– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
மானிட சமூகம் ஆன்மீக வறுமையில் அகப்பட்டு, அல்லல் பட்டு, அவஸ்த்தைப் பட்டு வருகின்றது. உள்ளங்கள் அதற்குரிய உணவின்றி ஆன்மீக வறுமையில் வாடி வதங்குகின்றன. மனிதனது உடலுக்கு உணவு தேவைப்படுவது போன்றே அவனது ஆன்மாவுக்கும் உணவு தேவை! உலகாதாய சிந்தனையில் சிக்கிச் சீரழியும் ஆன்மாவுக்கு உணவளித்து உற்சாகமூட்ட இஸ்லாம் பல வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. அதில் நோன்பு பிரதான கடமையாகும்.
உலகம் இன்பமானது, ஈர்ப்புமிக்கது. உலகாதாய சிந்தனைகளின் ஈர்ப்பால் மனிதன் தன் ஆன்மாவை மறந்து செயற்பட ஆரம்பிக்கின்றான். ஒரு முஸ்லிம் இந்த நிலைக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதால் மனித ஆன்மாவை வலுவூட்டக் கூடிய வணக்க வழிபாடுகளை இஸ்லாம் விதித்துள்ளது.
அன்றாடம் மனித மனதில் ஆன்மீக உணர்வை ஊட்டும் வழிபாடாக தொழுகை அமைந்துள்ளது.
‘ நிச்சயமாக நானே அல்லாஹ். என்னைத் தவிர (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் வேறு யாருமில்லை. எனவே, என்னையே நீர் வணங்குவீராக! என்னை நினைவு கூர்வதற்காகத் தொழுகையை நிலைநாட்டுவீராக!’ (20:14)
ஐவேளைத் தொழுகை என்பது அல்லாஹ்வை நினைவூட்டும் அற்புத இபாதத் ஆகும். இவ்வாறே வருடாந்தம் நினைவூட்டும் நீடித்த இபாதத்துக்களாக நோன்பும் ஹஜ்ஜும் அமைந்துள்ளதை அறியலாம்.
‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.’ (2:183)
நோன்பு என்பது உள்ளத்தைப் பண்படுத்திப் பக்குவப்படுத்துவதற்கான பயிற்சியென இந்த வசனம் கூறுகின்றது.
நோன்பாளி அல்லாஹ்வுக்காக தனது உணவு, பானம், தாம்பத்திய வாழ்வு என்பவற்றை குறித்த நேரம் வரை தவிர்த்து நடக்கின்றான். அல்லாஹ்வுக்காக எதையும் தியாகம் செய்யும் பக்குவத்தை இது வளர்க்க வேண்டும். அல்லாஹ் தடுத்தான் என்பதற்காக அத்தியவசியமான உணவு, பானம் என்பவற்றை அவன் தவிர்க்கின்றான். இதன் மூலம் இறைவன் தடுத்தவற்றை விட்டும் நான் ஒதுங்கி வாழ்வேன் என பறை சாட்டுகின்றான்.
தான் தனிமையில் இருக்கும் போது பசி வாட்டினாலும், தாகம் எடுத்தாலும், மோகம் கொண்டாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றான். அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற பக்குவத்தை இதன் மூலம் வளர்த்துக் கொள்கின்றான். இந்தப் பக்குவம் வளர்ந்துவிட்டால் உலக சட்டங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அல்லாஹ் எப்போதும் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வின் காரணமாக மனிதன் புனிதனாக வாழப் பழகிக் கொள்கின்றான்.
நோன்பு மனிதனுக்குப் பொறுமையைப் போதிக்கின்றது. உணவும், பானமும் இருக்கும் போதே மனதைக் கட்டுப்படுத்தி அதை உண்ணாமலும் பருகாமலும் இருக்க வைக்கின்றது. தன்னுடன் யாராவது சண்டைக்கு வந்தால் அல்லது திட்டினால் மாறித் திட்டாமல் சண்டைக்குச் செல்லாமல் நான் நோன்பாளி என்று ஒதுங்கச் சொல்கின்றது. கோபத்தை, ரோஷத்தைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொடுக்கின்றது.
உண்ணாமல், பருகாமல் வாயைக் கட்டுப்படுத்த நோன்பு பயிற்சியளிப்பதுடன் வீணான பேச்சுக்கள், ஆபாச வார்த்தைகள், பொய், தேவையற்ற செயற்பாடுகள், அனைத்தையும் விட்டும் மனிதனை விலகச் செய்து பூரண கட்டுப்பாட்டு நிலைக்கு மனிதனைக் கொண்டு வருகின்றது.
‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்’ என்பார்கள். மூன்று வேளை மூச்சு முட்ட உண்டு வருபவர்களுக்கு உணவின் அருமையும், அதில் உள்ள அல்லாஹ்வின் நிஃமத்தும் புரியாது! ஒன்றை இழந்தால்தான் அதன் உண்மையான நிலைமை புரியும். நோன்பின் மூலம் பட்டினி இருப்பதால் உணவின் மகிமையை மனிதன் உணரலாம்; பசியின் கொடுமையைப் புரியலாம். இதன் மூலம் தனக்குத் தாராளமாக உணவளித்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தலாம். அன்றாடம் உணவின்றி அவஸ்தைப்படும் மக்களின் அவல நிலையை அறிந்து அவர்களுக்கு உதவும் உணர்வை உள்ளம் பெறலாம்.
நபி(ச) அவர்கள் பொதுவாகவே அதிகமாக தான தர்மங்கள் செய்வார்கள். ரமழான் மாதம் வந்துவிட்டால் அவர்களின் தர்மம் வீசும் காற்றை விட வேகமாக இருக்கும் என நபிமொழிகள் கூறுகின்றன.
இந்த உணர்வு உந்துவதால்தானோ என்னவோ பொதுவாக ரமழானில் அதிக தான தர்மம் செய்யும் இதயம் பிறக்கின்றது. ஸகாதுல் பித்ர் போன்ற தர்மங்களும் இதையொட்டி கடமையாக்கப் பட்டுள்ளமையும் கவனிக்கத்தக்கதாகும்.
ரமழான் காலத்தில் மனிதன் இயல்பாகவே குர்ஆன் ஓதுதல், இரவுத் தொழுகைகளில் ஈடுபடுதல், மார்க்க நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கு கொள்ளுதல், நல்ல செய்திகளை ஆர்வத்துடன் கேட்டல், தான தர்மங்கள் செய்தல், இறை நினைப்பில் காலத்தைக் கழித்தல் என தனது ஆன்மீகத்தைப் பக்குவப்படுத்திக் கொள்கின்றான்.
இது ரமழான் எம்மிடம் எதிர்பார்க்கும் ஆன்மீக எழுச்சியாகும். எனினும், நமக்கு மத்தியில் இருக்கும் கருத்து வேறுபாடுகள், இயக்க வெறி, தேவையற்ற பாகுபாடுகள், அறியாமை, உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு அறிவை இழந்து செயற்படுதல் போன்ற காரணங்களால் ரமழான் மாதங்களில்தான் முஸ்லிம்களுக்கு மத்தியில் மார்க்க உணர்வு மங்கி மூர்க்கத்தனம் முறுக்கேறிப் போகின்றது. ஒரு சாரார் நடாத்தும் பயானை அடுத்த சாரார் தடை செய்வது, குழப்புவது, இப்தார் நிகழ்ச்சிகளைத் தடுத்தல், காவல் துறையில் தேவையற்ற முறைப்பாடுகளைச் செய்தல், அடிதடி மற்றும் சண்டைகளில் ஈடுபடுதல் போன்ற வேதனை தரும் விடயங்களில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வேண்டத்தகாத விபரீதங்களையெல்லாம் விட்டு விட்டு இந்த ரமழானை ஒவ்வொரு முஸ்லிமும் தனது ஆன்மீக பக்குவத்திற்காகப் பயன்படுத்த முற்பட வேண்டும். தெரியாமல் செய்துவிட்ட பாவங்களிலிருந்து பரிசுத்தப்படுத்திக் கொள்வதற்காகப் பயன்படுத்த வேண்டும்.
உறவுகளை முறிப்பதை விட்டுவிட்டு முறித்த உறவுகளை இணைத்து பலப்படுத்த முற்பட வேண்டும். உள்ளங்களில் இருக்கும் தேவையற்ற பகையுணர்வுகள், ஆணவம், பொறாமை உணர்வு, இயக்க வெறி என்பவற்றை இறக்கி வைத்துவிட்டு அன்பு, கருனை, நற்புறவு, பாசம் போன்ற இனிய உணர்வுகளை உள்ளத்தில் குடியமர்த்த வேண்டும்.
கடந்த சில ரமழான்களை நாம் அச்ச உணர்வுடன் சந்தித்தோம். வெளிப்பகை காரணமாக அச்சம் நிலவியதால் உள்வீட்டுக் குத்து, வெட்டுக்கள் குறைவாகவே இருந்தன. ஆனால், அமைதியான சூழலில் ஒரு ரமழானை சந்தித்திருக்கின்றோம். வெளிப் பிரச்சினைகள் இல்லாத போது உள்வீட்டுப் பகைகள் வெடித்து வெளிவர ஆரம்பிக்கலாம். அந்த நிலை வராது நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அச்சமற்ற ரமழானை அமைதியான முறையில் பயன்படுத்த நாம் முற்பட வேண்டும்.
இதே வேளை, துவேஷ உணர்வுமிக்கவர்கள், இந்த ரமழானை வைத்து முஸ்லிம்களுக்கெதிரான உணர்வுகளைத் தூண்டிவிடும் விதத்தில் எமது செயற்பாடுகள் அமைந்துவிடக் கூடாது என்பதிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இந்த வகையில் இந்த ரமழான் ஆன்மீக பக்குவத்தையும் நல்ல பண்பாட்டையும் நல்லுறவுகளையும் வளர்க்கும் ரமழானாக அமைய அல்லாஹ் அருள் புரிவானாக!