– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
இரகசியம் பேணுதல்:-
நட்பும், அன்பும் நீடிக்க நெருங்கிப் பழகுகின்றவர்களின் இரகசியங்களைப் பேணுவது அவசியமாகும். இரகசியங்களை அம்பலப்படுத்துபவன் மாணத்தை வாங்குபவன் என்று அறிந்துவிட்டால் யாரும் நெருங்கிப் பழக முன் வரமாட்டார்கள். தோழமையுடன், நட்புணர்வுடன் கதைக்க முற்படமாட்டார்கள். இத்தகையவர்கள் அனாவசியமாக அடுத்தவர்களின் பகைமையையும் வெறுப்பையும் சம்பாதிக்க நேரிடும்.
அப்துர் ரஹ்மான் அஸ்ஸலமீ எனும் அறிஞர் சகோதரர்களின் இரகசியங்களைப் பேணுவது என்பது நட்புறவின் ஒழுங்குகளில் உள்ளதாகும் என்று குறிப்பிடுகின்றார்.
இவ்வாறே மற்றும் சில அறிஞர்கள் நல்லவர்களின் உள்ளங்கள் இரகசியங்களின் புதைகுழிகள் என்று கூறுவர்.
இரகசியங்கள் சிலரிடம் சொல்லப்பட்டால் அவர்களது உள்ளங்கள் எனும் கப்ருகளுக்குள் அவை அடக்கப்பட்டுவிடும் மீண்டும் அவை வெளியே வராது என்று குறிப்பிடுகின்றனர்.
உமர்(ரழி) அவர்களது மகள் ஹப்ஸா(ث) அவர்களை உனைஸ் இப்னு குதாபா(ரழி) மணந்நிருந்தார். இவர் ஒரு பத்ர் ஸஹாபியாவார்.
இவர் மரணித்த பின்னர் உமர்(ரழி) அவர்கள், உஸ்மான்(ரழி) அவர்களைச் சந்தித்து “நீங்கள் விரும்பினால் ஹப்ஸாவை உங்களுக்கு மணமுடித்துத் தருகிறேன்!” என்று கூறினார்கள்.
உஸ்மான்(ரழி) அவர்கள் இது குறித்து யோசித்து முடிவு சொல்வதாகக் கூறி விட்டு சில நாட்களின் பின்னர் “தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை!” என்று கூறினார்கள்.
இதன் பின்னர் ஹப்ஸா(ث) அவர்களது திருமணம் தொடர்பாக அபூபக்கர்(ரழி) அவர்களிடம் உமர்(ரழி) அவர்கள் பேசினார்கள். அவர் ஒன்றும் கூறவில்லை. இவர் எந்தப் பதிலும்; தராததால் உமர்(ரழி) அவர்கள் வருத்தப்பட்டார்கள்.
இதன் பின்னர் ஹப்ஸா(ث) அவர்களை நபி(ஸல்) அவர்கள் பெண் கேட்டு மணமுடித்தார்கள்.
இதன் பின்னர் அபூபக்கர்(ரழி) அவர்கள் உமர்(ரழி) அவர்களைச் சந்தித்து, “நீங்கள் ஹப்ஸா விடயமாகப் பேசிய போது நான் பதிலளிக்காதது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் “ஆம்!” என்று கூறினார்கள். அது கேட்ட அபூபக்கர்(ரழி) அவர்கள், “நபி(ஸல்) அவர்கள் ஹப்ஸா பற்றிப் பேசினார்கள்! நபி(ஸல்) அவர்களது இரகசியத்தை வெளியிடவும் முடியாது! மறுக்கவும் முடியாது என்பதால்தான் நான் மௌனமாக இருந்தேன்! அவர்கள் மணமுடிக்காது விட்டிருந்தால் தாங்கள் வேண்டுதலை நான் ஏற்றிருப்பேன்!” என்று கூறினார்கள்.
(புஹாரி- 4005)
அபூபக்கர்(ரழி) அவர்கள் தனது நண்பரும் நபியுமான அல்லாஹ்வின் தூதரின் இரகசியத்தைப் பாதுகாப்பதில் காட்டிய அக்கறையை இந்த செய்தி எடுத்துக்காட்டுகிறது.
ஒருவரிடமும் கூற வேண்டாம் என்று கூறும் செய்தியை அதே போன்று ஒருவரிடமும் கூறிவிடாதீர்கள் என்று நாமும் கூறிவிடுகின்றோம். அவரும் அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் ஒருவரிடமும் கூறிவிடாதீர்கள் என்று கூறுகின்றார். இப்படியே இரகசியம் பரகசியமாகின்றது.
சிலர் நகமும் சதையும் போல ஒன்றாக இருந்து விட்டு ஏதேனும் பிரச்சினை காரணமாகப் பிரிந்து விட்டால் அவர் அப்படி இப்படி என்று பழைய குப்பைகளைக் கிளற ஆரம்பிப்பார்கள்; இரகசியங்களை அம்பலப்படுத்துவார்கள்.
இத்தகையவர்கள் நட்புக்கொள்ள அருகதையற்றவர்கள். அவர்களிடம் தூய அன்பையோ, நல்ல நட்பையோ எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது.
நண்பன் எதிரியானாலும் அவன் நட்புடன் இருந்த போது நடந்த இரகசியங்களைப் பேணுவது கட்டாயமாகும்.
ஆனால், சிலர் எதிர் காலத்தில் பகையாளியாக ஆகிவிட்டால் பழிவாங்குவதற்காகவே நட்போடு இருக்கும் போதே திட்டமிட்டு செயற்படுகின்றனர். இரகசியங்களைச் சேகரித்து அதற்கான சாட்சியங்களையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் மனிதனாக இருக்கவே தகுதியற்றவர்களாகின்றனர்.
தீமையை நன்மையைக் கொண்டு தடுத்தல் :-
மனிதன் அடுத்தவர்களுடன் இணைந்து வாழும் போது பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம். பல எதிர்ப்புக்களைச் சந்திக்க நேரிடலாம். தனது எதிரிகளை எதிர்ப்புணர்வுடனும் எதிர்கொள்ளலாம்.
அவ்வாறு எதிர்கொள்ளும் போது போபமும், குரோதமும் அதிகரிக்கும். எதிரிகளை அவர்களே நாணிக் கூணிப் போகும் அளவுக்கு நன்மை மூலம் எதிர்கொள்ளலாம் இதன் மூலம் எதிரியின் எதிர்ப்புணர்வு நட்பாகக் கூட மாறலாம்.
எனவே அன்பும் நட்பும் வளர மக்கள் மனங்களைக் கவர தீமையை நன்மை மூலம் தடுத்தல் என்பது நல்ல வழியாகும்.
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். இரும்பை இரும்பால் தான் அறுக்க வேண்டும் என்ற தத்துவம் கூறுவர் பலர். இது அன்பை வளர்க்க வழி வகுக்காது.
இது குறித்து அல் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது;
“எது மிகச் சிறந்ததோ அதன் மூலம் தீமையைத் தடுப்பீராக! அவர்கள் வர்ணிப்பவற்றை நாமே மிக அறிந்தவர்கள்.” (23:96)
“நன்மையும் தீமையும் சமமாக மாட்டாது. மிகச் சிறந்ததைக் கொண்டே (தீமையை) நீர் தடுப்பீராக! அப்போது, எவருக்கும் உமக்கும் இடையில் பகைமை இருக்கின்றதோ அவர் உற்ற நண்பரைப்போல் ஆகி விடுவார்.” (41:34)
நபி மொழிகளில் இதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகளைக் காணலாம்.
நபி(ஸல்) அவர்கள் தனது பகிரங்க எதிரிகளான துமாமா, ஹிந்தா, வஹ்ஸி போன்றோரை மன்னித்து இஸ்லாத்தின் பால் அவர்களை ஈர்த்தார்கள். தன்னையும் தனது தோழர்களையும் கொடூரமாக சித்திரவதை செய்தவர்களையும், தனது தோழர்கள் பலரைக் கொலை செய்து ஊரை விட்டும் விரட்டியடித்தவர்களையும் மன்னித்ததன் மூலம் அவர்கள் அனைவரையும் நெருங்கிய நண்பர்களாக மாற்றினார்கள்.
அபூஸினா(ரழி) அவர்கள் அறிவிக்கும் துமாமா(ரழி) அவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவம் இந்த அடிப்படையில் சிந்திக்க வேண்டிய நிகழ்வாகும்.
தூமாமா என்பவர் யமாமாவின் சிற்றரசராவார். அவர் இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரியாக இருந்தார். நபி(ஸல்) அவர்களை எங்கு கண்டாலும் கொலை செய்யுமாறு அவர் தனது தோழர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்.
ஒரு முறை முஸ்லிம்கள் இவரைக் கைது செய்தனர். இவரை இனம்காணாத அவர்கள் இவரை மஸ்ஜிதின் தூணில் கட்டிவைத்திருந்தார்கள்.
இவரைப் பார்வையிட்ட நபி(ஸல்) அவர்கள் “துமாமாவே உங்களது நிலை என்ன?” எனக் கேட்ட போது,
“நான் செய்த குற்றங்களுக்காக என்னை நீங்கள் கொல்வதாக இருந்தால் என்னைக் கொல்லலாம்.
என்மீது நீங்கள் இரக்கம் காட்டினால் நன்றியுடைய ஒருவருக்கே நீங்கள் இரக்கம் காட்டுகின்றீர்கள்.
நீங்கள் செல்வத்தை விரும்பினால் எதை வேண்டுமானாலும் கேளுங்கள்!” எனக் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் துமாமாவை விடுதலை செய்தார்கள். அவர் குளித்து விட்டு ஷஹாதா கலிமா கூறி இஸ்லாத்தை ஏற்றார்கள்.
அப்போது அவர் “இந்த உலகிலேயே உங்கள் முகம்தான் எனக்கு வெறுப்பான முகமாக இருந்தது. இப்போது உங்களது முகம்தான் எனக்கு எல்லா முகங்களை விடவும் நேசத்திற்குறிய முகமாகத் திகழ்கிறது” என்று கூறினார்கள். (புகாரி 4372, முஸ்லிம் 4688)
நபி(ஸல்) அவர்களதும் நபித் தோழர்களினதும் மிகப்பெரிய எதிரியாக இருந்த துமாமா இஸ்லாத்தின் பாதுகாவலர்களில் ஒருவராக மாறினார். நபி(ஸல்) அவர்களை வெறுத்த அவர் தனது உயிரை விட அதிகமாக நேசிக்க ஆரம்பித்தார்.
எனவே, தீமையைத் தீமை மூலம் தடுக்காமல் தீமையை நன்மை மூலம் தடுப்பதனால் அன்பும் நட்பும் வளரும்.
எனவே, எதிரிக்கும் நன்மை செய்து அன்பை வளர்க்கவும், உள்ளங்களை வெல்லவும் முயல்வோமாக.
நற்பண்புகள்:-
பிறரது உள்ளத்தை ஈர்க்கவும், அன்பையும் நட்பையும் பெற்றுக்கொள்ளவும் நாம் நற்பண்புள்ளவர்களாகத் திகழ்வது அவசியமாகும். மக்கள் நம் மீது மதிப்பு வைக்கவும், நாம் கூறுவதைக் கேட்டு நடக்கவும் இது பெரிதும் உதவும். நபி(ஸல்) அவர்கள் உயர்ந்த பண்புள்ளவர்களாக இருந்தார்கள்.
நபி(ஸல்) அவர்களது உயர்ந்த நற்பண்புகளால் பலரும் ஈர்க்கப்பட்டனர். நபித்துவத்திற்கு முன்னரே அஸ்ஸாதிக் (உண்மையாளர்), அல் அமீன் (நம்பிக்ககையாளர்) என மக்களால் போற்றத்தக்க விதத்தில் நபி(ஸல்) அவர்களது நற்பண்பு உயர்ந்து திகழ்ந்தது.
நபி(ஸல்) அவர்களிடம் இயல்பாகக் காணப்பட்ட மென்மையான போக்கு அன்பு, பாசம், கருணை, பிறருக்கு உதவும் பண்பு போன்ற எண்னற்ற நற்குணங்களால் அவர்கள் மக்களால் நேசிக்கப்பட்டார்கள். எனவே பிறரது அன்பையும், நட்பையும் பெற விரும்புவர். பிறர் மீது தனது ஆளுமையைப் பிறயோகிக்க விரும்புவர் எவராயினும் நற்பண்புகள் அதற்குப் பெரிதும் துணையாக இருக்கும் என்பதைக் கவனத்திற் கொண்டு நடத்தல் அவசியமாகும்.
மென்மையான போக்கு:-
தவறைக் கண்டிக்கும் போதும் சாதாரனத் தொடர்பாடலின் போதும் மென்மையாக நடந்து கொள்வதன் மூலம் பிறரது அன்பை நாம் பெறமுடியும். கடுமையான போக்கு நண்பர்களையும் எதிரியாக்கி விடும். நெருங்கி வருபவர்களையும் தூரப்படுத்தும்.
“(நபியே!) அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீர் அவர்களுடன் மென்மையாக நடந்துகொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பின் அவர்கள் உம்மை விட்டும் விலகிச் சென்றிருப்பார்கள். எனவே, அவர்களை நீர் மன்னித்து, அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடி, காரியங்களில் அவர்களுடன் ஆலோசனையும் செய்வீராக! நீர் உறுதியான முடிவுக்கு வந்து விட்டால் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் (தன் மீது) முழுமையாக நம்பிக்கை வைப்போரை நேசிக்கின்றான்.” (3:159)
நபி(ஸல்) அவர்களைச் சூழ எப்போதும் நபித் தோழர்கள் திரண்டிருப்பர். இதற்கு அவர்கள் போதித்த போதனை மட்டும் காரணம் அல்ல. அவர்களது மென்மையான போக்கும் காரணம் என மேற்படி வசனம் கூறுகின்றது.
நபி(ஸல்) அவர்கள் கடும் சொல் சொல்பவராகவும் கடுகடுப்பானவராகவும் இருந்திருந்தால் இந்த நபித் தோழர்களெல்லாம் எப்போதோ அவரை விட்டும் வெருண்டோடி இருப்பார்கள் என இந்த வசனம் கூறுகின்றது.
நபி(ஸல்) அவர்கள் எதிரிகளுடன் கூட மிக மென்மையான போக்கைக் கைக்கொண்டுள்ளார்கள். உணவில் தனக்கு விஷம் கலந்த பெண்ணுடனும், தான் உறங்கும் போதும் தன்னைக் கொலை செய்ய சதி செய்தவனுடனும் கூட அவர்கள் மென்மையான போக்கைக் கைக்கொண்டிருப்பதனை அவதானிக்கலாம்.
தன்னுடன் கூட இருப்பவர்கள் தன்னைச் சூழ இருப்பவர்கள் தவறு செய்யும் போது மென்மையாகவே அந்தத் தவறுகளைச் களைய முயன்றுள்ளார்கள்.
அதனால் அவர்கள் அனைவரதும் அன்பையும் நட்பையும் பெற்றார்கள்; அனைவரது உள்ளங்களையும் கவர்ந்தார்கள்.
ஒரு நாட்டுப் புற அறபி மஜ்ஜிதுக்குள் சிறுநீர் கழிக்க முயன்ற போது நபித் தோழர்கள் அவரைத் தடுக்க முற்பட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள், தனது தோழர்களைப் பார்த்து “அவரை விடுங்கள்! அவர் தனது தேவையை நிறைவு செய்யட்டும்! நீங்கள் இலகுபடுத்துபவர்களாக அனுப்பப்பட்டவர்களே தவிர கஷ்டப்படுத்த அனுப்பப்பட்டவர்களல்ல!” எனக் கூறினார்கள். அவர் சிறுநீர் கழித்து முடிந்ததும் அதன் மேல் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுமாறு கூறினார்கள்.
(புகாரி 220, 6128, முஸ்லிம் 685, திர்மிதி 147)
பின்னர் நபி(ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தவரை அழைத்து “இது அல்லாஹ்வை ஸுஜூது செய்யும் இடமாகும்! இங்கு மலசலம் கழித்தல், அசுத்தப்படுத்துதல் என்பது கூடாது! இது அல்லாஹ்வினது வேதத்தை ஓதுவதற்கும், அவனை நினைவுபடுத்துவதற்கும் தொழுவதற்கும் உரிய இடமாகும்!” என இதமாக எடுத்துக் கூறினார்கள். (அஹ்மத் 12984)
மஸ்ஜிதுக்குள் சிறுநீர் கழித்த அவரிடம் நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு மென்மையாக நடந்துள்ளார் என்பதை அவதானியுங்கள். அந்த மனிதரிடம் பேசும் போது நபி(ஸல்) அவர்கள் அவரை எந்த விதத்திலும் கடிந்துகொள்ளவில்லை. குறைத்துப் பேசவுமில்லை. எவ்வளவு இதமாகவும், இனிமையாகவும் சொல்ல வேண்டிய விடயத்தை மட்டும் சொல்லியிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கதாகும்.
இதனை உணர்த்தும் மற்றுமொரு நிகழ்ச்சியையும் நினைவுபடுத்துவது பொருத்தமாக அமையும் என நினைக்கின்றேன்.
ஆரம்பத்தில் தொழுகையில் ஒருவர் மற்றவருக்கு ஸலாம் கூறுவதும் பதில் கூறுவதும் வழக்கத்தில் இருந்தது. பின்னர் அது தடுக்கப்பட்டு விட்டது. முஆவியதிப்னுல் ஹகம் அஸ்ஸுலமீ(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்,
“நான் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் தும்மி விட்டு “அல்ஹம்துலில்லாஹ்!” எனக் கூறினார். நான் அதற்குப் பதில் கூறும் முகமாக “யர்ஹமுகல்லாஹ்!” என்று கூறினேன். அப்போது மக்கள் என்னை முறைத்துப் பார்த்தனர். “என்ன இப்படிப் பார்க்கிறீர்கள்!” என நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் தமது கரங்களால் தமது தொடைகளில் அடித்து எனது பேச்சை நிறுத்தினர். நான் மௌனமானேன். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். என் தாயும், தந்தையும் அவருக்கு அர்ப்பணமாகட்டும். அவருக்கு முன்னரோ, பின்னரோ அவரை விடச் சிறந்த ஒரு ஆசிரியரை நான் கண்டதில்லை. அவர் என்னை அதட்டவில்லை. எனக்கு அடிக்கவில்லை. என்னைத் திட்டவுமில்லை. “இந்தத் தொழுகையில் மனிதர்களிடத்தில் பேசக் கூடிய பேச்சுக்கள் எதையும் பேசலாகாது! அதில் அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தும் தக்பீர்கள் அவனது வேதத்தை ஓதுதல் போன்றவற்றைச் செய்ய வேண்டும் என்;று கூறினார்கள்.
(முஸ்லிம்: 1227, 33 – அபூதாவூத்: 931, 930)
இந்த அடிப்படையில் மென்மையாக நடத்தல் என்பது பிறரது அன்பையும் நட்பையும் பெறவும், இருக்கும் அன்பையும் நற்பையும் வளர்க்கவும் சிறந்த வழியாகும். கடுகடுத்த முகமும், கடும் போக்கும் இருக்கும் நட்பையும் இழக்கச் செய்யும் என்பதைக் கவனத்திற்கொள்வோம்.
எனவே மென்மையான போக்கைக் கைக்கொள்வதன் மூலம் மக்கள் மனங்களைக் கவர முனைவோமாக!
அழகிய தோற்றம்:-
அழகை விரும்பாதவர் எவருமில்லை. அசிங்கத்தையும், அறுவருப்பையும் கண்டு விலகி ஓடுவதே மக்கள் இயல்பாகும். பிறர் தன் மீது நேசம் வைக்க வேண்டும்! மற்றவர்கள என்னுடன் நெருங்கிப் பழக வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் தமது வெளித் தோற்றத்தை அழகாகவும் கவர்ச்சிகரமானதாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும்.
வெளித்தோற்றத்தை அழகுபடுத்துவதில் ஆடைக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆள் பாதி ஆடை பாதி என்பர். ஆடையை வைத்தே மக்கள் மனிதனை எடைபோடுகின்றனர். எனவே ஆடைகள் அழகானதாகவும், கண்ணியமானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்துங்கள்! கண்ணியமான ஆடை என்பது ஆளுமையை உயர்த்திக் காட்டும். இத்தகையவர்களுக்கு வார்த்தைக்கு மக்கள் அதிக மளிப்பளிப்பர்.
வெளித்தோற்றத்தை அழகு படுத்துவதில் தலைமுடிக்கும் அதிக பங்குள்ளது;
அபூஹுரைரா(ரழி) அறிவிக்கின்றார்கள்;
“யாருக்கு தலை மயிர் உள்ளதோ அதை அவர் கண்ணியப்படுத்தட்டும்!.” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத் 4165, 4163)
இவ்வாறே நடை, உடை, பாவனை அனைத்தையும் அழகாக வைத்திருப்பது மக்களை நம்மிடம் நெருக்குவதாக இருக்கும்.
சிலர் சமூக அந்தஸ்துப் பெற்ற பெரியவர்களாக இருப்பர். இவர்களது ஆடை நடைமுறையும் அவர்களுக்கு அதிக அந்தஸ்தைப் பெற்றுத் தருவதாக இருக்கும். எனினும் அவர்கள் ஒழுங்காக வாய்ச் சுத்தம் செய்யாததால் நெருங்கிக் கதைப்பவர்கள் முகத்தை சுழிக்கின்றனர். எப்போது விஷயம் முடியும் எழுந்து ஓடிவிடலாம் என்ற எதிர்பார்ப்புடனேயே கதைப்பர். பிறர் நம்மை அண்டி வருவதில் பல் சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது.
ஒவ்வொரு தொழுகைக்காகவும் வுழூச் செய்யும் போதும் பல் துலக்குவது கட்டாய சுன்னத்துக்களில் ஒன்றாகும். நபி(ஸல்) அவர்கள் பயணம் சென்று வீடு வந்தால் முதலில் பல் துலக்குவார்கள் என நபிமொழிகள் கூறுகின்றன.
வெற்றிலை சாப்பிடுவோர், புகை பிடிப்போர் தமது அருவருப்பான வாய் தோற்றம், நாற்றம் என்பவற்றைக் கருத்திற் கொண்டாவது இவற்றைத் தவிர்க்க வேண்டும். குறைந்த பட்சம் தமது மனைவியர் தம்முடன் இல்லறத்தில் ஈடுபடும் போது எவ்வளவு வெறுப்புடன் நடந்து கொள்வர் என்பதையாவது இவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். எனவே அனைவரும் தமது வாயிலிருந்து கெட்ட வாடை வெளியேறாதவாறு பார்த்துக் கொள்ளல் அவசியமாகும்.
அத்துடன் நல்ல மணம் வீசும் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதும் சுன்னாவாகும்.
அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;
நபி(ஸல்) அவர்கள் சிவந்த தோற்றமுடையவர்களாக இருந்தார்கள். அவர்களது வியர்வை முத்துப் போல் இருக்கும். நபி(ஸல்) அவர்களது கரத்தை விட மென்மையான பஞ்சையோ! பட்டையோ! நான் தொட்டதில்லை. நபி(ஸல்) அவர்களை விட அதிக மனம் உள்ள கஸ்தூரியையோ! அன்பரையோ! நான் மணந்ததில்லை.
(முஸ்லிம் 82, 6200, அஹ்மத் 13374)
எனவே அழகிய ஆடை அமைப்பு, நாகரீகமான சிகை அலங்காரம், உடல் சுத்தம், வாய் சுத்தம், நல்ல வாசனை என்பன போன்ற பிறரைக் கவரக்கூடிய அம்சங்கள் எம்மிடம் குடிகொள்வது அவசியமாகும். இவற்றின் மூலம் மக்கள் நம் மீது நேசம் கொள்வர். நெருங்கி வருவர். நமது தோற்றம் அவர்கள் மீது ஆளுமை செலுத்தும் வண்ணமிருந்தால் நாம் கூறுவதை அவர்கள் கேட்பார்கள். தஃவாவிற்கு இது பெரிதும் உதவியாக அமையும். எனவே உங்கள் வெளித்தோற்றத்தை அழகானதாகவும், பிறரைக் கவரத்தக்கதாகவும் அமைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்.
குறை கூறுவதை விட்டுவிடுங்கள்:-
சிலர்; எப்போதும் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். எதிலும் அவர்கள் நிறை காண மாட்டார்கள். குறை காண்பதில் கிள்ளாடியாக இருப்பார்கள். இத்தகையவர்களை மனிதர்கள் நேசிக்க மாட்டார்கள். நெருங்கி இருக்கவும் விரும்ப மாட்டார்கள். எனவே, பிறரை வாழ்த்தவும், போற்றவும் நாம் தெரிந்திருக்க வேண்டும். ஒரு குறையைச் சுட்டிக் காட்டும் போதும் சில நிறைகளைச் சுட்டிக்காட்டி இந்தக் குறையை மட்டும் திருத்திக் கொண்டால் இன்னும் எவ்வளவோ நன்றாக இருக்கும் என நாசுக்காகக் குறையைச் சுட்டிக்காட்ட முடியும்;. இதற்கு மாற்றமாகச் சிலர் எந்த நன்மையையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள். குறைகளை மட்டும் முகத்தில் அடித்தாற் போல் கூறிவிடுவர். அதே நேரம், தனது இந்த நடத்தை பற்றி போற்றிப் புகழ்ந்து கொள்வர். நான் அப்படித்தான் யாரெண்டும் பார்க்க மாட்டேன் முகத்துக்கு முகம் நேராகச் சொல்லிவிடுவேன் என்றெல்லாம் கூறுவர். இத்தகையவர்களது முன்னிலையில் மக்கள் சமாளித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டே இருப்பார்கள். இவர்களைக் கண்டால் விலகி ஓட விரும்புவர்.
அனஸ்(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்,
“நான் நபி(ஸல்) அவர்களிடம் பத்து வருடங்கள் பணியாற்றியுள்ளேன்! அவர்கள் ஒரு போது கூட சீ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதில்லை! நான் செய்த ஒரு வேலை குறித்து ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டதுமில்லை! செய்யாத ஒரு வேலை குறித்து ஏன் இப்படிச் செய்யவில்லை? எனக் கேட்டதில்லை.
(திர்மிதி 2015, அஹ்மத் 13035, 13373)
நபி(ஸல்) அவர்கள், இப்னு உமர் (வ) அவர்கள் பற்றிக் கூறும் போது “இப்னு உமர் நல்ல மனிதர்! இரவிலே அவர் எழுந்து தொழுதால் இன்னும் நன்றாக இருக்கும்!” என்று கூறினார்கள். இதன் பின்னர் இப்னு உமர்(ரழி) சிறிது நேரமே உறங்குபவர்களாக இருந்தார்கள். (புகாரி 1122, 1157, 3739, முஸ்லிம் 6525)
குறையைச் சுட்டிக்காட்ட விரும்பினால் இந்த வழிமுறையைப் பின்பற்றுவது எளிதில் பயனளிக்கும். எனவே, குறையை மட்டும் பார்க்காது நிறையையும் பார்க்கும் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்தும் குறை கூறுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். நிறையைப் போற்றி குறையை நாசூக்காகக் கூறக் கற்றுக்கொள்ளுங்கள். மக்கள் உங்களை மதிப்பர். மக்கள் மனங்களைக் கவர முடியும்.
ASSALAMUALAIKUM ISMAIL,
I AM SO APPRECIATE YOUR ARTICLE ABOUT”MAKKAL MANANGAL”MAY ALMIGHTY ALLAH SHOWER YOU WITH HIS BLESSINGS.AL HAMDULILLAH.
SAMEER M SAHIB
useful news. alhamdhuillah
secret is very importamt.
nice article, which kindles the inner thoughts to be in good ,honest character