Featured Posts

நபித்துவத்தை உறுதிப்படுத்திய யூத தலைவர் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி)

-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி (ஆசிரியர்: சத்தியக் குரல்)
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் என்பவர் மதீனாவில் வாழ்ந்த பிரசித்திப் பெற்ற யூத குடும்பத்தைச் சார்ந்தவர். அறிவு ஆற்றல் மிக்கவர். எதனையும் பகுப்பாய்வு செய்து சிறந்த முடிவுகளை எடுக்கும் திறன்மிக்கவர். மக்களின் நன்மதிப்பை வென்றவர்.

இஸ்லாமிய தூது மதீனாவில் பரவிய போது அது பற்றிய சரியான தெளிவை பெற துடித்தவர். சத்தியத்திற்காக ஏங்கி தவித்தவர். நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்து விட்டார்கள் என்ற செய்தி அப்துல்லாஹ் இப்னு ஸலாமுக்கு எட்டியது. உடனே நபி (ஸல்) அவர்களை கண்டு, தனது சந்தேகங்களை போக்கி உரிய தீர்வுகளை காண வேண்டும் என்று ஓடோடி வருகிறார்.

பரந்த மனதுடன், தெளிந்த சிந்தனையுடன் கேள்விகளை கேட்க ஆயத்தமாகிறார். முஹம்மது நபியை, அவர் கொண்டு வந்த தூதை பரீட்சித்துப்பார்க்க களம் இறங்குகிறார். நபி (ஸல்) அவர்களைப் பார்த்து,

நான் உங்களிடம் மூன்று கேள்விகளை கேட்கப்போகிறேன். அதற்கான பதில்களை ஒரு நபியை தவிர வேறெவரும் அறிய மாட்டார்.

முதலாவது கேள்வி:- இறுதிநாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?

இரண்டாவது கேள்வி:- சுவர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு எது?

மூன்றாவது கேள்வி:- குழந்தை தன் தந்தையின் சாயலில் ஒத்திருப்பது எதனால் அது சாயலில் தன்தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?

இம்மூன்று கேள்விகளும் சாதாரண கேள்விகளல்ல! நபி (ஸல்) அவர்களை இறைதூதராக அடையாளப்படுத்திக் கொள்வதற்கு அவசியமான கேள்விகள். சாதாரண மனிதனால் இக்கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது! ஒரு இறைத்தூதரால் மட்டுமே பதில்களை வழங்கமுடியும். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வினால் அனுப்பப் பட்ட தூதர் என்றால் கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என்பது அப்துல்லாஹ் இப்னு ஸலாமின் நிலைப்பாடு. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வினால் அனுப்பப்பட் இறுதி தூத ரல்லவா? இதோ இப்படி பதிலளித்தார்கள்-

சற்று முன்னர் தான் ஜிப்ரீல் (அலை) இது குறித்து விளக்கம் அளித்தார். என்று நபியவர்கள் கூறியபோது. உடனே இடை மறித்த அப்துல்லாஹ் இப்னு ஸலாம் அவர்கள், வானவர்களிலேயே ஜிப்ரீல் (அலை) யூதர்களுக்குப் பகைவராயிற்றே என்று கூறினார்.

யூத மக்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறை செய்தியை (வஹீயை) கொண்டு வந்தது போலவே, அம்மக்கள் இறைவனுக்கு மாற்றமாக நடந்த போது இறைத்தண்டனை செய்தியையும் கொண்டுவந்தவர். அதனாலேயே யூதர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை பகைவராக நினைத்தனர்.

நபி (ஸல்) அவர்கள் முதலாவது கேள்விக்கு பதிலளிக்கும் போது, இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களை கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்கு திசையில் ஒன்று திரட்டும்.

இரண்டாவதாக, சுவர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்பகுதியான சதையாகும்.

மூன்றாவதாக, குழந்தையிடம் காணப்படும் (தாய் அல்லது தந்தையின்) சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது அவனது நீர் (உயிரணு) முந்தி விட்டால் குழந்தை தகப்பனின் சாயலில் பிறக்கின்றது. பெண்ணின் நீர் (சினை முட்டை) முந்திவிட்டால் குழந்தை தாயின் சாயலில் பிறக்கின்றது. என்று பதிலளித்தார்கள்.

அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ஸலாம் அவர்கள், நபி (ஸல்) அவர்களை பார்த்து, நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய தூதர் என்று நான் சாட்சி சொல்கிறேன் என்று கூறி இஸ்லாத்தை தழுவினார்கள்.

சத்தியத்திற்கு முன்னால் அசத்தியம் அடங்கிவிடும், உண்மைக்கு முன்னால் பொய் அழிந்துவிடும் என்பதை அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரஹ்) அவர்கள் கண்டு கொண்டார்கள். சத்தியத்தியத் திற்கு முன் சரணடைந்தார்கள். இறை தூதை உறுதிப்படுத்தினார்கள்.

இந்த தூய செய்தி யூத மக்களிடமும் சென்றடைய வேண்டும் என்ற ஆவலில் நபி (ஸல்) அவர்களை பார்த்து, அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக யூதர்கள் பொய்யில் ஊறித்திளைத்த சமுதாயத்தினர்! நீங்கள் அவர்களிடம் பேசுவதற்கு முன்பாக, நான் இஸ்லாத்தை தழுவி விட்டேன் என்பதை அறிந்தால் என்னைப் பற்றி அவர்கள் உங்களிடம் பொய்யுரைப்பார்கள் என கூறிக் கொண்டிருந்த வேளையில் யூதர்கள் அந்த இடத்திற்கு வந்தார்கள் – உடனே அப்துல்லாஹ் இப்னு ஸலாமா (ரலி) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து மறைந்து கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் யூதர்களைப் பார்த்து, உங்களில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எப்படிப்பட்டவர்? என்று கேட்டார்கள் அப்போது யூதர்கள் அவர் எங்களை விட அறிவாளி. அறிவாளியின் மகனும் கூட! எங்களைவிட அனுபவமும் விவரமுடையவரின் மகனும் கூட என புகழாரம் சூட்டினார்கள்.

அப்படியானால், அப்துல்லாஹ் இப்னு ஸலாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என நபியவர்கள் கேட்க அதற்கு யூதர்கள், அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக எனக்கூறினார்கள்.

இவ்வுரையாடலை மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள், யூதர்களுக்கு முன்னால் வந்து, வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும் நிச்சயமாக முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதராவார் என்றும் சாட்சி சொல்கிறேன் என்று கூறினார்கள். இதனை கேட்ட யூதர்கள் இவர் எங்களிலே கெட்டவர், கெட்டவருடைய மகனும் கூட எனக்கூறி அவரைப் பற்றி தப்பாக பேச ஆரம்பித்தார்கள். (நூல் :- புகாரி 3329)

யூதர்கள் ஒருபோதும் உண்மையை செவிமடுப்பதுமில்லை. உண்மை சொல்பவரை விட்டு வைப்பதுமில்லை. யூத சமூதாயத்திலே மிகவும் மதிக்கத்தக்க குடும்பத்தையுடையவர் இஸ்லாத்தை தழுவினார் என்பதை சகிக்க முடியாமல் சேற்றை வாரி வீசினார்கள்.

இதற்கு விதிவிலக்காக அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் இறைதூதை எப்படி அலசிப்பார்க்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டி, உலகமக்களுக்கு ஓர் முன்மாதிரியாக திகழ்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *