பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-8
அல்குர்ஆனையும், ஸுன்னாவையும் பற்றிப்பிடித்துக் கொள்ளும்போது ஒருவன் பித்அத்துகளிலிருந்தும் வழிகேடுகளிலிருந்தும் பாதுகாக்கப்டுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுகிறான்: ‘நிச்சயமாக இது எனது நேரான வழியாகும் இதைப் பின்பற்றுங்கள், பல வழிகளைப் பின்பற்றாதீர்கள் அது உங்களை நேரான வழியை விட்டு தூரப்படுத்தி விடும்’ (அல் அன்ஆம்: 6:153).
நபியவர்களின் கூற்று இங்கு கவனிக்கத்தக்கதாகும். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: நபியவர்கள் ஒரு கோட்டை வரைந்து இது அல்லாஹ்வின் வழி எனக்கூறினார்கள், பின்னர் வலது புறத்திலும் இடது புறத்திலும் பல கோடுகளை வரைந்தார்கள், பின்பு இது பல வழிகள் எனக்கூறினார்கள். இந்த ஒவ்வொரு வழிகளிலிருந்தும் ஷைத்தானின் அழைப்பு வந்து கொண்டே இருக்கும், பிறகு பின் வரும் வசனத்தை ஓதினார்கள்: ‘நிச்சயமாக இது எனது நேரான வழியாகும் இதைப் பின்பற்றுங்கள், பல வழிகளைப் பின்பற்றாதீர்கள் அது உங்களை நேரான வழியை விட்டு தூரப்படுத்தி விடும்’ (அல் அன்ஆம்: 6:153).
எவர்கள் குர்ஆனையும், ஸுன்னாவையும் புறக்கணித்து விட்டார்களோ அவர்கள் வழிகேட்டிலும் பித்அத்திலும் விழுவது உறுதியாகும். பித்அத்துகள் உருவாவதற்குரிய காரணங்களை கீழே சுருக்கமாகத் தரப்படுகின்றன: மார்க்க சட்ட திட்டங்களில் அறியாமை, மனோ இச்சையை பின்பற்றல், சில சிந்தனைப் போக்குகளில் பிடிவாதமாக இருத்தல், சில மனிதர்களின் கருத்துக்களில் பிடிவாதமாக இருத்தல், காபிர்களுக்கு ஒப்பாக நடத்தல் அவர்களை கண் மூடித்தனமாக பின்பற்றல்.
இந்த விடயங்கள் விரிவாக ஆராயப்படும்:
முதலாவது காரணி:
மார்க்க சட்ட திட்டங்களில் அறியாமை:
காலப்போக்கில் மனிதர்கள் நபித்துவ வழிகாட்டல்களிலிருந்து தூரமானதுடன், (மார்க்க) அறிவும் குன்றி விட்டது. அறியாமை பரவ ஆரம்பித்தது. நபி (ஸல்) அவர்கள் கூறிச் சென்றது போல, ‘எனக்குப்பின் வாழ்பவர்கள் பல முரண்பாடுகளைக் காண்பார்கள்’ (அபூதாவுத், திர்மிதி(
நபியுடைய மற்றுமொரு கூற்றாவது: ‘அல்லாஹ் அடியார்களிடமிருந்து ஒரே அடியாக அறிவைக் கைபற்றுவதில்லை, அல்லாஹ் அறிஞர்களின் (உயிர்களை) கைப்பற்றுதவதன் மூலம் தான் அறிவைக் கைப்பற்றுவான். எது வரையெனில் எந்த ஒரு அறிஞரும் இல்லை என்ற நிலை வரும் வரை, மக்கள் மௌட்டீகர்களை தலைவர்களாக எடுத்துக்கொள்வர் அவர்களிடம் கேள்விகளை கேட்பர் அவர்கள் அறிவின்றி தீர்ப்பளித்து அவர்களும் வழிகெட்டு மற்றவர்களையும் வழிகெடுத்து விடுவர்’ (ஜாமிஉல் பயானில் இல்மி வபழ்லிஹி எனும் இப்னு அப்துல் பர்ரின் நூலிலிருந்து, 180/1( .
இரண்டாவது காரணி:
மனோ இச்சையைப் பின்பற்றல்:
எவன் அல்குர்ஆனையும் ஸுன்னாவையும் புறக்கணித்து விடுகிறானோ அவன் மனோ இச்சைக்கு அடிமைபட்டு விடுகிறான். அல்லாஹ் தனது அருள் மறையில் குறிப்பிடுவது போன்று: ‘நபியே எவர்கள் உமக்கு செவி சாய்க்கவில்லையோ அறிந்து கொள்ளுங்கள் அவர்கள் தான் மனோ இச்சையைப் பின் பற்றக்கூடியோர். அல்லாஹ்வின் நேர் வழியை விட்டு எவர்கள் மனோ இச்சைக்கு அடிமையானார்களோ அவர்கள் வழிகெட்டவர்கள்’ (அல்கஸஸ்: 28:50).
மற்றுமோர் இடத்தில்: நபியே மனோ இச்சையைக் கடவுளாக எடுத்துக் கொண்டவரைப் பார்த்தீரா? அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு, இன்னும் அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்து விட்டான். எனவே அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? (ஜாஸியா: 45: 23). பித்அத்துகள் என்பதே மனோ இச்சைக்கு அடிபணிவது தான்.
மூன்றாவது காரணி:
மனிதர்களின் சிந்தனையில் பிடிவாதமாக இருத்தல்:
ஆதாரங்களைத் தேடுவது, சத்தியத்தை விளங்குவது இவைகளை விட்டு விட்டு மனிதர்களின் சிந்தனைகளில் பிடிவாதமாக இருத்தல். அல்லாஹ் தனது அருள் மறையில் இவ்வாறு கூறுகிறான்: ‘அல்லாஹ் அருளியதை பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், எமது பெற்றோரை எவ்வழியில் கண்டோமோ அவ்வழியையே பின்பற்றுவோம்’ (பகரா 2: 170).
கப்றுகளை வணங்கும், ஸுபியிஸ சிந்தனைகளுக்கு அடிமைப்பட்ட, மத்ஹபுகளில் ஊறிப்போயிருக்கின்ற பிடிவாதக்காரர்களின் இன்றைய நிலை இதுவா கத்தான் இருக்கின்றது. அவர்கள் கொண்டிருக்கும் தவறான கொள்கைகளை புரிய வைப்பதற்கு அல்குர்ஆன், ஸுன்னாவின் பக்கம் அழைக்கப்பட்டால், அவர்களின் மூதாதையர்கள், மத்ஹபுகள், அவர்களது ஷைகுமார்களைக் காட்டி அதில் பிடிவாதமாக இருப்பதைப் பார்க்கலாம்.
நான்காவது காரணி:
இறை நிராகரிப்பாளர்களுக்கு ஒப்பாக நடத்தல்:
பித்அத்துகளில் வீழ்வதில் இது மிக மோசமான நிலையாகும். அபீ வாகிதில்லைதி குறிப்பிடுவது போல், ‘நாம் அல்லாஹ்வின் தூதருடன் ஹுனைன் போருக்குச் சென்றோம். நாம் குப்ரிலிருந்து விடுபட்டு (இஸ்லாத்தில் நுழைந்த புதியவர்களாக இருந்தோம்). முஷ்ரிகீன்கள் தங்கிச் செல்லும், தங்கள் ஆயுதங்களை தொங்கவிடும் ஸித்ர் எனும் மரம் இருந்தது, அதற்கு ‘தாது அன்வாத்’ எனச் சொல்லப்பட்டது.
அந்த இடத்தை கடக்க நேரிட்ட போது அல்லாஹ்வின் தூதரே! முஷ்ரிகீன்களுக்கு தாது அன்வாத் இருப்பது போன்று நமக்கும் ஒரு தாது அன்வாத்தை ஏற்படுத்துங்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்: அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) மூஸாவிடத்தில் பனூ இஸ்ராயீல்கள் கேட்டது போன்றல்லவா நீங்கள் கேட்டீர்கள்: ‘அவர்களுக்கு ஒரு கடவுள் இருப்பது போன்று நமக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக என்று, (அதற்கு மூஸா) கூறினார் நிச்சயமாக நீங்கள் மடமையிலே இருக்கும் ஒரு சமுதாயம்’ (அல்அஃராப் 7: 138). ‘நீங்கள் முன் சென்றவர்களின் வழி முறையைப்பின் பற்றுவீர்கள்’ (திர்மிதி(.
இச் செய்தியில் பனூ இஸ்ராயீல்களும், ஒரு சில நபித்தோழர்களும் காபிர்களுக்கு ஒப்பாகும் ஒன்றை, மோசமான ஒன்றை தங்கள் நபியிடம் கேட்டனர். அல்லாஹ்வை விட்டு விட்டு அவர்கள் வணங்கும், அவர்கள் பரக்கத்தை தேடும் ஒன்றை தேடினர், இன்றைய நிலையும் இதுவா கத்தான் இருக்கிறது. பெரும் பாலான முஸ்லிம்கள் பித்அத்திலும் ஷிர்க்கிலும் இறை நிராhகரிப்பாளர்களை கண் மூடித்தனமாக பின்பற்ற ஆரம்பித்து விட்டனர்.
மௌலிது விழாக்கள் என்றும், நாட்களை, வாரங்களை குறிப்பான வணக்க வழிபாடுகளுக்காக ஒதுக்குவது, மார்க்க சம்பந்தமான விடயங்களை தொடர்பு படுத்தி, மற்றும் நினைவுத்தினங்களை தொடர்பு படுத்தி விழாக்கள் என்றும், சிலைகளை, நினைவுச் சின்னங்களை எழுப்புவது என்றும், இன்ப துன்பங்களில் ஒன்று கூடல்கள் என்றும், ஒரு ஜனாஸா நடந்து விட்டால் அதிலுள்ள பித்அத்துகள் என்றும் கப்றுகளின் மீது கட்டிடம் எழுப்புவது என்றும் இவ்வாறே பட்டியல் நீளுகிறது.
தொடரும்..
highly appreciate your valuable topics which really seasonally required.I prefer of listen to Sheikh Omer Mufthi Sheriff.
Almighty Allah reward you for your noble work.