Featured Posts

மண்ணறை வாழ்க்கை

-K.L.M. இப்ராஹீம் மதனீ
உலகத்தில் பிறக்கும் எல்லா உயிர்களும் இறப்பது நிச்சயம். இதை முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் கூட ஏற்றுக் கொள்கின்றார்கள். எப்போதாவது ஒரு நாள் இறப்போம் என்பதை எல்லோருமே நம்புகின்றார்கள். ஆனால், அவர்கள் நம்பக்கூடிய மரணத்திற்கும், நாம் நம்பக்கூடிய மரணத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அதாவது, “மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை இல்லையென” அவர்கள் கூறுகின்றார்கள். நாமோ, “மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை இருக்கின்றது” என நம்புகிறோம். நாம் மரணித்துவிட்டால் நம்மை கப்ரில் அடக்கம் செய்வார்கள் அங்கே நமக்கு உயிர் ஊட்டப்படும். அதன்பின் இரு மலக்குகள் நம்மிடம் மூன்று கேள்விகள் கேட்பார்கள், சரியான விடை சொல்பவர்களுக்கு, சுவர்க்கமும், தவறான விடை சொல்பவர்களுக்கு நரகமும் என முடிவு செய்யப்படும் எனவும் நம்புகிறோம். இதனை, பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.

ஒரு அன்சாரித் தோழரின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியினால் பூமியை கிளறிக் கொண்டிருந்தார்கள். எங்களின் தலைகளின் மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று (அமைதியாக) நாங்களும் அந்தக் கப்ருக்கு அருகாமையில் அமர்ந்தோம். (திடீரென) நபி (ஸல்) தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்கள். இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில், (சக்ராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருவார்கள். இவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும், சுவர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து, அவரருகில் அமர்வார். அவரை நோக்கி, நல்ல ஆத்மாவே! நீ ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உலகிலிருந்து வெளியேறிவிடு என்று கூறுவார். தோல் பையிலிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விடுவது போன்று (அந்த ஆத்மா உடலில் இருந்து இலகுவாக) வெளியேறி விடும். அந்த உயிரை எடுத்ததும் கொஞ்ச நேரம் கூட கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கபனில் (கொண்டு வந்த) மணத்தோடு வைத்து விடுவார்கள். உலகத்தில் இருக்கும் கஸ்தூரி வாசனையை விட மிக மணம் வீசக்கூடியதாக அது இருக்கும். (பின்பு அந்த உயிரை அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்) வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு உலகில் இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவருக்காக முதல் வானத்தை, திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், அவருக்காக முதல் வானம் திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலும் உள்ள மலக்குகள் அடுத்த வானம் வரை (அந்த உயிரை) பின் தொடருவார்கள். இப்படி ஏழு வானம் வரை அதனை எடுத்துச் செல்வர். அப்போது ஏக இறைவன், ஆத்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கி, என் அடியானுடைய செயல்களை ‘இல்லிய்யீனிலே’ (நல்லடியார்களுடைய செயல்களின் பதிவேடுகள் இருக்குமிடத்திலே) பதிந்து விட்டு (விசாரணைக்காக) பூமியிலுள்ள அவருடைய உடலில் (கப்ரில்) அவருடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள் என்று கூறுவான். (அவரின் உயிரை அவரின் உடலில் மீட்டப்படும்) அவரிடத்தில் இரு மலக்குகள் வந்து அவரை அமரவைத்து, உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். என் இறைவன் அல்லாஹ் என்று கூறுவார். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், எனது மார்க்கம் இஸ்லாம் எனக் கூறுவார். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் எனக் கூறுவார். அது உமக்கு எப்படித் தெரியும்? என அவ்விருவரும் கேட்பார்கள். நான் குர்ஆனை ஓதினேன். (அதன் மூலம்) அவர்களை ஈமான் கொண்டு உண்மைப்படுத்தினேன் எனக் கூறுவார். அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து என் அடியான் உண்மை சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவருக்கு சுவர்க்கத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் சுவர்க்கத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவருக்கு நல்ல வாசனைகளும், நறுமணமும் வந்து கொண்டிருக்கும். அவருடைய கண் எட்டிய தூரத்திற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும். இன்னும் அவரிடத்திலே நறுமணம் வீசக்கூடிய, நல்ல ஆடை அணிந்த, அழகிய தோற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒன்றைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) நற்செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீர் யார்? எனக் கேட்பார். நான்தான் உன் நல் அமல் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவர், இறைவா! என் குடும்பத்தவரிடத்திலும், என் பொருளிடத்திலும் நான் செல்வதற்காக, கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக! இறைவா! கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக எனக் கூறுவார்.

நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கி விட்டால், கறுத்த (விகாரமான) முகத்துடன் சில வானவர்கள் வந்து அவனுடைய கண்பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளித் துணி இருக்கும். அப்பொழுது உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனருகில் அமர்வர். அவர் அவனை நோக்கி, கெட்ட ஆத்மாவே! அல்லாஹ் அளிக்கவிருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா! என்று கூறுவார். அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்து விடும். நனைத்த கம்பளி துணியிலிருந்து முள்ளுக் கம்பியை பிடுங்கி எடுப்பது போன்று உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் அவனுடைய உடலிலிருந்து (பலவந்தமாக) உயிரைப் பிடுங்கி எடுப்பார். (இவ்வாறு பலவந்தமாக அடித்துப் பிடுங்கி எடுத்த உயிரை) கொஞ்ச நேரங்கூட தன் கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கம்பளித் துணியில் வைத்துவிடுவார். இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தை விட அதிகமான துர்நாற்றம் அதிலிருந்து வீசும். பின்பு அந்த உயிரை எடுத்துக் கொண்டு முதல் வானத்துக்குக் கொண்டு செல்வார் அந்த வானவர். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது எவனுடைய கெட்ட உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு உலகில் இவனுக்குச் சொல்லப்பட்ட கெட்ட பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவனுக்காக முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், ஆனால் வானம் அவனுக்காக திறக்கப்படமாட்டாது என்று கூறிவிட்டு பின்வரும்; ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ

நிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டார்களே அத்தகையோர் – அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டாது, மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள், மேலும் குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)

ஏக இறைவன், உயிரைச் சுமந்து வந்த வானவரைப் பார்த்து, அவனுடைய செயல்களை பூமியின் அடிப்பாகத்திலுள்ள “ஸிஜ்ஜீன்” (ஸிஜ்ஜீன் என்றால் தீயவர்களின் செயல்கள் பதிவு செய்யப்படும் இடமாகும்) என்ற இடத்தில் பதியுமாறு உத்தரவிடுவான். பின்னர், அந்த உயிர் (முதலாம் வானத்திலிருந்து ஸிஜ்ஜீன் என்ற இடத்துக்கு) எறியப்படும். பிறகு பின்வரும் ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنْ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ

இன்னும், எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அப்பொழுது அவன், வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக் கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்) காற்று அவனை வெகு தூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றதைப் போன்றோ இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:31)

இவ்வாறு ஸிஜ்ஜீனில் அவனுடைய செயல்கள் பதியப்பட்டு, பின்னர் அவனது உயிர் அவனுடைய உடலில் ஊதப்படும். அவனிடத்தில் இரு மலக்குகள் வந்து அவனை அமரவைத்து உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். “கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது” என்பான். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், “கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது” என்பான். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார். “கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது” என்பான். அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து அவன் பொய் சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவனுக்கு நரகத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் நரகத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவனுக்கு அதன் சூடும் விஷக்காற்றும் வந்து கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேரும் அளவு கப்ரு அவனை நெருக்கும். இன்னும் அவனிடத்திலே கோர முகமுடைய, மோசமான ஆடை அணிந்த, துர்நாற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு கவலை தரக்கூடிய ஒன்றைக் கொண்டு கெட்ட செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) கெட்ட செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீ யார்? எனக் கேட்பார். நான்தான் உன்னுடைய கெட்ட செயல்கள் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவன், இறைவா! மறுமை நாளை கொண்டு வந்துவிடாதே என்று கூறுவான்.
(நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)

அன்புள்ள சகோதர, சகோதரிகளே!
மேலே கூறப்பட்ட ஹதீஸின் மூலம் நல்லடியாரின் உயிரும், கெட்ட அடியானின் உயிரும் எப்படி பிரிகின்றது? அவ்விருவரின் கப்ருகளின் நிலை எப்படி அமைகின்றன என்பதை அறிந்தீர்கள். நமது மண்ணறையும் சுவர்க்கப் பூங்காவாக அமைய வேண்டுமானால் மரணிப்பதற்கு முன்பே அதற்குரிய அமல்களை அவசியம் செய்ய வேண்டும். அமல்கள் செய்யாமல் மரணிப்பவர், தன்னுடைய மரண நேரத்தில் இன்னும் கொஞ்ச காலம் இவ்வுலகில் வாழ்வதற்கு அல்லாஹ்விடம் அனுமதி கேட்பார். ஆனால், அவருக்கு கொஞ்ச நேரம் கூட கொடுக்கப்படமாட்டாது என்பதை அல்லாஹ் இவ்வாறு தன் திருமறையில் கூறுகின்றான்.

حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمْ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِي. لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; “என் இறைவனே! என்னை (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:99-100)

இவ்வளவுதான் இவ்வுலக வாழ்க்கை
மரணித்தவுடன் நாம் கஷ்டப்பட்டு உழைத்த பொருட்கள் மட்டும் பங்கு வைக்கப்படுவதில்லை நமது மனைவியையும் யாராவது மறுமணம் முடித்துக் கொள்வார்கள். நமது உடலை விட்டு உயிர் பிரிந்ததும், இவ்வுடலை எப்போது அடக்கம் செய்வது என்பதைப்பற்றித்தான் மக்கள் முதலில் பேசிக் கொள்வார்கள். இவ்வுளவுதான் இவ்வுலக வாழ்க்கை. நமது சொந்த பந்த உறவுகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடும்.

கப்ரில் கேட்கப்படும் கேள்வியும் விடையும்
மனிதன் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் தன் வாழ்வை இவ்வுலகில் அமைத்துக் கொண்டானோ, அதற்கேற்ற பதிலை மலக்குகளிடம் கப்ரில் கூறுவான். கப்ரில் கேட்கப்படும் கேள்விகளின் விடைகளை வைத்தே சுவர்க்கமும், நரகமும் முடிவு செய்யப்படுகிறது. அப்படியானால், கப்ரில் கேட்கப்படும் கேள்விகள் எவ்வளவு முக்கியமானது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த கேள்விகளையும் விடைகளையும் நாம் எல்லோரும் தெரிந்தே வைத்திருக்கின்றோம். அதனால் அக்கேள்விகளுக்கான விடைகளை கப்ரில் அனைவராலும் சொல்லிவிட முடியுமா? நிச்சயம் முடியாது.

யார் இவ்வுலகில் அல்லாஹ்விற்கு, கட்டுப்பட்டு நடந்தாரோ அவர்தான் “என் இறைவன் அல்லாஹ்” என்று கூறுவார். யார் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் நடந்தாரோ அவர்தான் எனது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் என்று கூறுவார். யார் இஸ்லாத்தை மார்க்கமாகப் பின்பற்றினாரோ அவர்தான் “என் மார்க்கம் இஸ்லாம்” என்று கூறுவார். பின்வரும் ஹதீஸ் இதைத் தெளிவு படுத்துகின்றது.

(சரியான விடை சொன்ன அம்மனிதரைப்பார்த்து, நீ இப்படி சரியான விடை சொல்வாய் என்பது எங்களுக்குத் தெரியும், காரணம்) நீ அப்படித்தான் வாழ்ந்தாய், அப்படியே மரணித்தாய், அப்படியே எழுப்பப்படவும் போகிறாய் என அம்மலக்குகள் கூறுவார்கள்.
(முஸன்னஃப் இப்னு அபீஷைபா)

இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இம்மூன்று கேள்விகளுக்கும் விடை கூறும் விதமாக உங்களின் இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

கப்ரைப்பற்றிய சில நபி மொழிகள்
நீங்கள் (ஜனாஸாவை) அடக்கம் செய்யமாட்டீர்கள் என்ற பயம் இல்லையென்றிருந்தால் எனக்கு கேட்கும் கப்ருடைய வேதனையை உங்களுக்கும் கேட்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் நான் துஆச் செய்திருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)

மண்ணறையில் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகத்திலுள்ள அவனது இடம் அவனுக்குக் காட்டப்படும். ‘மறுமை நாளில் இறைவன் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம்’ என்று அவர்களிடம் கூறப்படும்.
(புகாரி, முஸ்லிம்)

ஒரு ஜனாஸாவை (இறந்தவரின் உடலை) மனிதர்கள் சுமந்து செல்லும் போது அவர் ஒரு நல்லடியாராக இருந்தால், “(நான் தங்குமிடத்துக்கு அவசரமாக) என்னை எடுத்துச் செல்லுங்கள்” எனக்கூறும். அவன் பாவியாக இருந்தால், “(எனக்கு) என்ன கேடுதான் பிடித்து விட்டதோ!” என்று கூறியவாறு அலறும். இந்த ஓசையை மனிதர்கள், ஜின்கள் தவிர எல்லா உயிரினங்களும் செவிமடுக்கும். மனிதன் அச்சத்தத்தைக் கேட்டால் மயங்கிக் கீழே விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)

ஜனாஸாவை பின் தொடர்வதின் சிறப்புகள்
யார் ஈமானுடனும் அல்லாஹ்விடம் நற்கூலியை ஆதரவு வைத்தவராகவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று, ஜனாஸா தொழவைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் வரை அந்த ஜனாஸாவுடன் இருக்கிறாரோ அவர் இரண்டு “கீராத்” நன்மைகளைப் பெற்றுத் திரும்புகிறார். ஓவ்வொரு கீராத்தும் உஹது மலையைப் போன்றதாகும். யார் அந்த ஜனாஸாவின் தொழுகையில் (மட்டும்) கலந்து கொண்டுவிட்டு (நல்லடக்கத்துக்கு முன்) திரும்பி விடுகிறாரோ அவர் ஒரு “கீராத்” நன்மையைப் பெற்றுக் கொண்டு திரும்புகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)

கப்ரின் வேதனைக்குக் காரணம் என்ன?
கப்ரின் வேதனைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளை விடுவது.
2. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளைச் செய்வது.

கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு என்ன வழி?
1. செய்த தவறுகளுக்காக அல்லாஹ்விடம் உண்மையான தவ்பாச் செய்ய வேண்டும்.
2. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளில் முடியுமானவைகளைச் செய்ய வேண்டும்.
3. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளை முற்றாக விட்டுவிட வேண்டும்.

கப்ரின் வேதனையிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுகாத்து, அதை சுவர்க்கப் பூங்காவாக ஆக்கிவைப்பானாக!.

5 comments

  1. Mohammed Eliyas

    ماشا الله A good article. Aameen!

  2. kiyas, Maruthamunai

    I read the “Kabru life” and I thought about my life. thanks for Ibrahim madani.

  3. I read the “Kabru life” and I thought about my life. thanks for Ibrahim madani. -HYTHAR – alla periyavan…..

  4. Assalamu alaikum!
    எங்களில் எத்தனை பேர் இதனை நன்மையை ஏவி தீமையை தடுக்க நாம் அன்றாடம் பழகும் காபிர்களிடம் இந்த உண்மையை கூறி உள்ளோம்?
    each and every Muslim has this responsibility to warn others and instruct them about the correct way. Allhamthulliah!
    salam.

  5. Rabiyathul basiriya. A

    Maasha Allah very nice article
    Inshaallah we will try to live in the way of Islam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *