Featured Posts

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-6)

– M.T.M.ஹிஷாம் மதனீ

السنة

குறிப்பு (1)

விளக்கம்:
குறிப்பு (1) இச்சொல்லுக்குப் ‘பாதை’ என்று பொருளாகும். அப்பாதையானது நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை அடியொட்டியதாக இருக்கும். இங்கு ‘அஹ்லுஸ் ஸூன்னத்’ (ஸூன்னாவை சார்ந்தவர்கள்) என்பதின் மூலம் அக்கூட்டத்தாருக்கும் ஸூன்னாவுக்கும் இடையிலான தொடர்பை பிரதிபளிக்கச் செய்கின்றது. மாற்றமாக, பித்அத்வாதிகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்களைப் பொருத்தளவில் அவர்களின் குணாதிசயங்களுக்குத் தக்கவாறு அவைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில், அவர்களில் சிலர் தாங்கள் புரிகின்ற பித்அத்களை மையமாகக் கொண்டு அழைக்கப்படுகின்றனர். இதற்கு உதாரணமாக கதரிய்யாக்களையும் முர்ஜிய்யாக்களையும் குறிப்பிடலாம். மேலும் சிலர், தாங்கள் பின்பற்றுகின்ற தலைவர்களை அடிப்படையாகக் கொண்டு அழைக்கப்படுகின்றனர். இதற்கு ஜஹ்மிய்யாக்கள் சிறந்த உதாரணமாகும். வேறு சிலர், தாங்கள் புரிகின்ற மோசமான செயல்களைக் கொண்டு அழைக்கப்படுகின்றனர். இதற்கு உதாரணமாக றாபிழாக்களையும் ஹவாரிஜ்களையும் கூறலாம்.

கதரிய்யாக்கள்

அறிமுகம்:
‘கதர்’ என்னும் அறபுப் பதத்திற்கு ‘விதி’ என்று பொருளாகும். இதனடிப்படையில் விதியை மறுப்பவர்களே ‘கதரிய்யாக்கள்’ என்று அழைக்கப்பட்டனர். ஸகாப்பாக்களின் இறுதிக்காலத்தில் மஃபத் அல் ஜூஹனி என்பவனால் இக்கொள்கை உலகில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, ஈராக் நாட்டின் பஸரா நகரத்தின் ஆளுநராக இருந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸூப் என்பவரால் இவன் கொலை செய்யப்பட்டான். இக்கொள்கை கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த ஸோஸான் என்பவன் வழியாகவே மஃபத் அல் ஜூஹனிக்குக் கிடைத்தது.
இமாம் அவ்ஸாஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘முதன் முதலில் விதியைப் புறக்கணித்துப் பேசியவன் ஸோஸான் என்பவனே, இவன் ஈராக் நாட்டைச் சார்ந்த கிறிஸ்தவன் ஆவான். இவன் இஸ்லாத்தைத் தழுவி இஸ்லாத்தில் சிறிது காலம் இருந்துவிட்டு மீண்டும் மதம்மாறி கிறிஸ்தவ மதத்தில் இணைந்து கொண்டான்.
எனவே, ஸோஸான் வழியாக இக்கொள்கை முறையே மஃபத் அல் ஜூஹனிக்கும் அவனிடமிருந்து டமஸ்கஸ் நகரத்தைச் சார்ந்த கயலான் என்பவனுக்குத் கிடைத்தது. பின்னர் இக்கொள்கை பரிணாமம் பெற்று உலகின் பல நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. (அஷ் ஷரீஆ: 243)

கொள்கை:
பின்வரும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்N;டார் கதரிய்யாக்களாவர்.
1. உலகில் நடைபெறுகின்ற செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கற்பனைக்கோ அல்லது அவனது அறிவுக்கோ அப்பாற்பட்டதாகும்.

2. எல்லாச் செயல்களும் நடைபெற்று முடிந்த பின்னரே அவன் அவைகளைப் பற்றி அறிந்து கொள்கிறான்.
இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘செயல்கள் நடைபெறாதவரை அவைகளை அல்லாஹ் அறியமாட்டான் என்று கூறுபவர் கதரிய்யாக்களைச் சார்ந்தவராவார்.’
(அல்லாலகாஈ: 4:701)

இமாம் அபூ ஸவ்ர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘மனிதனது செயல்களை அல்லாஹ் படைக்கவில்லை. மற்றும், பாவச் செயல்களை அல்லாஹ் மனிதன் மீது விதியாக்கவோ அவைகளைப் படைக்கவோ மாட்டான் என்று கூறுபவர்களே கதரிய்யாக்களாவர்.’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *