தேனீ யுனிகோடு எழுத்துருவை தமிழ் உலகத்திற்கு தந்த உமர் அவர்கள் இன்று (12.07.2006) மாலை 5.30 -க்கு இவ்வுலகத்தை விட்டு மறைந்தார்.
யுனிகோடுவின் பல்வேறு வகை பயன்பாடுகள் மற்றும் RSS ஓடை பற்றிய கட்டுரைகளோடு இவரின் தமிழ் அகராதியும் பிரபலமானவை. யுனிகோடுவின் வளர்ச்சி பற்றி பேசப்படும் தளங்கள் மற்றும் மடலாற்குழுமங்களில் உமர் அவர்களின் கட்டுரைகளை காணலாம்.
அனைத்து தளங்களிலும் பயன்படுத்தும் வகையில் இயங்கு எழுத்துரு (THENEE.eot) தயாரித்து அனைவரின் நேரத்தையும், சிரமத்தையும் குறைத்தவர் உமர் அவர்கள்.
உமர் அவர்கள் அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உமர் அவர்கள் நண்பர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். யூனிக்கோடு வழி தமிழுக்கு உமர் செய்த தொண்டு வலையுலகம் நினைவில் வைத்திருக்கும்!
என் இரங்கலும் உமரின் குடும்பத்தவர்க்கும், பல்லாயிரக்கணக்கான தமிழ் நெஞ்சங்களுக்கும்.
அவர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
மரணத்திற்கான காரணம் குறிப்பிடவில்லையே..?? இளம் வயதினரா..? ஏதேனும் நோயின் காரணமாக இறந்தாரா..?? விவரங்களை, விரும்பினால் அறியத்தரவும்.
உமர் அவர்களுக்கு என் நன்றியுடனான அஞ்சலி.
சொல்லமுடியாத வேதனை மனதைப் பிழிகிறது. இது சற்றும் எதிர்பாராத விதத்தில் வந்து தாக்கியிருக்கும் செய்தி. அவரைப் பிரிந்து தவிக்கும் அவரது உறவினர்கள், மற்றும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள்.
உமருடன் எனக்கு அதிகம் பரிச்சயம் கிடையாது. ஒன்றிரண்டு முறை தனிப்பட்ட மடல்களைப் பரிமாறிக்கொண்டிருக்கிறோம். இவையெல்லாம் தேனி எழுத்துரு சம்பந்தப்பட்டவையே. தமிழ் லினக்ஸ்க்கு யுனிகோட் எழுத்துருக்கள் தேவைப்பட்ட சமயத்தில் நான் பல எழுத்துரு படைப்போர்களைத் தொடர்புகொண்டு அவர்கள் படைப்பை க்னூ பொது உரிமத்தின்கீழ் வெளியிட முடியுமா என்று கேட்டு வந்தேன். அப்படித் தொடர்புகொண்டவர்களிலேயே மிகவும் அதிக ஆர்வத்தைக் காட்டி முன்வந்தவர் திரு. உமர். தமிழில் யுனிகோட் எழுத்துருக்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில் திரு உமருக்கு முக்கிய பங்குண்டு. பல தளங்களில் உதவிக் கட்டுரைகள், மடலாடற்குழுக்களில் சந்தேகங்களுக்குப் பதில்கள் என்று உற்சாகமாக யுனிகோட்டை முற்செலுத்தியவர் உமர். அவரது மடல்களில் தொனிக்கும் ஆர்வமும் நேர்மையும் எனக்கு அவர்மீது மிகுந்த மதிப்பையும் மரியாதையையும் தந்திருக்கின்றன.
இனம் புரியாத வேதனை நெஞ்சை வதைக்கிறது. இதன் காரணத்தை விரிவாகச் சொல்லத் தெரியவில்லை.
மீண்டும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
வருத்தமாக இருக்கிறது.
அன்னாரின் குடும்பத்தினருக்கும், நம் தமிழ்வலைஞர்கள் அனைவருக்கும்
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நம்ப முடியவில்லை..இதற்குமேல் வேறேதும் எழுத முடியவில்லை:(
என் ஆழ்ந்த அனுதாபங்கள்
தேனீ எழுத்துருக்கோப்பை இறக்கி வைத்துக் கொள்ள முடியும் என்றாலும் இன்னும் கூட உமர் முதலில் கொடுத்த நிரல்துண்டையே வைத்திருக்கிறேன் என்று எண்ணுகிறேன். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. வருந்துகிறேன்.
என்ன சொல்வதென்று தெரியவில்லை. என்ன நடந்தது என்று கொஞ்சம் விரிவாகச் சொல்வீர்களா?
தமிழ் இணையத்துக்காக எழுத்துருக்கள், செயலிகள் என்று பலவற்றை செய்தவர். மிகுந்த உற்சாகத்துடன் தமிழ்-உலகம், ஈ-உதவி, தமிழ்மணம் போன்ற குழுமங்களில் பங்கெடுத்துக்கொண்டவர். அவரது மரணச்செய்தி மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.
உமர் அவர்களது குடும்பத்தார், உற்றார் உறவினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
என்னால் நம்பவே முடியவில்லையே! நண்பர் உமர் தமிழ்க் கணிமையின் பயன்பாட்டைக் கூட்டியதில் நண்பர் உமர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர். அவரோடு தமிழ் உலகம் மடற்குழுவில் பலமுறை உரையாடி இருக்கிறேன்.
நிமிர்ந்த நெஞ்சும், கனிவான சொற்களும் உடையவர். தமிழின் மேல் ஆராத பற்றுடையவர். அதை பாராட்டும் வகையில் வெளிக்காட்டியவர்.
அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
அன்புடன்,
இராம.கி.
உமர் அவர்களின் மறைவுச்செய்தியை அறிந்தவுடன் மிகவும் வேதனையாக உள்ளது. அன்னாரின் குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் என் அனுதாபங்கள். சிங்கை இஸ்மாயில்
உமர் அவர்களின் மறைவுச்செய்தியை அறிந்தவுடன் மிகவும் வேதனையாக உள்ளது. அன்னாரின் குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் என் அனுதாபங்கள். சிங்கை இஸ்மாயில்
அன்பு நண்பர் உமரின் மரணம் அதிர்ச்சியுறச் செய்கிறது. அவரின்
ஆத்மா சாந்தியடைய கண்கள் கசியப் பிராதிக்கிறேன்.
கடந்த சிலமாதங்களாகஅவரோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் போனது.
ஈ-சங்கமம் இணையஇதழுக்கு அவரது பங்களிப்பும் தமிழ் உலகம்
மடலாடாற்குழுவிலும்அவரது பங்களிப்பை என்னாலும் மற்ற நண்பர்களாலும்
மறக்க இயலாது.பலசமயங்கள் நான் இணையத்தில் இருந்தால் “சாட்” செய்வார்.
இ-சங்கமம் கெளரவ ஆசிரியராக இருந்தாலும் ஆசிரியராக இருந்த தம்பி
விஜயகுமார் உமர் அவர்களைப் பல வேலைகள் சளைக்காமல் கேட்டு அலுப்பில்லாமல்
செய்தும் எனக்கும் தகவல் தெரிவித்த சகோதரப் பாங்கை இழந்துவிட்டேனே
என்று எண்ணும்போது நெஞ்சு விம்மித் தணிகிறது.
முகம் தெரியாவிட்டாலும் அவர் அகம் தெரிந்தவன் என்ற அளவில் இந்த இளம்
வயதில்..அய்யோ கொடுமையோ! வெங்கொடுமைச் சாக்கேடே! சூடுதணியாத
இளம்குருதி குடிப்பதற்கோ என்கிற கவிஞர் கண்ணதாசனின் வரிகள் நினைவில் எழ
என் கண்களை கண்ணீர் திரையிட்டு மறைக்கிறது. உன் புகழை எழுதவேண்டிய
நான் உனக்கு இவ்வளவு சீக்கிரம் அஞ்சலி செலுத்துவேன் என்று கனவிலும் கருதவில்லை.
பத்துநாட்கள் நோயில் படுத்திருந்தார்; மரணம் அவரைக் கொண்டுபோய்விட்டது
என்றால் கூட சிந்தித்திருக்கலாம். இன்னும் இறந்துவிட்டார் என்பதை என்னால்
நினைக்கவேமுடியவில்லை.
தந்தினிய குடும்பத்தை, ஆறாத்துயரில் அரற்றுங்கள் என்று சொல்லி மீளாத் துயிலில்
வீழ்ந்தாரா? இன்றைய இணைய உலகிர்குத் தேவையான தங்கநிகர் உமரை
இழந்துவிட்டோம். ஒருநாள் உன்னைச் சந்திப்பேன் என்று எண்ணிகொண்டிருந்தேன்;
எட்டாத தொலைவு சென்றுவிட்டாயே சகோதரா!
ஆல்பர்ட்,
அமெரிக்கா.
நேரடியாகவோ அல்லது மடல்கள்மூலமோ அறிமுகம் கிடையாது.இருந்தாலும் தமிழ் வலைப்பதிவு உலகில் அடிக்கடி கேள்விப்பட்ட பெயர்.இவரின் இழப்பு தமிழ் வலைப்பதிவுக்கு பேரிழப்பே என்பதில் அய்யமில்லை.
உமரின் குடும்பத்தவர்க்கும குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
உமரின் தமிழார்வம், அவரின் நுட்ப அறிவு இரண்டும் போட்ட போட்டியில் பயன்பெற்ற ஆயிரக்கணக்கானோரில் ஒருவனாக இதை ஜீரணிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. தனிப்பட்ட மடல்களில் சில முறை தொடர்புகொண்டபோது அவரின் நகைச்சுவையோடும் நடையுடன் இதமாகப் பழகும் பாங்கு வெளிப்பட்டது. தன்னலம் கருதாத தமிழார்வலர் உமர் அவர்களின் குடும்பத்துக்கு என் ஆழந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிர்ச்சியான செய்தி, இணையத்தில் தமிழ் பயன்படுத்தப்படுவதற்கு வகை செய்து தந்தவர்களில் உமரின் பங்கு முக்கியமான ஒன்றாகும். ஆரம்ப காலத்திலிருந்தே தனது அறிவையும் உழைப்பையும் ஈந்து அதற்கு எந்த விதமான அங்கீகாரமும் தேடாமல் பணி செய்த உமரின் மறைவு மிகவும் வருத்தத்தை தருகிறது.
மா சிவகுமார்
உமர் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவருடய எழில்நிலா கட்டுரைகள் புதியவர்களுக்கு ஒரு வரப்பிராசாதம்.
உமரின் குடம்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். தமிழ் கணியுலகிற்கு உமர் அவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அதற்காக என்றென்றும் நன்றியுடைவர்களாவோம்.
தமிழ் இணைய வளர்ச்சிக்கு உமர் அவர்கள் அளித்த சேவை அளப்பறியது. அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!
உமர் அவர்களுக்கு என் நன்றியுடனான அஞ்சலி
தமிழ் இணைய உலகில் பல சாதனைகளை செய்த உமர் அவர்களின் தீடிர் மறைவு அதிர்ச்சியடைய செய்கிறது.
அவரது இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
“அவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே நாம் மீண்டும் செல்வோம்.”
அல்லாஹ் உமர்தம்பி அவர்களின் பிழை பொறுத்து, சிறப்பான மறுமை வாழ்வை இறைவன் நல்குவானாக.
உமர்தம்பி அவர்களின் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.
தமிழில் கணினியில் நம்மாலெழுதப் படிக்க முடிவது இந்தப் பெருமகனின் பங்களிப்பினால் தானே!
அவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே நாம் மீண்டும் செல்வோம்.”
அல்லாஹ் உமர்தம்பி அவர்களின் பிழை பொறுத்து, சிறப்பான மறுமை வாழ்வை இறைவன் நல்குவானாக.
உமர் அவர்களின் திடீர் மறைவு அதிர்ச்சிக்குள்ளாக்க வைத்துள்ளது. அன்னாரை கடந்த பல வருடங்களாக தமிழ் இணையத்திலும், தமிழ் உலகம் குழுக்களில் அறிவேன். அவரது தேனீ எழுத்துரு அவரின் பெயர் சொல்லும். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.
-சிறீதரன், சிட்னி
எங்கள் ஊரைச் சார்ந்தவரும், என் உறவினருமான உமர் தம்பி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார்கள். அதன் காரணமாகவே துபையிலிருந்து ஓய்வு பெற்று, ஊரிலேயே தங்கினார்கள். அவர்கள் நோயுற்றிருந்தது பெரும்பாலோருக்குத் தெரியாது. அதனை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ளவும் இல்லை.
தான் நோயுற்றிருந்த நிலையிலும் (தம்முடைய) ஒருங்குறி குழுமத்தில் யுனிகோட் குறித்த விவாதங்களில் பங்கேற்று, மற்றவர்களின் சந்தேகங்களுக்கு பதிலிறுத்தி வந்தார்கள்.
இறுதி நாட்களில் மஞ்சள் காமாலை நோயாலும் அவதிப்பட்டார்கள்.
‘அவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே நாம் மீண்டும் செல்வோம்.’
அன்னாரின் பிழைகளைப் பொறுத்து, சிறப்பான மறுமை வாழ்வை இறைவன் வழங்குவானாக.
அப்துல் கரீம்
உமர்தம்பி அவர்கள் ஆர்ப்பாட்டமின்றி பயன்மிக்க பல சேவைகளை இணையத்தமிழுக்கு வழங்கியவர். அன்னாரின் சேவைகளைப் பொருந்தியும், பிழைகளைப் பொறுத்தும் இறைவன் மேலான நற்பதவிகளை அளிப்பானாக!
இத்துயரில் நானும் இணைந்து கொள்கின்றேன்.
தமிழ் இணைய வல்லுநர்கள் கலந்தாலோசித்து உமர் அவர்களின் இலவசப் படைப்புகளை பாதுக்காத்து மென்மேலும் உலகத் தமிழர்கள் பயன் பெற வழிவகை செய்யவேண்டும். உமர்தம்பி அவர்களின் மறைவு உலகத் தமிழர்களுக்கு இழப்பே! அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக!
எங்களூருக்கு பெருமைசேர்த்த உமர் தம்பி காக்கா அவர்களைப்பற்றி என் நினைவுகளை அதிரை.காமில் பதிந்துள்ளேன்.
லிங்க்: http://www.adirai.com/index.php?module=subjects&func=viewpage&pageid=401440
தாமதாகவே இந்த செய்தி எம்மை எட்டியது… அன்னாரின் இழப்பில் எமது சமூகத்தின் துயரையும் இணைத்துக்கொள்கிறோம்.. எல்லாம் வல்ல இறைவன் அவர் மறுமை வாழ்வையும் வெற்றி பெற அருள் புரிவானாக..
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4845