– M.T.M.ஹிஷாம் மதனீ
கதரிய்யாக்களின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம்:
இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘இக்கொள்கை காலப்போக்கில் அழிந்துவிட்டது. இன்று இக்கொள்கையைப் பின்னபற்றுபவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இன்று உலகில் உள்ள கதரிய்யாக்களைப் பொறுத்தவரை ‘கருமங்கள் நடைபெற முன்னால் அல்லாஹ் அவைகளைத் தெரிந்து வைத்துள்ளான்’ என்ற முதலாவது அடிப்படையில் அஹ்லுஸ் ஸூன்னாவுடன் உடன்படுகின்றனர். எனினும், ‘மனிதனுடைய செயல்கள் இறைவனால் கற்பிக்கப்பட்டு விட்டன, ஆனால், அவைகள் மனிதன் புறத்திலிருந்து தனியாக நடைபெறுகின்றன, இறைவன் அவைகளைப் படைப்பதில்லை’ என்ற தமது கொள்கையில் அஹ்லுஸ் ஸூன்னாவுடன் மாறுபடுகின்றனர். இவர்கள் ஆரம்ப காலத்தில் இருந்த கதரிய்யாக்களைவிட கொள்கையில் சிறிது தெளிவுடையவர்களாக இருந்தாலும் அன்றைய கதரிய்யாக்களும் இன்றைய கதரிய்யாக்களும் அசத்தியத்திலேயே நிலைத்திருக்கின்றனர்.’
கதரிய்யாக்கள் தொடர்பான மார்க்கத் தீர்ப்பு:
நம் முன்னோர்களான ஸலபு ஸாலிஹீன்கள் கதரிய்யாக்கள் இறை நிராகரிப்பாளர்களா? அல்லது இறை விசுவாசிகளா? என்பது பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது, ‘அல்லாஹ்வின் அறிவைப் புறக்கணிப்பவர்கள் இறை நிராகரிப்பாளர்களே. எனினும், மனிதனுடைய செயல்களை அல்லாஹ் படைப்பதில்லை அவைகள் நடைபெற முன்னர் அல்லாஹ் அவற்றை அறிந்து வைத்திருக்கிறான் என்போர் இறை நிராகரிப்பாளர்களல்லர்’ என்கின்றனர்.
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களின் புதல்வரான அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: ‘எனது தந்தையிடம் கதரிய்யாக்கள் இறை நிராகரிப்பாளர்களா? என்று வினவப்பட்டது. அதற்கவர்கள், நடைபெற இருக்கின்ற செயல்கள் பற்றி அல்லாஹ் அறியமாட்டான் என்று கூறி அல்லாஹ்வுடைய அறிவைப் புறக்கணித்தால் அவர்கள் இறை நிராகரிப்பாளர்களே என்று பதிலுரைத்தார்கள்.’
இமாம் மர்வஸீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களிடம் கதரிய்யாக்கள் பற்றிக் கேட்டபோது அல்லாஹ்வின் அறிவைப் புறக்கணிக்காதவர்கள் இறை நிராகரிப்பாளர்களல்லர் என்றார்.
மேற்கூறப்பட்ட கருத்தை இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கீழ்வருமாறு தெளிவுபடுத்துகிறார்கள்: விடயங்கள் நடைபெற முன்னர் அவைகளை அல்லாஹ் அறியமாட்டான், அவ்வாறான விடயங்களை அவன் லௌஹூல் மஹ்பூளில் பதிவு செய்து வைக்கவில்லை என்று கூறுபவர்கள் இறை நிராகரிப்பாளர்களே. என்றாலும் விடயங்கள் நடைபெற முன்னர் அல்லாஹ் அவற்றை அறிந்து வைத்துள்ளான். எனினும், அவற்றை அல்லாஹ் படைப்பதில்லை என்று கூறுபவர்கள் இறை நிராகரிப்பாளர்களல்லர் என்கிறார். (மஜ்மூஉல் பதாவா: 3: 352)
இமாம் இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: கதரிய்யாக்கள் இறை நிராகரிப்பாளர்களா? இல்லையா ? என்பதில் மார்க்க அறிஞர்களின் மத்தியில் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. இமாம் ஷாபிஈ (ரஹ்) இமாம் அஹ்மத் (ரஹ்) போன்றோர் அல்லாஹ்வின் அறிவைப் புறக்கணிப்பவர்கள் இறை நிராகரிப்பாளர்கள் ஆவர் என்று தெளிவாகக் கூறியுள்ளார்கள் என்கிறார். (ஜாமிஉல் உலூம் பக்கம்: 26)
கதரிய்யாக்களின் புதிய பரிநாமம்:
இஸ்லாமிய வரலாற்றில் பிரபலமாக இருந்த கதரிய்யாக்கள் மறைந்து விட்டனர். எனினும், முஃதஸிலாக்கள் இவர்களது அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாத்து வருகின்றனர். எனவே தான் முஃதஸிலாக்கள், கதரிய்யாக்கள் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வருகின்றனர். (முஃதஸிலா: பக்கம்:40)