Featured Posts

பல்வகை சோதனைகளும் அதன் பயன்களும்

– A.J.M மக்தூம்

இறைவன் தனக்கென வடிவமைத்துள்ள வழிமுறைகளுக்கு அமைவாகவே இந்த உலகின் அனைத்து செயற்பாடுகளையும் இயக்கிக் கொண்டிருக்கின்றான். அந்த வகையில் மனிதர்களை மாறி மாறி பல்வேறு முறைகளில் சோதிப்பதும் அவனின் வழிமுறையாகும். இந்த உலகில் மனிதர்கள் நிம்மதி, சந்தோசம், பிரச்சினைகள், சிக்கல்கள் என எந்நிலையில் வாழ்ந்தாலும் அனைவரும் அவரவருக்கென இறைவன் விதித்தபடி சோதிக்கப் படுகிறார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்வது அவசியமாகும். எனவே ஏழ்மை, கஷ்டம் மற்றும் நோயில் வாழ்கிற ஒருவரும் செல்வ செளிப்புடன் ஆரோக்கியமாக வாழும் ஒருவரும் முறையே சோதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவ்விருவரிடையே இவ்வாறான நிலைமைகளை மாறி மாறி வரச் செய்வதும் இறைவனின் வழிமுறையாகும். சிலருக்கு இறைவன் குடும்பம் குழந்தைகளை கொடுத்தும் சோதிப்பான், சிலரை தனிமை படுத்தியும் சோதிப்பான். ஆக இந்த உலக வாழ்க்கை முழுவதும் சோதனைக்கான காலமாகும். இந்த உண்மைகளையே பின்வரும் இறைவசனங்கள் தெளிவு படுத்துகின்றன.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல் குர்ஆன் 21:35)

உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் – அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது. (அல் குர்ஆன் 64:15)

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல் குர்ஆன் 2:155)

இந்த உலகையும் அதன் செயற்பாடுகள் அனைத்தையும் மனிதர்களுக்காக படைத்த இறைவன் இவ்வாறு அவன் மனிதர்களை சோதிப்பதிலும் பல நன்மைகளை அவர்களுக்காக ஏற்படுத்தி வைத்துள்ளான். அதனை அவ்வப்போது அவர்கள் புரிந்து கொள்ளாத போதும் எதிர் காலத்தில் தெளிவு பெற வாய்ப்புள்ளது. பல்வேறு சந்தர்பங்களில் எத்தனையோ உபதேசங்கள், போதனைகள் மூலம் ஏற்படாத தாக்கங்கள், மாற்றங்கள், படிப்பினைகள், தெளிவுகளை எல்லாம் ஓரிரு சோதனைகள், கஷ்டங்கள் மூலம் மனிதர்கள் அடைந்து கொள்வதை எமது வாழ்வில் காண்கிறோம். அவ்வாறு ஏற்படும் சில சோதனைகள் மற்றும் அதன் மூலம் மனிதர்கள் பெரும் பயன்களை பின்வருமாறு இஸ்லாம் தெளிவு படுத்துகிறது.

1. மனிதர்கள் உணர்ந்து திருந்துவதற்கான சோதனை

மனிதர்கள் இறைவனை மறந்து, அவனின் கட்டளைகளை துறந்து வாழும் போது அவர்கள் உணர்வு பெற்று, இறைவனை ஞாபகப் படுத்தி, அவனின் பால் பணிந்து மீண்டு வருவதற்காகவும் இறைவன் மனிதர்களை சோதிப்பான் என்ற செய்தியை பின்வரும் இறைவசனங்கள் தெளிவு படுத்துகின்றன.

மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். (அல் குர்ஆன் 30:41)

நாம் நபிமார்களை அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம் மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை. (அல் குர்ஆன் 7:94)

(நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் அவர்கள் பணிந்து வரும் பொருட்டு. (அல் குர்ஆன் 6:42)

அவர்களை நாம் பூமியில் பல பிரிவினராகச் (சிதறித்திரியுமாறு) ஆக்கி விட்டோம்; அவர்களில் நல்லவர்களுமிருக்கிறார்கள். அதுவல்லாத கெட்டவர்களும் இருக்கின்றார்கள் – அவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம். (அல் குர்ஆன் 7:168)

இப்படியாக இறைவன் சோதனைகளை இறக்கியும் உணர்வு பெற்று திருந்தாதவர்களுக்கு உலகின் சில இன்பங்களை அனுபவிக்கச் செய்து விட்டு பிறகு தண்டனையை இறக்கி அவர்களை வேரறுத்து விடுகிறான் என்ற உண்மையை இறைவன் எமக்கு பின்வருமாறு புரிய வைக்கின்றான்.

நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான்.
அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் – பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர்.

எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; “எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்.” (அல் குர்ஆன் 6:43, 44, 45)

இதே அடிப்படையில் தான் தன்னை முற்றிலும் நிராகரித்து வாழ்கிறவர்களுக்கு இறைவன் உலக பாக்கியங்களை வழங்குகிறான். இதனைப் பார்த்து உண்மை விசுவாசிகளான நாம் ஏமாந்து விடக் கூடாது.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு நிராகரிப்பாளன் ஏதேனும் ஒரு நனமையை செய்தால், அதன் பிரதி பலனை அவனுக்கு உலகிலேயே அல்லாஹ் கொடுத்து விடுகிறான். அதே நேரத்தில் ஒரு முஃமின் செய்யும் நன்மைகளுக்கான பலனை மறுமைக்காக இறைவன் சேமித்து வைக்கின்றான். மேலும் இவ்வுலகிலே அந்த முஃமினுக்காக இறைவன் அவனை வழிப்படுவதற்கான வாழ்வாதாரத்தையும் (றிஸ்க்) வழங்குகிறான். (முஸ்லிம்)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கையாளரின் நிலையானது, இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும்போது அதைக் காற்று (தன் திசையில்) சாய்த்துவிடும். காற்று நின்றுவிட்டால், அது நேராக நிற்கும். சோதனையின்போது (இறை நம்பிக்கையாளரின் நிலையும் அவ்வாறே). தீயவன், உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதொரு மரத்தைப் போன்றவன். அல்லாஹ், தான் நாடும்போது அதை (ஒரேடியாக) உடைத்து (சாய்த்து) விடுகிறான். (அறிவிப்வர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி).

2. உண்மையாளர்களையும் பொய்யர்களையும் பிரித்தரிவதற்கான சோதனை

இறை விசுவாசியைப் போன்று நமது நண்பர்களாக நேர்மையான வர்களாக நடித்துக் கொண்டு உள்ளத்தில் நயவஞ்சகத்தையும், குரோதத்தையும் மறைத்து வைத்துக் கொண்டு எம்முடன் ஒன்றர கலந்து வாழ்கிற எத்தைனையோ எதிரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் தமக்குள் மறைத்து வைத்திருக்கும் விஷத்தை கக்கி முஸ்லிம்களை அழிக்க தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் முகத்திரைகளை களைந்து அவர்களின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவதற்காகவும் இறைவன் மனிதர்களை சோதிப்பான். இதன் மூலம் உண்மையான இறைவிசுவாசி யார்? நயவஞ்சகர்களான இஸ்லாத்தின் எதிரிகள் யார்? என்பதை புரிந்து கொள்ளலாம். இப்படியான கயவர்களை எத்தனையோ சோதனைகள், பிரச்சினைகளின் போது தான் நாம் தெரிந்து கொண்டுள்ளோம். இதனையே பின்வருமாறு அல் குர்ஆன் தெளிவுபடுத்துகிறது :

“நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா? நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் – ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான். (அல் குர்ஆன் 29: 2,3 )

(காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை; ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு. (அல் குர்ஆன் 3:179)

3. நல்லடியார்களை தூய்மைப் படுத்தி உயர்வைப் பெற்றுத் தருவதற்கான சோதனை

இறைவனின் அன்பிற்குரிய நல்லடியார்களை அவர்களின் பாவங்களை மன்னித்து தூய்மைப் படுத்தி அவர்களுக்கு மேலதிக அந்தஸ்தத்தையும், உயர்வையும் பெற்றுக் கொடுத்து மனித புனிதர்களாக மாற்றுவதற்காகவும் இறைவன் சோதிப்பான். இவர்கள் மற்றவர்களை விடவும் சற்று அதிகமாகவே சோதிக்கப் படுவார்கள். இந்த அடிப்படையில் தான் இஸ்லாத்தை தமது வாழ்வு நெறியாக ஏற்று அதனை முழுமையாக பின்பற்றி வருகிற உண்மை முஸ்லிம்கள் சோதிக்கப் படுகின்றார்கள். இவர்கள் ஏனையோரை விடவும் அதிகமான சவால்கள், பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வருவது கண்கூடானதாகும். இவ்வாறான சோதனைகளின் போது அல்லாஹ்வுக்கு முற்றிலும் அஞ்சி மேலும் தமது ஈமானைப் பலப் படுத்திக் கொண்டு பொறுமையை கடைப் பிடித்து வாழும் போது இறைவன் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்களுக்கு உன்னத அந்தஸ்தத்தையும், உயரிய நன்மைகளையும் பெற்றுக் கொடுக்கின்றான். இந்த விபரங்களையே பின்வரும் திரு வசனம், மற்றும் செய்திகள் உணர்த்துகின்றன.

(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல் குர்ஆன் 3:186)

இறைவன் யார் மீது நலவை நாடுகிறானோ அவரை (பல வழிகளிலும்) சோதிப்பான் என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூ ஹுரைராஹ் (ரழி), நூல்: புகாரி)

ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் “யா ரசூலல்லாஹ்! மனிதர்களில் அதிகம் சோதிக்கப் படுகிறவர்கள் யார்?” என வினவினேன். அதற்கு அவர்கள்: “நபி மார்கள், அதற்கு பிறகு அடுத்தடுத்த அந்தஸ்தில் உள்ளவர்கள், ஒவ்வொருவரும் அவர்களின் மார்க்க பற்றுதலுக்கு அமைவாகவே சோதிக்கப் படுவார்கள். ஒருவர் மார்கத்தை திடமாக பின்பற்றுகிறார் என்றால் அவரின் சோதனையும் கடுமையாக அமையும். அதே போன்று ஒருவர் சாதரணமாக மார்கத்தை பின்பற்றுகிறார் என்றால் அவரின் சோதனையும் இலகுவாக அமையும். மேலும் அந்த நல்லடியார் எந்த பாவங்களும் அற்ற நிலையில் பூமியில் நடந்து செல்லும் வரை அவர் இவ்வாறு சோதிக்கப் பட்டுக் கொண்டே இருப்பார்.” என பதிலளித்தார்கள். (திர்மிதி)

ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை. என நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள். (நூல்: புகாரி)

சோதனைகளில் பொறுமை காப்பதென்பது சோதனைகள் மற்றும் சிக்கல்களுக்கு தம்மைத்தாமே ஆளாக்கிக் கொள்வதையோ, அதிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொல்லாமல் இருப்பதையோ குறிக்காது. சிக்கல்கள் வரும் என்ற நிலை இருக்கும் போது முடியுமான தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதோடு, அது ஏற்பட்டு விட்ட நிலையில் அதிலிருந்து பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்கான இஸ்லாம் கூறும் முறையான அணுகுமுறைகளை கையாள்வதும் அவசியமாகும். உதாரணமாக நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெற்று ஆரோக்கியமாக வாழ முயற்சிக்க வேண்டும். அதனையும் மீறி நோய்கள் ஏற்பட்டு விட்டால் அதற்கு சிகிச்சைப் பெறுவதும் அதன் மூலம் ஏற்படும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு அதற்கான நன்மைகளை இறைவனிடம் எதிர்பார்த்து நிற்பதும் அவசியமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவனின் சோதனைகளின் போது பொறுமையைக் கடைப் பிடிப்பவர்களாகவும், அருட்பாக்கியங்களின் போது நன்றி செலுத்துபவர்களாகவும் நம்மனைவரையும் ஆக்கியருள்வானாக. ஆமீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *