Featured Posts

தலைக்கு மஸஹு செய்வது எப்படி?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை

தொழுகைக்காக வுளு செய்யும் போது எப்படி வுளு செய்ய வேண்டும், ஒவ்வொரு உறுப்புகளையும் எது வரை கழுவ வேண்டும், ஒவ்வொரு உறுப்புகளையும் எத்தனை தடவை கழுவ வேண்டும், என்பதை இக் கட்டுரை மூலம் தெளிவு படுத்த உள்ளேன்.

நபி (ஸல்) அவர்கள் வுளு செய்யும் போது தன் தலைக்கு எவ்வாறு, எத்தனை தடவைகள், என்பது ஹதீஸ்களில் மிகத் தெளிவாக பதிவு செய்யப் பட்டுள்ளன.

நீங்கள் வுளு செய்யும் போது தன் தலைக்கு எப்படி மஸஹு செய்கிறீர்கள் என்பதை பின் வரும் ஹதீஸ்களை ஒப்பிட்டுப் பார்த்து ஹதீஸைப் பின் பற்றி நடப்பதா? இல்லையா? என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.

உலமாக்களைப் பொருத்தவரை ஹதீஸ் கிதாபுகளைப் படித்து விட்டுதான் வந்துள்ளனர். எனவே அவர்களுக்கு நபியவர்கள் எப்படி தலைக்கு மஸஹு செய்தார்கள் என்பது மிகத் தெளிவாக தெரியும்?.

இன்று உலமாக்கள் மக்களுக்கு மார்க்கத்தை சொல்லி கொடுக்கிறார்களோ இல்லையோ, பொது மக்கள் மார்கத்தை தேடி படித்து தெளிவு பெற ஆரம்பித்து விட்டனர். அல்ஹம்து லில்லாஹ்!

வுளுவைப் பற்றிய குர்ஆன் வசனத்தை கவனியுங்கள்.
“ ஈமான் கொண்ட மக்களே! நீங்கள் தொழுகைக்கு தயாராகும் போது, உங்கள் முகங்களையும், உங்கள் கைகளை மூட்டுகள் வரையும், உங்கள் கால்களை கரண்டை வரையும், கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் தலையை ஈரக் கையால் தடவிக் கொள்ளுங்கள். ( 05 : 06 )

இந்த வசனத்தில் தொழுகைக்கு தயாராகும் போது வுளு செய்ய வேண்டும் என்ற முக்கியத்துவத்தை காணலாம். அந்த வுளுவை பூரணமாக எப்படி செய்ய வேண்டும் என்பதை ஹதீஸ்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

ஹதீஸ்களுக்குள் செல்வதற்கு முன் மத்ஹப் என்ற அடிப்படையில் பார்த்தால், ஹனபி மத்ஹபினர் வுளு செய்யும் போது தலைக்கு நாலில் ஒரு பகுதிக்கு மஸஹு செய்வார்கள். மேலும் ஷாபி மத்ஹபினர் தலைக்கு முன் பகுதிக்கு மட்டும் செய்தால் போதும் என்ற நிலையில் உள்ளார்கள். ஆனால் கண்ணியத்திற்குரிய இமாம்கள் மிகத் தெளிவாக பின் வருமாறு கூறிவிட்டார்கள்.

ஹதீஸீக்கு மாற்றமாக நாங்கள் சொன்ன தீர்ப்புகள் இருந்தால், எங்களது தீர்ப்புகளை விட்டு விடுங்கள் ஹதீஸை எடுத்து நடங்கள். ஹதீஸ் சரியாக இருந்தால் அது தான் எங்களது மத்ஹபாகும். என்று எல்லா இமாம்களும் கூறிவிட்டனர்.

இமாம்கள் அவர்களது நிலைப்பாட்டை கூறிவிட்டனர். இப்போது உங்களுடைய நிலைப் பாட்டை சிந்தியுங்கள்?

அதே நேரம் மேலே சுட்டிக் காட்டிய (05 : 06) ம் வசனத்தில் வரும் பி ருவூசிக்கும் என்பதில் உள்ள பா சிலது (பஃளு) என்ற கருத்தைக் கொடுக்கும் என்று கூறி தலைக்கு முன்னால் மட்டும் மஸஹு செய்தால் போதும் என்று கூறுகிறார்கள். 

அந்த வசனத்திற்கு நபியவர்கள் எப்படி உயிரோட்டம் கொடுத்தார்கள் என்பதை அவதானித்தால் சரியான விளக்கம் கிடைத்து விடும்.

மஸஹு சம்பந்தமான பின் வரும் ஹதீஸ்களை கவனியுங்கள். 

“உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்புளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார். தம் இரண்டு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார். பின்னர் “யாரேனும் என்னுடைய இந்த உளூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸ்மான்(ரலி) கூறினார்” ஹும்ரான் அறிவித்தார்.( புகாரி 159)

“அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) பாத்திரத்திலிருந்து தண்ணீரைத் தம் இரண்டு முன் கைகளிலும் ஊற்றிக் கழுவினார். பின்பு ஒரே கையில் தண்ணீரை எடுத்து வாய் கொப்புளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார். இவ்வாறு மூன்று முறை செய்தார். பின்னர் தம் இரண்டு கைகளையும் மூட்டு வரை இரண்டு இரண்டு முறை கழுவினார். மேலும் தம் தலையைத் தடவினார். (இரண்டு கையால்) மேலும் தம் தலையைத் தடவினார். (இரண்டு கையால்) தலையின் முன் புறமும் பின்புறமும தடவினார். மேலும் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவினார். பின்னர், இதுதான் நபி(ஸல்) அவர்களின் உளூ என்று கூறினார்” யஹ்யா அல் மாஸினி அறிவித்தார். 
(புகாரி 191)

“அம்ர் இப்னு அபீ ஹஸன், அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களின் உளூவைப் பற்றிக் கேட்டபோது அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று, உளூச் செய்து காட்டினார். பாத்திரத்திலிருந்து தண்ணீரைத் தம் கையில் ஊற்றி முன் இரண்டு கைகளையும் மூன்று முறை வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார். பின்னர் தம் கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார். பின்னர் தம் இரண்டு கைகளையும் மூட்டு வரை இரண்டு முறை கழுவினார். பின்னர் தம் கையை (பாத்திரத்தில்) நுழைதது தம் தலையைத் தடவினார். இரண்டு கையையும் தலையில் வைத்து முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்து பின்னர் பின் பக்கமிருந்து முன் பக்கம் கொண்டு வந்தார். இவ்வாறு ஒரு முறை செய்தார். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவினார்” யஹ்யா அல் மாஸினி அறிவித்தார். 
(புகாரி 186)

இந்த ஹதீஸ்களில் வுளு செய்யும் போது ஒவ்வொரு உறுப்புகளையும் மும்மூன்று தடவைகள் கழுவினார்கள். ஆனால் தலைக்கு மட்டும் ஒரு தடவை மஸஹு செய்தார்கள் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

தலைக்கு நபியவர்கள் இப்படி தான் மஸஹு செய்தார்கள் என்று தெரிந்த பின்னரும் நபியவர்களுக்கு மாற்றம் செய்ய விரும்பினால் மறுமையில் நீங்களும் அல்லாஹ்வும் பார்த்துக் கொள்ளுங்கள். எத்தி வைப்பது மட்டும் தான் நமது கடமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *