இறைமார்க்கத்தின் சிறப்பம்சம் என்னவெனில் மனிதனுடைய விவகாரங்களைச் சீர் செய்யக்கூடிய அனைத்தையும் அது கூறியுள்ளது. அவற்றில் ஒன்று அசுத்தத்தை நீக்குவது. அதனால் தான் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதும், கற்களைக் கொண்டு சுத்தம் செய்வதும் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமா? தூய்மையும் சுத்தமும் எப்படி ஏற்படுமென்ற விபரத்தையும் இம்மார்க்கம் விவரித்துள்ளது. மக்களில் சிலர், அசுத்தத்தை நீக்குவதில் கவனக் குறைவாக இருக்கின்றனர். அதுதான் ஆடையிலோ, உடம்பிலோ பட்டுவிடுவதற்குக் காரணமாக இருக்கின்றது. மட்டுமல்ல தொழுகை கூடாமல் போவதற்குக் காரணமும் அதுதான். மேலும் கப்ரு வேதனைக்கான காரணங்களில் அதுவும் ஒன்றாகும் என்று நபி (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்த போது கப்றில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். (ஆனால்) ஒரு பெரிய விஷயத்திற்காக இவ்விருவரும் வேதனை செய்யப்படவில்லை என்று கூறிவிட்டு, ஆம்! (இதைத் தொடர்ந்து வேறொரு அறிவிப்பில் ‘அது பெரிய விஷயம் தான்’ என்று வந்துள்ளது) அவ்விருவரில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது (சிறுநீர் துளி தன்னில் படாமல்) பேணுதலாக இருக்கவில்லை. மற்றொருவர் கோள் சொல்லித் திரிபவராக இருந்தார் என்று கூறினார்கள். (புகாரி) இன்னும் சொல்வதானால், ‘பெரும்பாலும் கப்ரு வேதனை சிறுநீர் விஷயத்தில் பேணுதல் இல்லாதனாலேயே ஏற்படுகிறது’ எனவும் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சிறுநீரிலிருந்து தற்காத்துக் கொள்ளாதிருத்தல் என்பது பின்வரும் அனைத்து நிலைகளையும் உள்ளடக்கும். ஒருவன் சிறுநீர் கழிக்கும் போது அது முழுமையாக வெளியேறி விடுவதற்கு முன்பே அவசர அவசரமாக எழுந்து விடுதல். அல்லது சிறுநீர் கழிக்கும் போது அது தன் மீது தெறிக்கும் விதத்தில் அல்லது தன் பக்கம் அது திரும்பி வரும் இடத்தில் அமர்ந்து சிறுநீர் கழித்தல், அல்லது சிறுநீர் கழித்து விட்டு தண்ணீரால் அல்லது கல், காகிதம் போன்றவற்றால் சுத்தம் செய்யாமல் எழுந்து விடுதல், அல்லது அரைகுறையாக சுத்தம் செய்தல்.
இன்று நமது காலத்தில் காஃபிர்கள் செய்வது போன்று செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எவ்வாறெனில் சில கழிப்பிடங்களில் சிறுநீர் கழிப்பதற்கென சுவரை ஒட்டி சில இடங்கள் இருக்கும். கதவுகள் இல்லாமல் அவை திறந்து காணப்படும். அங்கு நம்மவர்கள் வருவோர் போவோர் முன்னிலையில் கொஞ்சமும் வெட்கமின்றி சிறுநீர் கழிக்கின்றனர். பிறகு சுத்தம் செய்யாமலேயே ஆடையணிந்து கொண்டு சென்று விடுகின்றனர். இவர்கள் ஒரே நேரத்தில் மோசமான விலக்கப்பட்ட இரு காரியங்களை செய்கின்றனர். ஒன்று: மக்களின் பார்வையை விட்டும் தம் மானத்தை மறைப்பதில்லை. இரண்டு: தம்மீது சிறுநீர் படுவதிலிருந்து காத்துக் கொள்வதில்லை, சுத்தம் செய்வதில்லை.