Featured Posts

முஹாசபா எனப்படும் சுயவிசாரணை

மனிதன் தவறு செய்யமாட்டான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மறதியும் தவறும் அவனோடு ஒட்டிக்கொண்ட அட்டைகள் போல் எனலாம். இதை அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் பட்டவர்த்தனமாக பிரஸ்தாபிக்கின்றன. இதற்கு முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களின் வரலாற்றுத் தவறு ஒரு வலுவான உதாரணமாகும். எனினும் தான் செய்த தவறுகளை நினைத்து மனம் திருந்துபவனே மனிதப் புனிதன் என்று ஒரு நபிமொழி கூறுகிறது. “ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்கள். எனினும் அவர்களுல் சிறந்தவர்கள் தம் தவறை உணர்ந்து திருந்துபவர்களே.” (புஹாரி)

இந்தவகையில் ஒவ்வொரு முஸ்லிம் ஆணும் பெண்ணும் தவறுகளிலிருந்து மீள்வதற்கும் அவற்றிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்கும் பின்வரும் கேள்விகளை தன்னைத் தானே கேட்டுக் கொண்டு அதற்கு விடை காண முயல்வது ஒவ்வொருவரது வாழ்க்கையையும் வெற்றிகரமாக அமைத்துக் கொள்ள ஏதுவாக அமையும். இவ்வாறு தன்னைத்தானே விசாரிப்பது இஸ்லாமிய பரிபாஷையில் சுயவிசாரனை எனப்படும்.

உமர் (ரழி)அவர்கள் “நீங்கள் விசாரிக்கப்பட முன்னர் உங்களை நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள், நீங்கள் கணிப்பிட்டுப் பார்க்கப்பட முன் உங்களை நீங்களே கணிப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.” உமர் (ரழி) அவர்கள் தன்னைத்தானே விசாரித்துக் கொள்வதுடன் தனக்குத்தானே தண்டனையையும் விதித்துக் கொண்டுள்ளார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்படும் புனிதமிகு ரமழான் மாதத்தை எதிர் நோக்கியுள்ள எமக்கு இது ஒரு சிறந்த பயிற்சியாக கூட அமையலாம்.

1. பள்ளிவாயலில் இந்தக் கிழமை ஐவேளைத் தொழுகைகளையும் உரிய நேரத்திற்கு ஜமாஅத்தாக தொழுது வந்தாயா? குறிப்பாக முனாபிக்குகளுக்கு மிக சுமையான அஸர் சுபஹ் ஆகிய தொழுகைகளை பேணி தொழுது வந்தாயா?
2. கடமையான தொழுகைகளுக்கு பின் ஓத வேண்டிய அவ்ராதுகளையும் திக்ருகளையும் ஓதி வந்தாயா? அதன் முன் பின் சுன்னத்தான தொழுகைகளை தொழுதாயா?
3. இந்தக் கிழமையில் அல்-குர்ஆனை ஓதி வந்தாயா? அதன் கருத்துக்களை கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்தாயா? அவற்றை விளங்குவதற்கும் அதன் வழி நடப்பதற்கும் முயற்சி செய்தாயா?
4. நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளை வாசித்தாயா? அதன் போதனைகளை விளங்கினாயா? அவற்றை வாழ்வில் நடைமுறைப் படுத்தினாயா?
5. அதிக சிரிப்பையும் கேளிக்கைகளையும் தவிர்க்க நினைத்தாயா? உலக வாழ்வின் உண்மையான தத்துவத்தைப் புரிந்து மரணம் மறுமை வாழ்வு பற்றி சிந்தித்தாயா? அதன் பயங்கரம் அகோரம் என்பவற்றை நினைத்து கண்ணீர் விட்டு தனிமையில் அழுதாயா?
6. பொறாமை பெருமை கர்வம் முகஸ்துதி, குரோதம் போன்ற தீய உள நோய்களிலிருந்தும், பொய்யுரைத்தல், கோள், வீண்வாதம், கேளிக்கைகள் போன்ற தீய உணர்வுகளிலிருந்தும் உன்னை, உனது உள்ளத்தை பாதுகாத்துக் கொண்டாயா?
7. துஆக்களுக்கு அல்லாஹ் பதிலளிக்கின்ற நேரங்களைப் பார்த்து பிரார்த்தனை செய்தாயா? அல்லாஹ்வின் மார்க்கத்தில் உனது உள்ளம் நிலைத்திருக்க அவனை வேண்டினாயா?
8. உன் தாய், தந்தையருக்கு நன்றியுடையவனாக இருக்க வேண்டுமென்ற வகையில் அவர்களுக்காகப் பிரார்த்தித்தாயா? நண்பரகள், உறவினர்களுக்காகவும் பிரார்த்தனை செய்தாயா?
9. உனது நண்பர்களுடன் எவ்வாறு நடந்து கொண்டாய்?. தீய நண்பர்களை விட்டும் ஒதுங்க நினைத்தாயா?
10. உன்னை விட அறிவில், அழகில் உடலமைப்பில் உயர்ந்தவர்களை, தாழ்ந்தவர்களைக் கண்ட போது அல்லாஹ் உனக்கருளிய அருளையிட்டு அவனுக்கு நீ நன்றி செலுத்தினாயா?
11. அல்லாஹ் உனக்கு அருளிய ஓய்வு நேரத்தையும் ஆரோக்கியத்தையும் அவனுக்கு பொருத்தமான முறையில் பயன்படுத்தினாயா?
12. உனது பொழுது போக்கு எவ்வாறு இருந்தது? அல்லாஹ் திருப்திப்படும் விதத்தில் அவை அமைந்திருந்ததா?
13. நன்மைகள் உன்னை அடைந்த போது அல்லாவுக்கு நன்றி செலுத்தினாயா? துன்பங்கள் அணுகிய போது பொறுமையுடன் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று கூறினாயா?
14. உன்னை விட வயது முதிந்தவர்களைக் கண்ணியப்படுத்தி இளம் வயதினர்களுடன் அன்பாக நடந்து கொண்டாயா?
15. காலை, மாலை திக்ருகளை ஓதி வந்தாயா?
16. அல்லாஹ்வுடைய பாதையில் உனது பணத்தில் இருந்து செலவளித்தாயா? எவ்வளவு செலவளித்தாய்?
17. நீ உண்ணும் உணவு, உடுக்கும் உடை, அருந்தும் பானங்கள் போன்ற இன்னோரன்ன அம்சங்களில் அல்லாஹ்வை பயந்து ஹலால் ஹராம் பேணினாயா?
18. நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதில் எவ்வளவு தூரம் பங்கு கொண்டாய்? எவ்வளவு தூரம் தூய்மையாக நடந்து கொண்டாய்?
19. இறைவனைப் புகழும்போது அவனது படைப்புக்களைப் பார்க்கும்போதும் உனது மனநிலை எவ்வாறிருந்தது? அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினாயா?
20. நீ செய்த தீய செயல்களை நினைத்து வருந்தி மீண்டும் அதனை செய்யமாட்டேன் என்று உறுதி பூண்டு அல்லாஹ்விடம் தௌபாச் செய்தாயா? பாவமன்னிப்பு (இஸ்திஃபார்) செய்தாயா?

இது போன்ற கேள்விகளைத் தன்னிடம் தானே கேட்டு விசாரித்துக் கொள்வதுடன் தன்னில் காணப்படும் குறைகளை நிவர்த்தித்துக் கொள்ள முடியும். நமது வாழ்வில் தொடர்ந்து கடைப்பிடிப்போமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *