Featured Posts

நன்றி மறவோம்!

கஸ்டங்கள், பிரச்சனைகளின் போது அல்லாஹ் ஓர் அடியானை சோதிக்கின்றான். அந்த சோதனையின் போது அடியான் பொறுமையாக இருந்தால் அவருக்கு அல்லாஹ் நன்மாராயம் சொல்கிறான்.

பிரச்சனைகளின் போது அல்லாஹ்வை வணக்கத்தின் மூலம் தொடர்ந்து அழைக்கிறான். ஆனால் அல்லாஹ் அந்த கஸ்டங்களையும், பிரச்சனைகளையும் நீக்கியதற்கு பின் அடியான் அல்லாஹ்வை மறந்து விடுகிறான்.

அடியார்கள் தனக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கிறான். அதை பின் வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் நமது நினைவுக்கு கொண்டு வருகிறான்.

“ (கப்பலில் செல்லும்) அவர்களை, மலைமுகடுகளைப் போன்ற அலை சூழ்ந்து கொள்ளுமானால், அல்லாஹ்வுக்கே வழிபட்டு அந்தரங்க சுத்தியுடன் அவனிடம் பிரார்த்திக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களைக் காப்பாற்றிக்கரைசேர்த்து விட்டால், அவர்களில் சிலர் நடுநிலையாக நடந்து கொள்கிறார்கள் – எனினும் மிகவும் நன்றி கெட்ட, பெருந்துரோகிகளைத் தவிர வேறு எவரும் நம் அத்தாட்சிகளை நிராகரிப்பதில்லை… (31:32)

பிரச்சனைகள் வரும் போது அல்லாஹ்வை அடியார்கள் அழைக்கிறார்கள். பிரச்சனைகளிலிருந்து அல்லாஹ் அவர்களை காப்பாற்றியதற்கு பிறகு சிலர் அமல்கள் மூலம் நன்றியுணர்வோடு நடந்துக் கொள்கிறார்கள். அதிகமானவர்கள் அல்லாஹ் செய்த நன்றிக்கு பகரமாக நன்றி கெட்டவர்களாக இருக்கிறார்கள்.

கடந்த ஆட்சியின் போது ஆட்சியாளர்கள் மூலம் முஸ்லிம்களுக்கு பல விதமான பிரச்சனைகளும், நெருக்கடிகளும், மறைமுகமாகவும், நேரடியாகவும் கொடுக்கப் பட்டன. முஸ்லிம்கள் செய்வதறியாமல் இறைவனிடம் வணக்கங்கள் மற்றும் பிராத்தனைகள் மூலம் கையேந்தினார்கள்.

அந்த ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகளை விட்டும் முஸ்லிம்களை அல்லாஹ் காப்பாற்றினான். பிரச்சனைகள் முடிந்து விட்டன. அநியாயக்காரர்களை அல்லாஹ் இழிவுப் படுத்தி விட்டான் என்று வெற்றியைத் தந்த அல்லாஹ்வை மறந்து அமல்களில் அலச்சியமாக இருக்க கூடாது.

அடியார்களிடம் இருந்து அல்லாஹ் அதிகமாக நன்றிகளை எதிர்ப் பார்க்கிறான்.

நன்றிகளைப் பொருத்த வரை நாம் அவைகளை மூன்றாக கவனிக்கலாம்.

முதலாவது மனிதன் மனிதனுக்கு செய்யும் நன்றியாகும். அதாவது ஒரு மனிதன் ஒரு மனிதனுக்கு ஏதாவது ஓர் உதவியை செய்தவுடன் அதற்கு பகரமாக ஜஸாக்கல்லாஹூ கைரா என்பதாகும். இரண்டாவது அடியான் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதாகும் அல்லாஹ் மனிதனுக்கு வழங்கி இருக்கும் அருட் கொடைகளுக்கு பகரமாக அமல்களை செய்து அடியான் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதாகும். மூன்றாவது அல்லாஹ் அடியானுக்கு நன்றி செலுத்துவதாகும். அதாவது அடியான் அமல்கள் மூலம் அல்லாஹ்விற்கு செய்யும் நன்றிகளுக்கு பகரமாக அல்லாஹ் தனது அருட் கொடைகளை அடியானுக்கு வழங்குவதாகும்.

அல்லாஹ்வை பொருத்த வரை அடியார்கள் எப்போதும் தனக்கு நன்றி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று அடியார்களுக்கு தான் செய்த அருட் கொடைகளை அல்லாஹ் அடிக்கடி நினைவுப் படுத்திக் கொண்டிருக்கிறான்.

சில குர்ஆன் வசனங்களை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.

“இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா; ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது; மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் – இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! (35 : 12)

இந்த வசனத்தின் படி அல்லாஹ் அடியார்களுக்காக கடலை வசப் படுத்திக் கொடுத்து, அடியார்கள் சாப்பிடுவதற்காக பலவிதமான மீன் வ்கைகளை ஏற்ப்படுத்தியுள்ளதையும், அணிவதற்கான ஆபரணங்களை அதன் மூலம் வெளியாக்கியுள்ளதையும், கப்பலில் பயணம் செய்வதற்காக கடலில் பல பாதைகளை ஏற்படுத்திக் கொடுத்த்தையும், நினைவுப் படுத்தி எனக்கு நன்றி செலுத்துங்கள் என்று கூறுகிறான்.

அடுத்த வசனத்தை கவனியுங்கள்.
“. (முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஹலாலான நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்.(.16:114)

இந்த வசனத்தின் மூலம் இறைவனால் வழங்கப்பட்ட உணவுகளுக்கு நன்றி செலுத்துங்கள் என்று நமக்கு நினைவுப் படுத்துகிறான்.

அடுத்த வசனத்தை கவனியுங்கள்.
“உங்கள் மாதாக்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் – நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு – அவனே அமைத்தான் (16:78)

இந்த வசனத்தின் மூலம் இறைவனால் வழங்கப்பட்ட அழகான மனித உருவத்தையும், மனிதனுக்கு தேவையான செவியையும், கண்களையும் இதயத்தையும் நினைவுப்படுத்துமாறு அல்லாஹ் நமக்கு எடுத்துக் கூறி, அதை வழங்கிய அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள் என்று நினைவுப் படுத்துகிறான்.

அடுத்த வசனத்தை கவனியுங்கள்.
” (மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் – எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும். (7:10)

இந்த வசனத்தின் மூலம் இறைவனால் வசப்படுத்திக் கொடுக்கப் பட்ட பூமியையும், வாழ்க்கையையும், அல்லாஹ் நினைவுப் படுத்தி அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள் என்று கூறுகிறான்.

அதே போல அடுத்த வசனத்தை கவனியுங்கள்

“பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.(3: 123)

இந்த வசனத்தின் மூலம் பத்ர் களத்தில் உதவி செய்ததை நினைவுப் படுத்தி எனக்கு நன்றி செலுத்துங்கள் என்று நபிக்கும், ஸஹாபாக்களுக்கும் அல்லாஹ் நினைவுப் படுத்துகிறான்.
எனக்கு நன்றி செலுத்தினால் நான் உங்களை தண்டிக்க மாட்டேன் என்று பின் வரும் வசனத்தின் மூலம் அல்லாஹ் கூறுகிறான்.

“நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (4:147)

அமல்கள் மூல் இறைவனுக்கு நாம் நன்றி செய்யா விட்டால் தான் அல்லாஹ் நம்மை தண்டிப்பதாக எச்சரிக்கிறான்.

அதே நேரம் நாம் தொடர்ந்து நன்றி செலுத்தினால் நமது தேவைகளை அதிகப்படுத்தி தருவதாக பின் வரும் வசனத்தின் மூலம் அல்லாஹ் கூறுகிறான். “(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்). (14:07)

எனவே அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் என்ன, என்ன அமல்களை வழிகாட்டியுள்ளார்க ளோ அவைகள நிறைவாக செய்து அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியார்களாக மாறுவோமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *