– இம்தியாஸ் யூசுப் ஸலபி
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டங்களை இனவாதிகள் வெளிப்படையாகவே மேற்கொண்டு வருகிறார்கள். “பள்ளிவாசல்களை உடைத்தல், தகர்த்தல், அப்புறப்படுத்தல்” என்ற பணியுடன் இவர்களுடைய போராட்டம் ஆரம்பமானது. தற்போது இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் கலாசார பண்புகளையும் கொச்சைப்படுத்தி, விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்கள். “அல்லாஹ்” என்ற கடவுள் பொய்யானது என்றும் பத்திரிகையில் விமர்சித்துள்ளார்கள். தனியார் சட்டங்களை நீக்கிக்கொள்ளுமாறும் கூறுகிறார்கள்.
ஹலால் பிரச்சினையைக் காரணம் காட்டி, முஸ்லிம்கள் குறித்து மிக அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். ஹலால் சான்றிதழ் வழங்கி, அதன் மூலம் உலமா சபை பெற்றுக்கொள்ளும் பணம் அல் காயிதாவுக்கு வழங்கப்படுவதாகவும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும் ஆயுதப் பயிற்சி பெற்ற 12,000 பேர் நாட்டுக்குள் வந்துள்ளதாகவும், பள்ளிவாசல்களில் “பங்கர்கள்” கட்டப்படுவதாகவும் பிரச்சாரம் செய்தார்கள். இது மட்டுமன்றி இஸ்லாமிய கலாசாரங்களை கீழ்த்தரமாக விமர்சிக்கிறார்கள். தற்போது சிங்கள முஸ்லிம் மக்களுக்கிடையில் அவநம்பிக்கை உருவாகி சந்தேகத்துடன் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த பொது பல சேனாவுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கணக்கிலிருந்து பணம் கொடுக்கப்படுவதாகவும் உறுதியான ஆதாரங்களுடன் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியிருக்கிறார்.
இனவாதிகளின் செயற்பாடுகள் பெரியதோர் கலகத்திற்கு இட்டுச் செல்லுமோ என மக்கள் அஞ்சிக் கொண்டிருக்கும் வேளையில், எமது அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து பகிரங்கமான எந்தவொரு கண்டன அறிக்கையும் பாராளுமன்றத்தில் முன்வைக்காதது பெரும் கவலையான விடயமாகும்
கடைசியாக கிழக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலின்போது “முஸ்லிம்களுடைய பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். அது குறித்து எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் என்னிடம் கூறியதில்லை” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியதை கேட்டு முஸ்லிம் சமூகம் கவலைப்பட்டது. தலைகுனிந்தது.
தம்புள்ளையில் அமைந்துள்ள பள்ளிவாசல் இனவாதிகளால் தகர்க்கப்பட்ட காட்சிகளும் செய்திகளும் முழு உலகிற்கும் தெரிந்திருந்த செய்தி. அது ஜனாதிபதிக்குத் தெரியாமல் போயுள்ளது. முஸ்லிம் அமைச்சர்கள் இது குறித்துக் கூறவில்லை என்பத சந்தேகத்திற்குரியது. ஆச்சரியமானது. (இதனை முஸ்லிம்கள் நம்பப் போவதில்லை.)
தற்போது நடைபெற்று வரும் நிகழ்ச்சிகள் குறித்தும் ஜனாதிபதி இன்னுமொரு தேர்தல் மேடையில், இன்னுமொரு முறையில் மறுத்துக் கூறலாம். முஸ்லிம் அமைச்சர்கள் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டிய செய்தி என்னவென்றால், முஸ்லிம் சமூகத்திற்காக பாராளுமன்றம் போன்றவர்கள் என்ற அடிப்படையில் சமூக நலனுக்காகக் குரல் கொடுப்போம் அநீதிகளை தட்டிக் கேட்போம். அதற்காக பாராளுமன்றத்தைப் பயன்படுத்துவோம். எமது சமூக நிலைப்பாட்டை அறிக்கைகளாக முன்வைப்போம். எதிர்கால சமூகம் உண்மைகளைப் புரிந்தகொள்ள உரிய நடவடிக்கைகளை எடுப்போம். பட்டம் பதவிகளுக்குப் பின்னால் குளிர்காயாமல், அரசுக்கு அஞ்சி வாய் மூடி மௌனிகளாக இருக்காமல், அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவன் தந்த அமானிதத்தை (பதவியை) சரியான முறையில் பயன்படுத்துவோம் என்பதேயாகும்.
சிஹல உறுமய கட்சி ஆட்சியில் பங்காளியாக இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கெதிராக கூட்டங்கள் மற்றும் ஊடக மாநாடுகள் நடாத்தி பாராளுமன்றத்தற்குள்ளும் இனத்துவேஷத்துடன் பேசமுடியுமென்றால் எங்கள் நியாயங்களை ஏன் முன்வைக்கக்கூடாது.
19 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை இலங்கை வரலாற்றில் வந்ததில்லை. இப்படியிருக்கும் காலத்திலேயே முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதப் போராட்டத்தைக் கண்டித்துப் பேச முடியவில்லை என்றால் எப்போது பேசுவது?
50 வருடங்களுக்குப் பின்னால் போய் பாராளுமன்ற நிலவரத்தைப் பார்த்தால் ஓரிரு அங்கத்தினர்கள் இருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்திற்காக எல்லா வழிகளிலும் குரல் கொடுத்து பாராளுமன்றத்தில் பேசினார்கள். இன்றும் அத்தகைய தலைவர்கள் (மர்ஹூம் ரீ.பி. ஜாயா, சேர். ராஸிக் பரீத், போன்றவர்கள்) எமது சமூகம் நன்றியுடன் நினைவூட்டுகிறது என்றால் அதற்கான காரணத்தை இன்றைய தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
துருக்கித் தொப்பி எமது வரலாற்றில் அத்தியாயமாகும். ஆங்கில ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்திற்கு தொப்பி போட்டு வர வேண்டாம் என கூறியதை கண்டித்தே மருதானை பள்ளிவாசல் முற்றத்தில் அகிம்சை போராட்டம் துவங்கப்பட்டது. அது பிரித்தானியாவையே நடுங்கச் செய்தது. எமது போராட்டம் வெற்றி பெற்றது. தலைவர்களின் பணி மகத்தானது. இன்றுள்ள தலைவர்களின் நிலவரம் என்ன? பார்க்கவும் கேட்கவும் வெட்கமாக இருக்கிறது. பதவிகளுக்காக அணி மாறுவதும் பிறகு வசைபாடுவதும் காட்டிக் கொடுப்பதும் என்பது அசிங்கமாகத் தெரிகிறது.
அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்கும் சிஹல உறுமய கட்சியினர் முஸ்லிம்களுக்கு எதிராக பகிரங்கமாக பேச முடியுமானால், அதற்கெதிராக எங்கள் தலைவர்களால் எங்கள் தரப்பு நியாயங்களை முன்வைக்காமல் போவது ஏன்?
பொதுபல சேனா அமைப்பினர்கள் அதிரடியாக முஸ்லிம்களுக்கு எதிராக வீதியில் இறங்கிய நேரம் ஜே.வி.பி. கட்சி மட்டுமே இனவாதத்திற்கும் மதவாதத்திற்கு எதிராகவும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு, பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றியது. முஸ்லிம் அமைச்சர்கள் கூட இதுவரை இப்படியொரு அறிக்கையை சமர்ப்பித்தது இல்லை. அதன் பின்பு மற்ற கட்சி உறுப்பினர்களும் பகிரங்கமாக பேசத் தொடங்கினர்.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதியுடனோ அல்லது அரசாங்கத்துடனோ ரகசியமாக பேசியிருக்கலாம். ஆனால், அதனை சமூகம் நம்பாது. இரகசியமாகப் பேசுவதற்கு கணவன்-மனைவி பிரச்சினைகள் அல்லவே. அரசியலில் பகிரங்கமான இராஜதந்திர முறையே தேவை. சிஹல உறுமய கட்சிக்கு பேச முடியுமானால் ஏன் முஸ்லிம் காங்கிரஸுக்கோ அல்லது ஏனைய முஸ்லிம் தலைவர்களுக்கோ பேச முடியாது.
பேசினால் பட்டங்கள், பதவிகள் பறிபோகலாம் என்று பயப்படலாம். ஆனால், சோரம் போனவர்கள் துரோகிகள் என்று சமூகம் சூட்டும் பதவிகள் உங்களை விட்டும் வரலாற்றை விட்டும் ஒருபோதும் மறைந்து போகாது என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.
எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஆக்ரோஷமாகப் பேசுவதும் வாக்குகளை எதிர்பார்த்துப் பேசுவதும் அரசாட்சியில் அங்கம் பெற்றவுடன் அடங்கிப் போவதும் அனுபவித்துக் கொண்டிருப்பதும் சுயநலமாகும்.
எங்களுக்காக எங்கள் பிரச்சினைகளை பேசக் கூடிய எங்கள் உரிமைகளை கேட்கக் கூடிய தலைவர்களையே நாம் தெரிவுசெய்ய வேண்டும் என்பதை முஸ்லிம்கள் புரிந்து செயற்படாதவரை இந்நிலைமையை மாற்ற முடியாது.
எமது முஸ்லிம் தலைவர்கள் பேச மாட்டார்கள் என்று புரிந்தால், எங்களுக்காக பேசக் கூடிய உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக முஸ்லிம்கள் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இளம் வாலிபர்களை -இஸ்லாமிய உணர்வுடன்- பண்படுத்தித் தயார்படுத்த வேண்டும். கையேந்தி தயவை வேண்டி நிற்கும் சமூகமாக மாற முடியாது.
சலுகைகள் எமக்குத் தேவையில்லை. உரிமைகளே எங்களுக்குத் தேவை. உரிமைகளைக் கேட்கவும் அனுபவிக்கவும் தகுதிபடைத்த சமூகம் நாம். சகவாழ்வுடனும் நல்லிணக்கத்துடனும் எங்கள் பயணத்தைத் தொடர்வதற்கு வழிகாண வேண்டும்.
பேசினால் பட்டங்கள், பதவிகள் பறிபோகலாம் என்று பயப்படலாம். ஆனால், சோரம் போனவர்கள் துரோகிகள் என்று சமூகம் சூட்டும் பதவிகள் உங்களை விட்டும் வரலாற்றை விட்டும் ஒருபோதும் மறைந்து போகாது என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்….what is the reason behind the silence of Saudi when muslims face problem everywhere..?
ilankai muslimkalai allah than kaappatra vendum.