Featured Posts

மரண சாசனம் (அல்குர்ஆன் விளக்கம்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
இந்த வசனம் மாற்றப்பட்ட வசனங்களில் ஒன்றாகும். ஒருவர் தனது சொத்தில் பெற்றோர், உறவினர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என மரண சாசனம் எழுதி வைப்பது ஆரம்பத்தில் கடமையாக இருந்தது. அதையே இந்த வசனம் கூறுகின்றது. இதன் பின்னர் ஸூறா நிஸாவின் ‘ஆயதுல் மவாரிஸ்’ எனப்படும் வாரிசுரிமைச் சட்டங்கள் தொடர்பான 4:11-12-13, 4:17 ஆகிய வசனங்கள் அருளப்பட்டன. இந்த வசனங்களில் ஒருவர் மரணித்துவிட்டால் அவரது பெற்றோர், மனைவி, ஆண்மக்கள், பெண் பிள்ளைகள், சகோதர சகோதரிகள் என்போர் அவரது சொத்தில் எத்தனை விகிதத்தைப் பெறுவார்கள் என்பது குறித்து தெளிவாகக் கூறப்பட்டுவிட்டது. ஒருவர் மரண சாசனம் செய்தாலும், செய்யாவிட்டாலும் இந்தப் பங்கு குர்ஆனில் கூறப்பட்ட விதத்தில் பங்கிடப்படும்.

குர்ஆனில் அல்லாஹ் வாரிசுரிமை பெறுவோர் குறித்து குறிப்பிட்டுவிட்டான். அவர்களுக்கு அதற்கு மேலாக எந்த வஸிய்யத் – மரண சாசனமும் செய்ய முடியாது. இருப்பினும் குர்ஆனில் குறிப்பிடப்படாத உறவினர்களுக்கோ அல்லது பொதுக் காரியங்களுக்கோ ஒருவர் வஸிய்யத் செய்யும் உரிமை பெற்றுள்ளார். இதனை மேற்படி 2:180 வசனத்தை மாற்றிய வாரிசுரிமைச் சட்டம் வசனங்கள் மூலமே அறியலாம். அல்லாஹ் சொன்ன விதத்தில் சொத்தை எப்போது பங்கு பிரிக்க வேண்டும் என்பது பற்றி இந்த வசனங்கள் கூறும் போது (இவ்வாறு பங்கீடு செய்வது) அவர் செய்த மரண சாசனம் அல்லது கடன் என்பவற்றை நிறைவேற்றிய பின்னரே ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது.

‘இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். அவர்கள் இரண்டுக்கு மேற்பட்ட பெண்களாக இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரு பங்கு அவர்களுக்குண்டு. அவள் ஒருத்தியாக இருந்தால் (அதில்) அரை வாசி அவளுக்குண்டு. (மரணித்த) அவருக்கு பிள்ளை இருப்பின் அவர் விட்டுச் சென்றதில் அவரது பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்குண்டு. அவருக்கு பிள்ளையில்லாமல் அவரது பெற்றோரே அவருக்கு வாரிசாக இருப்பின் அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பங்குண்டு. அவருக்கு சகோதரர்கள் இருப்பின் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பங்குண்டு. (இவ்வாறு பங்கீடு செய்வது) அவர் செய்த மரண சாசனம், அல்லது கடன் என்பவற்றை நிறைவேற்றிய பின்னரேயாகும். உங்கள் பெற்றோர் மற்றும் உங்கள் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயனளிப்பதில் உங்களுக்கு மிக நெருக்கமானவர்கள் யார்? என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். (இவை) அல்லாஹ்வினால் விதிக்கப் பட்டவையாகும். நிச்சய மாக அல்லாஹ் நன்கறிந்தவனாக வும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான்.’ (4:11)

எனவே, வாரிசுரிமைச் சட்ட வசனங்கள் இறக்கப்பட்ட பின்னரும் ஒருவர் மரண சாசனம் செய்யலாம். ஆனால், சில விடயங்களைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

  1. குர்ஆனில் சொத்துப் பங்குத் தொகை குறிப்பிட்டுச் சொல்லப்பட்ட வாரிசுகளுக்கு வஸிய்யத் செய்ய முடியாது.
  2. செய்யப்படும் வஸிய்யத் முழுச் சொத்தில் 1/3 பங்கை விட அதிகப்பட முடியாது.

சிலர் வாரிசுகள் மீது கொண்ட கோபத்தின் காரணமாக முழுச் சொத்தையும் பொதுக் காரியங்களுக்கு தர்மம் செய்துவிடுகின்றனர். இஸ்லாம் இதை அங்கீகரிக்காது.

ஸஃத்(வ) அவர்கள் தனது முழுச் சொத்தையும் தர்மம் செய்ய வஸிய்யத் செய்ய முற்பட்டார்கள். நபி(ச) அவர்கள் வேண்டாம் எனக் கூறினார்கள். பின்னர் 1/2 பகுதியை தர்மம் செய்ய முற்பட்ட போது அதையும் வேண்டாம் என்ற நபி(ச) அவர்கள் 1/3 பகுதியை வஸிய்யத் செய்ய அனுமதியளித்தார்கள் என நபிமொழிகள் கூறுகின்றன.

முன்னர் மரண சாசனம் செய்வது கடமை என்றிருந்த நிலை நீங்கிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *