Featured Posts

தகனம் செய்யப்பட்ட மையத்துக்கு கேள்வி கணக்கு உண்டா?

-உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி
அடக்கம் செய்யப்படுகின்ற ஜனாஸாவுக்கு கேள்வி கணக்கு உண்டு என்பதை எல்லோரும் அறிந்து வைத்துள்ளோம். அப்படியானால் தகனம் செய்யப்பட்டு (எரிக்கப்பட்டு) சாம்பலை கடலில் கரைத்து விடக் கூடிய ஜனாஸாவுக்கு கேள்வி கணக்கு வேதனை இல்லையா? என்ற கேள்வியை பலரும் கேட்பதுண்டு.

அதுபோல் கடலில் அல்லது ஆற்றில் மூழ்கி மீன்களுக்கு இரையாகிப் போன மையத்துகளுக்கும் குண்டு வெடிப்பில் சிதைந்து போன மையத்துக்ளுக்கும் இது போன்ற நிலையில் உள்ள மையத்துக்களுக்கும் கேள்வி கணக்கு உண்டா? வேதனை உண்டா? என்றும் கேட்கின்றனர். அல்லாஹ்வின் வல்லமையை தெரிந்து கொண்டால் இதற்கான பதிலும் கிடைத்துவிடும்.

அல்லாஹ் மனிதனை (படைப்பினங்களை) படைக்கும்போது எந்த முன்மாதிரியுமின்றி அவன் நினைத்த மாதிரி படைத்தான். ஒரு துளி நீரிலிருந்துதான் மனிதனை படைத்தான். அல்லாஹ் ஏதாவது ஒன்றை படைக்க நாடினால் ‘ஆகுக’ என்று கூறிவிடுவான். அது உடனே (ஒரு படைப்பாக) ஆகிவிடும். இப்படியான வல்லமை படைத்த அல்லாஹ்வுக்கு, தகனம் செய்யப்பட்ட கருகி சாம்பலாகிப் போன சிதைந்துப் போன உடல்களை மீண்டும் ஒன்று சேர்க்க முடியாதா? கேள்வி கேட்க முடியாதா? ஆற்றலும் வல்லமையுமுள்ள அல்லாஹ்வுக்கு இது மிகவும் இலகுவான காரியம். பின்வரும் குர்ஆன் வசனத்தையும் ஹதீஸையும் நிதானமாக படியுங்கள். சந்தேகத்திற்கு தெளிவான பதில் கிடைக்கும்.

“மனிதனை (ஒரு துளி) விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில் லையா? (இப்போது) அவனோ நம்மை மறு த்து) பகிரங்கமாக எதிர்வாதம் புரிகிறான்.

அவன் நமக்கு (ஒரு) உதாரணம் காட்டுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். “எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்? என்று கேட்கிறான்.

“முதல் தடவை இதை யார் படைத்தா னோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்” என்று நபியே நீர் கூறுவீராக. (36:77-79)

நபி (ஸல்) அவர்கள் முன்சென்ற அல்லது உங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அல்லாஹ் அவருக்குச் செல்வத்தையும் குழந்தையையும் வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கியபோது அவர் தம் மக்களிடம் உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன் என்று கேட்டார். அவர்கள் சிறந்த தந்தையாக இருந்தீர்கள் என்று பதில் கூறினர். அவர் தமக்காக எந்த நன்மையும் சேமித்திருக்கவில்லை.

அல்லாஹ்வின் முன்னிலையில் தாம் சென்றால் தம்மை அவன் வேதனை செய்துவிடுவான் என அவர் அஞ்சினார். ஆகவே (அவர் தம் மக்களிடம்) நன்றாக கவனியுங்கள். நான் இறந்து விட்டால் என்னைப் பொசுக்கி விடுங்கள். (தகனம் செய்து விடுங்கள்) நான் (வெந்து) கரியாக மாறிவிட்டால் என்னைப் பொடிப் பொடியாக்கிவிடுங்கள். அல்லது துகள் துகளாக்கி விடுங்கள். பிறகு சூறாவளிக் காற்று வீசும் நாளில் காற்றில் என்னைத் தூவி விடுங்கள் என்று கூறி தாம் கூறியபடி செய்ய வேண்டுமென அவர்களிடம் உறுதி மொழியும் வாங்கிக் கொண்டான்.

என் இறைவன் மீதாணையாக! அவ்வாறே அவர்களும் செய்தனர். அப்போது அல்லாஹ், (தூவி விடப்பட்ட சாம்பலை) ஒன்று சேர்த்து மனிதனாக) ஆகிவிடு என்று கூறினான். உடனே அவர் மனிதராக (உயிர் பெற்று) எழுந்து நின்றார். அவரிடம் அல்லாஹ் என் அடியானே! இவ்வாறு நீ செய்யக் காரணம் என்ன? என்று கேட்டான். அதற்கு அந்த மனிதர் உன்னைக் குறித்த அச்சமே என்னை இவ்வாறு செய்யத் தூண்டியது என்று பதிலளித்தார். ஆகவே அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான். அருள் புரிந்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி) ஹுபைதா (ரலி) நூல்: புகாரி (3478, 3479, 3481, 6480, 6481)

One comment

  1. الحمد لله அருமையான விளக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *