Featured Posts

ஸகாத்: ஒரு சமூகக் கடமை

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்-
நோன்பும் ஸகாத்தும் தனித்தனியாக பிரிந்தமைந்த இரு பெரும் கடமைகள். எனினும் நம் சமூகத்தில் ரமழான் மாதத்திலேயே ஸகாத் கடமையையும் நிறைவேற்றுகின்ற பாரம்பரியம் இருந்து வருகின்றது. இந்நடைமுறை கடடாயம் பின்பற்றப்படவேண்டும் என்றில்லாவிடின் இத்தகைய ஒருங்கிணைப்பு மூலம் செல்வந்தர்கள் தமது சொத்துக்களை வருடாந்தம் கணக்கிட்டு அதன் கடமையை நிறைவேற்றவும் ஸகாத் சேகரிப்பை இலகுபடுத்தவும் முடியாமல் போய்விடுவது நோக்கத்தக்கதாகும்.

நோக்கமும் பயன்பாடும்

“நபியே அவர்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தை எடுத்து அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மைப் படுத்துவீராக” (09:103)

மேற்குறிப்பிடப்பட்ட அல்-குர்ஆன் வசனம் ஸகாத் கடமையாக்கப்பட்டதன் நோக்கத்தை தெளிவுபடுத்துகின்றது. ஒவ்வொரு கடமைக்கும் நோக்கம் இருப்பது போல ஸகாத்தின் நோக்கமாக இங்கு இனங்கானப்பட்டிருப்பது ‘தஸ்கியா’ எனப்படும் தூய்மைப்படுத்தல் ஆகும். அதாவது ஸகாத் கொடுக்கும் செல்வந்தர் அதனைப் பெறுபவர் என இரு தரப்பிலும் சடரீதியாகவும் உளரீதியாகவும் ஏற்படுத்தும் தூய்மைப்படுத்தலே இதுவாகும்.

இறையருளில் ஒன்றான பொருட் செல்வத்தை பெற்ற மனிதன் அதனை தனக்களித்த அல்லாஹ்வின் கட்டளைக்கு சிரம்தாழ்த்தி அதிலுள்ள ஏழையின் பங்கை வழங்கிட முன் வருகையில் அது அவனில் பல தாக்கங்களை ஏற்படுத்திவிடுகின்றது. முக்கியமாக உலோபித்தனம் என்ற கொடிய நோயிலிருந்து அவன் பாதுகாக்கப்பட்டு தயாள தனம் அவனில் குடிகொள்கிறது.

இஸ்லாமிய வணக்க வழிபாடுகளில் ஸகாத் பெரும் முக்கியத்துவம் காரணமாக அல்-குர்ஆன் தொழுகையோடு இதனை இணைத்து பேசியுள்ளது. நேரடியாக ஸகாத் என்ற கடமையை முப்பது இடங்களில் பிரயோகிக்கும் குர்ஆன் இருபத்தேழு இடங்களை தொழுகையுடன் இணைத்துள்ளது. மாத்திரமன்றி மக்கா காலப் பிரிவிலும் உத்தியோகபூர்வமாக இல்லாவிட்டாலும் ஸகாத்தோடு தொடர்பான உணவளித்தல் செலவு செய்தல் போன்றன தூண்டப்பட்டிருப்பதை பெரிதும் அவதானிக்கலாம்.

இஸ்லாத்தின் பிரதான ஐங்கடமைகளில் ஒன்றாக இதனை கணித்துள்ள நபி (ஸல்) அவர்கள் இத்துறையில் பொடுபோக்கு காட்டுவதை பெரிதும் எச்சரித்துள்ளார்கள்.

இமாம் புஹாரி (ரஹ்) பதிவுசெய்திருக்கும் ஹதீஸ் பின்வருமாறு அமைகின்றது.

“யார் தனக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்திலிருந்து அதன் ஸகாத்தை கொடுக்கவில்லையோ மறுமையில் அவனுக்காக வழுக்குத் தலையுடைய விஷப்பாம்பு சாட்டப்படும். அதன் இரு கண்களுக்கும் மேலாக இரு கரும் புள்ளிகள் இருக்கும். அது அவனுடைய உடலை சுற்றிவலைத்துக் கொள்ளும். பின்னர் அது அவனது சுன்னங்களைத் தீண்டியவாறு நான் உனது செல்வம் நான் உனது பொக்கிஷம் எனக் கூறும். பின்னர் நபி (ஸல்) அவர்கள் கீழ்வரும் அலுகுர்ஆன் வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்

“அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்கு கொடுத்துள்ள பொருட்களில் யார் உலோபித்தனம் செய்கிறாரோ அது தமக்கு நல்லது என நிச்சயம் என்ன வேண்டாம். அவர்கள் உலோபித் தனத்தால் சேர்த்து வைத்தவை எல்லாம் மறுமையில் அவர்களின் கழுத்தில் அரிகன்டமாகப் போடப்படும்.” (3:180)

இவ்வாறு ஸகாத்தைக் கொடுக்காது தடுத்துக் கொண்ட மனிதர்களுக்கு எதிராக கலீபா அபூபக்ர் (ரழி) போர்க் கொடி தூக்கிய வரலாரையும் இஸ்லாமிய உம்மத் சந்தித்திருக்கிறது.

ஸகாத் வழங்குவோர் பெறுவோர்
ஸகாத் விதியாவதை பொருத்தமட்டில் பூரண சொத்துரிமை விருத்தியுறும் தன்மை நிஸாப் எனும் ஆரம்ப அளவை அடைதல் அடிப்படைத் தேவைகளை விட மேலதிகமாக இருத்தல் கடன் சுமை அற்றிருத்தல் ஒரு வருடம் பூர்த்தியாயிருத்தல் ஆகிய நிபந்தனைகளுடைய சொத்துக்கள் மீது அது விதியாகும்.

இவ்விதிகளைப் பொருத்தமட்டில் கால் நடைகள் (ஆடு மாடு ஒட்டகம்) நாணயங்கள் (தங்கம் வெள்ளி) வியாபாரப் பொருட்கள் விவசாயப் பொருட்கள் (பயிர்ச் செய்கை விலங்கு வளர்ப்பு) கனிய மற்றும் கடற் பொருட்கள் வருமானம் தரும் நிலையான சொத்துக்கள் (வாடகைக்கு விடப்படும் கட்டிடங்கள் போன்றன) உத்தியோகங்களும் சுதந்திர தொழில்களும் என்பன ஸகாத் கடமைக்கு உட்படக் கூடியவையாக இனங்கானப்படுகின்றன.

ஸகாத் யாருக்கு வழங்கப்படவேண்டும் என்பதைப் பற்றி அல்-குர்ஆன் தெளிவாக எட்டு கூட்டத்தினை வகை செய்கின்றது.

“ஸகாத் எனும் தானங்கள் பக்கீர்களுக்கும் மிஸ்கீன்களுக்கும் அதன் உத்தியோகத்தவர்களுக்கும் இஸ்லாத்தின் பால் இனக்கமானோருக்கும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் கடன்பட்டவர்களுக்கும் அல்லாஹ்வின் பால் போராடுவதற்கும் வழிப்போக்கர்களுக்கும் உரித்தான அல்லாஹ் விதியாக்கிய கடமையாகும். அல்லாஹ் மிக அறிந்தோனும் ஞானமுடையோனுமாவான். (09:60)

இவர்களுக்கு ஸகாத் கிடைக்கப் பெறும் அதே வேளை செல்வந்தர்கள் உழைக்கும் சக்தியும் ஆற்றலும் பெற்றவர்கள் இஸ்லாத்தின் எதிரிகள் ஸகாத் கொடுப்பவரின் குடும்பத்தினர் போன்றோர் இதனைப் பெறும் தகுதி இழந்தவர்களாக இனங்கானப்படுகின்றனர்.

சேகரிப்பும் விநியோகமும்
ஸகாத் சமூகரீதியாக பல இலக்குகளைக் கொண்ட ஒரு சமூகக் கடமையாகும். ஆங்காங்கே சிலர் தனிப்பட்ட முறையில் இதனை நிறைவேற்றுவதனால் இவ்விலக்குகள் அடையப்பெறாதவாரு ஸகாத்தின் நடைமுறை யதார்த்தத்திற்கு முரணானதாகவும் அமைந்துவிடுகிறது. ஸகாத் ஸ்தாபனரீதியாக சேகரித்து விநியோகிக்ப்படக்கூடிய கடமை என்பதுவே அடிப்படையாகும்.

இஸ்லாமிய அரசின் முதல் தலைவர் நபி (ஸல்) அவர்களை நோக்கிய இறைக் கட்டளை ‘எடுத்தான்’ என்ற கருத்திலமைந்த சொல்லின் ஏவல் வினையை பயன்படுத்தி ‘எடுப்பீராக’ என ஆரம்பிக்கின்றது.

மேலும் நபி (ஸல்) அவர்கள் மற்றும் கலீபாக்கள் கால நடைமுறையாகவும் இது அமைந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் தமது காலத்தில் இப்னு மஸ்ஊத் (ரழி) அம்ருப்னு ஆஸ் (ரழி) இப்னு லுதைபா (ரழி) போன்ற பலரையும் பல பிரதேசங்களுக்கு ஸகாத் சேகரிப்புக்காக அனுப்பியுள்ளார்கள்.

ஸகாத் கூட்டாக நிறைவேற்றுவதாலேயே தகுதியான அனைவரிடமிருந்தும் அது பெறப்பட்டு அருகதையுடைய சகலருக்கும் முறையாக வழங்கப்படும் நிலை தோன்றும். மேலும் ஏழைகள் சுய கௌரவத்தோடு ஸகாத்தைப் பெறவும் சமூகரீதியான சேவைகளுக்கு ஸகாத் பயன்படுத்தப்படவும் இது வழிவகுக்கின்றது.

எனவே இலங்கை போன்ற இஸ்லாமிய அரசு எதுவுமற்ற சிறுபான்மை நாடுகளில் தேசிய மட்டத்திலும் பிரதேசவாரியாகவும் ஸகாத் சேகரிப்பு விநியோகத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இம்முயற்சி பரவலாக்கப்பட்டால் சிறுபான்மை முஸ்லிம்களின் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். இன்ஷா அல்லாஹ்

One comment

  1. dear all assalamualaikum varamathullahi va barakathuhu.please send or publish weather zakat to be paid for whatever paid last year?or only this year earned only?please share .

    vassalam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *