Featured Posts

முக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்!

முக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்!

முக்தரன் மாய்.

பரபரப்பாக பேசப்பட்ட, தனக்கிழைக்கப்பட்ட பாலியல்கொடுமைக்கு நீதி கேட்டுப் போராடிய பாகிஸ்தானிய பெண். பாகிஸ்தானின் அழுக்கை வெளிநாடுகளில் அம்பலப்படுத்துவதாக அந்நாட்டு அதிபரால் செய்யப்பட்ட கண்டனத்தை மீறி நியாயத்துக்காகப் போராடியவர்.

பாகிஸ்தான்.

இஸ்லாமியக் குடியரசு (அ) இராணுவ அரசு என்று தன்னைப்
பிரகடனப்படுத்திக்கொண்டாலும், கெடுத்தவனுக்கே பெண்ணைக் கட்டிவைக்கும் கேணத்தனமான பஞ்சாயத்துத் தீர்ப்புகளை விடவும் மோசமான கட்டைப் பஞ்சாயத்துகள் அதிகமதிகம்
புழக்கத்தில் உள்ள நாடு.

முஸ்லிம் உலகம்.

தன் அடையாளத்தைப் பேணுவதில் உணர்ச்சி வசப்படும் அளவுக்கு அறிவு வசப்படுவதில்லை.ஆங்கிலேயன் எதிரி என்பதற்காக, ஆங்கிலத்தை ஆகாததாக்கி தன்னைத்தானே பின்னுக்குத் தள்ளிக்கொண்ட சமூகம். கடந்த காலத்தில் ஒலிப்பெருக்கி போன்ற விஞ்ஞான கண்டு பிடிப்புகளை ‘தேவையற்றதாக’ தனக்குத்தானே அளித்துக்கொண்ட தீர்ப்புகள் மூலம் தன் குரல் அமுங்கிப்போக தானே வழிவகுத்த அவலம். காட்டிக்கொடுத்தவர்கள் கோலோச்சிக்கொண்டிருக்கும் நாட்டில் நாட்டின் உரிமையை காத்து நின்றும், இன்று தன் உரிமைகளுக்காக காத்துக்கிடக்கும் சமுதாயம்.

கூட்டு வன்புணர்வு என்கிற ஈனக்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டப் பெண் (முக்தரன் மாய்) நியாயம் கேட்டு உயர்நீதிமன்றத்தை அணுகி முறையிட, ஒரு இஸ்லாமியக்குடியரசின் நீதிமன்றம் என்ன செய்திருக்கவேண்டும்? குர்ஆனிலோ, நபிவாழ்விலோ உள்ள அறிவுரைகள் அல்லது நடத்தைகளின் அடிப்படையில் தனது தீர்ப்பைச் சொல்லியிருக்க வேண்டும்.

வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டப் பெண்ணின் ஒரேஒரு சாட்சியத்தைக் கொண்டு குற்றஞ்சாட்டப்பட்டவரை (விசாரணைக்காக) பிடித்து வரச்சொன்ன ஒரு சம்பவம் நபிகளின் காலத்தில் நடந்ததை பதிவர் அபூ முஹை கூட ஒரு பதிவில் விளக்கியிருந்தார். அந்த அடிப்படையில் அப்பெண்ணின் ஒரே சாட்சியத்தை ஏற்று அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக DNA டெஸ்ட் போன்ற ஆதாரங்களினை மேற்கொண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். நடந்ததோ வேறு விதம்.

பெண் மீது சுமத்தப்படுகிற அவதூறு பற்றி விசாரிக்கும் போது நாலு சாட்சிகள் வேண்டும் என்கிற ஷரத்தை முன்னிட்டு.., ஒரு பெண் சில ஆண்கள் மீது சொன்ன குற்றச்சாட்டுக்கு பொருந்தாத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அத்தகையத் தீர்ப்பின் பின்னணியில் அரசியலோ, ஆணாதிக்கமோ, அறிவீனமோ இருந்திருக்கலாம் என்பதை மறுக்க இயலாது.

தன் வீட்டுப்பெண்ணை வைத்து வீசப்படுகிற அவதூறுகளுக்கெதிராக கொதித்தெழுகிற முஸ்லிம் உலகம், தன் வீட்டுப்பெண் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமையான தீர்ப்புக்கெதிராக மெளனம் காத்து தன் இயலாமையை அம்பலப்படுத்திவிட்டது. கட்டாயம் கண்டிக்கப்படவேண்டிய மெளனம் இது. இத்தகைய தவறான தீர்ப்புகளே பிற்காலத்திற்கு முன்மாதிரிகளாகும் அபாயம் இருக்கிறது.

இந்த விவகாரத்தில் நியாயம் பெற அப்பெண் நாட்டைத் துறந்து செல்ல வேண்டிய நிலை வந்தது. முறையாக இஸ்லாத்தைப் பேணும் அநேக அமைப்புகளிருந்தும் அந்நாட்டில் இந்நிலை ஏற்பட்டதை என்னவென்று சொல்வது?

‘பிழைகளும், ஆதிக்க உணர்வுகளும் எல்லா சமுதாயத்திலும் உள்ளது தான். ஆனால், ‘எந்த சமுதாயம் தன்னைத்தானே திருத்திக்கொள்ள முன்வரவில்லையோ, அந்த சமுதாயத்திற்கு இறைவனும் உதவ மாட்டான்’ என்பதை முஸ்லிம் உலகம், அதன் அறிஞர்கள் நினைவில் நிறுத்த வேண்டும்.

அதுபோக, ஆணாதிக்கம் என்கிற அதிகாரப் போதைக்காகவோ, பெண்ணியம் என்கிற பேறு பேசவோ அல்லாமல், நியாயம் பேசுகிற நிதானத்தை முஸ்லிம் அறிஞர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

4 comments

  1. நடுநிலையான பதிவு.

    நன்றி!

  2. சுட்டுவிரல்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அழகு அவர்களே!

  3. சுட்டுவிரல்

    இதே விஷயத்தை பதிவிட்டிருக்கும் ‘நண்பன்’ பதிவில் நான் இட்ட பின்னூட்டம்:

    நண்பரே,
    “இஸ்லாம் ஓர் சிறந்த மார்க்கம். அதைப் பின்பற்றுவதில் முஸ்லிம்கள் மோசமானவர்கள்” என்று அறிஞன் G.B. ஷா சொன்னதை உங்களுடைய இந்தப் பதிவும், உங்களுக்கும் அபூமுஹைக்கும் இடையே நிகழும் பின்னூட்ட பரிவர்த்தனைகளும் உணர்த்துகின்றன.

    1). லாஹூர் நீதிமன்றத் தீர்ப்பு தவறானது என்பதிலோ, அவசியம் திருத்தப்படவேண்டும் என்பதிலோ உங்களுக்கும் அபூமுஹைக்குமிடையே கருத்து வேற்றுமை இல்லை.!

    2). இஸ்லாமிய ஹதீஸ் நூல்களான அபூதாவூதிலிருந்தும், திர்மதியிலிருந்தும் சரியான வழிகாட்டுதலை அபூமுஹை எடுத்துவைத்து அதன்படி தவறான இத்தீர்ப்பு திருத்தப்படவேண்டும் என்கிறார்.
    நீங்களோ, முஷாரப் வைத்த திருத்தம் ஏற்றுக்
    கொள்ளப்பட வேண்டும் என்கிறீர்கள். அடிப்படையிலேயே வழிகாட்டல் தெளிவாக இருக்கிறது என்கிறார் அபூ முஹை.

    உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சுட்ட விரும்புகிறேன்.
    தவறான புரிதலால், ஷரியாவை தவறாக விளங்கிக்கொண்டு தீர்ப்பளிப்பது என்பது முஸ்லிம்களிடையே வழமையில் இருந்து வருகிறது என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.ஒருபோதும் நியாயப்படுத்த இயலாது என்ற போதும் .
    இப்போது மீண்டும் G B ஷா நினைவுக்கு வருகிறார். ‘இஸ்லாம் ஓர் சிறந்த மார்க்கம்……

    ‘தலாக்’ விஷயத்தில் கூட ஒரே சமயத்தில் முத்தலாக் செல்லாது என்கிற தெளிவை மிகச் சமீபத்தில் தான் (20ம் நூற்றாண்டின் இறுதியில்) அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் ஏற்றுக்கொண்டது. (இன்னமும், பாகிஸ்தானில் எப்படியோ?!)
    ஒரு உதாரணத்துக்காகத் தான் சொல்கிறேன். இன்னமும் இதில் பிணக்குக்கொள்ளும் ‘மார்க்க அறிஞர்களும்’ இருந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். மறுக்க இயலாது. ஆராய்ச்சி அறிவு, மார்க்க அறிவு, சமூக சூழல், போன்றவற்றால் நாட்டுக்கு நாடு, அறிஞருக்கு அறிஞர் இத்தகைய வேற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன.

    தவறான தீர்ப்புகளால் பெண்களும், ஆண்களும் – முஸ்லிம்கள் – பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதற்காக முழு சமுதாயமும் போராடத்தான் வேண்டும் என்பதையும் ஏற்கிறேன். அத்தகைய விழிப்புணர்வைத் தருகிற உங்கள் பதிவுக்கு நன்றி.

    நீங்களும் அபூமுஹையும் ஒரே கருத்தில் இருப்பதை உணராமல் இருக்கிறீர்களோ என்று தோன்றியதால் தான் எழுதுகிறேன்.

    இதே விஷயத்தை வைத்து நானும் பதிவிட்டிருக்கிறேன்.
    (இப்பின்னூட்டத்தை அங்கும் வைக்கிறேன்). நன்றி

  4. I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this http://www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *