– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
‘மாதவிடாய் பற்றியும் உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். ‘அது ஒரு அசௌகரியமாகும். எனவே, மாதவிடாயின் போது பெண்களை (உறவு கொள்வதை) விட்டும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் தூய்மை யடையும் வரை அவர்களிடம் (உறவுக்காக) நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மையடைந்து விட்டால் அல்லாஹ் உங்களுக்கு ஏவியவாறு அவர்களிடம் செல்லுங்கள்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்புத் தேடுபவர்களை நேசிக்கின்றான். மேலும் தூய்மையானவர்களையும் நேசிக்கின்றான்.’
(2:222)
மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் இயற்கையான அம்சமாகும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் இழிவாக நடத்தப்பட்டார்கள், அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். அவர்களை அக்காலத்தில் தீண்டத் தகாதவர்களாகப் பார்த்தார்கள். இஸ்லாம் அதைத் தடை செய்தது.
நபி(ச) அவர்கள் தமது மனைவியர் மாதவிடாயுடன் இருக்கும் போது அவர்களுடன் ஒன்றாக உணவு உண்டார்கள், உறங்கினார்கள். அவர்களின் மடி மீது தலை வைத்துப் படுத்துக் கொண்டு திருமறைக் குர்ஆனை ஓதினார்கள். இவ்வாறு மாதவிடாய் கொடுமைகளை ஒழித்தார்கள்.
இந்த வசனத்தில், மாதவிடாய் காலத்தில் பெண்களை ஒதுக்கி வைக்க வேண்டியதில்லை. அவர்களுடன் உடலுறவு கொள்வதை விட்டும் நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என ஆண்களுக்குப் போதிக்கப்படுகின்றது. உடலுறவு அல்லாத அனைத்துத் தொடர்புகளையும் அவர்களுடன் பேணலாம். அவர்களுடன் இன்பமாகவும், உல்லாசமாகவும் ஏனைய நாட்களைப் போன்று இருக்கலாம் என இந்த வசனம் கூறுகின்றது.
மாதவிடாய் காலங்களில் உடலுறவைத் தவிர ஏனைய அனைத்தையும் பெண்களுடன் செய்யுங்கள் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
இந்நிலையை அடைந்த பெண்கள் தொழுதல், நோன்பு நோற்றல், கஃபாவை வலம் வருதல், பள்ளிவாசலில் தரித்தல் போன்ற இஸ்லாமிய வழிபாடுகளைத் தவிர்க்க வேண்டும். இஃதல்லாத மார்க்க நிகழ்ச்சிகள், திக்ர் (தியானம்), பிரார்த்தனைகள் போன்ற ஏனைய கிரியைகளில் பெண்கள் ஈடுபடலாம். பெருநாள் தினத்தில் தொழுகை தவிர்ந்த ஏனைய பொது விடயங்களில் கலந்து கொள்ளலாம் எனக் கூறி இஸ்லாம் மாதத்தீட்டை வைத்து பெண்களை இழிவுபடுத்தும் சகல கொடுமைகளையும் ஒழித்தது!