Featured Posts

பித்அத் தவிர்ப்போம்!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

“அஹ்லுஸ் ஸுன்னா”, “பிர்கதுன்னாஜியா” (வெற்றி பெற்ற பிரிவினர்), அத்தாயிபதுல் மன்ஸூரா (உதவி செய்யப்படும் குழுவினர்) என்றெல்லாம் சிறப்பித்துக் கூறப்படும் சுவனம் செல்லும் பிரிவினரின் பண்புகளில் பித்அத்தை விட்டும் விலகியிருப்பதும் ஒன்றாகும். பித்அத்தைத் தவிர்ப்பதும், அதை எதிர்ப்பதும் அஹ்லுஸ் ஸுன்னாவின் பண்பாகும்.

பித்அத்:
“பித்அத்” என்பது ஓர் அறபுப் பதமாகும். “பதஅ” என்ற வினைச் சொல்லிலிருந்து இது உருவானதாகும். புதியது, முன்னுதாரணமின்றித் தோற்றுவிக்கப்பட்டது என்பன இதன் பாஷை ரீதியான அர்த்தங்களாகும்.

“வானங்கள், மற்றும் பூமியின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது என்ப தையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பாதுகாவலனோ, உதவியாளனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா?” (2:117)

இங்கே வானம்-பூமியை எவ்வகை முன்னுதாரணமுமின்றி முதன்முதலில் உருவாக்கியவன் என்ற அர்த்தத்தில் ஃபதீஃ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறே;

“நான் தூதர்களில் புதியவனாக இல்லை.”
(46:9)

என்ற வசனத்தில் எனக்கு முன்னரும் தூதர்கள் வந்துள்ளனர். நான் முதன்முதலாக வந்த தூதனல்ல என்ற அர்த்தத்தில் “பித்அன்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் “பித்அத்” என்பது பாஷை ரீதியில் புதியது என்ற அர்த்தத்தைத் தரும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

மொழி ரீதியாகப் “புதியது” என்பது இதன் அர்த்தமென்றாலும், இஸ்லாமிய ஷரீஆவின் கண்ணோட்டத்தில் அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் அங்கீகாரமில்லாத மார்க்கத்தின் பெயரால் நிறைவேற்றப்படும் விடயங்கள் “பித்அத்” என வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. இந்த அடிப்படையில் நோக்கும் போது, உலகத்திலுள்ள எல்லாப் புதியவைகளும் பித்அத்தில் வந்து சேராது. உதாரணமாக, நபி(ஸல்) அவர்கள் அவர்களது காலத்திலிருந்த ஒட்டகம், கழுதை போன்றவற்றில் பயணம் செய்தார்கள். நாம் வாகனங்களிலும், விமானங்களிலும் பயணம் செய்கின்றோம். ஷரீஆ ரீதியில் இது பித்அத் – புதியதில் அடங்குமா? என்றால் அடங்காது. மொழி ரீதியில் இவையெல்லாம் பித்அத்தான – புதிய கண்டுபிடிப்புகள் என்றாலும் இவை மார்க்கத்தில் உருவான புதியவை கிடையாது. சிலர் இரண்டையும் போட்டுக் குழப்பி விடுகின்றனர். அது மட்டுமல்ல! நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் பயணம் போகவில்லை. நாம் போகின்றோம். எனவே, நபி(ஸல்) அவர்கள் செய்யாத புதிய அமல்(?)களையும் நாம் செய்யலாம் என்று வாதிடுகின்றனர்.

தவறான புரிதலை வைத்துத் தமது தவறை நியாயப்படுத்தவும், அத்தவறு சரியானதுதான் எனச் சாதிக்கவும் முற்படுகின்றனர். எனவே, ஷரீஆ ரீதியில் “பித்அத்” என்றால் என்ன? என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

“…அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி, துறவறத்தை அவர்கள் புதிதாக உருவாக்கிக் கொண்டனர். அதை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அதை அவர்கள் அதற்குரிய முறைப்படி பேணவுமில்லை. அவர்களில் நம்பிக்கைகொண்டோருக்கு அவர்களுக்குரிய கூலியை வழங்கினோம். அவர்களில் அதிகமானோர் பாவிகள்.” (57:27)

இந்த வசனம் சில அம்சங்களைப் பின்வருமாறு கூறுகின்றது;

  • கிறிஸ்தவர்கள் மீது துறவரம் – அதாவது, திருமணம் முடிக்காமல் தமது வாழ்வை இறை வழிபாட்டுக்காக ஒதுக்குவது விதிக்கப்படவில்லை.
  • அதை அவர்கள் தாமாகவே தம் மீது விதித்துக்கொண்டனர்.
  • அதை அவர்கள் இறை திருப்பதியைப் பெறும் நோக்கத்தில்தான் உருவாக்கினர்.

எனவே, “பித்அத்” என்றால்;

  • ஆதாரம் அற்றதாக இருக்கும்.
  • மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டதாக இருக்கும்.
  • அதைச் செய்வதன் மூலம் நன்மை நாடப்படும்.
  • அது உருவாக்கப்பட்ட நோக்கம் நல்லதாக இருக்கலாம். (ஆனால், நன்மை கிடைக்காது.)

மேற்படி முக்கிய அடையாளங்கள் பித்அத்தில் இருக்குமென்பதை இந்தக் குர்ஆன் வசனம் மூலம் விளங்கலாம். இதே கருத்தை இஸ்லாமிய அறிஞர்கள் பலரும் பல்வேறுபட்ட வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

பித்அத் குறித்து அறிஞர்கள் வரைவிலக்கணப்படுத்தும் போது பின்வருமாறு பல விளக்கங்களைத் தந்துள்ளனர்.

இமாம் இப்னு தைமிய்யா(றஹ்) அவர்கள் இது குறித்து கூறும் போது;

“மார்க்கத்தில் பித்அத் என்றால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ மார்க்கமாக விதிக்காதவையைக் குறிக்கும். பித்அத் என்றால் கட்டாயப்படுத்தியோ அல்லது விரும்பத் தக்கது என்றோ ஏவப்படாததைக் குறிக்கும்!” என்று குறிப்பிடுகின்றார்கள்.
(பதாவா இப்னு தமிய்யா 4:107-108)

மனித செயற்பாடுகளை “இபாதத்”, “ஆதத்” என இரு வகையாகப் பிரிக்கலாம். “இபாதத்” என்பது வணக்க வழிபாட்டைக் குறிக்கும். “ஆதத்” என்றால் சாதாரண பழக்க-வழக்கங்கள், வழக்காறுகளைக் குறிக்கும். இபாதத் விடயத்தில் அதைச் செய்வதற்கு “ஆதாரமிருக்கின்றதா?” எனப் பார்க்க வேண்டும். ஆதாரமில்லாதவை செய்யத் தகாதவையாகும். “ஆதத்”தான விடயங்களைப் பொறுத்த வரையில் “தடை இருக்கின்றதா?” எனப் பார்க்க வேண்டும். தடையில்லாத அனைத்தும் ஆகுமானவை என்பதே அர்த்தமாகும். தடை இல்லாவிட்டால் ஆகுமானது என்பது ஆதத்தின் நிலையாகும். அங்கீகாரத்திற்கான ஆதாரம் இல்லாவிட்டால் கூடாது என்பது இபாதத்தின் நிலைப்பாடாகும்.

ஒருவர் முதுகுக்குப் பின்னால் கைகளைக் கட்டிக்கொண்டு தொழுகிறார். இதை நாம் கூடாது என்கிறோம். உடனே “முதுகுக்குப் பின்னால் கை கட்டித் தொழக் கூடாது என்று ஆதாரம் தாருங்கள்!” என அவர் கேட்க முடியாது. அப்படிக் கேட்டால் எம்மால் காட்டவும் முடியாது. இந்த இடத்தில் நபி(ஸல்) அவர்கள் எதைச் செய்தார்கள் அல்லது செய்யச் சொன்னார்கள் அல்லது அங்கீகரித்தார்கள் என்பதற்கே ஆதாரம் தேட முடியாது. எதைச் செய்ய ஆதாரம் கிடைக்கிறதோ அதை அப்படியே செய்ய வேண்டும். அதற்கு மாற்றம் செய்ய முடியாது.

ஆனால் “ஆதத்” விஷயம் இதற்கு நேர் மாற்றமானதாகும். கேக் சாப்பிடலாம், குளிர் பானங்கள் குடிக்கலாம், பணிஸ் சாப்பிடலாமென்று ஒவ்வொன்றுக்காக ஆதாரம் தேட முடியாது. தடுக்கப்பட்டவை கூறப்பட்டிருக்கும். தடுக்கப்படாதவை அனைத்தும் ஆகுமானவையென்ற நிலைப்பாட்டில் செயற்பட வேண்டும். சிலர் இந்த விடயத்தையும் குழப்பிக்கொள்கின்றனர்.

“கூட்டு துஆ” கூடாது என்றால், “கூடாது என்பதற்கு என்ன ஆதாரம்?” என்று கேட்கின்றனர். இதைச் செய்பவர்தான் ஆதாரம் காட்ட வேண்டுமென்ற அடிப்படையைப் புரியாமல் இப்படிக் கேட்கின்றனர்.

அல்லது ஒலிபெருக்கியில் அதான் சொல்வதற்கு என்ன ஆதாரம்? மத்ரஸாக் கட்ட என்ன ஆதாரம்? என்றெல்லாம் கேட்டுத் தமது பித்அத்தை நியாயப்படுத்த முற்படுகின்றனர்.

எனவே ஏற்கனவே நாம் குறிப்பிட்ட (57:27) வசனத்தின் படியும், ஏலவே நாம் குறிப்பிட்ட இமாம் இப்னு தைமிய்யாவின் வரைவிலக்கணப் படியும் ஆதாரமில்லாத (இபாதத்) வழிபாடு-மார்க்க நிலைப்பாடு என்பவை பித்அத்தானவை என்பதையும், அவற்றைத் தவிர்ப்பது கட்டாயமென்பதைப் புரியலாம்.

இமாம் இப்னு தைமிய்யாவின் மற்றொரு விளக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது;

“குர்ஆனுக்கும், ஸுன்னாவுக்கும், இந்த உம்மத்தின் ஆரம்ப கால ஸலஃபுகளுக்கும் முரணான இபாதத்துகளும், கொள்கைகளும் பித்அத்களாகும்!”.
(ஃபதாவா இப்னு தைமிய்யா 18:346, 35:414)

குர்ஆன்-ஸுன்னாவில் இல்லாத இறை வழிபாட்டைச் செய்வது பித்அத் என்பது போன்றே, குர்ஆன்-ஸுன்னாவுக்கு முரணான கொள்கை-கோட்பாடுகளும் பித்அத் என இமாமவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

மற்றும் சில அறிஞர்களைப் பொறுத்த வரையில் குர்ஆன்-ஸுன்னாவுக்கு முரண்படுவதை பித்அத்தில் சேர்க்காமல் பாவத்தில் மட்டுமே சேர்ப்பர். உதாரணமாக, மஸ்ஜிதுக்குள் நுழையும் போது ஒருவர் வலது காலை முன்வைத்து உள்நுழைய வேண்டும். ஆனால் ஒருவர் இடது காலை முன்வைத்து நுழைகிறார். இது ஸுன்னாவுக்கு முரணானதாகும். ஆனால் “இது பித்அத்தா?” எனக் கேட்டால், “பித்அத்!” என்று கூறப்பட மாட்டாது. எனவே, குர்ஆன்-ஸுன்னாவுக்கு முரணானதாக இருந்தால்தான் அது பித்அத் என்று கூற முடியாது என்று விளக்குவர்.

இந்த விளக்கம் நியாயமானதென்றாலும், இடது காலை முன்வைத்துப் பள்ளிக்குள் நுழைந்தவரிடம் “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” எனக் கேட்டால், அவர் “தவறுதலாக நடந்து விட்டது!” என்றோ, அசட்டையாகத் தனது பொடுபோக்கால் நடந்ததாகவோ கூறினால் அது பித்அத்தாகாது என்பது உண்மையே! ஆனால், அவர் இடது காலை முன்வைத்துப் பள்ளிக்குள் நுழைவதுதான் மார்க்கமென்று அதற்கு மார்க்கச் சாயம் பூசினால் அப்போது அந்தத் தவறு பித்அத் என்ற நிலைக்கு வந்து விடும். எனவேதான் குர்ஆன்-ஸுன்னாவுக்கும், ஸலஃபுகளின் ஏகோபித்த முடிவுகளுக்கும் முரணான இபாதத்துகளும், கொள்கைகளும் பித்அத் என இமாமவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

தனது கூற்றிற்கு அவர் உதாரணம் கூறும் போது;

“கவாரிஜ்கள், ஷீஆக்கள், கதரிய்யாக்கள், ஜஹ்மிய்யாக்கள் போன்றோர் கொண்டிருந்த குர்ஆன்-ஸுன்னா, ஸலபுகளின் ஏகோபித்த முடிவுகளுக்கு முரணான கொள்கைகள் பித்அத்தாகும்!” என்று குறிப்பிடுகின்றார்கள்.

இவ்வாறே “பள்ளியில் பாட்டுப் பாடி, இசை இசைத்துக் கூடி திக்ர் செய்வோர், தாடி வழிப்பது, கஞ்சா அடிப்பது போன்றவற்றை நன்மை நாடி செய்வோர் போன்றவர்களும் பித்அத்வாதிகள்..” என்று குறிப்பிடுகின்றார்கள்.

தாடியை வழிப்பதும், கஞ்சா அடிப்பதும் ஹறாமாகும். எனினும் இவர்கள் இவற்றை மார்க்கமாகக் கருதிச் செய்கின்ற போது அவை பித்அத்தாகவும் மாறுகின்றன. எனவே, குர்ஆன்-ஸுன்னாவுக்கு முரணாக இருப்பவையும் பித்அத்தாகும் என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

நன்மையை நாடுதல்:
நன்மையான எல்லா விடயங்களையும் நபி(ஸல்) அவர்கள் எமக்குக் காட்டித் தந்து விட்டார்கள். குறிப்பிட்ட ஒரு வழிபாட்டை அல்லது கொள்கையை அல்லாஹ்வின் திருப்தியைத் தேடித் தரக் கூடியது என்று கூறுவதென்றால் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும். ஆதாரம் இல்லையென்றால் அது பித்அத் என்ற பட்டியலில் அடங்கி விடும்.

இது குறித்து இமாம் ஷாதிபீ(றஹ்) அவர்கள் விளக்கும் போது;

ஷரீஅத்திற்கு ஒப்பாக மார்க்கத்தில் புதிதாக உருவானதே பித்அத்தாகும். அதைச் செய்வதன் மூலம் நன்மை நாடப்படும்.

“இங்கே மார்க்கத்தில் புதிதாக உருவான ஒரு வழிமுறை என்று குறிப்பிடப்படுவது கவனிக்கத் தக்கதாகும்!”

உலகியல் நடைமுறைகளில் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாததைப் பயன்படுத்துவது பித்அத்தில் அடங்காது. மார்க்க நடைமுறைகளில் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாததைச் செய்வதுதான் தடுக்கப்பட்டதாகும்.

அல்லாஹ் மார்க்கம் பூரணமாகி விட்டதாகக் கூறுகின்றான்;

“..இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்கு நான் முழுமைப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது பூரணப்படுத்தி விட்டேன். மேலும் நான் இஸ்லாத்தையே உங்களுக்கு மார்க்கமாகப் பொருந்திக்கொண்டேன்..” (5:3)

உலகம் பூரணமாகவில்லை. அது வளர்ந்துகொண்டேயிருக்கும். அதில் தடுக்கப்பட்டவை தவிர்ந்த அனைத்தையும் பயன்படுத்தலாம். ஆனால், மார்க்கத்தின் பெயரில் “இதைச் செய்தால் நன்மை கிடைக்கும்!”, “இதை இப்படித்தான் செய்ய வேண்டும்!” என்று கூறுவதென்றால், அதற்கான வழிகாட்டல் கட்டாயம் குர்ஆன்-ஸுன்னாவின் மூலம் பெற்றிருக்க வேண்டும். இல்லாத போது அவை பித்அத்களாக இருக்குமே தவிர இபாதத்தாக இருக்காது.

இந்த அடிப்படையில் புரியாமல்தான் பஸ்ஸில் பயணம் போவதையும், விமானத்தில் பறப்பதையும் வைத்துக் கூட்டு துஆ, கத்தம், கந்தூரி, ஃபாதிஹா, மவ்லீதை சில அறிஞர்கள் நியாயப்படுத்தி வருகின்றனர்.

இமாம் ஹாஃபிழ் இப்னு றஜப்(றஹ்) பின்வருமாறு கூறுகின்றார்கள்;

“பித்அத் என்றால் அதற்கு ஆதாரமாக அமையத் தக்க எந்த அடிப்படையும் ஷரீஅத்தில் இருக்காது. ஷரீஅத்தில் ஆதாரமிருந்தால் பாஷை ரீதியில் அது பித்அத் என்று கூறப்பட்டாலும் ஷரீஆவின் பார்வையில் அது பித்அத் ஆகாது. யாராவது ஒருவர் ஒரு புதிய விடயத்தை ஆரம்பித்து, அவர் அதை மார்க்கத்துடன் இணைத்தால் அதற்கு மார்க்க அடிப்படையில் எந்த ஆதாரமும் இல்லாமலிருந்தால் அது வழிகேடாகும். “தீன்” அதை விட்டும் விலகி விட்டது. அந்தப் (ஆதாரமற்ற, மார்க்கமெனக் கருதப்படும்) புதிய செய்தி) கொள்கை சார்ந்த விடயமாக இருந்தாலும் சரி, செயல் சார்ந்ததாக இருந்தாலும் சரி அல்லது பகிரங்க-மறைமுக வார்த்தை(திக்ர்)களாக இருந்தாலும் சரியே! (அவை வழிகேடுகளே!)

ஸலஃபுகள் சில புதியவைகளை “நல்லது!” என்று கூறியிருந்தால், அவை “பாஷை ரீதியான பித்அத்” என்பதையே குறிக்கும்; ஷரீஆச் சார்ந்த பித்அத்தைக் குறிக்காது.

றமழான் மாதத்தில் “கியாமுல் லைல்” தொழுகையை உமர்(ரழி) அவர்கள் ஓர் இமாமின் தலைமையில் தொழ ஏற்பாடு செய்து.

மக்கள் அவ்வாறு தொழுவதைக் கண்டு;

“இந்தப் புதிய நடைமுறை நன்றாக உள்ளது!” என்று கூறியதும் இதே அடிப்படையில்தான்.
(பார்க்க; ஜாமிஉல் உலூம் வல்ஹிகம் 2:127-128)

அதாவது, உமர்(ரழி) அவர்கள் “கியாமுல் லைல்” தொழுகையை மக்கள் ஓர் இமாமின் தலைமையில் தொழுவதைக் குறிக்கும் போது “இந்த பித்அத் நல்லது!” என்று கூறினார்கள். இது “ஷரீஆ ரீதியான பித்அத்” என்ற அர்த்தத்தில் அவர் கூறவில்லை.

ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் “கியாமுல் லைல்” தொழுகையை ஆர்வப்படுத்தியுள்ளார்கள். அவர்களும் சில தினங்கள் ஜமாஅத்தாகத் தொழுவித்தார்கள். அது கடமையாக்கப்பட்டு விட்டால் உம்மத்திற்குச் சிரமமாகி விடும் என்பதற்காகத்தான் ஜமாஅத்தாகத் தொழுவதை விட்டார்கள். அவர்களது மரணத்தின் பின்னர் அந்த அச்சம் தீர்ந்து விட்டது. நபியவர்களின் மரணத்தின் பின் அது வாஜிபாக மாட்டாது. எனவே, ஜமாஅத்தாகத் தொழுவதற்கு ஒரு தடையாக இருந்த அச்சம் நீங்கி விட்டது. அடுத்து மக்கள் சிறு சிறு குழுக்களாகவும், தனித் தனியாகவும் பல அமைப்புகளில் தொழுது வந்தார்கள். அதை மாற்றி அனைவரும் ஒரு முகமாக ஒரே இமாமின் கீழ் தொழுவதற்கான ஏற்பாட்டையே உமர்(ரழி) அவர்கள் செய்தார்கள். அதையே அவர்கள் “நல்ல பித்அத்” என்றார்கள். இங்கே ஷரீஆ ரீதியான பித்அத்தாக அதை அவர் பார்க்கவில்லை. ஏனென்றால், “பித்அத்” என்றால் அதற்கு ஷரீஆவில் ஆதாரமிருக்காது. ஆனால், “கியாமுல் லைல்” தொழுகையை றமழானில் ஜமாஅத்தாகத் தொழ நபிவழியில் ஆதாரமுள்ளது. எனவே, பாஷை ரீதியில்தான் “இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக உள்ளது!” என்று கூறினார்கள். இதைப் புரிந்துகொள்ளாத சிலர் “பாஷை ரீதியான பித்அத்” என்ற பதம் பயன்படுத்தப்பட்டதைத் தவறாகப் புரிந்துகொண்டு, “பித்அத்தில் நல்ல பித்அத்களும் உள்ளன!” எனத் தவறாக வாதிடுகின்றனர். இது மிகத் தவறான கருத்தாகும்.

பித்அத்களை மார்க்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. அதில் “நல்லது!” என்ற பேச்சுக்கே இடமில்லை. “பித்அத்கள் அனைத்தும் வழிகேடு!” என்பதே நபி(ஸல்) அவர்களது “பித்அத்” பற்றிய தீர்ப்பாகும். இந்தத் தீர்ப்பை மாற்றியமைக்கும் அதிகாரம் எந்த மனிதனுக்கும் கிடையாது என்பதில் உறுதியாக இருப்போமாக!

2 comments

  1. Do you think that the sunnath jamath will be changed from their bidath ? THEY are very strong in this matter and do strong the poor muslims , Allahu guide us end of death and bless us always.

  2. إنما عليك البلاغ والله يهدي من يشاء من عباده, نسأل الله الهداية والثبات.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *