Featured Posts

அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-4)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
நளினத்தின் பெயரில் நன்மையை மறைக்கலாமா?
அல்லாஹுத் தஆலா பிரச்சாரத்திற்காக நபிமார் களான மூஸா(அலை), ஹாரூன்(அலை) ஆகியோரைப் பிர்அவ்னிடம் அனுப்பும்போது “நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அதனால் அவன் நல்லுணர்ச்சி பெறலாம். அல்லது நடுக்கமடையலாம்” (20:44) எனக் கூறி அனுப்புகின்றான். பிர்அவ்னிடமே நளினமாகப் பேசவேண்டுமென்றால் எமது சமூகத்துடன் நாம் பிரச்சாரத்தில் எவ்வளவு நளினமாக நடக்க வேண்டும் என்பதைச் சிந்திப்பவர்கள் உணரமுடியும். மக்கள் காலம் காலமாக நம்பி நடைமுறைப் படுத்தி வரும் சடங்கு சம்பிரதாயங்களையும், ஷிர்க்கு, பித்அத்துக்களையும் கூடாதவை என பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்வது நளினமான பிரச்சாரமாகாது. அதில் சற்று விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும் எனக் கூறி அதன் மூலம் மார்க்கத்தின் சில பகுதிகளை மறைக்கும் பிரச்சார அணுகுமுறையை சகோதர அழைப்பாளர்கள் நியாயப்படுத்த முற்படுகின்றனர்.

பிரச்சாரத்தில் நளினம் தேவை என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், நளினம் என்பதற்கு சத்தியத்தில் சில பகுதிகளைச் சொல்லாமல் மறைத்தல் என்றோ அல்லது “தியரி” போட்டு ஐந்து, பத்து ஆண்டுகளுக்குப் பின் சொல்லவென “ஸ்டோக்” (stock) பண்ணல் என்றோ பொருள் கொள்ளமுடியாது, ஏனெனில் நளினமாகப் பேசுங்கள் எனக் கட்டளையிட்ட அதே அல்லாஹ் நளினமாக எதைச் சொல்லவேண்டும் என்பதையும் அதனைத் தொடர்ந்து கற்றுக் கொடுக்கிறான்.

“எனவே, அவனிடம் நீங்களிருவரும் வந்து” நிச்சயமாக நாங்கள் உன்னுடைய ரப்பின் ரஸூல்கள் இருவர் (ஆவோம்) ஆகையால் இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பிவைப்பாயாக! அவர்களை நீ வேதனை செய்ய வேண்டாம். உன்னுடைய ரப்பிடமிருந்து ஓர் அத்தாட்சியை உன்னிடம் திட்டமாக நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ஸலாம் (சாந்தி) ஆகிறது நேர்வழியைப் பின்பற்றியவர் மீது உண்டாவதாக”! (என்று இருவரும் கூறுங்கள்) “நிச்சயமாக: எங்களுக்கு (அல்லாஹ் -விதியாக்கும்) வேதனையாகிறது (நாங்கள் கொண்டுவந்ததைப்) பொய்யாக்கி, புறக்கணித்துச் செல்பவனின் மீது உண்டாகும்.” என்று திடமாக வஹீ அறிவிக்கப்பட்டுள்ளது” (என்றும் கூறுங்கள்) (20:47,48)

இங்கு நளினம் என்ற போர்வையில் சத்தியம் மறைக்கப் பட்டுள்ளதா? என்பதைச் சற்று அவதானித்துப் பாருங்கள். உண்மைகள் உள்ளபடி எடுத்துக் கூறப்பட்டுள்ளதல்லவா? நளினமாகப் பேசுங்கள் எனக் கூறியவனே, நளினமாகப் பேசுங்கள் என்பதற்கு விளக்கம் கூறிய பின் நாம் அதற்கு மாற்று விளக்கமளிக்க முனையலாமா?

நபி மூஸா(அலை) பிர்அவ்ன் ஆகியோருக்கிடையே நடந்த உரையாடலை அல்குர்ஆனில் பல இடங்களிலும் விபரமாகக் காணலாம். ஆனால், எந்த இடத்திலும் மூஸா(அலை) அவர்கள் சத்தியத்தை மறைக்கும் போக்கில் பேசியதாகக் காண முடியவில்லை. இருப்பினும் எதிராளி ஏன் இக்கேள்வியைக் கேட்கிறான்! அவன் மன ஓட்டம் என்ன என்பதை நாடிபிடித்தறிந்து அதற்கேற்றாற்போல் பதிலளிக்கும் சாதுரியத்தை மூஸா(அலை) அவர்களின் உரையாடலில் நாம் காணலாம்.

“(முன்னர் நபிமார்களைப் பொய்ப்பித்துப் புறக்கணித்த) முந்திய தலைமுறையினர்களின் நிலை என்ன? (20:51) என்று பிர்அவ்ன் வினவுகிறான். இந்த வினா உண்மையை உணர வேண்டும் என்பதற்காக எழுப்பப்பட்டதல்ல. மூஸா(அலை) அவர்கள் மூதாதையர் சம்பந்தமாக விபரீதமாக எதையாவது கூறினால். “மக்கள் மூதாதையர்கள் மீது வைத்துள்ள மதிப்பு, பக்தி என்பவற்றைத் தூண்டிவிட்டு மூஸா(அலை) அவர்களின் பிரச்சாரத்தை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் எனும் எண்ணத்திலேயே இக்கேள்வி கேட்கப்பட்டது. இதனை உணர்ந்த மூஸா(அலை) அவர்கள் பின்வருமாறு பதில் கூறுகிறார்கள்.

“அதுபற்றிய அறிவு என்னுடைய ரப்பிடத்திலுள்ள பதிவுப் புத்தகத்திலிருக்கின்றது என்னுடைய ரப்பு தவறிழைக்கமாட்டான். “(எதையும்) விட்டுவிடவும் மாட்டான்” என்று அவர் கூறினார்.” (20:52)

இப்பதில் பொய்யற்றதாகவும், எதிராளி விரித்த வலையில் விழவைக்காத சாதுரியம் மிக்கதாகவும் அமைந்திருப்பதை அவதானிக்கலாம்! இது போன்றே மூஸா(அலை) அவர்களின் உரையாடற் சாதுரியத்துக்கு இன்னுமோர் உதாரணத்தையும் கூறலாம்.

பொதுவாக எல்லா அசத்தியவாதிகளும் பேச்சால் சமாளிக்கமுடியாத போது “கெடுபிடி” நடவடிக்கைகளில் இறங்கிவிடுவர். அவ்வாறே பிர்அவ்னும் பேச்சில் ஜெயிக்க முடியாது என உணர்ந்தபோது,

“என்னைத் தவிர (வேறு) நாயனை நீர் ஆக்கிக் கொண்டால், திண்ணமாக நான் உம்மைச் சிறையிடப்பட்டோரில் உள்ளவராக்கிவிடுவேன்” என்று அவன் கூறினான். (26:29)

இந்நேரத்தில் மூஸா(அலை) அவர்கள் மிகத் தந்திரமாகப் பேச்சைத் திசை திருப்புகிறார்கள். எந்த சர்வதிகாரியாக இருந்தாலும் பலர் முன்னிலையில் தான் அநியாயக்காரன், நியாயத்துக்குக் கட்டுப்படாதவன் என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முற்படமாட்டான். தான் நீதமானவன் போலவே நடந்து கொள்வான். பிர்அவ்னும் இதற்கு விதிவிலக்கானவன் அல்லன் என்பதையுணர்ந்த மூஸா(அலை) அவர்கள்.

“தெளிவான (அத்தாட்சியாக ஒரு) பொருளை உன்னிடம் நான் கொண்டு வந்தாலுமா? (அவ்வாறு செய்வாய்)” என வினவுகிறார்கள். (26:30)

“நீர் உண்மையாளர்களில் உள்ளவராக இருந்தால் அதனைக் கொண்டு வாரும்” என்று பிர்அவ்ன் கூறினான். (26:31)

இங்கே சிறையிலடைப்பேன் எனக்கூறியவனைத் தனது உரையாடலினூடாக ஆதாரத்தைக் கேட்க வைத்தார்கள்.

இவ்வாறு சாதுரியமாகப் பேசும் போக்கையே மூஸா(அலை) அவர்களிடம் காணமுடிந்ததேயன்றி விட்டுக் கொடுத்து, உண்மைகளை மறைத்துப் பேசும் போக்கை மூஸா(அலை) அவர்களிடம் காணமுடியவில்லை. எனவே, நளினமாகப் பேசுதல் என்பதற்கு மறைத்துப் பேசுதல் எனப் பொருள் கொள்ள முடியாது.

நாம் யாரோடு பேசுகிறோம் என்பதைப் புரிந்து அவர்களிடம் எப்படிப்பேசினால் எடுபடும் எனக் கணக்குப் பார்த்து நிதானமாகச் சத்தியத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். இதற்கு சிறந்த பல உதாரணங்களை நபி(ஸல்) அவர்களின் பிரச்சார வாழ்க்கையில் நாம் காணலாம். இதோ!

“ஒரு இளைஞர் நபி(ஸல்) அவர்களின் அவைக்கு வந்து, “யாரஸூலல்லாஹ் எனக்கு விபச்சாரம் புரிய அனுமதி தாருங்கள்”; என்றார். இதைக் கேட்ட அவையினர் கோபத்தோடு அவரை அங்கிருந்து விரட்டியடிக்க முற்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் மக்களை அமைதிப்படுத்தி விட்டு, அந்த இளைஞனை அழைத்து தமதருகில் அமரச் செய்தார்கள். உன்தாயுடனோ, மகளுடனோ, சகோதரியுடனோ, சாச்சி, மாமி ஆகியோருடனோ வேறொருவர் தகாத உறவு கொள்வதை நீர் விரும்புவீரா? எனக் கேட்டார்கள். அவர் இல்லையெனப் பதிலளித்தார். (நீர் விபச்சாரம் புரிய அனுமதி கேட்கிறீரே! நீர் தகாத உறவு கொள்ள விரும்பும் பெண்ணும் யாருக்காயினும் தாயவோ சேயாகவோ, சகோதரியாகவோ அல்லவா இருப்பாள்) நீ உனது இத்தகைய உறவினர்களுடன் வேறொருவர் தகாத உறவு கொள்வதை வெறுப்பது போல் பிறரும் தமது உறவினர்களுடன் அந்நியன் விபச்சாரம் செய்வதை வெறுப்பார்களல்லவா? எனத் திருப்பிக் கேட்டுவிட்டு அல்லாஹ்வே இவர் பாவத்தை மன்னித்து, இவர் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, இவரது கற்பையும் பாதுகாப்பாயாக! என்று பிரார்த்தித்தும் அனுப்பினார்கள். அவரும் தனது தவறை உணர்ந்து தான் இதன் பின் இப்படியான தவறில் ஈடுபடுவதில்லை என உறுதியளித்தார்.
அறிவிப்பவர்: அபூ உமாமா.
ஆதாரம் : அஹ்மத், (பாகம்-5, பக்கம்-256,257)

அருவருக்கத்தக்க ஒரு கேள்வி கேட்கப்பட்டும்கூட சினமுறாமல், சீறி விழாமல் அன்பாக, அந்த இளைஞருக்குப் புரியும் விதமாக அண்ணலார் அவர்கள் பேசினார்கள் அல்லவா? இந்த அழகிய வழிமுறைகளைக் கடைப்பிடித்து சத்தியத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். இம்முறையை வேண்டுமென்றால் “ஹிக்மத்” என்றும், நளினமாகப் பேசுதல் என்றும் கூறலாம். இதைவிட்டு விட்டு சத்தியத்தை மறைக்கும் கோழைத்தனத்திற்கு “ஹிக்மத்” என்றோ, நளினம் என்றோ பெயர் சூட்டல் மடமையாகும்.

இங்கே ஆளைப்பார்த்து, அவரது நிலையைப் பார்த்து சட்டம் மாற்றப்படவில்லை. ஆனால், அவரின் அறிவுத் தரத்திற்கு ஏற்ப விளக்கும் விதம் வித்தியாசப் பட்டுள்ளது. உள்ளதை மாற்றியோ மறைத்தோ கூறக்கூடாது; உரையாடும் நபர் உணரும் விதத்தில் விபரித்துக் கூறலாம். அதுவே நமது கடமையாகும்.

இவ்விடத்தில் மற்றுமொரு இஸ்லாமிய பிரச்சார அணுகுமுறை பற்றியும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நளினமாகப் பேசுதல் போன்றே எதிர் மறைப் பிரச்சார முறை அல்லது சாடல் போக்கும் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் உள்ளதுதான். சிலருக்குத் தடவித்தடவிக் கூறினால் விளங்கும். சிலருக்கு செவிட்டில் அறைந்தாற் போல் பட்டெனக் கூறினால் தான் சட்டெனப் புரியுமென்றால், அதையும் நாம் புறக்கணித்துவிட முடியாது. இதோ இப்றாஹீம் (அலை) அவர்கள் பிரச்சாரத்தின் போது பாவித்த வார்த்தைகளின் வேகத்தை சற்று அவதானித்துப் பாருங்கள்.

1. “இப்றாஹீமிலும், அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்குத் திட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது, தன் சமூகத்தினரிடம் நிச்சயமாக நாங்கள் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகின்றவற்றை விட்டும் நீங்கியவர்களாக இருக்கிறோம். உங்களை நாங்கள் நிராகரித்து விட்டோம், ஏகனாகிய அல்லாஹ்வின் மீது நீங்கள் ஈமான் கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்கும் மத்தியில் பகையும் வெறுப்பும் என்றென்றைக்குமாகத் தோன்றி விட்டன” என்று அவர் கூறினார். (அதில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.) (60:4)

2. உங்களுக்கும் அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் வணங்குபவற்றுக்கும் உஃப்புன் (நாசந்) தான். எனவே, நீங்கள் (இதனை) அறிந்து கொள்ள வேண்டாமா? (என்றும் கூறினார்) (21:67)

3. “நீங்களும், உங்களுடைய மூதாதையர்களும் திட்டமாக பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறீர்கள்” என்று அவர் கூறினார். (21:54)

இவ்வார்த்தை வீச்சின் வேகத்தையும் இவ்வார்த்தைகளின் கனத்தையும், ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். எவ்வளவு சூடான வார்த்தைகள் இவைகள். இம்முறைப் பிரச்சாரத்திற்கு நபி வழியிலும் கூட நாம் பல முன்மாதிரிகளைக் காணலாம்.

எனவே, நாம் யாரை நோக்கிப் பேசுகின்றோம் என்பதையும் நமக்கும் அவருக்குமிடையேயுள்ள உடன்பாடுகள், ஏற்றத்தாழ்வுகள், உறவுகள் என்பவற்றிற் கேற்ப இவரிடம் உண்மையை எப்படி விளக்கினால் இலகுவில் புரிவார் என்பதை கவனமாக யூகித்து நளினமாக (மிகக் குறைந்த சில வேளைகளில் சூடாக) சத்தியத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால், சத்தியத்தை மறைத்தல் என்பது “தப்லீக்”; எனும் எத்திவைக்கும் பணிக்கு நேர்மாறானது என்பது மட்டும் நிச்சயமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *