– M.T.M.ஹிஷாம் மதனீ
وَمِنَ الإيْمَانِ باللهِ : الإيْمانُ بِمَا وَصَفَ بِهِ نَفْسَهُ فِيْ كِتَابِهِ وَبِمَا وَصَفهُ بِهِ رَسُوْلُهُ مُحَمَّد صلى الله عليه وسلم
விளக்கம்:
அல்லாஹ் தொடர்பான வர்ணனை விடயத்தில் எமது நம்பிக்கை
மேற்கூறப்பட்ட வாசகத்தில் இருந்து அல்லாஹ் தொடர்பாக அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவில் இடம்பெற்றிருக்கக்கூடிய வர்ணனைகள் விடயத்தில் எமது நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும், மேற்குறிப்பிடப்பட்ட வாசகமானது அல்லாஹ் தொடர்பான நம்பிக்கையின் ஒரு பகுதியாகும். அதாவது, அல்லாஹ்வை விசுவாசம் கொள்வதானது பிரதானமாக நான்கு விடயங்களை உள்ளடக்கியுள்ளது. அவையாவன,
- அவனின் இருப்பை விசுவாசம் கொள்ளல்.
- அவனை ருபூபிய்யாவைக் கொண்டு ஒருமைப்படுத்தல்.
- அவனை உழூஹிய்யாவைக் கொண்டு ஒருமைப்படுத்தல்.
- அவனை அவனது அல் அஸ்மாஉ வஸ்ஸிபாத்தைக் கொண்டு ஒருமைப்படுத்தல்.
எனவே மேற்குறிப்பிடப்பட்ட வாசகமானது, நான்காம் பிரிவின் ஒருபகுதியான அல்லாஹ்வின் ஸிபாத் (பண்புகள்) பற்றிய நம்பிக்கையைத் தெளிவுபடுத்துகின்றது. அதனால் தான் எமது விளக்கத்தின் துவக்கத்தில் “அல்லாஹ் தொடர்பான நம்பிக்கையின் ஒரு பகுதி” என்று குறிப்பிட்டிருந்தோம்.
(في كتابه) இங்கு كتابه என்ற வார்த்தையின் மூலம் அல்குர்ஆன் நாடப்படுகின்றது. மேலும், அல்லாஹுத்தஆலாவே அல்குர்ஆனுக்கு இப்பெயரைச் சூட்டியுள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அது, லவ்ஹூல் மஹ்பூல் எனும் ஏட்டிலும், சங்கைமிக்க மலக்குகளின் கரங்களில் தவளக்கூடிய ஏடுகளிலும், எம்மத்தியில் காணப்படுகின்றன அல்குர்ஆன் பிரதிகளிலும் எழுதப்பட்டுள்ளது. எனவே, இங்கு كتاب (கிதாப்) என்ற பதத்தில் பயன்படுத்தப்பட்டாலும் مكتوب (எழுதப்பட்டது) என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும், அல்லாஹுத்தஆலா இச்சொல்லை தன்னுடன் இணைத்துக் கூறியுள்ளான். அதற்குக் காரணம், அல்குர்ஆனானது அவனது வார்த்தையாக இருப்பதினாலாகும்.
மேற்கூறப்பட்டுள்ள அறபு வாசகத்தில் விரிவாக ஆராயத்தக்க பல பகுதிகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.
1. அல்லாஹ்வை விசுவாசம் கொள்வதில், அவன் தன்னைப்பற்றி வர்ணித்த வி;டயங்களை விசுவாசம் கொள்வதும் உள்ளடங்கும். அதன் விளக்கமாவது,
நாம் முன்பு குறிப்பிட்ட பிரகாரம், அல்லாஹ்வை விசுவாசம் கொள்வதில் அவனது அல் அஸ்மாஉ வஸ்ஸிபாத்களை விசுவாசம் கொள்வதும் உள்ளடங்கியுள்ளது. ஏனெனில், அல்லாஹுத்தஆலா தன்னைப்பற்றிக் குறிப்பிடும் போது, தனக்குத் தனியான பெயர்களும் பண்புகளும் இருப்பதாகக் கூறியுள்ளான். அவற்றையே நாம் “அல் அஸ்மாஉ வஸ்ஸிபாத்” என்கிறோம்.
மேலும், இவ்விடயம் சாதாரணமாக அனைவரினாலும் ஏற்றுக் கொள்ள முடியுமான ஓர் உண்மையாகும். ஒருவன் எவ்விதப்பண்புகளும் இல்லாமல் இருக்கிறான் என்று கூறுவது சாத்தியமற்ற ஒன்றாகும். எந்த ஒன்றுக்கும் பண்புகள் அவசியம். அப்போது தான் அப்பொருள் இனம் காணப்படுகின்றது. இதனால் தான் அல்லாஹ் தொடர்பான நம்பிக்கையில் ஒரு பகுதியாக அவனது பண்புகளை விசுவாசம் கொள்வதும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, அவனது பண்புகளை முழுமையாக விசுவாம் கொள்ளாதவன் அல்லாஹ்வை முழுமையாக விசுவாசம் கொள்ளாதவனைப் போலாவான்.
2. அல்லாஹ்வின் பண்புகளானது மறைவான விடயங்களுடன் தொடர்புடையனவாகும். எனவே, மறைவான விடயங்களில் மனிதனின் நிலைப்பாடானது உள்ளதை உள்ளபடி நம்புவதாகும். அதைவிடுத்து மற்றொரு விளக்கத்தின் பால் செல்வது தடுக்கப்பட்ட காரியமாகும்.
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹுத்தஆலா தன்னை எவ்வாறு வர்ணித்துள்ளானோ அல்லது அவனது தூதர் எவ்வாறு அவனைப்பற்றி வர்ணித்துள்ளாரோ அவ்வாறன்றி வேறு விதங்களில் அவனை வர்ணிக்க முடியாது” என்கிறார். (மஜ்மூஉல் பதாவா)