவற்றை நன்மையை நாடிச் செய்தாலும், இவை எந்த நன்மையையும் ஈட்டித் தரப் போவதில்லை!
பித்அத்துக்கள், அதைச் செய்வோரை நரகத்தை நோக்கியே இழுத்துச் செல்லும். மார்க்கத்தின் பெயரால் உருவான இத்தகைய ஆபத்தான பித்அத்துக்கள் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூண்றியுள்ளன. இவை வேரோடும், வேரடி மண்ணோடும் களையப்பட வேண்டியவை ஆகும்.
பித்அத்துக்களைக் களைய வேண்டுமென்றால், பித்அத்துக்கள் தோன்றி வளர்ந்து வருவதற்கான காரணங்களையும் கண்டறிந்து களைவது கட்டாயமாகும்.
இந்த அடிப்படையில் பித்அத் துக்கள் தோன்றி வளர்ந்து வருவதற்கான காரணங்கள் எவையென்பது இங்கே ஆய்வுக்கெடுத்துக்கொள்ளப்படுகின்றது.
-1- அறியாமை:
“அறியாமை” ஆபத்தான அம்சமாகும். பல தீமைகளை அறியாமை நன்மைகளாகக் காட்டி விடுகின்றது. அறிவீனர்களை ஆலிம்களாக்கி விடுகின்றது.
ஆலிம்களாக இனங்காணப்பட்ட அறிவீனர்களின் ஆதாரமற்ற உளறல்கள் எல்லாம் அங்கீகரிக்கப்பட்ட ‘ஃபத்வா”க்கள் ஆகிவிடுகின்றன.
“உமக்கு எது பற்றி அறிவு இல்லையோ, அதை நீர் பின்பற்ற வேண்டாம்! நிச்சயமாகச் செவிப் புலன், பார்வை, இதயம் ஆகிய இவை ஒவ்வொன்றும் விசாரிக்கப்படக்கூடியனவாக இருக்கின்றன.” (17:36)
தனக்கு அறிவற்ற விடயங்கள் குறித்துப் பேசுவதை இஸ்லாம் கண்டிக்கின்றது. இன்று சாதாரண மார்க்க ஈடுபாடு ஏற்பட்டு விட்டால் அவர்களெல்லாம் ‘ஃபத்வா”க் கொடுக்கும் “முஃப்தி”களாகி விடுகின்றார்கள்.
நிச்சயமாக அல்லாஹ்தஆலா கல்வியை மக்களிடமிருந்து ஒரேயடியாகப் பிடுங்கி எடுத்து விட மாட்டான். எனினும், உலமாக்களைக் கைப்பற்றுவான். அவர்களுடன் மார்க்க அறிவும் உயர்த்தப்படும். அதன் பின் மனிதர்கள் மத்தியில் அறிவீனமான தலைவர்கள்தான் மிஞ்சுவார்கள். அவர்கள் (மார்க்க) அறிவில்லாமல் ஃபத்வா வழங்கித் தாமும் வழிகெடுவதுடன், பிறரையும் வழிகெடுத்து விடுவார்கள்!” என நபி(ஸல்) அவர்கள் கூற, தான் செவியுற்றதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி 7307, முஸ்லிம் 2673)
இந்த நிலையை இன்றைய இஸ்லாமிய அமைப்புகள் பலவற்றிலும் நாம் காணக் கூடியதாக உள்ளது. மார்க்கத்தைக் குர்ஆன்-ஸுன்னாவின் அடிப்படையில் கற்றறிந்த உலமாக்களை விட 3 நாள், 40 நாள் ஜமாஅத்தில் சென்றவர்கள் அல்லது 4 மாநாடுகளில் கலந்து கொண்டு, 10-11 (CD) இறுவட்டுகளைக் கேட்டவர்களெல்லாம் தலைவர்களாகவும், மார்க்கத் தீர்ப்பு வழங்குபவர்களாகவும், மார்க்கத்தின் பெயரில் மார்க்கத்தில் இல்லாதவற்றையும், மார்க்கத்தில் இருப்பவற்றைக் கூட்டிக் குறைத்தும், திரித்தும் தீர்ப்பு வழங்கி விடுகின்றனர். இதனால் அவர்களும் வழிகெடுகின்றனர்; பிறரையும் மார்க்கத்தின் பெயராலேயே வழிகெடுத்து விடுகின்றனர்.
அறிவீனர்களைத் தலைவர்களாக எடுத்துக்கொள்ளும் விடயத்தில் பொது மக்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்கக் கடமைப்பட்டுள்ளனர். பொது மக்கள் மட்டுமன்றி, உலமாக்கள் கூடத் தீர்ப்பு வழங்கும் விஷயத்தில் எச்சரிக்கையாகவும், நிதானமாகவும் ஆதாரங்களை அறிந்து, அலசி ஆராய்ந்து தீர்ப்புச் சொல்லும் பக்குவத்தைப் பெறவேண்டும்.
இல்லாத போது பித்அத்தை ஒழிக்க முடியாது! ஒரு பித்அத்திலிருந்து விடுபட்டு, இன்னுமொரு பித்அத்தில் விழும் நிலைதான் தொடர்ந்துகொண்டிருக்கும்.
-2- மனோ இச்சைகளைப் பின்பற்றுதல்:
மனம் விரும்புவதை மார்க்கமாகவும், மார்க்கச் சட்டமாகவும் எடுத்துக்கொள்வது பித்அத் தோன்றவும், வளரவும் வாய்ப்பை உண்டாக்கியுள்ளது. இத்தகையவர்களுக்கு எத்தனை ஆதாரத்தைக் காட்டினாலும், அவர்களது மனம் அதை ஏற்றுக்கொள்ளாததால் ஆதாரத்திற்குக் கட்டுப்பட மாட்டார்கள். இத்தகையவர்கள் பித்அத்தை விட்டும் கழன்று வர மாட்டார்கள்.
மனோ இச்சைக்குக் கட்டுப்படும் இத்தகையவர்கள் சில போது நடைமுறை ரீதியான பித்அத்துக்களை விட்டு விலகினாலும், கொள்கை ரீதியான பித்அத்துக்களை விட்டும் இவர்கள் விலக முடியாதவாறு இவர்களது மனோ இச்சை இவர்களைப் பிடித்து இழுத்துக்கொண்டேயிருக்கும். இத்தகையவர்கள் ஆதாரபூர்வமான ஸுன்னாவையோ, அல்குர்ஆனையோ வழிகாட்டிகளாக வாயால் ஏற்றிருந்தாலும் உள்ளத்தால் தமது மனோ இச்சையையே வழிகாட்டியாக ஏற்றிருப்பர். இது இழிவான நிலையாகும்.
இவர்களது மனம் “சரி!” என்று சொல்வது இவர்களுக்குச் சரி. அது ஸுன்னாவுக்கு முரணாக இருந்தாலும் சரியே!
இவர்களது மனம் “பிழை!” என்று சொல்வது இவர்களுக்குப் பிழையானதே. அது ஸுன்னாவுக்கு உடன்பாடாக இருந்தாலும் சரிதான்!
இந்த மனோ நிலையிலிருப்பவர்கள் ஆதாரங்களை விடத் தமது மனோ இச்சைக்கே முன்னுரிமை அளிப்பர். இது விடயத்தில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். அறிவுள்ளோரும் மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டுச் செயற்படும் போது வழிகேட்டில் விழ வாய்ப்புள்ளது. ஒருவரின் அறிவு மட்டும் அவர் போகும் வழி சரி என்பதற்கு ஆதாரமாக அமைந்து விடாது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
“(நபியே!) தன் மனோ இச்சையைத் தனது கடவுளாக எடுத்துக் கொண்டவனை நீர் பார்த்தீரா? நன்கறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு விட்டான். மேலும், அவனது செவிப் புலனிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டு, அவனது பார்வையில் திரையையும் ஏற்படுத்தினான். அல்லாஹ்வுக்குப் பின்னர் அவனை நேர்வழியில் செலுத்துபவன் யார்? நீங்கள் நல்லுபதேசம் பெற வேண்டாமா?” (45:23)
மேற்படி வசனத்திலுள்ள அறிவு உள்ள, ஆனால் செவியிலும், விழியிலும், உள்ளத்திலும் சீல் குத்தப்பட்டவன் வழிகேட்டில் சென்று விடுவானென்ற அம்சம் அவதானிக்கத் தக்கதாகும்.
நல்ல மனிதர் கூட மனோ இச்சையைப் பின்பற்றி அல்லது தனது கோபம், பொறாமை, பழி வாங்கல், மட்டந்தட்டல், கர்வம் போன்ற தனது உணர்வுகளுக்குக் கட்டுப்பட்டுத் தீர்ப்பு வழங்கும் போது தவறி விடுவான்.
“தாவூதே! நிச்சயமாக உம்மை நாம் பூமியில் அதிகாரத் துக்குரியவராக ஆக்கினோம். எனவே, மனிதர்களுக் கிடையில் நீதியாகத் தீர்ப்பு வழங்குவீராக! மேலும், நீர் மனோ இச்சையைப் பின்பற்ற வேண்டாம்! அவ்வாறெனில், அது அல்லாஹ்வின் பாதையை விட்டும் உம்மை வழி தவறச் செய்து விடும். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி தவறுகின்றனரோ, அவர்கள் விசாரணைக்குரிய நாளை மறந்ததன் காரணமாக அவர்களுக்குக் கடுமையான வேதனையுண்டு.” (38:26)
மேற்படி வசனத்தில், தாவூத் நபியைப் பார்த்து “மனோ இச்சைக்குக் கட்டுப்படாதீர்! அப்படிக் கட்டுப்பட்டால் நீரும் வழிகெட்டு விடுவீர்!” எனக் கூறப்படுவதை அவதானித்தால் மனோ இச்சைக்குக் கட்டுப்படுபவன் எவ்வளவு பெரிய ஆலிமாக இருந்தாலும் வழிகெட்டு விடுவான் என்பதை அறியலாம்.
“அவர்கள் உமக்குப் பதிலளிக்க வில்லையென்றால் அவர்கள் தமது மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்துகொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து எவ்வித வழிகாட்டலுமின்றித் தனது மனோ இச்சையைப் பின்பற்றுபவனை விட மிகப் பெரிய வழிகேடன் யார்? நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்காரர்களான கூட்டத் தினரை நேர்வழியில் செலுத்த மாட்டான்.” (28:50)
ஆதாரம் இல்லாமல் மனோ இச்சையைப் பின்பற்றுபவன் மிகப் பெரிய வழிகேடன் எனக் கூறப்படுவதால், இது விடயத்தில் அனைவரும் எச்சரிக்கையுடன் இருந்து பித்அத்தை ஒழிக்க முயல வேண்டும்.
-3- சந்தேகத்திற்குரியவற்றைப் பின்பற்றுதல்:
அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான ஸுன்னாவும் சந்தேகத்திற்கப்பாற்பட்டதாகும். அதே வேளை, குர்ஆனில் நேரடியாகவும், தெளிவாகவும் கூறப்பட்டுள்ள விடயங்களை விட்டு விட்டு, பல கருத்துகளுக்கு இடம் பாடுள்ள முதஷாபிஹாத்தான விடயங் களைத் தப்பும், தவறுமாக விளங்கிப் பின்பற்றுவதும் பித்அத்தில் விழ வைக்கும்.
“அவன்தான் உம்மீது இவ்வே தத்தை இறக்கி வைத்தான். அதில் (கருத்துத் தெளிவுள்ள) “முஹ்கமாத்” வச னங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத் தின் அடிப்படையாகும். மற்றும் சில (பல கருத்துக்களுக்கு இடம்பாடான) “முதஷாபி ஹாத்”களாகும். எவர்களின் உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ, அவர்கள் குழப்பத்தை நாடியும், இதன் (தவறான) விளக்கத்தைத் தேடியும் அதில் பல கருத்துக்களுக்கு இடம்பாடானவற்றைப் பின்பற்றுகின்றனர். அதன் யதார்த்தமான கருத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார் கள். அறிவில் தேர்ச்சி பெற்றவர்களோ, “நாங்கள் அவற்றை நம்பிக்கை கொண்டோம். அனைத்தும் எங்கள் இரட்சகனிட மிருந்துள்ளவையே!” என்று கூறுவார்கள். சிந்தனையுடையோரைத் தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெற மாட்டார்கள்.” (3:7)
உள்ளத்தில் நோய் உள்ளவர்கள் சந்தேகத்திற்குரியவற்றையும், பல அர்த்தங்களுக்கு இடம்பாடான வசனங்களையும் பின்பற்றி பித்அத்துகளை உருவாக்குகின்றனர்.
“யகீன்” என்ற சொல்லுக்கு மரணம் என்ற அர்த்தமும் உள்ளது;
“(மரணம் எனும்) உறுதி எமக்கு வரும் வரை நாம் தீர்ப்பு நாளைப் பொய்ப்பித்துக்கொண்டு மிருந்தோம்” (எனக் கூறுவார்கள்.)” (74:46-47).
உறுதி என்ற அர்த்தமும் உள்ளது.
“அவ்வாறன்று, மிக நன்றாக நீங்கள் அறிவீர்களாயின் (உங்களை அது பராக்காக்கியிருக்காது) நிச்சயமாக, நீங்கள் நரகத் தைக் காண்பீர்கள்.” (102:5-6)
உள்ளத்தில் நோயுள்ளவர்கள் தெளிவான குர்ஆனின் வசனங்களையும், ஹதீஸ்களையும் உதறித் தள்ளி விட்டு, “யகீன் வரும் வரை உமது இறைவனுக்கு இபாதத் செய்!” என்ற வசனத்திற்கு உறுதி வரும் வரைதான் இபாதத் செய்ய வேண்டும். உறுதி வந்த பின்னர் இபாதத் தேவையில்லை எனக் கூறி தொழுகை, நோன்பு போன்ற இபாதத்துகளைப் புறக்கணித்து வருகின்றனர்.
நோன்பு என்றால் உண்ணவோ, பருகவோ கூடாதென்பது தெளிவாக இருக்கும் போது, மரியம்(அலை) அவர்களின் மௌனவிரதம் சம்பந்தப்பட்ட (19:26-33) வசனங்களை வைத்து உண்டுகொண்டும், பருகிக்கொண்டும் நோன்பிருக்கலாம் என்கின்றனர்.
“உண்மையான முஃமின்களிடம் அல்லாஹ் நினைவூட்டப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுநடுங்கிவிடும்” என்ற வசனத்தை வைத்துக் கொண்டு ஆடி-அசைந்து கொண்டு “திக்ர்” என்ற பெயரில் கூத்தையுண்டாக்கினர். இவர்கள் தெளிவான சான்றுகளை விட்டு விட்டு, குழப்பும் நோக்கத்தில் தப்பான அர்த்தங்களைக் கூறி வழிதவறிச் செல்லும் கூட்டத்தினராவர்.
குர்ஆன் வசனங்களுக்கும், ஹதீஸ் களுக்கும் அவை கூற வராத புதிய கருத்துகளைக் கூறி, குர்ஆன்-ஸுன்னாவின் கருத்தைத் திரிபுபடுத்துவது மிகப் பெரிய வழிகேடாகும். இந்த வழிகேடுதான் இன்று வரை புதிய புதிய பித்அத்தான கொள்கைகளையும், கூட்டங்களையும் உருவாக்கி வருகின்றது.
-4- பகுத்தறிவில் தங்கி நிற்பது:
குர்ஆன்-ஸுன்னாவை விட்டு விட்டு, பகுத்தறிவில் தங்கி நிற்பதும் பித்அத் தோன்ற வழிவகுக்கின்றது.
கூட்டு துஆ நல்லது தானே?
மவ்லிது நல்லது தானே? என்று எல்லா வகையான பித்அத்துகளையும் ஆதாரங்களைப் பார்க்காது, வெறும் அறிவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சரிகண்டு விடுகின்றனர்.
இது வழிகேட்டுக்கு வழிவகுக்கின்றது; வழிகேடுகளை வளர்க்கின்றது.
“..இத்தூதர் உங்களுக்கு எதை வழங்கினாரோ, அதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்! அவர் எதை உங்களுக்குத் தடுத்தாரோ, (அதை விட்டும்) விலகிக்கொள்ளுங்கள்! இன்னும், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்.” (59:7)
ரசூல் தந்ததை எடுத்துக்கொள்ள வேண்டும். ரசூல் தந்ததை மறுப்பது வழிகேடு. தராததை நாமாக உருவாக்குவதும் வழிகேடாகும்.
“அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தில் முடிவு செய்து விட்டால் தமது காரியத்தில் சுய அபிப்பிராயம் கொள்வதற்கு முஃமினான எந்த ஆணுக்கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் உரிமை இல்லை. எவன் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கின்றானோ நிச்சயமாக அவன் மிகத் தெளிவான வழிகேட்டில் சென்றுவிட்டான்.” (33:36)
எனவே, இந்த வழிகேட்டை ஒழித்தால்தான் பித்அத்தை ஒழிக்க முடியும்.
-5- தக்லீதும், இயக்கஃதனிநபர் வழிபாடும்:
சிலர் சில இமாம்கள் மீதும், தனிநபர்கள் மீதும் அளவுக்கு மீறிய பற்று வைத்து, அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வதென்ற தக்லீத் (கண்மூடிப் பின்பற்றும்) இயல்பில் இருக்கின்றனர். சிலர் சில இயக்கங்கள் மீது தக்லீத் பற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த இயக்கம் சொன்னால் நாம் சரி காண்போம் என்பது இவர்களது நிலை!
மற்றும் சிலர், “இந்த மத்ஹப் சொன்னால் ஏற்போம்! இல்லையென்றால் மறுப்போம்!” என்ற மனநிலையில் உள்ளனர். மற்றும் சிலர் மத்ஹபு மாயையிலிருந்து விடுபட்டு, அதை விட மோசமான தனிநபர் வழிபாட்டில் வீழ்ந்துள்ளனர்.
இவையனைத்தும் பித்அத்துக்களை வளர்க்கும் அம்சங்களாகவே திகழ்கின்றன.
“அவர்களின் முகங்கள் நரகத்தில் புரட்டப்படும் நாளில், “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? மேலும், இத்தூதருக்கும் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” என்று கூறுவார்கள். மேலும், “எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாம் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியார்களுக்கும் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்” என்று கூறுவர். “எங்கள் இரட்சகனே! நீ அவர்களுக்கு வேதனையில் இருமடங்கு வழங்குவாயாக! இன்னும் அவர்களை நீ பெருமளவில் சபிப்பாயாக!” (என்றும் கூறுவர்.)” (33:66-68)
முதலில் இந்த மாயைகள் அனைத்திலிருந்தும் நாம் விடுபட வேண்டும். ஒன்றிலிருந்து தப்பி, மற்றதில் விழுந்தால் கூட நரகிலிருந்து எங்களால் தப்ப முடியாது.
மற்றும் சிலர், “எமது மூதாதையர்கள் செய்தவற்றை நாம் விட மாட்டோம்!” என முரட்டுத்தனமாக விடாப்பிடியாக நிற்கின்றனர். இந்தச் சிந்தனையும் பித்அத் வளரக் காரணமாகி விடுகின்றது. ஆரம்ப கால இறைத் தூதர்கள் அனைவரது சத்திய அழைப்பும் இந்தப் போலிச் சாட்டுச் சொல்லைப் பயன்படுத்தித்தான் நிராகரிக்கப்பட்டது.
“அவ்வாறன்று, “நிச்சயமாக நாம் எமது மூதாதையர்களை ஒரு வழியில் இருக்கக் கண்டோம். நிச்சயமாக நாம் அவர்களது அடிச்சுவடுகளில்; செல் பவர்களே!” என்றும் கூறுகின்றனர்.” (43:22)
“அவர்களிடம் “அல்லாஹ் இறக்கியதைப் பின்பற்றுங்கள்!” என்று கூறப்பட்டால், “இல்லை! நாம் நமது மூதாதையர்கள் எதில் இருக்கக் கண்டோமோ, அதையே பின்பற்றுவோம்!” எனக் கூறு கின்றனர். அவர்களின் மூதாதையர்கள் எதையும் விளங்கிக் கொள்ளாதவர்களாகவும், நேர்வழி பெறாத வர்களாகவும் இருந்தாலுமா (பின் பற்றுவார்கள்)?” (2:170)
எனவே, தவறான மூதாதையர் பற்றிலிருந்து விடுபட வேண்டும்.
இதே வேளை, பித்அத் செய்வோர் தமது செயலை அழகாகக் காண்கின்றனர். மவ்லீது-மீலாது நிகழ்ச்சிகள் எவ்வளவு அழகானவை? அன்னதானம் வழங்குவது எவ்வளவு நல்ல செயல்? என்றெல்லாம் தமது பித்அத்துகளை அழகாகக் காண ஆரம்பித்து விடுகின்றனர்.
“யாருக்கு அவனது தீய செயல் அலங்கரித்துக் காட்டப்பட்டு, அவனும் அதனை அழகானதாகக் கண்டானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போன்றவனா?) நிச்சயமாக அல்லாஹ், தான் நாடு வோரை வழிகேட்டில் விட்டு விடுகின்றான். மேலும், தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகின்றான். எனவே, (நபியே!) அவர்கள் மீதுள்ள கவலைகளால் உமது உயிர் போய் விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன் கறிந்தவன்.” (35:8)
என்ற வசனம் கவனத்திற்கொள்ளத் தக்கதாகும். இத்தகையவர்கள் நன்மை செய்கின்றோம் என்ற எண்ணத்தில் பித்அத்துகளைச் செய்து நாளை மறுமையில் நஷ்டமடைந்து விடுவார்கள்.
இந்த நிலை எம்மில் எவருக்கும் ஏற்படக் கூடாதென்றால் தனிநபர் வழிபாடு, இயக்க வெறி, போலி மூதாதையர் பற்று என்பவற்றைக் களைந்து தூய்மையான முறையில் குர்ஆன்-ஸுன்னாவை அணுக முற்பட வேண்டும்.
-6- பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை ஆதாரமாகக்கொள்வது:
ஹதீஸ் கலை அறிஞர்கள் சில ஹதீஸ்களைப் “பலவீனமானவை” எனறும், மற்றும் சிலவற்றை “இட்டுக்கட்டப்பட்டவை” என்றும் பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் ஆய்வு செய்து அடையாளப் படுத்தியுள்ளனர். அவர்களது தியாகங்கள் அனைத்தையும் காலுக்குக் கீழ் போட்டு மிதிக்கும் விதத்தில் இன்றைய அறிஞர்கள் சிலர் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைக் கொஞ்சம் கூடக் கூச்சமின்றி மிம்பர்களில் கூறுகின்றனர்.
ஸஹீஹான உண்மையான ஹதீஸ்களையும், போலி ஹதீஸ்களையும் ஒன்றுடன் மற்றதைக் கலக்கின்றனர். மற்றும் சிலர், தமது போலியான ஹதீஸுக்கு முரண்படும் ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரிக்கவும் தயங்குவதில்லை.
அல்லாஹ்வின் தூதர் மீது இட்டுக் கட்டப்பட்ட போலி ஹதீஸ்களை அடிப்படை யாகக் கொண்டு செயற்படும் போது பித்அத்துகள் உண்டாகின்றன.
மற்றும் சிலர், பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு செயற்படலாம் என்ற தவறான கருத்தால் பித்அத்துகளை உண்டாக்கி வருகின்றனர்.
இத்தகைய இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான ஹதீஸ்கள் பித்அத்துகள் தோன்றவும், வளரவும் வழி வகுத்துள்ளன. எனவே, நாம் ஸஹீஹான ஹதீஸ்களைத்தான் பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
போலி ஹதீஸ்கள் புறக் கணிக்கப்பட வேண்டும். இல்லாத பட்சத்தில் பித்அத்து களை ஒழிப்பதென்பது சாத்தியமற்றதாகி விடும்.
-7- அந்நியருக்கு ஒப்பாக நடத்தலும், அவர்களைப் பின்பற்றுதலும்:
நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுமாறு ஏவப்பட்ட முஸ்லிம்கள் மாற்று மதத்தவர்களைப் பார்த்து, அவர்கள் செய்வது போன்று செய்கின்றனர். அவர்களைக் கண்மூடிப் பின்பற்றுகின்றனர். இதுவும் பித்அத் தோன்றவும், வளரவும் காரணமாக அமைகின்றது.
கிறிஸ்தவச் சகோதரர்கள் இயேசு பிறந்த தினத்தைக் “கிறிஸ்மஸ்” என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இதைப் பார்த்த முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் ஈஸா நபியின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் போது, நாம் முஹம்மத்(ஸல்) அவர்களது பிறந்த தினத்தைக் கொண்டாடாது இருக்கலாமா? எனச் சிந்தித்து “மீலாது-மவ்லித் விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர்.
இலங்கை முஸ்லிம்களின் மார்க்க நடைமுறைகளில் தென்னிந்திய முஸ்லிம்களின் தாக்கம் அதிகமாகும்.
தென்னிந்திய முஸ்லிம்கள் இந்து சமூகத்தின் மார்க்க நடைமுறைகளை அவதானித்தனர். பொழுது போக்கிற்காகவும், கலை ஆர்வத்திலும் அவர்கள் செய்த அனைத்தும் இவர்களும் சில அறபுப் பெயர்களைச் சூட்டிச் சின்ன சின்ன மாற்றங்களுடன் செய்தனர்.
அவற்றுக்கு இஸ்லாமிய சாயமும் பூசினர். முஸ்லிம்கள் கோயில்களுக்கும், இந்து மத வழிபாடு நடக்கும் இடங்களுக்குச் சென்று விடாமலிருப்பதற்காக இவற்றை உருவாக்கியதாகக் காரணமும் கூறிக் கொண்டனர்.
ஆனால், இன்று இஸ்லாத்திற்கு முரணான இந்து சமயத் தாக்கத்தின் காரணத்தால் தோற்றுவிக்கப்பட்ட சடங்கு-சம்பிரதாயங்களை அகற்றுவதே பெரும் சிரமமாக மாறியுள்ளது.
ஒரு கவிஞன் கூறும் போது;
“சடங்கு-சம்பிரதாயங்கள் சட்டைகளாகவே சமூகத்தில் அணியப் பட்டன! காலப்போக்கில் அவை அட்டைகளாக மாறி, இரத்தம் குடிக்கக் கற்றுக் கொண்டன!” என்று கூறிய கூற்று சமூகத்தின் நிதர்சன நிலையாகி விட்டது.
அந்நியர்களைப் பின்பற்றுவது எமது சிந்தனையிலும், நடத்தையிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். எனவே, இது குறித்து நாம் விழிப்பாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
அபூவாகித் அல்லைத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
“நாம் இஸ்லாத்தை ஏற்ற புதிதில் நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன் போருக்காகப் போய்க்கொண்டிருந்தோம். (இவர்கள் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தில் இணைந்தவர்கள்.)
நாம் ஒரு மரத்தைக் கடந்து சென்றோம். காஃபிர்கள் ஒரு இலந்தை மரத்தைப் புனிதமாகக் கருதி வந்தனர். அதற்குத் “தாது அன்வாத்” என்பது பெயராகும்.
இந்த மரத்திற்குக் கீழே இஃதிகாஃப் இருந்தனர். போருக்குப் போகும் போது இந்த மரத்தில் வாலைக் கொழுகி வைத்து விட்டு எடுத்துச் செல்வர். (அப்படிச் செய்தால் போரில் வெற்றி பெறலாமென்பது அவர்களது நம்பிக்கையாகும்.)
எனவே நாம் நபி(ஸல்) அவர்களிடம், “அவர்களுக்கு “தாது அன்வாத்” என்ற மரம் இருப்பது போல், எமக்கும் ஒரு “தாது அன்வாத்” என்ற மரத்தை ஏற்படுத்துங்கள்!” என நபி(ஸல்) அவர்களிடம் நாம் கேட்டோம்.
இது கேட்ட நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹு அக்பர்! (அல்லாஹ்வே மிகப் பெரியவன்!) எனக் கூறிப் பின்னர், “பனூ இஸ்ராயீலர்கள் மூஸா நபியிடம் கேட்டது போல் நீங்களும் என்னிடம் கேட்டுள்ளீர்கள். (நாம் கேட்டது பெரிய தவறு என உணர்த்தினார்கள்.)
அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு செய்துகொண்டிருக்கும் ஒரு கூட்டத்தாரிடம் அவர்கள் வந்தனர். (அவ்வேளை), அவர்கள், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எமக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக!” என்று கேட்டனர் (7:138) என்ற குர்ஆன் வசனத்தை ஓதிக் காட்டிய பின்னர் உங்களுக்கு முன்பிருந்தவர்களது வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி 2180)
மேற்படி வசனமும், ஹதீஸும் அந்நியர்களைப் பின்பற்ற முற்படுவது மார்க்கத்திலில்லாத பல வழிபாடுகள் உருவாவதற்கும், சமூகங்களின் அழிவுக்கும் காரணமாக அமையுமென்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
பனூ இஸ்ராயீலர்கள் காஃபிர்களைப் பார்த்து விட்டு, அவர்களுக்குப் பல சிலைகளிருப்பது போல் கண்ணால் பார்த்து வணங்கப்படுவதற்கு எமக்கும் ஒரு சிலையிருந்தால் நல்லது! என எண்ணியுள்ளனர்.
இவ்வாறே, புதிதாக இஸ்லாத்தையேற்ற சில நபித் தோழர்கள் காஃபிர்களுக்கு இருப்பது போல் எமக்கும் பறக்கத் பெற ஒரு மரமிருந்தால் நல்லது! என எண்ணியுள்ளனர்.
அவர்களது இந்தத் தவறான கேள்விக்குக் காஃபிர்கள் போன்று எம்மிடமும் ஏதாவது இருக்க வேண்டுமென்ற எண்ணம் தான் காரணமாக இருந்தது.
இதே எண்ணம்தான் மீலாது-மவ்லீது, கத்தம்-கந்தூரி போன்ற விழாக்களையும், கப்று வழிபாடு, உருவ வழிபாடு, கொடி வழிபாடு போன்ற ஷிர்க்குகளையும் இந்தச் சமூகத்தில் தோற்றுவித்துள்ளது.
மற்றுமொரு அறிவிப்பில் அபூஸைதுல் குத்ரீ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;
“உங்களுக்கு முன்பிருந்தவர்களைச் சாணுக்குச் சாண், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள்! அவர்கள் ஒரு உடும்பு பொந்தில் நுழைந்தாலும், (அதிலும்) நீங்கள் அவர்களைப் பின்பற்றுவீர்கள்!” என நபி(ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது (எமக்கு முன்பிருந்தவர்கள் என்றால்) “யூதர்களையும், நஸாராக் களையுமா குறிப்பிடுகின்றீர்கள்?” என நாம் கேட்ட போது, “(அவர்களல்லாமல்) வேறு யாரை?” என நபி(ரலி) அவர்கள் கேட்டார்கள். (புகாரி 7320, முஸ்லிம் 2669)
இந்த ஹதீஸ் தவறு செய்வதிலும், ஆதாரத்திற்கு முரணாக நடப்பதிலும் முஸ்லிம்கள் எவ்வளவு தீவிரமாக வழிகெட்ட யஹூதி-நஸ்றானிகளின் வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
எனவே, யூத-கிறிஸ்தவ வழிமுறைகளை இஸ்லாமிய ரூபத்தில் முஸ்லிம் சமூகத்தில் நுழைப்பவர்கள் குறித்து நாம் விழிப்பாக இருக்க வேண்டும். ஸுன்னாவை ஆதாரத்தின் அடிப்படையில் பின்பற்றுவதில்தான் உறுதியாக இருக்க வேண்டும்.
இதில் நாம் சற்றுக் கவனயீனமாக இருந்தாலும், ஷைத்தான் எம்மை வழிகேட்டில் தள்ளி விடுவான் என்பது குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்.
எனவே, குஃப்ஃபார்களின் வழிமுறைப் பின்பற்றுவதை நாம் தவிர்க்க வேண்டும். நாம் அவர்களுக்கொப்பாக நடப்பதற்கும் முற்படக் கூடாது.
“யார் எக்கூட்டத்திற்கு ஒப்பாகின்றாரோ, அவர் அக்கூட்டத்தைச் சேர்ந்தவரே!” (அஹ்மத்) என்ற ஹதீஸைக் கவனத்திற்கொண்டு செயற்படுவோமாக!