Featured Posts

கவிஞர் இக்பால் அலி அவர்களிடமிருந்து ஒரு மடல்

இஸ்லாமியச் சூழலில் பல்வகையான விவாதங்களும், உரையாடல்களும் அவசியமாகும். இந்த விவாதத்தில் ஈடுபடுபவர்கள் நேர்த்தியான குணப் பண்புகளோடு குறித்த விடயம் தொடர்பான வாதங்களை முன் வைத்தலே சிறந்ததும், ஆரோக்கியமானதுமாகும். தரமான விடயதானங்களை உள்ளடக்கிய செறிவான தகவல்களுடன் சிந்திக்கத் துணை செய்யக் கூடிய ஆழமான கூறுகளை நிதானத்துடன் ஒப்புவிப்பதன் மூலமாகத்தான் சிறந்த ஆய்வாளனாக முடியும். ஆனால், பீஜே என்பவர் சமீபத்தில் இஸ்மாயில் ஸலபி விடயம் தொடர்பாக அவர் வெளிக் கொணர்ந்த கருத்துக்களை நோக்குகின்ற பொழுது அவரைப் பற்றி மறு பரீசீலனைக்குட்படுத்த வேண்டியுள்ளது.

அவர் என்னுடைய ‘புள்ளிகளில் சில புள்ளிகள்’ எனும் கவிதை நூல் பற்றி எழுதிய குறிப்புக்கள் அனைத்தும் முற்றிலும் பொய் மூட்டை கலந்த தகவல்களாகும். இந்நூல் நான் பணி புரியும் நிறுவனத்தினர் வெளியிட்டதாகவும், இஸ்மாயில் (ஸலபி) இந்நூலை மேற்பார்வை செய்துள்ளதாகவும், நானொரு கம்யூனிஸ வாதி எனவும் பாரியதொரு அபாண்டத்தைச் சுமத்தினார். இவை யாவும் இஸ்மாயிலை மட்டந்தட்ட வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியும், நான் பணி புரியும் நிறுவனத்தின் மீது கொண்டுள்ள கோப-தாபத்தினால் ஏற்பட்ட கருத்துச் சோடிப்பே தவிர உண்மையல்ல.

இந்நிறுவனத்தில் நான் நீண்ட காலமாய்ப் பணி புரிகின்றேன். இந்நிறுவனத்திலிருந்து சம்பளத்தைத் தவிர வேறு எந்த விதமான பயனை இது வரை பெற்றதில்லை. இவ்வாறானதொரு நிலையில் என் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கோ, புத்தகத்தை வெளியிடுவதற்கோ எந்த விதமான உதவியும் எனக்கு வழங்கப்படவில்லை என்பது உறுதி.

பிரபலமான எழுத்தாளர் டொக்டர். தி. ஞானசேகரனின் ‘ஞானம்’ பதிப்பகத்தின் ஏழாவது நூலாக இது வெளிக் கொணரப்பட்டுள்ளது. இந்நூலுக்குரித்தான ஐ.எஸ்.பி.என் இலக்கம் 955-8354-03-1 இதுவாகும். நான் பணி புரியும் நிறுவனத்தினரின் வெளியீடு எனப் பெயர் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானதாகும். அக்கவிதைகள் யாவும் எந்தெந்தக் காலப் பகுதிகளில் வெளியாகியுள்ளன என்றும், எந்தெந்த சஞ்சிகைகளில் மற்றும் தேசியப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன என்பதையும் தெட்டத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அந்நூலில் தகவல்கள் உள்ளன. இலங்கையின் தேசிய பத்திரிகைகளான ‘தினகரன்’, ‘வீரகேசரி’ என்பவற்றிலேயே என்னுடைய கூடுதலான கவிதை, ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அதே வேளை சர்வதேச ரீதியிலாகப் புகழ் பெற்ற ‘ஞானம்’ கலை இலக்கிய சஞ்சிகை மற்றும் இன்னோரன்ன கலை இலக்கிய சஞ்சிகைகளிலும் பிரசுரமான கவிதைகளே அந்நூலில் உள்ளன. கவிதைக்குப் பொய் அழகு சேர்ப்பது போல அவரும் கேள்விப்படாத ஒன்றை அல்லது இல்லாத ஒன்றை அதில் எழுதியுள்ளார்.

அடுத்து, இஸ்மாயில் ஸலபி என் நூலுக்கு மேற்பார்வை செய்ததாக சுட்டிக் காட்டியுள்ளார். இஸ்மாயில் ஸலபியின் துறை வேறு; என்னுடைய துறை வேறு. இலக்கியத்தில் ஊடுபாயும் உள்ளார்ந்த விடயங்களை இன்னுமொருவர் என் நூலை மேற்பார்வை செய்ய வேண்டிய தேவையில்லை. இது ஒரு ஆய்வு நூலல்ல. ஆராய்ச்சி நூலுக்குத்தான் மேற்பார்வையாளர், செயலமர்வு, கருத்துப் பரிமாறல் என்பவை தேவை. இஸ்மாயில் ஸலபியின் விடயம் தொடர்பான எண்ணக் கருவிலிருந்து கருத்துப் பரிமாறலை அவர் தொடாமல் சம்பந்தமில்லாத விடயங்களுக்கு அப்பால் விலகிப் போய்ச் சென்று ஏதோ ஏதோ எல்லாம் எழுதுவது சிறந்த ஆய்வாளனுக்கு உவப்பானதல்ல.

அவர் இது வரை கடந்த கால இஸ்லாமியப் பிரச்சாரப் பயணத்தில் முன்வைத்த ஆய்வு ரீதியான ஒப்புவிப்புக்கள் அவரிடம் நேர்மைத் தன்மையைக் கொண்டிருக்கின்றதா? என்கின்ற சந்தேகம் தற்பொழுது எழுகின்றது. ஏனென்றால், நான் பணி புரியும் நிறுவனம் தொடர்பாகப் பல குற்றச் சாட்டுக்களை விலாசித் தள்ளியிருக்கின்றார். இது கூட நம்பகத் தன்மை அற்றவையே! இந்நிறுவனத்தில் 14 வருடங்களுக்கு மேலாகச் சேவை புரிகின்றேன். அவரின் கூற்று தூர நின்று பொய்யான அதிக கற்பனையோடு மிதப்பதாகப் புலப்படுகின்றது.

அடுத்து, நானொரு கம்யூனிஸ்டாக சித்தரிக்கப்பட்டிருந்தேன். உண்மையிலே நான் ஒரு கம்யூனிஸ்ட்டல்ல. உள்ளத்தின் வார்ப்புத்தான் கவிதை. இலட்சியார்த்த எதிர்பார்ப்புடனான நோக்கில் புனையப்பட்ட கவிதையல்ல அது. பொலிவு மிக்க சொற் பதத்தின் கூட்டமான கவிதை நயத்துக்குரிய பண்பாட்டுத் தளத்துக்குரிய குறியீடாக அது உள்ளது. கவிதைக்கு உள்ளுறை, இருண்மை, உருவகம், இன்ன பிற வகையான இலக்கிய அம்சங்கள் உள்ளன. இவற்றின் நுட்பங்களை எல்லாம் விளங்காக் கூட்டம் ஒற்றைப் படப் புரிதலை வைத்துக் கொண்டு சரியான தளத்தில் சரியான கோணங்களை வைத்துப் பார்க்கின்ற அறிதிறன் அற்ற மந்தைகளால் சூட்டப்பட்டத்தை அவர் கோடிட்டுக் காட்டியிருந்தார்.

உண்மையிலேயே 1988 ஆம் ஆண்டு ‘தினகரன்| பத்திரிகையில் பிரசுரமான கவிதைதான் அது. அப்புத்தகத்தில் 1998 ஆம் ஆண்டு என்று அச்சுப் பிழையாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஒரு எழுத்தாளனின் முற்பட்ட காலம், நடுத்தரக் காலம், பிற்பட்ட காலம் என்று பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். நான் வாழ்ந்த சுற்றுச் சூழல், நெருங்கிப் பழகின நண்பர்களின் மூலமாக ‘கார்ல் மாக்ஸ்’ என்பவரின் சொற் பதம் கவிதையில் பொலிவு பெற்றுள்ளது. கொள்கைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு செயற்பட்டதொன்றல்ல. எனினும், இது பற்றி என் சுற்று வட்டத்தில் உலமாக்கள் அடிக்கடி எடுத்துக் கூறியதன் பயனாக என் மனதுக்கு அச்சம் ஏற்பட்டது. மீளவும் அல்லாஹ்விடம் பிழை பொறுத்து, பிரார்த்தனை செய்து கொண்டேன்.

இஸ்லாம் மார்க்க விடயம் தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் இருப்பது கட்டாயம். அதில் அபத்தப் போக்கும், அராஜகப் போக்கும் இருத்தல் கூடாது. இப்படி எழுதுபவர்களிடம் அறிவின் அழகும் இல்லை; நிதானமுமில்லை; அர்த்தமுமில்லை. வெறுமனே போதைப் பிதற்றல்களுக்கு உள்ளானவர்களாக கணிப்பீடு செய்யப்படுவார்கள்.

தன் அறிவின் ஆற்றலாலும், பேச்சுத் திறனாலும் தவ்ஹித் வட்டாரத்துக்கு மத்தியிலும் மற்றும் மாற்று சமூகத்தினர் மத்தியிலும் தன் நாமத்தின் அடையாளத்தைப் பதித்திய ஒரு நல்ல மார்க்க அறிஞர் என்ற வகையில் கடைசிக் கால கட்டத்தில் ஆழ-அகலமாக பரந்த மனப் பான்மையுடன் ஒரு குறித்த விடயம் தொடர்பாக மாத்திரம் நின்று கொண்டு விவாதத்தில் ஈடுபடுவது சதா சிறப்பானது.

அதே வேளை, மற்றவரைக் குறை கூறிக் கேடு கெட்ட மனிதக் குணமுடையவராக இருப்பதை விடுத்து அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுத் திருந்தி மேலும் உங்களது இஸ்லாமியப் பணியை முன்னெடுத்துச் செல்லுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அன்புடன்,
கவிஞர் இக்பால் அலி.

One comment

  1. இக்பால் அலி கம்யூனிஸ்ட் என்பதை விட மார்க்கத்தொடர்பே இல்லாத ஒருவர் அதாவது கொள்கை இல்லாத ஒருவர். பிஜே இஸ’மாயீல் ஸலபி விடயத்தில் தவறாகவும் அவதூறாகவும் எழுதுகிறார் என்பது முற்றிலும் உண்மை. ஆனால் இக்பால் அலியின் மடல் நகைப்பாக உள்ளது. தான் கடமை புரியும் நிறுவனத்தில் சம்பளம் தவிர வேறெதுவும் பெற்ற நன்மையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இது முற்றுமுழுதான பொய். அவரது கவிதை நூலுக்கு அன்சாருஸ் சுன்னாவுக்கு தொடர்பில்லை எனில் எதற்காக செயலாளருக்கு நன்றி, கணனி பிரிவில் வேலை செய்தவருக்கு நன்றி. இவருடைய குறித்த கவிதை நூல் அன்சாருஸ் சுன்னாவுடைய கணனியில்தானே முழுமையாக டைப் செய்யப்பட்டது. அவர் அதற்காகப் பணம் கொடுக்கவில்லை நன்றி சொன்னார் என்பதுதானே முழுமையான உண்மை.

    தொழுகையில்லாத ஒருவனை அன்சாருஸ்சுன்னா எப்படி தனது நிறுவனத்தில் ஊழியனாக வைத்துக்கொள்ள முடியும்? இவரின் கவிதை நூல் அன்சாருஸ்சுன்னா தனது வாகனத்தில் எதற்காக ஏற்றித் திரிந்தது? போடனாக இருந்தவருக்கு மீடியாப் பொறுப்பு அன்சாருஸ்சுன்னாவால் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பொறுப்பு மார்க்கத்துக்குள் நின்று செய்யப்படுகின்றதா? என்றால் முற்றுமுழுக்க இல்லை என்றே சொல்ல வேண்டும். கோயில் செய்தி, மார்க்கத்துக்கு முரணான கூத்துக்கள், கலை விழாக்கள் என சிங்கள மற்றும் தமிழ் முஸ்லிம் கிராமங்களில் நடைபெறுகின்ற அத்தனை அநாச்சாரங்களையும் ரூபவாஹினி, மற்றும் பத்திரிகைகளுக்கு இவர் அனுப்பி அங்கும் பைசா எடுக்கிறார். அன்சாருஸ்சுன்னாவிலும் சம்பளம் எடுக்கிறார். வேடிக்கை என்ன தெரியுமா இந்த அத்தனை செய்திகளையும் இந்த அனைத்து அனாச்சாரங்களையும் ஊடகங்களுக்கு அனுப்ப இவர் முழுமையாகப் பயன்படுத்துவது அன்சாருஸ்சுன்னாவின் கணனி, பெக்ஸ், ஈமெயில், காகிதாதிகள், காமெரா என நீண்ட பட்டியலைப் போடலாம். இக்பால் அலி அன்சாருஸ்சுன்னா போன்ற தஃவா இயக்கங்களுக்கு அபகீர்த்தியே ஒழிய தஃவா ரீதியான எந்தப் பயன்பாடும் கிடையாது. நிர்வாகி அவர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகொள் என்னவெனில் இக்பால் அலி போன்றோருக்கு இணையத்தில் இடமளித்து இணையத்தின் இமேஜைக் குறைக்காதீர்கள். இஸ்லாம் கல்வி.காம் ஓர் அழகான இணையம். நாசமாக்கி விடாதீர்கள். இதனூடாக இஸ்மாயீல் ஸலபி மற்றும் அன்சாருஸ்சுன்னா நிருவாகம் ஆகியோரையும் இதனூடாக நான் கேட்பது என்னவெனில் தஃவாவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் ஒருவர் மட்டுமல்ல, அன்சாருஸ்சுன்னாவின் தஃவாவுக்கான பொருட்களைத் தனது சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்தி சுய பயனடையும் ஒருவர் உங்களின் தஃவா நோக்கிய பயணத்துக்கு இடைஞ்சலானவர் என்பதை ஞாபகமூட்ட விரும்புகின்றேன். ஏற்றுக்கொள்வீர்களோ என்னவோ இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள் என்று மட்டும்தான் என்னால் சொல்ல முடியும். இக்பால் அலி திருந்தியதாக ரீல் விடுலதையோ அவரை நியாயப்படுத்துவதையோ செய்து கொண்டிருக்காமல் ஆரோக்கியமான தீர்மானங்களுடன் செயற்படுங்கள். அன்சாருஸ்சுன்னாவின் முழு வழங்களும் இக்பால் அலியால் துஸ’ப்பிரயோகம் செய்யப்படுகின்றது என்பது அன்சாருஸ்சுன்னாவில் பணிபுரியும் அதிகமானவர்கள் பேசிக்கொள்ளும் கருத்து என்பது எனக்குத் தெரியும். இப்படியிருக்க ஏன் நன்றி சொல்லமாட்டார்? சம்பளம் தவிர வேறேதும் எனக்கில்லை எனப் பொய் வேறு சொல்லியுள்ளார். பணத்துக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயங்காத ஒருவர் அல்லாஹ்வுக்குப் பயந்து எதற்கும் கொள்கையை விற்கத் தயாரில்லாத இஸ்மாயில் ஸலபிக்கோ அவர் சார்ந்த அன்சாருஸ்சுன்னாவுக்கோ எவ்வகையிலும் பொருத்தமானவரல்ல. பிஜே தேவையற்ற சம்பந்தமில்லாதவர்களையெல்லாம் ஸலபியோடு சம்பந்தப்படுத்தி மக்களைத் திசைதிருப்பப்பார்க்கிறார். அது மக்கள் மன்றில் எடுபடாது என்பதைத் தெளிவாக அவர் புரியும் காலம் அண்மித்து விட்டது.

    அன்புடன்
    றபீக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *