‘உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்களாவர். உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பிய விதத்தில் செல்லுங்கள். உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள். இன்னும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் அவனைச் சந்திக்கக் கூடியவர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நன்மாராயம் கூறுவீராக!’ (2:223)
இஸ்லாம் எல்லா வகையான மூடநம்பிக்கைகளையும் ஒழித்த மார்க்கமாகும். உடலுறவு தொடர்பில் யூதர்களிடம் ஒரு மூடநம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையின் தாக்கம் மதீனத்து முஸ்லிம்களிடம் இருந்தது.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(வ) அறிவித்தார். ‘ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்திலிருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள். எனவே, ‘உங்கள் பெண்கள் உங்களுக்குரிய ‘விளை நிலம்’ ஆவர். எனவே, உங்கள் விளை நிலத்திற்கு நீங்கள் விரும்பியபடி செல்லுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 02:223 ஆவது) இறைவசனம் அருளப்பட்டது.’
(புஹாரி: 4528)
யூதர்களின் இந்த மூடநம்பிக்கையால் தாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இந்த வசனத்தின் மூலமாக எந்த அடிப்படையில் வேண்டு மானாலும் நீங்கள் உடலுறவு கொள்ளலாம் எனக் கூறி அந்த மூட நம்பிக்கையை இஸ்லாம் ஒழித்தது.
பின்புறமாக உறவு கொண்டால் குழந்தை மாறு கண் கொண்டதாகப் பிறக்கும் என்று கூறிய யூதர்கள் மல வழியை உறவுக்குப் பயன்படுத்தி வந்தனர். அதையும் இந்த வசனத்தில் இலக்கிய நயமாக இஸ்லாம் கண்டித்தது.
மனைவியை விளைநிலமாக ஒப்பிட்டு உடலுறவை பயிர் செய்வதாக ஒப்பிட்டுப் பேசிய இந்த வசனம் பயிரை எப்படி வேண்டுமானாலும் விதைக்கலாம். ஆனால், விதைக்கும் இடம் வயலாக – பயிர் வளரும் இடமாக இருக்க வேண்டும். வாய்க்காலாக இருந்துவிடக் கூடாது எனக் கூறி யூதர்களின் மூட நம்பிக்கையை மறுத்ததுடன் அசிங்கமான உறவு முறையையும் அழகாகக் கண்டித்தது.
Masha allah Avry think nic alhamdilla