– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
‘(நபியே!) அவர்கள் உம்மிடம் எதை (யாருக்கு) செலவு செய்வது? என்று கேட்கின்றனர். நன்மை தரும் எதனை நீங்கள் செலவளித்தாலும் (அது) பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்குரியதாகும் என்று (நபியே!) நீர் கூறு வீராக! மேலும், நீங்கள் செய்கின்ற எந்த வொரு நன்மையானாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாவான்.’
(2:215)
இஸ்லாம் வாழ்வின் சகல துறைக்கும் வழிகாட்டும் மார்க்கமாகும். தர்மம் செய்வது எப்படி என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது. சிலர் கொள்ளையடித்து அதை தர்மம் செய்கின்றனர். அடுத்தவன் பணத்தை சூறையாடி ஏழைக்கு வழங்குவ தெல்லாம் ஹீரோயிஸமாகப் பார்க்கப் படுகின்றது. நல்லதை தர்மம் செய்ய வேண்டும் என்று இந்த வசனம் கூறுகின்றது.
இருப்பதையெல்லாம் வாரி வழங்கிவிட்டு அடுத்தவனிடம் கையேந்தும் நிலைக்கு வருவதை சிலர் சிறந்த தர்மமாகப் பார்க்கின்றனர்.
‘(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘அவ்விரண்டிலும் பெரும்கேடும், மனிதர்களுக்கு (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப்பெரியதாகும்’ எனக் கூறுவீராக! மேலும், தாம் எதைச் செலவு செய்வது? என்றும் உம்மிடம் கேட்கின்றனர். ‘(தேவைக்குப் போக) மீதமுள்ளதை’ எனக் கூறுவீராக! நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறே அல்லாஹ் வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்.’
(2:219)
தனது அடிப்படைத் தேவைகள் போக மீதமிருப்பதையே தர்மம் செய்ய வேண்டும் என்றும் போதிக்கப்படுகின்றது.
‘(நீர் செலவு செய்யாது) உமது கையை உமது கழுத்தில் கட்டப்பட்டதாக ஆக்கிக் கொள்ளாதீர். மேலும், (அனைத்தையும் செலவு செய்து) அதனை முழுமையாக விரித்துவிடவும் வேண்டாம். அவ்வாறாயின், நீர் இழிவுபடுத்தப்பட்டவராகவும், கைசேதப்பட்டவராகவும் ஆகிவிடுவீர்.’
(17:29)
தர்மம் செய்வதிலும் நடுநிலை பேண வேண்டும் என இந்த வசனம் போதிக்கின்றது.
அடுத்து, பேருக்கும் புகழுக்குமாக ஊருக்கெல்லாம் தர்மம் செய்யும் சிலர் பெற்றோர்களையும், உற்றார் உறவினர் களையும் புறக்கணித்துவிடுகின்றனர். பெற்றார், நெருங்கிய உறவினர்கள், ஏழைகள், வழிப்போக்கர்கள் என தர்மத்தில் முதன்மைப் படுத்தப்பட வேண்டியவர்கள் யார் யார் என்பதையும் இந்த வசனம் தெளிவு படுத்திவிடுகின்றது.