Featured Posts

நபியவர்களின் உம்மத்தின் சிறப்பம்சங்கள்

– M.T.M.ஹிஷாம் (ஸலபி, மதனி)
உலகில் நாம் ஆதரிக்கின்ற அல்லது உறுப்புரிமை பெற்ற ஒரு கட்சி வெற்றியைத் தழுவும் போது, அது குறித்து நாம் எவ்வளவு பெருமிதம் அடைகிறோம். நபியவர்களின் உம்மத்தின் உறுப்பினராக இருக்கக்கூடிய நாம் என்றாவது அதனை எண்ணி காரியமாற்றியிருக்கின்றோமா? என்பதே எம் செயல்பாடுகள் உணர்த்தும் வினாவாகும்.

நபியவர்களின் உம்மத்தானது ஏனைய நபிமார்களின் உம்மத்துகளைவிடச் சிறந்த உம்மத்தாகும் என்பதை உணர்த்தக்கூடிய பல செய்திகள் அல்குர்ஆன் அஸ்ஸூன்னாஹ் நெடுகிலும் பதிவாகியுள்ளன. அதற்கு எடுத்துக்காட்டாக பின்வரக்கூடிய செய்திகளைக் குறிப்பிடலாம்.

“மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயாக நீங்கள் இருக்கின்றீர்கள். (ஏனெனில்) நீங்கள் நன்மையை ஏவுகின்றீர்கள். தீமையைவிட்டும் தடுக்கின்றீர்கள்.” (ஆல இம்றான்: 110)

நபியவர்கள் கூறினார்கள்: “எனக்கு முன்னால் வாழ்ந்த எந்தவோர் உம்மத்திற்கும் கொடுக்கப்படாத ஆறு விடயங்களைக் கொண்டு ஏனைய நபிமார்களைவிட நான் சிறப்பிக்கப்பட்டுள்ளேன். – அவற்றில் ஒன்றுதான் – என்னுடைய உம்மத் ஏனைய உம்மத்துகளை விடச் சிறந்த உம்மத்தாக ஆக்கப்பட்டுள்ளமையாகும்.” (அறிவிப்பவர்: அபூஹுறைறா (ரழி), நூல்: அல் பஸ்ஸார்)

உண்மையில் நபியவர்களின் உம்மத்தானது எவ்விதத்தில் சிறப்புமிக்கதாகத் திகழ்கின்றது என்பது குறித்த பல செய்திகள் அல்குர்ஆன் அஸ்ஸூன்னாஹ் மூலாதாரங்களில் இடம்பெற்றுள்ளன. அச்சிறப்புக்களைப் பிரதானமாக இரு பிரிவுகளில் உள்ளடக்கலாம்.

1. நபியவர்களின் உம்மத்திற்கு இவ்வுலகில் உள்ள சிறப்புகள்.

2. நபியவர்களின் உம்மத்திற்கு மறுமையில் உள்ள சிறப்புகள்.

நபியவர்களின் உம்மத்திற்கு இவ்வுலகில் உள்ள சிறப்புகள்

கனீமத் – யுத்தத்தில் கிடைத்த பொருட்கள் – ஹலாலாக்கப்பட்டுள்ளமை

முன்னைய நபிமார்களின் சமுதாயத்தினரை இது விடயத்தில் இரு பிரிவினராக வகைப்படுத்தலாம்.

1. யுத்தம் செய்வதற்கு அனுமதிக்கப்படாத சமூகம்.
2. யுத்தம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கப்பெறும் கனீமத் பொருட்களை அனுபவிப்பதற்கு அனுமதியளிக்கப்படாத சமூகம்.

இவர்களில் இரண்டாவது சாராரைப் பொறுத்தளவில் அவர்கள் தங்களது நபியுடன் சேர்ந்து யுத்தத்தில் ஈடுபடுவார்கள். யுத்தத்தின் முடிவில், அவர்கள் விரோதிகளிடருந்து கிடைக்கப்பெற்ற கனீமத் பொருட்களை ஓர் இடத்தில் ஒன்று சேர்ப்பார்கள். பிறகு, வானில் இருந்து தீப்பிழம்பொன்று வெளியாகி அவற்றை எரித்துவிடும். அவ்வாறு எரிப்பதானது குறித்த யுத்தம் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்டமைக்கான அடையாளமாக இருக்கும்.

இப்படியிருக்க, அல்லாஹுத்தஆலா இந்த உம்மத்தை சிறப்பிக்கும் முகமாக இதுவிடயத்தில் சலுகையளித்து, முழுமையாக கனீமத் பொருட்களை அனுபவிப்பதற்கு அனுமதியளித்துள்ளான். இது குறித்து அல்லாஹுத்தஆலா பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்.

“நீங்கள் (போரில்) கனீமத்தாகப் பெற்றவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்.” (அல் அன்பால்: 69)

நபியவர்கள் கூறினார்கள்: “எனக்கு முன்னால் எவருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விடயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. -அவற்றுள் ஒன்றுதான்- எனக்கு கனீமத் பொருட்கள் ஹலாலாக்கப்பட்டுள்ளமையாகும்.” (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி) , நூல்: புகாரி, முஸ்லிம்)

பூமி பூராகவும் சுத்தம் – தயம்மம் – செய்வதற்கும், தொழுவதற்கும் உகந்ததாக ஆக்கிக் கொடுக்கப்பட்டுள்ளமை

மேற்குறித்த விடயம் இந்த உம்மத்தினருக்கு இலகுபடுத்தப்பட்ட அடுத்த அம்சமாகும். அவர்கள் தண்ணீரைக் கொண்ட சுத்தம் செய்வதற்கு முடியாத நிலைக்குத் தள்ளப்படும் போது மண்ணைப் பயன்படுத்தி தயம்மம் செய்வதின் மூலம் தங்களை சுத்தம் செய்து கொள்ள ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு தொழுவதற்கொன்று ஓர் இடம் கிடைக்கப்பெறாத போது பூமியில் தான் விரும்பிய இடத்தில் தொழுது கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளனர். ஆயினும், முன்னைய சமுதாயத்தினரைப் பொறுத்தளவில் அவர்களுக்கு தயம்மம் என்ற சுத்தம் செய்யும் முறை கடமையாக்கப்பட்டிருக்கவில்லை. இன்னும், அவர்கள் தங்களது தொழுகைகளை வணக்கஸ்தலங்கள், வியாபார இஸ்தலங்கள் போன்றவற்றில் மாத்திரமே நிறைவேற்ற அனுமதியளிகப்பட்டிருந்தனர்.

இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள். “(தபூக் யுத்தம் நடைபெற்ற ஆண்டு) நபியவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றார்கள். அப்போது நபியவர்களைப்; பாதுகாப்பதற்காக சிலர் தயாராகினர். நபியவர்கள் தொழுகையை நிறைவேற்றியதும் அவர்களை நோக்கிச் சொன்று, “எனக்கு முன்னால் எவருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விடயங்கள், இரவு எனக்கு கொடுக்கப்பட்டன. – அவற்றுள் ஒன்றுதான் – எனக்கு பூமி தொழுமிடமாகவும் சுத்தமாகவும் ஆக்கிக் கொடுக்கப்பட்டுள்ளமையாகும். நான் எங்கு தொழுகை நேரத்தை அடைந்தாலும் மண்ணைத் தடவிக் கொண்டு – தயம்மம் – தொழுவேன். எனக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் இதுவிடயத்தில் பெரிதுபடுத்தப்பட்டார்கள். அவர்கள் தங்களது வணக்கஸ்தலங்களிலும் வியபார இஸ்தலங்களிலும் தொழக்கூடியவர்களாக இருந்தனர்”” என்றார்கள். (நூல்: அஹ்மத்)

முன்னைய சமுதாயத்தினருக்கு ஹராமாக்கப்பட்டிருந்த பல விடயங்கள் எங்களுக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளமை
எமக்கு முன்வாழ்ந்த சமுதாயத்தினர் மீது விதியாக்கப்பட்ட சட்டதிட்டங்களை நோக்கும் போது, அவை கடினத்தன்மை வாய்ந்தனவாகவும், ஹராமாக்கப்பட்ட விடயங்கள் நிறைந்தனவாகவும் காணப்பட்டன.
நபியவர்கள் கூறினார்கள்: “எங்களுக்கு முன்வாழ்ந்தவர்கள் மீது கடுமையாக்கி வைத்த பல வி;டயங்களை அல்லாஹ் எங்கள் மீது ஹலாலாக்கி, இலகுபடுத்தி வைத்துள்ளான். மேலும், அவன் அவற்றை உபயோகிப்பதில் எங்களுக்கு எக்குற்றத்தையும் சுமத்தமாட்டான்.” (அறிவிப்பவர்: ஹுதைபா (ரழி), நூல்: அஹ்மத்);

இதற்குச் சான்றாக பின்வரும் சட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறிப்பிடலாம்.

முன்னைய சமுதாயங்களின் சட்டங்கள்

  1. பனூ இஸ்ரவேலர்களுக்கு சிறுநீர் கழித்த பின் தண்ணீரால் சுத்தம் செய்ய அனுமதியளிக்கப்பட்டிருக்கவில்லை.
  2. யூதர்களில் ஒரு பெண்மணிக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவளுடன் அவளது கணவன் சாப்பிட முடியாது. மேலும், அவளுடன் ஒரே கூரைக்குக் கீழ் வாழவோ, அவளுடன் உறவு கொள்ளவோ முடியாது.
  3. பனூ இஸ்ரவேலர்களுக்கு கொலைக்குத் தண்டனையாக கொலை மாத்திரமே விதியாக்கப்பட்டிருந்தது.
  4. பனூ இஸ்ரவேலர்களில் ஒருவர் இராப்பொழுதில் ஒரு பாவத்தில் ஈடுபட்டால் அவர் காலைப் பொழுதை அடையும் போது அவரது வீட்டின் கதவில் அவர் செய்த குற்றமும் அதற்கான பரிகாரமும் எழுதப்பட்டிருக்கும்.
  5. இவர்களுக்கு விதியாக்கப்பட்டிருந்த நோன்பானது உண்ணுதல், பருகுதல், பேசுதல் பேன்றவற்றை தவிர்ப்பதாக இருந்தது.

நபியவர்களின் சமுதாயத்தினரின் சட்டங்கள்

  1. தண்ணீரைக் கொண்டு தாராளமாக சுத்தம் செய்ய முடியும்.
  2. மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுடன் தாளாரமாக அவளது கணவன் இணைந்து வாழலாம். மேலும், அவளுடன் உண்ணுதல், பருகுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம். உடலுறவை மாத்திரம் தவிர்த்துக் கொண்டு ஏனைய செயற்பாடுகளில் பங்கேற்கலாம்.
  3. கொலை செய்யப்பட்டவரின் உறவினர்களுக்கு கொலை செய்தவரை கொல்ல அல்லது தெண்டப்பரிகாரம் பெற்றுக் கொள்ள தெரிவுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளமை.
  4. அப்படியான ஒரு நிலைமை இந்த உம்மத்தில் உள்ளவர்களுக்கு இல்லை. ஒருவர் பாவமான காரியத்தில் ஈடுபட்டால் அது அவருக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் இருந்து கொண்டிருக்கும்.
  5. நோன்பை முறிக்கக்கூடிய காரியங்களில் பேசுதல் என்ற காரியம் நீக்கப்பட்டுள்ளமை.

வெள்ளிக்கிழமை விசேட தினமாக்கப்பட்டுள்ளமை
இந்த உம்மத்திற்கு வெள்ளிக்கிழமை தினமானது, நாட்களில் தலையாய நாளாகவும், சூரியன் உதிக்கக்கூடிய நாட்களில் மிகச் சிறந்த நாளாகவும் சிறப்புப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கருப்பொருளைத் தெளிவுபடுத்தக்கூடிய ஒரு செய்தி புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட நூட்களில் அபூஹுரைரா (ரழி) அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது.

தவறு, மறதி, நிர்ப்பந்தம், மனத்தில் உதிக்கக்கூடிய தீய சிந்தனைகள் போன்றவற்றால் குற்றம் பிடிக்கப்படாமை.
இதுவும் இவ்வும்மத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒரு நற்பாக்கியமாகும். நாம் தவறு, மறதி, நிர்ப்பந்தம் ஆகிய காரணங்களினால் ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டால் அதற்கு அல்லாஹுத்தஆலா எம்மை குற்றம் பிடிக்கமாட்டான். அத்தோடு, எம் மனத்தில் உண்டாகக்கூடிய தீய சிந்தனைகளை எம் வாயின் மூலம் அல்லது உடலுருப்புக்கள் மூலம் வெளிப்படுத்தாத வரைக்கும் நாம் குற்றவாளிகாளாகக் கருதப்படமாட்டோம். இதற்கு புகாரி, முஸ்லிம் ஆகிய நூட்களில் பதிவாகியுள்ள அபூஹுரைரா (ரழி) அவர்களின் செய்தி சான்றாக இருக்கின்றது.

ஒட்டு மொத்த அழிவிலிருந்தும் அபயம் பெற்ற சமுதாயம்
இந்த உம்மத்தானது அனர்த்தங்கள், பசி, வறுமை, ஆக்கிரமிப்புக்கள், போன்றவற்றின் மூலம் உண்டாகக்கூடிய ஒட்டு மொத்த அழிவில் இருந்தும் பாதுகாப்புப்பெற்ற உம்மத்தாக இருக்கின்றது. இத்தகவலை ஸவ்பான் (ரழி) அவர்கள் நபியவர்களைத் தொட்டும் அறிவிக்கின்றார்கள். முஸ்லிம் எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.

இந்த உம்மத்தானது வழிகேட்டில் ஒன்றிணையாது
இந்த உம்மத்தானது எப்போதும் வழிகேட்டில் ஒன்றிணையாது. மாற்றமாக, மறுமை நாள் வரை இவ்வும்மத்தில் ஒரு கூட்டல் நேர்வழியில் இருந்து கொண்டே இருக்கும். இதனைப் பின்வரும் நபிமொழி பிரஸ்தாபிக்கின்றது.
“என்னுடைய உம்மத்தில் ஒரு கூட்டம் உதவி பெறும் நிலையில் உண்மையில் நிலைத்திருப்பார்கள். அல்லாஹுத்தஆலாவின் (மறுமை தொடர்பான) கட்டளை அவர்களுக்கு மத்தியில் வரும் வரை உதவி புரியாது வி;ட்டுவிட்டவர்களினால் எவ்விதத் தீங்கும் இழைக்க முடியாது.” அறிவிப்பவர்: ஸவ்பான் (ரழி), நூட்கள்: புகாரி, முஸ்லிம்

அல்லாஹுத்தஆலா இந்த உம்மத்தினரின் சாட்சியை ஏற்றுக் கொண்டு, பூமியில் வாழ்பவர்களுக்கு சாட்சியாளர்களாக ஆக்கியுள்ளான்

இவ்வும்மத்தைச் சேர்ந்தவர்கள் யாருக்காவது சாட்சி அளித்தால் அல்லாஹ் அவர்களின் சாட்சியை ஏற்று அதற்குத் தக்க நடவடிக்கைகளை எடுப்பான் என்பது குறித்த தகவல்கள் ஹதீஸ்களில் பதிவாகியுள்ளன. எடுத்துக்காட்டாக பின்வரும் ஹதீஸை அவதானியுங்கள்.

“ஒரு ஜனாஸா நபியவர்களைக் கடந்து கொண்டு செல்லப்பட்டது. அதனைக் கண்ணுற்ற நபித்தோழர்கள் அதன் குணவியல்புகளைப் பாராட்டிப் பேசினர். அதற்கு நபியவர்கள், “விதியாகிவிட்டது, விதியாகிவிட்டது” எனப் பகர்ந்தார்கள். பிறகு, மற்றொரு ஜனாஸா நபியவர்களைக் கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது நபித்தோழர்கள், அதன் தீய குணங்களைப்பற்றிப் பேசினர். அதனைச் செவியுற்ற நபியவர்கள், “விதியாகிவிட்டது, விதியாகிவிட்டது” எனக்கூறினார்கள். இது தொடர்பாக உமர் (ரழி) அவர்கள் நபியவர்களிடத்தில் வினவிய போது, நீங்கள் யாரை நல்லதைக் கொண்டு பாராட்சிப் பேசினீர்களோ அவருக்கு சுவர்க்கம் விதியாகிவிட்டது. மேலும், நீங்கள் யாரை தீயவற்றைக் கொண்டு இகழ்ந்து பேசினீர்களோ அவருக்கு நரகம் விதியாகிவிட்டது எனக் கூறிவிட்டு, நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சியாளர்களாக உள்ளீர்கள் என மூன்று முறை கூறினார்கள்.” அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூட்கள்: புகாரி, முஸ்லிம்

தொழுகையில் எங்களின் ஸப் அமைப்பு வானவர்கள் அல்லாஹ் முன்னிலையில் நிற்கும் ஸப் அமைப்புக்கு ஒப்பானதாகும்
இவ்விடயம் குறித்து நபியவர்கள் கூறும் போது, “அல்லாஹ் எங்களை ஏனைய மனிதர்களைவிட மூன்று விடயங்களைக் கொண்டு சிறப்பித்துள்ளான்….. – அதில் ஒன்று தான் – எங்களுடைய ஸப் அமைப்பை வானவர்களின் ஸப் அமைப்புக்கு ஒப்பானதாக ஆக்கியுள்ளமையாகும்.” அறிவிப்பவர்: ஹுதைபா (ரழி), நூல்: முஸ்லிம்

நபியவர்களின் உம்மத்திற்கு மறுமையில் உள்ள சிறப்புகள்

நபியவர்களின் உம்மத்திற்கு மறுமை நாளில் இருக்கும் சிறப்புகள் குறித்து பல செய்திகள் அல்குர்ஆன், அஸ்ஸூன்னாஹ் மூலாதாரங்களில் காணப்படுகின்றன. அத்தகைய சிறப்புகளில் சிலவற்றை பின்வருமாறு பட்டியல் படுத்தலாம்.

வுழூவுடைய உருப்புக்கள் இலங்கிய நிலையில் மறுமை நாளில் காட்சியளிப்பார்கள்
வுழூச் செய்வதின் சிறப்பு குறித்து இடம் பெற்ற ஒரு ஹதீஸின் ஈற்றில் நபியவர்கள் கூறும் போது, “நிச்சயமாக அவர்கள் வுழூவுடைய உருப்புக்கள் இலங்கக்கூடிய நிலையில் வருவார்கள். (அப்போது நான் அதனைக் கொண்டு அவர்களை அடையாளம் கண்டு கொள்வேன்.)” என்றார்கள். நூல்: முஸ்லிம்

இச்செய்தி தொடர்பாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறும் போது, “நபியவர்களின் கூற்றில் இருந்து வுழூவுடைய உருப்புக்கள் இலங்குவது முஹம்மத் நபியின் உம்மத்திற்குரிய தனிப்பட்ட அயாளமாக உள்ளது என்பது உறுதியாகின்றது” என்கிறார்.

முன்னைய நபிமார்களுக்கு சாட்சியாளர்களாக இருப்பார்கள்
மறுமை நாளில், சில நபிமார்கள் மேற்கொண்ட அழைப்புப் பணியை அவர்களது சமுதாயத்தினர் மறுக்கும் போது, அந்நபிமார்களுக்கு ஆதரவாக சாட்சியளிக்ககூடியவர்களாக இவ்வும்மத்தினர் இருப்பார்கள் என நபியவர்கள் நவின்றுள்ளார்கள். அபூ ஸஈத் (ரழி) அவர்கள் தெரிவிக்கும் இத்தகவலை இப்னுமாஜா, அஹ்மத் உள்ளிட்ட நூட்களில் காணலாம்.

மறுமையில் பாலத்தைக் கடக்கும் முதல் கூட்டமாகவும், சுவனத்தில் முதலாவதாக பிரவேசிக்கும் உம்மத்தினராவும் இருப்பர்
நபியவர்கள் கூறினார்கள்: “நானும் எனது உம்மத்தினரும் முதலாவதாக பாலத்தைக் கடக்கக்கூடிய கூட்டமாக இருப்போம்.” பிறிதோரிடத்தில் கூறும் போது, “சுவனத்தில் பிரவேசிக்கும் முதற்கூட்டம் நாங்களே” என்றார்கள். (நூல்: புகாரி)

குறைந்த அமலுக்கு கூடிய கூலி கொடுக்கப்படும் சமுகம்
இந்த உம்மத்தினர் புரிகின்ற அமல்களைப் பொறுத்தளவில் அவை புரியப்படுகின்ற அமைப்பு மற்றும் காலம் குறுகியதாக இருந்தாலும் அவற்றுக்குக் கிடைக்கும் கூலி பன்மடங்கானதாக இருக்கும். அதே நேரத்தில், முன்னைய சமுதாயத்தினர் புரிந்த செயல்களை ஒரு கணம் நோக்குகையில், அவை புரியப்பட்ட அமைப்பு மற்றும் காலம் மிக நீண்டதாக இருந்தன. சிறியதொரு கூலியைப் பெறுவதற்குக்கூட கூடிய காலம் பல தியாகங்களுக்கு மத்தியில் செயல்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

இதனை நபியவர்கள் ஓர் உதாரணத்தின் மூலம் தெளிவுபடுத்தும் போது, “ஒரு மனிதன் சில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினான். அவர்களை நோக்கி, எவர்கள் என்னிடத்தில் பகலின் நடுப்பகுதி வரை பணிபுரிகின்றீர்களோ அவர்களுக்கு ஒரு கீராத் வீதம் கூலி கொடுப்பேன் என்றான். அதற்கு யூதர்கள் செவிசாய்த்து பகலின் நடுப்பகுதிவரை கடமை புரிந்துவிட்டு குறித்த கூலியைப் பெற்றுக் கொண்டனர். பிறகு மிகுதியாக இருப்பவர்களை நோக்கி, எவர்கள் என்னிடத்தில் பகலின் நடுப்பகுதி முதல் அஸர் தொழுகை வரை பணிபுரிகின்றீர்களோ அவர்களுக்கு ஒரு கீராத் வீதம் கூலி கொடுப்பேன் என்றான்;. அதற்கு கிறிஸ்தவர்கள் முன்வந்து அக்காலப்பகுதிவரை கடமை புரிந்துவிட்டு தங்களது கூலியைப் பெற்றுக் கொண்டனர். பின்பு எஞ்சியிருப்பவர்களை நோக்கி, நீங்கள் தான் அஸர் தொழுகை முதல் சூரியன் மறையும் வரை இரு கீராத் வீதம் கூலி பெற என்னிடத்தில் கடமை புரியக்கூடியவர்கள் எனக் கூறிவிட்டு, உங்களுக்கல்லவா கூலி இருமுறை கிடைத்துள்ளது எனக் கூறினான்;. இதனை செவியுற்ற யூதர்களும் கிரிஸ்தவர்களும், நாங்களல்லவா அதிகமான வேலை செய்து குறைந்த கூலியைப் பெற்றவர்கள் எனக்கூறி கலவரமடைந்தனர். அதற்கு அல்லாஹ், உங்களுக்கு நான் வாக்களித்த கூலி விடயத்தில் ஏதாவது அநியாயம் செய்தேனா என வினவுவான். அதற்கு அவர்கள் இல்லை என பதிலளிக்க, அல்லாஹ் அவர்களை நோக்கி, நிச்சயமாக அது நான் வழங்கிய சிறப்பாகும். அதனை நான் நாடியவர்களுக்குக் கொடுப்பேன் எனக் கூறுவான்.” (அறிவிப்பவர்: உமர் (ரழி) அவர்கள், நூல்: புகாரி

மேற்குறித்த உதாரணத்தில் இடம்பெற்ற மூன்றாவது கூட்டத்தினரே இந்த உம்மத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள்.

சுவனத்தில் அதிகமானவர்களாக இருப்பர்
இந்த உம்மத்தை சேர்ந்தவர்கள் மறுமைநாளில் அதிகளவு சுவனம் பிரவேசிக்கக்கூடியவர்களாக இருப்பர். அது குறித்த பல தகவல்கள் நபிமொழிகளின் வரிசையில் பதிவாகியுள்ளன.

ஒரு முறை நபியவர்கள் தன் தோழர்களை நோக்கி “நீங்கள் சுவனவாசிகளில் ¼ பகுதியனராக இருப்பதை விரும்புகின்றீர்களா? எனக்கேட்க, அதற்குத் தோழர்கள், “அதைவிட அதிகரிக்கச் செய்யுங்கள்” என கேட்டுக் கொண்டனர். அப்போது நபியவர்கள், “நீங்கள் சுவனவாசிகளில் 1/3 பகுதியினராக இருப்பதை விரும்புகிறீர்களா?” எனக் கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், “இன்னும் எங்களது எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யுங்கள்” என விண்ணப்பித்தனர். அப்போது நபியவர்கள், நிச்சயமாக சுவனவாசிகளில் பெரும் பகுதியினராக நீங்கள் இருப்பதை ஆசை வைக்கின்றேன் என பதிலளித்;தார்கள்.” (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரழி) , நூல் : புகாரி)

நாம் மேலே குறிப்பிட்ட தகவல்களில் இருந்து இவ்வும்மத்தின் சிறப்பம்சங்களைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். எனவே, அவற்றை மனதில் கொண்டு இவ்வும்மத்திற்குப் பாத்திரமானவர்களாக நானும் நீங்களும் மாறுவோமாக!

One comment

  1. தரமான கட்டுரை. ஜஸாக்கல்லாஹு ஹைரா. ஆனால் கீழ் வரும் பந்திக்கான குர்ஆன்-ஹதீஸ ஆதாரங்களை கட்டுரையாளர் குறிப்பிடவில்லை. தயவு செய்து அதனையும் குறிப்பிடவும்.

    அதாவது

    //தங்களது நபியுடன் சேர்ந்து யுத்தத்தில் ஈடுபடுவார்கள். யுத்தத்தின் முடிவில், அவர்கள் விரோதிகளிடருந்து கிடைக்கப்பெற்ற கனீமத் பொருட்களை ஓர் இடத்தில் ஒன்று சேர்ப்பார்கள். பிறகு, வானில் இருந்து தீப்பிழம்பொன்று வெளியாகி அவற்றை எரித்துவிடும். அவ்வாறு எரிப்பதானது குறித்த யுத்தம் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்டமைக்கான அடையாளமாக இருக்கும்//

    இது குர்ஆனில், அல்லது எந்தக் கிரந்தத்தில் எத்தனையாவது நபிமொழியாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. அதன் தரம் என்ன?

    //*இந்த உம்மத்தானது வழிகேட்டில் ஒன்றிணையாது*//
    ….இந்த உம்மத்தானது எப்போதும் வழிகேட்டில் ஒன்றிணையாது. மாற்றமாக, மறுமை நாள் வரை இவ்வும்மத்தில் ஒரு கூட்டம் நேர்வழியில் இருந்து கொண்டே இருக்கும்…..

    இத்தலைப்புக்கு, கட்டுரையாளர் கோடிட்டுக் காட்டும் நபிமொழி, பொருத்தமாக இல்லை.

    அதாவது

    //இதனைப் பின்வரும் நபிமொழி பிரஸ்தாபிக்கின்றது.
    “என்னுடைய உம்மத்தில் ஒரு கூட்டம் *உதவி பெறும் நிலையில் உண்மையில் நிலைத்திருப்பார்கள்.* அல்லாஹுத்தஆலாவின் (மறுமை தொடர்பான) கட்டளை அவர்களுக்கு மத்தியில் வரும் வரை உதவி புரியாது விட்டுவிட்டவர்களினால் எவ்விதத் தீங்கும் இழைக்க முடியாது.” அறிவிப்பவர்: ஸவ்பான் (ரழி), நூட்கள்: புகாரி, முஸ்லிம்//

    மறுமை நாள் வரை இவ்வும்மத்தில் ஒரு கூட்டல் நேர்வழியில் இருந்து கொண்டே இருக்கும் என்று நபிமொழிகளில் இருப்பதாக உணருகிறேன்.

    நன்றி
    அன்ஸார்-தோஹா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *