– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
இஸ்லாம் சகல உயிர்கள் மீதும் காருண்யத்தைக் காட்டுமாறு கூறும் சன்மார்க்கமாகும். இருப்பினும் மனித இனத்தின் தேவை கருதி, படைப்பினப் பெருக்கத்தின் சமநிலை கருதி சில உயிரினங்களை உரிய முறையில் அறுத்து உண்பதை அனுமதித்துள்ளது. இதை ஒரு குறையாகவோ, குற்றமாகவோ இஸ்லாம் காணவில்லை. குர்பான், அகீகா, உழ்ஹிய்யா போன்ற சந்தர்ப்பங்களில் உயிர்ப் பிராணிகளை அறுத்துப் பிரருக்கு உண்பதற்காக அளிப்பதை வணக்கமாகக் கூட இஸ்லாம் கருதுகின்றது.
இதை வைத்து இஸ்லாத்தில் ஜீவகாருன்யம் இல்லை. அது கொடிய இதயத்தை மனிதனிடம் வளர்க்கின்றது என்று இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளாதோரும், இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டோரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம்கள் மாடு அறுப்பதனை வைத்து அவர்களை ஈவு இரக்கமற்றவர்களாக இன்றைய தொலைத் தொடர்புச் சாதனங்கள் விமர்சித்து வருகின்றன. உண்மையில் இஸ்லாத்தில் ஜீவகாருண்யம் இல்லையா? புலால் உண்பதை வைத்து முஸ்லிம்களைக் கொடியோர்களாகச் சித்தரிக்கும் மாற்றுத் தரப்பார் நடுநிலை நோக்குடையோரா? புலால் குறிப்பாக மாடு, அதிலும் குறி;பாக பசுவை உண்ணக் கூடாது என்பது எப்படி? ஏன்? உருவானது என்பது பற்றி ஆராய்வோம்.
இஸ்லாத்தில் ஜீவகாருண்யம்
இஸ்லாம் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டச் சொல்கிறது.
“பூமியில் உள்ளவை மீது அன்பு காட்டுங்கள்ள, வானத்தில் உள்ளவன் உங்கள் மீது அன்பு காட்டுவான்” (திர்மிதி)
தாகத்தோடு இருந்த நாயொன்றுக்கு நீர் புகட்டியதற்காக முன் சென்ற சமூகத்தில் ஒருவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று நபி(ச) அவர்கள் கூறிய போது “கால்நடைகளுக்கு உதவியதற்கும் நற் கூலி உண்டா? எனத் தோழர்கள் வினவினர். அதற்கு உயிருள்ள இதயமுள்ள எதற்கு உதவி செய்தாலும் நன்மை உண்டு எனக் கூறினார்கள்” (புஹாரி: 2303)
“ஒரு பெண் பூனையொன்றைக் கட்டிப் போட்டு தான் அதற்கு உணவு கொடுக்காமலும் பூனை தானாகத் தன் உணவைத் தேடிக் கொள்ள அவிழ்த்து விடாமலும் இருந்தாள். அந்தப் பூனை செத்துவிட்டது. இதைச் செய்த பெண் நரகம் நுழைவாள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 2365)
இவ்வாறான ஏராளமான நபிமொழிகள் உயிரினங்களிடம் அன்பும், பரிவும் காட்டுவதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. நபி(ஸல்) அவர்கள் அன்றைய அரேபியர்களிடம் காணப்பட்ட ஜீவகாருண்யத்திற்கு எதிரான அனைத்துச் செயல்களையும் தடுத்தார்கள்.
“அன்று அரேபியர் அம்பெறிந்து பழகுவதற்கு உயிரினங்களையே இலக்காகக் கொண்டனர். இச் செயலை நபி(ஸல்) அவர்கள் தடுத்ததுடன் இவ்வாறு செய்பவர்களை சபிக்கவும் செய்தார்கள்” (முஸ்லிம், புஹாரி :5515)
இவ்வாறே அன்றைய அரேபியர் விருந்தாளிகள் வந்தால் முழு ஒட்டகத்தையும் அறுக்க முடியாது, குறைந்த மாமிசம் வாங்க முடியாது என்ற நிலையில் உயிருடனுள்ள ஒட்டகத்தில் ஒரு துண்டை வெட்டியெடுத்துச் சமைப்பர். நபி(ஸல்) அவர்கள் இதை வன்மையாகக் கண்டித்து இவ்வாறு பெறப்பட்ட மாமிசத்தைப் புசிப்பதும் ஹராம் என்றார்கள்.
இவ்வாறு உயிரினங்களுக்கு உரிய முறையில் உணவு, நீர் கொடுக்காதிருந்தால், அதன் சக்திக்கு மீறி அவற்றிடம் வேலை வாங்குதல், ஓய்வு கொடுக்காதிருத்தல், குட்டியையும் தாயையும் பிரித்தல் போன்ற பல அம்சங்களையும் தடுத்துள்ளார்கள்.
இவற்றையெல்லாம் தடுத்து ஜீவகாருண்யத்தை ஏவினாலும் மனித உணவுத் தேவை கருதி இஸ்லாம் சில உயிரினங்களை உரிய முதலில் அறுத்து உண்பதை அனுமதித்துள்ளது. இதை இஸ்லாம் மட்டும் அனுமதிக்கவில்லை. சர்வ சமயங்களும் மாமிசம் உண்பதை அனுமதித்தேயுள்ளன. ஆதி மனிதனது ஆரம்ப உணவில் கூட மாமிசமே முதலிடம் வகித்தது.
அடுத்தது யார்?
மாமிசம் உண்பதை எந்தச் சமயமும் தடுத்ததாக இல்லை. இருப்பினும் வல்லுவர், புத்தர், ஜைனர் போன்றோர் மட்டும் மாமிசம் உண்பதை கண்டித்துப் பேசியுள்ளனர். இது பற்றியும் சிறிது நோக்குவோம்.
கொல்லாமைக் கோட்பாடு:
மேற்சொன்னவர்களில் வல்லுவர் கொல்லாமைக் கோட்பாட்டை ஆதரித்தவர். அதாவது எந்த உயிரையும் கொல்லுதல் கூடாது என்பது அவர் கருத்து.
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்ப எல்லா உயிர்க்கும் தொழும்”
கொல்லாமையும், புலால் உண்ணாமையும் கடைப்பிடிப்பவனை எல்லா உயிரும் வணங்கும் என்றார்.
“தன்னூன் பெருக்கத்திற்குத் தான் பிரிது ஊணுன்பான் எங்ஙனம் ஆளும் அருள்”
தனது உடலைப் பெருக்கப் பிற உயிரினத்தின் உடலை உண்பவனுக்கு எப்படி அருள் கிட்டும் என்று கொல்லாமையை முற்று முழுதாக ஆதரிக்கிறார் வள்ளுவர். இவரது இக் கோட்பாடு நடைமுறைச் சாத்தியமற்றது என்பதால் இவரது போதனை புனிதமானது எனக் கருதுவோராலேயே மியூசியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
கொல்லாமை என்பது பசுவை மட்டும் குறிக்காது. மாறாக கோழி, ஆடு, மாடு, மீன், வாத்து, என்று அனைத்தையும்; குறிக்கும். ஏன், மரங்கள் கூட உயிர் உள்ளவைதான். எதையுமே கொல்லாது, அன்றைய துறவிகள் போல் காய்ந்து விழும் சருகை மட்டும் உண்டு உயிர் வாழும் மனிதரும் உலகில் இன்றில்லை. எனவே, வல்லுவர் கோட்பாடு கேட்க இனிமையாக இருந்தாலும் நடைமுறைக்குச் சாத்தியமற்றது. கோவிலில் கொட்டும் மேளம் என்றாலும், பூசாரி போடும் பட்டுப் புடவை என்றாலும் கெல்லாமைக் கோட்பாட்டின் கோளாறைப் புலப்படுத்துபவையே. “ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது” “வெற்று வேதாந்தம் வாழ்க்கைக்குதவாது”
ஏன் தடுத்தனர்
புத்தரும் ஜைனரும் பசுவைக் கொல்வதைத் தடுத்தனர். இதற்கு சமயமோ, அல்லது உயிரினங்கள் மீது அன்பு காட்டல் வேண்டும் என்ற சித்தாந்தமோ காரணமாக இருக்கவில்லை. வெறும் சமூகவியல் நோக்கில் தான் இவர்கள் கூட பசுவைக் கொல்லுதல் கூடாது என்றனர்.
அன்றைய சமூகத்தில் மாடு முக்கியதொரு அச்சாணியாக இருந்தது. விவசாயம், பயணம், பொதி சுமத்தல், பால், மோர், தயிர் என்று மாட்டைச் சுற்றியே அவர்களது வாழ்க்கைச் சக்கரம் சுழன்று வந்தது. இது இப்படியிருக்க அன்றைய அரசர்கள் நடத்திய வேள்வி, யாகம் என்பவற்றில் பல்லாயிரம் உயிர்கள் பலியிடப்பட்டன. இந்த வேள்வி யாகங்களால் புத்தரும், ஜைனரும் மக்களுக்குப் பயன் தரும் உயிரினங்கள் அழிக்கப்பட்டு அருகிவிடும் என்பதற்காக எதிர்த்தனர். மன்னர்களோடு எதிர்த்து நிற்க முடியாத நிலையில் பசுவையாவது கொல்லாதீர்கள் என்று பிரச்சாரம் செய்தனர்.
பத்துப் பசுவுக்கு ஒரு காளை போதும். பசு அமைதியாக இருந்தால் தான் இனப்பெருக்கத்திற்கு வசதியாக இருக்கும் என்பதால் பசுவைக் கொல்லாதீர்கள் எனப் பிரச்சாரம் செய்தனர்.
பௌத்தர்களும், ஜைனர்களும் கோ மாமிசம் உண்பதைத் தடுக்க முயன்றதால் மக்களிடையே அதன் கருத்து பரவியது. ஆயினும் அந்தனர்கள் அதை விளக்குவதற்குப் பல நூற்றாண்டுகள் பிடித்தன. (இதன் பின்னரே) முதல் முதலில் வேள்விக்காகத் தீட்சை செய்பவன் கோ மாமிசம் புசிக்கலாகாது என்ற வரையரையைக் கடைப்பிடித்தனர்.
(பார்க்க: பகவான் புத்தர் – பக்:37)
இதிலிருந்த புத்தரும், ஜைனரும் சமூக நோக்கில் தான் பசுவைக் கொல்லாதீர்கள் என்றார்களேயொழிய ஜீவகாருண்யத்தில் அல்ல என்பதைப் புரிய முடிகின்றது. ஜீவகாருண்யத்தில் தான் இவ்வாறு கூறுவதென்தால் வள்ளுவர் போல் எவ்வுயிரையும் கொல்லாதீர்கள் என்றே அவர்கள் போதித்திருக்க வேண்டும்.
பசு கடவுளா?
சில சமூகத்தினர் பசுவைக் கடவுளாக வழிபடுகின்றனர். “நாம் கடவுளாக பசுவைக் கருதுவதால் எமது உணர்வுகளை மதித்து நீங்கள் பசுவை உண்பதைத் தவிர்க்கலாமல்லவா?” என்று சில அன்பர்கள் வினவலாம்.
முதலில் இந்த நம்பிக்கை தவறானது. பகுத்தறிவு படைத்த மனிதன் தன்னைவிட அறிவில் குறைந்த உயிரினத்தை தெய்வமாக வழிபடுவதென்றால் இதைவிடக் கேவலம் உண்டா? என்பது இஸ்லாத்தின் கேள்வியாகும்.
இதனை வேண்டுமானால், அவர்கள் விருப்பம் என்று விட்டு விடலாம். ஆனால் இப்படி பசுவை வழிபடுபவர்கள் கூட இதை ஒரு பேச்சுக்காகவே கூறுகின்றனர்.
உதாரணமாக ஒரு பசுவை இவர்களது தோட்டத்தையோ, காய்கறிக் கடையிலுள்ள மரக்கறிகளை உண்பதையோ கண்டால் ஆகா என்ன பாக்கியம் செய்தேன் நான்! என் தோட்டத்தில், கடையில் கடவுளன்றோ வந்து உண்ணுகின்றது என்று பரவசமடைவார்களா? அல்லது தடியெடுத்து விரட்டுவார்களா? தனக்கு பாதிப்பு என்றதும் கடவுளாவது கத்தரிக்காயாவது என்று அவர்களது சுய முகம் வெளிப்படுகின்றதல்லவா?
பசுவைக் கடவுள் என்போர் கடவுளின் கணவனான காளை மாட்டைக் கஷ;டப்படுத்தலாமா? தம் காலையும் கம்பையும் ஓட்டி விரட்டலாமா? இதிலிருந்து கடவுள் என்று அவர்கள் கூட உண்மையான உள்ளத்துடன் கூறாத போது அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது அர்த்தமற்ற எதிர்பார்ப்பாகும். பசுவைக் கடவுள் என்று கூறுவது கூட சமய நோக்கில் ஏற்பட்டிருக்க முடியாது. சமூக நோக்கில் தான் உருவாகியிருக்க வேண்டும். இன்னும் அவர்கள் “செய்யும் தொழிலே தெய்வம்” என்பர். இதனடிப்படையில் வியாபாரிகள் தராசையும், சாரதிகள் ஸ்டியரிங்கையும் தொட்டுக் கொஞ்சித் தொழிலை ஆரம்பிப்பதைக் காணலாம். அன்றைய பொருளாதாரத்தில் அச்சாணியாக பசு இருந்ததால் சும்மா ஒரு பேச்சுக்காகப் பசுவைக் கடவுள் என்றிருப்பர். இதற்காக நமது சுவை உணர்வை விட்டுக் கொடுக்க வேண்டுமா?
சரி ஒரு பேச்சுக்காக கடவுள் என்று உண்மையாகக் கூறுகின்றனர் என்றால் கூட இதற்காக நாம் உணர்வை விட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. நாம் விட்டுக் கொடுக்கவும் முடியாது. ஏனெனில் அவ்வாறு விட்டுக் கொடுக்க ஆரம்பித்தால் அவர்களின் கடவுள் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
முஸ்லிம்களே! உங்கள் வீட்டுக்குப் பாம்பு வந்தால் பால் கொடுத்து அனுப்புங்கள். ஏனெனில் அது எங்கள் பரமசிவன் கழுத்தில் இருக்கும் கயிறு என்பார்கள். பல்லியைக் கொல்லாதீர்கள் என்பர். எலி எங்கள் பிள்ளையார் வாகனம் அதைக் கொல்லாதீர்கள் என்பர். மயில், கருடன்…….. இப்படி எதையெடுத்தாலும் அவற்றிற்கெல்லாம் புனிதம் கொடுக்க அவர்களிடம் புராணம் உண்டு. எனவே, உணர்வை மதித்தல் என்பதற்காக விட்டு விடுங்கள் என்பது சாத்தியமில்லை. வேண்டுமென்றால் கோயிலில் சிலையாகக் கட்டப்பட்டு வணங்கப்படும் பசுவை அறுக்கமாட்டோம். உடைக்கமாட்டோம். இதில் உங்கள் உணர்வை மதிப்போம்.
பசு பால் தரும் தாயன்றோ
பசு பால் தருகின்றது. அது எம் தாய் போன்றது. தாயைக் கொல்லலாமோ? என்றும் அன்பர்கள் வினவுவர். பசு பாலை நமக்கா தந்தது? அது தன் கன்றுக்கென்று உருவானது. கன்றின் உரிமையைப் பறித்து நாமாக அதை உருவி விட்டு பால் தந்தது என்றால் என்ன அர்த்தம்? நாம் பகுத்தறிவுள்ள மனிதனாகையால் பசுவைத் தாயாக ஏற்கமாட்டோம். ஏற்போர் வேண்டுமானால் எதை வேண்டுமானாலும் தாயாக ஏற்கட்டும்.
ஆடும் பால் தருகின்றது, கோழி முட்டை தருகின்றது, மரம் கனி தருகின்றது, பனை கள் தருகின்றது, தென்னை தேங்காய் தருகின்றது, இதற்காக இதையெல்லாம் எங்கள் தம்பி, மாமன், மாமியென்று உறவு பாராட்டிக் கொண்டா இருக்கின்றோம்.
பசு பால் தருகின்றது என்று கூறுவோர் உண்மையான ஜீவகாருணிகளாக இருந்தால் பால் அருந்தக் கூடாது. ஏனெனில், பால் கன்றுக்குறியதாகும். புலால் உணவை தீவிரமாக எதிர்த்து வந்த வடலூர் இராமலிங்க அடியார் அவர்கள் “பால் கூட புலாலே” என்று கூறியுள்ளார்.
உண்ணாமல் விட்டால் என்ன?
சரி ஏன் எதற்கு என்றும் எம்மால் விளக்க முடியாது. மாட்டிறைச்சியை உண்ணக் கூடாது என்று நாமாக முடிவெடுத்தால் என்ன குறைந்தா போய்விடப் போகிறது என்றும் கேட்கலாம். இந்த நாட்டில் ஏன், உலகத்திலேயே மாடுகள் அறுக்கப்படக் கூடாதென்று முடிவு செய்தால் என்ன என்றும் சிலர் கேட்கலாம்.
கடவுள் மனிதனைப் படைக்கும் போதே மாமிசம் உண்ணத் தகுந்த வேட்டைப் பற்களுடனேயே படைத்துள்ளான். மிருகங்களில் மாமிச் உண்ணிகளுக்கு மட்டுமே வேட்டைப் பற்கள் உள்ளன.
மாமிசம் கூடாது என்றால் மாமிசத்தை மட்டுமே உணவாக நம்பிவரும் எக்ஸிமோக்களுக்குத் தீர்வு என்ன? இன்றைய உலக சனத்தொகையில் சுமார் 85மூ சதவீதமானோரின் உணவுத் தேவையை மாமிசமே நிறைவேற்றுகின்றது. முற்றாக மாமிசம் தடுக்கப்பட்டால் இருக்கின்ற உணவுப் பற்றாக்குறை பன்மடங்காக உயரலாம்.
இதே வேளை உண்ணத் தடுக்கப்பட்ட மாடுகள் வயதான பின் அவற்றை என்ன செய்வது? கொன்று விடுவதா? அல்லது சாகும் வரை பராமரிப்பதா? பராமறிப்பதென்றால் எந்த மடையன் தனக்கு எவ்வித உதவியும் செய்யத் தகுதியற்ற மாட்டுக்கு சும்மா உணவு கொடுக்க முன்வருவான். மாடு வளர்ப்பவர்கள் மாட்டிறைச்சி உண்ணக் கூடாது என்று பாராளுமன்னறத்தில் வாய் கிழியப் பேசும் கணத் திமிங்கிலங்கலல்ல, அன்றாடம் வயிற்றைக் கழுவக் கஷ;டப்படும் ஏழைக் குடிமக்களே! இவர்களால் தம் குடும்பத்தையே சுமக்க முடியாதிருக்கும் போது மேலதிகமாக ஒரு மாட்டைப் பராமரிப்பது என்பது நினைத்துப் பார்க்கக் கூடிய காரியமா? இது போன்ற சந்தர்ப்பத்தில் அநியாயமாக அவை எவருக்கும் உதவாத முறையில் பசியிலும், உரிய கவனிப்பின்மையாலும் கொஞ்சம் கொஞ்சமாக சாவதை விட உரிய முறையில் அறுத்து உண்டு அதன் மூலம் பயன் பெறுவது எப்படி ஜீவகாருண்யத்துக்கு முரணானது என்பது தான் எமக்குப் புரிய முடியாதுள்ளது.
இறுதியாக இறைவன் எதையும் ஒரு அளவோடு தான் படைத்துள்ளான். அதில் நாமாக எடுக்கும் சில முடிவுகள் படைப்பின் சமநிலைத் தன்மையைத் தகர்த்து பாரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்.
மாடு மனிதனுக்காகப் படைக்கப்பட்டிருக்கும் போது அதை நாம் உண்ணக் கூடாது என்று முடிவெடுத்தால் அதுவும் படைப்பின் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
உண்மையில் மாடே அறுக்கக் கூடாது என்ற முடிவை சட்டமாக இயற்றி நடைமுறைப் படுத்தினால் சுமார் 10 ஆண்டுகளுக்குள்ளேயே இதன் பாதிப்பை உணர்ந்து சட்டத்தை மாற்றும் நிர்ப்பந்தம் அதை இட்டவர்களுக்கே ஏற்படலாம் என்பதை உறுதியாகக் கூறலாம்.
இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் மது, விபச்சாரம், ஆபாசம் போன்ற அசிங்கங்களை சர்வ சமயங்களும் கண்டித்துள்ளன. இவற்றை அரச அனுமதியுடன் பகிரங்கமாகப் பலரும் செய்துவரும் போதும் கண்டு கொள்ளாத தொலைத் தொடர்புச் சாதனங்கள், மாட்டிறைச்சி விடயத்தில் மட்டும் மடிச்சிக் கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்பது ஏன்? உண்மையில் ஜீவகாருண்யம் மிகைத்ததனாலா? என்பதையும் நாம் சிந்தித்துப் பார்த்தால் விடை எவருக்கும் எளிதில் புரியும்.
ஜீவகாருண்யம் என்பது வெறும் வெற்று வேதாந்தம். இஸ்லாமிய எதிர்ப்பு அல்லது காழ்ப்புணர்வு என்பதே இவர்களின் நிஜத் தோற்றம்.
Asslamu Alaikkum,
We said article, we need to spread this message among muslim haters.
Wow!! what a anlytical article!! please publish this article in all languges in all news papers as possible. Even try to send this article to Ministers Mervin, Sinhala Urama, JHU, JVP, some UNP & PA -MPs, and even to Mahinda & his brothers!!
Jazakhallah!!!