Featured Posts

61.நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3489

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். “மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், ஓர் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு, நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாமகிக் கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம்’ (திருக்குர்ஆன் 49:13) என்னும் இறைவசனத்தில் இடம் பெற்றுள்ள ‘ஷுவூப் சமூகங்கள்’ என்னும் சொல் பெரிய இனங்களையும் ‘கபாயில்  குலங்கள்’ என்னும் சொல், அந்த இனங்களில் உள்ள உட் பிரிவுகளையும் குறிக்கும்” என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3490

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். “இறைத்தூதர் அவர்களே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், ‘அவர்களில் இறையச்சமுடையவரே” என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘நாங்கள் இதைப் பற்றி உங்களிடம் கேட்கவில்லை” என்றனர். உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் அல்லாஹ்வின் தூதரான யூசுஃப் அவர்கள் தாம் (மக்களில் கண்ணியத்திற்குரியவர்கள்)” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3491

குலைப் இப்னு வாயில்(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகள் ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அவர்களிடம் நான், ‘நபி(ஸல்) அவர்கள் ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்களா என்று எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டதற்கு, ‘முளர் கோத்திரத்தைத் தவிர வேறெந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்? அவர்கள் நால்வர் இப்னு கினானாவின் சந்ததிகளில் ஒருவராவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3492

குலைப் இப்னு வாயில்(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகள்  அவர்கள் ஸைனப்(ரலி) என்று எண்ணுகிறேன்  என்கு அறிவித்தார்கள்.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மது சேகரித்து வைக்கப்படும்) சுரைக்காய்க் குடுவையையும், மண்சாடியையும், (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப் பீப்பாய்களையும், தார் பூசப்பட்ட பாத்திரங்களையும் (பயன்படுதத வேண்டாமென்று) தடைவிதித்தார்கள்.

நான் அவரிடம், ‘நபி(ஸல்) அவர்கள் எந்தக் கோத்திரத்தவர்களாயிருந்தார்கள் என்று எனக்குத் தெரிவியுங்கள்; அவர்கள் முளர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘முளர் கோத்திரத்தைத் தவிர வேறெந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் நாள்வர் இப்னு கினானாவின் சந்ததிகளில் ஒருவராவார்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3493

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்களை நீங்கள் சுரங்கங்களாகக் காண்கிறீர்கள். அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; மார்க்க அறிவைப் பெற்றால். இந்த (ஆட்சி அதிகாரத்தின்) விஷயத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் அவர்களில் அதிகமாக இதை வெறுப்பவர்கள் தாம்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3494

மேலும், மக்களிலேயே (மிகத்) தீயவனாக இரண்டு முகங்கள் கொண்டவனை நீங்கள் காண்பீர்கள். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும் அவர்களிடம் மற்றொரு முகத்துடனும் செல்வான். என அபூ ஹுரைரா(ரலி அறிவித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3495

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அனைவரும் இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷிகளைப் பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களில் முஸ்லிமாயிருப்பவர் குறைஷிகளில் முஸ்லிமாயிருப்பவரைப் பின்பற்றுபவராவார். மக்களில் உள்ள இறைமறுப்பாளர் குறைஷிகளில் உள்ள இறை மறுப்பாளரைப் பின்பற்றுபவராவார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3496

மக்கள் சுரங்கங்கள் ஆவர். அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாக இருந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் அவர்களில் சிறந்தவர்களாக இருப்பார்கள்; அவர்கள் மார்க்க அறிவைப் பெற்றால், இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் (வேறுவழியின்றி) சிக்கிக் கொள்ளும்வரை அதைக் கடுமையாக வெறுப்பவரையே மக்களில் சிறந்தவராக நீங்கள் காண்பீர்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3497

தாவூஸ்(ரஹ்) அறிவித்தார். “இந்தப் பணிக்காக உங்களிடமிருந்து எந்த ஊதியத்தையும் நான் கேட்கவில்லை. ஆயினும், உறவுமுறையை நீங்கள் பேணி நடக்கவேண்டும் என்று விரும்புகிறேன்” என்னும் (திருக்குர்ஆன் 42:23) இறை வசனத்தைக் குறித்து (இதன் கருத்து என்ன என்று) இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது (அங்கிருந்த) ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்), ‘இதன் பொருள், ‘ஆயினும் என் உறவினர்களிடம் நீங்கள் அன்பு பாராட்டவேண்டும் என்று விரும்புகிறேன்’ என்பதாகும்” என்று பதிலளித்தார். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) ‘குறைஷிகளின் எந்தக் கிளைக் குலத்திற்கும் நபி(ஸல்) அவர்களுடன் உறவுமுறை இல்லாமல் இருந்ததில்லை. எனவே, ‘(குறைந்த பட்சம்) எனக்கும் உங்களுக்கும் இடையிலான அந்த உறவு முறையயாவது பேணி நடக்கும் படி உங்களைக் கேட்கிறேன்” என்னும் பொருளில் தான் இந்த இறைவசனம் அருளப்பட்டது” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3498

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இங்கிருந்து தான்  கிழக்கு திசையிலிருந்து தான்  குழப்பங்கள் தோன்றும் ஒட்டகங்கள் மற்றும் மாடுகளின் வால்களைப் பிடித்து இழுத்துச் சென்று கொண்டிருக்கும் (தங்கள் உலக வேலைகளில் மூழ்கியுள்ள) ‘ரபீஆ’ மற்றும் ‘முளர்’ ஆகிய குலங்களைச் சேர்ந்த கிராமவாசிகளான நாடோடிகளிடையே தான் கல்மனமும கடின சித்தமும் காணப்படும்.என அபூ மஸ்வூத் அல் அன்சாரி(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3499

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பெருமையும் கர்வமும் கிராமவாசிகளான நாடோடிகளிடையே காணப்படும். ஆடு மேய்ப்பவர்களிடையே அமைதியும் பணிவும் காணப்படும். இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். மதி நுட்பமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.

அபூ அப்தில்லாஹ் புகாரியாகிய நான் கூறுகிறேன்: ‘யமன்’ நாடு கஅபாவுக்கு வலப் பக்கம் அமைந்திருப்பதால் தான் அதற்கு ‘யமன்’ என்று பெயரிடப்பட்டது. ‘ஷாம்’ நாடு கஅபாவின் இடப்பக்கம் அமைந்துள்ளது. ‘மஷ்அமா’ என்பதற்கு ‘மய்ஸ்ரா’ இடது என்று பொருள். இடக்கரத்திற்கு ‘ஷுஃமா’ என்பர். இடப் பக்கத்திற்கு ‘அல் அஷ்அம்’ என்பர்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3500

முஹம்மது இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அறிவித்தார். முஆவியா(ரலி) அவர்களிடம் குறைஷிகளின் ஒரு தூதுக் குழுவில் ஒருவனாக நான் வருகை தந்திருந்தபோது அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி), ‘கஹ்தான் குலத்திலிருந்து மன்னர் ஒருவர் தோன்றுவார்” என்று அறிவிப்பதாகச் செய்தி வந்தது. முஆவியா(ரலி) கோபமடைந்து எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுடைய தகுதிப் படியுள்ள வர்ணனைகளால் புகழ்ந்துவிட்டு பின்னர், ‘இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்பு கூறுகிறேன். உங்களில் சிலர், அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத, அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அறிவிக்கப்படாத செய்திகளைப் பேசுவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் உங்களிடையேயுள்ள அறியாதவர்கள் ஆவர். வழி கெடுத்து விடுகிற வெற்று நம்பிக்கைகளைக் குறித்து நான் உங்களை எச்சரிக்கிறேன் ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், ‘இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும். அவர்களுடன் (அது தொடர்பாகப் பகைமை பாராட்டுவோர் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்த்தே தீருவான். மார்க்கத்தை அவர்கள் நிலைநாட்டி வரும் வரை இந்நிலை நீடிக்கும்” என்று கூற கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3501

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை. என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3502

ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) கூறினார். நானும் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களும் நடந்து (நபி(ஸல்) அவர்களிடம் நீதி பெறச்) சென்றோம். உஸ்மான்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! முத்தலிபின் மக்களுக்கு நீங்கள் கொடுத்தீர்கள். எங்களைவிட்டு விடாதீர்களே! நாங்களும் அவர்களும் உங்களுக்கு ஒரே விதமான (உறவு) நிலையில் தானே இருக்கிறோம்” என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘பனூ ஹாஷிமும் (ஹாஷிம் கிளையாரும்) பனூ முத்தலிபும் (முத்தலிப் கிளையாரும்) ஒருவர் தாம் (வௌ;வேறல்லர்)” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3503

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த சிலருடன் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றார்கள். ஆயிஷா(ரலி), பனூ ஸுஹ்ரா கிளையினருக்கு அல்லாஹ்வின் தூதருடன் இருந்த உறவு முறையின் காரணத்தால் அவர்களின் மீது மிகவும் இரக்கத்துடன் நடந்து கொள்வார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3504

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். குறைஷிகளும், அன்சாரிகளும் ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், அஷ்ஜஉ மற்றும் கிஃபார் குலத்தாரும் என் பிரத்யேக உதவியாளர்கள். அவர்களுக்கு அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் தவிர வேறு பொறுப்பாளர் எவரும் இல்லை. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3505

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்: ஆயிஷா(ரலி) அவர்களுக்கு, நபி(ஸல்) மற்றும் அபூ பக்ர்(ரலி) ஆகியோருக்கு அடுத்தபடியாக, (தம் சகோதரி அஸ்மாவின் மகன் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) மீது எல்லா மனிதர்களை விடவும் அதிகமான பிரியம் இருந்தது. மக்களிலேயே அதிகமாக ஆயிஷா(ரலி) அவர்களுக்கு நன்மை புரியக் கூடியவராக அப்துல்லாஹ் இருந்தார். ஆயிஷா(ரலி), தம்மிடம் வருகிற அல்லாஹ்வின் கொடை எதையும் தன்னிடமே வைத்துக் கொள்ளாமல் தர்மம் செய்து விடுவது வழக்கம். எனவே, அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ‘ஆயிஷா(ரலி) அவர்களின் கரத்தை (தர்மம் செய்ய விடாமல்) பிடித்துக் கொள்வது அவசியம்” என்று கூறினார்கள். அதனால் அவர்கள் (கோபமுற்று), ‘(தர்மம் செய்ய விடாமல்) என் கையைப் பிடித்துக் கொள்வதா? (இனி அப்துல்லாஹ்வுடன் பேச மாட்டேன்.) அவருடன் (என் சபதத்தை மீறி) நான் பேசினால் (சத்தியத்தை முறித்த குற்றத்திற்காக) நான் பரிகாரம் செய்ய நேரிடும்” என்று கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), (ஆயிஷா(ரலி) அவர்களின் கோபத்தைத் தணித்து அவர்களைத் தம்முடன் பேசச் செய்வதற்காக) (அன்னை) ஆயிஷாவிடம் தனக்காகப் பரிந்துரை செய்யும் படி குறைஷிகள் சிலரையும் குறிப்பாக, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தாய் மாமன்மார்களையும் கேட்டுக் கொண்டார்கள். (அவர்கள் பரிந்துரை செய்தும்) ஆயிஷா(ரலி) பேச மறுத்துவிட்டார்கள். எனவே, அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னி அப்து யகூஸ் மற்றும் மிஸ்வர் இப்னு மக்ரமா உள்ளிட்ட நபி(ஸல்) அவர்களின் தாய் மாமன்களான பனூ ஸுஹ்ரா கிளையினர் அப்துல்லாஹ்விடம், ‘நாங்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் உள்ளே வர அனுமதி கேட்டுக் கொண்டிருக்கும் போதே நீங்கள் திரையைக் கடந்து (அனுமதி பெறாமலே) சென்று விடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களும் செய்தார்கள். பிறகு (அயிஷா (ரலி) அவர்களும் ஒப்புக் கொண்டு பேசிவிட்டார்கள். அவர்களின் சத்தியம் முறிந்து போனதற்குப் பரிகாரமாக) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) ஆயிஷா(ரலி) அவர்களிடம் பத்து அடிமைகளை (விடுதலை செய்வதற்காக) அனுப்பி வைத்தார்கள். அவர்களை ஆயிஷா(ரலி) விடுதலை செய்துவிட்டார்கள். பிறகு (இது போதுமான பரிகாரம் ஆகாதோ என்ற எண்ணத்தில்) தொடர்ந்து நாற்பது எண்ணிக்கையை அடையும் வரை அடிமைகளை விடுதலை செய்து கொண்டேயிருந்தார்கள். இறுதியில், நான் (அப்துல்லாஹ்வுடன் பேசமாட்டேன் என்று) சத்தியம் செய்த போதே, ‘என் சத்தியம் முறிந்து போனால் அதற்குக் குறிப்பிட்ட பரிகாரத்தைச் செய்வேன்’ என்று முடிவு செய்துவிட்டிருந்தால் அதை மட்டும் செய்து பொறுப்பிலிருந்து விடுபட்டிருப்பேன்” (“இன்ன பரிகாரம் என்று குறிப்பிட்டு முடிவு செய்யாததால் இவ்வளவு செய்தும் இந்த அளவு பரிகாரம் நிவர்த்தியானதோ இல்லையோ என்ற சந்தேகம் இன்னும் என்னை வாட்டுகிறது”) என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3506

அனஸ்(ரலி) அறிவித்தார உஸ்மான்(ரலி) (அன்னை ஹஃப்ஸாவிடமிருந்து குர்ஆன் பதிவுகளை வாங்கிவரச் செய்து) ஸைத் இப்னு ஸாபித், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர், ஸயீத் இப்னு ஆஸ், அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரை அழைத்து, (அவற்றைப் பிரதியெடுக்கப் பணித்தார்கள்.) அவர்கள் ஏடுகளில் அவற்றைப் பிரதியெடுத்தார்கள். உஸ்மான்(ரலி) (அன்சாரியான ஸைத் இப்னு ஸாபித் தவிரஉள்ள) குறைஷிகளின் மூன்று பேர் கொண்ட அந்தக் குழுவிடம், ‘நீங்கள் மூவரும் ஸைத் இப்னு ஸாபித்தும் குர்ஆனின் ஏதேனும் ஒரு (எழுத்து இலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறைஷிகளின் மொழி வழக்கிலேயே அதை எழுதுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷிகளின் மொழி வழக்கில் தான் இறங்கியது” என்று கூறினார்கள். அக்குழுவினரும் அவ்வாறே செய்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3507

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார். அஸ்லம் கூட்டத்தார் கடைவீதியில் அம்பெறிந்து (விளையாடிக்) கொண்டிருக்கையில் (அவ்வழியாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டு வந்தார்கள். அதைக் கண்டதும், ‘இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெறியுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை(யான இஸ்மாயீல் -அலை- அவர்கள்) அம்பெறிபவராக (வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவராக) இருந்தார்கள். ‘நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்” என்று இருதரப்பினரில் ஒரு தரப்பாரைக் குறிப்பிட்டுக் கூறினார்கள். உடனே மற்றொரு தரப்பினர் (விளையாட்டைத் தொடராமல்) நிறுத்திவிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இவர்களுக்கென்ன நேர்ந்தது?’ என்று கேட்க, அவர்கள், ‘நீங்கள் இன்ன குலத்தாரோடு இருக்க, நாங்கள் எப்படி அம்பெறிவோம்?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(தொடர்ந்து) அம்பெறியுங்கள். நான் உங்கள் ஒவ்வொருவருடனும் இருக்கிறேன்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3508

தன் தந்தை அல்லாத (ஒரு)வரை (அவர் தன் தந்தையல்ல என்று) விவரம் அறிந்து கொண்டே ‘அவர்தான் என் தந்தை” என்று கூறும் ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவனாகிறான். தனக்கு வமிசாவளித் தொடர்பு இல்லாத ஒரு குலத்தைக் குறித்து, தான், அந்தக் குலத்தைச் சேர்ந்தவன் தானென தன்னைப் பற்றிக் கூறிக் கொள்பவன், தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ தர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3509

‘பொய்களிலேயே மிகப் பெரும் பொய், ஒரு மனிதன் தன்னைத் தன் தந்தையல்லாதவருடன் இணைத்து (நான் அவரின் மகன் என்று) கூறுவதும், தன் கண்கள் பார்க்காத ஒன்றை (ஒரு கனவை) அவை பார்த்தாகக் கூறுவதும், இறைத்தூதர் சொல்லாத ஒன்றை அவர்கள் சொன்னதாகச் சொல்வதும் ஆகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என வாஸிலா இப்னு அல் அஸ்கவு(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3510

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு ஒன்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தது. அக்குழுவினர், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ரபீஆ குலத்தாரின் இந்தக் குடும்பத்தினர் ஆவோம். உங்களைச் சந்திக்கவிடாமல் ‘முளர்’ குலத்து இறை மறுப்பாளர்கள் எங்களைத் தடை செய்கிறார்கள். எனவே, (போர் நிறுத்தம் செய்யப்படுகின்ற) ஒவ்வொரு புனித மாதத்திலும் தான் நாங்கள் உங்களிடம் வந்து சேர முடிகிறது. எனவே, (இப்போது) நீங்கள் எங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை உங்களிடமிருந்து நாங்கள் எடுத்துக் கொள்வோம். எங்களுக்கு அப்பாலிருப்பவர்களிடம் அதை எடுத்துரைப்போம்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘உங்களுக்கு நான்கு விஷயங்களைச் செய்யும்படி கட்டளையிட்டு, நான்கு விஷயங்களைச் செய்ய வேண்டாமென்று தடுக்கிறேன். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது,  வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை’ என்று உறுதி கூறுவது,  தொழுகையை நிலைநிறுத்துவது, ஸகாத் கொடுப்பது, உங்களுக்குப் போரில் கிடைத்த செல்வத்திலிருந்து ஐந்தில் ஒரு பங்கை அல்லாஹ்வுக்குச் செலுத்தி விடுவது ஆகியன தாம் நான் கட்டளையிடும் அந்த நான்கு விஷயங்கள். மேலும், (மது சேகரித்து வைக்கப்படும்) கரைக்காய்க் குடுவை, மண் சாடி, (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப் பீப்பாய்கள் மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரங்கள் ஆகியவற்றை (உபயோகிக்க வேண்டாமென்று) உங்களுக்குத் தடை செய்கிறேன்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3511

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மிம்பரின் (உரை மேடையின்) மீதிருந்தபடி, ‘தெரிந்து கொள்ளுங்கள்: குழப்பம், இங்கே ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து தான் தோன்றும்” என்று கிழக்குத் திசையை நோக்கி சைகை செய்தபடிக் கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3512

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். குறைஷிகளும், அன்சாரிகளும் ஜுஹைனா குலத்தாரும், முஸைனா குலத்தாரும், அஸ்லம் குலத்தாரும், கிஃபார் குலத்தாரும், அஷ்ஜஉ குலத்தாரும் (இஸ்லாத்தை முதலில் தழுவிய காரணத்தால்) என் பிரத்தியேகமான உதவியாளர்கள் ஆவர். அவர்களுக்கு அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் அன்றி பொறுப்பாளர்கள் வேறெவரும் இலர்.என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3513

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மிம்பரின் (உரை மேடையின்) மீதிருந்தபடி, ‘கிஃபார்’ குலத்தை அல்லாஹ் மன்னிப்பானாக! ‘அஸ்லம்’ குலத்தை அல்லாஹ் (போரை விரும்பாத) அமைதி விரும்பியாக ஆக்குவானாக! ‘உஸைய்யா’ குலம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டது” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3514

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அஸ்லம் குலத்தை அல்லாஹ் அமைதி விரும்பியாக ஆக்குவானாக! கிஃபார் குலத்தை அல்லாஹ் மன்னிப்பானாக! என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3515

அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்: ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், கிஃபார் ஆகிய குலத்தார் பனூ தமீம், பனூ அஸத், பனூ அப்தில்லாஹ் இப்னி கத்ஃபான் மற்றும் பனூ ஆமிர் இப்னு ஸஅஸஆ ஆகிய குலங்களை விடச் சிறந்தனவாக உள்ளனவா என்று எனக்குத் தெரிவியுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது ஒருவர் (அக்ரஉ இப்னு ஹாபிஸ்(ரலி)), ‘அவர்கள் நஷ்டமடைந்தார்கள்; இழப்புக்குள்ளானார்கள்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(இல்லை;) அவர்கள் (ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், கிஃபார் ஆகிய குலங்கள் இஸ்லாத்தை முதலில் தழுவிய காரணத்தால்), பனூ தமீம், பனூ அஸத், பனூ அப்தில்லாஹ் இப்னி ஃகத்ஃபான் மற்றும் பனூ ஆமிர் இப்னு ஸஅஸஆ ஆகியவர்களை விடச் சிறந்தவர்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3516

அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். அக்ராஉ இப்னு ஹாபிஸ்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், ‘தங்களிடம் (இஸ்லாத்தை ஏற்றதாக) உறுதிமொழி கொடுத்தவர்கள் எல்லாம் ஹஜ் செய்ய வருபவர்களிடம் திருடியவர்களான அஸ்லம், கிஃபார் மற்றும் முஸைனா குலங்களைச் சேர்ந்தவர்கள் தாம்” என்று கூறினார்கள். ’மற்றும் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்தவர்களும்’ என்றும் (நபியவர்கள் கூறினார்கள் என) அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரா அறிவித்தார் என்று மற்றோர் அறிவிப்பாளரான முஹம்மத் இப்னு அபீ யஅகூப் சந்தேகத்துடன் கூறுகிறார்

நபி(ஸல்) அவர்கள், ‘பனூ தமீம், பனூ ஆமிர், பனூ அஸத், மற்றும் பனூ கத்ஃபான் ஆகிய குலங்களை விட அஸ்லம், கிஃபார் மற்றும் முஸைனா குலத்தார் சிறந்தவர்கள் அல்லவா? அவர்கள் நஷ்டமும் இழப்பும் அடைந்துவிட்டார்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அக்ரஉ இப்னு ஹாபிஸ்(ரலி), ‘ஆம்” என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (அஸ்லம், கிஃபார், முஸைனா மற்றும் ஜுஹைனா ஆகிய குலத்தினரான) இவர்கள் (பனூ தமீம், பனூ ஆமிர், பனூ அஸத் மற்றும் பனூ கத்ஃபான் ஆகிய) அவர்களை விடச் சிறந்தவர்களே” என்று கூறினார்கள். (அஸ்லம், கிஃபார், முஸைனா குலத்தாருடன்) ஜுஹைனா குலத்தாரையும் சேர்த்துக் குறிப்பிட்டதாக நினைக்கிறேன் என அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு அபீ யஅகூப்(ரஹ்) கூறினார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3516

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அஸ்லம், கிஃபார் ஆகிய குலங்களும் முஸைனா மற்றும் ஜுஹைனா ஆகிய குலங்களில் சிலரும்  அல்லது ஜுஹைனா அல்லது முஸைனா ஆகிய குலங்களில் சிலரும் அல்லாஹ்விடம் அல்லது மறுமை நாளில் அஸத், தமீம், ஹவாஸின் மற்றும் கத்ஃபான் ஆகிய குலங்களை விடச் சிறந்தவர்கள்என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3517

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” கஹ்தான் குலத்திலிருந்து ஒருவர் மக்களைத் தம் கைத்தடியால் ஓட்டிச் செல்பவராகத் தோன்றாதவரை உலக முடிவு நாள் வராதுஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3518

ஜாபிர்(ரலி) கூறினார்: நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பனூ முஸ்தலிக்) புனிதப் போருக்குச் சென்றோம். நபியவர்களுடன் முஹாஜிர்களும் ஒருவர் இருவராகப் புறப்பட்டு நிறையப் பேராகிவிட்டனர். முஹாஜிர்களிடையே விளையாட்டுக்காட்டும் ஒருவர் இருந்தார். அவர் அன்சாரி ஒருவரின் புட்டத்தில் (விளையாட்டாக) அடித்துவிட்டார். எனவே, அந்த அன்சாரி கடும் கோபம் அடைந்தார். (தகராறு முற்றி) இருவரும் தத்தம் குலத்தாரை உதவிக்கு அழைத்தார்கள். அன்சாரி, ‘அன்சாரிகளே!” என்றழைத்தார். முஹாஜிர், ‘முஹாஜிர்களே!” என்றழைத்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வெளியே வந்து, ‘அறியாமைக் கால மக்களின் அழைப்பு இங்கே கேட்கிறதே, ஏன்?’ என்று கேட்டுவிட்டு, ‘அவ்விருவரின் விவகாரம் என்ன?’ என்று கேட்டார்கள். முஹாஜிர், அன்சாரியைப் புட்டத்தில் அடித்தது. நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இந்த அறியாமைக் கால அழைப்பைவிட்டு விடுங்கள். இது அருவருப்பானது” என்று கூறினார்கள். (நயவஞ்சகர்களின் தலைவனான) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல், ‘நமக்கெதிராக (இந்த அகதிகளான முஹாஜிர்கள் தம் குலத்தாரிடம்) உதவி கேட்டு அழைத்தார்களா?’ நாம் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால் வலிமையுள்ளவர்கள் நகரத்திலிருந்து இழிந்தவர்களை வெளியேற்றி விடுவார்கள்” என்று (விஷமமாகச்) சொன்னான். உடனே உமர்(ரலி), ‘இந்தத் தீயவனை நாம் கொன்று விட வேண்டாமா? இறைத்தூதர் அவர்களே!” என்று அப்துல்லாஹ் இப்னு உபையைக் குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(அவனைக்) கொல்ல வேண்டாம். மக்கள், ‘முஹம்மது தன் தோழர்களை கூட கொல்கிறார்” என்று பேசுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3519

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (துக்கத்தில்) கன்னங்களில்) அறைந்து கொள்பவனும் சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் கால அழைப்பை விடுப்பவனும் நம்மைச் சேர்ந்தவனல்லன் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3520

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அம்ர் இப்னு லுஹை இப்னி கம்ஆ இப்னி கிந்திஃப் என்பவர் தம் குஸாஆ குலத்தாரின் தந்தையாவார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3521

ஸயீத் இப்னு அல்முஸய்யப்(ரஹ்) கூறினார்: ‘அல் பஹீரா’ என்பது (ஒட்டகங்களில்) எதனுடைய பாலை(க் கறக்கலாகாது என்று) ஷைத்தான்களுக்காகத் தடை செய்யப்பட்டு விடுமோ அந்த ஒட்டக(த்தின் நாம)மாகும். அதன் பாலை மக்களில் எவருமே கறக்க மாட்டார்கள். ‘சாயிபா’ என்பது அரபுகள் தங்கள் கடவுள்களுக்காக (நேர்ச்சை செய்து) மேயவிட்ட ஒட்டகமாகும். எனவே, அதன் மீது சுமை எதுவும் சுமத்தப்படாது.

மேலும், நபி(ஸல்) அவர்கள், ‘குஸாஆ குலத்தைச் சேர்ந்த அம்ர் இப்னு ஆமிர் இப்னி லுஹை என்பவரை, நரகத்தில் தன் குடலை இழுத்துச் சென்று கொண்டிருக்கக் கண்டேன். அவர்தான் முதன் முதலில் ‘சாயிபா’ ஒட்டகங்களை (சிலைகளுக்காக) நேர்ந்து (மேய்ந்து கொண்டிருக்கும்படி) விட்டவர்” என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3522

அபூ ஜம்ரா(ரஹ்) அறிவித்தார்: எங்களிடம் இப்னு அப்பாஸ்(ரலி), ‘அபூ தர்(ரலி) இஸ்லாத்தைத் தழுவிய விதம் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?’ என்று கேட்க, நாங்கள், ‘சரி (அறிவியுங்கள்)” என்றோம். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அபூ தர்(ரலி) (என்னிடம்) கூறினார்கள்: நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தேன். அப்போது ‘ஒருவர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார்’ என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, நான் என் சகோதரர் (அனீஸ்) இடம், ‘நீ இந்த மனிதரிடம் போய்ப் பேசி அவரின் செய்தியை (அறிந்து) என்னிடம் கொண்டு வா” என்று சொன்னேன். அவ்வாறே அவர் சென்று அவரைச் சந்தித்துப் பிறகு திரும்பி வந்தார். நான், ‘உன்னிடம் என்ன செய்தி உண்டு” என்று கேட்டேன். ‘நன்மை புரியும்படி கட்டளையிடவும் தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கிற ஒரு மனிதராக அவரைக் கண்டேன்” என்றார். நான் அவரிடம், ‘போதிய செய்தியை எனக்கு நீ கொண்டுவரவில்லை” என்று கூறினேன். பிறகு தோலினால் ஆன (தண்ணீர்ப்)பையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றேன்.

அவரை நான் (தேடி வந்திருப்பதாகக்) காட்டிக் கொள்ளாமலிருக்கத் தொடங்கினேன். அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்பவில்லை. (வேறு உணவு இல்லாததால்) ஸம் ஸம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இறையில்லத்தில் (தங்கி) இருந்தேன். அப்போது அலீ(ரலி) (கஅபாவில்) என்னைக் கடந்து சென்றார். (என்னைக் கண்டதும்), ‘ஆள் (ஊருக்குப்) புதியவர் போன்று தெரிகிறதே” என்று கேட்டார். நான், ‘ஆம்’ என்றேன். உடனே அவர்கள், ‘அப்படியென்றால் (நம்) வீட்டிற்கு நடங்கள் (போகலாம்)’ என்று கூறினார்கள். நான் அவர்களுடன் எதைப் பற்றியும் கேட்காமலும் (எதையும்) அவர்களுக்குத் தெரிவிக்காமலும் சென்றேன். காலையானதும நபி(ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால், (அங்கு) ஒருவரும் அவர்களைப் பற்றி விசாரிக்க(அங்கு) ஒருவரும் அவர்களைப் பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அப்போது அலீ(ரலி) என்னைக் கடந்து சென்றார்கள். ‘மனிதர் (தான் தங்க வேண்டியுள்ள) தன் வீட்டை அடையாளம் தெரிந்து கொள்ளும் நேரம் இன்னும் வரவில்லையா?’ என்று (சாடையாகக்) கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்றேன். உடனே, அலீ(ரலி), ‘என்னுடன் நடங்கள்’ என்று சொல்லிவிட்டு, ‘உங்கள் விவகாரம் என்ன? இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு, ‘நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்பதாயிருந்தால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்” என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், ‘அவ்வாறே செய்கிறேன்” என்று கூறினார்கள். நான் அப்போது ‘இங்கே தம்மை இறைத்தூதர் என்று வாதிட்டபடி ஒருவர் புறப்பட்டிருக்கிறார்’ என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, நான் என் சகோதரை அவரிடம் பேசும்படி அனுப்பினேன். போதிய பதிலை என்னிடம் அவர் கொண்டு வரவில்லை. எனவே, நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க விரும்பினேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘நீங்கள் நேரான வழியை அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். எனவே, என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்கள் நுழையுங்கள். ஏனெனில், (என்னுடன் வருவதால்) இவனால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகிற ஒருவனைக் காண்பேனாயின், என் செருப்பைச் சரி செய்பவனைப் போல் சுவரோராமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் போய்க் கொண்டிருங்கள்” என்று கூறினார்கள். இறுதியில், அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘எனக்கு இஸ்லாத்தை எடுத்துரையுங்கள்” என்று சொன்னேன். அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் இருந்த அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அபூ தர்ரே! (நீ இஸ்லாத்தை ஏற்ற) இந்த விஷயத்தை மறைத்து வை. உன் ஊருக்குத் திரும்பிச் செல். நாங்கள் மேலோங்கிவிட்ட செய்தி உனக்கு எட்டும்போது எங்களை நோக்கி வா” என்று கூறினார்கள். அதற்கு நான், ‘உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக்கிடையே உரக்கச் சொல்வேன்” என்று சொல்லிவிட்டு, இறையில்லத்திற்கு வந்தேன். அப்போது குறைஷிகள் அங்கே இருந்தனர். நான், ‘குறைஷிக் குலத்தாரே!” அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை’ என்று நான் உறுதி கூறுகிறேன். ‘முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும அவனுடைய தூதரும் ஆவார்’ என்றும் நான் உறுதி கூறுகிறேன்” என்று சொன்னேன். உடனே, அவர்கள் ‘இந்த மதம் மாறி(ய துரோகி)யை எழுந்து சென்று கவனியுங்கள்” என்று கூறினார்கள். அவர்கள் எழுந்து வந்தார்கள். என் உயிர் போவது போல் நான் அடிக்கப்பட்டேன். அப்போது அப்பாஸ்(ரலி) என்னை அடையாளம் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாமல் பார்த்துக்) கொண்டார்கள். பிறகு குறைஷிகளை நோக்கி, ‘உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! கிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் (வாணிபத்திற்காகக்) கடந்து செல்ல வேண்டிய பாதையும் கிஃபார் குலத்தவர் வசிக்குமிடத்தையொட்டித் தானே உள்ளது! (அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?)” என்று கேட்டார்கள். உடனே, அவர்கள் என்னைவிட்டு விலகிவிட்டார்கள். மறுநாள் காலை வந்தவுடன் நான் திரும்பிச் சென்று நேற்று சொன்னதைப் போன்றே சொன்னேன். அவர்கள், ‘இந்த மதம் மாறி(ய துரோகி)யை எழுந்து சென்று கவனியுங்கள்” என்று கூறினார்கள். நேற்று என்னிடம் நடந்து கொண்டதைப் போன்றே நடந்து கொண்டார்கள். அப்பாஸ்(ரலி) என்னைப் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாதவாறு பார்த்துக்) கொண்டார்கள். நேற்று அப்பாஸ் அவர்கள் சொன்னதைப் போன்றே (அன்றும்) கூறினார்கள்.

(இதை அறிவித்து பிறகு) இப்னு அப்பாஸ்(ரலி), ‘இது அபூதர்(ரலி) இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்பக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். அல்லாஹ் அபூதருக்கு கருணை காட்டுவானாக!” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3523

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அஸ்லம் குலத்தாரும், கிஃபார் குலத்தாரும், முஸைனா குலத்தவரிலும் ஜுஹைனா குலத்தவரிலும் சிலரும் அஸத், தமீம், ஹவாஸின் மற்றும் கத்ஃபான் ஆகிய குலத்தினரை விட அல்லாஹ்விடம் அல்லது மறுமை நாளில். சிறந்தவர்கள்.

இதை அறிவித்த அபூ ஹுரைரா(ரலி), ‘முஸைனா குலத்தவரிலும் ஜுஹைனா குலத்தவரிலும் சிலரும்” என்றும் கூறியிருக்கலாம்; (அதற்கு பதிலாக) ‘ஜுஹைனா குலத்தவரில் சிலரும்” என்று மட்டுமோ ‘முஸைனா குலத்தவரில் சிலரும்” என்று மட்டுமோ கூறியிருக்கலாம் என்று அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு சிரீன்(ரஹ்) கூறினார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3524

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்: அரபுகளின் அறியாமையை அறிந்து கொள்ள உங்களுக்கு விருப்பமென்றால் ‘அல் அன்ஆம்’ (என்னும் 6-வது) அத்தியாயத்தில் நூற்றி முப்பதாவது வசனத்திற்கு மேல் ஓதுங்கள். அந்த வசனம் இதுதான்: அறியாமையினாலும், மூடத்தனத்தினாலும் தம் குழந்தைகளை கொன்றுவிட்டு, அல்லாஹ்வின் மீது பழி சுமத்தி தங்களுக்கு வழங்கியிருந்தவற்றைத் தாங்களாகவே தடை செய்தவர்கள் நிச்சயமாகப் பேரிழப்புக்கு ஆளாகிவிட்டார்கள். நிச்சயமாக அவர்கள் வழிதவறிப் போய்விட்டார்கள். அவர்கள் நேர்வழி பெற்றவர்களாய் இல்லை. (திருக்குர்ஆன் 06:140)

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3525

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்: ‘(நபியே!) உங்கள் நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!” என்னும் (திருக்குர்ஆன் 26:214) இறைவசனம் அருளப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், ‘பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!” என்று குறைஷிகளின் கிளைக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3526

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: “(நபியே!) உங்கள் நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!” என்னும் (திருக்குர்ஆன் 26:214) இறைவசனம் அருளப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் குலங்கள் குலங்களாக (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3527

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தூதருடைய அத்தையான ஸுபைர் இப்னு அவ்வாமின் தாயாரே! முஹம்மதின் மகளான ஃபாத்திமாவே! நீங்கள் இருவரும் உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். நான் உங்கள் இருவருக்கும் அல்லாஹ்விடமிருந்து எதையும் வாங்கித் தர முடியாது. என் செல்வத்திலிருந்து இருவரும் நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள். (நான் உங்களுக்குத் தருகிறேன்.) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3528

அனஸ்(ரலி) அறிவித்தார். (ஏதோ பேசுவதற்காக ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளைத் (தனியாக) அழைத்தார்கள். (அவர்கள் வந்த) பின்னர், ‘உங்களிடையே எவரேனும் உங்கள் (கூட்டாத்தார்) அல்லாதவர் (இங்கே வந்து) இருக்கிறாரா?’ என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள், ‘எங்கள் சகோதரி ஒருத்தியின் மகனை (நுஃமான் இப்னு முக்ரினை)த் தவிர வேறெவருமில்லை” என்று பதிலளித்தார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஒரு சமுதாயத்தினரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவரே” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3529

ஆயிஷா(ரலி) அறிவித்தார்: அபூ பக்ர்(ரலி) (ஒரு முறை) என்னிடம் வந்தார்கள். அப்போது இரண்டு சிறுமிகள் என்னிடம் (தஃப் எனப்படும்) சலங்கைகள் இல்லாத கஞ்சிராவைத் தட்டி பாடிக் கொண்டிருந்தார்கள். அது, மினாவில் தங்கும் (காலமான துல்ஹஜ் 10, 11, 12, 13 ஆகிய) நாள்களில் (ஒன்றாக) இருந்தது. நபி(ஸல்) அவர்கள் (படுக்கையில் படுத்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டு) தம் துணியால் போர்த்திக் கொண்டிருந்தார்கள். எனவே, அபூ பக்ர்(ரலி) இரண்டு சிறுமிகளையும் அதட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்திலிருந்து (ஆடையை) நீக்கிவிட்டு, ‘அவ்விருவரையும்விட்டு விடுங்கள், அபூ பக்ரே! ஏனெனில், இவை பண்டிகை நாள்கள்” என்று கூறினார்கள். அந்த நாள்கள் மினாவில் தங்கும் நாள்களாயிருந்தன.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3530

ஆயிஷா(ரலி) அறிவித்தார்: அபிசீனியர்கள் பள்ளிவாசலில் (வீர விளையாட்டுகள்) விளையாடுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க, நபி(ஸல்) அவர்கள் (அவர்களின் பார்வையிலிருந்து) என்னை மறைப்பதை கண்டேன். அப்போது உமர்(ரலி) அபிசீனியர்களைக் கண்டித்து தடுத்தார்கள். இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘அவர்களைவிட்டுவிடுங்கள். நீங்கள் அச்சமின்றி இருங்கள், அர்ஃபிதாவின் மக்களே!” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3531

ஆயிஷா(ரலி) அறிவித்தார்: (முஸ்லிம்களுக்கெதிராக இணைவைப்பவர்கள் வசை பாடிய போது) இணைவைப்பவர்களுக்கு எதிராக வசைக் கவிதைபாடுவதற்கு நபி(ஸல்) அவர்களிடம் (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அனுமதி கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் என் வமிசம் (அவர்களுடன் கலந்திருக்க, அவர்களை வசை பாடுவது; எப்படி?’ என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான்(ரலி), ‘மாவிலிருந்து முடியை உருவியெடுப்பது போல் தங்களை அவர்களிலிருந்து உருவியெடுத்து (வசையிலிருந்து நீக்கி) விடுவேன்” என்று கூறினார்கள்.

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்: (ஒரு முறை) நான் ஹஸ்ஸான்(ரலி) அவர்களை ஏசிக் கொண்டே ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘அவரைத் திட்டாதே! ஏனெனில், அவர் (எதிரிகளின் வசைப் பாடல்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து) நபி(ஸல்) அவர்களைப் பாதுகாப்பவராக இருந்தார்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3532

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது – புகழப்பட்டவர்  ஆவேன். நான் அஹ்மத் – இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ – அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான். நான் ஹாஷிர் – ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள். நான்  (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன் என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3533

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்; குறைஷி (மறுப்பாளர்)களின் திட்டுதலையும், அவர்களின் சபித்தலையும் என்னைவிட்டு அல்லாஹ் எப்படி திருப்பி விடுகிறான் என்பதைக் கண்டு நீங்கள் வியப்படைய வில்லையா? (என்னை) ‘முதகிமம்’ (இகழப்படுவர்)’ என்று (சொல்லி) ஏசுகிறார்கள்; சபிக்கிறார்கள். ஆனால் நானோ ‘முஹம்மத்’ (புகழப்படுபவர்) ஆவேன்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3534

என்னுடைய நிலையும் (மற்ற) இறைத்தூதர்களது நிலையும் ஒரு வீட்டைக் கட்டிய மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் அதனை, ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும்விட்டுவிட்டு முழுமையாகவும் அழகாகவும் கட்டி முடித்திருந்தார். மக்கள் அதனுள் நுழைந்து (பார்வையிட்டுவிட்டு) வியப்படைந்து, ‘இச்செங்கல்லின் இடம் மட்டும் (காலியாக) இல்லாதிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!” என்று கூறலானார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3535

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்னுடைய நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும்விட்டுவிட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஆச்சரியடைந்து, ‘இச்செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?’ என்று கேட்கலானார்கள். நானே அச்செங்கல். மேலும், நானே இறைத் தூதர்களில் இறுதியானவன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3536

ஆயிஷா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறப்பெய்தினார்கள்.

“ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) இதே போன்ற ஹதீஸை எனக்கு அறிவித்தார்கள்” என்று இப்னு ஷிஹாப் அஸ் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3537

அனஸ்(ரலி) அறிவித்தார்: (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் சந்தையில் இருந்தார்கள். அப்போது ஒருவர், ‘அபுல் காசிமே!” என்று அழைத்தார். நபி(ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்து, ‘என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3538

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3539

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: அபுல் காசிம்(ஸல்) அவர்கள், ‘என் பெயரை (உங்களுக்குச்) சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3540

ஜுஅய்த் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்: சாயிப் இப்னு யஸீத்(ரலி) அவர்களைத் தொண்ணூற்று நான்கு வயது உடையவர்களாக, (அந்த வயதிலும்) திடகாத்திரமானவர்களாக (கூன் விழாமல்) முதுகு நிமிர்ந்தவர்களாக கண்டேன். அவர்கள், ‘எனக்குக் கேள்விப்புலன் மற்றும் பார்வைப் புலனின் நலம் அல்லாஹ்வின் தூதரின் பிரார்த்தனையால் தான் வழங்கப்பட்டுள்ளன என்பதை நான் அறிந்திருக்கிறேன். என் தாயின் சகோதரி என்னை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியின் மகன் நோயுற்றிருக்கிறார். இவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்யுங்கள்’ என்று கூறினார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் எனக்காக பிரார்த்திதார்கள்” என்று கூறினார்கள்

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3541

சாயிப் இப்னு யஸீத்(ரலி) கூறினார்: என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என் தாயின் சகோதரி அழைத்துச் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் (பாதங்களில்) நோய் கண்டுள்ளான்” என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் (இரக்கத்துடன்) என் தலையை வருடிக் கொடுத்து, என் வளத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் ‘உளூ’ செய்தார்கள். அவர்கள் உளூச் செய்த தண்ணீரை நான் சிறிது குடித்தேன். பிறகு, நான் அவர்களின் முதுகுக்குப் பின்னே நின்று, அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன்.

(நபித்துவ முத்திரை எப்படியிருந்தது என்று கேட்கப்பட்டபோது அறிவிப்பாளர்) முஹம்மத் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்), ‘குதிரையின் இருகண்களுக்கு மத்தியிலுள்ள வெண்மை போன்றிருந்தது” என்று பதிலளித்தார்கள்.

(அறிஞர்) இப்ராஹீம் இப்னு ஹம்ஸா(ரஹ்), ‘மணவறைத் திரையில் பொருத்தப்படுகிற பித்தானைப் போன்றிருந்தது” என்று கூறினார்கள்”

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3542

உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) கூறினார்; அபூ பக்ர்(ரலி) அஸர் தொழுகையைத் தொழுதார்கள். பிறகு (பள்ளிவாசலிலிருந்து) நடந்தபடி புறப்பட்டார்கள். அப்போது ஹஸன்(ரலி) அவர்களைக் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கக் கண்டார்கள். உடனே, அவர்களைத் தம் தோளின் மீது ஏற்றிக் கொண்டு, ‘என் தந்தை உனக்கு அர்ப்பணமாகட்டும்! நீ (தோற்றத்தில் உன் பாட்டனார்) நபி(ஸல்) அவர்களை ஒத்திருக்கிறாய்; (உன் தந்தை) அலீ அவர்களை ஒத்திருக்கிறாய்; (உன் தந்தை) அலீ அவர்களை ஒத்தில்லை” என்று கூறினார்கள். (அப்போது அலீ(ரலி) அபூ பக்ர்(ரலி)  அவர்களின் இந்தக் கூற்றைக் கேட்டு) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3543

அபூ ஜுஹைஃபா(ரலி) கூறினார்: நான் நபி(ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறேன். ஹஸன்(ரலி) (தோற்றத்தில்) நபி(ஸல்) அவர்களை ஒத்திருக்கிறார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3544

இஸ்மாயீல் இப்னு அபீ காலித்(ரஹ்) அறிவித்தார: “நபி(ஸல்) அவர்களை பார்த்திருக்கிறேன். அலீயின் மகன் ஹஸன் அவர்கள் அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தி பொழிவதாக! நபி(ஸல்) அவர்களை (தோற்றத்தில்) ஒத்திருந்தார்கள்” என்று அபூ ஜுஹைஃபா(ரலி) கூறினார். நான் அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்களின் தன்மையை எனக்கு கூறுங்கள்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் பொன்னிறமுடையவர்களாக, வெண்மை கலந்த கருநிற தலை முடியுடையவர்களாக இருந்தார்கள். எங்களுக்கு பதின் மூன்று பெண் ஒட்டகங்கள் தரும்படி உத்திரவிட்டார்கள். அதை நாங்கள் கைவசம் பெற்றுக் கொள்வதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3545

அபூ ஜுஹைஃபா அஸ் ஸுவாயீ(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்களை பார்த்திருக்கிறேன். அவர்களின் கீழுதட்டின் அடியிலுள்ள (தாடைக்கு மேலுள்ள) குறுந்தாடியில் நான் வெண்மையைக் கண்டேன்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3546

ஹரீஸ் இப்னு உஸ்மான்(ரஹ்) கூறினார்: நான் நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு புஸ்ர்(ரலி) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் வயது முதிர்ந்தவளாக இருக்கும் நிலையில் அவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘(நான் அவர்களைப் பார்த்த போது) அவர்களின் கீழுதட்டின் அடியில் (தாடைக்க மேலே) உள்ள குறுந்தாடியில் வெள்ளை முடிகள் இருந்தன” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3547

ரபீஆ இப்னு அபீ அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்; அனஸ்(ரலி) நபி(ஸல்) அவர்களின் உருவ அமைப்பை விவரிக்கக் கேட்டேன். அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் மக்களில் நடுத்தர உயரமுடையவர்களாக இருந்தார்கள்; நெட்டையானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை. பொன்னிறமுடையவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் சுத்த வெள்ளை நிறமுடையவர்களாகவும் இல்லை. கடும் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை. முழுக்கவே படிந்த முடியுடையவர்களாகவும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட வகை முடியை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் நாற்பது வயதுடையவர்கள் இருந்தபோது அவர்களுக்கு குர்ஆன் அருளப்படலாயிற்று. குர்ஆன் அருளப்படும் நிலையிலேயே மக்கா நகரில் பத்து ஆண்டுகள் தங்கி வசித்து வந்தார்கள். மதீனா நகரிலும் பத்து ஆண்டுகள் வசித்து வந்தார்கள். அவர்களின் தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையிலேயே இறந்துவிட்டார்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் ரபீஆ(ரஹ்) கூறினார்: நான் நபி(ஸல்) அவர்களின் முடிகளில் ஒன்றை (நபியவர்களின் மறைவுக்குப் பின்) பார்த்தேன். அது சிவப்பாக இருந்தது.) நான் (அது குறித்து, நபியவர்கள் மருதாணி பூசி இருந்தார்களா என்று) கேட்டேன். அதற்கு, ‘(நபியவர்கள் பூசிய) நறுமணப் பொருளின் காரணத்தால் அது சிவப்பாவிட்டது” என்று பதிலளிக்கப்பட்டது.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3548

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவிற்கு அதிக உயரமானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை. சுத்த வெள்ளை நிறம் உடையவர்களாகவும் இல்லை; மாநிறம் கொண்டவர்களாகவும் இல்லை; கடும் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை; (தொங்கலான) படிந்த முடியுடையவர்களாகவும் இல்லை. நாற்பது வயதின் தொடக்கத்தில் அல்லாஹ் அவர்களைத் தம் தூதராக அனுப்பினான். அதன் பிறகு, அவர்கள் மக்கா நகரில் பத்து ஆண்டுகளும் தங்கியிருந்தார்கள். அவர்களின் தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையிலும் அல்லாஹ் அவர்களை இறக்கச் செய்தான்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3549

பராஉ(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகிய முகம் உடையவர்களாகவும் அழகிய உருவ அமைப்பு உடையவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவிற்கு உயரமானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3550

கத்தாதா(ரஹ்) அறிவித்தார்: நான் அனஸ்(ரலி) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் மருதாணி பூசியிருந்தார்களா?’ என்று கேட்டேன் அதற்கு அவர்கள், ‘இல்லை. அவர்களின் நெற்றிப் பொட்டு முடியில் சிறிதளவு நரை இருந்தது. அவ்வளவுதான்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3551

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் நடுத்தர உயரமுடையவர்களாகவும் (மேல் முதுகும் மார்பும் விசாலமான நிலையில்) இரண்டு புஜங்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தலைமுடி அவர்களின் காதுகளின் சோணையை எட்டும் அளவிற்கு இருந்தது. அவர்களை நான் சிவப்பு நிற அங்கி ஒன்றில் பார்த்திருக்கிறேன். அதை விட அழகான ஆடையை நான் கண்டதேயில்லை.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3552

அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக் ஸபீஈ(ரஹ்) கூறினார்.: பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது ‘நபி(ஸல்) அவர்கள் முகம் (பிரகாசத்தில்) வாளைப் போன்று இருந்ததா என்று?’. அவர்கள் ‘இல்லை, ஆனால் சந்திரனைப் போல (பிரகாசமாக) இருந்தது’ என்றார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3553

(என் தந்தை) அபூ ஜுஹைஃபா(ரலி) கூறினார்: அந்த ஈட்டிக்கு அப்பால் பெண்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். மக்கள் அப்போது எழுந்து நபி(ஸல்) அவர்களின் இரண்டு கரங்களைப் பிடித்து அவற்றால் தங்கள் முகங்களை வருடிக் கொள்ளலாயினர். நான் நபி(ஸல்) அவர்களின் கரத்தை எடுத்து என் முகத்தின் மீது வைத்துக் கொண்டேன். அது பனிக் கட்டியை விடவும் குளிர்ச்சியானதாகவும் கஸ்தூரியை விடவும் நறுமணம் மிக்கதாகவும் இருந்தது.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3554

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாகக் கொண்ட வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமளான் மாதத்தில் தம்மைச் சந்திக்கிற வேளையில் அவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக மாறிவிடுவார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது (அது வரை அருளப்பட்ட) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றை விட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3555

ஆயிஷா(ரலி) அறிவித்தார்: (ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் (பரவசத்தால்) அவர்களின் முகத்தின் (நெற்றி) ரேகைகள் மின்ன வந்தார்கள். அப்போது அவர்கள், ‘முத்லிஜீ (என்னும் இருவரின் சாயலை வைத்து உறவு முறையை கணிப்பவர்) ஸைதைப் பற்றியும் என்ன கூறினார் என்று நீ கேள்விப்படவில்லையா? (போர்வையின் கீழிருந்து வெளிப்பட்ட) அவ்விருவரின் கால்களையும் அவர் பார்த்துவிட்டு. ‘இந்தக் கால்கள் ஒன்று மற்றொன்றிலிருந்து தோன்றியவை’ என்று கூறினார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3556

அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) அறிவித்தார்: கஅப் இப்னு மாலிக்(ரலி), தபூக் போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கிவிட்ட சமயத்தை (நினைவு கூர்ந்து) பேசிய படி, ‘நான் அல்லாஹ்வின் தூதருக்கு சலாம் சொன்னேன். அவர்களின் (பொன்னிற) முகம் மகிழ்ச்சியால் மின்னிக் கொண்டிருந்தது. இறைத்தூதர்(ஸல்) மகிழ்ச்சியடைந்தால் அவர்களின் முகம் சந்திரனின் ஒரு துண்டைப் போல் பிரகாசமாகிவிடும். நாங்கள் அதை வைத்து அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதைத் தெரிந்து கொள்வோம்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3557

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஆதமின் சந்ததிகளில் தலைமுறை தலைமுறையாக நான் சிறந்த தலைமுறை வழியே (மரபணுக்களில் பாதுகாக்கப்பட்டு வந்து இப்போது) நான் தோன்றியிருக்கும் (இந்தச்) சிறந்த தலைமுறையில் தோன்றி இறைத்தூதராக்கப்பட்டுள்ளேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3558

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் (முன் தலை) முடியை, (தம் நெற்றியின் மீது) தொங்கவிட்டு வந்தார்கள். இணை வைப்பாளர்கள் தங்கள் தலை(முடி)களைப் பிரித்து (நெற்றியில் விழ விடாமல் இரண்டு பக்கமும் தொங்கவிட்டு) வந்தார்கள். வேதக்காரர்கள் தங்கள் தலை(முடி)களை (நெற்றியின் மீது) தொங்கவிட்டு வந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எந்த விஷயங்களில் தமக்கு (இறைக்) கட்டளை எதுவும் இடப்படவில்லையோ அந்த விஷயங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப் போக விரும்பி வந்தார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தலை(முடி)யை, (இரண்டு பக்கங்களிலும்) பிரித்துக் கொண்டார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3559

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. ‘உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே” என்று அவர்கள் கூறுவார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3560

ஆயிஷா(ரலி) அறிவித்தார்: இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே  அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் -எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர. (அப்போது மட்டும் பழி வாங்குவார்கள்.)

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3561

அனஸ்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்களின் உள்ளங்கையை விட மென்மையான பட்டையோ, (பூ வேலைப்பாடு செய்யப்பட்ட) தூய்மையான பட்டையோ நான் தொட்டதில்லை. நபி(ஸல்) அவர்களின் (உடல்) மணத்தை விட சுகந்தமான ஒரு நறுமணத்தை நான் நுகர்ந்ததேயில்லை.

வேறு சில அறிவிப்புகளில் ‘உடல் மணம்’ என்பதற்கு பதிலாக ‘வியர்வை’ என்று இடம் பெற்றுள்ளது.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3562

அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர். ஷுஅபா(ரஹ்) இதே போன்றதை அறிவித்துவிட்டு, ‘நபி(ஸல்) அவர்கள் எதையாவது வெறுத்தால், அது அவர்களின் முகத்தில் தெரிந்துவிடும்” என்று (அதிகப்படியாக) அறிவித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3563

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள்; இல்லையென்றால்விட்டு விடுவார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3564

மாலிக் இப்னு புஹைனா அல் அஸதீ(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் (தொழுகையில்) ஸஜ்தா செய்யும்போது தம் இரண்டு கைகளுக்குமிடையே (அதிக) இடைவெளி விடுவார்கள். எந்த அளவிற்கென்றால் நாங்கள் அவர்களின் இரண்டு அக்குள்களையும் பார்ப்போம்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3565

அனஸ்(ரலி) அறிவித்தார்; இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் பிரார்த்தனை எதிலும் தம் கைகளை (மிக உயரமாகத்) தூக்குவதில்லை; மழை வேண்டிப் பிராத்திக்கையில் தவிர. ஏனெனில், அதில் அவர்கள் தம் இரண்டு கைகளையும் தம் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவிற்கு உயர்த்துவது வழக்கம்.

அபூ மூஸா(ரலி) கூறினார்: நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்; மேலும், (அப்போது) தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3566

அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்: (ஹஜ்ஜில்) நண்பகல் நேரத்தில் கடும் வெயிலின்போது நபி(ஸல்) அவர்கள் ‘அப்தஹ்’ என்னுமிடத்தில் கூடாரத்தில் இருக்க, நான் அவர்களிடம் ஈர்க்கப்பட்டு சென்றேன். பிலால்(ரலி) வெளியே புறப்பட்டு வந்து தொழுகைக்காக அழைத்தார்கள்; பிறகு, உள்ளே சென்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உளூச் செய்த தண்ணீரின் மிச்சத்தை வெளியே கொண்டு வந்தார்கள். உடனே, மக்கள் அதை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து பிடுங்கிக் கொள்வதற்காக, அவர்களின் மீது விழுந்தார்கள். பிறகு, பிலால் உள்ளே சென்று ஈட்டியை வெளியே எடுத்து வந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெளியே வந்து,  (இப்போதும்) நான் நபி(ஸல்) அவர்களின் கால்களின் பிரகாசத்தைப் பார்ப்பது போன்றுள்ளது ஈட்டியை நட்டு, பிறகு லுஹர் தொழுகையை இரண்டு ரக்அத்துகளாகவும் அஸர் தொழுகையை இரண்டு ரக்அத்துகளாகவும் தொழுதார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் கழுதையும் பெண்ணும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3567

ஆயிஷா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தை பேசுகிறார்கள் என்றால், அதை (வார்த்தை வார்த்தையாக, எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக் கூடியவர் எண்ணியிருந்தால், ஒன்று விடாமல் எண்ணியிருக்கலாம். (அந்த அளவிற்கு நிறுத்தி நிதானமாக, தெளிவாகப் பேசி வந்தார்கள்.)

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3568

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்: “இன்னாரின் தந்தை (அபூ ஹுரைராவைத் தான் இப்படிக் குறிப்பிடுகிறார்கள் ஆயிஷா(ரலி).) உனக்கு வியப்பூட்டவில்லையா? அவர் வந்தார்; என் அறையின் பக்கமாக அமர்ந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து (தாம் கேட்டதை) என் காதில் விழுமாறு அறிவித்துக் கொண்டிருந்தார். நான் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தேன். நான் என் தஸ்பீஹை முடிப்பதற்குள் அவர் எழுந்து (சென்று)விட்டார். நான் அவரைச் சந்தித்திருந்தால் அவரை (ஒன்றன் பின் ஒன்றாக விடுவிடுவென்று நபிமொழிகளை அறிவித்துக் கொண்டே சென்றதை)க் கண்டித்திருப்பேன். நீங்கள் ஹதீஸ்களை ஒன்றன் பின் ஒன்றாக, வேகவேகமாக அறிவிப்பதைப் போல் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவசர அவசரமாக அறிவித்ததில்லை” என்று ஆயிஷா(ரலி) கூறினார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3569

அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்: நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தொழுகை எப்படியிருந்தது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ரமளானிலும் மற்ற மாதங்களிலும் அவர்கள் பதினொரு ரக்அத்துகளுக்கு அதிகமாகத் தொழுததில்லை. (முதலில்) நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள். நான் ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் வித்ரு (மூன்று ரக்அத்கள்) தொழுவதற்கு முன்னால் உறங்குவீர்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘என் கண் தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லை’ என்று பதிலளித்தார்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3570

அப்துல்லாஹ் இப்னு அபீ நமிர்(ரஹ்) அறிவித்தார்: எங்களிடம் அனஸ் இப்னு மாலிக்(ரலி), நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் பள்ளிவாசலிலிருந்து (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசினார்கள்: நபி(ஸல்) அவர்களுக்கு (மீண்டும்) வஹீ (இறைச்செய்தி)  வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்தபோது (வானவர்களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் முதலாமவர், ‘இவர்களில் அவர் யார்?’ என்று கேட்டார். அவர்களில் நடுவிலிருந்தவர், ‘இவர்களில் சிறந்தவர்” என்று பதிலளித்தார். அவர்களில் இறுதியானவர், ‘இவர்களில் சிறந்தவரை (விண்ணுலகப் பயணத்திற்காக) எடுத்து வாருங்கள்” என்று கூறினார். அன்றிரவு இது மட்டும் தான் நடந்தது. அடுத்த இரவில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் உள்ளம் பார்க்கிற நிலையில் -(உறக்கநிலையில்)- அம்மூவரும் வந்தபோது தான் அவர்களைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் தான் உறங்கும்; அவர்களின் உள்ளம் உறங்காது. இறைத் தூதர்கள் இப்படித்தான். அவர்களின் கண்கள் உறங்கும்; அவர்களின் உள்ளங்கள் உறங்க மாட்டா. ஜிப்ரீல்(அலை) அவர்கள், நபி(ஸல்) அவர்களுக்குப் பொறுப்பேற்று அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு வானத்தில் ஏறிச் சென்றார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3571

இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்: நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் (கைபரிலிருந்து திரும்பிக் கொண்டு) இருந்தோம். இரவின் ஆரம்பத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். அதிகாலை நேரத்தின் முகப்பை (இரவின் கடைசிப் பகுதியை) நாங்கள் அடைந்த பொழுது ஓய்வெடுப்பதற்காக (ஓரிடத்தில்) தங்கினோம். சூரியன் உச்சிக்கு வரும் வரை நாங்கள் எங்களையும் மீறிக் கண்ணயர்ந்து விட்டோம். உறக்கத்திலிருந்து கண்விழித்தவர்களில் அபூ பக்ரே முதலாமவராக இருந்தார். இறைத்தூதர் தாமாகக் கண்விழிக்காத வரை அவர்களை உறக்கத்திலிருந்து எவரும் எழுப்புவதில்லை. அடுத்து உமர்(ரலி) அவர்களும் கண் விழித்தார்கள். அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு குரலை உயர்த்தி ‘அல்லாஹு அக்பர்  அல்லாஹ் மிகப்பெரியவன்’ என்று கூறலானார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் கண்விழித்து (சிறிது தொலைவு சென்றதன்) பின் (தம் வாகனத்திலிருந்து) இறங்கி எங்களுக்கு அதிகாலைத்  தொழுகையை நடத்தினார்கள். அப்போது ஒருவர் எங்களுடன் தொழாமல் கூட்டத்தாரைவிட்டுத் தனியே விலகியிருந்தார். நபி(ஸல்) அவர்கள் (தொழுகையை முடித்து) திரும்பியவுடன், ‘இன்னாரே! எங்களுடன் நீ ஏன் தொழவில்லை?’ என்று கேட்டார்கள். அவர் ‘எனக்குப் ‘பெருந் தொடக்கு’ ஏற்பட்டுவிட்டது” என்று கூறினார். உடனே, நபி(ஸல்) அவர்கள் மண்ணில் ‘தயம்மும்’ செய்யும் படி அவருக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு அவர் தொழுதார். நபி(ஸல்) அவர்கள் என்னை ஒரு வாகனத்தில் தமக்கு முன்னால் அமர்த்தினார்கள். எங்களுக்குக் கடுமையானத்தாகம் ஏற்பட்டது. நாங்கள் பயணம் சென்று கொண்டிருக்கும்போது (ஒட்டகத்தின் மீது) தோலினாலான தண்ணீர்ப் பைகள் இரண்டிற்கிடையே தன் இரண்டு கால்களையும் தொங்கவிட்டிருந்த பெண்ணொருத்தியை நாங்கள் கண்டோம். அவளிடம் நாங்கள், ‘தண்ணீர் எங்கே (உள்ளது)?’ என்று கேட்டோம். அதற்கு அவள், ‘தண்ணீர் (இங்கு) இல்லை” என்று சொன்னாள். நாங்கள், ‘உன் வீட்டாரு(ள்ள இந்தப் பகுதி)க்கும் தண்ணீ(ருள்ள இடத்து)க்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு?’ என்று கேட்டோம். அவள், ‘ஒரு பகலும் ஓர் இரவும் (பயணம் செய்யும் தூரம்)” என்று சொன்னாள். நாங்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நீ நட” என்று சொன்னோம். அவள், ‘இறைத்தூதர்(ஸல்) என்றால் யார்?’ என்று கேட்டாள். அவளை (தண்ணீர் தரச்) சம்மதிக்க வைக்க எங்களால் முடியவில்லை.  இறுதியில் அவளை அழைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவள் நபி(ஸல்) அவர்களிடமும் எங்களிடம் பேசியதைப் போன்றே பேசினாள்; தான் அனாதைக் குழந்தைகளின் தாய் என்று நபி(ஸல்) அவர்களிடம் சொன்னதைத் தவிர. உடனே, நபி(ஸல்) அவர்கள் அவளுடைய தண்ணீர்ப் பைகள் இரண்டையும் கொண்டு வரச் சொல்லிக் கட்டளையிட்டு அவற்றின் வாய்கள் இரண்டிலும் (தம் கரத்தால்) தடவினார்கள். தாகமுடனிருந்த நாங்கள் நாற்பது பேரும் தாகம் தீரும் வரை (அவற்றிலிருந்து) தண்ணீர் பருகினோம். எங்களுடன் இருந்த ஒவ்வொரு தோல்ப் பையையும் ஒவ்வொரு தோல் பாத்திரத்தையும் நாங்கள் நிரப்பிக் கொண்டோம். (எங்கள்) ஒட்டகம் ஒன்றுக்கு மட்டும் (அதனால் தாக்குப் பிடிக்க முடியும் என்பதால்) தண்ணீர் குடிப்பாட்டவில்லை. அந்தத் தோல்ப் பை(தண்ணீர்) நிரம்பி வழிந்த காரணத்தால் (அதன்) வாய் பிளந்து போகவிருந்தது. பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘உங்களிடம் இருக்கும் (உணவுப்) பொருள்களைக் கொண்டு வாருங்கள்” என்று (தம் தோழர்களுக்கு) உத்திரவிட்டார்கள். (தோழர்களும் கொண்டு வந்து தர), நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்காக ரொட்டித் துண்டுகளையும் பேரீச்சம் பழங்களையும் ஒன்று திரட்டி (அவளுக்கு வழங்கி)னார்கள். இறுதியில், ‘அவள் தன் வீட்டாரிடம் சென்று, ‘நான் மக்களிலேயே மிக வசீகரமான ஒருவரை, அல்லது அவர்கள் (முஸ்லிம்கள்) நம்புவதைப் போல் ஓர் இறைத்தூதரைச் சந்தித்தேன்” என்று சொன்னாள். அல்லாஹ் (அவளுடைய) அந்தக் குலத்தாருக்கு அப்பெண்ணின் வாயிலாக நேர்வழியளித்தான். எனவே, அவளும் இஸ்லாத்தை ஏற்றாள்; அவர்களும் இஸ்லாத்தை ஏற்றார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3572

அனஸ்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள், (மதீனாவிலுள்ள) ‘ஸவ்ரா’ என்னுமிடத்தில் இருந்தபோது அவர்களிடம் (தண்ணீர் இருந்த) ஒரு பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அவர்கள் தம் கரத்தைப் பாத்திரத்தினுள் போட, அவர்களின் விரல்களுக்கிடையேயிருந்து தண்ணீர் (ஊற்று போல்) பொங்கி வரலாயிற்று. மக்கள் அனைவரும் (அந்தத் தண்ணீரில்) உளூச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் கதாதா(ரஹ்) கூறினார்: நான் அனஸ்(ரலி) அவர்களிடம், ‘நீங்கள் (மொத்தம்) எத்தனை பேர் இருந்தீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘முன்னூறு பேர்” என்றோ, ‘முன்னூறு பேர் அளவிற்கு” என்றோ கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3573

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்: (ஒரு நாள்) நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பார்த்தேன். அப்போது அஸர் தொழுகையின் நேரம் வந்து விட்டிருந்தது. உளூச் செய்யும் தண்ணீரைத் தேடியும் அவர்களுக்கு அது கிடைக்க வில்லை. இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், உளூச் செய்யும் தண்ணீர் (சிறிது) கொண்டு வரப்பட்டது. இறைத்தூதர்(ஸல்) அந்தப் பாத்திரத்தில் தம் கரத்தை வைத்தார்கள்; பிறகு, அதிலிருந்து உளூச் செய்யும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் விரல்களுக்குக் கீழேயிருந்து தண்ணீர் ஊற்றெடுத்துப் பொங்கி வருவதை கண்டேன். மக்கள் (அதிலிருந்து) உளூச் செய்தார்கள். எந்த அளவிற்கென்றால் அவர்களில் கடைசி நபர் வரை (அதிலேயே) உளூச் செய்து முடித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3574

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள், தம் பயணம் ஒன்றுக்காகப் புறப்பட்டார்கள். அப்போது அவர்களுடன் அவர்களின் தோழர்கள் சிலரும் இருந்தார்கள். அவர்கள் பயணம் செய்தபடி சென்று கொண்டிருந்தபோது தொழுகை நேரம் வந்துவிட்டது. அவர்கள் உளூச் செய்வதற்கான தண்ணீர் கிடைக்கவில்லை. பயணக் கூட்டத்திலிருந்து ஒருவர் சென்று சிறிதளவு தண்ணீருடன் கூடிய பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள் அதை எடுத்து உளூச் செய்தார்கள். பிறகு தம் நான்கு கை விரல்களைப் பாத்திரத்தின் மீது நீட்டி, ‘எழுந்து உளூச் செய்யுங்கள்” என்று உத்திரவிட்டார்கள். மக்கள் அனைவரும் உளூச் செய்தனர். அவர்கள் விரும்பிய அளவிற்கு உளூச் செய்யும் தண்ணீரை அடைந்தனர். அவர்கள் எழுபது அல்லது (கிட்டத்தட்ட) அந்த அளவு எண்ணிக்கையினராக இருந்தனர்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3575

அனஸ்(ரலி) அறிவித்தார்: (ஒருமுறை) தொழுகை நேரம் வந்தது. (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அருகில் வீடு அமைந்திருந்தவர்களெல்லாம் உளூச் செய்ய எழுந்தனர். (பள்ளிவாசல் அருகில் வீடில்லாத) ஒரு கூட்டத்தார் (உளூச் செய்ய வழியறியாமல்) எஞ்சியிருந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் தண்ணீருள்ள கல்லால் ஆன ஏனம் ஒன்று கொண்டு வரப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் (அதில்) தம் கையை வைத்(துப் பார்த்)தார்கள். அதில் நபி(ஸல்) தம் கரத்தை விரித்து வைக்கும் அளவுக்கு அந்தக்கல் ஏனம் பெரிதாக இருக்கவில்லை. எனவே, நபி(ஸல்) அவர்கள் தம் விரல்களை இணைத்து கல் ஏனத்தில் வைத்தார்கள். மக்கள் அனைவரும் (அதிலிருந்து) உளூச் செய்தனர்.

அறிவிப்பாளர் ஹுமைத்(ரஹ்) கூறினார்: நான், ‘அவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அனஸ்(ரலி), ‘எண்பது பேர்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3576

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்: ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் தோல் குவளை ஒன்று இருந்தது. (அதிலிருந்து) நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். மக்கள் நபி(ஸல்) அவர்களை நோக்கி ஓடிவந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘உங்களுக்கென்ன ஆயிற்று?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘தங்கள் முன்னாலுள்ள தண்ணீரைத் தவிர நாங்கள் உளூச் செய்வதற்கும் குடிப்பதற்கு வேறு தண்ணீர் எங்களிடம் இல்லை” என்று பதிலளித்தனர். உடனே, நபி(ஸல்) அவர்கள் தம் கையைத் தோல் குவளையினுள் வைத்தார்கள். உடனே, அவர்களின் விரல்களுக்கிடையேயிருந்து ஊற்றுகளைப் போன்று தண்ணீர் பொங்கி வரத் தொடங்கியது. நாங்கள் அதிலிருந்து (தண்ணீர்) அருந்தினோம்; மேலும் உளூச் செய்தோம்.

அறிவிப்பாளர் சாலிம் இப்னு அபில் ஜஅத்(ரஹ்) கூறினார்: நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம், ‘நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்?’ என்று கேட்டேன். அவர்கள், ‘நாங்கள் ஒரு லட்சம் பேர் இருந்திருந்தாலும் கூட அது எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். நாங்கள் ஆயிரத்து ஐந்நூறு பேர் தாம் இருந்தோம்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3577

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்: ஹுதைபிய்யா நிகழ்ச்சியின்போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். ஹுதைபிய்யா என்பது (மக்காவிலிருந்து மதீனா செல்லும் பாதையில் இருந்த) ஒரு கிணற்றில். நாங்கள் அதிலிருந்து (தண்ணீர்) இறைத்தோம். எந்த அளவுக்கென்றால் அதில் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட நாங்கள்விட்டு வைக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் கிணற்றின் விளிம்பில் உட்கார்ந்தார்கள். பிறகு, சிறிது தண்ணீரை வரவழைத்து வாய் கொப்பளித்தார்கள். பிறகு (தம் வாயிலிருந்து நீரை) கிணற்றுக்குள் உமிழ்ந்தார்கள். நாங்கள் சிறிது நேரம் பொறுத்திருந்தோம். பிறகு, நாங்கள் தாகம் தீரும் வரையிலும், எங்கள் வாகனங்கள் தாகம் தீரும் வரையிலும் அல்லது எங்கள் வாகனங்கள் (தாகம் தீர்ந்து) திரும்பும் வரையிலும் நாங்கள் (அக்கிணற்றிலிருந்து தண்ணீர்) இறைத்தோம்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3578

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்: அபூ தல்ஹா(ரலி) (தம் மனைவி) உம்மு சுலைம்(ரலி) அவர்களிடம், ‘நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் குரலை பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கிருக்கும்) பசியைப் புரிந்து கொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம்(ரலி), ‘ஆம், இருக்கிறது” என்று கூறிவிட்டு வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்தார்கள். பிறகு, உம்மு சுலைம்(ரலி), தம் முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் அதைச் சுருட்டி என் கை (அக்குளு)க்குக் கீழே அதை மறைத்து வைத்து அதன் ஒரு பகுதியில் என் கையைக் கட்டிவிட்டார்கள். பிறகு என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்கள் இருந்தனர். நான் அவர்களுக்கு முன் நின்றேன். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உன்னை அபூ தல்ஹா அனுப்பினரா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்” என்றேன். ‘உணவுடனா அனுப்பியுள்ளார்?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்” என்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) தம்முடன் இருந்தவர்களிடம், ‘எழுந்திருங்கள்” என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில், அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம் வந்து (நபி  ஸல்  அவர்கள் தம் தோழர்களுடன் வந்து கொண்டிருக்கும்) விபரத்தைத் தெரிவித்தேன். உடனே, அபூ தல்ஹா(ரலி) (என் தாயாரிடம்), ‘உம்மு சுலைமே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள். ஆனால், மக்களுடன் வந்திருக்கிறார்கள். ஆனால், நம்மிடம் அவர்களுக்கு உணவளிக்க எதுவுமில்லையே” என்று கூறினார்கள். உம்மு சுலைம்(ரலி), ‘அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்” என்று கூறினார்கள். உடனே, அபூ தல்ஹான (தாமே நபி-ஸல்- அவர்களை முன்சென்று வரவேற்பதற்காக) நடந்து சென்று இறைத்தூதர்(ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ தல்ஹா தம்முடனிருக்க, உம்மு சுலைம் அவர்களை நோக்கிச் சென்று, ‘உம்மு சுலைமே! உன்னிடமிருப்பதைக் கொண்டு வா!” என்று கூறினார்கள். உடனே, அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி உத்திரவிட, அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு, உம்மு சுலைம்(ரலி) தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழித்து அதை உருக்கினார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறைவன் நாடியவற்றை (பிஸ்மில்லாஹ்வையும் மற்ற பிரார்த்தனைகளையும்) கூறினார்கள். பிறகு, ‘பத்து பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்” என்று (அபூ தல்ஹாவிடம்) கூறினார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அபூ தல்ஹா(ரலி) அனுமதி கொடுத்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, ‘பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, ‘பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதி கொடுத்தார்கள். பிறகு, அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். அப்படி உண்ட மக்கள் எழுபது அல்லது எண்பது பேர் இருந்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3579

அல்கமா(ரஹ்) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்: நாங்கள் வழமைக்கு மாறான நிகழ்வுகளை அருள்வளம் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். நீங்களோ அவற்றை அச்சுறுத்தல் என்று எண்ணுகிறீர்கள். நாங்கள் (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘மீதமான தண்ணீர் ஏதும் இருக்கிறதா என்று தேடுங்கள்” என உத்திரவிட்டார்கள். மக்கள் சிறிதளவே தண்ணீர் இருந்த ஒரு பாத்திரத்தைக் கொண்டு வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தம் கரத்தைப் பாத்திரத்தில் நுழைத்து, ‘அருள் வளமிக்க, தூய்மை செய்யும் தண்ணீரின் பக்கம் வாருங்கள். பரக்கத்  அருள்வளம் என்பது அல்லாஹ்விடமிருந்து கிடைப்பதாகும்” என்று கூறினார்கள். அப்போது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் விரல்களுக்கிடையேயிருந்து தண்ணீர் ஊற்றெடுத்துப் பொங்குவதைக் கண்டேன். (நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) உணவு உண்ணப்பட்டுக் கொண்டிருக்கும்போது அது இறைவனின் தூய்மையை எடுத்துரைப்பதாக  தஸ்பீஹ் செய்வதை நாங்கள் கேட்டிருக்கிறோம்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3580

ஜாபிர்(ரலி) அறிவித்தார்: என் தந்தை, தம் மீது கடனிருக்கும் நிலையில் இறந்துவிட்டார். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘என் தந்தை, தம் மீதிருந்த கடனை (அடைக்காமல்) அப்படியேவிட்டுச் சென்றார். என்னிடம் அவரின் பேரீச்ச மரங்களின் விளைச்சலைத் தவிர வேறெதுவும் இல்லை. அந்தப் பேரீச்ச மரங்களின் பல ஆண்டுகளின் விளைச்சல் கூட அவரின் மீதுள்ள கடனை அடைக்கும் அளவிற்கு எட்டாது. எனவே, கடன்காரர்கள் என்னைக் கடும் சொற்களைப் பயன்படுத்தி ஏசாமலிருப்பதற்காக நீங்கள் என்னுடன் வாருங்கள்” என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் (என்னுடன் வந்து) பேரீச்சம் பழங்களைச் சேமித்துக் காய வைக்கும் களங்களில் ஒன்றைச் சுற்றி நடந்து (பரக்கத் என்னும் அருள்வளம் வேண்டி) பிரார்த்திதார்கள். பிறகு மற்றொரு களத்தையும் சுற்றி நடந்தார்கள். (பிறகு அருள்வளம் வேண்டி பிரார்த்திதார்கள்) பிறகு அதன் அருகில் அமர்ந்து கொண்டு, ‘அதை வெளியே எடுங்கள்” என்று கூறினார்கள். கடன்காரர்களுக்குச் சேர வேண்டியதை நிறைவாகக் கொடுத்தார்கள். அவர்களுக்குக் கொடுத்த அதே அளவுக்கு அது மீதமாகிவிட்டது.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3581

அப்துர் ரஹ்மான் இப்னு அபூ பக்ர்(ரலி) கூறினார்: திண்ணைத் தோழர்கள் ஏழைகளாக இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை, ‘எவரிடம் இரண்டு பேருக்கான உணவு உள்ளதோ, அவர் மூன்றாமவ(ராக திண்ணைத் தோழர் ஒருவ)ரைத் தம்முடன்) அழைத்துச் செல்லட்டும். எவரிடம் நான்கு பேருக்கான உணவு இருக்கிறதோ அவர் தம்முடன் ஐந்தாமவரையும் ஆறாமவரையும் அழைத்துச் செல்லட்டும்” என்று கூறினார்கள். அல்லது நபி(ஸல்) அவர்கள் எப்படிக் கூறினார்களோ அதைப் போன்று. அபூ பக்ர்(ரலி) மூன்று பேரை அழைத்து வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் பத்துபேருடன் நடந்தார்கள். (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) மூன்று பேரை அழைத்து வர, அப்போது வீட்டில் நானும் (அப்துர் ரஹ்மான்), என் தந்தையும் (அபூ பக்ர்) என் தாயும் (உம்மு ரூமான்), எங்கள் வீட்டிற்கும், (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டிற்கும் கூட்டாகப் பணி செய்து வந்த  பணிப்பெண்ணும் தான் இருந்தோம்.

‘என் மனைவியும்’ என்று அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) கூறினார்களா என்று எனக்குத் தெரியாது. (சந்தேகமாக இருக்கிறது) என அறிவிப்பாளர் அபூ உஸ்மான்(ரஹ்) கூறினார்.

அபூ பக்ர்(ரலி) (விருந்தினருக்கு உணவளிக்குமாறு தம் வீட்டாரிடம் கூறிவிட்டு) நபி(ஸல்) அவர்களிடம் (சென்று) இரவு உணவு அருந்தினார்கள். பிறகு (நபியவர்களுடன்) இஷா தொழுகை தொழும் வரை அவர்களிடம் தங்கினார்கள். பிறகு (தொழுகையிலிருந்து) திரும்பி வந்து நபி(ஸல்) அவர்கள் இரவு உணவு அருந்தும் வரை (அங்கேயே) தங்கியிருந்தார்கள். (இவ்வாறு) இரவிலிருந்து அல்லாஹ் நாடிய ஒரு பகுதி கழிந்த பிறகு அபூ பக்ர்(ரலி) (தம் வீட்டிற்கு) வந்தார்கள். அவர்களின் மனைவி அவர்களிடம் உங்கள் விருந்தாளிகளை அல்லது உங்கள் விருந்தாளியை உபசரிக்க வராமல் தாமதமானதற்கு என்ன காரணம்?’ என்று கேட்டார்கள். அபூ பக்ர்(ரலி) ‘விருந்தினருக்கு நீ இரவு உணவை அளித்தாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘நீங்கள் வரும்வரை உண்ண முடியாதென்று அவர்கள் மறுத்துவிட்டார்கள். (நம் வீட்டார்) அவர்களுக்கு முன் உணவை வைத்து உண்ணும்படி கூறியும் அவர்கள் (உண்ண மறுத்து) அவர்களை சும்மாயிருக்கச் செய்துவிட்டனர்” என்று பதிலளித்தார்கள்.

(என் தந்தை அபூ பக்ர்(ரலி) நான் விருந்தாளிகளைச் சரியாக கவனிக்கவில்லை என்று என்னைக் கண்டிப்பார்கள் என்றஞ்சி) நான் சென்று ஒளிந்து கொண்டேன். அவர்கள், ‘மடையா!” (என்று கோபத்துடன்) அழைத்து, ‘உன் மூக்கறுந்து போக!” என்று திட்டினார்கள். (தோழர்களை நோக்கி,) ‘நீங்கள் உண்ணுங்கள்” என்று கூறிவிட்டு (தம் வீட்டாரை நோக்கி, ‘என்னை எதிர்பார்த்துத் தானே இவ்வளவு தாமதம் செய்தீர்கள்!) நான் ஒருபோதும் இதை உண்ண மாட்டேன்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் ஒரு கவளத்தை எடுக்கும் போதெல்லாம் அதன் கீழ்ப்பகுதியிலிருந்து அதைவிட அதிகமாகிப் பெருகிக் கொண்டே வந்தது. இறுதியில் அவர்கள் வயிறு நிரம்பினர். அப்போது அந்த உணவு முன்பிருந்ததை விட அதிகமாகி விட்டிருந்தது. அபூ பக்ர்(ரலி) அதைப் பார்த்தார்கள். அப்போது அது முன்பிருந்த அளவு, அல்லது அதை விட அதிகமாக தென்பட்டது. உடனே அவர்கள் தம் துணைவியாரிடம் ‘பனூ ஃபிராஸ் குலத்தாரின் சகோதரியே! (என்ன இது?)” என்று கேட்க அவர்கள், ‘என் கண் குளிர்ச்சியின் மீதாணையாக! இந்த உணவு மூன்று மடங்கு அதிகமாகி விட்டிருக்கிறது!” என்று கூறினார்கள். அதிலிருந்து அபூ பக்கர்(ரலி) அவர்களும் உண்டார்கள். மேலும், ‘(நான் ஒருபோதும் உண்ணமாட்டேன் என்று என்னை சத்தியம் செய்ய வைத்தது) ஷைத்தான் தான்” என்று கூறினார்கள். பிறகு அதிலிருந்து (மேலும்) ஒரு கவளம் உண்டார்கள். பிறகு, அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துச் சென்றார்கள். பிறகு, அது அவர்களிடம் இருக்கலாயிற்று. எங்களுக்கும் ஒரு சமுதாயத்திற்குமிடையே சமாதான ஒப்பந்தம் இருந்து வந்தது. ஒப்பந்தக் காலம் முடிவடைந்து விட்டது. (இனி அவர்கள் போருக்கு வந்தால், அவர்களை எதிர் கொள்வதற்காக), நபி(ஸல்) அவர்கள் படையினருடன் (அந்த உணவிலிருந்து) அவர்களின் பங்கு (உணவு)தனையும் கொடுத்தனுப்பினார்கள். அவர்கள் அனைவரும் (அதிலிருந்து) உண்டார்கள்.

மற்றோர் அறிவிப்பில், (“எங்களைப் பன்னிரண்டு பேராகப் பிரித்து” என்பதற்கு பதிலாக,) ‘எங்களில் பன்னிரண்டு பேரைத் தளபதிகளாக்கி” என்று இடம் பெற்றுள்ளது.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3582

அனஸ்(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் மதீனாவாசிகளைப் பஞ்சம் பீடித்தது. (அந்தக் கால கட்டத்தில்) நபி(ஸல்) அவர்கள் ஒரு ஜும்ஆ நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு (நாட்டுப்புற) மனிதர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! குதிரைகள் அழிந்துவிட்டன் ஆடுகளும் அழிந்துவிட்டன. எனவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; அவன் மழை பொழியச் செய்வான்” என்று கேட்டார். உடனே, நபி(ஸல்) அவர்கள், தம் கையை உயர்த்திப் பிரார்த்தனை செய்தார்கள். அப்போது, வானம் (மேகங்கள் இல்லாமல்) கண்ணாடியைப் போன்றிருந்தது. (நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தவுடன்) காற்று ஒன்று வேகமாக வீசி மேகக் கூட்டத்தைத் தோற்றுவித்தது. பிறகு, அந்த மேகக் கூட்டம் ஒன்று திரண்டது. பிறகு, வானம் மழையைப் பொழிந்தது. நாங்கள் தண்ணீரில் மூழ்கியபடி (பள்ளிவாசலிலிருந்து) வெளியே வந்து எங்கள் இல்லங்களை அடைந்தோம். அடுத்த ஜும்ஆ (நாள்) வரை எங்களுக்கு மழை பொழிந்து கொண்டேயிருந்தது. எனவே, (மழை பெய்விக்கும்படி) இறைவனிடம் பிரார்த்திக்கச் சொன்ன) அந்த மனிதர் அல்லது வேறொரு மனிதர் நபி(ஸல்) அவர்கள் முன் எழுந்து நின்று, ‘இறைத்தூதர் அவர்களே! (அடை மழையின் காரணத்தால்) வீடுகள் இடிந்துவிட்டன. எனவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; அவன் மழையை நிறுத்திவிடுவான்” என்று கூறினார். அதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘புன்னகை புரிந்து, ‘(இறைவா!) எங்களைச் சுற்றிலும் (எங்களுக்கு நன்மை ஏற்படும் விதத்தில்) மழையைப் பொழி! எங்களின் மீது (எங்களுக்குக் கேடு நேரும் விதத்தில்) மழை பொழியச் செய்யாதே!” என்று பிரார்த்ததித்தார்கள். நான் மேகத்தை நோக்கினேன். அது பிளவு பட்டு மதீனாவைச் சுற்றிலும் ஒரு மாலை போல் வளையமிட்டிருந்தது.

இது அறிவிப்பாளர்களின் இரண்டு தொடர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3583

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியின் மீது சாய்ந்தபடி உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் (மிம்பர்) உரைமேடையை அமைத்த பின்னால் அதற்கு மாறிவிட்டார்கள். எனவே, (நபி-ஸல்- அவர்கள் தன்னைப் பயன்படுத்தாததால் வருத்தப்பட்டு) அந்த மரம் ஏக்கத்துடன் முனகியது. உடனே, நபி(ஸல்) அவர்கள் அதனிடம் சென்று (அதை அமைதிப்படுத்துவதற்காக) அதன் மீது தன் கையை வைத்து (பரிவுடன்) வருடிக் கொடுத்தார்கள்.

மேலும், இரண்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3584

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின்போது (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு மரம் அல்லது பேரீச்ச மரத்தின். (அடிப்பாகத்தின்) மீது சாய்ந்த படி (உரையாற்றிய வண்ணம்) நின்றிருந்தார்கள். அப்போது ஓர் அன்சாரிப் பெண்மணி அல்லது ஓர் அன்சாரித் தோழர்.., ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் உங்களுக்கு ஓர் உரை மேடை (மிம்பர்) செய்து தரலாமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் விரும்பினால் (செய்து கொடுங்கள்)” என்று பதிலளித்தார்கள். அவ்வாறே அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு (மிம்பர்) உரை மேடை ஒன்றைச் செய்து கொடுத்தார்கள். ஜும்ஆ நாள் வந்தபோது நபி(ஸல்) அவர்கள் (உரை நிகழ்த்திட) உரைமேடைக்குச் சென்றார்கள். உடனே, அந்தப் பேரீச்ச மரக்கட்டை குழந்தையைப் போல் தேம்பிய (படி அமைதியாகிவிட்ட)து. நபி(ஸல்) அவர்கள், ‘தன் மீது (இருந்தபடி உரை நிகழ்த்தும் போது) அது கேட்டுக் கொண்டிருந்த நல்லுபதேசத்தை நினைத்து (‘இப்போது நம் மீது அப்படி உபதேச உரைகள் நிகழ்த்தப்படுவதில்லையே’ என்று ஏங்கி) இது அழுது கொண்டிருந்தது” என்று கூறினார்கள். .

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3585

ஜாபிர் பன் அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்களின்) பள்ளிவாசலுக்கு பேரீச்ச மரத்தின் அடித்தண்டுகளை (தூண் கழிகளாகப்) பயன்படுத்திக் கூரை அமைக்கப்பட்டிருந்தது. நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தியபோது அவற்றில் ஒன்றின் மீது சாய்ந்து கொண்டு நிற்பது வழக்கம். அவர்களுக்காக ஓர் உரை மேடை (மிம்பர்) தயாரிக்கப்பட்டபோது அதன் மீது அவர்கள் (உரை நிகழ்த்திட) நின்றார்கள். அப்போது அது, (பத்து மாத) சினை ஒட்டகத்தைப் போன்று முனகுவதை நாங்கள் செவியுற்றோம். இறுதியில், நபி(ஸல்) அவர்கள் (இறங்கி) வந்து தம் கரத்தை அதன் மீது (அமைதிப்படுத்துவதற்காக) வைத்தார்கள். உடனே, அது அமைதியடைந்தது.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3586

ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்: உமர் இப்னு கத்தாப்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இனி தலை தூக்கவிருக்கும் ஃபித்னா) குழப்பத்தைப் பற்றிச் சொன்னதை நினைவில் வைத்திருக்கிறார் உங்களில் யார்?’ என்று கேட்டார்கள். நான், ‘நபி(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே நான் அதை நினைவில் வைத்திருக்கிறேன்” என்று சொன்னேன். உமர்(ரலி), ‘அதைக் கூறுங்கள், நீங்கள் தான் (நபி (ஸல்) அவர்களிடம்) துணிச்சலுடன் (கேள்வி கேட்டு விளக்கம் பெறக் கூடியவர்களாய்) இருந்தீர்கள்” என்று கூறினார்கள். நான், ‘ஒரு மனிதன் தன் குடும்பத்தினர் விஷயத்தில் (அவர்களின் மீது அளவு கடந்து நேசம் வைப்பதன் மூலமும்), தன்னுடைய செல்வம் விஷயத்தில் (அது இறைவழிப்பட்டிலிருந்து சுவனத்தைத் திருப்புவதன் மூலமும்,) தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறை வைப்பதன் மூலமும்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, தர்மம், நன்மை புரியும்படி கட்டளையிட்டு, தீமையிலிருந்து தடுத்தல் ஆகியவை அதற்கான பரிகாரமாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்” என பதில் கூறினேன். உமர்(ரலி), ‘நான் (‘சோதனை’ என்னும் பொருள் கெண்ட ஃபித்னாவான) இதைக் கேட்கவில்லை. கடல் அலையைப் போன்று அடுக்கடுக்காக ஏற்படக்கூடிய (நபி  (ஸல்) அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட குழப்பம் என்னும் பொருள் கொண்ட ஃபித்னா)வைப் பற்றியே கேட்கிறேன்” என்று கூறினார்கள். நான், ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. (உங்கள் காலத்தில் அவற்றில் எதுவும் தலைதூக்கப் போவதில்லை.) உங்களுக்கும் அவற்றுக்குமிடையே மூடப்பட்ட கதவொன்று உள்ளது’ எனக் கூறினேன். உடனே, உமர்(ரலி), ‘அந்தக் கதவு திறக்கப்படுமா! அல்லது உடைக்கப்படுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அது உடைக்கப்படும்” என்று பதில் சொன்னேன். அதற்கு உமர்(ரலி), ‘அது (உடைக்கப்பட்டால்) பின்னர் (மறுமை நாள் வரை) மூடப்படாமலிருக்கவே அதிகம் வாய்ப்புண்டு” என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர் அபூ வாயில்(ரஹ்) கூறினார்கள்:) நாங்கள் (ஹுதைஃபா  ரலி  அவர்களிடம்), ‘உமர்(ரலி) அந்தக் கதவு எதுவென்று அறிந்திருந்தார்களா?’ என்று கேட்டோம். ஹுதைஃபா(ரலி), ‘ஆம், நாளை (காலை) வருவதற்கு முன்பு இரவொன்று உள்ளது என்பதை அறிவது போல் உமர்(ரலி) அதை அறிந்திருந்தார்கள். ஏனெனில், பொய்கள் கலவாத செய்தியையே நான் அவருக்கு அறிவித்தேன்” என்று பதிலளித்தார்கள். அந்தக் கதவு எதுவென ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே, மஸ்ரூக் என்பாரை அவரிடம் கேட்கச் சொன்னோம். அவர் கேட்டதற்கு ஹுதைஃபா(ரலி), ‘(அந்தக் கதவு) உமர்(ரலி) தாம்” என்று பதில் கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3587

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” முடியாலான செருப்புகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தினரோடு நீங்கள் போரிடாத வரையிலும், சிறிய கண்களும் சிவந்த முகங்களும் சப்பை மூக்குகளும், தோலால் மூடப்பட்ட கேயடங்களைப் போன்ற (அகலமான) முகங்களும் கொண்ட துருக்கியருடன் நீங்கள் போரிடாத வரையிலும் உலக முடிவு நாள் வராது.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3588

இந்த ஆட்சியதிகாரத்தில் தாம் சிக்கிக் கொள்ளும் வரை அதை அதிகமாக வெறுப்பவர்களை மக்களில் சிறந்தவர்களாக நீங்கள் காண்பீர்கள். (குணங்கள் மற்றும் ஆற்றல்களைப் பொருத்த வரை) மக்கள் கரங்கங்கள் (போன்றவர்கள்) ஆவர். அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3589

(எனக்குப் பின்) உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது என்னைக் காண்பது உங்கள் மனைவி மக்கள், செல்வம் ஆகியன (உங்களுடன்) இருப்பதை விடவும் உங்களுக்கு மிகப் பிரியமானதாயிருக்கும்.

இந்த மூன்று ஹதீஸ்களையும் அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3590

நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்: நீங்கள் (அரபியரல்லா) அந்நியர்களில் ‘கூஸ்’ வாசிகளுடனும் ‘கிர்மான்’ வாசிகளுடனும் போரிடாதவரை உலக முடிவு நாள் வராது. அவர்கள் சிவந்த முகங்களும் சப்பையான மூக்குகளும் சிறிய கண்களும் உடையவர்கள். அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட (அகன்ற) கேடயங்களைப் போன்றிருக்கும். அவர்கள் முடியாலான செருப்புகளை அணிந்திருப்பார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அறிவிப்பாளர் யஹ்யா(ரஹ்) அவர்களைப் போன்றே மற்றவர்களும் இதே நபிமொழியை அப்துர் ரஸ்ஸாக் இப்னு ஹம்மாம்(ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3591

கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்: நாங்கள் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் சென்றோம். அவர்கள், ‘நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் மூன்றாண்டுகள் (மிக நெருக்கமான) தோழமை கொண்டிருந்தேன். என் வாழ்நாளிலேயே அந்த மூன்றாண்டுகளில் ஆசைப்பட்டதை விட அதிகமாக நபி மொழிகளை நினைவில் வைக்க நான் வேறெப்போதும் ஆசைப்பட்டதில்லை” என்று சொல்லிவிட்டு, தம் கையால் இப்படிச் சைகை செய்து, ‘நபி(ஸல்) அவர்கள், ‘உலக இறுதி நாள் வருவதற்கு முன்னால் நீங்கள் முடியாலான செருப்பு அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தினரோடு போரிடுவீர்கள். அவர்கள் வெட்ட வெளியில் தோன்றி உங்களுடன் போராடுவார்கள்’ என்று கூற கேட்டேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்), ‘அவர்கள் பாலை வெளியில் வசிப்பவர்கள்” என்று ஒரு முறை கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3592

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இறுதித் தீர்ப்பு நாளுக்கு முன்பாக நீங்கள் முடியாலான செருப்புகளை அணியும் ஒரு சமுதாயத்தாருடன் போர்புரிவீர்கள். மேலும், தோலால் மூடிய (அகன்ற) கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தாருடன் போரிடுவீர்கள் என அம்ர் இப்னு தக்லிப்(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3593

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்: யூதர்கள் உங்களுடன் போர் புரிவார்கள். அவர்களின் மீது (போரில்) உங்களுக்கு வெற்றியளிக்கப்பட்டு ஆதிக்கம் வழங்கப்படும். எந்த அளவுக்கென்றால், கல் கூட, ‘முஸ்லிமே! இதோ, என் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனைக் கொன்றுவிடு” என்று கூறும்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3594

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” மக்கள் போருக்குச் செல்கிற காலம் ஒன்று வரும். அப்போது, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர் எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா?’ என்று வினவப்படும். அவர்கள், ‘ஆம்” என்று பதிலளிப்பார்கள். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். பிறகு அவர்கள் புனிதப் போர் புரிவார்கள். அப்போது அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதருடன் தோழமை கொண்டவர்களுடன் தோழமை கொண்டவர்கள் எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா?’ என்று கேட்கப்படும். அவர்கள், ‘ஆம், இருக்கிறார்கள்” என்று பதிலளிப்பார்கள். உடனே, அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3595

அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்: நான் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘அதீயே! நீ ‘ஹிரா’ வைப்பார்த்ததுண்டா?’ என்று கேட்டார்கள். ‘நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது” என்று பதிலளித்தேன். அவர்கள், ‘நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை  (வலம் வருவதற்காக)ப் பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்” என்று கூறினார்கள்.  நான் என் மனத்திற்குள், ‘அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பிவிட்ட ‘தய்யி’ குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?’ என்று கேட்டுக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் (தொடர்ந்து), ‘நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதை நீ பார்ப்பாய்” என்று கூறினார்கள். நான், ‘(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தரக்காரரான) கிஸ்ரா இப்னு ஹுர்முஸ் தான் (தோற்கடிக்கப்படுவார்)” என்று பதிலளித்தார்கள். (மேலும் கூறினார்கள்:) உனக்கு வாழ்நாள் நீண்டிருந்தால் ஒருவர் தன்னுடைய கை நிறைய தங்கத்தை, அல்லது வெள்ளியை எடுத்துக்கொண்டு அதைப் பெறுபவரைத் தேடியலைவார். ஆனால், அ(ந்தத் தர்மத்)தை ஏற்கும் எவரையும் அவர் காணமாட்டார். இதையும் நீ பார்ப்பாய். உங்களில் ஒருவர் அல்லாஹ்வைச் சந்திக்கும் (மறுமை) நாளில், அவருக்கும் அவனுக்குமிடையே மொழிபெயர்த்துச் சொல்லும் மொழிபெயர்ப்பாளர் எவரும் இல்லாத நிலையில் அவனைச் சந்திப்பார். அப்போது அல்லாஹ், ‘நான் உனக்கு ஒரு தூதரை அனுப்பினேனே, அவர் உனக்கு (என் செய்தியை) எடுத்துரைக்கவில்லையா?’ என்று கேட்பான். அவர், ‘ஆம், (எடுத்துரைத்தார்)” என்று பதிலளிப்பார். பிறகு அல்லாஹ், ‘உனக்கு நான் செல்வத்தைத் தந்து உன்னை நான் மேன்மைப்படுத்தவில்லையா?’ என்று கேட்பான். அவர், ‘ஆம் (உண்மை தான்)”  என்பார். பிறகு அவர் தன் வலப்பக்கம் பார்ப்பார்; அங்கு நரகத்தைத் தவிர வேறெதையும் காணமாட்டார். தன் இடப்பக்கம் பார்ப்பார்; நரகத்தைத் தவிர வேறெதையும் காண மாட்டார். அதீ இப்னு ஹாத்திம்(ரலி) தொடர்ந்து கூறுகிறார்கள்:

நபி(ஸல்) அவர்கள், ‘பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தாவது நரகத்திலிருந்து (உங்களைக்) காத்துக் கொள்ளுங்கள். எவரிடம் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டு கூட இல்லையோ அவர் நல்ல சொல் ஒன்றைக் கொண்டாவது (நரகத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளட்டும்)” என்று சொல்லக் கேட்டேன்.

மேலும், ‘ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவதற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) பார்த்தேன். (பாரசீக மன்னன்) கிஸ்ரா இப்னு ஹுர்முஸின் கருவூலங்களை வென்றவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். நீங்கள் நீண்ட நேரம் வாழ்ந்தால் ‘ஒருவன் தங்கத்தையோ வெள்ளியையோ கைநிறைய அள்ளிக்கொண்டு அதை தர்மமாக ஏற்றுக் கொள்பவரைத் தேடியலைவதை நீ பார்ப்பாய்” என்று அபுல் காஸிம் நபி(ஸல்) அவர்கள் சொன்னதையும் நீங்கள் நிச்சயம் (நடை முறையில்) காண்பீர்கள்.

இதே நபிமொழி வேறோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் அதீ(ரலி) வாயிலாகவே அறிவிக்கப்படுகிறது. அது, ‘நான் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தேன்” என்று தொடங்குகிறது.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3596

உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை)  நடத்தியதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காக (ஜனாஸாத் தொழுகை)  நடத்தினார்கள். பிறகு, மிம்பருக்குத் திரும்பி வந்து, ‘(உங்களுக்கு முன்னேற்பாடுகளைச் செய்து வைப்பவனைப் போல்) நான் உங்களுக்கு முன்பே (ஹவ்ளுல் கவ்ஸர் எனும் சொர்க்கத் தடாகத்திற்குச்) செல்கிறேன். நான் (அப்போது) உங்களுக்கு சாட்சியம் கூறுவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவு கோல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பார்களாக ஆகி விடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும் நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொருவர் போட்டி போடுவீர்களோ என்றே நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3597

உஸாமா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் (மதீனாவின்) கோட்டைகளில் ஒரு கோட்டையின் மீது ஏறிக் கொண்டு (நோட்டமிட்டபடி) கூறினார்கள்: ‘நான் பார்க்கிறவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா? உங்கள் வீடுகள் நெடுகிலும் மழைத் துளிகள் விழுமிடங்களில் குழப்பங்கள் விளையப் போவதை நான் பார்க்கிறேன். என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3598

ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) என்னிடம் நடுங்கியபடி வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குப் பேரழிவு நேரவிருக்கிறது. இன்று யஃஜூஜ் மஃஜுஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவிற்குத் திறக்கப்பட்டுள்ளது” என்று கூறிவிட்டு, தம் பெருவிரலாலும் அதற்கு அடுத்துள்ள விரலாலும் வளையமிட்டுக் காட்டினார்கள். உடனே நான், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களிடையே நல்லவர்கள் (வாழ்ந்து கொண்டு) இருக்க (இறைவனின் தண்டனை இறங்கி) நாங்கள் அழிந்து போவோமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்! பாவங்கள் அதிகரித்துவிட்டால் (தீயவர்களுடன் நல்லவர்களும் சேர்ந்தே அழிக்கப்படுவார்கள்)” என்று பதில் கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3599

உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்:(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் (தூக்கத்திலிருந்து) விழித்தெழுந்து, ‘சுப்ஹானல்லாஹ்  அல்லாஹ் தூயவன்! எவ்வளவு பெரும் கருவூலங்களெல்லாம் (வானிலிருந்து பூமிக்கு) இறக்கியருளப்பட்டிருக்கின்றன! எவ்வளவு பெரிய குழப்பங்கள் எல்லாம் (பூமிக்கு) அனுப்பப்பட்டிருக்கின்றன!” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3600

அப்துல்லாஹ் இப்னு அபீ ஸஅஸஆ(ரஹ்) அறிவித்தார்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) என்னிடம், ‘நான் உங்களை ஆடுகளை விரும்பக் கூடியவராகவும் அதை வைத்துக் கொண்டு பராமரிப்பவராகவும் பார்க்கிறேன். எனவே, அவற்றைச் சரிவரப் பராமரித்துச் சீராக வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை மேய்ப்பவர்களையும் சரிவரப் பராமரியுங்கள். ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மக்களின் மீது ஒரு காலம் வரும். அப்போது ஒரு முஸ்லிமின் செல்வத்திலேயே சிறந்ததாக ஆடுகள் தான் இருக்கும். குழப்பங்கள் விளையும் நேரங்களில் அவற்றிலிருந்து தம் மார்க்கத்தைப் பாதுகாத்துக் கொள்ள விரண்டோடியபடி அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு அவன் மழைபொழியும் இடங்களில் ஒன்றான மலையுச்சிக்குச் சென்றுவிடுவான்” என்று சொன்னதை கேட்டேன்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3601

‘விரைவில் நிறையக் குழப்பங்கள் தோன்றும். (அந்த நேரத்தில்) அவற்றுக்கிடையே (மௌனமாகி) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனை விடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடந்து சென்று விடுபவனை விடச் சிறந்தவன் ஆவான். அப்போது நடந்து சென்று விடுபவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடச் சிறந்தவன் ஆவான். அதை அடைகிறவரை அது வீழ்த்தி அழித்துவிடமுனையும். அப்போது, புகலிடத்தையோ, அபயம் தரும் இடத்தையோ பெறுகிறவர் அதைக் கொண்டு பாதுகாப்பு பெறட்டும்.’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3602

இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்: அபூ ஹுரைரா(ரலி) அறிவித்த (மேற்கண்ட) இந்த நபிமொழியைப் போன்று நவ்ஃபல் இப்னு முஆவியா(ரலி) அவர்களிடமிருந்து அப்துர் ரஹ்மான் இப்னு முதீஉ இப்னி அஸ்வத்(ரஹ்) அவர்களும் அவர்களிடமிருந்து அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான் இபனி ஹாரிஸ்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்.

எனினும், இந்த அறிவிப்பில் அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்), ‘தொழுகையில் ஒரு தொழுகை (அஸர்) உண்டு; ஒருவருக்கு அது தவறிவிடுமாயின் அது அவரின் மனைவி மக்களும் அவரின் செல்வமும் பறிக்கப்பட்டுவிட்டதைப் போன்றதாகும்” என்னும் நபிவாசகத்தை அதிகப்படியாகக் கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3603

இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்: (ஒரு முறை) ‘விரைவில் (அன்சாரிகளான) உங்களை விடப் பிறருக்கு (ஆட்சியதிகாரத்தில் அல்லது வெற்றி கொள்ளப்படும் நாட்டின் நிதிகளைப் பங்கிடுவதில்) முன்னுரிமை வழங்கப்படும். இன்னும் நீங்கள் வெறுக்கிற சில காரியங்கள் நடக்கும்.’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உங்களின் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்குரிய உரிமைகளை அல்லாஹ்விடம் கேளுங்கள்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3604

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: (ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இந்தக் குறைஷிக் குலத்தவர்(களில் சிலர்) மக்களை அழித்து விடுவார்கள்” என்று கூறினார்கள். மக்கள், ‘(அப்படி ஒரு நிலை வந்தால்) நாங்கள் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்களிடமிருந்து மக்கள் விலகிவாழ்ந்தால் நன்றாயிருக்கும்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3605

ஸயீத் அல் உமவி(ரஹ்)அவர்கள் கூறினார்: நான் (முஆவியா ரலி அவர்களின் ஆட்சிக் காலத்தில், ஆளுநர்) மர்வான் இப்னி ஹகம் அவர்களுடனும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடனும் இருந்தேன். அப்போது அபூ ஹுரைரா(ரலி), உண்மையாளரும் உண்மைப்படுத்தப்பட்டவருமான நபி(ஸல்) அவர்கள் ‘குறைஷிகளில் சில இளைஞர்க(ளான ஆட்சியாளர்க)ளின் கைகளால் தான் என்னுடைய (இன்றைய) சமுதாயத்தின் அழிவு உண்டு’ எனக் கூறக்கேட்டேன்” என்றார்கள். உடனே மர்வான், அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம், ‘இளைஞர்களா?’ என்று கேட்க, அபூ ஹுரைரா(ரலி) அவர்களை, ‘இன்னாரின் சந்ததிகள், இன்னாரின் மக்கள்’ என்று தனித்தனியே பெயர் குறிப்பிட்டுச் சொல்வேன்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3606

ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அறிவித்தார்: மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் (இருக்கிறது)” என்று பதிலளித்தார்கள். நான், ‘இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும். என்று பதிலளிக்க நான், ‘அந்தக் கலங்கலான நிலை என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஒரு சமுதாயத்தார் என்னுடைய நேர்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழி காட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் காண்பாய்” என்று பதிலளித்தார்கள். நான், ‘அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம், நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள்; நம் மொழிகளாலேயே பேசுவார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், ‘நான் இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகிறீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களின் தலைவரையும் (இறுகப்) பற்றிக் கொள்” என்று பதில் கூறினார்கள். அதற்கு நான், ‘அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்… (என்ன செய்வது)?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘அந்தப் பிரிவுகள் அனைத்தையும்விட்டு (விலம்) ஒதுங்கி விடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு)” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3607

ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அறிவித்தார்: என் தோழர்கள் (நன்மை தரும் செயல்களைப் பற்றி அதிகமாகக் கேள்விகள் கேட்டு நபி – ஸல் – அவர்களிடமிருந்து) நன்மையைக் கற்றுக் கொண்டார்கள். நான் (தவிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் நபி – ஸல் – அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டு இனி வரவிருக்கும்) தீமையைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3608

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஒரே வாதத்தை முன் வைக்கிற இரண்டு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை இறுதி நாள் வராது என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3609

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இரண்டு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை உலக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களுக்குமிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரண்டும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும். பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3610

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்: நாங்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹவாஸின்) போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது அவர்களின் அருகே இருந்தோம். அப்போது ‘பனூ தமீம்’ குலத்தைச் சேர்ந்த ‘துல் குவைஸிரா’ என்னும் மனிதர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குக் கேடுண்டாகட்டும்! நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் நீ இழப்புக்குள்ளாம் நஷ்டமடைந்து விடுவாய்” என்று பதிலளித்தார்கள். உடனே, உமர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குக் கேடுண்டாகட்டும்! நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் நீ இழப்புக்குள்ளாம் நஷ்டமடைந்து விடுவாய்” என்று பதிலளித்தார்கள். உடனே உமர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு இவர் விவகாரத்தில் அனுமதி கொடுங்கள். இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இவரைவிட்டுவிடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகையையும் உங்களுடைய நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் செல்வார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளி வந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும்) நாணைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக்கிடைக்காது. பிறகு, அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப்படாது. பிறகு, அம்பின் இறகைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணப்படாது. அம்பானது சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன் மீது படாதவாறு) முந்தியிருக்கும். அவர்களின் அடையாளம் ஒரு கறுப்பு நிற மனிதராவார். அவரின் இரண்டு கொடுங்கைகளில் ஒன்று பெண்ணின் கொங்கை போன்றிருக்கும்… அல்லது துடிக்கும் இறைச்சித் துண்டு போன்றிருக்கும்… அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்” என்று கூறினார்கள்.

நான் இந்த நபிமொழியை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என்று சாட்சியம் அளிக்கிறேன். மேலும், அந்தக் கூட்டத்தாருடன் அலீ(ரலி) போர் புரிந்தார்கள். அப்போது நானும் அலீயுடன் இருந்தேன். அலீ(ரலி) (நபி – ஸல் – அவர்கள் அடையாளமாகக் கூறிய) அந்த மனிதரைக் கொண்டு வரும் படி கட்டளையிட, அவ்வாறே அவர் தேடப்பட்டு கொண்டு வரப்பட்டார். நபி(ஸல்) அவர்களின் வர்ணணையின் படியே அவர் இருப்பதை பார்த்தேன்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3611

அலீ(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றால், (உண்மையில் அவர்கள் சொன்னதையே அறிவிக்கிறேன். ஏனெனில்,) நான் வானத்திலிருந்து கீழே விழுந்து விடுவது, நபி அவர்களின் மீது புனைந்து சொல்வதை விட எனக்கு விருப்பமானதாகும். எனக்கும் உங்களுக்கும் இடையே உள்ள ஒரு விவகாரத்தில் நான் உங்களிடம் பேசினால் போர் என்பது சூழ்ச்சிதான் (என்பதை நினைவில் கொள்ளவும்). இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள் வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எறிந்த) அம்பு (அதன் மறுபக்கமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் செல்வார்கள். அவர்களின் இறைநம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை எங்கு நீங்கள் சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்.” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3612

கப்பாப் இப்னு அல் அரத்(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, ‘எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?’ என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரின் தலை மீது வைக்கப்பட்டு அது ஒரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்து விடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் தீ)தும் கூட அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ‘ஸன்ஆ’ விலிருந்து ‘ஹளர மவ்த்’ வரை பயணம் செய்து சொல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார். ஆயினும், நீங்கள் தான் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவரசப்படுகிறீர்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3613

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்: (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! நான் அவரைப் பற்றிய செய்தியை அறிந்து கொண்டு தங்களிடம் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம் சென்றார். ஸாபித் இப்னு கைஸ்(ரலி) தம் வீட்டில் தலையைக் (கவலையுடன்) கவிழ்த்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டார். ‘உங்களுக்கு என்ன ஆயிற்று?’ என்று அவரிடம் கேட்டதற்கு அவர், ‘(பெரும்) தீங்கு ஒன்று நேர்ந்துவிட்டது. நான் நபி(ஸல்) அவர்களின் குரலை விட என்னுடைய குரலை உயர்த்தி(ப் பேசி) வந்தேன். எனவே, என் நற்செயல்கள் வீணாம்விட்டன. நான் நரகவாசிகளில் ஒருவனாம் விட்டேன்” என்று பதிலளித்தார். உடனே, அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ஸாபித் இப்படியெல்லாம் கூறினார் என்று தெரிவித்தார். அறிவிப்பாளர் மூஸா இப்னு அனஸ்(ரஹ்) (தம் தந்தை அனஸ் இப்னு மாலிக் – ரலி – அவர்களிடமிருந்து) அறிவித்தார்கள்.

அடுத்த முறை அந்த மனிதர் (பின்வரும்) மாபெரும் நற்செய்தியுடன் திரும்பிச் சென்றார். (அதாவது அம்மனிதரிடம்) நபி(ஸல்) அவர்கள் ‘நீ ஸாபித் இப்னு கைஸிடம் சென்று, ‘நீங்கள் நரகவாசிகளில் ஒருவரல்லர்; மாறாக, சொர்க்க வாசிகளில் ஒருவரே’ என்று சொல்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3614

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்: ஒருவர் (உசைத் இப்னு ஹுளைர் – ரலி-) தம் வீட்டில் வாகனப் பிராணி (குதிரை)யிருக்க, (திருக்குர்ஆனின்) ‘அல் கஹ்ஃப்’ (18-வது) அத்தியாயத்தை ஓதினார். உடனே, அந்தப் பிராணி மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (அல்லாஹ்விடம் பொறுப்பை) ஒப்படைத்து (பிரார்த்தனை புரிந்துவிட்டு சும்மாயிருந்து)விட்டார். உடனே, மேகத் திரள் ஒன்று வந்து அவரை மூடியது. இதை அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் (மறு நாள்) சொன்னபோது நபி(ஸல்) அவர்கள், ‘இன்னாரே! ஓதிக் கொண்டேயிரு(ந்திருக்க வேண்டும் நீ)ங்கள். ஏனெனில், அந்த மேகமானது குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உங்களின் மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3615

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். அபூ பக்ர்(ரலி) என் தந்தை (ஆஸிப் இப்னு ஹாரிஸ்(ரலி)யிடம் அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களிடமிருந்து ஒர் ஒட்டகச் சேணத்தை அபூ பக்ர்(ரலி) விலைக்கு வாங்கினார்கள். அப்போது அவர்கள் என் தந்தை ஆஸிப்(ரலி) அவர்களிடம், ‘இதை என்னுடன் சுமந்துவர உங்கள் மகனை அனுப்புங்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே, நான் அவர்களுடன் அதைச் சுமந்து சொன்றேன். என் தந்தையார் அதன் விலையைப் பெற்றுக் கொள்வதற்காகப் புறப்பட்டார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் என் தந்தை, ‘அபூ பக்ரே! நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (மக்காவைத் துறந்து ஹிஜ்ரத் செய்து) சென்றபோது இருவரும் எப்படி (எதிரிகளின் கண்களில் படாமல் சமாளித்துச்) செயல்பட்டீர்கள் என எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினார்கள். (அப்போது) அபூ பக்ர்(ரலி) கூறினார்: ஆம்! நாங்கள் (மூன்று நாள் குகையில் தங்கியிருந்துவிட்டு அங்கிருந்து வெளியேறி) எங்களுடைய (அந்த) இரவிலும் அடுத்த நாளின் சிறிது நேரத்திலும் பயணம் செய்து கொள்வோம். இறுதியில் நண்பகல் நேரம் வந்துவிட்டது. பாதையில் (வெப்பம் அதிகரித்து) எவரும் நடமாட முடியாதபடி அது காலியாகிவிட்டது. அப்போது இதுவரை சூரிய வெளிச்சம் படாத, நிழல் படர்ந்த நீண்ட பாறை ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. எனவே, நாங்கள் அதனிடத்தில் தங்கினோம். நான் நபி(ஸல்) அவர்களுக்கு என் கையால் ஓரிடத்தை, அதன் மீது அவர்கள் உறங்குவதற்காகச் சமன்படுத்தித் தந்தேன். மேலும், அதன் மீது ஒரு தோலை விரித்தேன். அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நான் உங்களைச் சுற்றிலுமுள்ள சூழலை உங்களுக்காகக் கண்காணித்து வருகிறேன்; நீங்கள் (கவலையில்லாமல்) உறங்குங்கள்” என்று சொன்னேன். அவ்வாறே அவர்கள் உறங்கினார்கள். அவர்களைச் சுற்றிலுமுள்ள சூழலைக் கண்காணித்தபடி நான் புறப்பட்டேன். அப்போது ஆட்டிடையன் ஒருவன் தன் ஆடுகளுடன் (நாங்கள் தங்கியுள்ள அந்தப்) பாறையை நோக்கி நாங்கள் (ஓய்வெடுக்க) விரும்பியது போன்றே அவனும் (ஓய்வெடுக்க) விரும்பியபடி வந்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். உடனே, ‘நீ யாருடைய பணியாள்? இளைஞனே!” என்று கேட்டேன். அவன், ‘மதீனாவாசிகளில் ஒரு மனிதரின் (பணியாள்)” என்று… அல்லது மக்காவாசிகளில் ஒருவரின் (பணியாள்) என்று… பதிலளித்தான். நான், ‘உன் ஆடுகளிடம் பால் ஏதும் இருக்கிறதூ?’ என்று கேட்டேன். அவன், ‘ஆம் (இருக்கிறது)” என்று சொன்னான். நான், ‘நீ (எங்களுக்காகப்) பால் கறப்பாயா?’ என்று கேட்டேன். அவன், ‘சரி (கறக்கிறேன்)” என்று சொல்லிவிட்டு, ஆடு ஒன்றைப் பிடித்தான். நான், ‘(ஆட்டின்) மடியை (அதில் படிந்துள்ள) மண்ணையும் முடியையும் தூசுகளையும் நீக்கி உதறிக் கொள்” என்று சொன்னேன்.

-அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்: தம் இரண்டு கைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது அடித்து உதறிக் காட்டுபவர்களாக பராஉ(ரலி) அவர்களை கண்டேன்.

அவன், உட்பக்கம் கடையப்பட்ட ஒரு மரப் பாத்திரத்தில் சிறிதளவு பாலைக் கறந்தான். என்னுடன் தண்ணீருள்ள ஒரு தோல் பாத்திரம் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து நீரருந்தி, தாகத்தை தணித்துக் கொண்டு, உளூச் செய்து கொள்வதற்காக நான் அதை அவர்களுடன் சுமந்து வந்திருந்தேன். நான் நபி(ஸல்) அவர்களிடம் (அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது) சென்றேன். அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நான் விரும்பவில்லை. (எனினும்) அவர்களிடம் நான் சென்ற நேரமும், ஒன்றாக அமைந்துவிட்டது. நான் (தோல் பாத்திரத்தில் இருந்த) தண்ணீரை (மரப்பாத்திரத்திலிருந்த) பாலில் ஊற்றினேன். அதன் அடிப்பகுதி குளிர்ந்து போகும் வரை இவ்வாறு ஊற்றினேன். பிறகு நான், ‘பருகுங்கள், இறைத்தூதர் அவர்களே!” என்று சொன்னேன். அவர்கள் நான் திருபதியடையும் வரை பரும்னார்கள் பிறகு, ‘(நாம்) புறப்படுவதற்கான நேரம் வரவில்லையா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (வந்துவிட்டது)” என்று சொன்னேன். சூரியன் உச்சி சாய்ந்த பிறகு நாங்கள் பயணமானோம். எங்களை சுராக்கா இப்னு மாலிக் இப்னி தொடர்ந்து வந்தார். (அப்போது அவர் முஸ்லிமாகியிருக்கவில்லை.) நான், ‘(எதிரிகள்) நம்மிடம் வந்து சேர்ந்துவிட்டார்கள், இறைத்தூதர் அவர்களே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘கவலைப்படாதீர்கள். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் சுராகாவுக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். உடனே, சுராகாவுடன் அவரின் குதிரை தன் வயிறு வரை பூமியில் புதைந்துவிட்டது. அறிவிப்பாளர் ஸுஹைர் இப்னு முஆவியா(ரஹ்) சந்தேகத்துடன் கூறுகிறார்கள்: ‘பூமியின் ஓர் இறுகிய பகுதியில்” என்று (அபூ இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்கள் என) கருதுகிறேன். உடனே சுராகா, ‘நீங்கள் இருவரும் எனக்கு எதிராகப் பிரார்த்தித்திருப்பதாக கருதுகிறேன். எனவே, எனக்காக (இந்த வேதனையிலிருந்து என்னை விடுவிக்கும்படி) நீங்கள் இருவரும் பிரார்த்தியுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான். நான் உங்களைத் தேடி வருபவர்களை உங்களைவிட்டுத் திசைதிருப்பி விடுவேன்” என்று கூறினார். எனவே, நபி(ஸல்) அவர்கள் சுராக்காவுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். உடனே அவர் (அந்த வேதனையிலிருந்து) தப்பித்தார். அப்போதிருந்து அவர் தன்னைச் சந்திப்பவர் எவராயினும் அவரிடம், ‘உங்களுக்கு நானே போதுமானவன். நீங்கள் தேடி வந்தவர் இங்கில்லை”என்று கூறலானார். மேலும், (எங்களைத் தேடி வந்ததாகச் சொல்லும்) எவரைச் சந்தித்தாலும் திருப்பியனுப்பிக் கொண்டேயிருந்தார். அவர் எங்களுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3616

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் நலம் விசாரிக்கச் சென்றால், ‘கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தை நீக்கி) உங்களைத் தூய்மைப்படுத்திவிடும்” என்று கூறுவார்கள். (தம் அந்த வழக்கப்படியே) நபி(ஸல்) அவர்கள் கிராமவாசியிடம், ‘கவலை வேண்டாம். இறைவன் நாடினால் உங்களைத் தூய்மைப்படுத்தும்” என்று கூறினார்கள். (இதைக் கேடட்) அந்தக் கிராமவாசி, ‘நான் தூய்மை பெற்று விடுவேனா? முடியாது. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கிற சூடாம்க் கொதிக்கிற காய்ச்சலாகும். அது அவரை மண்ணறைகளைச் சந்திக்க வைக்கும்” என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் ஆம். (அப்படித்தான் நடக்கும்.)” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3617

அனஸ்(ரலி) அறிவித்தார்: ஒருவர் கிறிஸ்தவராக இருந்தார். பிறகு, அவர் இஸ்லாத்தைத் தழுவினார். ‘அல்பகரா’ மற்றும் ‘ஆலு இம்ரான்’ அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி(ஸல்) அவர்களுக்காக (வேத வெளிப்பாட்டை) எழுதி வந்தார். அவர் (மீண்டும்) கிறிஸ்தவராகவே மாறிவிட்டார். அவர் (மக்களிடம்) ‘முஹம்மதுக்கு, நான் அவருக்கு எழுதித் தந்தைத் தவிர வேறெதுவும் தெரியாது” என்று சொல்லிவந்தார். பிறகு அல்லாஹ் அவருக்கு மரணத்தையளித்தான். அவரை மக்கள் புதைத்துவிட்டனர். ஆனால் (மறு நாள்) அவரை பூமி துப்பிவிட்டிருந்தது. உடனே, (கிறிஸ்தவர்கள்), ‘இது முஹம்மது மற்றும் அவரின் தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களைவிட்டு ஓடி வந்துவிட்டதால் அவரின் மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டுவிட்டார்கள்” என்று கூறினார். எனவே, அவருக்காக இன்னும் அழகாக ஒரு புதை குழியைத் தோண்டினர். (அதில் புதைத்த பின்பு) மீண்டும் பூமி அவரை (வெளியே) துப்பி விட்டிருந்தது. அப்போதும், ‘இது முஹம்மது மற்றும் அவரின் தோழர்களுடைய வேலைதான். நம் தோழர் அவர்களைவிட்டு வந்துவிட்ட காரணத்தால் அவரைத் தோண்டி எடுத்து மண்ணறைக்கு வெளியே போட்டுவிட்டனர்” என்று கூறினர். மீண்டும் அவர்களால் குழியை அவருக்காகத் தோண்டி அதில் அவரைப் பூமி அவரை முடிந்த அளவிற்கு மிக அழமான குழியை அவருக்காகத் தோண்டி எடுத்து மண்ணறைக்கு வெளியே போட்டுவிட்டனர்” என்று கூறினர். மீண்டும் அவர்களால் குழியை அவருக்காகத் தோண்டி அதில் அவரைப் புதைத்தனர். ஆனால், அவரை பூமி மீண்டும் துப்பி விட்டிருந்தது. அப்போதுதான் அது மனிதர்களின் வேலையல்ல. (இறைவனின் தண்டனை தான்) என்று புரிந்து கொண்டனர். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டுவிட்டனர்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3618

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (தற்போதுள்ள பாரசீகப் பேரரசன்) கிஸ்ரா (குஸ்ரூ) அழிந்துவிட்டால் அவனுக்குப் பின் வேறொரு கிஸ்ரா வரமாட்டான். (தற்போதுள்ள பைஸாந்தியப் பேரரசன்) சீசர் அழிந்துவிட்டால் அவனுக்குப் பின் வேறொரு சீசர் வர மாட்டான். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (கிஸ்ரா, சீசர்) இருவருடைய கருவூலங்களையும் இறைவழியில் நீங்கள் செலவழிப்பீர்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3619

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”: (தற்போதுள்ள) கிஸ்ரா அழிந்துவிட்டால் அவனுக்குப் பின் வேறொரு கிஸ்ரா வரமாட்டான் – அறிவிப்பாளர் (முந்தைய ஹதீஸைப் போன்றே) கூறிவிட்டு(த் தொடர்ந்து) கூறினார் – அவ்விருவரின் (ம்ஸ்ரா மற்றும் சீசரின்) கருவூலங்களையும் நீங்கள் இறைவழியில் செலவழிப்பீர்கள் என ஜாபிர் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3620

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்: பெரும் பொய்யனான முஸைலிமா, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் (யமாமாவிலிருந்து மதீனாவிற்கு) வந்தான். ‘முஹம்மது தமக்குப் பின் (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்குக் கொடுத்தால் தான் நான் அவரைப் பின்பற்றுவேன் (இல்லையென்றால் அவரை ஏற்க மாட்டேன்)” என்று கூறத் தொடங்கினான். அவன் தன் குலத்தார் நிறையப் பேருடன் மதீனாவிற்கு வந்திருந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் பேச்சாளர்) ஸாபித் இப்னு கைஸ் இப்னி ஷம்மாஸ்(ரலி) அவர்களுடன் அவனிடம் சென்றார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கையில் பேரீச்ச மட்டையின் துண்டு ஒன்று இருந்தது. அவர்கள் முஸைலிமா தன் சகாக்களுடன் இருக்க, அவனருகே சென்று நின்று கொண்டு, ‘இந்த (பேரீச்ச மட்டையின்) துண்டைக் கூட நீ என்னிடம் கேட்டாலும் உனக்கு நான் இதைத் தரமாட்டேன். அல்லாஹ் உன் விஷயத்தில் எடுத்துள்ள முடிவை (- உன் நோக்கத்தில் நீ வெல்ல முடியாது என்பதை -) நீ மீறிச் சென்றுவிட முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்துப் புறங்காட்டிச் சென்றால் அல்லாஹ் உன்னை அழித்துவிடுவான். உன் விஷயம் தொடர்பாக எனக்கு எவன் (கனவில்) காட்டப்பட்டானோ அவன்தான் நீ என்று கருதுகிறேன்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3621

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”: நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என் இரண்டு கைகளிலும் இரண்டு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவை என்னைக் கவலையில் ஆழ்த்தின. உடனே, ‘அதை ஊதி விடுவீராக!” என்று கனவில் எனக்கு (இறைக் கட்டளை) அறிவிக்கப்பட்டது. அவ்வாறே, நான் அவற்றை ஊதி விட, அவையிரண்டும் பறந்து போய்விட்டன. நான் அவ்விரண்டும் எனக்குப் பின் தோன்றவிருக்கிற (தம்மை இறைத்தூதர்கள் என்று வாதிக்கப் போகும்) இரண்டு பொய்யர்கள் என்று (அவற்றுக்கு) விளக்கம் கண்டேன். அவ்வாறே அவ்விருவரில் ஒருவன் (அஸ்வத்) அல்அன்ஸிய்யாகவும் மற்றொருவன் யமாமா வாசியான பெரும் பொய்யன் முஸைலிமாவாகவும் அமைந்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3622

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நான் மக்கா நகரைத் துறந்து அங்கிருந்து பேரீச்சந் தோட்டங்கள் நிறைந்த ஒரு பூமிக்குச் செல்வதாகக் கனவு கண்டேன். அந்த பூமி ‘யமாமா’வாகவோ ‘ஹஜரா’கவோ தான் இருக்கும் என்று நான் எண்ணினேன். ஆனால், அது யஸ்ரிப் – மதீனாவாகிவிட்டது. மேலும், இந்த என்னுடைய கனவில் நான் (என்னுடைய) வாள் ஒன்றை அசைக்க, அதன் முனை உடைந்து விடுவதாகக் கண்டேன். அது உஹுதுப் போரின்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்பைக் குறித்தது. பிறகு (அதே கனவில்) மற்றொரு முறை அந்த வாளை நான் அசைக்க, அது முன்பிருந்தபடியே மீண்டும் (ஒட்டி) அழகாகியது. அது அல்லாஹ் (அதே உஹுதுப் போரில்) கொணர்ந்த உறுதிப்பாட்டையும் (சிதறி ஓடிய) முஸ்லிம்கள் (மீண்டும்) ஒன்று திரண்டதையும் குறித்தது. அந்தக் கனவில் நான் சில காளை மாடுகளை பார்த்தேன். (உஹுதில் கொல்லப்பட்டவர்களுக்கு) அல்லாஹ் அளித்த அந்தஸ்து (அவர்கள் இந்த உலகில் இருந்த நிலையை விட அவர்களுக்குச்) சிறந்ததாகும். எனவே, (அந்த மாடுகள்) உஹுதுப் போரின்போது கொல்லப்பட்ட இறைநம்பிக்கையாளர்களைக் குறிப்பவையாகும். நன்மை என்பது அல்லாஹ் நமக்குக் கொணர்ந்த நன்மையும் (இரண்டாம்) பத்ருப் போருக்குப் பிறகு அல்லாஹ் நமக்களித்த நம்முடைய வாய்மைக் கான பரிசும் (கைபர், மக்கா வெற்றிகளும்) ஆகும் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3623

ஆயிஷா(ரலி) அறிவித்தார்: ஃபாத்திமா(ரலி) (நோய் வாய்ப்பட்டிருந்த தம் தந்தை) நபி(ஸல்) அவர்களை நோக்கி வந்தார்கள். அவர்களின் நடை, நபி(ஸல்) அவர்களின் நடையைப் போன்றிருந்தது. அப்போது, நபி(ஸல்) அவர்கள், ‘வருக! என் மகளே!” என்று அழைத்து தம் வலப்பக்கம்… அல்லது இடப்பக்கம்… அமர்த்தினார்கள். பிறகு, அவர்களிடம் இரகசியமாக ஏதோ ஒரு விஷயத்தைக் கூறினார்கள். அதைக் கேட்டதும் ஃபாத்திமா(ரலி) அழுதார்கள். நான் அவர்களிடம், ‘ஏன் அழுகிறீர்கள்?’ என்று கேட்டேன். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்” என்று ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இரகசியத்தை நான் பரப்பமாட்டேன்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் இறக்கும் வரை (ஃபாத்திமா ஒன்றும் கூறவில்லை. நபி – ஸல் அவர்கள் இறந்தபோது) ஃபாத்திமா(ரலி) அவர்களிடம் நான் (அந்த இரகசியம் பற்றிக் கேட்டேன்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3624

ஆயிஷா(ரலி) அறிவித்தார்: அதற்கு அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘(வானவர்) ஜிப்ரீல் என்னை ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதச் செய்து வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை அதை இரண்டு முறை ஓதச் செய்தார்கள். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்துவிட்ட(தைக் குறிப்ப)தாகவே அதை கருதுகிறேன். என் வீட்டாரில் என்னை முதலில் வந்தடையப் போவது நீ தான்” என்று கூறினார்கள். எனவே, நான் அழுதேன். உடனே, அவர்கள், ‘சொர்க்கவாசிகளில் பெண்களின்… அல்லது இறைநம்பிக்கையாளர்களில்…. பெண்களின் தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?’ என்று கேட்டார்கள். அதைக் கேட்டு (மம்ழ்ச்சியால்) நான் சிரித்தேன்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3625

ஆயிஷா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயில் தம் மகள் ஃபாத்திமா(ரலி) அவர்களை அழைத்து, எதையோ இரகசியமாக அவர்களிடம் கூறினார்கள். ஃபாத்திமா(ரலி) அழுதார்கள். பிறகு அவர்களை அழைத்து மீண்டும் ஏதோ இரகசியமாகக் கூற அவர்கள் சிரித்தார்கள். நான் அதைப் பற்றி ஃபாத்திமா(ரலி) அவர்களிடம் கேட்டேன்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3626

ஆயிஷா(ரலி) அறிவித்தார்: அதற்கு அவர்கள், ‘என்னிடம் நபி(ஸல்) அவர்கள் இரகசியமாக, (அப்போது) தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்கள். அதனால், நான் (துக்கம் தாளாமல்) அழுதேன். பிறகு ‘அவர்களின் வீட்டாரில் முதலாவதாக அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லவிருப்பது நானே’ என்று இரகசியமாக எனக்குத் தெரிவித்தார்கள். அதனால் நான் (மம்ழ்ச்சியடைந்து) சிரித்தேன்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3627

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்: உமர் இப்னு கத்தாப்(ரலி) எப்போதும் தன்னைத் தம் அரும்லேயே வைத்திருப்பார்கள். எனவே, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், ‘எங்களுக்கு அவரைப் போன்ற மகன்கள் (பலர்) இருக்கிறார்களே (அவர்களையெல்லாம் நீங்கள் உங்கள் அருகில் வைத்துக் கொள்வதில்லையே ஏன்?)” என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலி) அவை, ‘அது உங்களுக்குத் தெரிகிற (அவர் ஒரு கல்வியாளர் என்ற) காரணத்தால் தான்” என்று பதிலளித்தார்கள். பிறகு என்னிடம், ‘அல்லாஹ்வின் உதவியும் (அவன் தரும்) வெற்றியும் வந்து விடும் போது’ என்னும் (திருக்குர்ஆன் 110:1-வது) இறைவசனத்தைப் பற்றி (விளக்கம்) கேட்டார்கள். அதற்கு நான், ‘அது ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாள் முடியப்போகிறது’ என்று அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்த வசனமாகும்” என்று பதிலளித்தேன். உடனே உமர்(ரலி), ‘நீங்கள் அறிகின்றதையே அதிலிருந்து நானும் அறிகிறேன்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3628

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்கள் ஒரு போர்வையுடன் வெளியே வந்தார்கள். அப்போது தம் தலையில் கருப்புக்கட்டு ஒன்றைப் போட்டிருந்தார்கள். மிம்பரின் (மேடை) மீதமர்ந்து அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனுடைய குணங்களை எடுத்துரைத்துப் பிறகு, ‘அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து பின் கூறுகிறேன்: (இஸ்லாத்தில் இணையும்) மக்கள், (எண்ணிக்கையில்) அதிகமாவார்கள். (ஆனால், இறைமார்க்கத்திற்கு) உதவிபுரிபவர்கள் (அன்சார்) குறைந்து போய் விடுவார்கள். எந்த அளவிற்கென்றால் உணவில் உப்பிருக்கும் அளவில் தான் (உதவுபவர்கள்) மக்களிடையே இருப்பார்கள். உங்களில் ஒருவர் சிலருக்குத் தீங்கையும் மற்றவர்களுக்கு நன்மையும் விளைவிக்கக் கூடிய ஓர் அதிகாரம் எதையும் பெற்றால் நன்மை செய்பவரிடமிருந்து அதை ஏற்று தீமை செய்பவரை மன்னித்து விடட்டும்” என்று கூறினார்கள். அது நபி(ஸல்) அவர்கள் அமர்ந்த கடைசி அலையாக இருந்தது.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3629

அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் (தம் பேரப்பிள்ளை) ஹஸன்(ரலி) அவர்களைத் தம்முடன் அழைத்து வந்து அவருடனேயே மிம்பரில் (மேடையில்) ஏறினார்கள். பிறகு, ‘இந்த என் மகன், தலைவராவார். அல்லாஹ் இவர் வாயிலாக முஸ்லிம்களின் இரண்டு குழுவினரிடையே சமாதானம் செய்து வைக்கக்கூடும்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3630

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்: ஜஅஃபர்(ரலி) அவர்களும் ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும் (மூத்தா போர்க்களத்தில்) கொல்லப்பட்டுவிட்ட செய்தி (மதீனாவுக்கு) வருவதற்கு முன்பே அதை நபி(ஸல்) அவர்கள் (இறை அறிவிப்பின் வாயிலாக அறிந்து மக்களுக்கு) அறிவித்தார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3631

ஜாபிர்(ரலி) அறிவித்தார்: “(எனக்குத் திருமணம் ஆன பொழுது) உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கின்றனவா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், ‘எங்களிடம் எப்படி அந்த விரிப்புகள் இருக்கும்?’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘விரைவில் உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கும்” என்று பதிலளித்தார்கள். ஐபின்னர் ஒரு நாளில்) நான் (என் மனைவியான) அவரிடம் ‘எங்களைவிட்டு உன் விரிப்புகளை அப்புறப்படுத்து” என்று கூறுவேன். அவள், ‘நபி(ஸல்) அவர்கள், ‘விரைவில் உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கும்’ என்று கூறவில்லையா?’ என்று கேட்பாள். ‘அப்படியானால் அவற்றை (அவ்வாறே)விட்டு விடுகிறேன்” (என்று நான் கூறுவேன்.)

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3632

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்: ஸஅத் இப்னு முஆத்(ரலி) உம்ரா செய்யச் சென்றார்கள். (மக்காவில் இணை வைப்போரின் தலைவர்களில் ஒரவனான) உமய்யா இப்னு கலஃப் அபூ ஸஃப்வானிடம் தங்கினார்கள். உமய்யா (வியாபாரத்திற்காக) ஷாம் நாட்டிற்கு மதீனா வழியாகச் செல்லும்போது ஸஅத்(ரலி) அவர்களிடம் தங்கு(ம் பழக்கம் உடையவன் ஆ)வான். உமய்யா, ‘நண்பகல் நேரம் வரும் வரை சற்றுக் காத்திருந்து, மக்கள் ஓய்வெடுத்துக் கொள்ளும் (அந்த) நேரத்தில் நீங்கள் சென்று (கஅபாவை) வலம் வரலாமே” என்று கேட்டான். அவ்வாறே, ஸஅத்(ரலி) வலம் வந்து கொண்டிருந்தபோது அபூ ஜஹ்ல் வந்து, ‘கஅபாவை வலம் வருவது யார்?’ என்று கேட்டான். ஸஅத்(ரலி), ‘நானே ஸஅத்” என்று கூறினார்கள். அதற்கு அபூ ஜஹ்ல், ‘(மதீனாவாசிகளான) நீங்கள் முஹம்மதுக்கும் அவரின் தோழர்களுக்கும் (மதீனாவில்) புகலிடம் கொடுத்திருக்க, இங்கே கஅபாவை நீ அச்சமின்றி வலம் வந்து கொண்டிருக்கிறாயா?’ என்று கேட்டான். அதற்கு ஸஅத்(ரலி), ‘ஆம் (அதற்கென்ன?)” என்று கேட்டார்கள். அவ்விருவருக்குமிடையே (அதையொட்டி) சச்சரவும் வாக்குவாதமும் ஏற்பட்டது. உடனே, உமய்யா, ஸஅத்(ரலி) அவர்களிடம், ‘அபுல் ஹகமை விட குரலை உயர்த்தாதீர். ஏனெனில், அவர் இந்த (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவர்” என்று சொன்னான். பிறகு ஸஅத்(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறையில்லத்தை வலம்வரவிடாமல் என்னை நீ தடுத்தால் நீ ஷாம் நாட்டிற்குச் செல்லும் வாணிபப் பாதையை நான் துண்டித்து விடுவேன்” என்று கூறினார்கள். அப்போது உமய்யா, ஸஅத்(ரலி) அவர்களிடம், ‘உங்கள் குரலை உயர்த்தாதீர்கள்” என்று சொல்லத் தொடங்கினான்… அவர்களைப் பேசவிடாமல் தடுக்கலானான்… எனவே, ஸஅத்(ரலி) கோபமுற்று, ‘உம் வேலையைப் பாரும். (அபூ ஜஹ்லுக்கு வக்காலத்து வாங்காதீர்.) ஏனெனில், நான் முஹம்மத்(ஸல்) அவர்கள் உன்னைக் கொல்லவிருப்பதாகச் சொல்ல கேட்டிருக்கிறேன்” என்று உமய்யாவிடம் கூறினார்கள். அதற்கு அவன், ‘என்னையா (கொல்ல விருப்பதாகக் கூறினார்?)” என்று கேட்டான். ஸஅத்(ரலி), ‘ஆம் (உன்னைத் தான்)” என்று பதிலளித்தார்கள். அவன், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மது பேசினால் பொய் பேசுவதில்லை” என்று சொல்லிவிட்டு தம் மனைவியிடம் சென்று, ‘என்னிடம் என் யஸ்ரிப் (மதீனா) நகர தோழர் என்ன கூறினார்?’ என்று வினவினாள். ‘முஹம்மது என்னைக் கொல்லவிருப்பதாகச் சொன்னாதாக அவர் கூறினார். என்று அவன் பதிலளித்தான். அவள், ‘அப்படியென்றால் (அது உண்மையாகத்தானிருக்கும்.) அல்லாஹ்வின் மீதாணையாக! முஹமமது பொய் சொல்வதில்லை” என்று சொன்னாள். மக்காவாசிகள் பத்ருப் போருக்குப் புறப்பட்டுச் செல்ல, போருக்கு அழைப்பவர் வந்(து மக்களை அழைத்)தபோது உமய்யாவிடம் அவனுடைய மனைவி, ‘உம் யஸ்ரிப் நகரத் தோழர் சொன்னது உமக்கு நினைவில்லையா?’ என்று கேட்டாள். எனவே, (பயத்தின் காரணத்தால்) அவன் போருக்குப் புறப்பட விரும்பவில்லை. அபூ ஜஹ்ல் அவனிடம், ‘நீ (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவர்களில் ஒருவன். எனவே, (நீயே போரில் கலந்து கொள்ளாமல் போய்விட்டால் நான்றாக இருக்காது.) ஒரு நாளைக்கு அல்லது இரண்டு நாட்களக்காவது போ(ய்க் கலந்து கொள்)” என்று சொன்னான். அவ்வாறே அவனும் (இரண்டு நாள்களுக்காகச்) சென்றான். (அப்படியே அவன் போர்க்களம் வரை சென்று விட, அங்கே) அல்லாஹ் அவனைக் கொன்றுவிட்டான்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3633

அபூ உஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்களிடம் உம்மு ஸலமா(ரலி) அமர்ந்திருந்தபோது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு மனிதரின் தோற்றத்தில்) வந்தார்கள். மேலும், நபி(ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் பேசத் தொடங்கிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம், ‘இவர் யார்?’ என்று கேட்க, அவர்கள், ‘இது திஹ்யா (என்ற நபித்தோழர்)” என்று பதிலளித்தார்கள். (அப்போது அது ஜிப்ரீல்(அலை) அவர்கள் தாம்” என்று உம்மு ஸலமா – ரலி – அவர்களுக்கு தெரியாது.) (பின்னர்) உம்மு ஸலமா(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான், நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்கள் சொன்னதாகத் தம் உரையில் குறிப்பிட்டதைச் செவியுறும் வரை, வந்தவர் திஹ்யா கல்பீ அவர்கள் தாம் என்றே நான் நினைத்திருந்தேன் (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்று எனக்குத் தெரியவந்தது)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் சுலைமான் இப்னு தர்கான் அத் தைமீ(ரஹ்) கூறினார்: நான் அறிவிப்பாளர் அபூ உஸ்மான்(ரஹ்) அவர்களிடம், ‘யாரிடமிருந்து இதை நீங்கள் செவியுற்றீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றேன்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3634

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நான் (கனவில்) மக்களெல்லாரும் ஒரு பொட்டல் வெளியில் ஒன்று திரண்டிருக்கக் கண்டேன். அப்போது அபூ பக்ர் எழுந்து (ஒரு கிணற்றிலிருந்து) ஒரு வாளி… அல்லது இரண்டு வாளிகள்… இறைத்தார். சிறிது நேரம் அவர் இறைத்தவுடன் சோர்வு தெரிந்தது. அல்லாஹ் அவரை மன்னிப்பானாக! பிறகு அதை உமர் எடுத்துக்கொள்ள, அது அவரின் கையில் பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரை நான் கண்டதில்லை என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

அறிவிப்பாளர் ஹம்மாம் இப்னு முனப்பிஹ்(ரஹ்) கூறினார்: “அபூ பக்ர், இரண்டு வாளிகளை இறைத்தார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என (ஒன்றா இரண்டா என்ற சந்தேகமின்றி) அபூ ஹுரைரா(ரலி) சொல்ல கேட்டேன்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3635

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்: யூதர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம், தம் சமுதாயத்தாரிடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து தவ்ராத்தில் என்ன காண்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கவர்கள், ‘அவர்களை நாம் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்கள். உடனே, (யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) ‘நீங்கள் பொய் சொன்னீர்கள். (விபசாரம் செய்தவர்களை சாகும்வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்றுதான் அதில் கூறப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். உடனே, அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் ‘விபசாரிகளுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்படவேண்டும்’ என்று கூறும் வசனத்தின் மீது தன்னுடைய கையை வைத்து மறைத்து, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார். அப்போது அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), ‘உன் கையை எடு” என்று சொல்ல, அவர் தன்னுடைய கையை எடுத்தார். அப்போது அங்கே (விபசாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை தரும்படி கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு சலாம் உண்மை கூறினார். முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனையைக் கூறும் வசனம் இருக்கத்தான் செய்கிறது” என்று கூறினார்கள். உடனே, அவ்விரண்டு பேரையும் சாகும் வரை கல்லால் அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண், அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து பாதுகாப்பதற்காக தன் உடலை (அவளுக்குக் கேடயம் போலாக்கி) அவளின் மீது கவிழ்ந்து (மறைத்துக்) கொள்வதை பார்த்தேன்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3636

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3637

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்: மக்காவாசிகள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) நபி(ஸல்) அவர்கள் காட்டினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3638

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் (இரண்டாகப்) பிளவுபட்டது.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3639

அனஸ்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (விடைபெற்று) இருள் நிறைந்த ஓர் இரவில் (தம் இல்லங்களுக்கு) நடந்து சென்றனர். அவ்விருவருடனும் இரண்டு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளிவீசிக் சென்றன. அவர்கள் (வழியில்) பிரிந்து சென்றபோது, அவர்கள் தம் வீட்டாரிடம் சென்று சேரும் வரை ஒவ்வொருவருடனும் ஓர் ஒளி (மற்றொன்றைவிட்டுப் பிரிந்து அவர்களுடன்) சென்றது.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3640

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் ஆணை (இறுதிநாள்) தம்மிடம் வரும் வரை (சத்தியப் பாதையில் சோதனைகளை) வென்று நிலைத்திருப்பார்கள். (இறுதி நாள் வரும்) அந்த நேரத்திலும் அவர்கள் மேலோங்கியவர்களாகவே இருப்பார்கள் என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3641

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்திய வண்ணமே இருப்பார்கள். அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள். அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. அவர்களை எதிர்ப்பவர்களும் அவர்களுக்குத் தீங்கு செய்யமுடியாது. இறுதியில், அவர்கள் அதே நிலையில் நீடித்திருக்க, அல்லாஹ்வின் ஆணை (இறுதி நாள்) அவர்களிடம் வரும்.

இதை முஆவியா(ரலி) அறிவிக்க, அவர்களிடம் மாலிக் இப்னு யுகாமிர்(ரஹ்), ‘(அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தும்) அவர்கள் ஷாம் தேசத்திலிருப்பார்கள்’ என்று முஆத்(ரலி) கூறினார்” என்று கூறினார்கள். அதற்கு முஆவியா(ரலி) இருப்பார்கள்’ என்று முஆத்(ரலி) சொல்ல தாம் கேட்டதாகக் கருதுகிறார்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3642

ஷபீப் இப்னு ஃகர்கதா(ரஹ்) அறிவித்தார் என் குலத்தார் உர்வா இப்னு அபில் ஜஅத்துல் பாரிகீ(ரலி) அவர்களைப் பற்றிப்பேசிக் கொண்டிருந்ததை கேட்டேன். உர்வா(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அவர் ஓர் ஆட்டை வாங்குவதற்காக ஒரு தீனாரை (பொற்காசைக்) கொடுத்தார்கள். அதைக் கொண்டு அவர் இரண்டு ஆடுகளை வாங்கினார். அவ்விரண்டில் ஒன்றை அவர் ஒரு தீனாருக்கு விற்றுவிட்டு ஒரு தீனாரையும் ஓர் ஆட்டையும் கொண்டு வந்தார். (அதைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள் அவரின் வியாபாரத்தில் அவருக்கு பரக்கத் (எனும் அருள்வளம்) கிடைத்திடப் பிரார்த்தித்தார்கள். (அதன் பயனாக) அவர் மண்ணை வாங்கினாலும் அதில் இலாபமடைந்து விடுவார் என்ற நிலையில் இருந்தார்.

அறிவிப்பாளர்: சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) ஹஸன் இப்னு உமாரா(ரஹ்) இந்த ஹதீஸை, உர்வா இப்னு அபில் ஜஅத்(ரலி) அவர்களிடமிருந்து ஷபீப் இப்னு ஃகர்கதா(ரஹ்) அறிவித்தார் என்று சொல்லி எம்மிடம் கொண்டு வந்தார். நான் அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஷபீப் இப்னு கர்கதா(ரஹ்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம், ‘நான் இந்த ஹதீஸை உர்வா அல் பாரிகீ(ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகச்) செவியுறவில்லை. என் குலத்தார் உர்வா அவர்களிடமிருந்து அறிவிப்பதை மட்டுமே செவியுற்றேன்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3643

‘(மேற் சொன்ன ஹதீஸை நான் உர்வா அவர்களிடம் கேட்கவில்லை.) ஆனால், நபி(ஸல்) அவர்கள், ‘குதிரைகளின் நெற்றிகளுடன் மறுமை நாள் வரையிலும் நன்மை பிணைக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்கள் என உர்வா அல் பாரிகீ(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன். அவர்களின் வீட்டில் நான் எழுபது குதிரைகளைப் பார்த்திருக்கிறேன்” என்று ஷபீப் இப்னு ஃகர்கதா(ரஹ்) கூறினார்கள்.

மேலும், அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்), ‘உர்வா(ரலி) நபி(ஸல) அவர்களுக்காக (அவர்கள் சார்பாக) ஓர் ஆட்டை வாங்குவார்கள். அது குர்பானீ ஆடு போலும்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3644

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” குதிரைகளின் நெற்றிகளுடன் மறுமை நாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3645

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” குதிரைகளின் நெற்றிகளுடன் நன்மை பிணைக்கப்பட்டுள்ளது. என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3646

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” குதிரை, (வைத்திருப்பது) மூன்று பேருக்கு (மூன்று வகையான விளைவுகளைத் தருவதாகும்.) ஒரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தருவதாகும்; மற்றொரு மனிதருக்குப் (பொருளதாரப்) பாதுகாப்பளிக்கக் கூடியதாகும்; இன்னொரு மனிதருக்குப் பாவச்சுமையாகும். அதை இறை வழியில் பயன்படுத்துவதற்காக, அதனைப் பசுமையான ஒரு வெட்ட வெளியில்… அல்லது ஒரு தோட்டத்தில்… ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கிற மனிதருக்கு அது (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தரும். அந்த குதிரை, தன்(னைக் கட்டியிருக்கும்) கயிற்றின் நீளத்திற்கு ஏற்ப எந்த அளவு தொலைவிற்குப் பசும்புல் வெளியில் … அல்லது தோட்டத்தில்… மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும்.

அதன் கயிறு அறுந்து, அது ஓரிரண்டு குதிகுதித்து (அல்லது ஓரிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றாலும் அதனுடைய (குளம்பின்) சுவடுகளின் அளவிற்கும் அதன் கெட்டிச் சாணத்தின் அளவிற்கும் அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அந்த குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அதன் உரிமையாளருக்கு இல்லாமல் இருந்தாலும் அது அவர் செய்த நன்மைகளின் கணக்கில் எழுதப்படும். இன்னொருவர் அதன் தேவைகளை நிறைவு செய்து கொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும் அதைக் கட்டி வை(த்துப் பராமரி)க்கிறவராவார். மேலும், அதனுடைய பிடரியின் (ஸகாத்தைச் செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்க முடிந்த பளுவை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கி வைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காதவராவார். இப்படிப்பட்டவருக்கு இந்த (அவருடைய) குதிரை(வறுமையிலிருந்து அவரைக் காக்கும்) திரையாகும். மற்றொருவன் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் முஸ்லிம்களுடன் பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டி வை(த்து பராமரி)க்கிறவன் ஆவான். அதன் (தவறான நோக்கத்தின்) காரணத்தால, அது அவனுக்குப் பாவச் சுமையாக ஆம் விடுகிறது.

நபி(ஸல்) அவர்களிடம் கழுதைகளைக் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அவற்றைக் குறித்து எந்த இறைகட்டளையும் எனக்கு அருளப்படவில்லை; ‘எவன் அணுவளவு நன்மை செய்திருந்தானோ அவன் அத(ன் நற்பல)னைக் கண்டு கொள்வான். மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அத(ற்கான தண்ட) னை(யை)க் கண்டு கொள்வான்’ (திருக்குர்ஆன் 99: 7{8) என்னும் இந்த ஒருங்கிணைந்த, தனித்தன்மை வாய்ந்த திருக்குர்ஆன் வசனத்தைத் தவிர” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3647

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (போருக்காக) அதிகாலை நேரத்தில் கைபருக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது (யூதர்களான) கைபர்வாசிகள் (வயல் வெளிகளை நோக்கி) மண்வெட்டிகளை எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும் அவர்கள், ‘முஹம்மதும் ஐந்து (பிரிவுகள் கொண்ட அவரின்) படையினரும் வருகின்றனர்” என்று கூறினார்கள். உடனே கோட்டையை நோக்கி விரைந்தோடிச் சென்றார்கள். அப்போது, நபி(ஸல்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் உயர்த்தி, ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் (வாசிகளின் நிலை) நாசமாம்விடும். ‘நாம் ஒரு சமுதாயத்தினரின் முற்றத்தில் இறந்து விடுவோமாயின் எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த அவர்களுக்கு அதுமிகக் கொட்ட காலை நேரமாம்விடும்’ என்று (திருக்குர்ஆன் 37: 177-வது இறைவசனத்தின் கருத்தைச்) கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3648

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் தங்களிடமிருந்து நிறைய செய்திகளைச் செவியுற்றிருக்கிறேன். ஆனால், அவற்றை நான் மறந்து விடுகிறேன்” என்று (நபி(ஸல்) அவர்களிடம்) சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘உன் மேலங்கியை விரி” என்று சொல்ல, நானும் அதை விரித்தேன். பிறகு அவர்கள் தம் இரண்டு கைகளால் (எதையோ அள்ளுவது போல் சைகை செய்து) அதில் அள்ளி(க் கொட்டி)னார்கள். பிறகு ‘இதைச் சேர்த்து (நெஞ்சோடு) அணைத்துக் கொள்” என்று கூறினார்கள். நானும் அவ்வாறே அதை (என் நெஞ்சோடு) சேர்த்தணைத்துக் கொண்டேன். அதன் பிறகு எந்த ஹதீஸையும் நான் மறக்கவில்லை.