Featured Posts

இலங்கை தேர்தல் உணர்த்தும் படிப்பினைகள்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
அமைதியான ஒரு தேர்தலை இலங்கை வரலாறு அண்மையில் சந்தித்தது. ஆரவாரம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் மற்றும் அடாவடித்தனங்கள் இல்லாமல் பலரையும் வியக்கவைக்கும் விதத்தில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் சிறுபான்மை சமூகத்திற்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு பெரிதும் மனநிம்மதியைக் கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது.

சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுத்து வந்த பிரச்சினைகள் ஓரளவு ஓய்ந்தது போன்ற உணர்வை முஸ்லிம்கள் பெற்றுள்ளனர். இறுகிப் போன உள்ளங்கள் இளகி நிம்மதிப் பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளன. முஸ்லிம்களின் மனதை ஆட்கொண்டிருந்த அச்ச உணர்வுகள் அகல ஆரம்பித்துள்ளன.

ஒரு நாடு நலம்பெற வேண்டும் என்றால் அந்த நாட்டில் எவரும், எங்கும் பயணம் செய்யும் வாய்ப்பு இருக்க வேண்டும். மக்கள் பயமும், பட்டினியும் இல்லாமல் வாழ வேண்டும். இந்த வாய்ப்புக்கள் இப்போது ஏற்பட்டுள்ளன. இவை அல்லாஹ்வின் மிகப்பெரும் அருளாகும். இந்த வாய்ப்புக்களை அல்லாஹ் சூறா அல் குறைஷpல் நினைவூட்டுகின்றான்.

‘குறைஷிகளுக்கு விருப்பத்தை உண்டாக்கியதற்காக,’

‘மாரி கால, கோடை காலப் பயணத்தில் விருப்பத்தை அவர்களுக்கு உண்டாக்கியதற்காக, இந்த வீட்டின் இரட்சகனை அவர்கள் வணங்கட்டும்.’

‘அவனே அவர்களுக்கு பசியின்போது உணவளித்தான். இன்னும் அச்சத்தின் போது அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கினான்.’
(அல்குர்ஆன்: அத்தியாயம் – 106)

அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் முகமாக முஸ்லிம்கள் அவனை வணங்க வேண்டும். இலங்கை நாட்டில் எம்மைச் சூழ்ந்திருந்த அச்சம் நீங்கியமைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் சமூகமாக நாம் எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து, இந்தத் தேர்தலில் இனவாதிகள் பெரும்பான்மை சமூகத்தினாலேயே புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எம்மால் ஆட்சியை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்; அடக்கவும் முடியும். எம்மிடம் ஐம்பது இலட்சம் வாக்கு வங்கி உள்ளது என்று வீராப்புப் பேசியவர்களின் முகத்தில் சிங்கள பெரும்பான்மை சமூகமே கரியைப் பூசியுள்ளது.

எனவே, இந்தத் தேர்தல் மூலம் சிங்கள மக்கள் தாம் இனவாதிகள் அல்லர் என்று நிரூபித்துள்ளனர். எனவே, முஸ்லிம்கள் தரப்பிலிருந்து இனவாதத்தைத் தூண்டும் செயல்கள் ஏதும் நடந்துவிடாவண்ணம் விழிப்பாக இருக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு.

பொதுபலசேனாவின் அரசியல் தோல்விக்கு போதிய பணம், பிரச்சார வாய்ப்புக்கள், ஊடக வளங்கள் இன்மை போன்றவற்றை அதன் செயலாளர் காரணங்களாகக் கூறியுள்ளார். இவையெல்லாம் இதற்கு முன்னர் தமக்குக் கிடைத்ததினால்தான் இவ்வளவு ஆட்டம் ஆடினர். இவர்களுக்கு இதற்கு முன்னர் இவற்றை வழங்கியவர் யார்? மக்கள் என்றால், அந்த மக்கள் எங்கே போனார்கள்? வெளிநாடுகள் என்றால், அந்த வெளிநாடுகள் எங்கே சென்றன? ஆம்! கடந்த ஆட்சியாளர்கள்தான் இவர்களின் ஒட்டுமொத்த செயற்பாடுகளுக்கும் காரணமாக இருந்துள்ளனர். அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் போனதும், இவர்களுக்கு ஆட்டம் போட முடியாமல் போயுள்ளது. செயலாளரின் இந்த வாதத்திலிருந்து இதுவரை பொதுபலசேனாவிற்கு பணமும், பலமும் கொடுத்தது கடந்த ஆட்சிதான் என்பது நிரூபணமாகின்றது.

இஸ்லாம் பற்றிய பல சந்தேகங்கள் இனவாதிகள் மூலம் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி, பெரும்பான்மை சமூகத்திற்கு இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றியுள்ள சந்தேகங்களுக்குத் தெளிவை வழங்குவது காலத்தின் கட்டாயமாகும். இது குறித்து இஸ்லாமிய இயக்கங்களும், உலமாக்களும் கரிசணை காட்ட வேண்டும்.

இந்தத் தேர்தலில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் பாரிய பாதிப்புக்கள் இல்லாமல் தப்பித்துள்ளோம். இருப்பினும் அமைதியான ஒரு தேர்தல் நடந்த சூழ்நிலையிலும் முஸ்லிம் தலைமைகளிடையேயான முறுகல் நிலையில், தேர்தல் வன்முறைகள் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அதிகமாகவே இடம்பெற்றுள்ளன.

கல்குடா தொகுதி துப்பாக்கிச் சூட்டு சம்பவம், காத்தான்குடி வன்முறைகள் இலங்கை அரசியல் வரலாற்றில் அசிங்கமான ஒரு பக்கமாகக் காட்சியளிக்கின்றது. இலங்கை முஸ்லிம்கள் அரசியலில் நல்ல முன்மாதிரியை இந்த நாட்டுக்கு வழங்கும் தகுதியை இழந்துள்ளதையே இது காட்டுகின்றது. அடுத்து, தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியலில் சண்டைகள் இடம்பெறுவதானது முஸ்லிம்கள் பதவி வெறி கொண்ட ஒரு கூட்டம் என்பதை சித்தரிக்கும் வண்ணம் அமைந்துள்ளமை வருந்தத்தக்கதாகும். முஸ்லிம்கள் முன்மாதிரிமிக்க சமூகமாக நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து நாம் செயற்பட வேண்டியுள்ளோம்.

பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள பிரதிநிதிகள் ஓர் அமானிதத்தைச் சுமந்தவர்கள். அவர்கள் ஏனைய மக்களுக்கு சிறந்த முன்மாதிரியாக நடக்க உறுதிபூண வேண்டும். சமூகத்தினதும் நாட்டினதும் நலனுக்காக உழைப்பதும் உயர்தரமான இபாதத் – இறை வழிபாடு – என்பதை உணர்ந்து தூய எண்ணத்துடன் பாடுபட முன்வர வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நல்ல சூழலைப் பயன்படுத்தி முஸ்லிம்களை நெறிப்படுத்துவதுடன் இனங்களுக்கிடையேயான நல்லுறவு கட்டியெழுப்பப்பட உழைக்க வேண்டும். இந்த நாட்டின் அழிவுக்குக் காரணமாக இருந்த இனவாத, மதவாத சிந்தனைகளை ஒழித்து பல்லின மக்களும் புரிந்துணர்வுடன் வாழும் நல்ல சூழல் ஏற்பட பாடுபடுவோமாக!

One comment

  1. ஹிஸ்புல்லா ,அதாவுல்லா போன்றோர் கட்டாயமாக அரசியலில் இருந்து அகற்றப்படவேண்டியவர்கள். இவரகளால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் கேவலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *