Featured Posts

லிபியா மீது தாக்குதலும் அமரிக்காவின் ஆதிக்கமும்

– எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி
லிபியாவில் ஆரம்பமான உள்நாட்டு பிரச்சினைகள் மற்றும் கிளர்ச்சியைத் தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி கடாபி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததையடுத்து மேற்கு நாடுகள் லிபியாவுக்கு எதிராக யுத்தத்தை தற்போது மேற்கொண்டு வருகின்றது.

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அந்நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும் புதிய பாணியில் அமெரிகா செயற்படுகிறது அதற்கு ஐ.நா. ஒத்துழைப்பு வழங்குகிறது என்பது நடுநிலையாளர்களின் குற்றச்சாட்டு.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின் “உலக நாடுகளுக்கிடையில் யுத்தம் எதுவும் ஏற்படாமல் தடுக்கவும் நாடுகளை ஆக்கிரமிக்காமல் இருக்கவும் நல்லுறவுகளை வளர்க்கவும் அவசியம் கருதி உருவாக்கப்பட்டதுதான் ஐ.நா. சபை”. ஆனால் இன்று அறபு நாடுகளின் உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிட்டு ஆக்கிரமிப்பு பணிகளில் ஈடுபடும் அமெரிக்காவின் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கும் தவறான செயலை ஐ.நா. செய்து வருகிறது.

அமெரிக்கா, பிரிட்டனின் சைகைக்கு தலையாட்டும் சபையாக ஐ.நா. ஆகியதன் விளைவாகவே இன்று உலகம் பெரும் அழிவை சந்திக்கிறது.

கடந்த 2001 மற்றும் 2003ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான். ஈராக் மீது போர் தொடுக்க அமெரிக்கா முன்வைத்த ஆவணங்களை ஆய்வு செய்யாமல் உண்மை நிலவரங்களை கண்டறியமுனையாமல் அவ்விரு நாடகள் மீது யுத்தம் தொடுக்க ஐ.நா. ஒப்புதல் வழங்கியது.

“ஈராக்கில் இரசாயன அயுதங்கள் உண்டு” என காரணங்களைக் காட்டி அமெரிக்கா, பிரிட்டன் ஈராக் மீது போர் தொடுத்து அந்நாட்டை துவம்சம் செய்தது. 6 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டு சதாம் உசைன் தூக்கிலிடப்பட்டு எண்ணெய் வயல்கள் அமெரிக்காவுக்கும் அதன் நேசநாடுகளுக்கும் பங்கு வைக்கப்பட்டதன் பின்புதான் ஈராக்கில் எவ்வித இரசாயன ஆயுதங்களும் இல்லை தவறுதலாக நடந்து விட்டது என புஷ்ஷூம் பிளேயரும் கூறினர்.

அழிந்த சொத்துக்களுக்கும் இழந்த உரிமைகளுக்கும் பறிபோன உயிர்களுக்கும் பொறுப்பு சொல்வது யார்?

அறபு நாடுகளின் எண்ணெய் வயல்களை கொள்ளையடிக்க அமெரிக்கா, பிரிட்டன் போடும் திட்டங்களை கண்மூடித்தனமாக ஏற்று, அங்கீகாரம் வழங்கும் ஜ.நா சபையின் போக்கினால் இன்று ஈராக்கும் ஆப்கானிஸ்தானும் அழிந்து போய்விட்டன.

தற்போது லிபியாவின் உள்நாட்டு கிளர்ச்சியை காரணம் காட்டி, அமெரிக்கா நேட்டோவை தன் கைக்குள் போட்டுக் கொண்டு ஐ.நா.வை துணைக்கு அழைத்துக் கொண்டு அப்பாவி லிபிய மக்கள் மீது குண்டுகளைப் பொழிந்து வருகின்றது.

கடாபிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தபோது போராட்டங்கள் பல வழிகளிலும் முன்னெடுக்கப்பட்டது. திடீரென அப்போராட்டக்காரர்கள் எப்படி கிளர்ச்சியாளர்களாகவும் ஆயுததாரிகளாகவும் மாற்றப்பட்டார்கள்?

தூனீசியாவிலும் எகிப்திலும் மக்கள் போராட்டமும் இயற்கையாக எழுந்ததாகவே தென்பட்டது. அது வெற்றியும் பெற்றது. லிபியாவிலும் இயற்கையாகத் தொடங்கப்பட்ட போராட்டம் இடைநடுவில் ஆயுத போராட்டமாக மாற்றப்பட்டது எப்படி?

கிளர்ச்சிக்காரர்கள் அடக்கப்பட்டு பின்வாங்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அமெரிக்கா லிபியா மீது யுத்தத்தை துவங்கியதன் மர்மம் என்ன?

கடாபி அமெரிக்காவிற்கும் அதன் அடிவருடிகளுக்கும் எதிரானவராகக் காணப்பட்டார். 1980 ஆண்டுக்குப் பின் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரேகன் பலமுறை லிபியா மீது தாக்குதல் தொடுத்து கடாபியை கொலை செய்ய எத்தணித்தார். இன்று வரை அது முடியாமல் போனது. தற்போது உள்விவகாரங்களை மூட்டி விட்டு கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு லிபியாவை ஆக்கிரமித்து கொள்ளையடிக்கவும் எண்ணெய் வயல்களை பங்குபோடவும் முனைந்துள்ளது அமெரிக்கா என்பது வெளிப்படை. கிளர்ச்சியாளர்கள் ஒடுக்கப்பட்டால் எண்ணெய் வயல்களை ஏப்பமிட முடியாது என்றபோதே அமெரிக்கா அவசரமாக போரை ஆரம்பித்தது.

கடாபி தன்னுடைய குடிமக்க்ள மீது நடாத்தும் அடக்குமுறைகளை எவ்வழிகளிலும் நியாயப்படுத்திட முடியாது. கடாபியின் இச்செயல் கண்டிக்கத்தக்கதே. ஒவ்வொரு நாட்டிலும் இது போன்ற அநியாயங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

ஈராக் மீதும் ஆப்கானிஸ்தான் மீதும் அமெரிக்கா தொடுத்து வரும் அநியாயங்களையும் படுகொலைகளையும் காரணம் காட்டி அமெரிக்கா மீது போர் தொடுக்க அனுமதி வழங்குமா ஐ.நா. சபை?

அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷும் பிரிட்டன் பிரதமர் டொனி பிளயரும் ஈராக், ஆப்கான் மீதும் இழைத்த கொடுமைகளுக்கும் படுகொலைகளுக்கும் இன்று வரை நீதி வழங்கப்படவில்லையே. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கூண்டில் நிறுத்தப்படவில்லையே. கடாபி இழைத்த கொடுமைகளை விட பல்லாயிரம் மடங்கு கொடுமைகளை இழைத்த இந்த அக்கிரமக்காரர்களை இன்னும் தண்டிக்காமல் விட்டிருப்பது ஏன்?

பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்ட அக்கிரமங்களை படுகொலைகளை அராஜகங்களைக் கண்டித்து பலமுறை ஐ.நாவில் பிரேரணைகள் நூற்றுக்கணக்கில் கொண்டு வரப்பட்டபோதும் அவைகள் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி செல்லுபடியற்றதாக ஆக்கியதே! இந்த அநீதிக்கெதிராக நீதி வழங்குபவர் யார்?

பலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்து அந்த மண்ணின் சொந்தக்காரர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கிவருகிறது இஸ்ரேல. லிபியாவில் நடக்கும் அனியாயங்களை விட பலகோடி அக்கிரமங்கள் பல வருடங்களாக நடாத்தப்பட்டுவருகின்றது. அப்படியாயின் இஸ்ரேலுக்கெதிராக போர் பிரகடனம் செய்வது யார்?

லிபியாவிற்கு எதிராக கிளர்ச்சிக்காரர்களக்கு சார்பாக பிரான்ஸ், கனடா. பிரிட்டன், அமெரிக்கா ஆரம்பித்துள்ள இப்போருக்கு “துணிகரமான நீண்ட பயணத்தின் உதயம்” என பெயரிடப்பட்டுள்ளது.

துணிகரமான நீண்ட பயணத்தில் இவ்யுத்தம் மேலும் பல அறபு நாடுகளுக்குளும் ஊடுருவும் என்பதே அர்த்தமாகும். தற்போது லண்டனில் இவ்வலரசுகள் ஒன்று கூடி லிபியாவின் எதிர்காலம் குறித்து கலந்தாலோசனை நடாத்தி வருகிறது. அடுத்தவனின் சொத்தை எப்படி பங்கு போட்டு பராமரிப்பது என்பதே இவ்வுயர்மட்ட பேச்சுவார்த்தையின் பிரதான செய்தி. கடாபிக்கு பதிலாக் ஆமாசாமி போடும் இன்னொரு ஆசாமியை கொண்டுவருவதில் தயாராகுகிறார்கள்.

சிரியாவிலும் யெமனிலும் இப்போது உருவாகிவரும் உள்நாட்டு பிரச்சினைகளை காரணம் காட்டி சிரியாவிற்குளும் அதற்கடுத்து ஈரானுக்குள்ளும் யுத்தம் தொடுக்க முனையலாம். இவ்விரண்டு நாடுகளின் மீதும் போர் தொடுக்க அமெரிக்கா நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது.

வீட்டோ அதிகாரம் பெற்ற சீனாவும். ரஷ்யாவும் லிபியாவிற்கு எதிரான யுத்தத்தை கண்டித்துள்ளதுடன் உடனடியாக சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமெனக் குரல் கொடுக்கிறது. இது கபடமில்லாத ஏமாற்றமும் இரட்டை வேடமும் ஆகும்.

அமெரிக்கா ஆரம்பித்த இவ் யுத்தம் அநீதியானது எனத் தெரிந்த பின் ஐ.நா.வில் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏன் யுத்தத்தை நிறுத்தியிருக்கக் கூடாது. வீட்டோவை பயன்படுத்தாமல் விலகி நின்று யுத்தத்திற்கு வழிவிட்ட பின் கண்டனம் தெரிவிப்பதனால் எந்த நன்மையுமில்லை. இவர்களது “கார்ட்போட்” அறிக்கைகள் தனக்கு வழங்கப்படும் அங்கீகாரம் என்று நன்கு தெரிந்து வைத்துள்ள அமெரிக்கா வெளிப்படையாகவே அக்கிரமங்கள் புரிய ஆரம்பித்துள்ளது.

லிபியாவும் ஈராக்கும் சீனாவினதும் ரஷ்யாவினதும் நெருங்கிய தோழமை நாடு. சதாம் உசைன் கொல்லப்பட்டபோதும் லிபியா அழிந்துகொண்டிருக்கும் போதும் நியாயமாக நடந்து நீதியை காப்பாற்ற முன்வராமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு அறிக்கை விடுவதிலிருந்து இவர்களது பின்னணி தெளிவாகிறது.

அறபு நாடுகளின் ஒருங்கிணைப்பான அறபு லீக்கும் அடங்கியிருப்பதனால் எதிர்காலத்தில் அமெரிக்காவின் இந்த யுத்தம் அந்நாடுகளையும் ஆக்கிரமிக்க வழிசமைக்கலாம். கடாபியின் வார்த்தையில் சொல்வதானால் புதிய சிலுவை யுத்தம் மஸ்ஜிதுகளின் கோபுரங்களையும் தகர்த்து விடலாம்.

கடாபியின் போக்கு தப்பு என்றால் சர்வதேச நீதிமன்றத்தினால் நடவடிக்கை எடுக்கலாமே தவிர, லிபியாவை அழிக்கவோ அந்நாட்டு மக்களை அழிக்கவோ எந்த வழிகளிலும் அனுமதிக்க முடியாது.

கடாபி கிளர்ச்சிக் காரர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை விட லிபிய மக்கள் மீது அமெரிக்காவின் கூட்டுப் படை மேற்கொண்டு வரும் யுத்தமும் அழிவும், படுகொலையும் பல மடங்கு அக்கிரமானது. லிபியாவின் முக்கிய கேந்திரஸ்தலங்கள், விமான நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், மக்கள் குடியிருப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான சிவிலியன்கள் கொள்ளப்பட்டுள்ளனர்.

கிளர்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்க முனைந்த அமெரிக்கா லிபியாவை துவம்சம் செய்து அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பின்னடைவை ஏற்படுத்த முனைகிறது. இனிவரும் காலங்களில் லிபியா இன்னுமொரு ஈராக்காகவோ ஆப்கானிஸ்தானகவோ மாறலாம். ஆமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்த்து அந்நாட்டு மக்கள் நீதிக்காக போடினால் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படலாம்.

4 comments

  1. Nalliah Thayabharan

    ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்கள் இந்த உலகத்தினை மீண்டும் மறுபங்கீடு செய்யும் புதிய அணுகுமுறையாகவே லிபியா மீது தாக்குதல் தொடங்கியிருக்கிறார்கள் . ஆனால் இந்த முயற்சியும் தோல்வியில்தான் முடியும்.

  2. well I really apreciate your article

  3. This is really truth, but problem is every one knows whats going on , no one thier to stop this ,,,,,,
    Whole muslim world is sleeping, this is the sign of worlds end , worlds one forth of population is Muslims , thats is the weekenes crowd in the world , our rulers dont have back born

  4. நல்லையா தயாபரன்

    நவீன யுகத்தில் ஆபிரிக்காவுக்கு அதன் முதலாவது புரட்சியை வழங்கியது கடாபியின் லிபியா ஆகும். இது முழு ஆபிரிக்கக் கண்டத்தையும் தொலைபேசி, தொலைக்காட்சி, வானொலி ஒலிபரப்பு மற்றும் தொலைமருத்துவம் மற்றும் தொலைக்கல்வி போன்ற வேறு பல தொழில்நுட்பப் பிரயோகங்கள்மூலம் இணைத்த புரட்சியாகும். Worldwide Interoperability for Microwave Access எனப்படும் (மைக்ரோவேவ் பிரவேசத்துக்கான உலகளாவிய சர்வநிலைச் செயற்பாடு) வானொலிப் பாலத்தின் காரணமாக கிராமியப் பிரதேசங்கள் உள்ளடங்கும் வகையில் முழு ஆபிரிக்கக் கண்டத்தின் மக்களுக்கும் குறைந்த ஆகுசெலவிலான இணைப்பு வசதிகள் கிட்டியுள்ளன.
    1992இல் 45 ஆபிரிக்கத் தேசங்கள் Regional African Satellite Communication Organization (பிராந்திய ஆபிரிக்க செய்மதித் தொடர்பாடல் அமைப்பு) அமைப்பைத் தாபித்ததோடு, இது ஆரம்பமாகியது. இதன்மூலம் ஆபிரிக்காவுக்குத் தனது சொந்தச் செய்மதி கிடைப்பதோடு, ஆபிரிக்கக் கண்டத்தில் தொலைத்தொடர்பு ஆகுசெலவுகளும் வெகுவாகக் குறைவடையும். இக்காலத்தில் ஆபிரிக்காவிலிருந்து வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் தொலைபேசி அழைப்புகள் உலகிலேயே மிகவும் செலவு நிறைந்தவையாகவிருந்தன. தொலைபேசி உரையாடல்களுக்காக, உள்நாட்டு தொலைதூர தொலைபேசி உரையாடல் உள்ளிட்டவகையில் INTELSAT போன்ற ஐரோப்பிய செய்மதிகளின் பயன்பாட்டுக்கு ஐரோப்பிய நிறுவனங்கள் வருடாந்தம் 500 மில்லியன யுரோவை அறவிட்டுக் கொண்டிருந்ததே இதற்கான காரணமாகும்.
    ஓர் ஆபிரிக்கச் செய்மதியின் கிரயம் ஒரு தடவை மாத்திரம் செலுத்தப்படும் 400 மில்லியன் யுரோ மாத்திரமேயாகுமென்பதோடு, இது யதார்த்தமாயின், ஆபிரிக்கக் கண்டம் இதற்குமேலும் 500 மில்லியன யுரோவை வருடாந்தக் குத்தகையாகச் செலுத்தவேண்டிய அவசியமும் இல்லாதுபோய்விடும். இத்தகைய ஒரு கருத்திட்டத்துக்கு நிதியுதவி வழங்க முன்வராத வங்கியாளர் யார்? ஆயினும் பிரச்சினை தொடர்ந்தது. எஜமானின் சுரண்டலிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள நாடும் அடிமைகள், அத்தகைய சுதந்திரத்தை அடைய உதவுமாறு எவ்வாறு எஜமானரிடம் கேட்கமுடியும்? உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும், அமெரிக்காவும், ஐரோப்பாவும் 14 வருட காலமாகத் தட்டிக்கழிக்கும்விதமான வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கிவந்தது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல. மேற்கத்தைய கடூர வட்டியில் கடன் கொடுப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட இக்கெஞ்சல்களுக்கு கடாபி முற்றுப்புள்ளி வைத்தார். லிபியா 300 மில்லியன யுரோவை வழங்கியது. ஆபிரிக்க அபிவிருத்தி வங்கி மேலும் 50 மில்லியன யுரோவை வழங்கியது. மேற்கு ஆபிரிக்க அபிவிருத்தி வங்கி மேலும் 27 மில்லியன யுரோவை வழங்கியது. இவ்வாறாகவே ஆபிரிக்கா தனது முதலாவது தொடர்பாடல் செய்மதி RASCOM-QAF1ஐ 2007 டிசம்பர் 26ஆந் திகதி பெற்றுக்கொண்டது.
    சீனாவும், ரஷ்யாவும் இதைத்தொடர்ந்து ஆபிரிக்காவுடன் தமது தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்துகொண்டதோடு, தென்னாபிரிக்கா, நைஜீரியா, அங்கோலா மற்றும் அல்ஜீரியாவுக்குச் செய்மதிகளை விண்ணில் செலுத்த உதவின. 2010 ஜுலையில் ஆபிரிக்கா தனது இரண்டாவது செய்மதி RASCOM-QAF1Rயும் விண்ணில் செலுத்தியது. முழுக்க முழுக்கச் சுதேசிகளால் உருவாக்கப்பட்டதும், அல்ஜீரியாவில் ஆபிரிக்க மண்ணில் தயாரிக்கப்பட்டதுமான முதலாவது செய்மதி 2020இல் விண்ணில் ஏவப்படவுள்ளது. இச்செய்மதி உலகிலுள்ள மிகச்சிறந்த செய்மதிகளுடன் போட்டியிடுமென்றும், அதன் ஆகுசெலவு அவற்றைவிடப் பத்து மடங்கு குறைவாக இருக்குமென்றும் இருக்கும் எதிர்பார்ப்பு சவால்நிறைந்த ஒன்றாகும்.
    இவ்வாறுதான் வெறுமனே 300 மில்லியன யுரோவைக்கொண்ட ஓர் அடையாள நகர்வு ஒரு கண்டத்தின் வாழ்வையே மாற்றியமைத்தது. கடாபியின் லிபியா மேற்குலகத்துக்கு வருடாந்தம் 500 மில்லியன யுரோவை மாத்திரம் இல்லாமற்செய்யவில்லை. ஆரம்பக்கடன் வரவிருக்கும் பல வருட காலங்களுக்கு கடன் என்றவகையிலும், வட்டியென்றவகையிலும் பிறப்பிக்கும் பல பில்லியன் கணக்கிலான டொலர்களையும், ஆபிரிக்கக் கண்டத்தைக் கொள்ளையடிப்பதற்கு மறைவியலான ஒரு முறைமையைப் பேணுவதற்கான உதவியையும் அவர் எடுத்துக்காட்டானவகையில் இல்லாமற்செய்துள்ளார்.

    ஆபிரிக்க நாணயநிதி, ஆபிரிக்க மத்திய வங்கி, ஆபிரிக்க முதலீட்டு வங்கி
    டோகோளிஸ் குடியரசில் நடைபெற்ற லோம் உச்சிமாநாடு (2000) ஆபிரிக்க யூனியனின் குறிக்கோள்கள், கோட்பாடுகள் மற்றும் அங்கங்களைக் குறித்துரைக்கும் ஆபிரிக்க யூனியன் அமைப்பியல் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. இச்சட்டத்தில் 27 ஆபிரிக்க நாடுகள் கையொப்பமிட்டிருந்தன. இது பரந்த வகையிலான பல நிறுவனங்களை ஏற்படுத்துவதற்கு வழிசெய்திருந்தது. தனி ஆபிரிக்கப் பாராளுமன்றம், நீதிமன்றம், ஆபிரிக்க மத்திய வங்கி, ஆபிரிக்க நாணய நிதியம் மற்றும் ஆபிரிக்க முதலீட்டு வங்கி என்பவை இவற்றுள் அடங்கும். 2005இல் ஆபிரிக்க யூனியன் எதியோப்பியா, அடிஸ் அபாபாவில் இந்த மூன்று நிறுவனங்கள் சம்பந்தமாக ஆபிரிக்க யூனியன் ஆணைக்குழு(AUC)வினால் தயாரிக்கப்பட்ட கருப்பொருள் அறிக்கைகள் மற்றும் வரைபு மரபுடன்படிக்கைகளை ஆய்வு செய்வதற்கான நிபுணர்களின் கூட்டமொன்றை நடத்தியது. ஆபிரிக்க யூனியன் ஆபிரிக்க மத்திய வங்கி (நைஜீரியா), ஆபிரிக்க முதலீட்டு வங்கி (லிபியா) மற்றும் ஆபிரிக்க நாணய நிதியம் (மத்திய ஆபிரிக்கா) ஆகிய நிதியியல் நிறுவனங்களுக்கான ஆசனங்களையும் தீர்மானித்தது.
    ஆபிரிக்க நாணய நிதியம், காலப்போக்கில் அதன் பொறுப்புகள் ஆபிரிக்க மத்திய வங்கிக்கு மாற்றப்படுமென்றபோதிலும், ஓர் ஆபிரிக்க யூனியன் நிதி நிறுவனமாக விளங்கும் இந்த நிறுவனம் எதிர்கால ஆபிரிக்க யூனியனின் மூன்று நிதி நிறுவனங்களுள் ஒன்றாகும். இது கமரூனில், யாவோன்டேயைத் தளமாகக் கொண்டு இயங்கும்.
    ஆபிரிக்க மத்திய வங்கி (ACB) ஆபிரிக்க நிதி நிறுவனங்கள் மூன்றில் ஒன்றாகும். இது காலப்போக்கில் ஆபிரிக்க நாணய நிதியத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும்.
    1991 அபூஜா சர்வதேச உடன்படிக்கையில் ஆபிரிக்க மத்திய வங்கியின் உருவாக்கம்குறித்து உடன்பாடு காணப்பட்டிருந்தது. இது 2028இல் நிறைவடைதல் வேண்டும். 1999 சேர்ட்டி பிரகடனம் இச்செயல்முறை விரைவுபடுத்தப்பட்டு 2020 அளவில் உருவாக்கம் இடம்பெற வேண்டுமென்று அழைப்புவிடுத்தது. தனி ஆபிரிக்கப் பாராளுமன்றச் சட்டவாக்கத்தினூடாக இது பூரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டதும், ஆபிரிக்க மத்திய வங்கியே ஆபிரிக்கத் தனி நாணயத்தை வெளியிடும் நிறுவனமாகவும், ஆபிரிக்க அரசாங்கத்தின் வங்கியாளராகவும், ஆபிரிக்காவின் தனியார் மற்றும் பொது வங்கித்தொழில் நிறுவனங்களின் வங்கியாளராகவும் விளங்குவதோடு, ஆபிரிக்க வங்கிக் கைத்தொழிலைப் பிரமாணப்படுத்தி, மேற்பார்வை செய்யும் அமைப்பாகவும் விளங்கும். அது உத்தியோகபூர்வ வட்டி மற்றும் பரிவர்த்தனை வீதங்களை நிர்ணயிக்கும். இது ஆபிரிக்க அரசாங்கத்தின் நிர்வாகத்துடன் இணைந்து இக்கருமங்களை மேற்கொள்ளும்.
    ஆபிரிக்க முதலீட்டு வங்கி AIB ஆபிரிக்க யூனியனின் மூன்று நிதி நிறுவனங்களுள் ஒன்றாகும். ஏனைய இரண்டும் ஆபிரிக்க நாணய நிதியமும், ஆபிரிக்க மத்திய வங்கியுமாகும். ஆபிரிக்க முதலீட்டு வங்கி லிபியாவில், திரிப்பொலியில் தனது தலைமையகத்தைக் கொண்டிருக்கும். அது 2007 ஏப்ரில் முதல் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
    ஒபாமாவினால் முடக்கப்பட்டிருக்கும் 30 பில்லியன் அமெரிக்க டாலர்களும் லிபியன் மத்திய வங்கிக்குச் சொந்தமானதாகும். இத்தொகை ஆபிரிக்க சமஷடி அமைப்புக்கு இறுதி வடிவம் வழங்கும் மூன்று முக்கிய கருத்திட்டங்களுக்கு லிபியாவின் பங்களிப்பாகுமென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இவை லிபியா, சேர்ட்டியிலுள்ள ஆபிரிக்க முதலீட்டு வங்கி, யாவோன்டேயில் 42 பில்லியன் அமெரிக்க டாலர் மூலதன நிதியுடன் 2011இல் தாபிக்கப்படவிருந்த ஆபிரிக்க நாணய நிதியம் மற்றும் நைஜீரியா, அபூஜாவிலுள்ள ஆபிரிக்க மத்திய வங்கி என்பவையாகும். ஆபிரிக்க மத்திய வங்கி ஆபிரிக்க நாணயத்தை அச்சிடத் தொடங்கும்போது அது பாரிஸ் கடந்த 50 வருட காலமாகச் சில ஆபிரிக்க தேசங்கள்மீது தனது பிடியைப் பேணுவதற்கு உதவிகரமாகவிருந்த Colonies françaises d’Afrique FRANC பிராங் மீது விழும் மரண அடியாகவிருக்கும். இதிலிருந்து கடாபிமீது பிரான்சுக்குள்ள கோபத்தைப் புரிந்துகொள்வது இலகுவானதாகும்.
    சர்வதேச நாணய நிதியம் 25 பில்லியன் அமெரிக்க டாலர்தொகையை மாத்திரம் வைத்துக்கொண்டு ஒரு முழுக் கண்டத்தை முழந்தாழிட வைத்துள்ளது. அது ஆபிரிக்க தேசங்களை அரச ஏகபோக நிறுவனங்களைத் தனியார் ஏகபோக நிறுவனங்களாக மாற்றுவதுபோன்ற கேள்விக்கிடமான தனியார்மயமாக்கல்களுக்குச் சம்மதிக்க வைத்துள்ளது. ஆகவே, 2010 டிசம்பர் 16–17இல் ஆபிரிக்க நாடுகள் மேற்குலக நாடுகள் ஆபிரிக்க நாணய நிதியத்தில் இணைந்துகொள்ள மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஏகமனதாக எதிர்ப்புத் தெரிவித்தமை ஆச்சரியமூட்டுவதன்று. அந்த உரிமை ஆபிரிக்கத் தேசங்களுக்கு மாத்திரமே உரியதென்று அவை கூறிவிட்டன.
    லிபியாவுக்குப் பின்னர் மேற்குலகக் கூட்டணி அல்ஜீரியாவை ஆக்கிரமிக்குமென்பது இப்பொழுது அதிகரித்தவகையில் பிரத்தியட்சமாகவுள்ளது. ஏனெனில் அந்த நாடு தனது பாரிய சக்தி மூலவளங்களுக்கு மேலதிகமாக, சுமார் 150 பில்லியன் யுரோ பண ஒதுக்கீடுகளையும் கொண்டுள்ளது. லிபியாமீது குண்டுவீச்சுத் தாக்குதல்களை மேற்கொள்ளும் நாடுகளைக் கவர்ந்திழுப்பது இதுவேயாகும். அவையனைத்துக்கும் பொதுவான ஒரு விடயமுள்ளது. அவையனைத்துமே நடைமுறையில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளன. அமெரிக்கா மாத்திரம் ஒருவரைத் திகைக்கவைக்கும் 14,000 பில்லியன் அமெரிக்க டாலர் கடனில் மூழ்கியுள்ளது. பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இத்தாலி ஒவ்வொன்றும் 2,000 பில்லியன் அமெரிக்க டாலர் வரவு-செலவுப் பற்றாக்குறையில் சிக்கியுள்ளன. இவற்றுடன் ஒப்பீடாக 45 ஆபிரிக்க நாடுகளின் ஒட்டுமொத்தப் பொதுக்கடன் 400 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறைவானதாகும்.
    மூழ்கிக்கொண்டிருக்கும் தமது பொருளாதாரங்களுக்குப் புத்துயிரளிக்குமென்ற நோக்கில் ஆபிரிக்காவில் சந்தேகத்துக்கிடமான யுத்தங்களைத் தூண்டிவிடுவது, 1994இல் இடம்பெற்ற கேவலமான பேர்லின் மாநாட்டில் ஆரம்பித்த மேற்குலக நாடுகளின் வீழ்ச்சியை இறுதியில் மேலும் துரிதப்படுத்தவே உதவும். 1865இல் அமெரிக்கப் பொருளியலாளர் ஆடம் ஸ்மித் அடிமை முறையை ஒழிப்பதற்கு ஆபிரகாம் லிங்கனுக்கு வெளிப்படையாகவே ஆதரவளித்தவேளையில் முன்னறிவித்ததுபோன்று, ‘கறுப்பின மக்களின் அடிமை முறையில் தங்கியிருக்கும் எந்த நாட்டினதும் பொருளாதாரம், அந்த நாடுகள் விழித்தெழும்போது நரகத்தில் வீழ்ச்சியடைவது உறுதியாகும்’.

    ஆபிரிக்க ஐக்கிய இராச்சியமொன்றை உருவாக்குவதில் தடையாக விளங்கும் பிராந்திய ஐக்கியம்
    (மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரையில்) மிகவும் அபாயகரமானமுறையில் கடாபியின் வழிகாட்டலின்கீழ் ஓர் ஆபிரிக்க ஐக்கிய இராச்சியத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் ஆபிரிக்க யூனியனின் ஸ்திர நிலையைக் குலைத்து, அதை அழிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முதலில் மத்தியதரை (மெடிற்றரேனியன்) யூனியன் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டபோதிலும், அது வெற்றியளிக்கவில்லை. வட ஆபிரிக்காவை எந்த வழியிலேனும் ஆபிரிக்காவின் ஏனைய நாடுகளிலிருந்து பிரிக்கவேண்டியிருந்தது. இதற்கு அரபு வம்சாவளி ஆபிரிக்கர்கள் ஏனைய ஆபிரிக்கர்களைவிடப் பரிணாம வளர்ச்சியிலும், நாகரிகத்திலும் உயர்ந்தவர்களென்று தெரிவிக்கும் பழைய, 18ஆம் மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளின் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டன. கடாபி இதை நிராகரித்தமையால் இது தோல்விகண்டது. மெடிற்றரேனியன் குழுவில் இணைந்துகொள்வதற்கு ஆபிரிக்க யூனியனுக்கு அறிவிக்காதநிலையில் ஒருசில ஆபிரிக்கத் தேசங்களே அழைக்கப்பட்டிருந்ததாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சகல 27 தேசங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாலும் எத்தகைய விளையாட்டு இடம்பெறுகின்றது என்பதை அவர் புரிந்துகொண்டார்.
    ஆபிரிக்க சம்மேளனத்தை முன்னேசெலுத்தும் சக்தி இல்லாதநிலையில் மெடிற்றரேனியன்) யூனியன் ஆரம்பிக்கு முன்னரே தோல்வியைத் தழுவியது. பிரான்சின் ஜனாதிபதி சார்க்கோஸியைத் தலைவராகவும், எகிப்தின் ஜனாதிபதி முபாரக்கை உப-தலைவராகவும் ஏற்றநிலையில் அது குறைப்பிரசவமானது. பிரான்சின் வெளிநாட்டமைச்சர் அலெயின் ஜுப்பே, கடாபி வீழ்ந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இந்த யோசனையை மீண்டும் முன்னெடுக்க முயற்சிக்கின்றார். ஆபிரிக்க யூனியனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியளிப்பது தொடரும்வரையில் தற்போதுள்ள நிலையே தொடரும் என்பதையும், உண்மையான சுதந்திரம் இருக்காது என்பதையும் ஆபிரிக்கத் தலைவர்கள் புரிந்துகொள்ளத் தவறுகின்றனர். இதனாலேயே ஐரோப்பிய ஒன்றியம் ஆபிரிக்காவில் பிராந்தியக் குழுக்களுக்கு ஊக்குவிப்பும், நிதியளிப்பும் வழங்கிவருகின்றது.
    பிரசல்ஸில் ஒரு தூதரகத்தைக் கொண்டுள்ளதும், நிதியளிப்புக்குப் பெருமளவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்கிநிற்பதுமான மேற்கு ஆபிரிக்க பொருளாதார சமூகம் ஆபிரிக்க சமஷ்டி அமைப்பை எதிர்த்துக் குரல் கொடுப்பது பிரத்தியட்சமானதாகும். இத்தகைய ஒரு காரணத்துக்காகவே ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்கப் பிரிவினை யுத்தத்தில் போராடினார். ஒரு குழுவான நாடுகள் ஒரு பிராந்திய அரசியல் அமைப்பினுள் ஒன்றுசேர்ந்ததும், அது பிரதான குழுவைப் பலவீனப்படுத்துவதே இதற்கான காரணமாகும். இதையே ஐரோப்பாவும் விரும்பியது. போன்ற பெரும் எண்ணிக்கையிலான COMESA, UDEAC, SADC பிராந்தியக் கூட்டுகளை உருவாக்கும் ஆபிரிக்கர்கள் இந்தத் திட்டத்தை ஒருபோதும் அறிந்துகொள்ளவில்லை. பாரிய வட ஆபிரிக்க கூட்டு என்பது கடாபியின் மதிநுட்பத்தால் தோற்றம்பெறவேயில்லை.

    ஆபிரிக்கக் கண்டத்தை நிறபேதம் என்னும் அவமானத்திலிருந்து விடுதலைசெய்த கடாபி என்னும் ஆபிரிக்கர்
    பல ஆபிரிக்கர்களைப் பொறுத்தவரையில் கடாபி ஒரு தயாள சிந்தையும், மனிதாபிமானமும் உள்ள, தென்னாபிரிக்க இனவெறி ஆட்சிக்குழுவுக்கு எதிரான போராட்டத்தில் தன்னலம்பாராது ஆதரவு வழங்கிய ஒருவராவார். அவர் ஒரு சுயநலவாதியாக இருந்திருப்பின் நிறவெறிக்கெதிரான போராட்டத்தில் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸுக்கு இராணுவரீதியாகவும், நிதியியல்ரீதியாகவும் உதவிசெய்து மேற்குலகத்தின் கோபம் என்னும் இடர்வரவை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார். இதனால்தான் நெல்சன் மன்டேலா தனது 27 வருடகாலச் சிறைவாழ்க்கையிலிருந்து விடுதலையடைந்ததும், 1997 அக்டோபர் 23ஆந் திகதி ஐ.நா. தடையையும் மீறி லிபியாவுக்குப் பயணஞ்செய்யத் தீர்மானித்தார். இத்தடை காரணமாக 5 வருடகாலமாக எந்த விமானமும் லிபியாவில் தரையிறங்க முடியவில்லை. ஒருவர் டுனீசிய நகரமாகிய ஜெர்பாவுக்குப் பயணஞ்செய்து, வீதியால் 5 மணித்தியாலங்கள் பிரயாணம்செய்து, பென் கார்டெனுக்குச் சென்று, எல்லையைக் கடந்து பாலைவன வீதியில் 3 மணித்தியாலங்கள் பிரயாணம்செய்து திரிப்பொலியை அடைதல் வேண்டும். இன்னுமொரு வழி மோல்ட்டாவினூடாகச் சென்று, மோசமான படகுகளில் இரவில் பாதைச் சேவையில் லிபியன் கரையை அண்மிக்கவேண்டும்.
    முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் இந்த விஜயம் ‘வரவேற்கத்தக்க ஒன்றல்ல’ என்று கூறியபோது, மன்டேலா அதற்குத் தக்க பதிலை வழங்கினார்.’எந்த நாடுமே தான் உலகின் பொலீஸ்காரன் என்று கூறுவதற்கு உரிமை கிடையாது. ஓர் அரசு என்ன செய்யவேண்டுமென்று கூறும் உரிமையும் இன்னுமோர் அரசுக்குக் கிடையாது’. மேலும் அவர், ‘நேற்று எமது எதிரிகளின் நண்பர்களாக இருந்தவர்கள் இன்று துணிவுடன் நான் எனது சகோதரன் கடாபியைப் போய்ப் பார்க்கக்கூடாதென்று சொல்லுகின்றனர். எம்மை நன்றியற்றவர்களாகவும், எமது கடந்தகால நண்பர்களை மறந்தவர்களாகவும் இருக்குமாறு புத்திமதி கூறுகின்றனர்’ என்று கூறினார்.
    உண்மையில், மேற்குலகம் இன்னமும் தென்னாபிரிக்க இனவெறியர்களைப் பாதுகாக்கப் படவேண்டிய தனது சகோதரர்களாகவே எண்ணுகின்றது. இதனால்தான் நெல்சன் மன்டேலா உள்ளிட்டவகையில் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் அங்கத்தவர்கள் ஆபத்தான பயங்கரவாதிகள் என்று கருதப்பட்டனர்.
    2008 ஜுலை 02ஆந் திகதியே அமெரிக்க காங்கிரஸ் நெல்சன் மன்டேலாவினதும், அவரது ANC தோழர்களினதும் பெயர்களைக் கறுப்பு நிரலிலிருந்து அகற்றும் சட்டத்துக்கு வாக்களித்தது. இது இந்த நிரலின் முட்டாள்தனத்தை உணர்ந்தமையால் அல்லாது, மன்டேலாவின் 90வது பிறந்த தினத்தை நினைவுகூரும்வகையிலேயே செய்யப்பட்டது. கடந்தகாலத்தில் மன்டேலாவின் எதிரிகளுக்கு ஆதரவளித்தமைகுறித்து மேற்குலகம் உண்மையில் வருந்தினால், அவரின் பெயரைத் தெருக்களுக்கும், இடங்களுக்கும் நேர்மையாக வழங்குவதாகவிருந்தால், மன்டேலாவும் அவரின் மக்களும் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு உதவிய கடாபிமீது தொடர்ச்சியாகப் போர் புரிவது எவ்வாறு?

    ஜனநாயகத்தை ஏற்றுமதிசெய்ய விரும்புவோர் உண்மையில் ஜனநாயகவாதிகளா?
    அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் லிபியாவில் ஜனநாயகத்தை ஏற்படுத்தப் போர் புரியும் ஏனைய தேசங்களைவிட கடாபியின் லிபியாவில் கூடுதலான ஜனநாயகம் நிலவினால் என்ன? ஈராக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் சாட்டில் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் 2003 மார்ச் 19இல் அந்த நாட்டில் விமானக் குண்டுவீச்சை ஆரம்பித்தார். 2011 மார்ச் 19ஆந் திகதி பிரான்ஸ், சரியாக எட்டு வருடங்கள் கழிந்தநிலையில், லிபியாவில் குண்டுமழை பொழிய ஆரம்பித்தது. ஜனநாயகத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இது இடம்பெறுகின்றதென்று மீண்டும் கூறப்படுகின்றது. நோபல் சமாதானப் பரிசை வென்ற அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சர்வாதிகாரியை அகற்றி, ஜனநாயகத்தை நிலைநாட்டவே நீர்மூழ்கிகளிலிருந்து ஏவுகணைகள் செலுத்தப்படுவதாகத் தெரிவிக்கின்றார்.
    அதிகுறைவான விவேகமுள்ள ஒருவர்கூட பின்வரும் வினாக்களை எழுப்பாமல் இருக்க முடியாது. தமது ஜனநாயக அந்தஸ்துகுறித்துப் பேசிக்கொண்டு, லிபியாமீது குண்டு வீசத் தமக்கு உரிமையுண்டென்று தெரிவிக்கும் பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி, நோர்வே, டென்மார்க் மற்றும் போலந்து என்பவை உண்மையில் ஜனநாயக நாடுகளா? ஆம் எனில், அவை கடாபியின் லிபியாவைவிடக் கூடுதலான ஜனநாயகத்தன்மை கொண்டவையா? உண்மையில் இதற்கான பதில் உரத்து ஒலிக்கவில்லை என்பதாகும். இதற்கான எளிமையான, வெளிப்படையான காரணம் ஜனநாயகம் இல்லை என்பதாகும். பிரபலமான ‘சமூக ஒப்பந்தம்’ என்னும் நூலின் மூன்றாவது ஏட்டின் 4ஆம் அத்தியாயத்தில் ‘ஓர் உண்மையான ஜனநாயகம் என்றும் இருந்ததில்லை; இருக்கப் போவதுமில்லை’ என்று எழுதியவரும், 1712இல் ஜெனீவாவில் பிறந்தவருமான ஜீன் ஜேக்குவிஸ் ரூசோ ஒரு தேசம் ஜனநாயகமென்று பெயரிடப்படவேண்டுமெனில், பின்வரும் நான்கு நிபந்தனைகள் இருக்கவேண்டுமென்று தெரிவிக்கின்றார். இவற்றின் பிரகாரம் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜனநாயத்தை ஏற்றுமதிசெய்வதாகக் கூறும் ஏனைய நாடுகளைவிடக் கடாபியின் லிபியா கூடுதலான ஜனநாயகத் தன்மையைக் கொண்டதாகும்.
    நாடொன்று பெரிதாக இருக்கும்போது அதன் ஜனநாயகத்தன்மை குறைவாகவிருக்கலாம். ரூசோ கூறுவதன் பிரகாரம் அரசு மிகவும் சிறியதாக இருந்தால் மாத்திரமே மக்கள் ஒன்றிணைந்து, ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொள்ள முடியும். மக்களை வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்வதற்கு முன்னராக, ஒவ்வொருவரும் ஏனைய ஒவ்வொருவர் குறித்தும் நன்கு அறிந்திருப்பதை உறுதிசெய்தல் வேண்டும். இல்லையெனில், வாக்களிப்புக்கு எவ்வித ஜனநாயக அடிப்படையும் இருக்கமாட்டாது. அது ஒரு சர்வாதிகாரியைத் தெரிவுசெய்யும் ஜனநாயகத்தின் போலித் தோற்றமாகவே அமையும்.
    லிபிய அரசு ஒரு பழங்குடிகள் கூட்டிணைவு முறைமை அடிப்படையில் அமைந்ததாகும். அது அதன் வரைவிலக்கணத்தின் பிரகாரம் மக்களைச் சிறிய தனியமைப்புகளாகக் குழுநிலைப்படுத்துகின்றது. ஒரு குல மரபுக்குழு அல்லது ஒரு கிராமம் ஒரு தேசத்தைவிடக் கூடுதலான ஜனநாயக உணர்வைக் கொண்டதாகும். இதற்கான மிக எளிமையான காரணம் மக்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருப்பதும், அங்கத்தவர்களின் தாக்கங்களும், பிரதித் தாக்கங்களும் குழுமீது விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவகையில் ஒருவகையான சுய-பிரமாணப்படுத்தலையும், சுய-தணிக்கையையும் கொண்டிருக்கும் ஒரு பொதுவான வாழ்க்கை ஒத்திசைவு நயத்தைப் பகிர்ந்துகொள்வதுமாகும்.
    இக்கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, லிபியா அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனைவிடக் கூடுதலாக ரூசோவின் நிபந்தனைகளுடன் பொருந்தியமைவது கண்கூடாகும். இச்சமூகங்கள் அனைத்தும் பெருமளவுக்கு நகர்மயப்படுத்தப்பட்டவை என்பதோடு, அனேகமான அயலவர்கள் இருபது வருட காலம் அருகருகே வசித்தபோதிலும் ஒருவரையொருவர் அறியாதவர்களாக, பேசாதவர்களாக உள்ளனர் என்பதே யதார்த்த நிலையாகும். இந்த நாடுகள் ‘வாக்கு’ எனப்படும் அடுத்த படிநிலைக்குப் பாய்ந்து வந்தவையாகும். வாக்கு என்பது புனிதநிலைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வாக்காளர் ஏனைய பிரஜைகளை அறிந்திராவிடில், நாட்டின் எதிர்காலம்குறித்து வாக்களிப்பதில் புண்ணியமில்லையென்ற விடயம் தெளிவாக மழுங்கடிக்கப்பட்டுள்ளது. இது வெளிநாடுகளில் வசிப்போருக்கும் வாக்குரிமை வழங்குமளவுக்கு எள்ளிநகையாடும் அளவுக்குச் சென்றுள்ளது. தேர்தலொன்றுக்கு முன்னர் இடம்பெறும் எந்த ஜனநாயக விவாதத்துக்கும் ஒருவரோடொருவரும், ஒவ்வொருவரிடையிலும் தொடர்பாடல் என்பது ஒரு முக்கியமான முன்நிபந்தனையாகும்.
    ஒரு பெரிய, சிக்கலான சமூகத்தில் தவிர்க்கமுடியாதவாறு எழக்கூடிய ஆயிரக்கணக்கான நலன் முரண்பாடுகளைக் கையாளும்வகையில் எழக்கூடிய சட்ட மற்றும் நீதிசார் நடவடிக்கைமுறைகளை விவாதிப்பதற்குச் செலவழிக்கவேண்டிய பெருமளவிலான நேரத்தைச் சேமிக்கவேண்டுமாயின், வழங்கங்கள் மற்றும் நடத்தைப் பாங்குகளில் எளிமை அவசியமாகும். மேற்குலக நாடுகள் தம்மை மேலும் சிக்கலான சமூகக் கட்டமைப்பைக்கொண்ட நாகரிகமடைந்த தேசங்களென்று அழைத்துக் கொள்ளுகின்றன. அதேவேளையில் லிபியா ஓர் எளிமையான வழக்கங்கள் தொகுதியைக் கொண்ட, நாகரிக முதிர்ச்சியற்ற பழங்காலச் சமூகமாகக் கருதப்படுகின்றது. இந்த அம்சம்கூட லிபியா ஜனநாயகத்தில் பாடம் வழங்க முயலும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் மேலும் சிறந்தமுறையில் ரூசோவின் ஜனநாயகம்குறித்த அளவுகோல்களுடன் பொருந்தியமைகின்றது என்பதைக் காட்டுகின்றது. சிக்கலான சமூகங்களில் எழும் முரண்பாடுகளில் அனேகமான சந்தர்ப்பங்களில் அதிகார வலுக்கொண்டவர்களே வெற்றியடைகின்றனர். இதனாலேயே பணக்காரர்கள் சிறைவாசத்தைத் தவிர்த்துக் கொள்வதற்கு மிகச்சிறந்த வழக்கறிஞர்களை அமர்த்திக்கொள்ளுகின்றனர். வங்கியொன்றை நாசமாக்கிய நிதியியல் குற்றவாளியொருவர் தப்பிச்செல்வதற்கும், சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வாழைப்பழமொன்றைத் திருடியவர்மீது அரச அடக்குமுறையைப் பிரயோகிப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணமாக, நியூயோர்க் நகரத்தின் ஜனத்தொகையில் 75%ஆனோர் வெள்ளையினத்தோராவர். 80%ஆன முகாமைத்துவப் பதவிகளில் அவர்களே உள்ளனர். ஆயினும் சிறைகளிலுள்ளவர்களில் 20%ஆனோர் மாத்திரமே வெள்ளையர்களாகவுள்ளனர்.
    அந்தஸ்திலும், செல்வத்திலும் சமத்துவம்: போர்ப்ஸ் 2010 நிரல் தற்போது லிபியாவில் குண்டுவீசிக்கொண்டிருக்கும் நாடுகளின் மிகவும் பணக்காரப் புள்ளிகள் யாரென்பதைக் காட்டுகின்றத அவர்களுக்கும் அந்தத் தேசங்களில் அதிகுறைவான சம்பளம் பெறுவோருக்குமிடையிலான வேறுபாட்டையும் காண்பிக்கின்றது. லிபியா விடயத்தில் இத்தகைய ஒரு செயற்பாடு இடம்பெற்றால் செல்வம் பகிரப்படும் நியதிகளைப்பொறுத்தவரையில் அதனோடு இப்போது சண்டையிடும் நாடுகளைவிடக் கூடுதலான பாடங்களை அது கற்பிக்கக்கூடியதாகவிருக்கும் நிச்சயம் அதற்கெதிராகவிருக்காது. ஆகவே, இங்குகூட, ரூசோவின் அளவுகோல்களை உபயோகிக்கும்போது, ஜனநாயகத்தைக் கொண்டுவருவதாகப் பீற்றிக்கொள்ளும் நாடுகளைவிட லிபியா கூடுதலான அளவுக்கு ஜனநாயகத்தைக் கொண்டதாகும்.
    ஆடம்பரப் பொருட்கள் இருத்தலாகாது: ரூசோ கூறுவதன் பிரகாரம் ஜனநாயகம் இருக்கவேண்டுமாயின் ஆடம்பரப் பொருட்கள் இருத்தலாகாது. ‘சுகபோகப் பொருட்கள் செல்வத்தை அவசியப்படுத்துகின்றன. இதனால் செல்வம் தன்னளவிலேயே ஒரு தகுதியாகின்றது. இதனால் மக்களின் நலன் என்பது என்ன விலை கொடுத்தும் வாங்க வேண்டிய ஒரு விடயம் அல்லவென்னும் நிலை ஏற்படுகின்றது. ஆடம்பரப் பொருட்கள் செல்வந்;தர்களையும், ஏழைகளையும் ஊழல் நிலைக்குத் தள்ளிக் கெடுக்கின்றன. செல்வந்தர்கள் ஆடம்பரப் பொருட்களை வைத்திருப்பதாலும், ஏழைகள் பொறாமையாலும் கெட்டுப்போகின்றனர். அது தேசத்தின் வலிமையைக் குறைக்கின்றது. வீண் டம்ப உணர்வுக்கு அடிமையாக்குகின்றது. அது மக்களை அரசிலிருந்து தொலைவுக்குத் தள்ளி, அவர்களை அடிமையாக்குகின்றது. அவர்கள் அபிப்பிராயங்களின் அடிமைகளாகின்றனர்’ என்று அவர் கூறுகின்றார்.
    லிபியாவைவிட பிரான்சில் அதிக ஆடம்பர வாழ்க்கை உள்ளதா? அரசாங்க மற்றும் பகுதி அரசாங்கக் கம்பனிகளில் ஒரு சிறுபான்மையினரின் ஆடம்பர வாழ்வுக்காக, இலாபங்களை அதியுயர்வாக்குதல் என்ற பெயரில், மனப்பதற்றம் ஏற்படுத்தும் மோசமான வேலை நிலைமைகள் காரணமாக ஊழியர்கள் தற்கொலைசெய்யும் அறிக்கைகள் மேற்குலக நாடுகளில் வெளிவருகின்றன. இவை லிபியாவில் இடம்பெறுவதில்லை.
    அமெரிக்க ஜனநாயகம் சலுகைபெற்ற ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரமென்று, 1956இல் அமெரிக்கச் சமூகவியலாளர் சி. ரைட் மில்ஸ் எழுதினார். அவர் கூறுவதன் பிரகாரம், தேர்தல்களின்போது மக்கள் பேசாமல், பணமே பேசுவதால் அமெரிக்கா ஒரு ஜனநாயகம் அல்ல. ஒவ்வொரு தேர்தல் முடிவும் பணத்தின் குரலின் வெளிப்பாடாகும். அது மக்களின் குரல் அல்ல. அரசியல் அதிகாரம் அதிகாரித்துவவாதத்தில் தங்கிநிற்பதால், அமெரிக்காவில் 43 மில்லியன் அதிகாரத்துவவாதிகளும், இராணுவ ஆளணியினரும் உள்ளனர். இவர்களே நாட்டை ஆளுகின்றனர். இவர்கள் தெரிவுசெய்யப்படுவதுமில்லை, தங்கள் செயற்பாடுகள்குறித்து மக்களுக்கு வகைப்பொறுப்புக்கூறுவதுமில்லை. ஒருவர் தெரிவு செய்யப்படுகின்றார். ஆயினும், உண்மையான அதிகாரம் தூதுவர்களாகவும், ஜெனரல்களாகவும் பின்னர் பெயர்குறிக்கப்படும் செல்வந்தர் கூட்டத்திடமே உள்ளது.
    தாம் ஜனநாயகத் தேசங்களென்று சுய-விளம்பரம் செய்துகொள்ளும் இந்த நாடுகளிலுள்ள எத்தனைபேர் பெரு நாட்டில் ஒருவர் இரண்டாவது தடவையும் ஜனாதிபதியாகப் பணிப்பாணை கேட்பதை அரசியலமைப்புத் தடைசெய்வதை அறிந்துள்ளனர்? கௌதமாலாவில் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அப்பதவிக்குப் போட்டியிடமுடியாது என்பதோடு, அவரின் குடும்பத்தைச்சேர்ந்த எவருமே அப்பதவிக்குப் போட்டியிடமுடியாது என்பதையும் எத்தனைபேர் அறிந்துள்ளனர்? ருவாண்டாவே பாராளுமன்றத்தில் 56% பெண் உறுப்பினர்களைக்கொண்ட உலகின் ஒரேயொரு தேசம் என்பதை எத்தனைபேர் அறிவார்கள்? உலகில் மிகச்சிறப்பான ஆட்சிமுறை நிலவும் 4 நாடுகள் ஆபிரிக்காவிலேயே உள்ளனவென்பதை எத்தனைபேர் அறிவார்கள்? ஈக்குவடோரியல் கினி பொதுக்கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.14 வீதமாகவே உள்ள நாடென்றவகையில் மிகவும் உயர்வான இடத்திலிருப்பதை எத்தனைபேர் அறிவார்கள்?
    சிவில் யுத்தங்களும், கிளர்ச்சிகளும், கலகங்களும் ஜனநாயகத்தின் ஆரம்பத்தின் ஆக்கப் பொருட்களாகுமென்று ரூசோ தெரிவிக்கின்றார். ஜனநாயகமென்பது தன்னளவில் ஒரு முடிவல்ல; மாறாக அது உலகம் முழுவதிலும் (எவ்வித விதிவிலக்குமின்றி) உள்ள நாடுகளில் மனிதர்களின் உரிமைகளை மீண்டும் வலியுறுத்தும் ஒரு நிரந்தரமான செயல்முறையாகும். இந்த நாடுகளில் மனிதர்களின் உரிமைகள், மக்களின் அதிகாரத்தைத் திருடியுள்ள ஒருசில ஆண்களாலும், பெண்களாலும் தமது மேலாதிக்கத்தை நீடிப்பதற்காகக் காலின்கீழ் போட்டு மிதிக்கப்படுகின்றன. ‘ஜனநாயகம்’ என்னும் பதத்தை அபகரித்துக்கொண்ட சில குழுக்கள் அங்குமிங்குமாகக் காணப்படுகின்றன. ஒருவர் ஈட்டிக்கொள்ளவேண்டிய இலட்சியத்தைக் குறிப்பதற்குப் பதிலாக, அது அபகரித்துக்கொள்ளப்படவேண்டிய ஒரு வியாபாரப் பெயராக அல்லது, ஏனையோரைவிட உரத்த குரலில் சத்தமிடக்கூடியவர்கள் பயன்படுத்தும் ஒரு சுலோகமாக மாறியுள்ளது. பிரான்ஸ் அல்லது அமெரிக்கா போன்று ஒரு தேசம் அமைதியாகக் காணப்பட்டால், அதாவது கலகங்கள் எதுவுமற்றநிலையில் காணப்பட்டால், ரூசோவின் கண்ணோட்டத்தில் அதன் கருத்து, சர்வாதிகார முறைமை ஏதாவது எதிர்ப்பு நடவடிக்கையை முன்கூட்டியே இல்லாமற்செய்யும்வகையில் போதிய அளவுக்கு அடக்குமுறை நிறைந்ததாகவுள்ளது என்பதேயாகும்.
    லிபிய மக்கள் கலகம் செய்தால் அது ஒரு மோசமான விடயமல்ல. உலகம் முழுவதும் மக்கள் தம்மை அடக்கியொடுக்கும் ஒரு முறைமையை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளுகின்றனர் என்று தெரிவிப்பதே மோசமான விடயமாகும். ரூசோ பின்வருமாறு விடயங்களை நிறைவுசெய்கின்றார்: ‘கடவுளர் மனிதர்களாகவிருப்பின், அவர்கள் தம்மை ஜனநாயகமுறையில் ஆட்சிசெய்துகொள்வர். அத்தகைய பரிபூரணமான அரசாங்கமொன்று மனிதர்கள் விடயத்தில் பிரயோகப் பொருத்தமற்றதாகும்.’ லிபியர்களை அவர்களின் சொந்த நன்மைக்காகவே கொல்லுகின்றோம் என்று கூறுவது பெரும் ஏமாற்று வித்தையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *