Featured Posts

பொறுப்பை மறந்த ஆலிமாக்கள்

S.செய்யித் அலி ஃபைஸி
முதல்வர்: கதீஜதுல் குப்றா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி, நாகர்கோவில்

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

‘முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் அவர்களில் சிலர் சிலருக்கு நண்பர்கள்: அவர்கள் நன்மையை ஏவுகிறார்கள், தீமையை தடுக்கிறார்கள்…..’ (அல்குர்ஆன் : 9:71)

தமிழகத்தில் தவ்ஹீது கொள்கை மலர்ந்த பின் அதன் வீரிய மிக்க எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் பல்வேறு முயற்சிகள் கொள்கை ஆர்வலர்களால் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சி விதைகளில் ஒன்று தான் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ‘இஸ்லாமிய பெண்கள் கல்லூரிகள்’. பெண்களிடையே மண்டிக்கிடக்கும் கப்ரு வழிபாடு, மூடநம்பிக்கைகள்,சடங்குகள் ஆகிய அனைத்துக்கும் காரணம் அவர்களிடமுள்ள அறியாமையே என்பதை அறிந்த கொள்கை ஆர்வலர்கள் பெண்களுக்கென தனியாக அரபிக் கல்லூரிகளை நிறுவும் முயற்சியில் இறங்கினர்.

இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட கல்லூரிகளில் காயல்பட்டணம் ஆயிஷா சித்தீகா, நாகர்கோவில் கதீஜதுல் குப்றா, தேனி மாவட்டம் கோம்பை ஹிதாயத்துன்னிஸ்வான், திருச்சி இஸ்லாஹிய்யா பேர்ணாம்பேட் குல்லியத்து பனாத்தில் முஸ்லிமீன் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். தொடர்ந்து
தமிழகத்தின் பல பகுதிகளிலும் பெண்கள் கல்லூரிகள் வெகு வேகமாக உருவாக ஆரம்பித்து இன்று சுமார் 15 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை JAQH அமைப்பின் கீழுள்ளவையாகும். இவற்றில் சில தங்கும் வசதி கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கல்லூரிகளில் பெரும்பாலானவை மூன்றாண்டு பாடத்திட்டத்தின் கீழ் இயங்குபவையாகும் இந்த பாடத்திட்டத்தில் பயிலும் வசதியில்லாதவர்களுக்கு ஒரு ஆண்டு ‘தீனிய்யாத்’ பாடத் திட்ட வசதியும் செய்யப்பட்டுள்ளது. நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியைகளைக் கொண்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன, சில கல்லூரிகளில் தையல் பயிற்சியுடன் கம்பியூட்டர் பயிற்சியும் தொழில் கல்வியாக சொல்லித் தரப்படுகிறது.

சில கல்லூரிகளில் பல்கலைக் கழக படிப்பாகிய ‘அஃப்ஸலுல் உலமா’ மூன்று ஆண்டு கால இளநிலை பட்டப் படிப்பும் அதை முடித்த பின் MA (Modern Arabic) இரண்டு வருட முதுநிலை
பட்டப் படிப்பும் படிப்பதற்குரிய வசதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு சில கல்லூரிகளில் விடுதிக் கட்டணமாக ணவிகளிடமிருந்து ஒரு சிறிய தொகை வசூலிக்கப்பட்டாலும் அதைக் கொண்டு மட்டும் கல்லூரியை நடத்தி விட முடியாது, போய் வந்து படிக்கும் வசதி கொண்ட கல்லூரிகளில் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாமல் முற்றிலும் இலவசமாகவே கல்வி சொல்லித் தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கல்லூரிகளை நிறுவுவது முதல் பராமரிப்பது வரையுள்ள கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவற்றை நிர்வகிப்பவர்கள் படும் சிரமங்கள் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை. அவை
கல்வியாளர்ளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை.

ஆண்டு இறுதியில் பட்டமளிப்பு விழா நடத்தி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுகிறது, தற்போது ஆண்டு தோறும் தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலிருந்தும் தோராயமாக 100 க்கும் குறையாமல் மாணவிகள் ‘ஆலிமா’ சான்று பெற்று செல்கின்றனர், இவ்வாறு மூன்று ஆண்டுகள் வரை மார்க்கம் பயின்று தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றுச் செல்லும் ஆலிமாக்களின் நிலை என்ன? அவர்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சமூகக் கடமையை
நிறைவேற்றுகின்றனரா? என்பதை கவலையுடன் அலசுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மாணவிகளுக்கு இந்த படிப்பின் அவசியம் குறித்து அடிக்கடி ஆசிரிய ஆசிரியைகள் போதிப்பதுண்டு. தஃவா – பிரச்சாரப்பணி நமது உயிர் மூச்சு
என்றும் அந்த பணியை நிறைவேற்றாமல் தட்டிக் கழிப்பது பெரும் குற்றமாகும் என்றும் மாணவிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதற்காக வாரந்தோறும் பிரச்சாரப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. எனினும் இதை எதையுமே ஆலிமாக்கள் கவனத்தில் கொள்ளாமல் படித்து முடித்து வெளியே வந்ததும் எல்லாவற்றையும் உதறித்தள்ளி விட்டு மக்களுடன் மக்களாக கலந்து விடுகின்றனர். கற்ற கல்வியின் கடமையை சுத்தமாக மறந்து விடுகின்றனர்.

துவக்க காலங்களில் சில ஆலிமாக்கள் கடமையுணர்ந்து செயல்பட்டனர். காலப்போக்கில் பெரிய மாறுதல் ஏற்பட்டு நிலைமை தலை கீழாக மாறிவிட்டது, ஆலிமாக்கள் தங்களுக்கும்
தஃவாவுக்கும் சம்பந்தமே இல்லாமலாகி விட்டனர்.

இவ்வாறு தஃவா களத்திலிருந்து இந்த ஆலிமாக்கள் முற்றிலுமாக ஒதுங்கிப் போவதற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன, அவை:
1) இஸ்லாமிய நெறியை தனது சொந்த வாழ்க்கையில் கடை பிடிப்பதில் உள்ள தயக்கம்.
2) பெற்றோரின் ஒத்துழைப்பின்மை.
3) புகுந்த வீட்டில் போடப்படும் தடை.
4) குடும்பப் பொறுப்பு.

நாமறிந்த வரை மேலே சொன்ன காரணங்கள்தான் ஆலிமாக்களை தஃவா பணிக்கு வரவிடாமல் முடக்கிப் போட்டுள்ளது என்று கூறலாம்.

முதலாவது காரணம்:
ஏதோ ஒரு வேகத்தில் பெற்றோரின் வற்புறுத்தலினாலோ அல்லது தங்களுக்குள்ள ஆர்வத்தினாலோ கல்லூரியில் இணைந்து பயில ஆரம்பிக்கின்றனர். மூன்றாண்டு காலம் மிகுந்த
பொறுமையுடன் படிப்பை முடித்து வெளியுலகிற்கு வரும் ஆலிமாக்களுக்கு அவர்கள் கற்ற கல்வியின் அடிப்படையில் வாழ்வது சற்று சிரமமாக தோன்றுகிறது. மற்ற பெண்களைப் போலவே ஆடம்பரமாகவும் சுதந்திரமாகவும் நடக்க விரும்புகின்றனர். அதற்கு தனது தஃவா பணி தடையாக இருப்பதால் அதை உதறித்தள்ளி விட்டு மற்றவர்களைப் போல வாழ ஆரம்பித்து விடுகின்றனர்.

இதனால் ஆலிமாக்கள் மீது பொதுமக்களிடம் இருந்த நன்மதிப்பும் மரியாதையும் குறையத் துவங்கியது. ஒரு காலத்தில் தங்களின் வாழ்க்கைத் துணையாக ஒரு ஆலிமாதான் வர வேண்டும்
என்று பெண் தேடி அலைந்த வாலிபர்களும் உண்டு. (இதனாலயே ஒரு சில பெற்றோர் தங்களின் பெண் பிள்ளைகளை ஆலிமாவுக்கு படிக்க வைத்தனர் என்பது தனி விஷயம்) ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ‘ஆலிமா’ என்றாலே முகம் சுளிக்கும் நிலைதான்!

தங்களது சுய லாபத்திற்காகவும் சுதந்திரமான வாழ்க்கை முறைக்காகவும் தஃவா பணியை காற்றில் பறக்க விட்ட இந்த ஆலிமாக்கள் ஒரு நபி மொழியை மறந்து விட்டனர் என்றே தோன்றுகிறது.

‘பனூ இஸ்ராயீலின் சமூகத்தில் உள்ள அறிஞர்கள் தங்களின் சமூக மக்கள் செய்து வந்த தவறுகளை பொறுப்புடன் கண்டித்தனர், பின்னர் அந்த பொறுப்பை விட்டு விட்டு சமூக மக்களுடன் மக்களாக தாங்களும் இரண்டறக் கலந்து விட்டனர், இதனால் அவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்கு உள்ளாயினர்’. (நூல் : அபூதாவூத், பார்க்க அல்குர்ஆன் 5:78)

இரண்டாவது காரணம்:
பெற்றோரை பொறுத்தவரை அவர்கள் தங்களது பெண் பிள்ளைகளை கல்லூரியில் சேர்ப்பதற்கு காரணம், பிள்ளைகளின் சுயக்கட்டுப்பாடு மற்றும் சுய ஒழுக்கத்தின் மீதுள்ள அக்கறையே.
இதைத் தவிர தங்களின் பிள்ளைகள் படிப்பை முடித்ததும் சமூகத்தில் சென்று தஃவா பணியாற்ற வேண்டும் என்ற எண்ணமும் விருப்பமும் பெற்றோரிடம் அறவே இல்லை.

இதைபப்பற்றி பெற்றோரிடம் கேட்டால் அவர்கள் கூறும் ஒரே பதில், பெண் பிள்ளைகள்தானே! அவர்கள் கற்ற கல்வியின் மூலம் அவர்கள் சரியாக நடந்தாலே போதும்!’ என்பதேயாகும். அதாவது தங்களின் பிள்ளைகளை படிக்க வைத்ததன் நோக்கம் அவர்கள் தங்களை மட்டும் சரி செய்து கொள்வதற்கேயாகும், மாறாக, கற்ற கல்வியைக் கொண்டு தஃவா பணி செய்ய
வேண்டும் என்பதற்காக அல்ல.

முதலில் பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அடிப்படை உண்மை என்னவெனில், இஸ்லாமில் கற்ற கல்வியை தன்னோடு மட்டும் வைத்துக் கொள்ள அனுமதியே இல்லை, அப்படி எந்த கல்வியும் இஸ்லாமில் கிடையாது.

‘உங்களில் மேலானவர் குர்ஆனை தானும் கற்று மற்றவருக்கும் கற்பிப்பவரே!’ (புகாரி)

‘கல்வியை மறைப்பவனுக்கு மறுமையில் நெருப்பாலான கடிவாளம் பூட்டப்படும்.’ (இப்னு ஹிப்பான்)

என்பது போன்ற நபி மொழிகள் கற்ற கல்வி மற்றவருக்கும் பயன்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

தமது பிள்ளைகளின் சுய ஒழுக்கம் மட்டும்தான் கல்வியின் நோக்கம் என்று பெற்றோர்கள் கருதினால் எதற்காக மூன்றாண்டு பாடத்திட்டத்தில் அவர்களை இணைத்து பயிற்றுவிக்க வேண்டும்? இதற்கு ஒரு மூன்று அல்லது ஆறு மாதக் கல்வி போதாதா? மூன்றாண்டு பாடத்திட்டத்தில் சேர்த்து நிர்வாகம், ஆசிரியைகள் என அத்தனை பேரின் முயற்சியை லி உழைப்பை ஏன் பாழாக்க வேண்டும்? எதற்காக மூன்றாண்டுகளை வீணாகக் கழிக்க வேண்டும்?

சில பெற்றோர் தங்களின் இமேஜுக்காக பிள்ளைகளை ஆலிமாவுக்கு படிக்க வைப்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு உலகாதாயத்திற்காக மாரக்கம் பயில்வதும் இஸ்லாம் அனுமதிக்காத ஒன்றுதான்.

‘உலகாதாயத்திற்காக கல்வி கற்பவர் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாது (இப்னுஹிப்பான்)

என்பது நபி மொழியாகும். எனினும் இப்போது அந்த இமேஜ் கூட ஒரு சில ஆலிமாக்களால் கெடுக்கப்பட்டு விட்டது.

மூன்றாவது காரணம்:
சில ஆலிமாக்கள் தஃவா பணியில் ஆர்வமுள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் புகுந்த வீட்டிற்கு சென்றதும் அந்த ஆர்வத்திற்கு அணை போடப்படுகிறது. சில வீடுகளில் கணவனும்
மற்றும் சில வீடுகளில் கணவனின் பெற்றோரும் இந்த தடையை போடுகின்றனர்.

பொதுவாகவே பெண் பார்க்கும் படலம் முடிந்து நிச்சயமானதுமே பையனின் வீட்டார் பெண் வீட்டாரிடம் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விடுகின்றனர், பெண்ணை பெற்றவர்கள் கூட தாம் பெற்ற மகளை தங்களோடு எங்காவது அழைத்துச் செல்ல நினைத்தால் அங்கேயும் வருங்கால மாமியார் குறுக்கே நிற்கும் அளவிற்கு அதிகாரம் கொடி கட்டிப் பறப்பதை சில இடங்களில்
பார்க்கலாம். இவர்களுக்கு இந்த அதிகாரத்தை யார் வழங்கியது?

திருமணத்திற்கு முன்பே இப்படி என்றால் திருமணத்திற்கு பிறகு மருமகள் மீது அதிகாரம் செலுத்த இந்த மாமியார்களுக்கு சொல்லித் தரவும் வேண்டுமா என்ன?

கணவனுக்கும் அவனின் பெற்றோருக்கும் மனைவியிடத்தில் சில உரிமைகள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது என்கின்ற அதே நேரம் மனைவி செய்யும் தஃவா பணியை தடுக்கும் உரிமை, அதிகாரம் எவருக்கும் இல்லை என்பதை கணவனும் அவனைச் சார்ந்தவர்களும் உணர வேண்டும்.

தங்களின் மருமகள் ஒரு மருத்துவராகவோ அல்லது இன்ஜியராகவோ இருந்து வேலைக்குச் சென்றால் இவர்கள் தடுப்பார்களா?

தஃவா பணிக்கு தடை போடுவது இஸ்லாமிய வளர்ச்சிக்கு தடை போடுவதாகும்.

தஃவா பணிக்கு மாமியார் போட்ட தடையை வேத வாக்காக எடுத்துக் கொண்டு பேசாமல் இருந்து விடாமல் ‘தஃவா பணிக்கு உதவினால் உங்களுக்கும் அதில் நன்மை கிடைக்கும்’ என்று அதன் அருமை,பெருமையை கணவனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் ஆலிமாக்கள் வாயைத் திறந்து எடுத்துரைக்க வேண்டும்.

நான்காவது காரணம்:
சில ஆலிமாக்கள் கணவன், பிள்ளைகள் மற்றும் கணவனின் வீட்டாருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை காரணம் காட்டி தஃவா பணியிலிருந்து ஒதுங்கி விடுகின்றனர்.

கணவனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் கடமையாற்றுவது ஒரு குடும்பப் பெண்ணின் முக்கியமான பணி என்ற போதிலும் அதைக் காரணம் காட்டி இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமையை உதறித் தள்ள முடியாது. ஏனெனில் இறைவன் தஃவா பணியை ஆண், பெண் இரு பாலாருக்குமே கடமையாக்கியிருக்கிறான்.

‘முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் அவர்களில் சிலர் சிலருக்கு நண்பர்கள், அவர்கள் நன்மையை ஏவுகிறார்கள், தீமையை தடுக்கிறார்கள்…..’ (அல்குர்ஆன் : 9:71)

ஒரு ஆண் மகனைப்போல சுதந்திரமாக சுற்றித் திரிந்து ஓடியாடி தஃவா பணியாற்ற ஒரு பெண்ணுக்கு முடியாவிட்டாலும் தன் சக்திக்கு உட்பட்டு குறைந்த பட்சம் தான் வசிக்கும் பகுதியில்
வாரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரமாவது தஃவா பணியாற்றலாம். இதைக் கூட என்னால் செய்ய முடியாது என்று யாரேனும் கூறினால் அவர் ஆலிமாவாக இருப்பதற்கே அருகதையற்றவராகி விடுகிறார். இதுவரை எந்த ஆலிமாவும் இப்றாஹீம் நபியவர்களின் மனைவி அன்னை ஹாஜர், மக்கா பாலை வெளியில் செய்த தியாகத்தைப் போல எதுவும் செய்து விடவில்லை. அது மாதிரி தியாகத்தை செய்யுங்கள் என்று நாம் சொல்லப் போவதுமில்லை.

பாராட்டுக்குரியவர்கள்!
பல்வேறு குடும்பச் சுமைகளுக்கு மத்தியிலும் ஒரு சில ஆலிமாக்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து கல்லூரியில் முழு நேர ஆசிரியைப் பணியை சிறப்பாகச் செய்வதுடன் வெளியிடங்களுக்குச் சென்று தஃவா பணியும் செய்து வருவது பாராட்டுக்குரியதும் மனதுக்கு ஆறுதல் தரும் விஷயமுமாகும்.

கல்லூரி நிர்வாகிகளுக்கு ஒரு ஆலோசனை!
கல்லூரியிலிருந்து பட்டம் பெற்றுச் சென்றதும் ஆலிமாக்களுக்கும் கல்லூரிக்கும் எந்த வித தொடர்பும் இல்லாமலாகி விடுகிறது.
பட்டம் பெற்றுச் சென்ற ஆலிமாக்கள் அனைவரையும் ஆண்டுக்கு ஒரு முறையாவது அழைத்து ஒரு ‘சந்திப்பு’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, யார் யார் என்னென்ன பணி செய்கிறார்கள்? என்பதை கேட்டு அறிவதுடன் அவர்களது பொறுப்பை அவர்களுக்கு நினைவூட்டவும் இது ஒரு வாய்ப்பாக அமையும்.

முடிவாக..
என்னதான் ஆலோசனைகள்,அறிவுரைகள் சொன்னாலும் இறையச்சத்துடன் கூடிய தன்னார்வமும் பொறுப்புணர்வும் ஆலிமாக்களிடம் ஏற்படாதவரை பெண்கள் சமூகத்தின் சீர் கேட்டிற்கும் வழி கேட்டிற்கும் ஆலிமாக்கள் இறைவனிடம் பதில் சொல்லியே தீர வேண்டும். இந்த விஷயத்தில் அல்லாஹ்-விடமிருந்து அவர்கள் தப்பவே முடியாது.

இவர்களை உருவாக்குவதற்காக பின்னாலிருந்து உழைத்த அனைத்து நல்லுங்களின் முயற்சியையும் கேள்விக்குறியாக்கிய குற்றம் இவர்களையேச் சாரும். ஆலிமாக்கள் சிந்திப்பார்களா?

.. இந்த கட்டுரை குறித்த விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *