இஸ்லாத்தின் தூண்கள் ஐந்து
இஸ்லாம் ஐந்து தூண்களால் நிர் மாணிக்கப்பட்டுள்ளது . அதனை உத்தம திரு நபி (ஸல்) அவர்கள் கூறுவதாவது:
இஸ்லாம் ஐந்து தூண்களால் நிர் மாணிக்கப்பட்டுள்ளது.
1- வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை என்பதுடன் முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் அடிமையாகவும் அவனின் தூராகவும் இருக்கிறார் என்று சாட்சியம் கூறுவது.
2- தொழுகையை நிலைநாட்டுவது (3) ஜக்காத் கொடுப்பது (4) ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது (5) ஹஜ் செய்வது (முஸ்லிம்: இப்னு உமர் (ரலி).
ஷஹாதா என்னும் சாட்சியம் கூறுதல்
லாயிலாஹா இல்லல்லாஹூ வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸூலுஹூ.
பொருள்: வணக்கத்துக்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடிமையாகவும் அல்லாஹ்வின் தூதராகவும் இருக்கிறார்கள். இதை வாயால் மொழிந்து சாட்சியம் கூறுதலும் அதன்படி வாழ்வில் உறுதியுடன் இக் கொள்கையை மனதால் ஏற்று நம்பிக்கை கொண்டு நடத்தலும் ஆகும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைச் செய்தியைப் (வஹீயை) பெற்று மக்களுக்குத் தெளிவுபடுத்திக் கூறுவதுடன் அதன்படி நடந்து காட்டிய ஒரு அல்லாஹ்வின் அடிமை என்று முதலில் சாட்சியம் கூறவேண்டும். ஏனெனில் வேதங்கள் கொடுக்கப்பட்ட பிற சமூகத்தார் இறைத்தூதர்களையே இறைவனாக இறைவனின் மகனாகச் சித்தரித்து வரம்பு மீறியதைப் போல் ஆகிவிடக்கூடாது என்பதால் இறுதி நபியாகிய இந்த தூதரை அல்லாஹ்வின் அடிமை என்று முதலில் ஏற்றுப் பின்னரே இறைத்தூதர் என்று இஸ்லாம் சாட்சியம் கூறச் சொல்கிறது. அல்லாஹ் தனக்குச் செய்யும் வணக்க வழிபாடுகளை உளத்தூய்மையுடன் உத்தம திரு நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு செய்தார்கள் என்பதை முன் மாதிரியாக வைத்து நடந்து கொள்வது இந்த சாட்சியத்தின் இரண்டாவது அம்சமாகும்.
ஷஹாதாவை மொழிவதால் உளப்பூர்வமாக அல்லாஹ்வை அவனின் வல்லமையை உணர்ந்து அவனுக்கு மட்டுமே வணக்க வழிபாடுகளை உரித்தாக்கி நாம் அவனின் அடிமை என்பதைப் பிரகடனம் செய்கிறோம். இறைத்தூதராகிய முஹம்மது (ஸல்) அவர்கள் நம் போன்ற அல்லாஹ்வின் ஒரு அடிமைதான் என்பதையும் உறுதி கூறுகிறோம். நமது ஒவ்வொரு செயல்பாடுகளும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுமளவிற்கு அமைவதற்கு அவனின் திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கனின் வாழ்க்கை முறை ஒரு சிறந்த முன் மாதிரி என்பதையும் இந்த சாட்சியத்தின் ஒரு முக்கிய அம்சமாக எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இஸ்லாமியத்தூண்களில் முதல் தூணாகிய இந்த ஷஹாதா என்னும் சாட்சியம் ஒரு உதட்டளவு வார்த்தைகளாக அல்லாமல் முஸ்லீமாக உள்ள ஒவ்வொருவரின் செயல்பாடுகள் இந்த சாட்சியத்தை மையமாக வைத்தே இயங்கவேண்டும் என்பதுதான் இத்தூணின் அடிப்படை.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்..)