Featured Posts

அஷ்அரிய்யாக்களின் வலிந்துரையும் (تأويل) ஸலபுகளின் (إثبات) ஏற்றுக்கொள்ளலும்

அஷ்அரிய்யாக்களின் வலிந்துரையும் (تأويل) ஸலபுகளின் (إثبات) ஏற்றுக்கொள்ளலும்
அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் மீஸானி (Ph.D., – Reading)

தமிழுலகில் உள்ள பெரும்பாலான அரபு மத்ரஸாக்களில் இன்று இஸ்லாமிய அகீதாவாக அஷ்அரி கொள்கையே போதிக்கப்படுகிறது. ஆனால் அதிகமான மக்கள் அஷ்அரிய்யாக்கொள்கை என்றால் என்னவென்றே தெரியாமல்தான் தமது பிள்ளைகளை இதுபோன்ற கல்விக்கூடங்களில் சேர்க்கின்றனர். ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் தம்மை ஷாபி மத்கபைச் சேர்ந்த அஷ்அரிய்யாக்கள் என தம்மை அடையாளப்படுத்து பெருமைப்படுவதாகும். அதாவது தாம் அகீதாவில் அபுல் ஹஸன் அஷ்அரி அவர்களையும் பிக்ஹில் இமாம் ஷாபியையும் பின்பற்றுவதாகக் கூறி தமக்குத்தாமே முரண்பட்டுக் கொள்கின்றனர். இவர்களது இக்கருத்துப்படி இவர்களே நாம் இமாம் ஷாபியை அகீதாவில் பின்பற்றமாட்டோம் அதற்குப் பின்னால் உருவாக்கப்பட்ட அஷ்அரிய்யாக் கொள்கையையே பின்பற்றுவோம் எனக்கூற வருகின்றனர்.

இந்த அஷ்அரிய்யாக் கொள்கையின் மிகப்பாரததூரமான கொள்கைதான் அல்லாஹ்வின் பண்புகளுக்கு வலிந்துரை வழங்குவதாகும். அது மாத்திரமின்றி அப்பண்புகளை வந்ததுபோன்றே ஏற்றுக்கொள்ளும் ஸலபுகளைப் பார்த்து இவர்கள் அல்லாஹ்வுக்கு உருவம் கற்பிப்போர் என்பதாக சித்தரிக்கின்றனர். இவர்களது இந்த வலிந்துரையின் விபரீதம் என்ன, முன்வைக்கும் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை ஆகியவற்றை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

விபரீத வலிந்துரை

அஷ்அரிய்யாக்களின் வலிந்துரையின் மூலம் அல்லாஹ்வின் பண்புகள் (தஃதீல்) இல்லாமல் செய்யப்படுகின்றன அல்லது வீணடிக்கப்படுகின்றன. இதைத்தான் அறிஞர்களால் ஏகமனதாக வழிகேடர்கள் எனத்தீரமானிக்கப்பட்ட ஜஹமிய்யாக்களும் செய்தனர். உதாரணமாக ஜஹமிய்யாக்கள் அல்லாஹ் பேசவில்லை எனக் கூறினார்கள். அதே விடயம்தான் தஃவீல் என்ற பெயரில் அஷ்அரிகள் மூலமும் நடைபெறுகின்றது. உதாரணமாக, குர்ஆன், ஹதீஸில் இடம்பெறும் அல்லாஹ்வின் கை என்ற பண்பை அவர்கள் இது கையல்ல மாறாக (நிஃமத்) அருள் அல்லது (குத்ரத்) ஆற்றல் என்கின்றனர். அதே போன்று கண் என்ற பண்பையும் அது கண்ணல்ல மாறாக பார்வை என்கின்றனர்.
இப்பொழுது இவர்கள் நாம் தஃதீல் செய்யவில்லை தன்ஸீஹ்தான் செய்துள்ளோம் எனக்கூறி தப்புவதற்கு முயற்சிப்பார்கள். ஆனால் அது தவறாகும். ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வுடைய பண்புகளான கண், கை போன்ற பண்புகளை தம்மையறியாமலே இல்லாமல் செய்துவிட்டனர். (தன்ஸீஹ்) பரிசுத்தப்படுத்துவது என்றால் பண்பு இருக்கின்றது ஆனால் அதற்கு உவமை சொல்லமுடியாது அதன் அமைப்பை அல்லாஹ்வே அறிந்தவன் எனக்கூறுவதே தவிர அவ்வாறு ஒரு பண்புக்கு வலிந்துரை வழங்குவதல்ல. மறுக்கும் வேலையான தஃதீலைத்தான், மாற்றுக்கருத்து வழங்குகிறோம் (தஃவீல்) என்ற பெயரில் இவர்கள் செய்துகொண்டுள்ளனர்.

எனவேதான் ஜஹமிய்யாக்களின் அல்லாஹ்வின் பண்புகளை மறுக்கும் செயலுக்கும், அஷ்அரிய்யாக்களின் வலிந்துரைக்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் கிடையாது.

மேலும் இவர்கள் மாற்றுவிளக்கமாகக் கூறும் பண்புகள் வேறு ஆதாரங்களின் மூலம் வந்துள்ளன. அந்தப் பண்புகள்தான் இவர்கள் தஃவீல் செய்யும் பண்புகளின் மூலமாகவும் நாடப்பட்டிருந்தால் அதே வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்தியிருப்பான். இவர்களது இந்த செயற்பாட்டின் மூலம் அல்லாஹ்வின் இரு பண்புகளை ஒரே பண்பாக ஆக்கிவிட்டனர். கை, அருள்புரிதல் என்ற இரண்டு பண்புகள் இருக்கும்போது கை என்பதற்கும் அருள் என்ற கருத்தை வழங்குவதன் மூலம் இதுதான் நிகழ்கின்றது என்பதை இவர்கள் சிந்திக்க மறந்துவிடுகின்றனர். அதே நேரத்தில் தஜ்ஸீமை ஏற்படுத்தாத தெளிவான வார்த்தையை அல்லாஹ்வுக்கு பயன்படுத்தத் தெரியாதா? என்ற கேள்வியும் எழுகின்றது.

எனவே அல்லாஹ்வுடைய சில பண்புகளின் விடயத்தில் அஷ்அரிய்யாக்கள் அஹ்லுஸ் ஸுன்னாவாகக் கணிக்கப்படமாட்டார்கள் என்பதே சரியான முடிவாகும்.

இவர்கள் (தஃவீல்) மாற்றுவிளக்கம் எனும் பெயரில் செய்பவைகள் ஜஹமிய்யாக்கள் செய்தவேலைதான் என்பதை இமாம் திர்மிதி ரஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:
سنن الترمذي ت بشار (2/ 44) فتأولت الجهمية هذه الآيات ففسروها على غير ما فسر أهل العلم، وقالوا: إن الله لم يخلق آدم بيده، وقالوا: إن معنى اليد هاهنا القوة

ஜஹமிய்யாக்கள்தான் அல்லாஹ் ஆதம் அலை அவர்களை தனது கையினால் படைக்கவில்லை என்றும், இந்த இடத்தில் யத் என்பதற்கு (குவ்வத்) ஆற்றல் என்ற கருத்தையே வழங்கவேண்டும் எனவும் கூறுகின்றனர். திர்மிதி 2/ 44

மேற்கூறிய இமாம் திர்மிதி அவர்களது கருத்திலிருந்து மூன்று விடயங்கள் நமக்குப் புலப்படுகின்றன.

  1. அல்லாஹ்வின் பண்புகளைத் தஃவீல் செய்வது அவற்றை மறுப்பதற்குச் சமனாகும்.
  2. இவ்வாறு தஃவீல் செய்வது ஸலபுகளால் காபிர்கள் என அழைக்கப்பட்ட வழிகெட்ட ஜஹமிய்யாக்களின் கொள்கையாகும்.
  3. இமாம் திர்மிதியின் கூற்றிலிருந்து இன்னுமொரு முக்கிய விடயத்தையும் புரிந்துகொள்ளமுடியும். அல்லாஹ்வின் பண்புகளுடைய வசனங்களுக்கு இரண்டுவிதமான தப்ஸீர்கள் உள்ளன. ஒன்று தவறான ஜஹமிய்யாக்களின் விளக்கம் இரண்டாவது அறிஞர்களின் விளக்கம் இதனடிப்படையில் எங்கெல்லாம் ஸலபுகளின் வார்த்தையில் அல்லாஹ்வின் பண்புகளை தப்ஸீர் செய்யாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இடம்பெற்றுள்ளதோ அவை அனைத்தும் இந்த ஜஹமிய்யாக்களின் தப்ஸீரையே குறிக்கும். மாறாக அதன் வெளிரங்கமான கருத்தை வழங்குவதைக் குறிக்காது. ஏனெனில் பல இடங்களில் நேரடியாகவே அவர்கள் விளக்கம் வழங்கியுள்ளனர். எனவே தப்ஸீர் செய்யக்கூடாது என்பது தப்வீழை ஒரு நாளும் குறிக்கமாட்டாது என்பதை தெள்ளத்தெளிவாக நிரூபித்துள்ளது.

எனவே தஃவீலையும் தப்வீழையும் நியாயப்படுத்துவோர் இதன்பிறகாவது அவற்றிலிருந்து தவிர்ந்துகொள்வார்கள் என ஆதரவு வைக்கிறோம். இது வரைக்கும் தமது இச்செயலினால் ஏற்படும் விபரீதத்தை உணராமல் செய்ததற்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்குவான். தெளிவுபடுத்தப்பட்ட பின்பும் அதே கொள்கையில் பிடிவாதமாக இருப்போர் அல்லாஹ்வைப் பயந்துகொள்ளட்டும்.

அடுத்து ஸலபுகளின் இஸ்பாத் إثبات என்பது குர்ஆன் ஹதீஸில் இடம்பெற்றுள்ள பண்புகளை அவற்றுக்கு உதாரணம் கற்பிக்காது அல்லாஹ்வின் தகுதிக்கு ஏற்றவாறு ஏற்றுக்கொள்வதாகும். இது தஜ்ஸீம் என்ற தவறான கொள்கையைச் சார்ந்ததா என்றால் ஒருநாளும் இல்லை என்பதே பதிலாகும். ஏனெனில் அல்லாஹ்வின் பண்புகளை வந்தவாறே ஏற்றுக்கொள்வது தஷ்பீஹ் அல்ல. மாறாக அது படைப்பினங்களுக்கு நிகரான பண்பு என வர்ணிப்பதே தஷ்பீஹாகும்.

இதனையே இமாம் திர்மிதீ அவர்களும் எடுத்தெழுதியுள்ளார்கள். திர்மிதி 2/ 44

وقال إسحاق بن إبراهيم: إنما يكون التشبيه إذا قال: يد كيد، أو مثل يد، أو سمع كسمع، أو مثل سمع، فإذا قال: سمع كسمع، أو مثل سمع، فهذا التشبيه

سنن الترمذي ت بشار  2/44

எனவே இவ்வாறு அல்லாஹ்வின் பண்புகளை படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாக்காமல் ஏற்றுக்கொள்ளும் ஸலபுகளைப் பார்த்து முஷப்பிஹா முஜஸ்ஸிமா என வசைபாடுவது வெறும் அபாண்டமும் அநியாயமுமாகும். மறுமைநாளையில் அல்லாஹ்வின் முன் நிற்கவேண்டி வருமே என்ற அச்சமுள்ள எவரும் இவ்வாறான தவறை இழைக்கமுடியாது.

அல்லாஹ்வின் பண்புகளை அதனது அடிப்படை ஹகீகத் கருத்திலேயே ஏற்றுக்கொள்வது தஜ்ஸீம் என்பதாக இருந்தால், தஜ்ஸீமிலிருந்து அஷ்அரிய்யாக்களும் தப்பமுடியாது. ஏனெனில் அவர்களும் அல்லாஹ்வின் பண்புகளான அல்லாஹ்வின் உள்ளமை, பார்வை, கேள்வி وجود سمع بصر போன்ற பண்புகள் ஹகீகத் ஆன பண்புகளே என ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் புலப்படுவது யாதெனில் அல்லாஹ்வின் பண்புகளை (இஸ்பாத்) ஏற்றுக்கொள்வதன் மூலமோ அதற்கு (ஹகீகத்) அடிப்படைக் கருத்தை வழங்குவதன் மூலமோ தஜ்ஸீம் ஏற்படமாட்டாது. மாறாக குறித்த அல்லாஹ்வின் பண்புகளை படைப்பினங்களுடன் ஒப்புநோக்குவதன் மூலமாகவே தஜ்ஸீம் ஏற்படும். எனவே ஸலபுகளை முஜஸ்ஸிமாக்கள் என வர்ணிப்பது மக்களைச் சத்தியத்தை விட்டும் திருப்புவதற்கான தந்திரமே தவிர வேறில்லை. அவ்வாறு சொல்வோரிடம் நாம் மேலே கூறியது போன்று, அல்லாஹ்வுக்கு எந்த பண்புகளும் ஹகீகத்தாக இருப்பதாக நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லையா? எனக்கேட்டால் வாயடைத்துப் போவார்கள். அல்லது வாயைத் திறந்தால் மாட்டிக்கொள்வார்கள்.

தெளிவும் குழப்பமும்

குழப்பமற்ற சரியான அகீதாவின் பக்கம் நமக்கு வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். ஏனைய கொள்கைகள் விளங்கவோ நடைமுறைப்படுத்தவோ முடியாது என்பதை பின்வரும் விடயங்களை வைத்து நாம் தீர்மானித்துவிடலாம்.

  1. பல குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் மொழிபெயர்க்க முடியாமை.
  2. அஷ்அரிகளுக்கு மத்தியிலுள்ள கொள்கை முரண்பாடுகள்.
  3. அஷ்அரிய்யாக் கொள்கையை இதுவரைக்கும் முழுமையாக தெளிவுபடுத்தாமை. அவற்றிலுள்ள பல விடயங்களை மூடி மறைக்கின்றமை
    அது மாத்திரமின்றி குறிப்பிட்ட கருத்துடைய உலமாக்களின் நிலைப்பாடுகளும் கூட நிலையானதாக இருக்கவில்லை. சிலருடைய கருத்துக்கள் முரணாகக் காணப்படுகின்றன. மற்றும் சிலர் தமது கருத்துக்களிலிருந்து வாபஸ்பெற்றுள்ளனர்.

உதாரணமாக இவர்கள் பின்பற்றும் இமாம் அபுல் ஹஸன் அஷ்அரி அவர்களே அல்லாஹ்வின் பண்புகளாக கை (இஸ்திவா) அர்ஷின் மீது உயர்தல் போன்றவற்றை தஃவீல் செய்வது மு.தஸிலாக் கொள்கை என்பதாகவும் அவர்களது முக்கிய அறிஞர்களான இமாமுல் ஹரமைன் ஜுவைனி இமாம் ராஸி போன்றோர் தமது இறுதிக்காலத்தில் இவ்வளவு காலமும் தாம் ஈடுபட்ட தத்துவக்கலை தடைசெய்யப்பட்டது. மனிதனது கொள்கையைப் பாதிக்கத்தக்கது என்றெல்லாம் கூறி தமது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். காரணம் என்னவென்றால் கொள்கையை உருவாக்கியதன் பின்னால்தான் ஆதாரம் தேடினர். எதிர்பாராதவிதமாக தமது சித்தாந்தை உடைத்தெறியும் வகையில் ஆதாரங்களைப் பெற்றுக்கொண்ட பொழுது செய்வதறியாது தமது கருத்துக்களை மாற்றிக்கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

அதனால்தான் அவைகள் ஆஹாத் எனக் கூறி அவற்றை அகீதாவிற்கு ஆதாரமாக எடுக்கமுடியாது என அஷ்அரி கொள்கையைச் சார்நதோர் மறுக்கின்றனர். ஆனால் அக்கொள்கையை இவர்கள் தமிழுலகில் கூறுவதற்குத் தயங்குகின்றனர். அவ்வாறு கூறினால் தமது வழிகேடு அதாவது முஃதஸிலாவின் கொள்கையைத்தான் இவர்கள் பின்பற்றுகின்றனர் என்பது நிரூபனமாகிவிடும் என்பதற்காக அடக்கிவாசிக்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் சிலர் வழிச்செய்திகளின் மூலம் வரும் ஹதீஸ்கள் நம்பிக்கையான அறிவிப்பாளர் வரிசையுடனும் புஹாரி முஸ்லிம் போன்ற ஆதாரபூர்வமான நூல்களில் இடம்பெற்றிருந்தாலும் அவற்றைக் கொண்டு அகீதாவைத் தீர்மானிக்கக் கூடாது என்பதே அஷ்அரிய்யாக் கொள்கையாகும். ஆனாலும் பொதுத்தளங்களில் அவற்றைச் சொல்வதற்குத் தயங்குகின்றனர்.

பொதுத்தளத்தில் சொல்வதற்கு வெட்கப்படும் ஒரு கொள்கையை எவ்வாறுதான் ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்களோ?

சுருக்கமாகச் சொல்வதானால் தாம் வணங்கும் றப்பைப் பற்றி தெளிவான அறிவின்றியே தமது மூதாதையர்களின் கொள்கை என்பதற்காகவும், ஸலபிகளின் மீதுள்ள வெறுப்பினாலும் இக்கொள்கையைப் பின்பற்றிக்கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *