ஜுப்பாவும் தொப்பியும் அணிந்து தனது தந்தை, சகோதரன் அல்லது, உறவுகளுடன் முதன்முதலாக பள்ளிவாசலுக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழுத இளமைக்கால அனுபவம் பெரும்பாலான ஆண்களுக்கு நிச்சயமாக இருக்கும். அந்தச் சின்ன வயது நிகழ்வு, இஸ்லாமியன் என்ற அடையாளத்தினைப் பெற்றுத் தந்தவற்றுள் ஒன்றாகவும் இருக்கும்.
ஆனால், அதே தொழுகையைக் கடமை என்றறிந்து, அது இறைவனுடனான உரையாடல் என்றுணர்ந்து, தாமாக விரும்பி நிறைவேற்றும்போது, அதன் பெறுமதி அளவற்றது.
தொழுகையானது, மார்க்கத்தில் விதியாக்கப்பட்ட ஒன்றாக இருப்பதனால், ஏன்? எதற்கு? என்று அதன் மீதான ஆராய்ச்சிகளெல்லாம் இஸ்லாமியர்களுக்கு இரண்டாம் பட்சமே. ஆனால், ஆய்வாளர்களுக்குத் தொழுகையும் முதலாம்தரக் கருப்பொருளாகி விடுகிறது. அந்தவகையில் தொழுகைக்கும் ஒளி உடலின் செயற்பாட்டிற்கும் இடையிலான தொடர்பு பற்றி ஒரு நூலில் வாசிக்கக் கிடைத்தபோது, மிகவும் ஆச்சரியப்பட்டேன். அதாவது, மனித உடலைச் சுற்றி 4 அல்லது 5 அங்குலம் அளவிலான உயிர்வாயுக் கதிர்கள் காணப்படுவதாகவும், அதுவே ஒளியுடல் அல்லது, மாயஉடல் எனப்படுகிறது. இதன் இயக்கத்தன்மை குறையும்போது உடலில் நோய்த்தாக்கம் ஏற்படுகின்றது எனவும் அறியக் கிடைத்தது.
இந்த ஒளி உடலை வெற்றுக் கண்ணுக்கு தோற்றுவிக்கும் புகைப்படமுறையை 1939 இல் கிர்லியான் தம்பதியினர் கண்டுபிடித்திருக்கின்றார்கள். அதனைத் தொடர்ந்து விக்டர் அடாமென்கோ என்ற ஆய்வாளர் ஒளியுடலுக்கும், உணர்வுகளுக்கும் தொடர்பிருப்பதை வரைபடம் மூலம் தெளிவாக விளக்கியிருக்கிறார்.
ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஒளி உடலை வலிமையாக்குவதன் மூலம் உடலை நோய்கள் தாக்காமலிருக்கவோ அல்லது, நோய்த் தாக்கம் அதிகரிக்காமலோ பேணமுடியும்.
இதை சாத்தியப்படுத்துவதில் கூட்டுத்தொழுகை கூடுதலான பங்கு வகிப்பதாகக் கூறுகிறது. தொழுகையைக் கடமையாக்கியிருக்கும் அதேவேளை, ஆண்களுக்கு கூட்டுத் தொழுகை கட்டாயமானது என்ற இஸ்லாத்தின் கட்டளையே இதற்குக் கட்டியம் கூறுவதாய் அமைந்துள்ளது.
அதாவது, நெருக்கமாக நின்று தொழும்போது, ஒவ்வொருவரிலும் உள்ள உயிர்வாயுச் சக்தி ஒருமித்த சக்தி பெற்று முழுவதுமாகப் பரவி தொழுகையில் இருக்கும் அனைவரிலும் சமனிலைத் தன்மையை ஏற்படுத்துகின்றது. இதனால், உடல், உள ரீதியாக ஆரோக்கியம் குறைந்த ஒருவர், தொடர்ந்து கூட்டுத் தொழுகையினைப் பேணிவருவதனால் நிவாரணம் பெறமுடியும்.
அதேவேளை, தொழுகையாளியான ஆண் தனது வீட்டுக்கு வந்து, குடும்பத்தாருடன் கூடியிருக்கும்போது, அதே ஒளியுடல் பரிமாற்றத்தினை மனைவி குழந்தைகள் மற்றும் பெற்றோரும் அடைந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் அதிகமானோருடன் இணைந்து தொழுகையை நிறைவேற்றுவது ஈமானின் வளர்ச்சிக்கும், முன்னேற்றதிற்கும் காரணமாகின்றது. இதற்கு வெள்ளிக் கிழமை ஜும்ஆத் தொழுகையை உதாரணமாகக் கூறலாம். ஊரைப்பிரிந்து, உற்றாரைப் பிரிந்து தொழில் நிமித்தமாக அல்லது, வேறு அலுவலாக வெளியூர் சென்றவர்கள் வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வீடு திரும்புவதால், பள்ளிவாயலில் அதிக எண்ணிக்கையினரைக் காணமுடிகிறது. விதிவிலக்காக இதில், ஜும்ஆ தொழுகையினை மட்டுமே பேணும் சிலரும் அடங்குவர்.
எத்தனை அதிகப் பேருடன் மக்கள் தொழுகையை நிறைவேற்றுகின்றார்களோ அல்லாஹ்விடத்தில் அது மிக உகந்தது என்கிறது இஸ்லாம். இன்னும் கூறுவதானால், ஓர் ஊரில் குறைந்தது மூன்று முஸ்லிம்கள் மட்டுமே வாழ்ந்து, அங்கு ஜமாஅத்துடன் தொழுகை நிறைவேற்றப் படவில்லையானால், அவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் பெற்றுவிடுகிறான் எனவும் இதற்கு உதாரணமாக இடையனையும் மந்தையையும் விட்டும் விலகிச் செல்லும் ஆட்டையே ஓநாய் எளிதில் வேட்டையாடுகிறது’ எனவும் கூறப்படுகின்றது.
மேலும், கூட்டுத் தொழுகைக்காக வரிசையில் நிற்கும்போது, தோள்புஜங்களால் நெருங்கி நேராக நிற்கும்படி ஏவுகின்றது. இந்தக் கட்டளைகூட ஏலவே கூறப்பட்ட ஒளியுடலின் சக்திப் பரிமாற்றத்திற்கு முக்கிய பங்கு வகிப்பதொன்றாகும்.
மேலும், மாற்று மதத்தவர்களினால் பிரபலமாகப் பேசப்படும் பிராண சிகிச்சை எனும் முறையினை, (Pranic Healing) நாம் அன்றாடம் ஒருவருக்கொருவர் கைப்பிடித்து கைலாகு செய்தல், இறைவனிடம் கையேந்திப் பிரார்த்தித்தல், மற்றும் தோளோடு தோள் சேர்த்து அன்புப் பரிமாற்றம் செய்தல் போன்ற நடவடிக்கைகளினால் நம்மை அறியாமலே செயற்படுத்திக் கொண்டுதான் வருகின்றோம். இதன்மூலம் ஒளியுடல் மேலும் சக்திபெற்று, உடல் ஆரோக்கியமடைகின்றது.
எனவே, இறைகட்டளைகள் எமது வழிபாட்டு முறைகளை அழகிய முறையில் வடிவமைத்துள்ளதோடு, அதன் பின்னால் ஆழமான காரணங்களையும் கூடவே கொண்டிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அவற்றை விஞ்ஞானம் பலகோணங்களிலும் ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டுக் கொண்டேயிருக்கிறது. அவற்றை அலசுவது எமது இறைநெருக்கத்திற்கு மேலும் வழிவகுக்கலாம்.
தொழுகையை ஆரம்பித்தது முதல் உலக சிந்தனைகள் எட்டியும் பார்க்கவிடாமல், மனதை ஒருமித்த நிலையில் இறைவனுடன் உரையாடி முடிப்பதற்குள் ஷைத்தான் ஏதாவதொரு சிந்தனையைப் போட்டுவிடுவதுமுண்டு. எண்ணங்களுடனான அந்தப் போராட்டம் சிலவேளை வெற்றியைப் பெற்றுத் தரலாம். ஆனால், அதிலிருந்து இறைவனுக்கு எந்தத் தேவையும் இருப்பதில்லை. அவன் விதித்தவை அனைத்தும் எமது நலனுக்காகவே என்பதை பட்டு உணர்வதற்குள் காலங்கள் கடந்துவிடுகிறன. எந்தக் கோணத்தில் நோக்கினாலும் நாம் அனைவருமே இறைவனின் அருளிலும் மன்னிப்பிலும் தங்கிவாழும் படைப்புகள்தான்.
பர்சானா றியாஸ்