Featured Posts

[10] நவீன காலத்தின் சில வழிகெட்ட பித்அத்துகள்

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-10

நிகழ் காலத்தில் பித்அத்துகள் பல வகையிலும் அதிகரித்துக் காணப்படுவதின் காரணம், காலத்தால் பிந்தியது, அறிவு குறைந்து காணப்படுவது, பித்அத்தின் பக்கமும், மார்க்கத்துக்கு புறம்பானவைகளின் பக்கமும் அழைப்பவர்கள் அதிகரித்து விட்டார்கள். மறைமுகமாக காபிர்களின் பழக்க வழக்கங்களுக்கும், அவர்களின் மதரீதியான விடயங்களுக்கும் ஒப்பாக நடத்தல்.

நபி (ஸல்) அவர்களின் கூற்றை உண்மைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்: ‘நீங்கள் உங்களுக்கு முன் சென்றவர்களின் வழி முறையை பின் பற்றுவீர்கள்’ (திர்மிதி).

நவீன கால பித்அத்துகளில் நின்றும் உள்ளவைகள் தான்:

1- நபியின் பெயரால் மௌலிது விழாக்கள் எடுப்பது.

2- பரக்கத்தைப் பெற வேண்டுமென்ற நோக்கில் பழமை வாய்ந்த இடங்கள், தர்ஹாக்களுக்கு, ஏனைய இடங்களுக்குச் செல்வது.

3- அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற வேண்டுமென நோக்கில் வணக்க வழிபாடுகளில் பித்அத்துகளை ஏற்படுத்துவது.

4- ரபீஉல் அவ்வல் மாதத்தில் நபியின் பெயரால் மௌலிது விழாக்கள் கொண்டாடுவது:

நபியுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு இவர்கள் நடாத்தும் இந்த மௌலிதுகள் கிறிஸ்தவர்களுக்கு ஒப்பான செயலாகும். முஸ்லிம்களின் அறியாமையின் காரணத்தால் அல்லது வழி கெடுக்கும் உலமாக்களால் ஒவ்வொரு வருடத்தின் ரபீஉல் அவ்வல் மாதத்திலும் நபி (ஸல்) அவர்களின பிறந்த தினத்தை முன்னிட்டு இவ்வாறான விழாக்கள் கொண்டாடப்படுகின்றது.
இவ்வாறான விழாக்களை பெரியளவில் இறை ஆலயங்களில் நடாத்தப்படுகின்றது, இன்னும் சிலர் வீடுகளில், அல்லது பல இடங்களில் விஷேச ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது, பிரமுகர்கள், பாமரர்கள் என்ற வித்தியாசமின்றி அவ்வாறான நிகழ்வுகளில் கூட்டம் அலை மோதுகிறது.

கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை)க்கு பிறந்த தின விழா கொண்டாடுவதைப் போல் அறியாமை முஸ்லிம்களும் அவர்களுக்கு ஒப்பாக செயல்படுகின்றனர். இந்த விழாக்கள் வழி கெட்ட பித்அத் மாத்திரமின்றி, கிறிஸ்தவர்களுக்கு ஒப்பான ஒரு காரியமும் கூட, அது மட்டுமா? பல ஷிர்க்குகள், இஸ்லாம் நிராகரித்த அனாச்சாரங்களும் அங்கு அரங்கேற்றப்படுவதை காணலாம். அல்லாஹ்விடத்தில் மாத்திரம் கேட்கப்படவேண்டிய பிரார்த்தனை, உதவி தேடல் அனைத்தும் நபியிடத்திலே கேட்கப்பட்டு பாடல்களில் அளவு கடந்து செல்லும் மோசமான காட்சிகள். நபியை புகழும் விடயத்தில் அளவு கடந்து செல்வதை நபியவர்களே தடுத்துள்ளார்கள் எனபதை இவர்கள் மறந்து விட்டார்கள் போலும்.

‘மர்யமின் மகன் ஈஸாவை நஸாறாக்கள் அளவு கடந்து புகழ்வதைப் போன்று என்னைப் புகழாதீர்கள், நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியான், (என்னை) அல்லாஹ்வின் அடியார், தூதரென்று மாத்திரமே சொல்லுங்கள்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

அளவு கடந்து புகழ்தல் என்பது ஹதீஸின் மூலமே தடுக்கப்பட்டுள்ளது. நபியவர்கள் அந்த விழாக்களுக்கு வருகை தருகிறார்கள் என்ற மோசமான நம்பிக்கையும் சிலரிடம் உள்ளது. அவைகளில் நடைபெறும் இஸ்லாம் நிராகரித்த செயல்களை பட்டியல் போட முடியும். கூட்டாக பாடல்கள் பாடப்படுகின்றன, மற்றும் சில இடங்களில் இசைகளுடன் கூடியதாக அவை அமைந்திருக்கின்றன, தப்லா அடிக்கப் படுகின்றது, ஸுபித்துவ வாதிகளின் பித்அத்தான திக்ருகள், ஆண் பெண் பாகுபாடின்றி ஒன்றாகக் கலந்து இருத்தல், பல அனாச்சாரங்களின் வாயில்கள் திறக்கப் படுவதற்கு இவை காரணியாகும், ஒரு சில நேரங்களில் விபச்சாரத்தில் வீழ்ந்து விடுவதற்குக்கூட இவை காரணியாக அமைந்து விடுகிறது.

இந்த எந்த அனாச்சாரங்களும் இல்லாமல், வெறும் ஒரு ஒன்று கூடலுக்கும், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கும், உணவுகளை பங்கிடுவதற்கும் அவர்கள் சுருக்கிக் கொள்வார்களானால் அதுவும் நவீன பித்அத்தாகும். ‘ஒவ்வொரு புதியவையும் பித்அத்தாகும், ஒவ்வொரு பித்அத்தும் வழி கேடாகும்’ இன்னும் இவ்வாறான விழாக்கள் ஏனைய விழாக்களில் நடக்கக்கூடாத பாவமான காரியங்கள் நடப்பதற்கு வழிகோலும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நாம் சொல்வது இவைகள் வழி கெட்ட பித்அத்துகளாகும். குர்ஆனிலோ, சுன்னாவிலோ, முன் சென்ற நல்லவர்களின் செயல்பாடுகளிலோ, சிறந்த நூற்றாண்டுகள் என சிலாகித்துக் கூறப்பட்ட காலங்களிலோ எந்த ஆதாரமும் இவைகளுக்கு இல்லை. பிந்திய காலங்களில் ஹிஜ்ரி நான்காவது நூற்றாண்டுக்கும் பிறகுதான் இந்த வழி கெட்ட பித்அத்துகள் தோன்ற ஆரம்பித்தன. பாதிமியூன் என்று சொல்லப்படும் ஷீயாக்கள் தான் இவைகளை உருவாக்கினர்.

இமாம் அபூ ஹப்ஸ் தாஜுத்தீன் பாகிஹானி கூறுகிறார்: ரபீஉல் அவ்வல் மாதத்தில் மக்கள் ஒன்று கூடி நடாத்துகின்ற மௌலிதுகள், ஒன்று கூடல்கள் பற்றி, இதற்கு மார்க்கத்தில் ஏதாவது அடிப்படை இருக்கிறதா என பல தடவை கேட்கப்பட்டு விட்டது. அவர்கள் தெளிவான ஒரு பதிலை விரும்புகின்றனர். நான் சொல்வது, இந்த மௌலிதுகளுக்கு குர்ஆனிலோ சுன்னாவிலோ எந்த அடிப்படையும் கிடையாது, மார்க்கத்தில் முன்மாதிரியாக இருந்த, குர்ஆன் சுன்னாவை பற்றிப்பிடித்த எந்த ஒரு அறிஞரும் இவைகளைச் செய்யவில்லை. இது வழிகெட்டவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பித்அத்தாகும், மனோ இச்சைக்கு அடிமைப்பட்ட சாப்பாட்டு ராமன்களால் உருவாக்கப்பட்டதாகும்’ (ரிஸாலதுல் மௌரித் பீஃ அமலில் மௌலித்).

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும் போது: இந்த பித்அத்தை ஏற்படுத்தியவர்கள் ஒன்றின் கீழ் கிறிஸ்தவர்கள் ஈஸா நபியின் பிறந்த தினத்தை கொண்டாடுவது போன்று அவர்களுக்கு ஒப்பாகும் நோக்கில், அல்லது நபி (ஸல்) அவர்கள் மீது நேசத்தால் அவரை மகத்துவப் படுத்தும் நோக்கில் நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை கொண்டாடுகின்றனர், நபியவர்களின் பிறந்த தினத்திலே மக்களுக்கு மத்தியில் கருத்து வேறு பாடுகள் உள்ளது.

இதை முன் சென்றவர்கள் செய்யவில்லை. அது சிறப்பானதாகவும்,நன்மைக்குரியதாகவும் இருந்திருக்குமானால் ஸலபுகள் நம்மை விட அதற்குத் தகுதியானவர்கள், அவர்கள் நபியின் மீது கடும் நேசம் வைத்திருந்தனர், நம்மை விட நபியின் மீது மதிப்பு வைத்திருந்தனர், நம்மை விட நன்மையில் பேரார்வம் கொண்டோர் அவர்கள். நபியை நேசிப்பது அவர் மீது மதிப்பு வைப்பதென் பதெல்லாம், அவருக்கு வழிப்படுவதிலும், அவரது கட்டளைகளை எடுத்து நடப்பதிலும், அவரது வழி முறைகளை உயிர்ப்பிப்பதிலும், உள்ளத்தால், நாவால், கையால் அவைகளுக்கு முயற்ச்சி செய்வதிலுமே தங்கியுள்ளது. இது தான் முன் சென்றவர்களான முஹாஜிரீன்கள், அன்ஸாரிகள் அவர்களைப் பின் பற்றியவர்களின் வழி முறையாகும். (இக்திழாஉஸ் ஸிராதுல் முஸ்தகீம் 2/ 615)

இந்த பித்அத்தை நிராகரித்து பல மறுப்புகள் எல்லாக் காலங்களிலும் கொடுக்கப்பட்டே வந்துள்ளன. ஏனெனில் இந்த பித்அத்தை பொறுத்த வரையில் ஏனைய அவ்லியாக்கள், ஷைகுமார்கள், இன்னும் பலரின் பெயரால் மௌலிதுகளை நடாத்துவதற்கு இது வழி கோலுகிறது, பல தீமையின் வாயில்களை திறந்து விடுகின்றது.

2- குறிப்பிட்ட இடங்கள், மற்றும் பழமை வாய்ந்த இடங்கள், உயிரோடுள்ளவர்கள், மரித்தோர்களின் பரக்கத்தை நாடிச் செல்வது:

‘தபர்ருக் என்றால், பரக்கத்தை தேடுதல், ஒன்றில் நலவிருப்பதாக உறுதிபூண்டு அதை அதிகரிக்க தேடுதல். நலவை ஆதரவு வைத்தல் அதை அதிகரிக்கத் தேடுதல் என்பதெல்லாம் யார் அதற்கு பொறுப்பாளனாகவும், அதற்கு ஆற்றல் பெற்றவனாகவும் இருக்கின்றானோ அவனிட மேயாகும். அந்த ஆற்றலைப் பெற்றவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே. அவன் தான் பரக்கத்தை அருளுகிறான் அதை நிலை பெறச் செய்கின்றான். படைப்பினங்களை பொறுத்த வரையில் பரக்கத்தை ஏற்படுத்துவதற்கோ அதை கொடுப்பதற்கோ, அதை தரிப்படுத்துவதற்கோ அதை நிலை பெறச் செய்வதற்கோ சக்தி பெற மாட்டார்கள்.

குறிப்பிட்ட இடங்கள், அல்லது பழமையான இடங்கள், உயிரோடு உள்ளவர்கள், மரித்தோர்களிடம் பரக்கத்தை நாடிச் செல்வதென்பது தடுக்கப் பட்டதாகும், அவைகளுக்கு அல்லது அவர்களுக்கு அருள் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் ஒருவன் செல்லும் போது அது ஷிர்காகி விடுகின்றது.

அல்லது அவர்களைத் தரிசிப்பது, அந்த இடங்களைப் போய்த் தொடுவது, அல்லாஹ்விடத்தில் அருளைப் பெற்றுத் தருவதற்கு காரணியாக அமையும் என்று நம்புவது ஷிர்கின் பால் வழி கோலுவதாகும். நபித் தோழர்கள் நபியுடைய முடியைக் கொண்டு, அவரது உமிழ் நீரைக் கொண்டு, நபியுடைய உடலிலிருந்து வெளிப்பட்ட இரத்தம் இது பரக்கத்தில் நின்றும் உள்ளது, இது நபியவர்கள் உயிருடன் இருக்கும் போது நபிக்கு மாத்திரம் இருந்த விஷேச சிறப்புத் தன்மையாகும்.

இறை நேசர்களில் மிக உயர்ந்தவராக நபி (ஸல்) அவர்கள் இருந்தும் கூட, அன்னாருடைய மரணத்திற்குப் பின் அவரது கப்றுக்கோ, அல்லது அவரது வீட்டுக்கோ பரக்கத்தை நாடிச் செல்லவில்லை. நபியவர்கள் தொழுத, அவர்கள் அமர்ந்திருந்த இடங்களில்பரக்கத்தை ஸஹாபாக்கள் நாடவில்லை.

ஸஹாபாக்கள் நல்லடியார்களிடம் பரக்கத்தை தேடவில்லை அபூ பக்கர், உமர் (ரலி) போன்ற சிறந்தவர்கள் உயிர் வாழும் போதோ அவர்களது மரணத்திற்குப் பின்போ அவர்களிடம் பரக்கத்தை (அருளை) நாடவில்லை.

‘ஹிரா’ குகைக்கு தொழுவதற்கோ பிரார்த்திப்பதற்கோ செல்லக் கூடியவர்களாக அந்த உத்தமர்கள் இருக்கவில்லை. அல்லது மூஸா (அலை) அல்லாஹ்வுடன் உரையாடிய தூர் மலைக்கோ, அல்லது நபிமார்கள் இருந்ததாகச் சொல்லப்படும் வேறு மலைகளுக்கோ, நபிமார்கள்இருந்ததாகச் சொல்லப்டும் இடங்களில் கட்டப் பட்டிருக்கும் இடங்களுக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ அந்த நபித்தோழர்கள் தொழுகைக்காவோ பிரார்த்தனைக்காவோ செல்லவில்லை.

நபியவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் வழமையாக தொழுது வந்த இடத்தை முன் சென்றவர்கள் யாரும் தொடவோ முத்தமிடவோ இல்லை. மக்காவிலோ வேறு இடங்களிலோ அன்னார் தொழுத இடங்களில் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. நபியவர்கள் வழமையாக தொழுத இடங்களில் அன்னாரது சங்கையான பாதங்கள் பட்டிருக்கும் அந்த இடங்களை தொடுவதற்கோ, முத்தமிடுவதற்கோ அவரது உம்மத்தினருக்கு மார்க்கம் அனுமதி யளிக்கவில்லை என்கின்ற போது, மற்றவர்கள் விடயத்தில் அது அவர் தொழுத இடம், தூங்கிய இடம் என்று அதை தொடுவது, முத்தமிடுவது எப்படி அனுமதிக்கப்படும்!! அறிஞர்கள் அதன் பேராபத்தை விளங்கினர். அல்லாஹ்வின் தூதர் கொண்டு வந்த மார்க்கத்தில் இவைகளுக்கு கடுகளவும் அனுமதியில்லை. (இக்திழாஉஸ் ஸிராதுல் முஸ்தகீம் 795- 802/2).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *