இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்
இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல. அது ஒரு வாழ்க்கை நெறி. இறைவனால் உலகுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு இறைத்தூதர்களின் சமுதாயத்திற்குப்பின் இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதரின் சமுதாயம் நாம்தான். படைத்த இறைவனால் பரிபூரணமாக்கப்பட்ட வாழ்கை நெறியே இஸ்லாம். இந்த வாழ்க்கை நெறியாகிய இஸ்லாம் மட்டுமே இறைவானால் பொருந்திக் கொள்ளப்பட்ட மார்க்கமாகும். இதனைத்தவிர மற்றைய எல்லா சமயங்கள் மதங்களின் வாழ்க்கை நெறிகளும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டதல்ல என்பதைக் குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.
5:3. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்.
3:85. இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
இஸ்லாமல்லாத பிற வழிகளில் இறைவனின் பொருத்தத்தைப் பெறவியலாது என்பதுடன் அம்முயற்சி தோல்வியே என உறுதியிட்டு குர்ஆன் கூறுவதைப் பார்த்தீர்கள். மேலும் மனித சமுதாயத்தைப் பார்த்து அல்லாஹ் விடும் அறைகூவலை மேலும் படியுங்கள்.
7:158. (நபியே!) நீர் கூறுவீராக ”மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை – அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் – ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத் தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் – அவரையே பின்பற்றுங்கள். நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! இந்த இறுதிச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்னைப்பற்றியும் நான் எதற்காக அனுப்பபட்டேனோ (அம்மார்க்கத்தைப் பற்றிய) அச்செய்திகளையும் கேள்விப்பட்ட பின்பும் அதனை (அம்மார்க்கத்தை) விசுவாசம் கொள்ளாமல் மரணித்தால் அவர் நரகநெருப்பைத் தம் தங்குமிடமாக ஆக்கி கொள்ளட்டும். (முஸ்லிம்: அபூ ஹூரைரா (ரலி))
அல்லாஹ் அருள் மறையில் நபி (ஸல்) அவர்களை இறுதி நபி எனக் கூறுகிறான்
33:40. முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
ஆகவே இஸ்லாத்தை பின்பற்றாத யூத கிறிஸ்தவர்களுக்கு தான் இறைதூதர் நபி (ஸல்) அவர்கள் இந்த எச்சரிக்கையை விடுக்கிறார்கள். இறைதூதர் என்று நம்புவது வெறும் உதட்டளவில் மட்டுமல்லாது உள்ளத்தாலும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதே நம்பிக்கையின் அடித்தளமாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் பரிவும் காட்டிய அவரின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இறுதி மூச்சை விடும் வரை இறைத்தூதரின் மார்க்கத்தைப் பின் பற்றாமல் அவரின் மூதாதையர்களின் மதமாகிய இணைவைப்பிலேயே நிலைத்திருந்து மரணித்தார். ஆகவே நபி (ஸல்) அவர்கள் மீது வைத்துள்ள பாசம் அன்பு பிரியம் ஆகியவை வெறும் வாயளவில் இல்லாமல் உள்ளத்தால் உவகையுடன் ஏற்று செய்யும் காரியங்களிலும் அதன் பிரதிபலிப்பு இருக்கவேண்டும்.
அல்லாஹ் இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வஹி என்னும் இறைச் செய்தி மூலம் வழங்கிய குர்ஆன் இதற்கு முன்பு பிற இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களை உண்மைப் படுத்துவதுடன் இதனைப் பாதுகாக்கும் சிறப்புத்தன்மை வாயந்ததாகவும் அதன் விளக்கமாகவும் திகழ்கிறது என்பதை குர்ஆன் தெளிவு படுத்துவதை பாருங்கள்.
3:3. (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம்மீது இறக்கி வைத்தான். இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்
5:49. மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக.
10:37 இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலிள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை.
மேலும் பல்வேறு மதங்கள் உலகில் இருந்தாலும் சத்திய மார்க்கமான இஸ்லாம் தான் மேலோங்கிய மார்க்கமாகும். அது பிற மதங்களைக் காட்டிலும் மேலோங்கி இருக்கவே அல்லாஹ் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான் என்பதை குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள் .
61:9. (இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான்.
இஸ்லாத்திற்கு இருக்கும் இத்தனை சிறப்பை வல்லோன் வழங்கிய இவ்வல்லமையை இணைவைக்கும் மனிதர்கள் எத்தனை வெறுப்பை இம்மார்க்கத்தின் மீது உமிழ்ந்தாலும் இஸ்லாத்தை எவராலும் மாசுபடுத்த இயலாது என்ற ஒரு சான்றை இறைவன் வழங்கியதைத்தான் மேலே கூறிய இறைவசனம் தெளிவுபடுத்துகின்றது. அத்தோடு அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து அவன் ஏவியவாறு நல்லறங்கள் புரிந்து நேர்வழியில் நடப்போருக்கு முன் சென்ற சமுதாயத்தவர்களை பூமியில் அதிபதிகளாக்கியவாறு நேர்வழி நடப்போரையும் ஆக்கி மார்க்கத்தில் அவர்களை உறுதிபாட்டுடன் திகழவும் அமைதியுடன் வாழவும் அல்லாஹ் உறுதி கூறுவதைப் பாருங்கள்.
24:55. உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல் பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; ”அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.