– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
அண்மைக் காலமாக தற்கொலைகளும் தற்கொலை முயற்சிகளும் பெருகி வருவதை அன்றாடம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சின்னச் சின்னப் பிரச்சினைகளுக்காகக் கூட கொலைகளும் தற்கொலைகளும் இடம் பெற்று வருகின்றன. பெற்ற தாய் தந்தையரே பிள்ளைகளைக் கொலை செய்து விட்டுத் தாமும் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. அத்தோடு காதலிக்காக பரிசு வாங்கிக் கொடுப்பதற்கு தாயிடம் பணம் கேட்டு பணம் இல்லை என்று சொன்ன தாயையும், கொடூரமாகக் கொலை செய்யும் பிள்ளைகளின் நிகழ்வுகளையும் காணக் கூடியதாக உள்ளது.
சமூக நோய்களில் ஒன்றாகிய தற்கொலை உணர்வு தொற்று நோய் போல் பரவித் தொடர இடமளிப்பது ஆபத்தானதாகும். எனவே, தற்கொலைகளுக்கான காரணம் கண்டறியப்பட்டு அவை களையப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன் மக்கள் மத்தியில் இறை நம்பிக்கை, தன்னம்பிக்கை, பொறுமை, விதி மீதான நம்பிக்கை என பல உயரிய எண்ணங்கள் வளர்க்கப்படவும் வேண்டும்.
தற்கொலைக்கு படிப்பறிவு இன்மை ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது. அறியாமையும், மூடநம்பிக்கைகளும் தற்கொலைக்கான காரணங்களில் முக்கியமானவையாக இருக்கலாம். ஆனால், வெறும் அறிவின் மூலம் தற்கொலை உணர்வைத் தவிர்த்து விட முடியாது.
அறிவியல் உலகின் முன்னோடியான அமெரிக்காவில் 2002 இல் எடுத்த புள்ளி விபரப்படி 31,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 25,000 ஆண்களும் 6000 பேர் பெண்களுமாவர். 5000 பேர் வயோதிபர்கள், 15-24 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்கள் 4000 பேராவர்.
இந்த புள்ளி விபரப்படி 15 நிமிடத்திற்கு ஒருவர் அமெரிக்காவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். சென்ற அரை நூற்றாண்டில் தற்கொலை செய்து கொள்ளும் வீதம் நூற்றுக்கு அறுபது சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அறிய முடிகின்றது.
மனிதனது அறிவும் இன்பமாக வாழ்வதற்கான வாழ்க்கை வசதிகளும் அதிகரித்துள்ள நிலையில் தற்கொலை விகிதம் குறைந்திருக்க வேண்டும். ஆனால், அது அதிகரித்துச் செல்கின்றதென்றால் அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தற்கொலை உணர்விலிருந்து மனிதனை மீட்காது என்பது தெளிவாகின்றது. எனவே, தற்கொலையைத் தவிர்ப்பதாக இருந்தால் அதற்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டு அவை களையப்பட வேண்டும். உண்மையில் தற்கொலை என்பது மனம் சார்ந்த பிரச்சினையாகும். எனவே, மனித ஆன்மா பலமூட்டப்பட வேண்டும். மனிதனது மூளைக்கும் உடம்புக்கும் உணவூட்டப்படுவது போல் ஆன்மாவுக்கும் உணவூட்டப்பட்டு அது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆன்மீக பக்குவத்தை வளர்ப்பதே தற்கொலையை ஒழிக்க வழி செய்யும்.
ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது முஸ்லிம் சமூகத்தில் தற்கொலை விகிதம் சற்று குறைவாகும். ஆழமான இறை நம்பிக்கை இருந்தால், விதி மீது நம்பிக்கை இருந்தால் தற்கொலை உணர்வு மேலெழ முடியாது.
இஸ்லாம் இறை நம்பிக்கையை வலியுறுத்துகின்றது. நன்மையோ, தீமையோ இறைவன் நாட்டப்படியே நடக்கும். அவன் நாடியது நடக்கும். அவன் நாடாதது நடக்காது. அல்லாஹ் எதை எமக்கு விதித்தானோ அதுவே எமக்குக் கிடைக்கும். அல்லாஹ் எமக்கென விதிக்காதது கிடைக்காது. உலகில் எமக்கு ஏற்படும் இழப்புக்கள், கஷ;ட-நஷ;டங்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டால் எமக்கு நன்மையும் மகத்தான மறுமைக் கூலியும் உண்டு என்றெல்லாம் போதிக்கின்றது. இந்தப் போதனைகளில் உறுதியான நம்பிக்கையிருந்தால் எவ்வித இழப்பு, கஷ;ட-நஷ;டம் ஏற்பட்டாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை ஒருவன் பெற்றுவிடுவான்.
எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையும், நம்பிக்கையீனமும் தற்கொலைக்கான காரணங்களில் ஒன்றாகும். எமது எதிர்காலம் அல்லாஹ்வின் கையில் இருக்கின்றது. அவன் மீது பொறுப்புச் சாட்டிவிட்டு (தவக்குல்) முயற்சி செய்வது மட்டுமே எமது கடமை. முடிவு அவனுடைய கையில் இருக்கின்றது என்று உறுதியாக நம்புபவன் வாழ்வின் நம்பிக்கை இழந்து தற்கொலையின் பக்கம் செல்ல மாட்டான்.
‘அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். ஏனெனில், நிராகரிக்கும் கூட்டத்தினரே அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழப்பார்கள்.’ (12:87)
அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழப்பது இறை நிராகரிப்பாளர்களின் பண்பாக இங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோர் அல்லது செய்து கொள்பவர்கள் உள ரீதியில் கோழைகளாவர். சவால்களைச் சந்திக்கும் துணிவிழந்தே தற்கொலையை நாடுகின்றனர். இவர்கள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தற்கொலை ஒரு தீர்வாகும் என நினைக்கின்றனர். உண்மையில் தற்கொலை என்பது தீர்வன்று. அது ஒரு பிரச்சினையில் இருந்து இன்னொரு பிரச்சினைக்கு இடம் மாறுவது மட்டுமேயாகும்.
கடன் தொல்லை, வறுமை, வியாபாரத்தில் நஷ;டம், காதல் தோல்வி போன்ற அற்ப காரணங்களுக்காக ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் பிரச்சினை தீராது! அவன் இறந்த பின்னர் அந்தப் பிரச்சினை விஸ்வரூபமெடுத்து அவனது குடும்பத்தைத் தொற்றிக் கொள்ளும். தற்கொலை செய்பவர்கள் தங்களைச் சேர்ந்தவர்களை கஷ;டத்தில் போட்டு விட்டு தமது இம்மை வாழ்வையும் மறுமை வாழ்வையும் அழித்துக் கொள்கின்றனர்.
தற்கொலை பற்றிப் பேசும் குர்ஆன் வசனத்தை ஆழமாக அவதானித்தால் இஸ்லாம் தற்கொலையை உள ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் அணுகுவதை அவதானிக்கலாம்.
‘அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) இலகுபடுத்தவே விரும்புகின்றான். மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.’
‘நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு மத்தியில் பொருத்தத்தின் அடிப்படையில் நடைபெறும் வியாபாரத்தைத் தவிர, உங்கள் சொத்துக்களை உங்களுக்கிடையில் தவறான முறையில் உண்ணாதீர்கள். மேலும், உங்களை நீங்களே கொன்றுவிடா தீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களுடன் நிகரற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.’
‘வரம்பு மீறியும், அநியாயமாகவும் யார் இதைச் செய்கின்றானோ அவனை நாம் நரகத்தில் சேர்ப்போம். இது அல்லாஹ்வுக்கு மிக இலகுவானதாகவே இருக்கின்றது.’
‘உங்களுக்குத் தடுக்கப்பட்டவைகளில் பெரும் பாவங்களை விட்டும் நீங்கள் விலகிக் கொண்டால் உங்களை விட்டும் உங்கள் (சிறு) பாவங்களை நாம் அழித்து, உங்களை சங்கைமிக்க இடத்தில் நுழைவிப்போம்.’
‘உங்களில் சிலரை மற்றும் சிலரைவிட அல்லாஹ் சிறப்பித்திருப்பதில் நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததற்கேற்ற பங்குண்டு. பெண்களுக்கும் அவர்கள் சம்பாதித்ததற்கேற்ற பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.’
(4:28-32)
முதல் வசனம் மனிதன் பலவீனமானவனாகப் படைக்கப்பட்டுள்ளான் என்று கூறுகின்றது. அந்த பலவீனத்தின் காரணத்தினால் தப்பு, தவறு செய்கின்றான், பேராசை கொள்கின்றான். அவனது உளவியல் பலவீனத்தின் வெளிப்பாடே தற்கொலையாகும்.
ஒருவர் சொத்தை மற்றவர் தவறான முறையில் சுரண்டக் கூடாது என்று அடுத்து பேசுகின்றான். அநியாயங்களுக்கு நியாயம் கிடைக்காத போது மனிதன் கொலை, தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றான். சரியான இறை நம்பிக்கை இருந்தால் மறுமையில் நீதி கிடைக்கும் என்று நிம்மதி பெற முடியும்.
அடுத்து, தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என்று குர்ஆன் தடுக்கின்றது. இப்படித் தடை போட்டால் மட்டும் சரியா? தற்கொலை செய்து கொள்ளும் பலரும் தமக்கென்று யாரும் இல்லை, தம் மீது அன்பும் பரிவும் காட்ட எவரும் இல்லை என்ற தவறான விரக்தி நிலையிலேயே அதைச் செய்கின்றனர்.
அடுத்து, அல்லாஹ் உங்களோடு அன்பாக இருக்கின்றான் என்று ஆறுதல் கூறப்படுகின்றது. தற்கொலை உணர்வுடையவர்கள் மீது அன்பை வெளிப்படுத்துவது அவர்களை அதிலிருந்து காப்பதற்கான ஒரு வழியாகும்.
ஆனால், சிலர் வெறும் அன்புக்கு மட்டும் கட்டுப்பட மாட்டார்கள். எனவே, அடுத்து அல்லாஹ், ‘நான் அன்பானவன் ஆனால், நீ தற்கொலை செய்து கொண்டால் உன்னைக் கடுமையாகத் தண்டிப்பேன்’ என எச்சரிக்கின்றான். பிரச்சினையில், கஷ;டத்தில் இருந்து விடுபட நீ தற்கொலை செய்து கொண்டால் நரகம் என்ற மிகப் பெரும் பிரச்சினையில் நீ மாட்டிக் கொள்வாய் என இங்கு எச்சரிக்கப்படுகின்றது.
அடுத்து, மனிதன் செய்யும் பாவங்களும் தற்கொலைக்கான காரணங்களில் ஒன்றாகும். பாவம் செய்தவனை அவனது ஆழ் மனது வாட்டி வதைக்கின்றது. தான் இப்படியெல்லாம் செய்துவிட்டேனே என்று தன்னைத் தானே தாழ்த்தி மனிதன் எடை போடும் போது தான் வாழத் தகுதியற்றவன் என நினைக்கின்றான். இதனால் அவனுள் தற்கொலையெண்ணம் எழுச்சி பெறுகின்றது. எனவே, இங்கு அல்லாஹ் பாவ மன்னிப்புப் பற்றி பேசுகின்றான்.
காதல் தோல்வி, பரீட்சையில் தோல்வி போன்ற சாதாரண காரணங்களுக்காகவும் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தோல்வியைக் கண்டு சாவது என்றால் இந்த உலகம் சாதனையாளர்களைச் சந்தித்திருக்காது. தோல்வியிலிருந்து கற்றுக் கொண்டவர்களே சாதனையாளர்களாக சரித்திரம் படைத்துள்ளனர். மமதையைத் தரும் வெற்றியை விட நல்ல பாடத்தைத் தரும் தோல்விகள் வரவேற்கப்பட வேண்டியவையாகும்.
மனித வாழ்வு பெறுமதியானது. போனால் மீண்டும் வராது. வாழ்வது ஒரு முறைதான்! அந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டும். சாதாரண பரீட்சைத் தோல்விக்காக வாழ்வை அழித்துக்கொள்வது அறிவீனமாகும். வாழ்க்கைக்காகவே பரீட்சையே தவிர பரீட்சைக்காக வாழ்க்கை அல்ல என்ற அடிப்படை உணர்வு ஊட்டப்படுதல் அவசியமாகும்.
தம்மீது அன்பு கொண்டவர்களைப் பழிவாங்குவதற்காக சிலர் தற்கொலை செய்கின்றனர். காதலுக்கு சம்மதிக்காத பெற்றோரைப் பழி வாங்க தற்கொலை செய்கின்றனர். இதன் மூலம் தனது குடும்பம் அவமானத்தைச் சந்திக்கும். எமது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை சமூகம் சாடும் என்று நினைக்கின்றனர்.
போதிய மன வளர்ச்சி இன்மையாலேயே இப்படி நடந்து கொள்கின்றனர். உண்மையில் இந்த மாதிரியான எண்ணங்கள் எழ தற்கொலை தொடர்பான தொலைத்தொடர்பு செய்திகள், மக்கள் உரையாடல்கள் என்பனவும் காரணம் எனலாம்.
அரசுகள், தற்கொலைகளைத் தூண்டும் செய்திகள், சினிமா, நாடகங்கள், கார்டூன்கள் போன்றவற்றைத் தடை செய்ய வேண்டும். சிறுவர்கள் மத்தியில் நிகழும் தற்கொலைகளில் அதிகமானவை சினிமா, நாடகங்களின் தாக்கத்தினால் ஏற்படுபவை என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
அடுத்து, தற்கொலைக்கான சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்பட வேண்டும். அமெரிக்காவில் நடந்த தற்கொலைகளில் அதிகமானவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதால் ஏற்பட்டவை ஆகும். அங்கு துப்பாக்கிகள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பதால் உணர்ச்சிவசப்படுபவர்கள் உடனே தற்கொலை செய்து கொள்வதற்கு ஏதுவாய் அது அமைந்துவிடுகின்றது. இவ்வாறே விவசாயிகள் மத்தியில் கிருமிநாசினியைக் குடித்து தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிகம். பெண்கள் அதிகமாக விஷத்தைக் குடித்து அல்லது தீ மூட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே, தற்கொலைக்கான சந்தர்ப்பங்களை அவதானித்து நீக்க முயற்சிக்க வேண்டும்.
இன்று பாலியல் ரீதியான குற்றச் செயல்களில் ஈடுபட்டு அவை வீடியோக்களாகப் பதியப்பட்டு மிரட்டப்படுவதன் காரணமாகவும் பலர், குறிப்பாக பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். போதைப் பொருள் பாவனை காரணமாகவும் தற்கொலைகள் இடம்பெறுகின்றன.
எனவே, தற்கொலையின் பக்கம் உந்தும் இது போன்ற காரணங்கள் களையப்பட வேண்டும். தற்கொலை ஒரு தொற்றுநோய். ஒருவர் செய்வதைப் பார்த்து அடுத்தவரும் செய்யலாம்.
சமூகத்தில் தற்கொலையின் தீய விளைவுகள் பற்றி விழிப்புணர்வூட்டப்பட வேண்டும். தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பங்கள் படும் சிரமங்கள் எடுத்துக் காட்டப்பட வேண்டும். இறை நம்பிக்கை, தன்னம்பிக்கை, துணிச்சல், சவால்களை எதிர்கொள்ளும் திறன் என்பன வளர்க்கப்பட வேண்டும். அறிவு மட்டும் மனிதனுக்கு வழிகாட்டாது. ஆன்மீகப் பக்குவம் வளர்க்கப்பட வேண்டும். டென்ஷன் நிறைந்த இன்றைய வாழ்வில் மன நிம்மதிக்கான ஆன்மீக வழிகாட்டல்கள் இன்றியமையாதவையாகும். இலங்கை மட்டுமன்றி இன்றைய முழு உலகும் சந்திக்கும் பாரிய சவாலாக இந்தத் தற்கொலை மாறி வருகின்றது.
எனவே, அரசுகளும் இதில் கவனம் செலுத்தி தற்கொலை உணர்வை அழித்து மன உறுதியுடன் துணிந்து வாழ்வில் எதிர் நீச்சல் போட்டு வாழ்வதற்கான வழிகாட்டல்களை வழங்க முயற்சிக்க வேண்டும்.