-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர்-
நாம் தொழும் போது நம்மை ஆடையால் அலங்கரித்துக் கொள்ள வேண்டும். நாம் தொழுகையில் நிற்கும் போது நமது இறைவனுக்கு முன்னால் நிற்கிறோம் என்ற சிந்தனை வர வேண்டும் . படைத்தவனுக்கு முன்னால் நிற்கும் போது மிகவும் கண்ணியமான முறையில் நிற்க வேண்டும். குறிப்பாக தொழுகைக்கு செல்லும் போது அழகான ஆடையை அணிந்த நிலையில் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.
ஆரம்ப காலங்களில் கஃபாவை ஆடையின்றி நிர்வாணமாக வலம் வந்ததினால் தான் தவாபின் போது ஆடையை அணிந்து கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் கட்டளை வந்தது.
அதே போல ஆரம்ப காலங்களில் ஆடைப் பற்றாகுறை இருந்த நபியவர்களின் காலத்தில் அறைகுறை ஆடையுடன் தோழர்கள் தொழுதார்கள். அதன் பிறகு தொழும் போது இன்ன, இன்ன பகுதிகள் கட்டாயம் மறைக்கப்பட வேண்டும் என்று நபியவர்கள் வழிக் காட்டினார்கள்.
மறைக்கப்பட வேண்டிய பகுதிகளில் மிக முக்கியமான பகுதி தான் இரண்டு தோள்புஜங்களாகும்.என்பதை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுப் படுத்துகின்றன.
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் தோள்களை மறைக்காமல் ஒரே ஆடையை அணிந்துகொண்டு தொழ வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம் 894)
மேலும் “உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்முசலமா (ரலி) அவர்களது இல்லத்தில் ஒரே ஆடையை அணிந்துகொண்டு தொழுததை நான் பார்த்தேன். அந்த ஆடையின் இரு ஓரங்களையும் தம் தோள்கள்மீது (வலது தோள் மீதிருக்கும் ஓரத்தை இடது கைக்குக் கீழேயும் இடது தோள் மீதிருக்கும் ஓரத்தை வலது கைக்குக் கீழேயுமாக) மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுததை நான் பார்த்தேன். ( முஸ்லிம் 895 )
எனவே தொழும் போது கட்டாயம் தோள்புஜங்கள் மறைக்கப்பட வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். சில ஆண்கள் சிறிய டவல் போன்ற துண்டை தொழும் போது தன் தோள் மீது போட்டுக் கொண்டு தொழுகிறார்கள். வேறு ஆடையே இல்லை என்றால் பரவாயில்லை, ஆனால் பல ஆடைகளை அடுக்கி வைத்துக் கொண்டு கஞ்சத்தனமாக சிறிய துண்டை தோள் மீது போட்டுக் கொண்டு தொழுவது எந்த விதத்தில் நியாயமாகும். ? தொழுகை கூடுமா என்றால் தொழுகை கூடு்ம்.
என்றாலும் ஏன் தொழும் போது அலங்காரத்தை இறைவன் எடுக்க சொல்கிறான் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். எனவே பள்ளிக்கு செல்லும் போது அழகிய ஆடை அணிந்து வாசனை திரவியங்களை பூசிக் கொண்டு போகும் பழக்கத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.