Featured Posts

தக்லீதின் எதார்த்தங்கள்

நன்றி: அல்-ஜன்னத் மாத இதழ் (மே-2015)

தக்லீதின் எதார்த்தங்கள். .
-மெளலவி எம். அப்துர் ரஹ்மான் மன்பஈ-

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் தவ்ஹீத் மற்றும் நபிவழியின் முக்கியத்துவம் தொடர்பான பிரச்சாரத்தினால் சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். (நாம் எதிர்பார்க்கும் முழுமையான மாற்றம் ஏற்படாவிட்டாலும் கூட!)

தவ்ஹீதில் தெளிவும் நபிவழி நடப்பதில் உறுதியும் கொண்ட நல்ல மக்கள் அதிகம் இருக்கின்றனர். ஆனாலும் இவ்வாறு நேர்வழி பெற்ற பின் பலர் தடம்மாறிச் சென்று கொண்டிருக்கின்றனர். இது கவலையுடன் நோக்கப்பட வேண்டிய விசயம்.

நாம் இங்கு குறிப்பிடுவது, மார்க்கத்தை கற்பிக்கும் அறிஞர்கள் விசயத்தில் வெறித்தனத்துடன் நடந்து கொள்ளும் பெயர்தாங்கி சலஃபிகளைத்தான்! இவர்களிடம் அறிஞர்கள் நடத்தும் மார்க்க வகுப்புகளுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டால், “மூத்த உலமாக்களிடம் பாடம் படித்த ஆலிம் பாடம் நடத்தினால் வருகிறோம் இல்லாவிட்டால் வரமாட்டோம்” என்கிறார்கள்.

குர்ஆன், ஹதீஸ் வழிநடக்கும் அறிஞர்களிடமிருந்து கல்வியை பெற்றுக் கொள்ளவேண்டும். இதுதான் உண்மையாக அல்லாஹ்வின் மார்க்கக் கல்வியைத் தேடும் உண்மை முஸ்லிமின் நிலைப்பாடாக இருக்கவேண்டும்.

இதற்கு மாற்றமாக தடம்புரண்டுவிட்ட இவர்களின் தவறான போக்குக்கு மறுப்பை இவர்களே மதிக்கும் மூத்த உலமாக்களின் நடைமுறையிலிருந்தே கொடுக்கலாம்.

மூத்த உலமாக்கள், ஷைக்அல்பானி அவர்களை மதித்திருக்கிறார்கள். அவர்களின் கல்விக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள். ஆனால் ஷைக் அல்பானி அவர்கள் மூத்த உலமாக்கள் என்ற பெயருடன் இருந்தவர்களிடம் உட்கார்ந்து பாடம் படித்ததில்லை, இதனால் ஷைக் அல்பானி அவர்களின் தரம் குறையவில்லை அல்லவா?

இன்னொரு விதத்திலும் இந்த மூடத்தனத்துக்கு நாம் பதிலளிக்கலாம். அறிஞர்களில் பிரபலமானவர்கள் மூத்த உலமாக்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். இப்படிப்பட்ட மூத்த உலமாக்களை விட கல்வியில் சிறந்த ஓர் அறிஞர் பிரபலமாகவில்லை, அதனால் மூத்த ஆலிம் என்று சொல்லப்படவில்லை. இத்தகைய கல்வியில் மிகச் சிறந்த ஆனால் பிரபலமாகாத ஆலிமிடம் பாடம் பயின்ற நல்ல அறிஞர் ஒருவர் பாடம் நடத்தினால் அவரிடம் பாடம் படிக்க மாட்டேன் என்று சொல்வதற்கு என்ன நியாயம் உள்ளது-? பிரபலமாகாத சிறந்த அறிஞரிடம் பாடம் படித்தது தான் இந்த ஆலிம் செய்த பாவமா?

அதே போல் மூத்த உலமாக்கள் என்று அறியப்படும் பலர் தாங்கள் கல்வி கற்கும் காலத்தில் சாதாரண ஆலிம்களிடம் கல்வி கற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். இது, இவர்கள் மக்களுக்கு கற்பிக்கும் பெரிய அறிஞர்களாக ஆவதற்கு தடையாக இருக்கவில்லை.

இப்படி தடம் மாறிச் செல்வோரில் இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். ஒரு ஆலிமின் பயானிலோ பாடத்திலோ ஈர்ப்பு ஏற்பட்டு விட்டால் மார்க்க விசயத்தை தெரிந்து கொள்ள உதவிய அறிஞரை நேசிப்பது என்பதை தாண்டி அவர் மீது பித்துப் பிடித்தவர்களாக ஆகிவிடுகின்றனர். பைஅத் செய்து முரீதாக இருப்பது, கண்மூடித்தனமான தக்லீது போன்ற வழிகேடுகளை அந்த வார்த்தைகளைச் சொல்லாமல் நடைமுறைப்படுத்துபவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.

இவர்களின் செயல்பாட்டைப் பாருங்கள்! இவர்கள் ஒரு ஆலிமிடம் சில விசயங்களை தெரிந்து கொண்டு விட்டால் அவர் மீது பித்து பிடித்து மற்ற எல்லா ஆலிம்களையும் அவரை விட தாழ்ந்தவர்களாக தான் பார்க்கிறார்கள்

மற்ற ஆலிம்களிடம் பாடம் படிக்கவும் மார்க்கத்தை தெரிந்து கொள்ளவும் விரும்புவதில்லை. இவர்களின் நடவடிக்கைகளை பார்க்கும் போது மற்ற ஆலிம்களெல்லாம் மார்க்கத்தை போதிக்க அத்தனை தகுதியானவர்கள் அல்ல என்றோ அல்லது இன்ன ஆலிமிடம் நாம் பாடம் படித்ததால் மற்ற ஆலிம்களிடம் நாம் படிக்கச் செல்வது நமக்கு தகுதி குறைவு என்றோ இவர்கள் எண்ணுவதாக தோன்றுகிறது.

மலேசியாவில் இருக்கும் இவர்களின் இமாம் (நாட்டுப்பெயர் ஒரு உதாரணத்துக்குத்தான்) இந்தியா வரும் போதுதான் பாடம் படிப்பார்கள். அவரை விட சிறந்த கல்வியாளர்கள் அல்லது அவருக்கு நிகரானவர்கள் பலர் இங்கிருந்தாலும் இவர்களிடம் மார்க்கத்தை அறிந்து கொள்ள விரும்புவதில்லை. இங்குள்ள ஆலிம்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் வாய்ப்பும் இருந்தும் கூட இவர்கள் அலட்சியம் செய்து புறக்கணிக்கிறார்கள் என்றால் இந்த அவலத்தை என்னவென்று சொல்வது?

இவர்கள் ஒரு பிரச்னைக்கு மார்க்கத்தீர்வு தெரிய வேண்டுமென்றால் மலேசியாவுக்கு போன் போட்டு தங்களுக்கு பித்து ஏற்பட்டுள்ள ஆலிமிடம் கேட்பார்கள். ஆனால் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே உள்ள அவரை விட பெரிய அறிஞரிடமோ அல்லது அவருக்கு நிகரான அறிஞரிடமோ கேட்க மாட்டார்கள். ஏனென்றால் தங்கள் இமாம் அளவு கல்வி உள்ளவர் இங்கிருப்பார் என்பதை இவர்களின் மனம் ஏற்க மறுக்கிறது.

இஸ்லாமிய உலகின் பெரிய உலமாக்களெல்லாம் இந்தியாவிலுள்ள உலமாக்களின் கல்விச்சிறப்பை போற்றி சிறப்பிக்கின்றனர். இந்நிலையில் இந்த கத்துக்குட்டிகள் தங்களின் பித்துக்குளிதனமான போக்கினால் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

இந்த போக்குதானே கண்மூடித்தனமாக தக்லீத் செளிணியும் கூட்டங்களை உருவாக்கியது! தவ்ஹீதின் எதார்த்தங்களை தெரிந்தவர்கள் தக்லீதின் எதார்த்தங்களை தெரியாமல் தடம் மாறலாமா?

ஒரு ஆலிமிடம் மார்க்கத்தை அறிந்து கொண்டோம் என்பதால் அவரை நேசிப்பதும் மதிப்பதும் இயல்பானது. மார்க்க அங்கீகாரம் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் மற்ற ஆலிம்கள் எல்லாம் அவரை விட மட்டம் தான் என்ற மனோநிலையில் இருப்பதும் அவருக்கு தவறேவராது என்பது போன்ற கருத்தை கொண்டிருப்பதும் தவறான போக்கு. எந்த சிக்கலான கேள்விக்கும் பிரச்சனைக்கும் அவர் சொல்வது தான் தீர்வு மற்றவர்கள் தீர்வு சொல்ல தகுதியற்றவர்கள் என்ற எண்ணத்துடன் நடப்பது மார்க்கத்துக்கு முரணான வழிகேடு!

தங்களின் கல்வியினாலும் திறமையினாலும் ஏற்பட்ட பெருமையில் வழிகெடுப்பவர்களாக மாறிய ஆலிம்கள் அப்படி மாறியதற்கு அவர்களின் தவறான போக்கு ஒரு காரணம் என்றால் அவர்களுக்கு அமைந்த இதுபோன்ற ரசிக குழுமங்கள் மற்றொரு காரணம்!

குர்ஆனையும் ஹதீஸையும் நல்ல முன்னோரின் வழிநின்று பின்பற்றுவதாக தங்களைப் பற்றி கருதிக் கொண்டிருப்பவர்கள் இதுபோன்ற தவறான போக்குகளிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்!

“என்னால் இயன்ற அளவு சீர்திருத்தத்தை தவிர வேறு எதையும் நான் நாடவில்லை; நான் உதவி பெறுவது அல்லாஹ்வை கொண்டல்லாது வேறில்லை. அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன். மேலும் அவனிடமே மீளுகிறேன்”
(அல்குர்ஆன் 11 : 88)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *