முஹம்மது நபி ஒரு ஆன்மீக தலைவராக மட்டும் இருந்துவிட்டால் அவரின் அடக்கமான பண்பிற்கு ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஒரு வல்லரசின் அதிபதியாக இருந்துக்கொண்டு மக்கள் பணத்தில் பகட்டு வாழ்க்கை வாழவில்லை என்பதுதான் இங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒரு விஷயமாகும்.
வியக்க வைக்கும் புரட்சிப் பிரகடனம்
நபிகள் நாயகத்தின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் என்னும் பொதுநிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபிகள் நாயகத்தின் பேரர் அவற்றிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார். இதை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து துப்பு துப்பு என்று தமது பேரணிடம் கூறி துப்பச் செய்தார்கள். அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை நாம் ஸகாத் (பொதுநிதி) பொருளைச் சாப்பிடக்கூடாது (ஹராம்) என்பது உமக்குத் தெரியாதா? என்றும் பேரனிடம் கேட்டவர்தான் முஹம்மது நபி அவர்கள் (1)
எனது வாரிசு தங்க காசுகளுக்கு, வாரிசாகமாட்டார்கள். என் மனைவியரின் குடும்பச் செலவுக்குப் பின்பு, எனது பணியாளரின் ஊதியத்துக்குப் பின்பு நான் விட்டுச் சென்றவை பொது நிதியைச் சேரும். (எனது வாரிசுகளைச் சேராது என்று அறிவித்துச் சென்றார்கள்.) (1)
அதனால்தான் முஹம்மது நபிக்கு அடுத்து வந்த ஆட்சியாளர் கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்கள், முஹம்மது நபியின் சொத்து ஒன்றை கேட்க வந்த முஹம்மது நபியின் மகள் ஃபாத்திமா(ரலி) அவர்களிடம்
“எனக்கு யாரும் வாரிசாக முடியாது. நான் விட்டுச் சென்ற யாவும் பொது உடமையாகும்” என்று உங்கள் தந்தை முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள். எனவே அதை உங்களிடம் தர இயலாது நபிகள் நாயகத்தின் மகளாகிய நீங்கள் எனது எல்லா உறவினர்களை விடவும் விருப்பமானவராக இருக்கிறீர்கள் ஆயினும் நான் தர மறுப்பதற்கு காரணம் நபிகள் நாயகத்தின் கட்டளை தான் என்று கூறிமறுத்து விட்டார்கள். (1)
பொது நிதியை பேணியவர்
ஏழைகளுக்கு தர்மம் கொடுப்பதற்காக வந்த பொது பணத்தைக்கூட அவர்களிடத்தில் சேர்ப்பதற்கு தாமத படுத்தாத மனிதர்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தொழுகையை நடத்தி விட்டு வேகமாக வெளியேறினார்கள். சற்று நேரத்தில் பள்ளிவாசலுக்கத் திரும்பி வந்துவிட்டார்கள். ஒரு நாளும் இல்லாமல் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வேகமாகப் புறப்பட்டுச் சென்றதையும், உடனேயே திரும்பி வந்ததையும் நபித்தோழர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். தான் அவசரமாகச் சென்று திரும்பியதன் காரணம், “அரசுக் கருவூலத்துக்குச் சொந்தமான வெள்ளித்துண்டு என் வீட்டில் இருந்தது. அதை ஏழைகளுக்கு விநியோகம் செய்யுமாறு குடும்பத்தாரிடம் தெரிவித்து விட்டு வந்தேன்” என்று தெரிவித்தார்கள். (1)
குடிமக்களின் உரிமையை பேணியவர்
நாங்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அவர்கள் எழுந்ததும் நாங்கள் எழுந்தோம். அவர்கள் பள்ளிவாசலின் மையப்பகுதிக்கு வந்த போது அவர்களைக் கண்ட ஒருவர் அவர்களின் பின்புறமிருந்து மேலாடையை இழுத்தார். அவர்களின் மேலாடை முரட்டுத் துணியாக இருந்ததால் அவர்களின் பிடரி சிவந்துவிட்டது. முஹம்மதே எனது இரு ஒட்டகங்கள் நிறையப் பொருட்களை எற்றி அனுப்புவீராக! உமது செல்வத்திலிருந்தோ உமது தகப்பனாரின் செல்வத்தில் இருந்தோ நீர் ஏற்றி அனுப்பப் போவதில்லை என்று அந்த மனிதர் கூறினார். இழுத்துக் கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களை ஏற்ற மாட்டேன் என்று முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள். நான் விடமாட்டேன் என்று அவர் கூறினார். இவ்வாறு மூன்று முறையும் விடமாட்டேன் என்றார். அந்தக் கிராமவாசியின் கூற்றை நாங்கள் செவியுற்றபோது அவரை நோக்கி (தாக்குவதற்கு) விரைந்தோம். நான் அனுமதிக்கும் வரை தமது இடத்தை விட்டு யாரும் நகரக்கூடாது என்று முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள். பின்னர் கூட்டத்திலிருந்த ஒருவரை நோக்கி இவரது ஒர ஒட்டகத்தில் கோதுமையையும் இன்னொரு ஒட்டகத்தில் பேரீச்சம் பழத்தையும் ஏற்றி அனுப்புவீராக என்றார்கள். பின்னர் மக்களை நோக்கி நீங்கள் புறப்படுங்கள்! என்றார்கள்.(6)
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஹுனைன் எனும் போர்க்களத்திலிருந்து மக்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானும் இருந்தேன் நபிகள் நாயகத்தை அறிந்து கொண்ட மக்கள் (அவர்கள் மன்னராக இருந்ததால்) அவர்களிடம் தமது தேவைகளைக் கேட்கலானார்கள். கூட்டத்தால் நெருக்கித் தள்ளியதால் அவர்கள் முள் மரத்தில் சாய்ந்தார்கள். அவர்களின் மேலாடை முள்ளில் சிக்கிக் கொண்டது. எனது மேலாடையை எடுத்துத் தாருங்கள் என்று கூறினார்கள். இம்மரங்களின் உண்ணிகையளவு என்னிடம் ஒட்டகங்கள் இருந்தால் அவை அனைத்தையும் உங்களுக்கு நான் பங்கிட்டிருப்பேன். என்னைக் கஞ்சனாக நீங்கள் காணமாட்டீர்கள். எனவும் கூறினார்கள். (1)
கடன் கொடுத்தவனின் உரிமைக்கு மதிப்பளித்தவர்
முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்குக் கடன் கொடுத்திருந்த ஒரு மனிதர் அதை வசூலிப்பதற்காக முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது கடுமையான முறையில் அவர் நடந்து கொண்டார். நபிகள் நாயகத்தின் தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அப்போது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டு விடுங்கள்! ஏனெனில் கடன் கொடுத்தவருக்கு (கடுமையாகப்) பேசும் உரிமை உள்ளது எனக் கூறினார்கள். அவர்கள் மேலும் தம் தோழர்களிடம் அதே வயதுடைய ஒட்டகத்தை இவருக்குக் கொடுங்கள் எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அதை விடக் கூடுதல் வயதுடைய ஒட்டகம் தான் உள்ளது என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அதையே அவருக்குக் கொடுங்கள் ஏனெனில் அழகிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவராவார் எனக் கூறினார்கள். (1)
மற்றவர்களின் சுமையை தன்மீது ஏற்றிக்கொண்டவர்
ஒரு மனிதர் கடன் பட்ட நிலையில் (மற்றவர் பாதிக்கப்பட்ட நிலையில்) இறைவனை சேறுவதை முஹம்மது நபி அவர்கள் விரும்பவில்லை. அக்கடனை நண்பர்கள் அடைக்க வேண்டும் அல்லது தான் அடைக்கவேண்டும் என்று விரும்பினார்கள்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால் அவரது உடல் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்வதற்காக (ஜனாஸா தொழுகை நடத்துவதற்காக) அவர்களிடம் கொண்டு வரப்படும் இவர் யாருக்கேனும் கடன் தர வேண்டியுள்ளதா என்று அப்போது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கேட்பார்கள். ஆம்! எனக் கூறப்பட்டால் கடனை நிறைவெற்றிட எதையாவது விட்டுச் சென்றிருக்கிறாரா? எனக் கேட்பார்கள் ஆம்! எனக் கூறப்பட்டால் உங்கள் தோழருக்காக நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுஙகள் என்று கூறி விடுவார்கள். அவரது கடனுக்கு யாரேனும் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களுக்குப் பல வெற்றிகளை வழங்கிய போது இறை நம்பிக்கையாளர்களைப் பொறுத்த வரை அவர்கள் விஷயத்தில் அவர்களை விட நானே அதிகம் பொறுப்பாளியாவேன். எனவே யாரேனும் கடன் வாங்கிய நிலையில் மரணித்தால் அந்தக் கடனை அடைப்பது என் பொறுப்பு. யாரேனும் சொத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசைச் சேரும் என்று கூறலானார்கள். (1)
கடமையை உணர்ந்த மாமன்னர்
என்னை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் எமன் நாட்டுக்கு (Yemen) ஆளுநராக அனுப்பினார்கள். நான் எமன் நோக்கிப் புறப்படும் போது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் என்னுடன் ஊர் எல்லை வரை வந்தார்கள். நான் வாகனத்தில் அமர்ந்திருக்க முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாகனத்திற்குக் கீழே தரையில் கூடவே என்னுடன் நடந்து வந்தார்கள். விடைபெறும் போது முஆதே! இவ்வருடத்திற்குப் பின் அநேகமாக என்னைச் சந்திக்கமாட்டீர்! அல்லது எனது பள்ளிவாசல் அல்லது அடக்கத்தலத்தைத் தான் சந்திப்பீர் எனக் கூறினார்கள். இதைக் கேட்டு நான் அழலானேன். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் முகத்தைத் திருப்பி மதீனாவை நோக்கி நடந்தார்கள் என்று முஆத் பின் ஜபல்(ரலி) குறிப்பிடுகிறார்கள் (5)
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது கரத்தால் கட்டிய பள்ளிவாசலில் தொழுகையின் போது முன்னோக்கும் சுவற்றில் யாரோ மூக்குச் சளியை சிந்தியிருந்தனர். இதை கண்ட முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தாமே அதை நோக்கிச் சென்று தமது கரத்தால் அதைச் சுத்தம் செய்தார்கள். (1)
தனக்கென்று தனித்தன்மை பார்க்காத ஆட்சியாளர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டபோது குடி தண்ணீர் விநியோகிக்கப்படும் தண்ணீர்ப் பந்தலுக்கு வந்தார்கள். குடிக்க தண்ணீர் கேட்டார்கள். நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ் தண்ணீர் பந்தலின் பொறுப்பாளராக இருந்தார் அவர் தமது இளைய மகன் ஃபழ்லு என்பவரை அழைத்து வீட்டிற்குச் சென்று உன் தாயாரிடம் நபிகள் நாயகத்துக்காக குடிதண்ணீர் வாங்கி வா என்று கூறினார். உடனே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இந்தத் தண்ணீரையே தாருங்கள் எனக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதில் மக்கள் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரே என்று அப்பாஸ் கூறினார். அதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பரவாயில்லை! இதனையே எனக்குக் குடிக்கத் தாருங்கள் எனக் கேட்டு அந்தத் தண்ணீரைக் குடித்தார்கள்.
பின்னர் புனிதமான கிணறாகக் கருதப்படும் ஸம்ஸம் கிணற்றுக்கு வந்தார்கள். அங்கே சிலர் அந்தக் கிணற்று நீரை மக்களுக்கு வழங்கிக் கொண்டும். அது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நோக்கி இந்தப் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்! நீங்கள் சிறப்பான பணியையே செய்கிறீர்கள். நானும் இப்பணியைச் செய்வதால் நீங்கள் எனக்காக ஒதுங்கிக் கொள்வீர்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் நானும் கிணற்றில் இறங்கி இந்தத் தோளில் தண்ணீர் சுமந்து மக்களுக்கு விநியோகம் செய்திருப்பேன் என்று கூறினார்கள். (1)
குடைப் பிடிக்கச் சொல்லாத தலைவர்
முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் இந்த ஆட்டைச் சமையுங்கள் என்று கூறினார்கள். நான்கு பேர் சுமக்கக் கூடிய பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அவர்களுடன் அமர்ந்து கொண்டார். கூட்டம் அதிகமாகச் சேர்ந்ததால் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் என்னை அடக்குமுறை செய்பவனாகவும், மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மைமிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான். என்று விடையளித்தார்கள். (4)
ஒரு மனிதர் முதன் முதலாக நபிகள் நாயகத்தைச் சந்திக்க வந்தார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டுதான் மக்கள் நிற்பார்கள். நபிகள் நாயகத்தையும் அதுபோல் கருதிக்கொண்டு உடல் நடுங்கிட வந்தார். சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைப் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான் என்று அவரிடம் கூறி சகஜ நிலைக்குக் கொண்டுவந்தார்கள். (7)
ஒரு முறை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்களின் தலை மீது மட்டும் நிழல் படுவதைக் கண்டார்கள். தலையை உயர்த்திப் பார்த்த போது ஒரு துணிக்குடையால் அவர்களுக்கு நிழல் தரப்படுவதைக் கண்டார்கள். விடுங்கள் எனக்கூறி அந்தத்துணியை வாங்கி மடக்கி வைத்தார்கள். நானும் உங்களைப் போன்ற மனிதன்தான் எனவும் கூறினார்கள். (2)
போலி கவுரவம் பார்க்காத தலைவர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நம்மோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பார்கள் என்பதை நாம் அறியமாட்டோம் எனவே அவர்கள் நம்மால் சிரமப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அப்பாஸ்(ரலி) அவர்கள் மக்களிடம் கூறினார்கள். பின்னர் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு நிழல் தரும் கூடாரத்தைத் தனியாக நாங்கள் அமைத்துத் தருகிறோமே என்று கேட்டார்கள் அதற்கு நபிகள் நாயம்(ஸல்) அவர்கள் மக்கள் என் மேலாடையைப் பிடித்து இழுத்த நிலையிலும் எனது பின்னங்காலை மிதித்த நிலையிலும் அவர்களும் கலந்து வாழவே நான் விரும்புகிறேன். மரணிக்கும் வரை இப்படித்தான் இருப்பேன் எனக் கூறினார்கள். (3)
வீட்டில் நமது செருப்பைத் தாமே தைப்பார்கள் தமது ஆடையின் கிழிசலையும் தாமே தைப்பார்கள் வீட்டு வேலைகளையும் செய்வார்கள். (5)
மக்களோடு மக்களாக
அகழ் யுத்தத்தின் போது அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள் மண் சுமந்தார்கள் அவர்களின் வயிற்றை மண் மறைத்தது. (1)
அவர்கள் மதீனா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டியபோது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள். (1)
ஒரு இளைஞர் அறக்கப்பட்ட ஆட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஓதுங்கிக் கொள்! உனக்கு எப்படி உரிப்பது என்று காட்டித் தருகிறேன் என்றார்கள் தமது கையை அக்குள் வரை தோலுக்கும் இறைச்சிக்குமிடையே விட்டு உரித்தார்கள். (4)
அடக்கமான அரசர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது பத்தாண்டு கால ஆட்சியில் தமது பதவிக்காக எந்த மரியாதையையும் புகழையும் மக்களிடம் எதிர்பார்க்கவில்லை இப்பதவியை அடைவதற்கு முன்னர் அவர்களின் நிலை எதுவோ அதுவே அவர்கள் மிகப் பெரிய பதவியைப் பெற்ற பிறகும் அவர்களின் நிலையாக இருந்தது. மக்களிடத்தில் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்து விட்ட நேரத்தில்கூட, மக்காவாசிகளின் ஆடுகளை அற்பமான கூலிக்காக மேய்த்தவன் தான் நான் என்பதை மக்களிடம் அடிக்கடி அவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். (1)
நபிகள் நாயகம் ஸல்) அவர்கள் சாய்ந்து கொண்டு சாப்பிட்டதையோ அவர்களுக்குப் பின்னால் இரண்டு பேர் அடியொற்றி நடப்பதையோ எவரும் பார்த்ததில்லை என்று நபிகள் நாயகத்தின் உற்ற தோழர் அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) அவர்கள் கூறிகிறார்கள். (4)
மாறுபட்ட ஆன்மீகத் தலைவர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தனக்கு தெய்வத்தன்மை இருப்பதாக வணக்க வழிபாடு விஷயங்களில்கூட கூறிக்கொண்டது கிடையாது. அதனால்தான் முஸ்லிம்கள் அவரை, இறைவனிடமிருந்து ஜிப்ரீல் என்னும் வானவ தூதர் மூலம் வரும் இறைச்செய்தியை மக்களுக்கு தெரிவித்து அதன்படி வாழ்ந்து காட்டும் ஒரு மாமனிதராகவே பார்க்கிறார்கள்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள் அப்போது வழக்கமாக தொழுவதை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தொழுதார்கள் தொழுது முடிந்தவுடன் மக்கள் சுட்டிக் காட்டினார்கள். அப்போது முஹம்மது நபி(ஸல்) அவாகள் நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நீங்கள் மறப்பதைப் போலவே நானும் மறப்பேன் எனவே நான் மறந்து விட்டால் எனக்கு நினைவூட்டுங்கள் என்று குறிப்பிட்டார்கள். (1)
ஒரு நாள் வைகறைத் தொழுகையை நிறைவேற்ற முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வந்தனர் அனைவரும் வரிசையில் நின்றனர் தொழுகைக்கு தலைமை தாங்கிட நபிகள் நாயகமும் நின்றனர். அப்போதுதான் தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பின் குளிக்கவில்லை என்பது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. உடனே மக்களிடம் அப்படியே நில்லுங்கள் எனக் கூறி விட்டு சென்றார்கள். குளித்து விட்டு தலையில் தண்ணீர் சொட்ட வந்து தொழுகையை நடத்தினார்கள். (1)
தன்விஷயத்திலும் பிறரின் சுயமரியாதையை பேணச் செய்தவர்
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன் அங்குள்ளவர்கள் தமது தலைவருக்கு ஸஜ்தா (சிரம் பணிந்து கும்பிடுதல்) செய்ததைப் பார்த்தேன் இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள் என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் வந்ததும் நான் ஹியரா என்னும் ஊரக்குச் சென்றேன் மக்கள் தமது தலைவருக்கு சிரம் பணிவதைக் கண்டேன் நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர் என்று கூறினேன். அதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் (எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கம் சிரம் பணிவீரோ எனக் கேட்டார்கள் மாட்டேன் என்று நான் கூறினேன் அதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆம் அவ்வாறு செய்யக் கூடாது என்றார்கள். (4)
எனது அடக்கத்தலத்தை வணங்கி விடாதீர்கள்! (5) எனது அடக்கத்தலத்தில் எந்த நினைவு விழாவும் நடத்தாதீர்கள். (4) என்று சொல்லிச் சென்ற ஒரே ஆன்மீக தலைவரும் இன்றுவரை கடவுளாக மதிக்காமல் ஒரு மாமனிதராகவும் ஆன்மீக தலைவராகவும் நினைக்கப்படுபவர்தான் முஹம்மது(ஸல்) அவர்கள்.
நபிகள் நாயகம் ஸல்) அவர்கள் நோய் வாய்ப்பட்டிருந்து போது அவர்களிடம் நான் சென்றேன். அவர்களுக்கருகில் கட்டுப் போடுவதற்குரிய சிவப்புத் துணி இருந்தது என் பெரிய தந்தை மகனே! இதை என் தலையில் கட்டுவீராக என்றார்கள் அதை எடுத்து அவர்களின் தலையில் கட்டினேன் பின்னர் என் மீது அவர்கள் சாய்ந்து கொள்ள நாங்கள் பள்ளிவாசலுக்குள் நுழைந்தோம் (நபிகள் நாயகம் ஸல்) மரணப்படுக்கையில் இருந்ததால் மக்கள் பெருமளவு அங்கே குழமியிருந்தனர்) மக்களே நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான் உங்களை விட்டுப் பிரியும் நேரம் நெருங்கி விடலாம் எனவே உங்களில் எவருடைய மானத்திற்காவது எவருடைய முடிக்காவது எருடைய உடம்புக்காவது எவருடைய செல்வத்திற்காவது நான் பங்கம் விளைவித்திருந்தால் இதோ இந்த முஹம்மதிடம் கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! இதோ முஹம்மதின் மானம் முஹம்மதின் முடி முஹம்மதின் உடல் முஹம்மதின் செல்வம்! பாதிக்கப்பட்டவர் எழுந்து கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! அவ்வாறு செய்தால் முஹம்மதின் வெறுப்புக்கும் பகைமைக்கும் ஆளாக நேரிடுமா என்று நான் அஞ்சுகிறேன் என்று உங்களில் எவரும் கூறவேண்டாம் அறிந்து கொள்க! நிச்சயமாக பகைமையும் வெறுப்பும் எனது சுபாவத்திலேயே இல்லாததாகும் அவை எனது பண்பிலும் இல்லாததாகும் என்று கூறிவிட்டு திரும்பினார்கள்.
மறுநாளும் இது போன்றே பள்ளிவாசலுக்கு வந்து இவ்வாறே பிரகடனம் செய்தார்கள் யார் என்னிடம் கணக்குத் தீர்த்துக் கொள்கிறீர்களோ அவர்கள் தாம் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் என்பதையும் சேர்த்துக் கூறினார்கள் என்று ஃபழ்லு(ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (8)
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறக்கும்போது தன் உணவுக்காக தனது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடகுவைத்துவிட்டு மீட்காமலேயேதான் இறந்து போனார்கள்.
முப்பது படி கோதுமைக்காக முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள் என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (1)
(தொடரும்..)
குறிப்பு நூல்கள்:
(1) புகாரி
(2) தப்ரானி
(3) பஸ்ஸார்
(4) அபூதாவூத்
(5) அஹமத்
(6) நஸயீ
(7) ஹாக்கீம்
(8) முஸ்னத் அபீயஃலா
ஒரு வல்லரசின் அதிபதியாக இருந்துக்கொண்டு மக்கள் பணத்தில் பகட்டு வாழ்க்கை வாழவில்லை–அவுரங்கசீப்பும் இது போன்ற எளிய வாழ்க்கை வாழ்ந்ததாகச் சொல்வதுண்டு….
Dharumi,
கற்றுக்கொடுத்த ஆசிரியரைப்பற்றி எழுதியிருந்தேன். நீங்கள் ஆசிரியரின் மாணவரைப்பற்றி எழுதியிருந்தீர்கள்.
உலகத்தில் ஒவ்வொருவரும் சில கொள்கைகளை, வழிகளை(மார்க்கம்), நல்ல கருத்துக்களை தனது வாழ்க்கையில் பின்பற்றுவதுண்டு. அவ்வாறு பின்பற்றும்போது ஏற்றுக்கொண்ட கொள்கைகளை செயல்படுத்த முயற்சி செய்வார்கள்.
இஸ்லாமிய மார்க்கத்திற்கு இறுதி தூதராக அனுப்பப்பட்டவர்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். முஸ்லிம்கள் முஹம்மது நபியை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அதில் ஒருவர்தான் நீங்கள் குறிப்பிட்ட மன்னர் அவுரங்கசீப்.
மன்னர் அவுரங்கசீப், எளியவராக வாழ்ந்தார் என்று நானும் படித்திருக்கிறேன். இது போன்ற எத்தனையோ பேர்களிடம் நற்பண்புகளை தோற்றவித்ததுதான் முஹம்மது நபியின் அறிவுரைகளும் நடைமுறை வாழ்க்கையுமாகும்.
கெட்ட மாணவர்களின் செயல்பாட்டை வைத்து (அல்லது அவர்களின் குறிப்பிட்ட செயல்களின் தவறுகளை வைத்து) ஆசிரியருக்கு கெட்ட சான்றிதழ் கொடுப்பதும், வரலாற்று புரட்டுகளை எழுதி இஸ்லாத்திற்கு கெட்ட சான்றிதழ் வழங்க முயற்சி செய்வதும்தான் இன்றைக்கு பலரின் பணியாக இருக்கிறது. அதற்கு எதிரான ஒரு சிறு முயற்சிதான் இந்தொடர்.
உங்களின் தொடர் வாசிப்புக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.