Featured Posts

62.நபித்தோழர்களின் சிறப்புகள்

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3649

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”. மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போருக்குச் செல்வார்கள். அப்போது, (அவர்கள் யார் மீது படையெடுத்துச் செல்கிறார்களோ) அவர்கள், ‘உங்களிடையே இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றனரா?’ என்று கேட்பார்கள். ‘ஆம், இருக்கிறார்கள்” என்று (போரிடச் சென்ற) அவர்கள் பதில் செல்வார்கள். உடனே, போருக்குச் சென்ற அவர்களுக்கு வெற்றி அளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போர் புரியச் செல்வார்கள். (அவர்களிடம்), ‘உங்களிடையே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கிறார்களா?’ என்று கேட்கப்படும். போருக்குச் சென்றவர்கள், ‘ஆம், இருக்கிறார்கள்” என்று சொல்வார்கள். உடனே, அவர்களுக்கு வெற்றி அளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் போருக்குச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதருடைய தோழர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்களுடன், தோழமை கொண்டவர்கள் உங்களிடையே இருக்கின்றனரா?’ என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், ‘ஆம், இருக்கிறார்கள்” என்று பதிலளிப்பார்கள். உடனே, அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3650

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என் சமுதாயத்தினரில் சிறந்தவர்கள் என்னுடைய தலைமுறையினரே. பிறகு, (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்துவரும் தலைமுறையினர் ஆவர். அதற்கு அடுத்து (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வரும் தலைமுறையினர் ஆவர். பிறகு, உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தினர் (வர) இருக்கிறார்கள். அவர்கள், தங்களிடம் சாட்சியம் சொல்லும்படி கேட்கப்படாமலேயே சாட்சியம் சொல்வார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள்; (மக்களின்) நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால், அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.

(இதை அறிவிக்கும் நபித்தோழர்) இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) கூறினார்: நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலை முறைக்குப் பிறகு இரண்டு தலைமுறைகளைக் கூறினார்களா, அல்லது மூன்று தலைமுறைகளைக் கூறினார்களா என்று எனக்குத் தெரியாது.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3651

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர். அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். அவர்களுக்கும் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். பின்னர், ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களின் சத்தியம் அவர்களின் சாட்சியத்தை முந்திக் கொள்ளும். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் நகயீ(ரஹ்) கூறினார்: நாங்கள் விவரமில்லாத சிறுவர்களாயிருந்தபோது, ‘அஷ்ஹது பில்லாஹ் – அல்லாஹ்வை முன்னிறுத்தி நான் சாட்சியம் கூறுகிறேன்” என்றோ, ‘அலய்ய அஹ்துல்லாஹ் – அல்லாஹ்வுடன் நான் செய்த ஒப்பந்தப்படி” என்றோ சொன்னால் பெரியவர்கள் முஹாஜிர்களில் ஒருவர் தாம்.

அல்லாஹ் கூறினான்: மேலும், (ஃபய்உ எனும் அச்செல்வம்) தங்களின் இல்லங்களை விட்டும் – சொத்துக்களை விட்டும் வெளியேற்றப்பட்ட ஏழை முஹாஜிர்களுக்கு உரியதுமாகும். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் அவனுடைய உவப்பையும் விரும்புகிறார்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி புரிந்திடத் தயாராயிருக்கிறார்கள். இவர்களே வாய்மையாளர்களாவர். (திருக்குர்ஆன் 59:08)

மேலும் அல்லாஹ் கூறினான்: நீங்கள் இந்த நபிக்கு உதவாவிட்டால் (அதனால் என்ன?), இறை மறுப்பாளர்கள் அவரை வெளியேற்றியபோது, நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவியுள்ளான். அவர்கள் இருவரும் குகையில் தங்கியிருந்தபோது இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் – தன் தோழரை நோக்கி, ‘கவலை கொள்ளாதீர்; அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” என்று கூறினர். (திருக்குர்ஆன் 09:40)

“அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் (‘ஸவ்ர்’) குகையில் இருந்தார்கள்” என்று ஆயிஷா(ரலி) அவர்களும், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் கூறுகின்றனர்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3652

பராஉ(ரலி) அறிவித்தார். அபூ பக்ர்(ரலி) (என் தந்தை) ஆஸிப்(ரலி) அவர்களிடமிருந்து பதின்மூன்று திர்ஹம்கள் கொடுத்து ஓர் ஒட்டகச் சேணத்தை வாங்கினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) (என் தந்தை) ஆஸிபிடம், ‘(உங்கள் மகன்) ‘பராவூ’க்குச் கட்டளையிடு’கள். என் சேணத்தை என்னிடம் அவர் சுமந்து வரட்டும்” என்று கூறினார்கள். அதற்கு ஆஸிப்(ரலி)’ இணைவைப்போர் உங்களைத் தேடிக் கொண்டிருக்க, நீங்களும் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் மக்காவைவிட்டு வெளியேறியபோது எப்படி செயல்பட்டீர்கள் என்று எனக்கு நீங்கள் அறிவிக்காத வரை நான் (‘பராஉ’க்கு சேணம் கொண்டு வரும்படி) கட்டளையிட மாட்டேன்” என்று கூறினார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), பின்வருமாறு பதிலளித்தார்கள்: நாங்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு இரவு பகலாகக் கண்விழித்துப் பயணித்தோம். அல்லது எங்கள் இரவிலும் பகலிலும் நாங்கள் நடந்தோம். இறுதியில், நண்பகல் நேரத்தை அடைந்தோம். உச்சிப் பொழுதின் கடும் வெயில் அடிக்கலாயிற்று. ஒதுங்குவதற்கு நிழல் ஏதும் தென்படுகிறதா என்று நான் நோட்டமிட்டேன். அப்போது பாறையொன்று தென்பட்டது. அங்கு நான் சென்றேன். அப்போது அங்கிருந்த நிழலைக் கண்டு அந்த இடத்தைச் சமப்படுத்தினேன். பிறகு, நபி(ஸல்) அவர்கள் படுத்தார்கள். பிறகு நான் எவரேனும் எங்களைத் தேடி வந்திருக்கிறார்களா என்று என்னைச் சுற்றிலும் நோட்டமிட்டபடி நடந்தேன். அப்போது ஆடு மேய்ப்பவன் ஒருவன் தன் ஆட்டை (நாங்கள் தங்கியிருந்த) பாறையை நோக்கி ஓட்டிக் கொண்டு வருவதைக் கண்டேன். நாங்கள் (ஓய்வெடுக்க) விரும்பியது போன்று அவனும் (ஓய்வெடுக்க) நாடி வந்து கொண்டிருந்தான். நான் அவனிடம், ‘நீ யாருடைய பணியாள்? இளைஞனே!” என்று கேட்டேன். அவன், ‘குறைஷிகளில் ஒருவரின் பணியாள்” என்று கூறி அவரின் பெயரைக் குறிப்பிட்டான். நான் அவர் இன்னாரெனப் புரிந்து கொண்டேன். எனவே, ‘உன் ஆடுகளில் சிறிது பால் இருக்குமா?’ என்று கேட்டேன். அவன், ‘ஆம், (இருக்கிறது)” என்று பதிலளித்தான். நான், ‘நீ எங்களுக்காகப் பால் கறந்து தருவாயா?’ என்று கேட்டேன். அவன், ‘ஆம் (கறந்து தருகிறேன்)” என்று பதிலளித்தான். நான் அவனுடைய ஆட்டு மந்தையிலிருந்து ஓர் ஆட்டைப் பிடிக்கும்படி உத்தரவிட அவ்வாறே அவன் பிடித்தான். பிறகு நான் அதன் மடியைப் புழுதி போக உதறும்படி அவனுக்கு உத்தரவிட்டேன். பிறகு அவனுடைய இருகைகளையும் உதறும்படி அவனுக்கு உத்தரவிட்டேன். ‘இப்படி” என்று பராஉ(ரலி) தம் இருகைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது தட்டினார்கள். என அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக்(ரலி) கூறினார்: அவன் எனக்குச் சிறிது பாலைக் கறந்து தந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக தோல் குவளை ஒன்றை நான் வைத்திருந்தேன். அதன் வாய் ஒரு துண்டுத் துணியால் மூடப்பட்டிருந்தது. நான் (அதிலிருந்த) நீரை அந்தப் பால் (குவளை) மீது, அதன் அடிப்பகுதி குளிர்ந்து விடும் வரை ஊற்றினேன். பிறகு அதை எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் செல்ல அப்போது அவர்களும் விழித்தெழுந்து விட்டிருந்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! என்று நான் சொல்ல அவர்கள், ‘ஆம்” என்று பதிலளித்தார்கள். மக்கள் எங்களை (வலை வீசித்) தேடிக் கொண்டிருக்க, நாங்கள் புறப்பட்டோம். (அது வரை இஸ்லாத்தை ஏற்றிராத) சுராக்கா இப்னு மாலிக் இப்னி ஜுஃஷும் என்பவர் தன் குதிரை மீதமர்ந்தபடி எங்களைக் கண்டுவிட்டதைத் தவிர எதிரிகளில் எவரும் எங்களைக் காணவில்லை. (எதிரிகள் எங்களைத் தேடி வந்தபோது) நான், ‘இதோ நம்மைத் தேடி வந்தவர்கள் நம்மை வந்தடைந்து விட்டார்கள், இறைத்தூதர் அவர்களே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘கவலைப்படாதீர்கள், அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3653

அபூ பக்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர்) குகையில் இருந்தபோது அவர்களிடம், ‘(குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக் கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பார்த்தால் நம்மைக் கண்டு கொள்வார்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘எந்த இரண்டு நபர்களுடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கிறானோ அவனைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள், அபூ பக்ரே!” என்று கேட்டார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3654

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன் நோய்வாய்பட்டிருந்த போது) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள் அதில், ‘அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது – இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கூறினான். அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்தார்” என்று கூறினார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கி விட்டதை உணர்ந்து) அழுதார்கள். ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள், விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள சுயாதிகாரம் அளிக்கப்பட்ட அடியாரைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு இவர் ஏன் அழுகிறார்?’ என்று நாங்கள் வியப்படைந்தோம். இறைத்தூதர் தாம் அந்த சுயாதிகாரம் அளிக்கப்பட்ட அடியார். (நபி – ஸல் – அவர்களின் இறப்பையே இது குறிக்கிறது என்பதை அபூ பக்ர் – ரலி – அறிந்து கொண்டார். ஏனெனில்,) அபூ பக்ர்(ரலி) எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘தன் நட்பிலும் தன் செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர் அபூ பக்ரேயாவார். என் இறைவனல்லாத வேறெவரையாவது நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூ பக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அவருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத் தான் செய்கின்றன. (என்னுடைய இந்தப்) பள்ளி வாசலில் எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்; அபூ பக்ரின் வாசலைத் தவிர” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3655

இப்னு உமர்(ரலி) கூறினார். நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் இன்னார், இன்னார் என்று மதிப்பிட்டு வந்தோம். (முதலில்) அபூ பக்ர்(ரலி) அவர்களைச் சிறந்தவராக மதிப்பிட்டோம். பிறகு உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களையும் பிறகு உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களையும் சிறந்தவர்களாக மதிப்பிட்டு வந்தோம்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3656

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (இறைவனைத் தவிர வேறு) ஒருவரை நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூ பக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், அவர் (மார்க்கத்தில்) என் சகோதரரும், (இன்ப – துன்பம் யாவற்றிலும்) என் தோழரும் ஆவார் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3657

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நான் உற்ற நண்பராக எவரையேனும் ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அவரையே (அபூ பக்ர் அவர்களையே) ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமே சிறந்ததாகும்.

இதை அய்யூப்(ரஹ்) (இக்ரிமா – ரஹ் – அவர்களிடமிருந்தும், அவர்கள் இப்னு அப்பாஸ் – ரலி – அவர்களிடமிருந்தும்) அறிவித்தார்கள். இதே ஹதீஸ் வேறொர் அறிவிப்பாளர் தொடர் வழியாக அய்யூப்(ரஹ்) அவர்களிடமிருந்தே அறிவிக்கப்படுகிறது.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3658

அப்துல்லாஹ் இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார். கூஃபாவாசிகள் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களிடம் பாட்டனாரின் வாரிசுப் பங்கு குறித்து எழுதிக் கேட்டார்கள். அதற்கு இப்னு ஸுபைர்(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள், ‘நான் இந்த சமுதாயத்தினரிலிருந்து எவரையாவது உற்ற தோழராக ஆக்கிக் கொள்ள விருமபியிருந்தால் அவரையே ஆக்கிக் கொண்டிருப்பேன்’ என்று எவரைக் குறித்துக் கூறினார்களோ அவர்கள், பாட்டனாரைத் தந்தையின் ஸ்தானத்திற்குச் சமமாக ஆக்கியுள்ளார்கள்” என்று அபூ பக்ர்(ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு பதில் கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3659

ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, ‘நான் வந்து தங்களைக் காண (முடிய)வில்லையென்றால்…?’ என்று, – நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் (என்ன செய்வது?) என்பது போல்- கேட்டாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீ என்னைக் காணவில்லையென்றால் அபூ பக்ரிடம் செல்” என்று பதில் கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3660

ஹம்மாம் இப்னு அல்ஹர்ஸ்(ரஹ்) அறிவித்தார். “(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும் இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண்களில்) அபூ பக்ர்(ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன்” என்ன அம்மார் இப்னு யாசிர்(ரலி) சொல்ல கேட்டேன்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3661

அபுத் தர்தா(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ பக்ர்(ரலி) தம் முழங்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் தோழர் வழக்காட வந்துவிட்டார்” என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (நபி – ஸல் – அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருககும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்துவிட்டார். எனவே, உங்களிடம் வந்தேன்” என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘அபூ பக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர்(ரலி) (அபூ பக்ர் – ரலி – அவர்களை மன்னிக்க மறுத்துவிட்டதற்காக) மனம் வருந்தி அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, ‘அங்கே அபூ பக்ர்(ரலி) இருக்கிறார்களா?’ என்று கேட்க வீட்டார், ‘இல்லை” என்று பதிலளித்தார்கள். எனவே, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூ பக்ர்(ரலி) பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நானே (வாக்கு வாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாகி விட்டேன்.” என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். ‘பொய் சொல்கிறீர்’ என்று நீங்கள் கூறினீர்கள். அபூ பக்ர் அவர்களோ, ‘நீங்கள் உண்மையே சொன்னீர்கள்’ என்று கூறினார்; மேலும் (இறை மார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து)விட்டு விடுவீர்களா?’ என்று இரண்டு முறை கூறினார்கள். அதன் பிறகு அபூ பக்ர்(ரலி) மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3662

அம்ர் இப்னு ஆஸ்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘தாத்துஸ் ஸலாஸில்’எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஆயிஷா” என்று பதிலளித்தார்கள். நான், ‘ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆயிஷாவின் தந்தை (அபூ பக்ர்)” என்று பதிலளித்தார்கள். ‘பிறகு யார் (பிரியமானவர்)?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பிறகு உமர் இப்னு கத்தாப் தான் (எனக்கு மிகவும் பிரியமானவர்)” என்று கூறிவிட்டு, மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளைக் குறிப்பிட்டார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3663

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ‘ஓர் ஆட்டிடையர் தன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது ஓநாய் ஒன்று அவற்றின் மீது பாய்ந்து ஓர் ஆட்டைக் கவ்விச் சென்றது. ஆடு மேய்ப்பவர் அதைத் துரத்திச் சென்றார். ஓநாய் அவரைத் திரும்பிப் பார்த்து, ‘கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக இறுதி) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார்? அந்த நாளில் என்னைத் தவிர இதற்குப் பொறுப்பாளன் எவனுமில்லையே’ என்று கூறியது. (இவ்வாறே) ஒருவர் ஒரு மாட்டின் மீது சுமைகளை ஏற்றிவிட்டு அதை ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தபோது, அது அவரைத் திரும்பிப் பார்த்துப் பேசியது. ‘நான் இதற்காக (சுமை சுமப்பதற்காக)ப் படைக்கப்படவில்லை. மாறாக, நான் (நிலத்தை) உழுவதற்காகத் தான் படைக்கப் பட்டுள்ளேன்’ என்று அது கூறிற்று’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே மக்கள், ‘அல்லாஹ் தூயவன்” என்று (வியந்து) கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நானும் அபூ பக்ரும் உமர் இப்னு கத்தாபும் இதை (இந்த நிகழ்ச்சிகளை) நம்புகிறோம்” என்று கூறினார்கள்.

“அபூ பக்ர், உமர் இருவரைக் குறித்தும் அல்லாஹ் திருப்தியடைவானாக!” (என்று அறிவிப்பாளர் பிரார்த்திக்கிறார்.)

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3664

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”. நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை, வாளி தொங்கிக் கொண்டிருந்த ஒரு கிணற்றின் அருகே கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவிற்கு(த் தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூ குஹாஃபாவின் மகன் (அபூ பக்ர் அவர்கள்) அதை எடுத்துக் கொண்டு அதிலிருந்து ஒரு வாளி நீரை…. அல்லது இரண்டு வாளிகள் நீரை… இறைத்தார். அவர் (சிறிது நேரம்) இறைத்தபோது சோர்வு தெரிந்தது. அல்லாஹ் அவரின் சோர்வை மன்னிப்பானாக! பிறகு, அது மிகப் பெரிய வாளியாக மாறிவிட்டது. அப்போது அதை கத்தாபின் மகன் உமர் எடுத்தார். உமர் இறைத்தைப் போன்று இறைக்கிற (வலிமை மிக்க) ஒரு புத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரை மக்களில் நான் பார்த்ததில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டி வைக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3665

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். “தன் ஆடையைத் தற்பெருமையின் காரணத்தால் (பூமியில் படும்படி கீழே தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டு செல்கிறவனை அல்லாஹ் மறுமையில் ஏறிட்டும் பார்க்க மாட்டான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி), ‘நான் கவனமாக இல்லாவிட்டால் என்னுடைய ஆடையின் ஒரு பக்கம் கீழே தொங்கி விடுகிறது” என்று கூறினார்கள். அதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அதைத் தற்பெருமை பாராட்டுவதற்காகச் செய்வதில்லையே” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: மூஸா(ரஹ்) கூறினார்: நான் சாலிம்(ரஹ்) அவர்களிடம், ‘அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), ‘தன் கீழங்கியை இழுத்துக் கொண்டு செல்கிறவன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனவோ கூறினார்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) ‘(எவன்) தன் ஆடையை’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3666

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறைவழியில் ஏதேனும் ஒரு ஜோடிப் பொருள்களைச் செலவிட்டவர் சொர்க்கத்தின் வாசல்களில் (ஒவ்வொன்றில்) இருந்து ‘அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்ததாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்)’ என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளியாக இருந்தவர் தொழுகைக்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். ஜிஹாத் (அறப்போர்) புரிபவராக இருந்தவர் ஜிஹாதுக்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். தர்மம் (ஸஜ்தா) செய்பவராக இருந்தவர் தர்மத்திற்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். நோன்பாளியாக இருந்தவர் நோன்பின் வாசலிலிருந்தும், ‘அர்ரய்யான்’ என்னும் (நோன்பாளிகளுக்கே உரிய சிறப்பு) வாசலிலிருந்து அழைக்கப்படுவார்’ உரிய சிறப்பு) வாசலிலிருந்தும் அழைக்கப்படுவார்’ என்று கூறினார்கள். உடனே அபூ பக்ர்(ரலி), ‘இந்த வாசல்களிலிருந்து அழைக்கப்படுபவருக்குத் துயரம் எதுவும் இருக்காது. (அவர் எந்த வழியிலாவது சொர்க்கம் சென்றுவிடுவார்.) என்று கூறிவிட்டு, ‘அவை அனைத்திலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள், ‘நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன், அபூ பக்ரே” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3667

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார். (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) (பனூ ஹர்ஸ் குலத்தாரின் இல்லங்கள் அமைந்துள்ள) ‘ஸுன்ஹ்’ என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள். – அறிவிப்பாளர் இஸ்மாயீல்(ரஹ்), ‘அதாவது ஆலியாவில்” என்று கூறினார்.

அப்போது உமர்(ரலி) எழுந்து, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான் – நபி(ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்றே – தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி – ஸல்- அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்” என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, ‘தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதும் ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்யமாட்டார்கள்” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள். (வெளியே வந்தபின் உமர் அவர்களை நோக்கி,) ‘(நபி – ஸல் – அவர்கள் இறக்கவில்லையென்று) சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள்” என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) பேசியபோது உமர்(ரலி) அமர்ந்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3668

அப்போது, அபூ பக்ர்(ரலி) அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றிவிட்டு, ‘முஹம்மத்(ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தவர், முஹம்மத்(ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்’ அல்லாஹ் (என்றும்) உயிர் வாழ்பவன்; அவன் இறக்கமாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்” என்று கூறினார்கள். மேலும், ‘நபியே! நீங்களும் இறப்பவர் தாம்; அவர்களும் இறப்பவர்களே’ என்னும் (திருக்குர்ஆன் 39:30-ம்) இறை வசனத்தையும், ‘முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே, அவர் இறந்து விட்டாலோ, (போரில்) கொல்லப்பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக்கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கிறானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதி பலனை மிக விரைவில் வழங்குவான்’ என்னும் (திருக்குர்ஆன் 03:144-ம்) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள். அன்சாரிகள் (தம்) ‘பனூ சாஇதா’ சமுதாயக் கூடத்தில் ஒன்று கூடி (தம் தலைவர்) ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம், ‘எங்களில் ஒரு தலைவர்; உங்களில் ஒரு தலைவர் (ஆக இருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம்’ என்று முஹாஜிர்களிடம் சொல்வோம்)” என்று பேசிக் கொண்டார்கள். அப்போது அபூ பக்ர், உமர் இப்னு கத்தாப், அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) ஆகியோர் (ஆட்சித் தலைவரை முடிவு செய்ய) அன்சாரிகளிடம் வந்தனர். உமர்(ரலி) பேசப் போனார்கள். உடனே அவர்களை அபூ பக்ர்(ரலி) மௌனமாக இருக்கச் சொல்லி விட்டார்கள். (இதைப் பிற்காலத்தில் நினைவு கூரும் போது) உமர் அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பேச முயன்றது எதற்காக என்றால், நான் எனக்குப் பிடித்த பேச்சு ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தேன். அபூ பக்ர் அவர்கள் அந்த அளவிற்குப் பேச மாட்டார்கள் என்று நான் அஞ்சினேன். எனவேதான் நான் பேச முயன்றேன்’ என்று கூறி வந்தார்கள்.

பிறகு, அபூ பக்ர்(ரலி) பேசினார்கள். மக்களிலேயே உரை நயம் மிக்கவர்களாக அவர்கள் பேசினார்கள். அவர்கள் தம் பேச்சில், ‘(குறைஷிகளாகிய) நாங்கள் ஆட்சித் தலைவர்களாயிருப்போம்; (அன்சாரிகளான) நீங்கள் அமைச்சர்களாயிருங்கள்’ என்று கூறினார்கள். உடனே, (அன்சாரியான) ஹுபாப் இப்னு முன்திர்(ரலி), ‘இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம். எங்களிடையேயிருந்து ஒரு தலைவரும் (தேர்ந்தெடுத்துக் கொள்வோம்) என்று கூறினார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), ‘இல்லை; நாங்களே தலைவர்களாயிருப்போம். நீங்கள் அமைச்சர்களாயிருங்கள். ஏனெனில், குறைஷிகள் தாம் அரபுகளில் சிறந்த ஊரை (மக்காவை)ச் சேர்ந்தவர்களும், சிறந்த செயல்திறன் மிக்கவர்களும்ஆவர். எனவே, உமர் இப்னு கத்தாப், அல்லது அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்” என்று கூறினார்கள். அப்போது உமர்(ரலி), ‘இல்லை” நாங்கள் உங்களிடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர்; எங்களில் சிறந்தவர்; எங்களிடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாயிருந்தவர்கள்” என்று சொல்லிவிட்டு, அவர்களின் கரத்தைப் பிடித்து அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மக்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். அப்போது ஒருவர், ‘ஸஅத் இப்னு உபாதா அவர்களை(ப் புறக்கணித்து அவரின் கருத்தை) நீங்கள் கொன்று விட்டீர்கள்” என்று கூறினார். அதற்கு உமர்(ரலி), ‘அல்லாஹ் தான் அவரைக் கொன்று விட்டான்” என்று பதில் கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3669

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் பார்வை (அவர்களின் மரண வேளையில்) நிலை குத்தி நின்றது. பிறகு அவர்கள், ‘மிக உயர்ந்த நண்பர்களிடம் (செல்கிறேன்)” என்று (மூன்று முறை) கூறினார்கள்.

தொடர்ந்து அறிவிப்பாளர் காசிம்(ரஹ்) (நபி-ஸல் அவர்களின் இறப்பு சம்பவம் தொடர்பான) இந்த ஹதீஸை முழுமையாக எடுத்துரைத்தார்கள்.

ஆயிஷா(ரலி) கூறினார். (அபூ பக்ர், உமர் ஆகிய) அவ்விருவரின் உரைகளில் எந்தவோர் உரையைக் கொண்டும் அல்லாஹ் நன்மை புரியாமல் இல்லை. உமர் அவர்கள் (தவறாக நடந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவீர்கள் என்று) மக்களை எச்சரித்தார்கள். ஏனெனில், மக்களிடையே நயவஞ்சக குணமுடையவர்களும் (அப்போது) இருந்தனர். (உமர் அவர்களின்) அந்த (அச்ச மூட்டும்) உரையின் வாயிலாக அல்லாஹ் அ(ந்த நயவஞ்சக குணமுடைய)வர்களை (சத்தியத்தின் பக்கம்) திருப்பினான்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3670

அபூ பக்ர்(ரலி) மக்களுக்கு நேர்வழியைக் காண்பித்தார்கள். அவர்களின் உரையின் காரணத்தால், ‘முஹம்மத்(ஸல்) அவர்கள் ஓர் இறைத்தூதரேயன்றி வேறில்லை. அவர்களுக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். அவர் இறந்துவிட்டாலோ, (போரில்) கொல்லப்பட்டுவிட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக்கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கிறானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதிபலனை மிக விரைவில் வழங்குவான்’ என்றும் (திருக்குர்ஆன் 03: 144-ம்) வசனத்தை ஓதியபடி மக்கள் வெளியே சென்றார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3671

முஹம்மத் இப்னு ஹனஃபிய்யா (ரஹ்) அறிவித்தார். நான் என் தந்தை (அலீ – ரலி – அவர்கள்) இடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிறகு மக்களில் யார் சிறந்தவர்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அபூ பக்ர் அவர்கள்” என பதிலளித்தார்கள். நான், ‘(அவர்களுக்குப்) பிறகு யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பிறகு உமர் அவர்கள் (தாம் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள். ‘பிறகு (மக்களில் சிறந்தவர்) உஸ்மான்(ரலி) தாம்” என்று (என் தந்தை) சொல்லி விடுவார்களோ என நான் அஞ்சியவனாக, ‘பிறகு (மக்களில் சிறந்தவர்) நீங்கள் தாமே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘நான் முஸ்லிம்களில் ஒருவன்; அவ்வளவு தான்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3672

ஆயிஷா(ரலி) கூறினார். நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பயணங்களில் ஒன்றில் அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் (மதீனாவுக்கருகில் உள்ள) ‘பைதா’ என்னுமிடத்தை… அல்லது ‘தாத்துல் ஜைஷ்’ என்னுமிடத்தை… அடைந்தபோது, என்னுடைய கழுத்து மாலை ஒன்று (எங்கோ) அவிழ்ந்து விழுந்துவிட்டது. எனவே, அதைத் தேடுவதற்காக, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓரிடத்தில் (முகாமிட்டுத்) தங்கினார்கள். மக்களும் அவர்களுடன் தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை. அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை. எனவே, மக்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து, ‘(உங்கள் மகள்) ஆயிஷா என்ன செய்தார் என்று நீங்கள் கவனிக்க மாட்டீர்களா? இறைத்தூதர்(ஸல்) அவர்களையும், அவர்களுடன் மக்களையும் எந்த நீர் நிலைக்கு அருகிலும் அவர்கள் இல்லாத நிலையிலும், அவர்களுடன் தண்ணீர் எதுவும் இல்லாத நிலையிலும் ஆயிஷா தங்க வைத்துவிட்டார்” என்று கூறினார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி) என் மடியில் தலை வைத்துத் தூங்கி விட்டிருந்த நிலையில் வந்தார்கள். ‘நீ இறைத்தூதர்(ஸல்) அவர்களையும் மக்களையும் எந்த நீர்நிலைக்கு அருகிலும் அவர்கள் இல்லாத நிலையிலும் அவர்களுடன் தண்ணீர் எதுவும் இல்லாத நிலையிலும் (தொடர்ந்து பயணிக்க விடாமல்) தடுத்து விட்டாயே!” என்று சொல்லி என்னைக் கண்டித்தார்கள். மேலும், அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, என்னைத் தம் கரத்தால் என் இடுப்பில் குத்தலானார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் மடியில் படுத்துக் கொண்டிருந்தது தான் என்னை அசைய விடாமல் (அடி வாங்கிக் கொண்டிருக்கும்படி) செய்துவிட்டது. அல்லாஹ்வின் தூதா(ஸல்) அவர்கள் காலை வரை தூங்கினார்கள். அப்போதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது, அல்லாஹ் ‘தயம்மும்’ உடைய (திருக்குர்ஆன் 04:43-ம்) வசனத்தை அருளினான். (இது குறித்து) உசைத் இப்னு ஹுளைர்(ரலி) ‘அபூ பக்ரின் குடும்பத்தாரே! (‘தயம்மும்’ என்ற சலுகையான) இது, உங்களால் (சமுதாயத்திற்குக் கிடைத்த) முதல் ‘பரக்கத்’ (அருள் வளம்) அல்ல. (இதற்கு முன்பும் பல நன்மைகள் உங்களின் மூலம் கிடைத்துள்ளன)” என்று கூறினார்கள். பிறகு, நான் சவாரி செய்து வந்த ஒட்டகத்தை (அது அமர்ந்திருந்த இடத்திலிருந்து) நாங்கள் எழுப்பியபோது, அதற்குக் கீழே (நான் தொலைத்துவிட்ட) கழுத்து மாலையை நாங்கள் கண்டோம்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3673

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழாகளான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3674

அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார். நான் என் வீட்டில் உளூச் செய்துவிட்டுப் புறப்பட்டேன். (அப்போது எனக்குள்), ‘நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களைவிட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே என்னுடைய இந்த நாள் (முழுவதும்) இருப்பேன்” என்று சொல்லிக் கொண்டேன். நான் பள்ளி வாசலுக்கு வந்து நபி(ஸல்) அவர்களைக் குறித்துக் கேட்டேன். அப்போது மக்கள், ‘நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு இந்தப் பக்கம் போனார்கள்” என்று கூறினர். நான் (நபி – ஸல்) அவர்கள் புறப்பட்டு இந்தப் பக்கம் போனார்கள்” என்று கூறினர். நான் (நபி – ஸல் – அவர்கள் சென்ற திசையில்) அவர்களின் அடிச்சுவட்டில் அவர்களைப் பற்றி (இந்த வழியாகச் சென்றார்களா என்று) விசாரித்தபடி சென்றேன். இறுதியில் (குபாவுக்கு அரும்லுள்ள ஒரு தோட்டமான) பிஃரு அரீஸுக்குள் சென்று அதன் வாசலில் அமர்ந்தேன். அதன் வாசல் பேரீச்ச மட்டையால் தயாரிக்கப்பட்டிருந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் (இயற்கைக்) கடனை நிறைவேற்றிக் கொண்டு உளூச் செய்தார்கள். உடனே, நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் (பிஃரு) அரீஸ் (என்னும் அத்தோட்டத்தில் உள்ள) கிணற்றின் மீது அதன் சுற்றுச் சுவருக்கு நடுவே தம் கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்க விடப்படி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்று வாசலருகே அமர்ந்து கொண்டேன். நான் (எனக்குள்), ‘இன்று நான் அல்லாஹ்வின் தூதருடைய வாயில் காவலனாக இருப்பேன்” என்று சொல்லிக் கொண்டேன். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து கதவைத் தள்ளினார்கள். நான், ‘யார் அது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘(நானே) அபூ பக்ர் (வந்துள்ளேன்)” என்று பதிலளித்தார்கள். உடனே நான், ‘சற்றுப் பொறுங்கள்” என்று சொல்லிவிட்டு (நபி – ஸல் – அவர்களிடம்) சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! இதோ அபூ பக்ர் அவர்கள் (வந்து) தங்களிடம் உள்ளே வர அனுமதி கேட்கிறார்கள்” என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்கு அனுமதி கொடுங்கள். மேலும், அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். நான் அபூ பக்ர் அவர்களை நோக்கிச் சென்ற அவர்களிடம், ‘உள்ளே வாருங்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று நற்செய்தி அறிவித்தார்கள்” என்று சொன்னேன். உடனே, அபூ பக்ர் அவர்கள் உள்ளே வந்து, இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு வலப் பக்கத்தில் அவர்களுடன் (ம்ணற்றின்) சுற்றுச் சுவரில் அமர்ந்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்றே தம் கால்கள் இரண்டையும் கிணற்றில் தொங்கவிட்டுக் கொண்டு கால்களைத் திறந்து வைத்தார்கள். பிறகு, நான் திரும்பிச் சென்று (வாசலில்) அமர்ந்து கொண்டேன். நான் (முன்பே) என் சகோதர(ர் ஒருவ)ரை உளூச் செய்து என்னுடன் சேர்ந்து கொள்ளும்படி சொல்லி,விட்டுவிட்டு வந்திருந்தேன். எனவே (எனக்குள்), ‘அல்லாஹ் இன்னாருக்கு நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு), வரச் செய்வான்” என்று சொல்லிக் கொண்டேன்.

” இன்னார்’ என்று அபூ மூஸா அல் அஷ் அரீ(ரலி) கூறியது. தம் சகோதரைக் கருத்தில் கொண்டே” என்று அறிவிப்பாளர் ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) கூறினார்:

அப்போது ஒருவர் கதவை அசைத்தார். நான், ‘யார் அது?’ என்று கேட்டேன். வந்தவர், ‘(நானே) உமர் இப்னு கத்தாப் (வந்துள்ளேன்)” என்று சென்னார். நான், ‘கொஞ்சம் பொறுங்கள்” என்று கூறிவிட்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் கூறி, ‘இதோ, உமர் இப்னு கத்தாப் அவர்கள் வந்து தங்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள்” என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவர் சொர்க்கவாசி என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். நான் சென்று, ‘உள்ளே வாருங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று உங்களுக்கு நற்செய்தி கூறுகிறார்கள்” என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து கிணற்றின் சுற்றுச் சுவரில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு இடப்பக்கம் அமர்ந்து தம் இரண்டு கால்களையும் கிணற்றுக்குள் தொங்கவிட்டார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலருகே) அமர்ந்து கொண்டேன். ‘அல்லாஹ் இன்னாருக்கு (என் சகோதரருக்கு) நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச் செய்வான்” என்று (முன்போன்றே எனக்குள்) கூறிக் கொண்டேன். அப்போது ஒருவர் வந்து கதவை ஆட்டினார். நான், ‘யார் அது?’ என்று கேட்டேன். அவர், ‘(நானே) உஸ்மான் இப்னு அஃப்பான் (வந்திருக்கிறேன்)” என்று பதிலளித்தார். உடனே, ‘கொஞ்சம் பொறுங்கள்” என்று சொல்லிவிட்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு உஸ்மான் அவர்கள் வந்திருக்கும் செய்தியை அறிவித்தேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்கு அனுமதி கொடுங்கள். அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே நான் உஸ்மான் அவர்களிடம் சென்று அவரிடம், ‘உள்ளே வாருங்கள். உங்களுக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நற்செய்தி கூறினார்கள்” என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து (பார்த்த போது) சுற்றுச் சுவர் (ஒரு பக்கம்) நிரம்பி விட்டிருப்பதைக் கண்டார்கள். எனவே, மற்றொரு பக்கம் நபி(ஸல்) அவர்களுக்கு எதிரே அமர்ந்தார்கள்.

அறிவிப்பாளர் ஷரீக் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார்: ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்), ‘நான் (நபி – ஸல் அவர்களும், அபூ பக்ர் – ரலி – அவர்களும், உமர் – ரலி – அவர்களும்) அடுத்தடுத்து அமர்ந்திருந்த இந்த நிலையும் (தற்போது) அவர்களின் கப்ருகள் (மண்ணறைகள்) அமைந்திருக்கும் நிலையைக் குறிப்பதாக விளக்கம் கண்டேன்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3675

அனஸ்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர், உமர், உஸ்மான்(ரலி) ஆகீயோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும், (நானும்) ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3676

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”. நான் (கனவில்) ஒரு கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கெண்டிருக்கும்போது என்னிடம் அபூ பக்ரும் உமரும் வந்தார்கள். அபூ பக்ர் அவர்கள் (நான் நீர் இறைத்து முடித்த பின்) வாளியை எடுத்து ஒரு நாளி நீரை… அல்லது இரண்டு வாளிகள் நீரை… இறைத்தார்கள். அவர் இறைத்தபோது (சற்று) சோர்வு தென்பட்டது. அல்லாஹ் அவருக்கு மன்னிப்பளிப்பானாக! பிறகு, அபூ பக்ர் அவர்களின் கரத்திலிருந்து உமர் அவர்கள் அதை எடுத்துக் கொள்ள அது அவரின் கையில் பெரியதொரு வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) மக்களில் அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான (அபூ ர்வத்) தலைவர் ஒருவரை நான் கண்டதில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவிற்கு நீர் இறைத்தார்.

அறிவிப்பாளர்களில் ஒருவான வஹ்ப் இப்னு ஜரீர்(ரஹ்), ‘இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள ‘அத்தன்’ என்னும் சொல், ‘ஒட்டகம் தாகம் தீர நீரருந்தி, மண்டியிட்டுப்படுத்து ஓய்வெடுக்கும் இடம்’ எனப் பொருள்படும்’ என்று கூறுகிறார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3677

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் சில மக்களிடையே நின்று கொண்டிருக்க, அவர்கள் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களுக்காக பிரார்த்திதார்கள். அப்போது உமர் அவர்கள் (இறந்து) கட்டிலின் மீது கிடத்தப்பட்டிருந்தார்கள் – அப்போது என் பின்னாலிருந்து ஒருவர் தன் முழங்கையை என் தோளின் மீது வைத்து (உமர் – ரலி – அவர்களை நோக்கி,) ‘அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும். அல்லாஹ் (உங்கள் உடல், அடக்கம் செய்யப்படும் போது) உங்களை உங்களுடைய இரண்டு தோழர்க(ளான நபி – ஸல் – அவர்கள் மற்றும் அபூ பக்ர் – ரலி – அவர்க)ளுடன் (அவர்களின் மண்ணறைகளுக்கே அருகே) அடங்கச் செய்ய வேண்டும் என்று நான் விரும்பிக் கொண்டிருந்தேன். ஏனெனில், பெரும்பாலான நேரங்களில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நானும் அபூ பக்ரும் உமரும் (இப்படி) இருந்தோம்; நானும் அபூ பக்ரும் உமரும் (இப்படிச்) செய்தோம்; நானும் அபூ பக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்’ என்று சொல்ல கேட்டிருக்கிறேன். எனவே, உங்களை அல்லாஹ் அவ்விருவருடன் (அவர்களின் மண்ணறைகளுக்கு அருகே) அடங்கச் செய்திட வேண்டுமென்று விரும்புகிறேன்” என்று கூறினார். நான் திரும்பிப் பார்த்தேன். இப்படிச் சொன்ன அந்த மனிதர் அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களாக இருந்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3678

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். “இணை வைப்பவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது?’ என்று நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘(ஒரு முறை மக்காவில்) உக்பா இப்னு அபீ முஐத் என்பவன், நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் வந்து தன் போர்வையை அவர்களின் கழுத்தில் போட்டு அதை (அவர்களின் மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்ததை பார்த்தேன். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து, நபி(ஸல்) அவர்களைவிட்டு உக்பாவை (தம் கையால்) தள்ளினார்கள். அப்போது, ‘என் இறைவன் அல்லாஹ் தான்’ என்று சொல்லும் காரணத்திற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்(ல முனை)கிறீர்கள்? அவரோ தம் இறைவனிடமிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3679

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘நான் (கனவில்) என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். அப்போது நான் மெல்லிய காலடி யோசையைச் செவியுற்றேன். உடனே, ‘யார் அது?’ என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), ‘இவர் பிலால்’ என்று பதிலளித்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், ‘இது யாருக்குரியது?’ என்று கேட்டேன். அவர், (வானவர்), ‘இது உமருடையது’ என்று கூறினார். எனவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (எனவே, அதில் நுழையாமல் திரும்பி விட்டேன்)” என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்” என்று கேட்டார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3680

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இருந்தபோது அவர்கள், ‘நான் தூங்கிக் கொண்டிருந்த பொழுது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது அரண்மனையொன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலக வாழ்வில் இறைவணக்கம் புரிபவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையிலும் தன் அழகையும் பொலிவையும் இன்னும் அதிகரித்துக கொள்ளவும்) உளூச் செய்து கொண்டிருந்தாள். நான் (ஜீப்ரிலிடம்), ‘இந்த அரண்மனை யாருக்குரியது?’ என்று கேட்டேன். அவர், ‘உமர் அவர்களுக்குரியது’ என்று பதிலளித்தார். அப்போது (அதில் நுழைந்து பார்க்க எண்ணினேன். ஆனால்,) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. எனவே, (அதில் நுழையாமல்) திரும்பி வந்து விட்டேன்” என்று கூறினார்கள். இதைக் கேட்டதும் உமர்(ரலி) அழுதார்கள். பிறகு, ‘தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், இறைத்தூதர் அவர்களே!” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3681

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில் என்னிடம் ஒரு பால் பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அந்தப்) பாலை நான் (தாகம் தீரும் அளவு) அருந்தினேன். இறுதியில், என் நகக்கண்… அல்லது, நகக் கண்கள் … ஊடே (பால்) பொங்கி வருவதைக் கண்டேன். பிறகு (நான் அருந்தியது போக இருந்த மிச்சத்தை) உமர் அவர்களுக்குக் கொடுத்தேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘இதற்கு (இந்தப் பாலுக்கு) நீங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்க, அதற்கு அவர்கள், ‘அறிவு” என்று பதிலளித்தார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3682

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” கனவில் இப்படி எனக்குக் காட்டப்பட்டது: நான் ஒரு சுற்றுச் சுவர் இல்லாத கிணற்றின் மீதிருந்த ஒரு வாளியால் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தேன். அப்போது அபூ பக்ர் அவர்கள் வந்து ஒரு வாளி… அல்லது இரண்டு வாளிகள்… தண்ணீரை(சற்று) சோர்வான நிலையில் இறைத்தார்கள். அல்லாஹ் அவர்களை மன்னிப்பானாக! பிறகு உமர் இப்னு கத்தாப் அவர்கள் வந்தார்கள். உடனே அந்த வாளி மிகப் பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான ஒரு (அபூர்வத்) தலைவரை நான் கண்டதில்லை. மக்கள் தாகம் தீர்ந்து, (தங்கள் ஒட்டகங்களுக்கும் நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கம் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.)

அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) ‘இந்த ஹதீஸி(ன் மூலத்தி)ல் இடம் பெற்றுள்ள ‘அப்கரிய்யு’ என்னும் சொல், ‘உயர்தரமான விரிப்பு’ என (அகராதியில்) பொருள்படும்” என்று கூறுகிறார்கள். மற்றோர் அறிவிப்பாளரான யஹ்யா இப்னு ஸியாத்(ரஹ்) ‘மென்மையான குஞ்சம் வைத்த விரிப்பு’ என்று (பொருள்) கூறுகிறார்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3683

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) உமர் இப்னு கத்தாப் அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். அப்போது (நபியவர்களின் துணைவியரான) குறைஷிப் பெண்கள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் பேசிக் கொண்டும் ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி கேட்டுக் கொண்டும் இருந்தனர். அவர்களின் குரல்கள் நபி(ஸல்) அவர்களின் குரலை விட உயர்ந்திருந்தன. உமர் இப்னு கத்தாப்(ரலி) உள்ளே வர அனுமதி கேட்டவுடன் அவரச அவசரமாகப் பர்தா அணிந்தார்களே” என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரலி), ‘இந்தப் பெண்கள் அஞ்சுவதற்கு நீங்கள் தாம் மிகவும் தகுதியுடையவர்கள், இறைத்தூதர் அவர்களே!” என்று கூறினார்கள். பிறகு உமர் அவர்கள் (அப்பெண்களை நோக்கி), ‘தமக்குத் தாமே பகைவர்களாயிருப்பவர்களே! இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அஞ்சாமல் எனக்கு நீங்கள் அஞ்சுகிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘ஆம், நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களை விட கடுமை காட்டக்கூடியவரும் கடின சித்தமுள்ளவரும் ஆவீர்கள்” என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘சும்மாயிருங்கள், கத்தாபின் புதல்வரே! என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! ஒரு தெருவில் நீங்கள் (நடந்து) செல்வதை ஷைத்தான் கண்டால், அவன் உங்கள் தெருவைவிட்டு வேறொரு தெருவில் தான் சொல்வான்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3684

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) இஸ்லாத்தை ஏற்ற நேரத்திலிருந்து நாங்கள் வலிமையும் கண்ணியமும் உடையவர்களாகத் திகழலானோம் என கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3685

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார்கள். அப்போது மக்கள், அவரைச் சுற்றிலும் (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து பிரார்த்திக்கலாயினர். அவரின் ஜனாஸா (சடலம்) எடுக்கப்படுவதற்கு முன்பாக அவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழலாயினர். அப்போது நான் அவர்களிடையே இருந்தேன். என் தோளைப் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் தான் என்னை திடுக்கிடச் செய்தார். (யாரென்று திரும்பிப் பார்த்த போது) அது அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) தாம். அவர்கள், ‘உமர் அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!” என்று பிரார்த்தித்துவிட்டு, ‘(உமரே!) உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத் தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. (நீங்கள் தாம் அத்தகைய மனிதர்.) அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களை உங்கள் தோழர்க(ளான நபி – ஸல் – அவர்கள் மற்றும் அபூ பக்ர் – ரலி – அவர்)கள் இருவருடனும் தான் (அவர்களின் மண்ணறைக்கு அருகில் தான்) அடங்கச் செய்வான் என்று எண்ணியிருந்தேன். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், ‘நானும் அபூ பக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்” என்றும் ‘நானும் அபூ பக்ரும் உமரும் (இந்த இடத்திற்கு) உள்ளே புகுந்தோம்” என்றும் ‘நானும் அபூ பக்ரும் உமரும் புறப்பட்டோம்” என்று சொல்வதை நான் நிறையச் செவியுற்றிருக்கிறேன்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3686

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (ஒருமுறை) அபூ பக்ர், உமர், உஸ்மான்(ரலி) ஆகியோர் தம்முடனிருக்க, நபி(ஸல்) அவர்கள் உஹுது மலைமீது ஏறினார்கள். அப்போது அது அவர்களுடன் நடுங்கியது. உடனே நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் காலால் உதைத்து, ‘ ‘உஹுதே! அசையாமல் இரு! உன் மீது ஓர் இறைத்தூதரும் (நானும்), ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் தான் உள்ளனர்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3687

அஸ்லம்(ரஹ்) அறிவித்தார். இப்னு உமர்(ரலி) என்னிடம் உமர்(ரலி) அவர்களின் பண்புகள் சிலவற்றைப் பற்றிக் கேட்டார்கள். நான் அவர்களுக்கு அவற்றைத் தெரிவித்தேன். அதற்கு இப்னு உமர்(ரலி), இறந்த நேரத்திலிருந்து உமர்(ரலி) அவர்களை விட அதிகம் உழைக்கக் கூடியவர்களாகவும் அதிகம் வாரி வழங்குபவர்களாகவும் வேறெவரையும் நான் காணவில்லை. அவர்கள் தம் வாழ்நாளின் இறுதிவரை அவ்வாறே இருந்தார்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3688

அனஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, ‘மறுமை நாள் எப்போது வரும்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்?’ என்று (திரும்பக்) கேட்டார்கள். அம்மனிதர், ‘எதுவுமில்லை; நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர” என்று பதிலளித்தார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) நீ இருப்பாய்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்” என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்ற வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி(ஸல்) அவர்களையும் அபூ பக்ர்(ரலி) அவர்களையும் உமர்(ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன் தான் இருப்பேன் என்று நம்புகிறேன்; அவர்களின் நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3689

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” உங்களுக்கு முன்பிருந்த சமுதாயங்களில், (பல்வேறு) பிரச்சினைகளில் சரியான தீர்ப்பு எது என்பது குறித்து இறையருளால்) முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். என் சமுதாயத்தினரில் அப்படிப்பட்டவர் எவரேனும் இருந்தால் அது உமராகத்தான் இருக்கும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பில் அபூ ஹுரைரா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள்: உங்களுக்கு முன்பிருந்த பனூ இஸ்ராயீல்களில் இறைத்தூதர்களாக இல்லாமலேயே (வானவர்களால்) அறிவிப்புச் செய்யப்பட்டவர்கள் இருந்துள்ளனர். அத்தகையவர்களில் எவரேனும் என் சமுதாயத்தில் இருந்தால் அது உமராகத் தான் இருக்கும்.

இப்னு அப்பாஸ்(ரலி), (திருக்குர்ஆனின் 22:52-வது வசனத்தில்) ‘வலா முஹத்தஸின்’ (முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவரானாலும்) என்று (சேர்த்து) வாசித்துள்ளார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3690

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில், ஓர் ஆட்டிடையன் தன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது ஓர் ஓநாய், ஆடு ஒன்றைக் கவ்விக் கொண்டு ஓடலாயிற்று. ஆட்டை மேய்த்துக் கொண்டிருந்தவர் அந்த ஓநாயைத் தூரத்திச் சென்றார். அப்போது ஓநாய் அவரைப் பார்த்து, ‘மன் லஹா யவ்மஸ் ஸபுஇ – கொடி விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதைப் பாதுகாக்கக் கூடியவர் யார்? அப்போது என்னைத் தவிர இதற்கு மேய்ப்பாளன் (பொறுப்பாளன்) எவனும் இருக்க மாட்டானே’ என்று கூறியது. (இதைக் கேட்டு வியந்தவர்களாக) ‘சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் தூயவன்’ என மக்கள் கூறினர். அப்போது நானும், அபூ பக்ரும் உமரும் இந்த நிகழ்ச்சியை நம்புகிறோம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள். (நபியவர்கள் இதைக் கூறிய சமயம்) அபூ பக்ரும் உமரும் அங்கு இருக்கவில்லை.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3691

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார். (ஒரு முறை), ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது, (கனவில்) மக்கள் (பலவிதமான) சட்டைகளை அணிந்தவர்களாக எனக்கு எடுத்துக் காட்டப்பட்டார்கள். அவற்றில் (அவர்களின்) மார்பை எட்டக் கூடியவையும் இருந்தன. அவற்றில் (அவர்களின்) மார்பை எட்டாதவையும் இருந்தன. உமர் அவர்கள், (தரையில்) இழுத்துக் கொண்டே செல்லும் அளவிற்கு (நீளமான) சட்டையொன்றை அணிந்தவராக எனக்கு காட்டப்பட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘இதற்கு நீங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்தச் சட்டைகள்) அவர்களின் மார்க்கத்தை (மார்க்க உணர்வையும் செயல்பாடுகளையும்) குறிக்கும்” என்று (விளக்கம் காண்பதாக) பதில் கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3692

மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) (பிச்சுவாக்கத்தியினால்) குத்தப்பட்டபோது அவர்கள் வேதனையடைலானார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), உமர்(ரலி) அவர்களுக்கு ஆறுதல் கூறுவதைப் போன்று, ‘நம்பிக்கையாளர்களின் தலைவரே! இதைப் பெரிதுப்படுத்திக் கொள்ளாதீர்கள்; நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டு அத்தோழமையில் நல்லவிதமாக நடந்து கொண்டீர்கள். பிறகு, அவர்கள் உங்களைக் குறித்துத் திருப்தி கொண்டிருந்த நிலையிலேயே (அவர்கள் இறந்துவிட,) அவர்களைப் பிரிந்தீர்கள். பிறகு, அபூ பக்ர்(ரலி) அவர்களுடன் தோழமை கொண்டு அந்தத் தோழமையிலும் நல்ல விதமாக நடந்து கொண்டீர்கள். பிறகு உங்களின் மீது அவர்கள் திருப்தி கொண்டிருந்த நிலையிலேயே (அவர்கள் இறந்து விட,) அவர்களைப் பிரிந்தீர்கள். பிறகு அவர்களின் மற்ற தோழர்களுடன் தோழமை கொண்டு அந்தத் தோழமையிலும் நல்ல விதமாக நடந்து கொண்டீர்கள். அவர்களை நீங்கள் பிரிவதாயிருந்தால் நிச்சயம் அவர்கள் உங்களைக் குறித்துத் திருப்தி கொண்டிருக்கும் நிலையிலேயே பிரிவீர்கள்” என்று கூறினார்கள். உமர்(ரலி), ‘(இப்னு அப்பாஸே!) அல்லாஹ்வின் தூதருடன் நான் கொண்டிருந்ததாக நீங்கள் சொன்ன தோழமை, அவர்கள் என் மீது கொண்டிருந்த திருப்தி ஆகியவையெல்லாம் அல்லாஹ் என் மீது பொழிந்த அருட்கொடையாகும். மேலும், அபூ பக்ர்(ரலி) அவர்களுடன் நான் கொண்டிருந்ததாக நீங்கள் சொன்ன தோழமை, அவர்கள் என் மீது கொண்டிருந்த திருப்தி ஆகியனவும் புகழுயர்ந்த அல்லாஹ் என் மீது பொழிந்த அருடகொடையாகும். என்னிடம் நீங்கள் காண்கிற பதற்றமோ (பிற்காலத்தில் குழப்பங்களில் சிக்கவிருக்கும்) உங்களுக்காகவும் உங்கள் தோழர்களுக்காகவும் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஒரு பூமி நிரம்பத் தங்கம் இருந்தால் கூட, கண்ணியமும் உயர்வுமுடைய அல்லாஹ்வின் வேதனையை நான் காண்பதற்கு முன்பாகவே அதற்குப் பகரமாக அந்தத் தங்கத்தைப் பிணைத் தொகையாகத் தந்து விடுவேன்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3693

அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றில் இருந்தேன். அப்போது ஒருவர் வந்து (வாயில் கதவைத்) திறக்கும்படி கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்காகத் திறவுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். நான் அவருக்காக (வாயிற் கதவைத்) திறந்தேன். அவர் அபூ பக்ர்(ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்ன நற்செய்தியைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு ஒருவர் வந்து (கதவைத்) திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் அனுமதி கேட்க) நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்குத் திறந்து விடுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று கூறினார்கள். அவருக்கு நான் கதவைத் திறந்து விட்டேன். அம்மனிதர் உமர்(ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் நான் நபி(ஸல்) அவர்கள் சொன்ன செய்தியைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு ஒருவர் கதவைத் திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் சென்று அனுமதி கேட்க) நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்கும் திறந்து விடுங்கள்; அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து சொர்க்கம் அவருக்குக் கிடைக்கவிருக்கிறது என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். (நானும் சென்று கதவைத் திறக்க) அம்மனிதர் உஸ்மான்(ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தேன். அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, ‘(எனக்கு நேரவிருக்கும் அந்தத் துன்பத்தின் போது) அல்லாஹ்வே (சம்ப்பாற்றலைத் தந்து) உதவி புரிபவன் ஆவான்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3694

அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டிருக்க, நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம்…

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3695

அபூ மூஸா(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தினுள் நுழைந்தார்கள். தோட்டத்தின் வாயிற்கதவைக் காவல் புரியும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது ஒருவர் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார். (நான் நபி(ஸல்) அவர்களிடம் அவருக்காக அனுமதி கேட்க) அவர்கள், ‘அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தியும் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். (நான் அவரிடம் சொல்லச் சென்ற போது) அம்மனிதர் அபூ பக்ர் அவர்களாக இருந்தார்கள். பிறகு மற்றொருவர் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார். (நான் சென்று நபியவர்களிடம் அனுமதி கேட்க,) ‘அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தியும் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். (நான் அவ்வாறே சொல்லச் சென்ற போது) அந்த மனிதர் உமர் அவர்களாக இருந்தார்கள். பிறகு, இன்னொரு மனிதர் வந்து உள்ளே வர அனுமதி கேட்டார். (நான் சென்று நபியவர்களிடம் கதவைத் திறக்க அனுமதி கேட்ட போது) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந்துவிட்டு பிறகு, ‘அவருக்கு அனுமதி கொடுங்கள்; (வருங்காலத்தில்) அவருக்கு நேரவிருக்கும் துன்பத்தையடுத்து அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். (நான் சென்று கதவைத் திறந்த போது) அவர் உஸ்மான் இப்னு அஃப்பான் அவர்களாக இருந்தார்கள்.

இதே போன்று இன்னோர் அறிவிப்பும் வந்துள்ளது. அதில் ஆஸிம்(ரஹ்), ‘நபி(ஸல்) அவர்கள் தம்மிரு முழங்கால்களும்… அல்லது தம் முழங்கால்….தெரிய தண்ணீர் உள்ள இடத்திற்கருகே அமர்ந்திருந்தார்கள். உஸ்மான்(ரலி) உள்ளே வந்தபோது தம் முழங்காலை மூடினார்கள்” என்பதை அதிகப்படியாக அறிவித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3696

உபைதுல்லாஹ் இப்னு அதீ இப்னி கியார்(ரஹ்) அறிவித்தார். மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னு அப்தி யகூஸ்(ரஹ்) அவர்களும் என்னிடம், ‘உஸ்மான்(ரஹ்) அவக்hளும் என்னிடம், ‘உஸ்மான்(ரலி) அவர்களிடம் நீங்கள் அவர்களின் (தாய்வழிச்) சகோதரர் வலீத் இப்னு உக்பா) பற்றிப் பேசாமலிருப்பது ஏன்? மக்கள் வலீத் விஷயத்திலும் மிக அதிகமாகக் குறை கூறுகிறார்களே!” என்று கேட்டார்கள். எனவே நான் உஸ்மான்(ரலி) தொழுகைக்காகப் புறப்பட்ட நேரத்தில் அவர்களைத் தேடிச் சென்றேன். அவர்களிடம், எனக்கு உங்களிடம் சற்று(ப் பேச வேண்டிய) தேவை உள்ளது. அது உங்களுக்கு (நான் கூற விரும்பும்) அறிவுரை” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘ஏ மனிதரே! உம்மிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்று கூறினார்கள். உடனே, நான் திரும்பி அவ்விருவரிடம் வந்தேன். அப்போது உஸ்மான்(ரலி) அவர்களுடை தூதுவர் (என்னைத் தேடி) வர, நான் அவர்களிடம் (மீண்டும்) சென்றேன். உஸ்மான்(ரலி), ‘உங்கள் அறிவுரை என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பி அவர்களின் மீது (தன் வேதத்தையும் இறக்கியருளினான். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்புக்கு பதிலளித்தவர்களில் நீங்களும் ஒருவராயிருந்தீர்கள். எனவே, (மக்காவைத் துறந்து அபிசீனியாவுக்கும், அதன்பின்னர் மதீனாவுக்குமாக) இரண்டு ஹிஜ்ரத்துகள் மேற்கொண்டீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதருடன் தோழமை கொண்டு அவர்களின் வழிமுறையைப் பார்த்திருக்கிறீர்கள். மக்களோ வலீத் இப்னு உக்பாவைப் பற்றி நிறையக் குறை பேசுகிறார்கள் (நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்க நான், ‘இல்லை. ஆனால், திரைக்கப்பால் இருக்கும் கன்னிப் பெண்களிடம் (கூட) அல்லாஹ்வின் தூதருடைய கல்வி சென்றடைந்து கொண்டிருக்கும் (போது, அந்த) அளவு (கல்வி) என்னிடமும் வந்து சேர்ந்துள்ளது (குறித்து வியப்பில்லை.)” என்று பதில் சொன்னேன். அதற்கு உஸ்மான்(ரலி), ‘அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின் கூறுகிறேன். அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பி வைத்தான். அப்போது, அல்லாஹ்வின் அழைபபுக்கும் அல்லாஹ்வின் தூதருடைய அழைப்புக்கும் பதிலளித்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். மேலும், அவர்கள் எ(ந்த வேதத்)தைக் கொடுத்தனுப்பப்பட்டார்களோ அதை நான் நம்பி ஏற்றுக் கொண்டேன். நான் இரண்டு ஹிஜ்ரத்துத்துகளை மேற்கொண்டேன். – நீங்கள் சொன்னதைப் போல் – நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தோழமை கொண்டேன்; அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன். எனவே, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் நபி(ஸல்) அவர்களை மரணிக்கச் செய்யும் வரை நான் அவர்களுக்கு மாறு செய்யவுமில்லை; அவர்களை ஏமாற்றவுமில்லை. பிறகு அபூ பக்ர் அவர்களிடமும் அதைப் போன்றே (நடந்து கொண்டேன்) பிறகு உமர் அவர்களிடமும் அதைப் போன்றே (நடந்து கொண்டேன்.) பிறகு நான் கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டேன். எனவே, அவர்களுக்கிருந்தது போன்ற அதே உரிமை எனக்கில்லையா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (உங்களுக்கும் அதே போன்ற உரிமை இருக்கிறது)” என்று சொன்னேன். அவர்கள், ‘அப்படியென்றால் உங்களைக் குறித்து எனக்கு எட்டுகிற (என்னைக் குறை கூறும்) இந்தப் பேச்சுகளெல்லாம் என்ன? நீங்கள் வலீத் இப்னு உக்பா விஷயமாக சொன்னவற்றில் விரைவில் இறைவன் நாடினால் சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்” என்று கூறினார்கள். பிறகு அலீ(ரலி) அவர்களை அழைத்து வலீத் இப்னு உக்பாவுக்கு (எதிராக சாட்சிகள் கிடைத்தால் அவருக்கு) கசையடிகள் கொடுக்கும் படி உத்தரவிட்டார்கள். அலீ(ரலி) அவர்களும் வலீதுக்கு எண்பது கசையடிகள் கொடுத்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3697

அனஸ்(ரலி) அறிவித்தார். அபூ பக்ர், உமர், உஸ்மான்(ரலி) ஆகியோர் தம்முடனிருக்க, நபி(ஸல்) அவர்கள் உஹுது(மலை) மீது ஏறினார்கள். அது (அவர்களுடன்) நடுங்கியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும் ஒரு ‘சித்தீக்’கும் இரண்டு உயிர்த்தியாகிகளும் உள்ளனர்” என்று கூறினார்கள். (இதைக் கூறியபோது) நபியவர்கள் தம் காலால் மலையை (ஓங்கி) அடித்தார்கள் என எண்ணுகிறேன்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3698

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குச் சமமாக எவரையும் கருதுவதில்லை. பிறகு உமர்(ரலி) அவர்களையும் அவர்களுக்குப் பிறகு உஸ்மான்(ரலி) அவர்களையும் (சிறந்தவர்களாகக் கருதி வந்தோம்.) பிறகு (மீதமுள்ள) நபி(ஸல்) அவர்களின் தோழர்களிடையே ஏற்றத்தாழ்வு பாராட்டாமல்விட்டுவிட்டோம்.

இதே போன்று வேறோர் அறிவிப்பாளர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3699

உஸ்மான் இப்னு மவ்ஹப்(ரலி) அறிவித்தார். எகிப்து வாசியான ஒருவர் வந்து, (கஅபா எனும்) இறையில்லத்தை ஹஜ் செய்தார் அப்போது ஒரு கூட்டம் அமர்ந்திருப்பதைக் கண்டு, ‘இந்தக் கூட்டத்தார் யார்?’ என்று கேட்டதற்கு மக்கள், ‘இவர்கள் குறைஷிகள் என்று பதில் கூறினார்கள். அப்போது, ‘இவர்களின்ல முதிர்ந்த அறிஞர் யார்” என்று அவர் கேட்டதற்கு மக்கள், ‘ அப்துல்லாஹ் இப்னு உமர்” என்று பதில் அளித்தார்கள். உடனே அவர் அங்கிருந்த அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களை நோக்கி, ‘இப்னு உமர் அவர்களே நான் உங்களிடம் ஒரு விஷயத்தைக் கேட்கிறேன். நீங்கள் எனக்கு அதைப்பற்றிச் சொல்லுங்கள். உஸ்மான்(ரலி) உஹுதுப் போர்க்களத்திலிருந்து வெருண்டோடியதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி) ‘ஆம் அறிவேன்” என்று பதில் அளித்தார்கள். அப்போது அவர் ‘உஸ்மான்(ரலி) பத்ர் போரில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டார்கள் என்பது தங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டடார். அற்கு இப்னு உமர்(ரலி) ‘ஆம் தெரியும்” என்று பதில் அளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் அவர், ‘ஹுதைபியாவில் நடந்த பைஅத்துர் ரிள்வான் சத்தியப் பிரமாணத்திலும் கலந்து கொள்ளவில்லை என்பது தங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்க ஆம் தெரியும் என்று பதில் அளித்தார்கள். (இவற்றைக் கேட்டுவிட்டு உஸ்மான்(ரலி) தாம் நினைத்தது போன்றே இவ்வளவு குறைகளுள்ளவர்தாம் என்று தொனிக்கும் படி) அந்த மனிதர், அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப்பெரியவன் என்று என்று கூறினார். அப்போது இப்னு உமர்(ரலி), ‘வாரும்! (இவற்றிலெல்லாம் உஸ்மான்(ரலி) ஏன் பங்கு பெறவில்லை என்பதை உனக்கு நான் விளக்குகிறேன். அவர்கள் உஹத் போரின்போது வெருண்டோடிய சம்பவமோ, அது சம்பந்தமாக அல்லாஹ் அவரின் பிழையைப் பொறுத்து மன்னித்துவிட்டான் என்று நானே சாட்சியாக இருக்கிறேன். பத்ர் போரில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், நபி(ஸல்) அவர்களின் மகள் (ருகய்யா(ரலி)) உஸ்மான்(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (அவர்கள்) அப்போது நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் பத்ர் போரில் பங்கெடுத்த ஒருவருக்குரிய (மறுமைப்) பலனும், (போர்ப் பொருளில்) உங்களுக்கான பங்கும் கிடைக்கும் (நீங்கள் உங்களுடைய மனைவியைக் கவனியுங்கள்) என்றார்கள். (எனவேதான், அவர்கள் அதில் கலந்து கொள்ளமுடியவில்லை.) பைஅத்துர் ரிள்வான் சத்தியப்பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம் உஸ்மான்(ரலி) அவர்களையும் விட கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) அப்படி இருந்திருந்தால் நபி(ஸல்) அவர்கள், குறைஷிகளிடம் பேசுவதற்கு தம் தூதராக அவரை) அனுப்பி இருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை.) எனவேதான், நபி(ஸல்) அவர்கள் உஸ்மானை அனுப்பினார்கள். மேலும் இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான்(ரலி) மக்காவிற்குள் போனபின்னர்தான் நடந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் வலகக்ரத்தைச் சுட்டிக் காண்பித்து இது உஸ்மானுடைய கை என்று கூறி அதை தம் இடக்கரத்தின் மீது தட்டினார்கள். பிறகு, இப்போது நான் செய்யும் சத்தியப்பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்” என்றார்கள். என இப்னு உமர்(ரலி) கூறிவிட்டு, (உஸ்மான்(ரலி) அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணி வைத்திருந்த) அந்த மனிதரிடம், ‘நான் இப்போது சொன்ன பதில்களை நீ எடுத்துச் செல்லலாம்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3700

அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். உமர் இப்னு கத்தாப்(ரலி) கொலை செய்யப்படுவதற்குச் சில நாள்களுக்கு முன் மதீனாவில் அவர்களை பார்த்தேன். அவர்கள் ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அவர்களுக்கும், உஸ்மான் இப்னு ஹுனைஃப்(ரலி) அவர்களுக்கும் அருகில் நின்று கொண்டு (அவர்கள் இருவரையும் நோக்கி, ‘சவாதுல் இராக் விஷயத்தில்) நீங்கள் எப்படிச் செயல்பட்டீர்கள்? அந்த நிலத்திற்கு (மக்களால்) சுமக்க முடியாத வரிச்சுமையை சுமத்திவிட்டதாக நீங்கள் அஞ்சுகிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும், ‘அந்த நிலத்திற்கு அதன் (உரிமையாளர்களின்) சக்திக்கேற்பவே (வரி) விதித்தோம். அதில் மிக அதிகமாக ஒன்றுமில்லை” என்றனர். அதற்கு உமர்(ரலி), ‘அந்த நிலத்திற்கு (மக்களால்) சுமக்க முடியாத வரிச்சுமையை சுமத்தி விட்டீர்களா? என்று (நன்கு) யோசித்துப் பாருங்கள் என்றார்கள். அந்த இருவரும், ‘இல்லை. அதன் சக்திக்கேற்பவே வரி சுமத்தினோம்)” என்று பதிலளித்தனர். அப்போது உமர்(ரலி), ‘அல்லாஹ் என்னை உயிரோடு வைத்திருந்தால் இராக் வாசிகளின் விதவைப் பெண்களை எனக்குப் பிறகு வேறெவரிடமும் கையேந்தத் தேவையில்லாத நிலையில் தான்விட்டுச் செல்வேன்” என்று கூறினார்கள். இப்படி அவர்கள் சொல்லி நான்கு நாள்கள் கூட சென்றிருக்காது. அதற்குள் (பிச்சுவாக் கத்தியால்) உமர்(ரலி) குத்தப்பட்டு வட்டார்கள்.

உமர்(ரலி) குத்தப்பட்ட நாளில் அதிகாலை(த் தொழுகைக்காக) நான் (தொழுகை அணியில்) நின்று கொண்டிருக்கிறேன். எனக்கும் உமா(ரலி) அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. உமர்(ரலி) (மக்களுக்குத் தொழுகை நடத்துவதற்கு முன்) இரண்டு தொழுகை அணிகளுக்கு இடையில் சென்றால் (மக்களை நோக்கி), ‘சீராக நில்லுங்கள்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அணிகளுக்கிடையே சீர் குலைவு தென்படாத போதே முன் சென்று (தொழுகைக்காக) தக்பீர் (தஹ்ரீமா) கூறுவார்கள். சில சமயம் ‘யூசுஃப்’ அத்தியாயம் அல்லது ‘நஹ்ல்’ அத்தியாயம் அல்லது அது போன்ற (வேறோர் அத்தியாயத்)தை, மக்கள் தொழுகை;காக வந்து சேரும் வரையில் முதல் ரக்அத்தில் ஓதுவார்கள். (சம்பவ தினத்தன்று) அப்போது நான் தக்பீர் கூறியிருப்பாக்hள். ‘என்னை நாய் கொன்றுவிட்டது… அல்லது தின்றுவிட்டது…” என்று கூறினார்கள். (அப்போது ‘அபூ லுஸலுஆ ஃபைரோஸ்’ என்பவன் பிச்சுவாக் கத்தியால் அவர்களைக் குத்தி விட்டிருந்தான்). உடனே, அந்த ‘இல்ஜ்’ (அரபில்லாத அந்நிய மொழி பேசும் இறைமறுப்பாளன்) தன்னுடைய பிச்சுவாக் கத்தியை எடுத்துக் கொண்டு தன்னுடைய வலப்பக்கம், இடப்பக்கம் நிற்கும் எவரையும் விடாமல் குத்திக் கொண்டே விரைந்தோடலானான். முடிவாக, பதின்மூன்று ஆண்களை அவன் குத்தி வட்டிருந்தான். அதில் ஏழுபேர் இறந்துவிட்டனர். இதைக் கண்ட (அங்கிருந்த) முஸ்லிம்களில் ஒருவர் தம் நீண்ட தொப்பியை (கழற்றி) அவன் மீது வீசி எறிந்தார். அந்த அந்நிய மொழிக்காரனான இறைமறுப்பாளன், தாம் பிடிபட்டு விடுவோம் என்று எண்ணிய தன்னைத் தானே அறுத்து (த் தற்கொலை செய்) கொண்டான். மேலும், (தொழுகை நடத்திக் கொண்டிருந்த) உமர்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களின் கரத்தைப் பிடித்து (மக்களுக்குத் தொழுகை நடத்துவதற்காகத் தம்மிடத்தில்) முன்னிறுத்தினார்கள். நான் பார்த்த (இந்தச் சம்பவத்)தை உமர்(ரலி) அவர்களுக்கருகே இருந்தவர்களும் பார்த்தனர். ஆனால், பள்ளி வசாலின் மூலைகளில் (தொழுது கொண்டு) இருந்தவர்களுக்கு இது தெரியவில்லை. ஆயினும், (தொழுகை நடத்திக் கொண்டிருந்த) உமர்(ரலி) அவர்களின் சப்தம் நின்றுவிட்டபோது அவர்கள் ‘சுப்ஹானல்லாஹ், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன், அல்லாஹ் தூயவன்)” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (சிறிய அத்தியாயங்களை ஓதி) சுருக்கமாகத் தொழுகை நடத்தினார்கள். மக்கள் (தொழுது முடித்து) திரும்பியபோது உமர்(ரலி), ‘இப்னு அப்பாஸ் அவர்களே! என்னைக் கொன்றவன் யார் என்று பாருங்கள்” என்று கூறினார்கள். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) சிறிது நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து, ‘முகீராவின் அடிமை தான் (உங்களைக் குத்தியது)” என்று கூறினார்கள். உமர்(ரலி), ‘அந்தத் திறமையான தொழில் கலைஞனா?’ என்று கேட்டார்கள். ‘ஆம்” என்று இப்னு அப்பாஸ்(ரலி) பதிலளித்தார்கள். ‘அல்லாஹ் அவனைக் கொல்லட்டும்! அவன் விஷயத்தில் நல்லதைத் தானே நான் உத்தரவிட்டேன்! ஆனால், என்னையே அவன் கொன்றுவிட்டானே)! தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரின் கரத்தால் எனக்கு மரணம் நேரும்படிச் செய்து விடாத அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (மதீனா நகரத்தின் சில பணிகளுக்கு அரபுகள் அல்லாத அந்நியர்கள் அவசியம் எனக் கூறி) அரபுகள் அல்லாத அந்நிய(த் தொழிற் கலைஞ)ர்கள் மதீனாவில் அதிகம் இருக்க வேண்டுமென (இப்னு அப்பாஸ் அவர்களே!) நீங்களும் உங்கள் தந்தையார் (அப்பாஸ்) அவர்களுமே விரும்பக் கூடியவர்களாக இருந்தீர்கள்” என்று உமர்(ரலி) கூறினார்.

அவர்களிடையே அப்பாஸ்(ரலி) அவர்களே நிறைய அடிமைகள் உடையவராக இருந்தார்கள். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) (உமர் – ரலி அவர்களை நோக்கி), ‘நீங்கள் விரும்பினால் (மதீனாவிலுள்ள அரபுகளல்லாத தொழில் கலைஞர்கள் அனைவரையும்) கொன்று விடுகிறோம்” என்று கூறினார்கள். உமர்(ரலி), ‘நீங்கள் (இந்த எண்ணத்தினால்) தவறிழைத்து விட்டீர்கள். உங்களின் மொழியில் அவர்கள் பேசிய பின்பும், உங்களின் கிப்லாவை நோக்கித் தொழுத பின்பும், உங்களைப் போன்றே ‘ஹஜ்ஜு’ செய்த பின்புமா? (முஸ்லிம்களான அவர்களைக் கொலை செய்யப்போகிறீர்கள்?)’ என்று கேட்டார்கள். பிறகு, (குற்றுயிராயிருந்த) உமர்(ரலி) அவர்களை அவர்களின் வீட்டுக்கு சுமந்து செல்லப்பட்டது. அவர்களுடன் நாங்களும் சென்றோம். அன்றைய நாளுக்கு முன்னால் எந்தத் துன்பமும் நிகழ்ந்திராதது போன்று மக்கள் (கடுந் துயரத்துடன்) காணப்பட்டனர். ஒருவர், ‘அவருக்கு ஒன்றும் ஆம் விடாது” என்கிறார். மற்றொருவர், ‘அவருக்கு (மரணம் சம்பவித்து விடும் என்று) நான் அஞ்சுகிறேன்’ என்று கூறுகிறார். அப்போது, (காயத்தின் ஆழத்தைக் கண்டறிவதற்காக) பேரீச்சம் பழச்சாறு கொண்டு வரப்பட்டது. அதை உமர்(ரலி) அருந்தினார்கள். உடனே, அது அவர்களின் வயிற்றின் (காயத்தின்) வழியாக வெளியேறியது. (வெளியில் வந்தது பேரீச்சம் பழச் சாறா அல்லது உமரின் இரத்தமா என்று பாகுபடுத்த முடியாத விதத்தில் இரண்டும் ஒரே நிறத்தில் இருந்ததால்) பிறகு, பால் கொண்டு வரப்பட்டது. அதை அவர்கள் அருந்தினார்கள். அதுவும் காயத்தின் வழியாக (வெள்ளை நிறத்தில்) வெளியேறிவிட்டது. அப்போது அவர்கள் இறக்கும் நிலையை அடைந்துவிட்டார்கள் என்று மக்கள் அறிந்து கொண்டனர். அவர்களின் அருகே நாங்கள் சென்றோம். மக்கள் வந்து உமர்(ரலி) அவர்களைப் புகழ்ந்து பேசத் தொடங்கினார்கள். ஓர் (அன்சாரி) இளைஞரும் வந்தார். அவர், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே!” அல்லாஹ்வின் தூதருடனான (உங்களுடைய) தோழமை, இஸ்லாத்தில் (உங்களுக்கிருக்கும்) நீங்களே அறிந்துள்ள சிறப்பு, பிறகு நீங்கள் (ஆட்சித் தலைவராகப் பதவியேற்று (குடி மக்களிடையே) நீதியாக நடந்து கொண்டது, பிறகு (இப்போது) உயிர்த் தியாகம் (செய்ய விருப்பது) ஆகியவற்றின் மூலம் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள நற்செய்தி கொண்டு நீங்கள், மகிழ்ச்சி அடையுங்கள்” என்று கூறினார். (இதைக் கேட்ட) உமர்(ரலி) ‘இவையெல்லாம் எனக்கு (சாதகமாக இல்லாவிட்டாலும் பாதகமாக இல்லாமலிருந்தாலே போதும். எனவே, இவை எனக்கு) சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம். சரிக்குச் சமமாக இருப்பதையே விரும்புகிறேன்” என்று கூறினார்கள். அந்த இளைஞர் திரும்பிச் சென்றபோது அவரின் கீழங்கி பூமியைத் தொட்டுக் கொண்டிருந்தது. (இதைக் கண்ட) உமர்(ரலி), ‘அந்த இளைஞரை என்னிடம் திரும்ப அழைத்து வாருங்கள்” என்று கூறினார்கள். (அவர் திரும்பி வந்த போது), ‘என்னுடைய சகோதரரின் மகனே! உன்னுடைய ஆடையை (பூமியில் படாமல்) உயர்த்திக் கட்டு! இது உன் ஆடையை நீண்ட நாள் நீடிக்கச் செய்யும்; உன்னுடைய இறைவனுக்கு அஞ்சி நடப்பதுமாகும்” என்று கூறினார்கள். (பிறகு தம் மகனை நோக்கி), ‘உமரின் மகன் அப்துல்லாஹ்வே!என் மீது எவ்வளவு கடன் (பாக்கி) உள்ளது என்று பார்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள், கணக்கிட்டுப் பார்த்தனர். எண்பத்தாறாயிரம் (திர்ஹம்ஃதீனார்) அல்லது அது போன்றது இருப்பதைக் கண்டார்கள். உமர்(ரலி), ‘இந்தக் கடன்களை அடைப்பதற்கு உமரின் செல்வம் போதுமென்றால் அதிலிருந்து கொடுத்து விடு. அவ்வாறு போதுமானதாக இல்லாவிட்டால் (நம் கூட்டத்தாரான) அதீ இப்னு கஅப் மக்களிடம் கேட்டு (வாங்கிக்) கொள். அவர்களின் செல்வமும் போதுமானதாக இல்லாவிட்டால் (நம்முடைய குலமான) குறைஷிக் குலத்தாரிடம் கேட்டு (வாங்கிக்) கொள். இவர்களையும் தாண்டி வேறு யாரிடமும் செல்லாதே. (இவர்களிடம் கேட்டு வாங்கிய) பின், என் சார்பாக இந்தக் கடன்களை நீயே அடைத்து விடு! (பிறகு) இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா அவர்களிடம் நீ சென்று, ‘உமர் உங்களுக்கு சலாம் கூறுகிறார்’ என்று கூறு. ‘விசுவாசிகளின் தலைவர்’ என்று (என்னைப் பற்றிக்) கூறாதே. ஏனெனில், நான் இன்று (முதல்) விசுவாசிகளுக்கு (ஆட்சித்) தலைவனல்லன். மேலும், (அன்னை ஆயிஷா – ரலி – அவர்களிடம்) ‘உமர் தம் இரண்டு தோழர்கள் (நபி – ஸல் – மற்றும் அபூ பக்கர் – ரலி – அடக்கம் செய்யப்பட்டுள்ள உங்களின் அறையில் அவர்கள்) உடன் தம்மையும் அடக்கம் செய்வதற்கு (உங்களிடத்தில்) அனுமதி கோருகிறார்’ என்று சொல்’ எனக் கூறினார்கள். ஆயிஷா(ரலி) அவர்களிடம் உமர்(ரலி) அவர்களின் புதல்வர் சென்று சலாம் கூறி, (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்ட பிறகு வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது ஆயிஷா(ரலி) (உமர் – ரலி அவர்கள் குத்தப்பட்ட செய்தியறிந்து) அழுது கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டார். அப்போது, அவர்களைப் பார்த்து, ‘(என் தந்தை) உமர் இப்னு கத்தாப் தங்களுக்கு சலாம் கூறுகிறார். தம் இரண்டு தோழர்களுடன் தம்மையும் அடக்கம் செய்வதற்குத் தங்களிடம் அனுமதி கேட்கிறார்” என்று கூறினார். அப்போது ஆயிஷா(ரலி), ‘எனக்காக அ(ந்த இடத்)தை (ஒதுக்கிக் கொள்ள) நான் நினைத்திருந்தேன். (இப்போது அங்கு அடக்கம் செய்யப்படுவதற்கு) என்னை விட அவருக்கே முதலிடம் கொடுத்து விட்டேன். (அவரையே அந்த இடத்தில் அடக்கிக் கொள்ளுங்கள்)” என்று கூறினார்கள். பிறகு அவர் (உமர் – ரலி – அவர்களிடம்) திரும்பி வந்தபோது, ‘இதோ, உமர் அவர்களின் மகன் அப்துல்லாஹ் வந்துவிட்டார்” என்று கூறப்பட்டது. (ஒருக்களித்துப் படுத்திருந்த) உமர்(ரலி), ‘என்னைத் தூக்கி உட்கார வையுங்கள்” என்று கூறினார்கள். அப்போது (அங்கிருந்த) ஒருவர் தன்னோடு அவர்களை அணைத்துக் கொண்டு சாய்த்து அமர்த்தினார். அப்போது உமர்(ரலி) (தம் மகனை நோக்கி), ‘உன்னிடம் என்ன (பதில்) உள்ளது?’ என்று கேட்டார்கள். ‘நீங்கள் விரும்பியது தான், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! (ஆயிஷா (ரலி) அனுமதித்துவிட்டார்கள்” என்று அப்துல்லாஹ் கூறினார்கள். (அப்போது) ‘எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இதுதான் எனக்கு கவலையளித்துக் கொண்டிருந்தது. (இப்போது என் ஆசை நிறைவேறிவிட்டது.) நான் இறந்துவிட்டால் என்னைச் சுமந்து (என்னை அடக்கம் செய்யும் அந்த அறைக்குக்) கொண்டு செல்லுங்கள். பிறகு, ஆயிஷா அவர்களக்கு நீ சலாம் சொல்லி, (அவர்களிடம்) உமர் இப்னு கத்தாப் (தம் இருதோழர்களுக்கு அருகில் தம்மை அடக்கம் செய்வதற்குத் தங்களிடத்தில்) அனுமதி கேட்கிறார்’ என்று (மீண்டும் ஒரு முறை) சொல். அவர்கள் அனுமதித்தால், என்னை (அந்த அறைக்கு) உள்ளே கொண்டு செல்லுங்கள். அவர்கள் (அனுமதி தர) மறுத்தால் என்னை (மற்ற) முஸ்லிம்களின் (மண்ணறைகள் அமைந்திருக்கும் பொது) அடக்கலத்திற்குத் திருப்பிக் கொண்டு சென்று விடுங்கள்’ என்று கூறினார்கள். (உமர் – ரலி – அவர்கள் இருந்த அந்த இடத்திற்கு அவர்களின் மகள்) இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஹஃப்ஸா(ரலி) வந்தார்கள். அவர்களுடன் பல பெண்களும் வந்தனர். அவர்களை நாங்கள் கண்டபோது நாங்கள் கண்டபோது நாங்கள் எழுந்து விட்டோம். உமர்(ரலி) அவர்களிடம் ஹஃப்ஸா(ரலி) வந்து, சிறிது நேரம் அவர்களுக்கு அருகில் அழுது கொண்டிருந்தார்கள். அப்போது ஆண்கள் (சிலர்) உமர்(ரலி) அவர்களிடம் வர அனுமதி கோரினர். ஹஃப்ஸா(ரலி) உடனே அவர்களுக்குள்ள நுழைவிடம் ஒன்றில் நுழைந்து கொண்டார்கள். உள்ளேயிருற்து அவர்கள் அழுகிற சப்தத்தை அப்போது நாங்கள் கேட்டோம். (அங்கிருந்த ஆண்கள் உமர்(ரலி) அவர்களை நோக்கி), ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! தங்களுக்கு ஒரு பிரதிநிதியை அறிவித்து, இறுதி உபதேசம் செய்யுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எவரைக் குறித்து திருப்தியடைந்த நிலையில் இறந்தார்களோ அந்தச் சிலர் அல்லது அந்தக் குழுவினர். தாம் இந்த (ஆட்சித் தலைமை) விஷயத்தில் (முடிவு செய்ய) வேறெவரை விடவும் மிகத் தகுதி படைத்தவர்களாக எனக்குத் தெரிகிறார்கள்.” என்று கூறிவிட்டு, அலீ(ரலி), உஸ்மான்(ரலி), ஸுபைர்(பின் அவ்வாம் (ரலி), தல்ஹா(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) ஆகியோரின் பெயர்களையும் அப்போது குறிப்பிட்டார்கள். மேலும், உமர்(ரலி), ‘உமரின் மகன் அப்துல்லாஹ்வும் உங்களுடன் இருப்பார். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் அவருக்கு எந்தப் பங்குமீல்லை இதை மகன் அப்துல்லாஹ்வூக்கு ஆறுதல் போன்று கூறினார்கள். தலைமைப் பதவி ஸஅத் அவர்களுக்கு கிடைத்தால் அதற்கு அவர் அருகதையானவர் தாம். அவ்வாறு அவருக்கு கிடைக்கவில்லையாயின், உங்களில் ஆட்சித் தலைவராக ஆக்கப்படுகிறவர் (ஸஅத் இப்னு அபீ வக்காஸ்) அவர்களிடம் (ஆலோசனை) உதவி பெறட்டும். ஏனெனில், நான் ஸஅத் அவர்களை, அவர் இயலாதவர் என்பதாலோ, மோசடி செய்துவிட்டார் என்பதாலோ (கூஃபா நகரின் ஆளுநர் பதவியிலிருந்து) பதவி நீக்கம் செய்யவில்லை. மேலும், ‘(இஸ்லாத்தில்) முன்னவர்களான முஹாஜிர்களின் உரிமைகளை அறிந்து, அவர்களின் கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று எனக்குப் பின்னர் (வரவிருக்கும்) ஆட்சித் தலைவருக்கு நான் இறுதி உபதேசம் செய்கிறேன். மேலும், (நபி – ஸல் – மற்றும் நபித்தோழர்கள் ஆகிய) அவர்கள் ஹிஜ்ரத் செய்து வருவதற்கு முன்பே ஹிஜ்ரத் நாட்டை (மதீனாவை) தம் இருப்பிடமாகக் கொண்டு, இறை நம்பிக்கையை (உறுதியாக)ப் பற்றிக் கொண்ட அன்சாரிகளுக்கு நன்மையை(ப் புரியும்படி)யும் நான் அவருக்கு உபதேசம் செய்கிறேன். அவர்களில் நன்மை புரிபவரிடமிருந்து (அவரின் நன்மை) ஏற்கப்பட்டு, அவர்களில் தவறிழைப்பவர் மன்னிக்கப்பட வேண்டும். (இதே போன்று) நகர்ப்புற மக்களுக்கும் நன்மையை(ச் செய்யும் படி)யும் அவருக்கு நான் உபதேசம் செய்கிறேன். ஏனெனில், அவர்கள் இஸ்லாத்திற்கு உறுதுணை ஆவர். நிதி திரட்டித் தருபவர்களாகவும், எதிரிகளை (தங்களின் வீரத்தாலும் பெரும் எண்ணிக்கையாலும்) ஆத்திரமடையச் செய்பவர்களாகவும் உள்ளனர். அவர்களிடமிருந்து அவர்களின் (தேவைகளுக்குப் போக) எஞ்சியதை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். அதையும் அவர்களின் சம்மத்துடன் தான் எடுக்க வேண்டும்.

மேலும், கிராமப்புற அரபுகளுக்கும் நன்மையே புரியும்படியும் அவருக்கு நான் உபசேதம் செய்கிறேன். ஏனெனில், அவர்களே பூர்விக அரபிகளும், இஸ்லாத்தின் அடிப்படையும் ஆவார்கள். அவர்களின் செல்வத்தில் மலிவானவை மட்டுமே எடுக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும், அல்லாஹ்வின் பொறுப்பிலும் அவனுடைய தூதரின் பொறுப்பிலும் இருப்பவர்க(ளான முஸ்லிமல்லாதவர்க)ளுக்கு அளிக்கப்படட் உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் (அவர்களின் எதிரிகள் அவர்களைத் தாக்க வரும் போது) அவர்களுக்குப் பின்னாலிருந்து அவர்களுக்காகப் போர் புரிய வேண்டுமெனவும், (காப்பு வரி விதிக்கும் போது) அவர்களின் சக்திக்கேற்பவே தவிர அவர்கள் சிரமத்திற்குள்ளாக்கப்படக் கூடாது என்றும் நான் அவருக்கு உபதேசம் செய்கிறேன்’ என்று உமர்(ரலி) கூறினார்.

(கத்திக்குத்துக்கு உள்ளாகி மூன்று நாள்களுக்குப் பிறகு) உமர்(ரலி) இறந்து விட்டார்கள். பிறகு அவர்களை (எடுத்துக்) கெண்டு (அவர்களின் இல்லத்திலிருந்து) நாங்கள் புறப்பட்டோம். (ஆயிஷா – ரலி – அவர்களின் அறைக்கு) வந்து சேர்ந்தோம். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) (ஆயிஷா – ரலி – அவர்களுக்கு) சலாம் கூறினார்கள். பிறகு, ‘(உங்களுக்குரிய அறையில் தம் இரண்டு தோழர்களுக்கு அருகில் தம்மை அடக்கம் செய்ய என் தந்தை) உமர் இப்னு கத்தாப் அவர்கள் (உங்களிடம்) அனுமதி கோருகிறார்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்’ என்று கூறினார்கள். உடனே அவர்களை உள்ளே கொண்டு செல்லப்பட்டு அந்த இடத்தில் அவர்களின் இரண்டு தோழர்களுக்கு அருகில் வைக்கப்பட்டது. அவர்களை அடக்கம் செய்து முடித்தபோது அந்த (ஆறு பேர் கொண்ட) ஆலோசனைக் குழுவினர் (அடுத்த ஆட்சித் தலைவர் யார் என்று தீர்மானிப்பதற்காக ஓரிடத்தில்) குழுமினர். அப்போது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், ‘(கருத்து வேறுபாட்டைக் குறைப்பதற்காக, ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்) உங்களின் உரிமையை உங்களில் மூன்று பேர்களிடம் ஒப்படையுங்கள்” என்று கூறினாக்hள். அப்போது ஸுபைர்(ரலி), ‘என்னுடைய அதிகாரத்தை அலு அவர்களுக்கு (உரியதாக) நான் ஆக்கிவிட்டேன்” என்று கூறினார்கள். பிறகு தல்ஹழ(ரலி), ‘என்னுடைய அதிகாரத்தை நான் உஸ்மான் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கி விட்டேன்” என்ற கூறினாக்hள். பிறகு ஸஅத்(ரலி), ‘என்னுடைய அதிகாரத்தை நான் அப்தூ ரஹ்மான் பின்அ வ்ஃப் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கிவிட்டேன்” என்று கூறினார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அலீ ரலி- அவர்களையும் உஸ்முhன் – ரலி- அவர்களையும் நோக்கி), ‘உங்கள் இருவரில் இந்த அதிகாரத்திலிருந்து விலம்க் கொள்(ள முன்வரு)கிறவரிடம் இந்தப் பொறுப்பை நாம் ஒப்படைப்போம். அல்லாஹ்வும், இஸ்லாமும் அவரின் மீது (கண்காணிப்பாளர்களாக) உள்ளனர். உங்களில் சிறந்தவர் யாரென (அவரவர் மனத்திற்குள்) சிந்தித்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள். அப்போது இருமூத்தவர்(களான உஸ்மான்(ரலி) அவர்களும், அலீ(ரலி) அவர்)களும் மௌனமாக இருந்தார்கள். அப்போது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ‘நீங்கள் (ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும்) அதிகாரத்தை என்னிடம் ஒப்படைக்கிறீர்களா? உங்களில் சிறந்தவரை நான் (தரத்தில்) குறைத்து மதிப்பிடவில்லை யென்பதை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான்” என்று கூறினார்கள். அதற்கு, அவ்விருவரும் ‘ஆம்! (உங்களிடம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறோம்)” என்றனர். அப்போது அவ்விருவரில் ஒருவரின் ( – அலீ – ரலி அவர்களின்) கையை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) பிடித்துக் கொண்டு ‘உங்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (நெருங்கிய) உறவுமுறை இருக்கிறது. மேலும், இஸ்லாத்தில் உங்களுக்கு நீங்களே அறிந்துள்ள சிறப்பும் உண்டு. அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான். உங்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் (குடிமக்களிடத்தில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்வீர்கள். உஸ்மான் அவர்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் அவருக்கு செவிமடுத்து, கட்டுப்பட்டு நடப்பீர்கள்” என்று கூறினார்கள். பிறகு இன்னொருவரிடம் ( உஸ்மான் – ரலி – அவர்களிடம்) தனியே வந்து அலீ(ரலி) அவர்களிடம் கூறியதைப் போன்றே (அவர்களிடமும்) வாக்குறுதி வாங்கிய பின், ‘உஸ்மான் அவர்களே! தங்களின் கையைத் தாருங்கள்” என்று கூறி (உஸ்மான் – ரலி – அவர்களின் கையைப் பிடித்து) அவர்களுக்கு பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்து கொடுத்தார்கள். அப்போது அலீ(ரலி) அவர்களும் உஸ்மான்(ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மேலும், அந்நாட்டவரும் (மதீனா வாசிகளும்) வந்து அவர்களிடம் பைஅத் செய்து கொடுத்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3701

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். (கைபர் போரின் போது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நானை (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் தரப் போகிறேன். அல்லாஹ் அவரின் கரங்களில் வெற்றியை அளிப்பான்” என்று சொன்னாக்hள். எனவே, மக்கள் தம்மில் எவரிடம் அது கொடுக்கப்படும் என்ற யோசனையில் இரவெல்லாம் மூழ்கியிருந்தனர். காலையானதும மக்களில் ஒவ்வொருவரும் தன்னிடம் அது கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்ட வண்ணம் அல்லாஹ்வின் தூதரிடம் சென்றனர். நபி(ஸல்) அவர்கள், ‘அலீ இப்னு அபீ தாலிப் எங்கே?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘அவருக்குக் கண்வலி, இறைத்தூதர் அவர்களே!” என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி) வந்தவுடன் அவக்hளுடைய இரண்டு கண்களிலும் (தம் உமிழ்நீரை) உமிழ்ந்து அவர்களுக்காக (நலத்திற்கு) பிரார்த்தனை புரிந்தார்கள். அவர்களுக்கு (அதற்கு முன்) வலியே இருந்ததில்லை என்பதைப் போன்று அவர்கள் (வலி நீங்கி) குணமடைந்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள். அப்போது அலீ(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! அவர்கள் நம்மைப் போன்று (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா? என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்களின் களத்தில் இறங்கும் வரை நிதானமாகச் செல்லுங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு (வரும்படி) அழையுங்கள். மேலும், இஸ்லாத்தில் அவர்களின் மீது கடமையாகிற அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியை அளிப்பது (அரபுகளின் அருஞ் செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3702

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார். அலீ(ரலி) கைபர் போரின்போது நபி(ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின் தங்கிவிட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது. ‘நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின் தங்கி விட்டேனே” என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். பிறகு அலீ(ரலி) புறப்பட்டு (வந்து) நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்தார்கள். எந்த நாளின் காலை வேளையில் கைபரை நபி(ஸல) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அந்த நாளின் (இரவுக்கு முந்தைய) மாலை நேரம் வந்தபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிற அல்லது அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற… ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப்போகிறேன்… அல்லது அத்தகைய ஒருவர் இக்கொடியைப் பிடித்திருப்பார்… என்று சொல்லிவிட்டு, ‘அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்” என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ(ரலி) வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், ‘இதோ அலீ அவர்களே!” என்று கூறினர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3703

அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார். ஒருவர் ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடம் வந்து, ‘இன்னவர் – அதாவது மதீனாவின் ஆளுநர் (மர்வான் இப்னி ஹகம்) அலீ(ரலி) அவர்களை மிம்பருக்கருகில் (விரும்பத் தகாத பெயரால்) அழைககிறார்” என்று கூறினார். ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி), ‘அவர் (அப்படி) என்ன கூறினார்?’ என்று கேட்க அம்மனிதர், ‘அபூ துராப் (மண்ணின் தந்தை) என்றுஅழைக்கிறார்கள் என்று பதிலளித்தார். இதைக் கேட்டு ஸஹ்ல்(ரலி) சிரித்துவிட்டு, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் தாம் அலீ அவர்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினார்கள். அலீ அவர்களுக்கு அதை விடப் பிரியமான ஒரு பெயர் எதுவும் இருந்ததில்லை” என்று சொன்னர்கள். இந்த ஹதீஸை முழுமையாகச் சொல்லுமபடி நான் ஸஹ்ல் இப்னு ஸஅத்) அவர்களே! அது எப்படி?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: (ஒரு முறை) அலீ(ரலி) ஃபாத்திமா(ரலி) அவர்களிடம் சென்றார்கள். பிறகு (அலீ – ஃபாத்திமா இடையே மனஸ்தாபம் ஏற்படவே) வெளியே வந்து பள்ளிவாசலில் படுத்தார்கள். (அப்போது ஃபாத்திமா அவர்களின் வீட்டுக்கு வந்த) நபி(ஸல்) அவர்கள், உன் பெரிய தந்தையின் மகன் (அலீ) எங்கே” என்று கேட்க அவர்கள், ‘பள்ளிவாசலில் இருக்கிறார்” என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், அலீ அவர்களிடம் சென்றபோது அவர்களின் மேல்துண்டு அவர்களின் முதுகிலிருந்து (தரையில்) விழுந்து விட்டிருப்பதையும் (தலையிலுள்ள) முண் அவர்களின் முதுகில் ஒட்டிக் கொண்டிருப்பதையும் கண்டு அவர்களின் முதுகிலிருந்து மண்ணைத் துடைக்கலானார்கள். அப்போது, ‘(எழுந்து) அமருங்கள், அபூ துராப் (மண்ணின் தந்தை) அவர்களே!” என்று நபி(ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3704

ஸஅத் இப்னு உபைதா(ரஹ்) அறிவித்தார். இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ஒருவர்வந்து உஸ்மான்(ரலி) அவர்களைப் பற்றிக் கேட்டார். இப்னு உமர்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களின் நற்செயல்களை எடுத்துரைத்தார்கள். (பிறகு) அந்த மனிதரிடம், ‘நான் சொன்னவை உனக்கு எரிச்சலூட்டியிருக்குமே!” என்று கூறினார்கள். (ஏனெனில் அந்த மனிதர் குறை காணும் நோக்கத்துடன் வந்திருந்தார்.) அதற்கு அந்த மனிதர், ‘ஆம்” என்று பதிலளித்தார். இப்னு உமர்(ரலி), ‘அப்படியென்றால் அல்லாஹ் உன் மூக்கில் மண் படியச் செய்யட்டும்” என்று கூறினார்கள். பிறகு அந்த மனிதர் அலீ(ரலி) அவர்களைப் பற்றிக் கேட்க, இப்னு உமர்(ரலி) அலீ(ரலி) அவர்களின் நற்செயல்களைத் எடுத்துரைத்துவிட்டு, ‘அவர்கள் அவ்வாறே; அவர்களின் இல்லம் நபி(ஸல்) அவர்களின் (குடும்பத்தாரின்) வீடுகளுக்கு நடுவில் இருந்தது” என்று கூறினார்கள். பிறகு, ‘நான் சொன்னது உனக்கு எரிச்சலூட்டியிருக்குமே!” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ‘ஆம்” என்று பதிலளித்தார். இப்னு உமர்(ரலி), ‘அப்படி யென்றால் அல்லாஹ் உன் மூக்கில் மண் படியச் செய்யட்டும். போ! போய் (நான் இப்படி உண்மையைச் சொன்னதற்காக என்னை நீ தண்டிக்க விரும்பினால்) எனக் கெதிராக உன்னால் ஆனதைச் செய்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3705

அலீ(ரலி) அறிவித்தார். திரிகை சுற்றுவதால் தாம் அடையும் வேதனை குறித்து (என் மனைவி) ஃபாத்திமா முறையிட்டார். (டந்நிலையில்) நபி(ஸல) அவர்களிடம் போர்க் கைதிகள் சிலர் கொண்டு வரப்பட்டனர். உடனே, ஃபாத்திமா அவக்hள (நபி – ஸல் – அவர்களிடம் வீட்டு வேலைக்காகக் கைதி எவரையாவது கேட்டு வாங்கிவரச்) சென்றார். ஆனால், நபி(ஸல்) அவர்களைக் காணவில்லை; ஆயிஷா(ரலி) அவர்களைத் தாம்அங்கே கண்டார். எனவே, (தாம் வந்த நோக்கத்தை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஃபாத்திமா தெரிவித்தா. நபி(ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது ஆயிஷா(ரலி) ஃபாத்திமா வந்ததைத் தெரிவித்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அதற்குள் நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்று விட்டிருந்தோம். நபி(ஸல்) அவர்களைக் கண்டவுடன்) நான் எழுந்து நிற்கப் போனேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் (இருவரும்) உங்கள் இடத்திலேயே இருங்கள்” என்று சொல்லிவிட்டு எங்களுக்கிடையே (வந்து) அமர்ந்தார்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களின் கால்களின் குளிர்ச்சியை நான் என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். பிறகு, ‘நீங்கள் இருவரும் என்னிடம் கோரிய (உதவி) தனை விடச் சிறந்த ஒன்றை உங்கள் இருவருக்கும் நான் கற்றுத் தரட்டுமா? நீங்கள் இருவரும் நான் கற்றுத் தரட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்கையில் முப்பத்து நான்கு முறை ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்’ என்று சொல்லுங்கள்; முப்பத்து மூன்று முறை ‘சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் தூயவன்’ என்று சொல்லுங்கள்; முப்பத்து மூன்று முறை ‘அல்ஹம்து லில்லாஹ் – அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’ என்று சொல்லுங்கள். அது ஒரு பணியாளை விட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும் என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3706

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம், ‘(நபி) ஹாரூன் அவர்களுக்கு (அவர்களின் சகோதரர் – நபி) மூஸா அவர்களிடம் எந்த அந்தஸ்து இருந்தோ அதே அந்தஸ்தில் நீங்கள் என்னிடம் இருப்பதை விரும்பவில்லையா?’ என்று கேட்டார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3707

அபீ தா இப்னு அம்ர் அஸ் ஸல்மானீ(ரஹ்) அறிவித்தார். அலீ(ரலி) (இராக் வந்திருந்தபோது இராக் அறிஞர்களிடம் உம்முல்லதை விற்கலாம் என்று கருத்துத் தெரிவிக்க, அதை நான் (விரும்பாத போது), ‘நீங்கள் முன்பு (உமர் – ரலி – அவர்களின் கருத்துப்படி உம்முல் வலதை விற்கக் கூடாது என்று) தீர்ப்பளித்து வாருங்கள். ஏனெனில், (மக்களிடையே சச்சரவுகளுக்குக் காரணமாய் அமையும் வகையில் அறிஞர்களுக்கிடையிலான) கருத்து வேறுபாடுகளை (பம்ரங்கமாக்குவதை) நான் விரும்பவில்லை. மக்கள் அனைவரும் (ஒத்த கருத்துடைய) ஒரே குழுவினராய் ஆகும் வரை, அல்லது என் தோழர்கள் இறந்துவிட்டதைப் போல் நானும் இறந்துவிடும் வரை நான் இவ்வாறே (கருத்து வேறுபாடுகளை பம்ரங்கப்படுத்த விரும்பாதவனாக) இருப்பேன்” என்று கூறினார்கள்.

“அலீ(ரலி) அவர்களிடமிருந்து (வந்ததாக ஷியாக்களின் மூலம் அறிவிக்கப்படுகிறவற்றில் பெரும்பாலானவை பொய்கள் தாம்” என்று இப்னு சீரின்(ரஹ்) கருதுகிறார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3708

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். “(நபிமொழிகளை) அதிகமாக அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறாரே” என்று மக்கள் (என்னைப் பற்றிக் குறை) கூறிக் கொண்டிருந்தார்கள். நான் என் பசி அடங்கினால் போதும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களுடனேயே எப்போதும் இருந்து வந்தேன். புளித்து உப்பிய (உயர்தரமான) ரொட்டியை நான் உண்பதுமில்லை; கோடுபோட்ட அழகிய (உயர்ந்த) துணியை அணிவதுமில்லை. இன்னவனோ, இன்னவளோ எனக்குப் பணிவிடை செய்வதுமில்லை. பசியின் காரணத்தால் நான் என் வயிற்றில் கூழாங்கற்களை வைத்துக் கட்டிக் கொண்டிருந்தேன். என்னை ஒருவர் (தன் இல்லத்திற்கு) அழைத்துச் சென்று, எனக்கு அவர் உணவளிக்க வேண்டும் என்ப(தை உணர்த்துவ)தற்காக (‘ எனக்கு விருந்தளியுங்கள்’ என்ற பொருள் கொண்ட ‘அக்ரினீ’ என்னும் சொல்லை சற்று மாற்றி)’ அக்ரிஃனீ’ எனக்கு ஓர் இறை வசனத்தை ஓதிக்காட்டுங்கள் – என்பேன். அவ்வனம் என்னுடன் (முப்னே மனப்பாடமாக) இருக்கும் . ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்(ரலி) ஏழைகளுக்கு மிகவும் உதவுபவராயிருந்தார். அவர் எங்களை அழைத்துச் சென்று தம் வீட்டில் இருக்கும் உணவை எங்களுக்கு அளிப்பார். எந்த அளவிற்கென்றால் அவர் எதுவுமில்லாத (காலியான) நெய்ப் பையை எங்களிடம் கொண்டு வந்து அதைப் பிளந்து விடுவார். நாங்கள் அதில் (ஒட்டிக் கொண்டு) இருப்பதை நக்கி உண்போம்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3709

ஷஅபீ (ரஹ்) அறிவித்தார். இப்னு உமர்(ரலி), ஜஅஃபர்(ரலி) அவர்களின் மகனா(ர் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃப)ருக்கு சலாம் சொன்னால் ‘இரண்டு சிறகுகள் உடையவரின் மகனே! உங்களின் மீது சாந்தி உண்டாகட்டும்’ என்று சொல்வார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரி ஆகிய நான்) கூறுகிறேன்: ‘இரண்டு சிறகுகள்’ என்பது ‘இரண்டு பக்க (பல)ங்களைக் குறிக்கும்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3710

அனஸ்(ரலி) அறிவித்தார். மக்கள் பஞ்சத்தால் பீடிக்கப்படும்போது உமர் இப்னு கத்தாப்(ரலி), அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி) அவர்களை (அல்லாஹ்விடம்) மழை கோரிப் பிரார்த்திக்கும்படி கேட்பார்கள். (அத்தகைய சந்தர்ப்பங்களில்) உமர்(ரலி), ‘இறைவா! நாங்கள் எங்கள் நபி(ஸல்) உயிருடன் இருந்த போது) அவர்கள் (உன்னிடம் பிரார்த்தித்தன்) மூலம் உன்னிடம் நாங்கள் உதவி கோரி வந்தோம். அப்போது (அதை ஏற்று) நீயும் எங்களுக்கு மழை பொழிவித்து வந்தாய். இப்போது எங்கள் நபியின் பெரிய தந்தை (அப்பாஸ் – ரலி – அவர்கள் உன்னிடம் பிரார்த்திப்பதன்) வாயிலாக உன்னிடம் (மழை பொழியும்படி) கோருகிறோம். எங்களுக்கு மழை பொழிவிப்பாயாக!” என்று கேட்பார்கள். அதன்படியே மக்களுக்கு மழை பொழிவிக்கப்பட்டு வந்தது.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3711

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த ‘பய்உ’ செல்வத்திலிருந்து தமக்கு நபி(ஸல்) அவர்களிடமிருந்து வரவேண்டிய வாரிசுப் பங்கைக் கொடுக்கும்படி அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் கேட்டு ஃபாத்திமா ஆளனுப்பினார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் தர்மமாகவிட்டுச் சென்ற நிலத்தையும் ‘ஃபதக்’ பிரதேசத்திலிருந்து நிலத்தையும் கைபரில் கிடைத்த ‘குமுஸ்’ நிதியில் மீதமானதையும் அவர் கேட்டார்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3712

அதற்கு அபூ பக்ர்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வரமுடியாது. நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தர்மம் தான்’ என்று கூறினார்கள்; மேலும், முஹம்மதின் குடும்பத்தார் உண்பதெல்லாம் இச்செல்வத்திலிருந்து தான்; அதாவது அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து தான் அதில் தங்கள் உணவுச் செலவை விட அதிகமாக எடுத்துக்கொள்ள அவர்களுக்கு உரிமையில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களின் தர்மப் பொருள்கள், நபியவர்களின் காலத்தில் எந்த வழி முறைப்படி கையாளப்பட்டு வந்தனவோ அதில் சிறிதையும் நான் மாற்றமாட்டேன். அவற்றின் விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படி நடந்து கொண்டார்களோ அவ்வாறே நான் நடந்து கொண்டார்களோ அவ்வாறே நான் நடந்து கொள்வேன்’ என்று கூறினார்கள். உடனே, அலீ அவர்கள், ஏகத்துவ உறுதிமொழியைக் கூறி இறைவனைப் புகழ்ந்துவிட்டு, ‘அபூ பக்ர் அவர்களே! உங்கள் சிறப்பை நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்று கூறினார்கள் – மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தமக்கிருக்கும் உறவையும் அவர்களின் உரிமையையும் எடுத்துரைத்தார்கள். உடனே அபூ பக்ர்(ரலி) (தாம் பங்கு தர மறுப்பதற்குக் காரணம் கூறும் விதத்தில்) பேசினார்கள். ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! என் உறவினர்களின் உறவைப் பேணி (அவர்களுடன் நல்ல முறையில்) நடந்து கொள்வதை விட இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3713

அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்.. முஹம்மத்(ஸல்) அவர்களின் குடும்பத்தார் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். (அவர்களைப் பாதுகாத்து வாருங்கள். அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்.) என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3714

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எனவே, அவருக்குக் கோபமூட்டியவர் எனக்குக் கோபமூட்டியவராவார் என மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3715

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, தம் மகள் ஃபாத்திமாவை அழைத்து அவரிடம் ஏதோ இரகசியமாகக் கூறினார்கள். (நபி – ஸல் – அவர்கள் சொன்னதைக் கேட்டு) ஃபாத்திமா அழுதார். மீண்டும் ஃபாத்திமாவை நபி(ஸல்) அவர்கள் அழைத்து எதையோ இரகசியமாகக் கூறினார்கள். (அதைக் கேட்டவுடன்) ஃபாத்திமா சிரித்தார். நான் அதைப் பற்றி (நபி – ஸல் – அவர்கள் இரகசியமாகச் சொன்னது என்ன என்று) அவரிடம் கேட்டேன்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3716

அதற்கு ஃபாத்திமா, ‘நபி(ஸல்) அவர்கள் (முதல் முறை) என்னிடம் இரகசியமாகப் பேசியபோது, தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்கள். அதனால் நான் அழுதேன். பிறகு (இரண்டாம் முறை) இரகசியமாகப் பேசியபோது அவர்களின் குடும்பத்தாரில் நானே அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லப் போகும் முதல் ஆள் என்று கூறினார்கள். அதனால் நான் (மம்ழ்ச்சியோடு) சிரித்தேன்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3717

மர்வான் இப்னி ஹகம் அவர்கள் கூறினார். ‘சில்லு மூக்கு’ நோய் (பரவலாக ஏற்பட்ட) ஆண்டில் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களுக்கும் கடுமையான சில்லு மூக்கு இரத்த நோய் ஏற்பட்டது. எந்த அளவிற்கென்றால் அது அவர்களை ஹஜ் செய்ய விடாமல் தடுத்துவிட்டது. அவர்கள் தம் இறுதி விருப்பத்தையும் தெரிவித்து (மரண சாசனம் செய்து)விட்டார்கள். அப்போது குறைஷிகளில் ஒருவர் உஸ்மான்(ரலி) அவர்களிடம் வந்து, ‘(உங்களுக்குப் பின்) பிரதிநிதி ஒருவரை நியமியுங்கள்’ என்று கூறினார். உஸ்மான்(ரலி), ‘மக்கள் (இப்படி நியமிக்கச்) கூறினார்களா?’ என்று கேட்க அம்மனிதர், ‘ஆம்” என்றார். ‘எவரை நியமிப்பது?’ என்று உஸ்மான்(ரலி) கேட்க, அவர் (பதில் சொல்லாமல்) மௌனமாயிருந்தார். அப்போது இன்னொரு மனிதர் வந்தார். அவர் (என் சகோதரர்) ஹாரிஸ் இப்னு ஹகம்) என்று நான் நினைக்கிறேன் – அவரும், ‘(உஸ்மான்(ரலி) அவர்களே! உங்களுக்குப் பின் ஒரு கலீஃபாவை (பிரதிநிதியை) நியமியுங்கள்” என்று கூறினார். உஸ்மான்(ரலி), ‘மக்கள் (இப்படிக் கூறினார்களா?’ என்று கேட்க, அவர், ‘ஆம்” என்று பதிலளித்தார். உஸ்மான்(ரலி), ‘யாரை நியமிப்பது?’ என்றுகேட்க, அந்த மனிதர் (பதில் சொல்லாமல்) மௌனமாயிருந்துவிட்டார். பிறகு உஸ்மான்(ரலி), ‘அவர்கள் ஸுபைர் அவர்களை (கலீஃபாவாக நியமிக்கச்) சொல்லியிருக்கலாம்” என்று சொல்ல, அந்த மனிதர், ‘ஆம்” என்று பதிலளித்தார். உஸ்மான்(ரலி), ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! நான் அறிந்தவரை ஸுபைர் அவர்களே மக்களில் சிறந்தவர். (எவரை கலீஃபாவாக நியமிக்கலாம் என்று மக்கள் ஆலோசனை கூறினார்களோ) அவர்களில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமானவர் ஸுபைர் தாம்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3718

மர்வான் இப்னி ஹகம் அவர்கள் கூறினார். நான் உஸ்மான்(ரலி) அவர்களிடம் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து, ‘(உங்களுக்குப் பின் ஆட்சி செய்ய) ஒரு பிரதிநிதியை நியமியுங்கள்” என்று கூறினார். உஸ்மான்(ரலி), ‘அவ்வாறு (மக்களால்) கூறப்பட்டதா?’ என்று கேட்க அம்மனிதர், ‘ஆம்; ஸுபைர்(ரலி) அவர்களைத் தான் (கலீஃபாவாக ஆக்கும்படி மக்கள் சொல்கிறார்கள்)” என்று பதில் கூறினார். அப்போது உஸ்மான்(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவரே உங்களில் சிறந்தவர் என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்று மூன்று முறை கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3719

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஒவ்வோர் இறைத்தூதருக்கும் ஒரு பிரத்யேக உதவியாளர் (ஹவாரிய்யு) உண்டு. என் பிரத்யேக உதவியாளர் ஸுபைர் இப்னு அவ்வாம் ஆவார் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3720

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார். அகழ்ப் போரின்போது நானும் உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) அவர்களும் (நபி – ஸல் அவர்களின் வீட்டுப்) பெண்களிடையே (பாதுகாப்புப்) பணியில் அமர்த்தப்பட்டோம். நான் அப்போது (என் தந்தை) ஸுபைர்(ரலி) தன் குதிரையின் மீது (சவாரி செய்த படி யூதர்களான) பனூ குறைழா குலத்தாரை நோக்கி இரண்டு… அல்லது மூன்று முறை… முறை போய் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் (இருப்பிடத்திற்குத்) திரும்பி வந்தபோது, ‘என் தந்தையே! தாங்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டுமிருப்பதை பார்த்தேன்” என்று சொன்னேன். அவர்கள், ‘என்னை நீ பார்த்தாயா? என் அருமை மகனே!” என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (பார்த்தேன்)” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘பனூ குறைழாவிடம் சென்று (உளவறிந்து) என்னிடம் அவர்களின் செய்தியைக் கொண்டு வருபவர் யார்?’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் (அந்தப் பணியைச் செய்ய ஒப்புக் கொண்டு) சென்றேன். நான் (அவர்களின் செய்தியை உளவறிந்து கொண்டு) திரும்பி வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னை கௌரவிக்கும் வகையில்) தம் தாய் தந்தையார் இருவரையும் சேர்த்து, ‘என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்’ எனக் கூறினார்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3721

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். (என் தந்தை) ஸுபைர்(ரலி) அவர்களிடம் நபித்தோழர்கள் யர்மூக் போரின்போது, ‘நீங்கள் (பைஸாந்திய இணைவைப்போர் மீது) தாக்குதல் நடத்த மாட்டீர்களா? நாங்களும் உங்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்துவோமே” என்று கேட்டார்கள். எனவே, ஸுபைர்(ரலி), இணைவைப்போர் மீது தாக்குதல் தொடுத்தார்கள். இணைவைப்பவர்கள் ஸுபைர்(ரலி) அவர்களின் தோளின் மீது இரண்டு முறை வெட்டினார்கள். அவ்விரண்டுக்கும் இடையே பத்ருப் போரில் ஸுபைர்(ரலி) அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இன்னொரு காயம் இருந்தது. நான் சிறுவனாயிருந்தபோது அந்த காயங்(களால் ஏற்பட்ட துளை போன்ற வடுக்)களுக்கிடையே என் விரல்களை நுழைத்து விளையாடி வந்தேன்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3722-3723

தல்ஹா(ரலி) அவர்களும் ஸஅத்(ரலி) அவர்களும் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (இணைவைப்பவர்களுடன்) போரிட்ட அந்த (உஹுதுப் போரின்) நாள்களில் அவர்களுடன் எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் இருக்கவில்லை.

இதை, அறிவிப்பாளர் அபூ உஸ்மான் அபதுர் ரஹ்மான் அந்நஹ்தீ(ரஹ்) தல்ஹா(ரலி) மற்றும் ஸஅத்(ரலி) ஆகிய இருவரிடமே நேரடியாகக் கேட்டு அறிவித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3724

அபூ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார். (உஹுதுப் போரின் போது) நபி(ஸல்) அவர்களை (நோக்கி வந்த அம்புகள் மற்றும் ஈட்டிகளிலிருந்து அவர்களைக் கேடயம் போன்று நின்று) காத்த தல்ஹா(ரலி) அவர்களின் கையை (துளைகளும் வடுக்களும் நிறைந்து) ஊனமுற்றதாக பார்த்தேன்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3725

ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) கூறினார். “(என்னுடைய வீரச் செயலைக் கண்டு என்னைப் பாராட்டும் விதத்தில்) நபி(ஸல்) அவர்கள் உஹுதுப் போரின்போது தம் தாய் தந்தை இருவரையும் சேர்த்து எனக்கு அர்ப்பணிப்பதாக (என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்’ எனச்) கூறினார்கள்” என்று ஸஅத்(ரலி) சொல்ல கேட்டேன்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3726

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். இஸ்லாத்தில் மூன்றிலொரு பாகமாக என்னை கண்டேன்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3727

ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) கூறினார். “நான் இஸ்லாத்தைத் தழுவிய நாளில் (தான் மற்றவர்களும் இஸ்லாத்தைத் தழுவினர். அந்நாளில்) தவிர (அதற்கு முன்பு) வேறெவரும் இஸ்லாத்தைத் தழுவிடவில்லை. நான் இஸ்லாத்தில் மூன்றிலொரு பாகமாக ஏழு நாள்கள் (வரை) இருந்தேன். . என்று ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) சொல்ல கேட்டேன்.

இதே ஹதீஸ் வேறொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3728

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். இறைவழியில் அம்பெயத் அரபுகளில் நானே முதலாமவன் ஆவேன். எங்களுக்கு மரத்தின் இலைகளைத் தவிர வேறு உணவு எதுவும் இல்லாதிருக்கும் நிலையில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புனிதப் போர் புரிந்து வந்தோம். எனவே, நாங்கள் ஒட்டகங்களும் ஆடுகளும் கெட்டிச் சாணியிடுவதைப் போன்று ஒன்றோடொன்று ஒட்டாமல் மலம் கழித்து வந்தோம். பிறகு (கூஃபா வாசிகளான) ‘பனூ அஸத்’ குலத்தார் (நான் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று என்னுடைய) இஸ்லாம் விஷயத்தில் என்னைக் குறை கூறலானார்கள். (அப்படியானால், இது வரை) நான் செய்து வந்த வழிபாடு வீணாம், நான் இழப்புக்குள்ளாம் விட்டேன். (போலும் என்று வருந்தினேன்.) அதைக் குறித்து அவர்கள் உமர்(ரலி) அவர்களிடம் புகார் செய்திருந்தார்கள்” என்று (உமர் – ரலி – அவர்களிடம்) கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3729

மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார். அலீ(ரலி) (ஃபாத்திமா இருக்கவே,) அபூ ஜஹ்லுடைய மகளை (இரண்டாம் தாரமாக மணம் புரிந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். அதைப் பற்றி ஃபாத்திமா(ரலி) கேள்விப்பட்டார்கள். உடனே அவர்கள் (தம் தந்தையான) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘(தந்தையே!) உங்கள் சமுதாயம் உங்களுடைய மகள்களுக்காக (அவர்கள் மனத்துன்பத்திற்கு ஆளாக்கப்படும் போது) நீங்கள் கோபம் கொள்ளமாட்டீர்கள். என்று கருதுகிறது. (உங்கள் மருமகனும் என் கணவருமான) இந்த அலீ, அபூ ஜஹ்லுடைய மகளை மணக்கவிருக்கிறார்” என்று கூறினார்கள். உடனே, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (உரையாற்ற) எழுந்தார்கள். அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘நிற்க, அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை (என் மூத்த மகள் ஸைனபுக்கு) மணம் முடித்து வைத்தேன். அவர் என்னிடம் (தன் மனைவியைத் திருப்பி அனுப்பி விடுவதாக வாக்களித்துப்) பேசினார்; (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எவரும் அவருக்குத் துன்பம் தருவதை நான் வெறுக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் ஒரே மனிதரிடம் ஒன்று சேர முடியாது. என்று கூறினார்கள். எனவே, அலீ(ரலி) (அபூ ஜஹ்லுடைய மகளைப்) பெண் பேசுவதைவிட்டுவிட்டார்கள்.

மற்றோர் அறிவிப்பில், மிஸ்வர்(ரலி) அதிகப்படியாகக் கூறியிருப்பதாவது: நான் நபி(ஸல்) அவர்களின் உரையைச் செவியுற்றேன். அவர்கள் பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகன் ஒருவரை (அபுல் ஆஸை) நினைவு கூர்ந்து அவர் (அவரின் மாமனாரான) தன்னுடன் நலன் மருமகனாக நடந்து கொண்டதைப் பாராட்டிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது அவர்கள், ‘அவர் என்னிடம் பேசினார். (பேசிய படி) வாய்மையுடன் நடந்து கொண்டார். எனக்கு வாக்குறுதியளித்தார், அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3730

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘(இப்போது) இவரின் தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால்… (இது ஒன்றும் புதிதல்ல). இதற்கு முன் (மூத்தா போரின் போது) இவரின் தந்தையின் (ஸைத் அவர்களின்) தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். (அவரின் மகனான) இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவராவார்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3731

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, என்னிடம் (இருவரின் சாயலை வைத்து) உறவு முறையை கணிப்பவர் ஒருவர் வந்தார். உஸாமா இப்னு ஸைத் அவர்களும், ஸைத் இப்னு ஹாரிஸா அவர்களும் அப்போது ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அந்த மனிதர் (இருவரின் கால்களையும் பார்த்து), ‘இந்தக் கால்கள் (ஒன்றுக் கொன்று உறவுள்ளவை;) ஒன்று மற்றொன்றிலிருந்து தோன்றியவை” என்று கூறினார். (அதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் அதனால் மகிழ்ச்சியடைந்து அவரை வியந்தார்கள்; அதை எனக்குத் தெரிவித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3732

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (திருட்டுக் குற்றத்தின் காரணமாக கைவெட்டும தண்டனைக்கு உள்ளாகவிருந்த) மக்ஸூமீ குலத்துப் பெண்ணொருத்தியின் விஷயம் குறைஷிகளைக் கவலையில் ஆழ்த்தியது. அவர்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உஸாமா அவர்களைத் தவிர வேறெவர் அவர்களிடம் துணிச்சலுடன் (தண்டனையைத் தளர்த்துவது குறித்துப்) பேச முடியும்” என்று (தமக்குள்) பேசிக் கொண்டார்கள்”

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3733

ஆயிஷா(ரலி) அறிவித்தார். பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி திருடிவிட்டாள். மக்கள், ‘அவள் விஷயத்தில் நபி(ஸல்) அவர்களிடம் (தண்டனையைத் தளர்த்தும்படிக் கூறி பரிந்து) பேசுவது யார்?’ என்று (தமக்குள்) விசாரித்துக் கொண்டனர். எவரும் நபி(ஸல்) அவர்களிடம் பேசத் துணியவில்லை. உஸாமா இப்னு ஸைத்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் (அது குறித்துப் பரிந்து) பேசினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘பனூ இஸ்ராயீல் குலத்தார் தம்மிடையேயுள்ள வலியவர் (உயர் குலத்தவர்) எவரேனும் திருடிவிட்டால் அவரை தண்டிக்காமல்விட்டுவிடுவார்கள்; தம்மிடையேயுள்ள பலவீனர் துண்டித்து விடுவார்கள். திருடியவர் (என் மகள்) ஃபாத்திமாவாகவே இருந்தாலும் கூட அவரின் கையை நான் துண்டித்திருப்பேன்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3734

அப்துல்லாஹ் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார். இப்னு உமர்(ரலி) ஒரு நாள் பள்ளிவசாலில் இருந்த பொழுது பள்ளி வாசலின் ஒரு மூலையில் தன் ஆடையை (மண்ணில் புரளும்படி) இழுத்துக் கொண்டே சென்று கொண்டிருந்த ஒரு மனிதரைப் பார்த்தார்கள். உடனே, ‘இவர் யார் என்று பார். இவர் எனக்கு அருகில் இருந்திருந்தால் நன்றாயிருக்குமே (நான் இவருக்கு புத்திமதி சொல்லி இருப்பேனே)” என்று கூறினார்கள். அவர்களிடம் ஒருவர், ‘அபூ அப்திர் ரஹ்மான் (இப்னு உமர்) அவர்களே! இவரை உங்களுக்குத் தெரியாதா? இவர்தான் உஸாமா(ரலி) அவர்களின் மகன் முஹம்மது” என்று கூறினார். இதைக் கேட்ட இப்னு உமர்(ரலி) தம் தலையைத் தாழ்த்திக் கொண்டு தம் கையால் தரையில் (கொத்துவது போல்) தட்டிய பிறகு, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இவரைப் பார்த்தால் இவரை நேசிப்பார்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3735

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (சிறார்களாயிருந்த) என்னையும் ஹஸன்(ரலி) அவர்களையும் கையிலெடுத்து ‘இறைவா! இவர்கள் இருவரையும் நான் நேசிக்கிறேன்; நீயும் நேசிப்பாயாக!” என்று பிரார்த்திப்பார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3736

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட ஹர்மலா(ரஹ்) கூறினார். உம்மு அய்மனின் மகனான அய்மனின் மகன் ஹஜ்ஜாஜ் என்பவர் (பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த போது) தம் ருகூவையும் சுஜூதையும் முழுமையாகச் செய்யாமலிருப்பதைக் கண்டு இப்னு உமர்(ரலி), ‘மீண்டும் தொழுங்கள்” என்று கூறினார்கள.

“உம்மு அய்மனின் மகனான அய்மன், உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களின் தாய் வழிச் சகோதரராய் இருந்தார்; மேலும் அன்சாரிகளில் ஒருவராகவும் இருந்தார்”

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3737

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட ஹர்மலா(ரஹ்) கூறினார். நான் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களுடன் இருந்தபோது ஹஜ்ஜாஜ் இப்னு அய்மன் (பள்ளிவாசலுக்குள்) நுழைந்(து தொழு)தார். அப்போது அவர் தன் ருகூவையும் முழுமையாக நிறைவேற்றவில்லை; தன் சுஜூதையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. எனவே, இப்னு உமர்(ரலி) (ஹஜ்ஜாஜை நோக்கி), ‘திரும்பத் தொழுங்கள்” என்று கூறினார்கள். அவர் திரும்பிச் சென்றபோது என்னிடம் இப்னு உமர்(ரலி), ‘யார் இவர்?’ என்று கேட்டார்கள். நான், ‘உம்மு அய்மனின் மகள் அய்மனுடைய மகன் ஹஜ்ஜாஜ் தான் இவர்” என்று சொன்னேன். அதற்கு இப்னு உமர்(ரலி), ‘இவரை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பார்த்திருந்தால் இவரை நேசித்திருப்பார்கள்” என்று கூறினார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள், (உஸாமா – ரலி – அவர்களின் மீது) கொண்டிருந்த நேசத்தையும் உம்மு அய்மன்(ரலி) பெற்றெடுத்த (மற்ற) பிள்ளைகளின் மீதும் கொண்டிருந்த நேசத்தையும் இப்னு உமர்(ரலி) நினைவு கூர்ந்தார்கள்.

அறிவிப்பாளர்: சுலைமான் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்: உம்மு அய்மன்(ரலி) நபி(ஸல்) அவர்களின் வளர்ப்புத் தாயாக இருந்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3738

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உயிரோடியிருந்த காலத்தில் ஒருவர் கனவொன்றைக் காண்பாராயின் நபி(ஸல்) அவர்களிடம் விவரித்துச் செல்வார். எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் விசாரித்துச் சொல்வதற்காகக் கனவொன்று காண வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் மணமாகாத ஓர் இளைஞனாக இருந்தேன். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளி வாசலில் நான் உறங்குவது வழக்கம். (ஒரு நாள்) நான் கனவில் இவ்வாறு கண்டேன்; வானவர்கள் இருவர் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சுற்றுச் சுவரைப் போன்று அதற்கு சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. மேலும் கிணற்றின் இரண்டு பக்கங்களிலுமுள்ள கல்தூண்களைப் போன்று இரண்டு தூண்கள் அதற்கும் இருந்தன. அப்போது அதில் எனக்குத் தெரிந்த மக்கள் சிலர் இருந்தனர். உடனே நான், ‘நரகத்திலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் கோருகிறேன். நரகத்திலிருந்து பாதுகாக்கும் படி அல்லாஹ்விடம் கோருகிறேன்” என்று பிரார்த்திக்கலானேன். அப்போது (என்னை அழைத்து வந்த) அந்த வானவர்கள் இருவரையும் வேறொரு வானவர் சந்தித்தார். அவர் என்னிடம், ‘இனி ஒருபோதும் நீங்கள் பீதியடையமாட்டீர்கள்” என்று கூறினார். நான் இதை (என் சகோதரியும் நபி – ஸல் அவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் விவரித்துச் சொன்னேன்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3739

ஹஃப்ஸா(ரலி) அதை நபி(ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ் (இப்னு உமர்) ஒரு சிறந்த மனிதர். அவர் இரவின் ஒரு பகுதியில் தொழுதால் (நன்றாயிருக்கும்)” என்று கூறினார்கள்.

(இதை அறிவித்த அப்துல்லாஹ் இப்னு உமர் – ரலி – அவர்களின் மகன்) சாலிம்(ரஹ்), ‘நபி(ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னதிலிருந்து) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) இரவில் சிறிது நேரம் மட்டுமே உறங்குபவராயிருந்தார்கள்” என்று கூறுகிறார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3740-3741

ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அப்துல்லாஹ் (இப்னு உமர்) ஒரு நல்ல மனிதர்” என்று கூறினார்கள்.

இதை தம் சகோதரி ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்து இப்னு உமர்(ரலி) அவர்களே அறிவித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3742

அல்கமா இப்னு கைஸ் அந்நகஈ(ரஹ்) கூறினார். நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். (அங்கு பள்ளி வாசலுக்குச் சென்று) இரண்டு ரக்அத்துக்கள் தொழுதேன். பிறகு, ‘இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரைக் கொடு” என்று பிரார்த்தித்தேன். பிறகு, ஒரு கூட்டத்தாரிடம் சென்று அவர்களிடம் அமர்ந்தேன். அப்போது முதியவர் ஒருவர் வந்து என் பக்கத்தில் அமர்ந்தார். நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். மக்கள், ‘(இவர்தான் நபித்தோழர்) அபுத்தர்தா” என்று பதிலளித்தார்கள். நான், அபுத் தர்தா(ரலி) அவர்களை நோக்கி, ‘எனக்கு ஒரு நல்ல நண்பரை அறிவிக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தேன். எனவே, அவன் உங்களை எனக்குக் கொடுத்திருக்கிறான்” என்று சொன்னேன். அதற்கு அபுத்தர்தா(ரலி), ‘நீங்கள் எந்த ஊர்க்காரர்?’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘நபியவர்களின் செருப்புகளையும் தலையணைகளையும் தண்ணீர்க்குவளையையும் சுமந்து வந்த உம்மு அப்தின் மகன் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)) உங்களிடையே இல்லையா? தன் நபியின் வாயால் எவரை அல்லாஹ் ஷைத்தானிடமிருந்து காப்பாற்றினானோ அவர் (அம்மார் (ரலி) உங்களிடையே இல்லையா? மேலும் நபி(ஸல்) அவர்கள் அறிவித்த, வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் (ஹுதைஃபா (ரலி) உங்களிடையே இல்லையா?’ என்று கேட்டுவிட்டு, பிறகு, ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், ‘வல்லய்லி இதா யஃக்ஷா’ என்று தொடங்கும் (திருக்குர்ஆனின் 92-ம் அத்தியாயம் அல்லைலின்) இறைவசனங்களை எப்படி ஓதுகிறார்” என்று கேட்டார்கள். நான், ‘அவர்களுக்கு, ‘வல்லய்லி இதாயஃக்ஷா வன்னஹாரி இதா தஜல்லா வத்தகரி வல் உன்ஸர்’ (- இப்படித் தான் ஓதுவார்கள்) என்று ஓதிக்காட்டினேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அதை எனக்கு நபி(ஸல்) அவர்கள் தம் வாயால் (இவ்வாறே) ஓதிக்காட்டினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3743

அல்கமா இப்னு கைஸ் அந் நகஈ(ரஹ்) அறிவித்தார். நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். பள்ளிவாசலில் நுழைந்(து இரண்டு ரக்அத்கள் தொழு)ததும் ‘இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரை ஏற்படுத்துவாயாக” என்று பிராத்தித்தேன். பிறகு அபுதர்தா(ரலி) அவர்களிடம் (சென்று) அமர்ந்தேன். அபுத்தர்தா(ரலி) ‘நீங்கள் எந்த ஊர்க்காரா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான் ‘கூஃபா வாசி’ என்றேன். அபுத்தர்தா(ரலி) ‘(நபி – ஸல் – அவர்கள் அறிவித்த) வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் உங்களிடையே இல்லையா?’ என்று ஹுதைஃபா(ரலி) அவர்களைத் கருத்தில் கொண்டு கேட்டார்கள். நான், ‘ஆம் (இருக்கிறார்)” என்று பதிலளித்தேன். அவர்கள், ‘தன் நபியின் வாயால் எவரை ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இல்லையா?’ என்று கேட்டார்… அம்மார்(ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள். நான் ‘ஆம் (இருக்கிறார்)” என்று பதிலளித்தேன். அவர்கள், ‘நபி(ஸல்) அவர்களின் (பல்துலக்கும்) மிஸ்வாக் குச்சியையும், தலையணையையும் சுமந்து சென்றவர்… அல்லது அவர்களின் அந்தரங்க உதவியாளர்.. (இப்னு மஸ்வூத்) உங்களிடம் இல்லையா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘ஆம் (இருக்கிறார்)” என்று பதிலளித்தேன். அபுத்தர்தா(ரலி) ‘வல்லய்லி இதா யஃக்ஷா வந் நஹாரி இதா தஜல்லா’ என்னும் (அத்தியாயம் அல்லைலின்) வசனங்களை எப்படி ஓதினார்கள்?’ என்று கேட்க, ‘வத்தகரில் வல் உன்ஸர்” என்று கேட்க, ‘வத்தகரி வல் உன்ஸா” என்று (‘வ மா கலக்க’ என்னும் சொல் இல்லாமல் தான் ஓதுவார்கள் என) நான் பதிலளித்தேன். அபுத்தர்தா(ரலி), ‘(ஷாம் நாட்டினரான) இவர்கள், நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட ஒரு விஷயத்தை (ஓதும் முறையை)விட்டுக் கொடுத்து விடும் படி என்னi எச்சரிக்கிறார்கள்” என்று கூறினார்கள் என இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3744

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நம்முடைய நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் அவர்கள் தாம் என அனஸ்(ரலி) மாலிக்(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3745

ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நஜ்ரான் வாசிகளிடம், ‘நம்பத்தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுக்கு நிச்சயம் நான் அனுப்புவேன்” என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் (பலர் அந்த ‘அமீன்’ என்னும் சிறப்பு தமக்கு கிட்டாதா என) பேராவல் கொண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ உபைதா(ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3746

அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மிம்பரின் (மேடை) மீது (உரையாற்றியபடி) இருக்க ஹஸன்(ரலி), நபி(ஸல்) அவர்களின் பக்க வாட்டில் அமர்ந்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களையும் மறு முறை ஹஸன்(ரலி) அவர்களையும் நோக்கியபடி, ‘இந்த என்னுடைய (மகளின்) மகன் மக்களின் தலைவராவார். முஸ்லிம்களின் இரண்டு குழுவினரிடையே இவர் வாயிலாக அல்லாஹ் சமாதானத்தை ஏற்படுத்தவிருக்கிறான்” என்று சொல்ல கேட்டேன்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3747

உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் (சிறார்களாயிருந்த) என்னையும் ஹஸன்(ரலி) அவர்களையும் (கையில்) எடுத்து, ‘இறைவா! நான் இவ்விருவரையும் நேசிக்கிறேன். நீயும் இவ்விருவரையும் நேசிப்பாயாக” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3748

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். அலீ(ரலி) அவர்களின் மகன் ஹுஸைன் (ரலி – அவர்கள் கர்பலாவில் கொல்லப்பட்ட பின்) அவர்களின் தலை, உபைதுல்லாஹ் இப்னு ஸியாதிடம் கொண்டு வரப்பட்டு ஒரு தட்டில் வைக்கப்பட்டது. உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் (ஒரு கைக் குச்சியால் அதன் மூக்கிலும் கண்ணிலும்) குத்தத் தொடங்கினான். மேலும் ஹுஸைன்(ரலி) அவர்களின் அழகைக் குறித்து ஏதோ சொன்னான்.

அனஸ்(ரலி) கூறினார்: அல்லாஹ்வின் தூதருடைய குடும்பத்தாரிலேயே ஹுஸைன்(ரலி) தாம் தோற்றத்தில் அல்லாஹ்வின் தூதரவர்களுக்கு அதிக ஒப்பானவர்களாய் இருந்தார்கள். ‘வஸ்மா’ என்னும் ஒரு வகை மூலிகையால் தம் (தாடிக்கும் முடிக்கும்) சாயாமிட்டிருந்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3749

பராஉ(ரலி) அறிவித்தார். அலீ(ரலி) அவர்களின் மகன் ஹஸன்(ரலி), நபி(ஸல்) அவர்களின் தோள் மீது அமர்ந்திருக்க, நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரை நேசிப்பாயாக!” என்று பிரார்த்திக்கக் கண்டேன்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3750

உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். அபூ பக்ர்(ரலி) ஹஸன்(ரலி) அவர்களைச் சுமந்தபடி, ‘என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் (உங்கள் பாட்டனார்) நபி(ஸல்) அவர்களைத் தான் (உருவ அமைப்பில்) ஒத்திருக்கிறீர்கள். (உங்கள் தந்தையான) அலீ அவர்களை ஒத்திருக்கவில்லை” என்று சொல்லக் கண்டேன். அப்போது அலீ(ரலி) (அதைக் கேட்டு) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3751

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். முஹம்மத்(ஸல்) அவர்களின் குடும்பத்தார் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். (அவர்களைப் பாதுகாத்து வாருங்கள்; அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்) என்று அபூ பக்ர்(ரலி) கூறினார்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3752

அனஸ்(ரலி) அறிவித்தார். ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்களை விட நபி(ஸல்) அவர்களை (உருவ அமைப்பில்) ஒத்தவர்களாக வேறெவரும் இருக்கவில்லை.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3753

அப்துர் ரஹ்மான் இப்னு அபீ நுஅம்(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்களிடம் (இராக்வாசி) ஒருவர் இஹ்ராம் அணிந்தவரைக் குறித்து வினவினார். அறிவிப்பாளர் ஷுஅபா(ரஹ்), ‘இஹ்ராம் அணிந்தவர் ஈயைக் கொல்வது (அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்பது) குறித்து கேட்டார் என்று எண்ணுகிறேன்” என்று கூறுகிறார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), ‘இராக்வாசிகள் ஈயைக் (கொல்ல அனுமதியுண்டா இல்லையா என்பது) குறித்து கேட்கிறார்கள். அவர்களோ ஏற்கனவே அல்லாஹ்வின் தூதருடைய மகளின் மகனை (ஹுஸைனைக்) கொன்றுவிட்டார்கள். (ஆனால்,) நபி(ஸல்) அவர்கள், ‘அவர்கள் இருவரும் (ஹஸன் – ரலி – அவர்களும் ஹுசைன் -ரலி – அவர்களும்) உலகின் இரண்டு துளசி மலர்கள் ஆவர்” என்று (அவர்களைக் குறித்து) கூறினார்கள்’ எனக் கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3754

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி), ‘அபூ பக்ர் எங்கள் தலைவராவார். அவர்கள், எங்கள் தலைவர் பிலாலை (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தார்கள்” என்று சொல்வார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3755

கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) கூறினார். பிலால்(ரலி), அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், ‘நீங்கள் உங்களுக்காக (அடிமையான) என்னை விலைக்கு வாங்கியிருந்தால் என்னை (மதீனாவிலேயே) வைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்காக என்னை நீங்கள் வாங்கியிருந்தால் என்னை அல்லாஹ்வுக்காக செயலாற்றவிட்டு விடுங்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3756

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். என்னை நபி(ஸல்) அவர்கள் தம் நெஞ்சோடணைத்து, ‘இறைவா! இவருக்கு ஞானத்தைக் கற்றுத் தருவாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில், ‘இறைவா! இவருக்கு (உன்) வேதத்தைக் கற்றுத் தருவாயாக!” என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

இதே ஹதீஸ் மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘ஹிக்மத்’ என்னும் ஞானம் என்பது, தூதுத்துவம் அல்லாத விஷயங்களில் சரியான கருத்தை அறிந்து கொள்வது என்று பொருள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3757

அனஸ்(ரலி) அறிவித்தார். ஸைத் இப்னு ஹாரிஸா) அவர்களும் ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்) அவர்களும் (அப்துல்லாஹ்) இப்னு ரவாஹா அவர்களும் (மூத்தா போர்க் களத்தில்) உயிர்நீத்துவிட்ட செய்தியை, அது (மதீனாவிற்கு) வந்து சேர்வதற்கு முன்பே (இறைவனால் அறிவிக்கப் பெற்று மக்களுக்கு) நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.

“(முதலில்) இஸ்லாமியச் சேனையின் கொடியை ஸைத் (தம் கையில்) எடுத்தார்; அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, ஜஅஃபர் (தம் கையில்) எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு இப்னு ரவாஹா (தம் கையில் கொடியை) எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன. இறுதியில் அக்கொடியை அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள் (காலித் இப்னு வலீத்) எடுத்தது. அல்லாஹ் (அவரின் கரத்தில்) முஸ்லிம்களுக்கு வெற்றியை அளித்துவிட்டான்” என்று (போர்க்கள நிகழ்ச்சிகளை விவரித்துச்) கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3758

மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), ‘அவர் எத்தகைய மனிதரென்றால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்லி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு முர்ரா(ரஹ்), ‘அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), உபை இப்னு கஅப்(ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா, முஆத்(ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா (இவர்களிருவரில் யாரை முதலில் குறிப்பிட்டார்) என்று எனக்குத் தெரியாது” என்று கூறுகிறார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3759

அப்துல்லாஹ் பின் அமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள் உங்களில் நற் குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர் என்று சொன்னார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3760

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், ‘உங்களில் நற் குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்” என்று கூறினார்கள். மேலும், ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3761

அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார். நான் ஷாம் நாட்டிற்குள் சென்று (பள்ளிவாசலில்) இரண்டு ரக்அத்துகள் தொழுதேன். அப்போது, ‘இறைவா! எனக்கு ஒரு நண்பரை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தேன். அப்போது முதியவர் ஒருவர் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். அவர் அருகே வந்ததும், ‘அல்லாஹ் என் பிரார்த்தனைக்குப் பதிலளித்து விட்டதாக நம்புகிறேன்” என்று சொன்னேன். அந்த முதியவர், ‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்டார். ‘நான் கூஃபாவாசி” என்று பதிலளித்தேன். அவர், ‘நபி(ஸல்) அவர்களின் காலணிகளையும் தலையணையையும், தண்ணீர்க் குவளையையும் (சுமந்து பணிவிடை புரிந்து) கொண்டிருந்தவர் (இப்னு மஸ்வூத்) உங்களிடையே இல்லையா? ஷைத்தானிடமிருந்து காப்பாற்றப்பட்டவர் (அம்மார்) உங்களிடையே இல்லையா? நபி(ஸல்) அவர்கள் அறிவித்த, வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் (ஹுதைஃபா) உங்களிடையே இல்லையா?’ என்று கேட்டார். ‘உம்மு அப்தின் மகன் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்) ‘வல் லய்லி’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் அத்தியாயம் 92ன்) இறை வசனங்களை எப்படி ஓதினார்கள்?’ என்று மேலும் கேட்டார். நான், ‘வல் லய்லி இதா யஃக்ஷா வந் நஹாரி இதா தஜல்லா வத் தகரி வல் உன்ஸா’ என்று (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஓதுவதைப் போன்று) ஓதிக் காட்டினேன். அம்முதியவர், ‘நபி(ஸல்) அவர்கள் தம் வாயால் (இவ்வாறே) எனக்கு அதை ஓதிக் காட்டினார்கள். ஆனால், (ஷாம் வாசிகளான) இவர்கள் (அதை விட்டுவிட்டு புதிய முறையில் ஓதும்படி) என்னைத் திருப்ப முனைந்து கொண்டேயிருந்தனர்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3762

அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார். உருவ அமைப்பிலும், நடைமுறையிலும், நபி(ஸல்) அவர்களை ஏறக்குறைய ஒத்திருக்கும் ஒரு மனிதரை நாங்கள் பின்பற்றி நடப்பதற்காக (எங்களுக்குக் காட்டும்படி) ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் கேட்டோம். அவர்கள், ‘நபி(ஸல்) அவர்களுக்கு உருவ அமைப்பிலும், போக்கிலும், நடத்தையிலும் கிட்டத்தட்ட ஒத்தவராக உம்மு அப்தின் மகனை (இப்னு மஸ்வூதை) விட வேறெவரையும் நான் அறியமாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3763

அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். நானும் என் சகோதரரும் யமன் நாட்டிலிருந்து வந்து சில காலம் (மதீனாவில்) தங்கினோம் . அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களும் அவர்களின் தாயாரும் நபி(ஸல்) அவர்களிடம் (அடிக்கடி) செல்வதைக் கண்டு, அவர் நபி(ஸல்) அவர்களின் வீட்டாரில் ஒருவர் என்றே நாங்கள் கருதினோம்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3764

இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார். முஆவியா(ரலி), தம்மிடம் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் அடிமையொருவர் (குரைப்) இருக்க, இஷா தொழுகைக்குப் பின் ஒரு ரக்அத் வித்ரு தொழுதார்கள். அந்த அடிமை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்றார். (முஆவியா – ரலி – அவர்கள் ஒரு ரக்அத் வித்ரு தொழுத விஷயத்தைக் கூறினார்.) இப்னு அப்பாஸ்(ரலி), ‘அவரை (அப்படியே தொழ)விட்டு விடு. ஏனெனில், அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தார்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3765

இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘நீங்கள் நம்பிக்கையாளர்களின் தலைவர் முஆவியா(ரலி) விஷயமாக ஏதும் கூற விரும்புகிறீர்களா? ஏனெனில், அவர் வித்ரை ஒரேயொரு ரக்அத்தாகத் தான் தொழுகிறார்” என்று கூறப்பட்டது. அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), ‘முஆவியா (மார்க்கச்) சட்ட நிபுணராவார்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3766

ஹும்ரான் இப்னு அபான்(ரஹ்) அறிவித்தார். முஆவியா(ரலி), ‘நபி(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்த நாங்கள், அவர்கள் தொழக் கண்டிராத ஒரு தொழுகையை நீங்கள் தொழுகிறீர்கள். நபி(ஸல்) அவர்கள் அந்த இரண்டு ரக்அத்துகளையும் – அஸர் தொழுகைக்குப் பின் (உங்களில் சிலர் தொழுகின்ற) இரண்டு ரக்அத்துகளையும் தொழ வேண்டாமென்று தடை விதித்துள்ளார்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3767

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எனவே, அவருக்குக் கோபமூட்டியவர் எனக்குக் கோபமூட்டியவராவார் என மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3768

ஆயிஷா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு நாள், ‘ஆயிஷா! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கிறார்” என்று கூறினார்கள். நான், சலாமுக்கு பதில் கூறும் முகமாக ‘வ அலைஹிஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு’ அவரின் மீதும் சலாம் (இறை சாந்தி) பொழியட்டும். மேலும், அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும்” என்று பதில் முகமன் சொல்லிவிட்டு, ‘நான் பார்க்க முடியாதவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறினேன்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3769

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஆண்களில் நிறையப் பேர் முழுமை பெற்றிருக்கிறார்கள். ஆனால், பெண்களில் இம்ரானின் மகள் மர்யமையும், ஃபிர் அவ்னின் மனைவி ஆஸியாவையும் தவிர வேறெவரும் முழுமை பெறவில்லை. (உலகின் மற்ற) பெண்களை விட ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு (மற்ற) எல்லா உணவுகளைக் காட்டிலும் ‘ஸரீத்’ என்னும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும் என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3770

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (உலகின் மற்ற) பெண்களைக் காட்டிலும் ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு (மற்ற) உணவுகளைக் காட்டிலும் ‘ஸரீத்’ என்றும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3771

காசிம் இப்னு முஹம்மத்(ரஹ்) அறிவித்தார். ஆயிஷா(ரலி) நோயுற்றார்கள். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) (நலம் விசாரிக்க) வந்து, ‘இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! வாய்மையில் முந்தியவர்களான அல்லாஹ்வின் தூதரும் அபூ பக்ரும் காத்திருக்கும் இடத்திற்கு (சொர்க்கத்திற்கு) நீங்கள் செல்லவிருக்கிறீர்கள்” என்று (ஆறுதல்) கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3772

அபூ வாயில்(ரஹ்) அறிவித்தார். (கலீஃபா) அலீ(ரலி) (தமக்கு ஆதரவாக ‘ஜமல்’ போரில் கலந்து கொள்ளும்படி) மக்களை அழைப்பதற்கு அம்மார் இப்னு யாசிர்(ரலி) அவர்களையும், (தம் புதல்வர்) ஹஸன்(ரலி) அவர்களையும் ‘கூஃபா’ நகருக்கு அனுப்பி வைத்தபோது (மக்களுக்கு) அம்மார் உரையாற்றினார்கள். அப்போது (தம் உரையில்) ‘நபி(ஸல்) அவர்களுக்கு ஆயிஷா இந்த உலகிலும் மறுமையிலும் மனைவிமார்கள் என்பதை நான் உறுதியாக அறிவேன். எனினும், ‘நீங்கள் (கலீஃபாவின் உத்தரவுக்கு இணங்கி நடப்பதன் மூலம்) அல்லாஹ்வி(ன் கட்டளைத)னைப் பின்பற்றுவதா? அல்லது ஆயிஷாவி(ன் யோசனைத)னைப் பின்பற்றுவதா?’ என (முடிவு செய்ய வேண்டிய நிலைக்கு) உங்களை (ஆளாக்கி) அல்லாஹ் சோதனையில் ஆழ்த்தி விட்டான்” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3773

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். ஆயிஷா(ரலி) (தம் சகோதரி) அஸ்மா(ரலி) அவர்களிடமிருந்து (கழுத்து) மாலையொன்ற இரவல் வாங்கினார்கள். அது (பனூ முஸ்தலிக் போரின் பயணத்தில் எப்படியோ) தொலைந்து போய்விட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம், தோழர்களில் சிலரை அதைத் தேடுவதற்காக அனுப்பினார்கள். அப்போது அவர்களுக்குத் தொழுகை நேரம் வந்துவிட்டது. (தண்ணீர் கிடைக்காததால்) அவர்கள் உளூவின்றித் தொழுதார்கள். நபி(ஸல்) அவர்களிடம், அவர்கள் (திரும்பிச்) சென்றபோது தண்ணீர் கிடைக்காததால் தமக்கேற்பட்ட நெருக்கடியான நிலையை முறையிட்டார்கள். அப்போதுதான் ‘தயம்மும்’ உடைய சட்டத்தைக் கூறும் இறைவசனம் அருளப்பட்டது. எனவே, (இந்தச் சலுகை கிடைக்கக் காரணமாய் அமைந்த ஆயிஷா(ரலி) அவர்களை நோக்கி) உஸைத் இப்னு ஹுளைர்(ரலி), ‘அல்லாஹ் உங்களுக்கு நற்பலன் அளிக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு ஒரு துன்பம் நேரும் போதெல்லாம் அதிலிருந்து விடுபடுகிற வழியொன்றை அல்லாஹ் உங்களுக்குத் தராமலிருந்ததில்லை; மேலும், அதில் முஸ்லிம்களுக்கு அருள் வளம் ஒன்றைத் தராமலும் இருந்ததில்லை” என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3774

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணமடைவதற்கு முன்பு நோய்வாய்ப்பட்டிருந்தபோது தம் மனைவிமார்களிடையே (நிச்சயித்த முறைப்படி ஒரு நாளைக்கு ஒருவரின் விடு என்று) செல்லத் தொடங்கினார்கள். ‘என் (முறைக்குரிய) நாள் வந்தபோது தான் அமைதியடைந்தார்கள்” என்று ஆயிஷா(ரலி) கூறினார்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3775

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபியவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுத்து வந்தனர். (அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து) ஆயிஷா(ரலி) கூறினார்: (நபியவர்களின் துணைவியரான) என் தோழிகள் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் ஒன்று கூடி, ‘உம்மு ஸலமாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபிகளார் ஆயிஷாவிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆயிஷா நபி(ஸல்) அவர்களுக்கு நலம் நாடுவதைப் போன்றே நாமும் அவர்களுக்கு நலம் நாடுகிறோம். எனவே, தமக்கு (தரவிரும்பும்) அன்பளிப்புகளை தாம் இருக்குமிடத்தில்… அல்லது செல்லுமிடத்தில்… (அது எவருடைய வீடாக இருந்தாலும் அங்கு) அனுப்பி வைத்து விடவேண்டும் என்று மக்களுக்குக் கட்டளையிடும்படி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டனர்.

(உம்மு ஸலமா(ரலி) கூறினார்:) நான் நபி(ஸல்) அவர்களிடம் இதைச் சொல்ல, நபி(ஸல்) அவர்கள் என்னைக் கண்டு கொள்ளவில்லை. மீண்டும் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் திரும்பி வந்தபோது நான் அவர்களிடம் அதைச் சொன்னேன். அப்போதும் அவர்கள் என்னைக் கண்டு கொள்ளவில்லை. மூன்றாம் முறை வந்த போதும் நான் அவாக்ளிடம் இதே கோரிக்கையைச் சொன்னேன். அப்போது அவர்கள், ‘உம்மு ஸலமாவே! ஆயிஷாவின் விஷயத்தில் எனக்கு மனவேதனை தராதே. ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் அவரல்லாத வேறெந்தப் பெண்ணின் போர்வைக்குள் நான் இருக்கும் போதும் எனக்கு வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டதில்லை” என்று பதிலளித்தார்கள்.