Featured Posts

அல்குர்ஆன் விளக்கம் – அல்லாஹ்வின் வருகை (சூரா பகரா)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
அல்லாஹ்வின் வருகையை இவர்கள் எதிர்பார்க்கின்றனரா? என்ற தொனியில் இந்த வசனம் அமைந்துள்ளது. அல்லாஹ்வுக்கு வருதல் (அல்மகீஉ) என்ற ஒரு பண்பு உள்ளது என்பதற்கு இது போன்ற வசனங்கள் சான்றாக உள்ளன.
‘அவ்வாறன்று, பூமி துகள் துகளாக தகர்க்கப்படும் போது,’

‘வானவர்கள் அணி அணியாக நிற்க, உமது இரட்சகன் வருவான்.’

‘அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில்தான் மனிதன் உணர்வு பெறுவான். அவ்வுணர்வு அவனுக்கு எப்படிப் பயனளிக்கும்?’
(89:21-23)

இந்த வசனம் அல்லாஹ்வின் வருகை பற்றிப் பேசுகின்றது. இது போன்று அல்லாஹ்வின் பண்புகள், செயல்கள் பற்றிப் பேசும் வசனங்களை அப்படியே நாம் நம்ப வேண்டும். ‘அல்லாஹ் வருவான்’ என்றால் ‘அவனது கட்டளை வரும்’ அல்லது ‘அவனது தண்டனை வரும்’ என்று நாம் மாற்று விளக்கம் கூறக் கூடாது. அவன் எப்படி வருவான் என்று கேள்வி கேட்கக் கூடாது. இப்படித்தான் வருவான் என வர்ணிக்கக் கூடாது. அல்லாஹ்வின் கண்ணியத்திற்கும் வல்லமைக்கும் ஏற்ப அவன் நாடும் போது நாடும் விதத்தில் வருவான் என்று நம்ப வேண்டும். அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினரது உலமாக்கள் இப்படித்தான் நம்பியுள்ளனர்.

மாற்று விளக்கம் (தஃவீல்) கொடுக்கும் போது அல்லது உள்ள அர்த்தத்தைத் திரிக்கும் போது எம்மை அறியாமலேயே வழிகேடுகள் வந்து நுழைந்துவிடலாம்.

நாம் இப்போது விளக்கத்திற்கு எடுத்துள்ள வசனத்தில் வரும் அல்லாஹ்வின் வருகை என்பதைக் கடந்த காலத்தில் வாழ்ந்த சில அறிஞர்கள் அல்லாஹ்வின் தண்டனை வருவதை இவர்கள் எதிர்பார்க்கின்றார்களா என்பதே இதன் அர்த்தமாகும் என விளக்கமளித்துள்ளனர். இருப்பினும் இது தவறாகும்.

‘அல்லாஹ்வும் வானவர்களும் மேகத்தின் நிழல்களில் அவர்களிடம் வந்து (அவர்களின்) காரியம் முடிக்கப்படுவதையா அவர்கள் எதிர்பார்க்கின்றனர்? அல்லாஹ் விடமே காரியங்கள் அனைத்தும் மீட்டப் படும்.’
(2:210)

மேகக் கூட்டங்கள் வழியாக அல்லாஹ் வருவான் என்றால் அல்லாஹ்வின் தண்டனை மேகக் கூட்டங்களின் வழியாக வரும் என்பதுதான் பொருள் என்று மாற்றுக் கருத்துக் கூறிவிடலாம். ஆனால், கீழே உள்ள வசனத்தை ஒரு முறை உற்று நோக்கினால் இந்த விளக்கம் தவறானது என்பதைப் புரியலாம்.

‘அவர்கள் தம்மிடம் வானவர்கள் வருவதையா, அல்லது உமது இரட்சகன் வருவதையா, அல்லது உமது இரட்சகனின் சில அத்தாட்சிகள் வருவதையா, எதிர்பார்க்கின்றனர்? உமது இரட்சகனின் அத்தாட்சிகளில் சில வரும் நாளில் அதற்கு முன்னர் நம்பிக்கை கொள்ளாது, அல்லது தனது நம்பிக்கையில் நல்லதைத் தேடிக் கொள்ளாதிருந்த எந்த ஆத்மாவுக்கும் அதன் நம்பிக்கை பயனளிக்காது. (அதை) நீங்களும் எதிர்பாருங்கள்! நாங்களும் நிச்சயமாக எதிர்பார்க்கின்றோம் என (நபியே!) நீர் கூறுவீராக!’
(6:158)

இந்த வசனத்தில் ‘மலக்குகளின் வருகை’, ‘அல்லாஹ்வின் வருகை’, ‘அல்லாஹ்வின் சில அத்தாட்சிகளின் வருகை’ என்று மூன்று வருகை பற்றிப் பேசப்படுகின்றது. அல்லாஹ்வின் வருகை என்பதற்கு அல்லாஹ்வின் கட்டளை அல்லது வேதனையின் வருகை என அர்த்தம் செய்தால் அல்லாஹ்வின் அத்தாட்சிகளின் வருகை என்பதற்கு என்ன அர்த்தம் செய்வது? இங்கே ‘அல்லது’ என்று கூறப்படுவதன் மூலம் மூன்று வருகையும் வேறு வேறானது என்பது தெளிவாகின்றது.

இதன்பின் அல்லாஹ்வின் வருகை என்பதும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளின் வருகை என்பதும் ஒன்றுதான் எனக் கூறி மூன்றை இரண்டாக மாற்றுவது வரம்பு மீறலாகவே இருக்கும். எனவே, அல்லாஹ் வருவான் என்பதை அல்லாஹ் வருவான் என்று எடுத்துக் கொள்வதே ஏற்றமானதாகும்.

அடுத்து, 2:110 வசனத்தை உன்னிப்பாகக் கவனித்தால் மறுமை பற்றி இந்த வசனம் பேசுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். மறுமையில் அல்லாஹ் வந்து விசாரித்து தீர்ப்பு வழங்குவது பற்றியே இந்த வசனம் பேசுகின்றது. இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் இது தொடர்பாக விரிவாகப் பேசுகின்றார்கள். எனவே, இது உண்மையில் அல்லாஹ் வருவது பற்றித்தான் பேசுகின்றது என்பது இதன் மூலமும் இன்னும் உறுதி செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *