Featured Posts

விசுவாசியின் பிணி பாவ பரிகாரமே.

1661. இறைத்தூதர் (ஸல்) அவர்களை விடக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட வேறெவரையும் நான் கண்டதில்லை.

புஹாரி :5646 ஆயிஷா (ரலி).

1662. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களே!” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்; உங்களில் இரண்டு மனிதர்கள் காய்ச்சலால் அடைகிற துன்பத்தை (ஒரே மனிதனாகிய) நான் அடைகிறேன்” என்று கூறினார்கள். நான், ‘(இந்தத் துன்பத்தின் காரணமாகத்) தங்களுக்கு இரண்டு (மடங்கு) நற்பலன்கள் கிடைக்கும் என்பதாக இதற்குக் காரணம்?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்; அது அப்படித்தான். ஒரு முஸ்லிமைத் தைக்கும் ஒரு முள்ளாயினும், அதற்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக, மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் (உதிரச் செய்து) மன்னிக்காமல் விடுவதில்லை” என்று கூறினார்கள்.

புஹாரி : 5648 இப்னு மஸ்ஊது (ரலி).

1663. ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5640 ஆயிஷா (ரலி) .

1664. ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5641 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அபூஹுரைரா (ரலி) .

1665. இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம், ‘சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்; (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, ‘நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

புஹாரி :5652.அதாஉ இப்னு அபீ ரபாஹ் (ரஹ்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *