ஒரு மனிதர் இரவுத் தொழுகையைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை இரண்டு, இரண்டாகும். சுப்ஹை பயந்தால் (ஒரு ரக்கத்து) வித்ரை தொழவும். புகாரி, முஸ்லிம்.
இந்த ஹதீஸின் மூலம் இரவுத் தொழுகை குறிப்பிட்ட எண்ணிக்கை இல்லாமல் எவ்வளவும் தொழலாம். என்று சில அறிஞர்களை மேற் கோள் காட்டி பேசியும், எழுதியும், வருவதை காணலாம்.
இது சரிதானா? அல்லது எப்படி அணுக வேண்டும்? என்பதை ஹதீஸ்கள் மூலம் விளங்கிக் கொள்வோம்.
இரவுத் தொழுகை சம்பந்தமாக மேற்ச் சுட்டிக் காட்டிய ஹதீஸ மட்டும் வந்திருந்தால் இரவுத் தொழுகைக்கு எண்ணிக்கை இல்லை, எவ்வளவும் தொழலாம் என்ற முடிவுக்கு வரலாம். ஆனால் எண்ணிக்கையோடு பல ஹதீஸ்கள் வந்திருப்பதால் அதையும் பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வருவோம்.
ரமலானில் நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தன என்று கேட்கப் பட்ட போது அதற்கு ஆயிஷா(ரலி) அவரகள் ரமலானிலும், ரமலான் அல்லாத காலங்களிலும், பதினொன்ரைத் தவிர அதிகப் படுத்தியது கிடையாது. நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள், அதன் நீளத்தையும், அழகையும் கேட்க வேண்டாம்.பிறகு நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள், அதன் நீளத்தையும், அழகையும், கேட்க வேண்டாம். பிறகு மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள். (புகாரி 1147, முஸ்லிம் 738)
நபி (ஸல்) அவர்கள் இரவிலே பதினொன்று ரக்அத்துகள் தொழுவார்கள். அதில் ஒன்றை வித்ராக தொழுவார்கள். மற்றொரு அறிவிப்பில் ஒவ்வொரு இரண்டு ரக்அத்துகளுக்கும் இடையில் ஸலாம் சொல்வார்கள். ஒரு ரக்அத்தை வித்ராக தொழுவார்கள். (முஸ்லிம்: 736) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்துகள் தொழுதார்கள்.முதலில் இரண்டு ரக்அத்துகள், பிறகு இரண்டு ரக்அத்துகள், பிறகு இரண்டு ரக்அத்துகள், பிறகு இரண்டு ரக்அத்துகள், பிறகு இரண்டு ரக்அத்துகள், பிறகு இரண்டு ரக்அத்துகள், பிறகு ஒரு ரக்அத் வித்ரு தொழுதார்கள். பிறகு ஒருங்கிணைத்துப் படுத்துக் கொண்டார்கள். பிறகு சுப்ஹீ தொழுகைக்கு பாங்கு சொன்னவுடன், சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். (புகாரி 992, முஸ்லிம் 763)
அதே போல “ஸைத் இப்னு ஹாலித் ஜஹ்னி (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் நபி (ஸல்) இரண்டு, இரண்டு, ரக்அத்துகளாக பண்ணிரெண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். பிறகு ஒரு ரக்அத்து வித்ரு தொழுவார்கள். அது தான் அந்த பதிமூன்று ரக்அத்துகள்.” (முஸ்லிம் 765)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இரவிலே பதிமூன்று ரக்அத்துகள் தொழுவார்கள். அதில் ஐந்து ரக்அத்துகளை வித்ராக தொழுவார்கள். அதனுடைய கடைசியிலேயே தவிர உட்காரமாட்டார்கள். (முஸ்லிம் 737)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் ” நபி (ஸல்) அவர்கள் பதினொன்று ரக்அத்துகள் தொழுவார்கள். எட்டாவது ரக்அத்திலே தவிர உட்காரமாட்டார்கள். எட்டாவது ரக்அத்தில் உட்கார்ந்து அத்தஹியாத்து ஓதியப் பின் ஸலாம் கொடுக்க மாட்டார்கள்,எழுந்து தொடர்ந்து ஒன்பதாவது ரக்அத்தை தொழுவார்கள். அதில் உட்கார்ந்து அத்தஹியாத்து ஓதி ஸலாம் கொடுப்பார்கள். (முஸ்லிம் 746) மற்றொரு அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் (ஒரே ஸலாமில்) இரவில் ஏழு ரக்அத்துகள் தொழுவார்கள்.
அதேப் போல “உமர் (ரலி) அவர்களின் காலத்தில் உபை இப்னு கஃப் (ரலி) மற்றும், தமீமுத் தாரி அன்சாரி (ரலி) அவர்களை மக்களுக்கு பதினொன்று ரக்அத்துகள் தொழுவிக்குமாறு உமர் (ரலி) அவர்கள் ஏவினார்கள். (ஆதாரம் முஅத்தா பாடம் : ரமலானில் தொழுகை) மேற்ச் சுட்டிக் காட்டிய ஹதீஸ்களில் முதலாவது கவனிக்க வேண்டியது இரவுத் தொழுகையும், அதன் எண்ணிக்கைகளும். நபி (ஸல்) அவர்கள் பதினொன்று ரக்அத்துகள் தான் தொழுதுள்ளார்கள் என்பது தெளிவான சான்றாகும். இரண்டாவது.” உங்களில் ஒருவர் இரவிலே எழுந்து தொழுதால் சுருக்கமாக (இலேசாக) இரண்டு ரக்அத்துகள் தொழுது கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 767) எனவே இந்த ஹதீஸின் மூலம் இரவுத் தொழுகையை ஆரம்பிக்கும் முன் இரண்டு ரக்ஆத்துகள் சுருக்கமாக தொழுது கொள்ளலாம். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் இரவிலே பதிமூன்று ரக்அத்துகள் தொழுதுள்ளார்கள் என்பதைக் காணலாம்.
இங்கு நமக்கு பிரச்சனை என்னவென்றால் இரவுத் தொழுகை இரண்டு, இரண்டு என்பதின் மூலம் நாம் நினைத்த அளவு எண்ணிக்கை குறிப்பிடாமல் தொழலாமா என்றால் கூடாது. ஏன் என்றால் இரவுத் தொழுகை இரண்டு, இரண்டு என்ற ஹதீஸை நடைமுறைப் படத்தியவர்கள் நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் தான். நபி (ஸல்) அவர்கள் அமல் விடயமாக ஒரு விடயத்தை ஏவுகிறார்கள் என்றால் முதலில் அவர்கள் தான் நடைமுறைப் படுத்துவார்கள். அதனைத் தொடர்ந்து ஸஹாபாக்களும் நடைமுறைப் படுத்துவார்கள். ஆகவே இரவுத் தொழுகை இரண்டு, இரண்டு என்பதை பதினொன்று ரக்அத்துகள் தொழுது, நமக்கு வழிக் காட்டியுள்ளார்கள்.
அதனால் தான் உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்திலும் கூட பதினொன்று ரக்அத்துகளை தொழுவிக்குமாறு ஏவியுள்ளார்கள். அடுத்தது மார்க்கத்தில் ஒரு சட்டம் விசயமாக பேசும் போது அந்த சட்டம் சம்பந்தமான எல்லா ஹதீஸ்களையும் முன் வைத்து தான் முடிவெடுக்க வேண்டும். ஒரு ஹதீஸை மட்டும் வைத்து முடிவெடுப் போம் என்றால் அவர், அவர் ஒவ்வொரு ஹதீஸை வைத்து முடிவெடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
உதாரணத்திற்கு இரவுத் தொழுகை இரண்டு, இரண்டு என்பதிலிருந்து எவ்வளவும் தொழலாம் என்றால், நபி (ஸல்) அவர்கள் ஒன்பது ரக்அத்கள் இரவில் தொழுதார்கள் என்ற ஹதீஸை முன் வைத்து, இரவுத் தொழுகை ஒன்பது தான் என்று சொல்ல வேண்டியது வரும். நபி (ஸல்) அவர்கள் இரவிலே ஏழு ரக்அத்துகள் தொழுதார்கள், எனவே இரவுத் தொழுகை ஏழு தான் என்று சொல்ல வேண்டி வரும். எனவே இரவுத் தொழுகை சம்பந்தமான எல்லா ஹதீஸ்களையும் ஒன்றிணைத்து பின் வரும் முடிவுக்கு வரலாம். நபி (ஸல்) அவர்கள் இரண்டு, இரண்டு ரக்அத்துகளாக பதினொன்று ரக்அத்துகள் தொழுதுள்ளார்கள். சில சந்தர்ப்பங்களில் அந்த பதினொன்று ரக்அத்தை தொழும்போது ஒரே ஸலாமில் ஒன்பது ரக்அத்துகளையும், மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒரே ஸலாமில் ஏழு ரக்அத்துகளையும், தொழுதுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம். எனவே நபியவர்கள் காட்டித் தராத ஒன்றை மார்க்கமாக நடைமுறை படுத்த முடியாது. இந்த, இந்த, அறிஞர்கள் சொல்லியுள்ளார்களே என்பது இஸ்லாத்தின் அளவு கோல் கிடையாது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
very nice