இஸ்லாம் கூறும் நல்லறங்களும் தீயவைகளும்
அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற அவன் தன் படைப்பினங்களுக்கு குர்ஆன் நபிமொழி மூலம் வழங்கிய அறிவுரைகளில் முழுமையாக ஒரு மனிதன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அத்துணை அம்சங்களையும் அழகுபட விவரிக்கின்றான். நல்லறங்களை ஒருவன் தன்னால் இயன்ற அளவு செய்வதையும் தீய செயல்களை முற்றிலும் தவிர்ந்து கொள்வதுதான் அவனது திருப்பொருத்தத்தை பெறும் அடிப்படையாக உள்ளது.
1- தனக்கு மட்டுமே வணக்க வழிபாடுகள் புரிய வேண்டும் என்று கூறும் இறைவன் தன்னையன்றி தனக்கு இணையாக பிற படைப்பினங்களுக்குச் செய்யும் வணக்க வழிபாடுகளை வெறுப்பதுடன் அதனை முற்றிலும் தவிர்ந்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கின்றான்.
2- உண்மையை மட்டும் பேசுங்கள். அது உங்களை உயர்வடையச் செய்யும். உண்மையாளனாக உங்களை ஆக்கி சுவனத்துக்கு அழைத்துச் செல்லும் என்ற சுபச்செய்தியைக் கூறும் இஸ்லாம் பொய் பேசுவதை முற்றிலும் தவிர்ந்து கொள்ளக் கூறுகிறது. பொய் வழிகேடுகளின் வாசலாக இருந்து நம்மை நரகில் கொண்டு சேர்க்கும் என எச்சரிக்கிறது.
3- பிறருக்கு நீதி செலுத்துவதையும் நியாய உணவுடனும் மனித நேயத்துடன் நடந்து கொள்ளத்தூண்டும் இஸ்லாம், பிறர் மீது அநீதி இழைப்பதையும் கொடுமை செய்வதையும் முற்றிலும் தவிர்ந்துக் கொள் என எச்சரிக்கின்றது.
4- பூரண விசுவாசியாகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவானகவும் நடக்கத் தூண்டும் இஸ்லாம், நம்பிக்கை துரோகத்தை நாணயமற்ற மோசடித்தனத்தை அறவே ஒழிக்கக் கூறுகிறது.
5- அமானிதங்களைப் பேணிப்பாதுகாக்க கூறிய இஸ்லாம், அதனை மோசடி செய்வது பெரும்பாவம் என அடித்து கூறுகிறது.
6- பெற்றோருக்குச் செய்யும் பணிவிடைகள் அவர்களின் உள்ளம் குளிர வைக்கும் நல்லறங்கள் இவைகளை வலியுறுத்தும் இஸ்லாம், அவர்களை துன்புறுத்துவது அவமரியாதை செய்வது மிகப்பெரும் பாவங்களின் பட்டியலில் சேரும் எனக் கூறுகிறது.
7- இரத்த பந்த உறவுகளை நம்மை அண்டி வாழும் உறவினர்களை அனுசரித்து அன்புடன் வாழத்தூண்டும் இஸ்லாம், உறவுகளை துண்டிப்போரை உரிமையுடன் கண்டிக்கத் தவறவில்லை.
8- உன் நிலை என்ன? என்பதை உன் அண்டை வீட்டுக்காரனை வைத்தே தீர்மானித்து விடலாம் என்ற உபாயத்தைக் கூறும் இஸ்லாம் எவரின் அண்டை வீட்டுக்காரன் இவனின் கரம் நாவின் தொல்லைகளுக்காளாகாமல் மகிழ்வுடன் வாழ்கிறானோ அவனே சிறந்த முஸ்லிம் என்ற அளவுகோலை அழகாகப் பயன்படுத்துகின்ற இஸ்லாம் அண்டை வீட்டாரைப் பகைத்து அவர்களிடம் வரம்பு மீறுவதை தவிர்க்க கூறுகிறது. மொத்தத்தில் இஸ்லாம் ஒட்டு மொத்த வாழ்கைநெறியை ஒழுக்கமாக வாழக் கற்றுக் கொடுக்கும் ஒரு பாடசாலையாகப் பயன்படுகிறது. இவ்வாழ்க்கை நெறிகளை குர்ஆன் வசனம் கூறுவதைப் பாருங்கள்.
16:90. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் – நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்.
மேலே குறிபிட்ட அத்துனை அம்சங்களையும் ஒரே வசனத்தில் அழகுபட அல்லாஹ் இரத்தினச் சுருக்கமாக கூறிவிட்டான் இவ்வசனத்தில் இடம் பெறும் வார்த்தையாகிய இஹ்ஸான் — அல்லாஹ்விடம் அடியான் நடந்து கொள்ளும் முறை மற்றும் பெற்றோர் உற்றார் உறவினரைப் பேணுதல் நீதி செலுத்துதல் (அத்ல்) அல்லது கெட்ட காரியங்கள் வரம்பு மீறுதலைத் தவிர்க்க (பஹ்ஷாஃஅ) கொடுமைகளைத் தவிர்க்க (பகீ) இப்படி அல்லாஹ்வின் மீது அடிமை செலுத்தும் உரிமையுடன் ஒரு மனிதன் மற்ற மனிதனுடன் நடந்து கொள்ளும் சரியான நடைமுறைகளையும் அழகாக விவரித்து கூறுகிறது.