முன்னால் SLTJ அழைப்பாளார்
சகோ சதாத்
SLTJ வாதம் 3:
பிற்காலத்தில் ஹதீஸ்களில் பல கலப்படங்கள் நுழைந்தன. ஆனால், குர்ஆனில் அப்படி நடக்கவில்லை. எனவே இரண்டின் பாதுகாப்பும் ஒரே அளவானதல்ல.
எனது பதில்:
இதுவும் ஒரு தப்பான வாதம். தாபிஈன்களின் காலம் தொடக்கம் ஹதீஸ்களுக்குள் ஷைத்தான் ஊடுவி, அதை மாசு படுத்த முயற்சித்தது உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது. இது எவ்வளவு தூரத்துக்கு உண்மையோ, இதே போன்ற உண்மை தான், குர்ஆனுக்குள்ளும் ஷைத்தான் இதுபோல் ஊடுறுவ முயற்சித்தான் என்பது.
அதாவது, ஹதீஸ்களுக்குள் ஷைத்தான் இட்டுக்கட்டுவோர் வாயிலாக நுழைய முயன்றான்; குர்ஆனுக்குள் மக்களின் வெவ்வேறுபட்ட மொழிநடைகளை சாக்காக வைத்து நுழைய முயன்றான். அல்லாஹ்வின் உத்தரவாதத்தால், இந்த இரண்டு முயற்சிகளும் தவிடுபொடியாக்கப் பட்டு, ஷைத்தான் தோற்கடிக்கப்பட்டான். இது தான் இவர்கள் மறைக்கும் பேருண்மை. இதை ஓர் உதாரணத்தின் மூலம் இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்கிறேன்:
உதாரணம்: உஸ்மான் (ரழி) காலத்தில் நடந்த சம்பவம்:
அரபு மொழிக்கு உள்ளேயும் வெவ்வேறு பிரதேசங்களுக்கேற்ப மாறுபட்ட மொழிநடைகள் அன்று முதல் வழக்கத்தில் இருந்து வருகின்றன. இவற்றுள், குரைஷிகளின் மொழிநடை தான் மிகவும் தூய மொழிநடை. இந்த மொழிநடையில் தான் மொத்தக் குர்ஆனும் அருளப்பட்டது. ஆனால், இது தவிர்ந்த இன்னும் ஆறு மாறுபட்ட பிரதான மொழிநடைகள் அப்போது அரபுகளின் வழக்கில் இருந்தன.
உஸ்மான் (ரழி) அவர்களது ஆட்சிக் காலத்தில், மக்கள் மத்தியில் ஒரு ஃபித்னா முளைத்தது. வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த அரபு மக்கள், குர்ஆனை, அது அருளப்பட்ட குரைஷி மொழிநடைக்கு மாற்றமாக, ஓசை நயம், சிறிய இலக்கண விதிகள் என்பவற்றை அவரவர் பிரதேச மொழிநடைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு, அவர்கள் பாணியில் அதை ஓதத் தொடங்கி விட்டார்கள். ஓதியது போதாதென்று, அவர்கள் மொழிநடைக்கேற்ப குர்ஆனை எழுத்து வடிவங்களிலும் எழுதிக்கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.
இதனால் ஏற்பட்ட விளைவு என்னவென்றால், மாறுபட்ட மொழிநடைகளில் ஒன்றுக்கொன்று வித்தியாசமான பல குர்ஆன் பிரதிகள் எழுத்து வடிவில் புழக்கத்துக்கு வரத் தொடங்கி விட்டன. மக்களில் யாரும் இதை வேண்டுமென்று செய்யவில்லை; அவர்கள் இதன் பாரதூரத்தை உணர்ந்திருக்கவில்லை. குர்ஆனின் பாதுகாப்புக்கு இது ஒரு கடுமையான அச்சுறுத்தலாக அமையும் என்பதை அவர்களில் அனேகமானோர் உணர்ந்திருக்கவில்லை. அதாவது, வெவ்வேறு மொழி நடைகளில் ஆரம்பிக்கும் இந்த வித்தியாசம், அடுத்த கட்டமாக இலக்கணத்துக்குத் தாவி, காலப்போக்கில் குர்ஆனின் கருத்தையே மாற்றி விடும் அபாயம் இந்த நடைமுறையில் இருக்கிறது.
இந்த அபாயத்தை அன்றே உணர்ந்த உஸ்மான் (ரழி) அவர்கள் உடனே பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்கள். உலகின் எல்லாப் பாகங்களிலும் மக்களால் ஓதப்பட்டுக் கொண்டிருந்த மாறுபட்ட குர்ஆன் பிரதிகளையெல்லாம் பறிமுதல் செய்து, அவற்றையெல்லாம் மொத்தமாக எரித்தார்கள்.
பிறகு, நபி (ஸல்) அவர்களின் துணைவி ஹஃப்ஸா (ரழி) அவர்களின் பாதுகாப்பில் இருந்த, அபூபக்கர் (ரழி) காலத்தில் முதன்முதலாகத் தொகுக்கப்பட்ட குர்ஆன் மூலபிரதியை ஹஃப்ஸா (ரழி) அவர்களிடமிருந்து இரவல் கேட்டுப் பெற்றார்கள். அந்த மூலப்பிரதிக்கு அச்சு அசலாக இன்னும் நான்கு பிரதிகளை உத்தியோக பூர்வமாக அரச சார்பில் எழுதினார்கள். அந்த நான்கு பிரதிகளையும் உலகின் நாலாபாகங்களிலுமிருந்த ஆளுனர்களுக்கு அனுப்பி, “இனிமேல் இந்தப் பிரதிக்கு அமைய மட்டும் தான் குர்ஆன் எழுதப்படவோ, ஓதப்படவோ வேண்டும்; இதற்கு மாற்றமாக இனி யாரும் குர்ஆனை ஓதவோ, எழுதவோ கூடாது” என்ற கடும் உத்தரவுகளையும் பிறப்பித்தார்கள்.
உஸ்மான் (ரழி) அவர்களது இந்தப் பாரிய முயற்சியின் மூலம் தான் அன்று குர்ஆனின் பாதுகாப்புக்கு ஷைத்தான் மூலம் ஏற்பட்ட இந்த அச்சுறுத்தலை அல்லாஹ் முறியடித்தான். துருக்கி, ரஷ்யா போன்ற நாடுகளின் தூதனசாலைகளில் இன்றுவரை பாதுகாக்கப்படும் குர்ஆன் மூலப் பிரதிகளெல்லாம், அன்று உஸ்மான் (ரழி) அவர்கள் அனுப்பிய அந்தப் பிரதிகள் தாம்.
இந்த இடத்தில், ஹதீஸ் மறுப்புக் கொள்கைவாதிகள் சில சமயம் ஒரு எதிர்வாதத்தை முன்வைக்கலாம்:
“இதுவெல்லாம் குர்ஆனின் எழுத்துப் பிரதிகளுக்கு வந்த அச்சுறுத்தல் தானே. இந்த அச்சுறுத்தலை அன்று உஸ்மான் (ரழி) முறியடிக்காவிட்டால் கூட குர்ஆனின் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்பட்டிருக்காது. ஏனெனில், குர்ஆன் பாதுகாக்கப் பட்டிருப்பதே ஓசை வடிவில் உள்ளங்களில் தான்” என்பது தான் அந்த வாதம். இதற்கும் சேர்த்தே இங்கு பதிலளித்து விடுகிறேன்:
எழுத்து வடிவுக்கு மட்டுமல்ல; உள்ளங்களில் பாதுகாக்கப்பட்ட ஓசை வடிவுக்கும் சேர்த்துத் தான் இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது. ஏனெனில், வெவ்வேறு பிரதேச மக்கள் எழுத்து வடிவில் வித்தியாசமாக எழுதியது மட்டுமல்ல; ஓசை வடிவிலும் வித்தியாசமாகத் தான் குர்ஆனை ஓதத் தொடங்கினார்கள். ஆகவே மொத்தக் குர்ஆனின் பாதுகாப்புக்குமான பெரும் அச்சுறுத்தலாகத் தான் இது இருந்தது.
ஆபத்தின் விளிம்பில் இருந்து குர்ஆனின் தூய்மை பாதுகாக்கப் பட்டதற்கு இந்த வரலாற்றுச் சம்பவம் ஓர் உதாரணம். ஷைத்தானின் இந்த முயற்சியை முறியடிப்பதற்கு அல்லாஹ் ஸஹாபாக்களைத் தான் தேர்ந்தெடுத்தான். “ரழியல்லாஹு அன்ஹு” என்று ஸஹாபாக்களுக்கு நற்சான்று வழங்கியதற்கான நியாயத்தை இங்கும் அல்லாஹ் உணர்த்திக் காட்டினான்.
இதே போல தான் ஹதீஸ்களுக்குள்ளேயும் ஃபித்னாக்களைக் கலக்கும் நோக்கில் ஷைத்தான் சில காரியங்களைச் செய்தான். பல இட்டுக்கட்டும் மனிதர்கள் மூலம் ஹதீஸ் என்ற பெயரில் பல பொய்யான செய்திகளை உண்மையோடு கலக்க முயற்சித்தான்.
ஆனால், இந்த முயற்சியையும் அல்லாஹ் தோற்கடித்தான். குர்ஆன் விசயத்தில் அல்லாஹ், ஸஹாபாக்கள் மூலம் ஷைத்தானின் திட்டத்தைத் தவிடுபொடியாக்கியதைப் போல், ஹதீஸ்கள் விசயத்தில் இமாம்கள் மூலம் ஷைத்தானின் முயற்சிகளைத் தோற்கடித்தான்; ஸஹாபாக்களை வைத்துக் குர்ஆனைப் பாதுகாத்ததைப் போல், இமாம்களை வைத்து ஹதீஸ்களையும் பாதுகாத்தான்.
இதற்காக அல்லாஹ் சில நல்ல அறிஞர்களைத் தேர்வு செய்தான். அவர்கள் மூலம் எது ஹதீஸ்? எது கலப்படம்? எது ஆதாரம்? எது பலவீனம்? போன்ற எல்லா விபரங்களையும் துல்லியமாகப் பிரித்தறியும் ஆற்றல் கொண்ட ஒரு மகத்தான கலையை வடிவமைத்தான். அதைத் தான் இன்று நாம் ஹதீஸ் கலை என்று சொல்கிறோம்.
இன்று நாம் பகட்டாக உட்கார்ந்து கொண்டு, கணனித் திரையில் பார்த்து, ஒவ்வொரு அறிவிப்பாளர் பற்றியும் பட்டியலிட்டுச் சொல்லும் தகவல்கள் மொத்தமும், அன்றைய இமாம்களின் மகத்தான தியாகம் மிக்க பணிகள் மூலம் பாதுகாக்கப் பட்ட மார்க்கத்தின் சொத்துக்கள் தாம்.
ஹதீஸ் கலையின் தோற்றம் / வளர்ச்சி என்பது, இமாம்களின் சிந்தனையின் வெளிப்பாடு அல்ல; இமாம்களைக் கருவியாக உபயோகித்து, அல்லாஹ் ஹதீஸ்களைப் பாதுகாத்த விதம் தான் இது. இறையச்சத்தோடும், நியாய உணர்வோடும் வரலாற்றைப் புரட்டிப் பார்ப்போருக்கு இந்த உண்மை புலப்படும்.
ஹதீஸ் மறுப்புக் கொள்கைவாதிகள் அபாண்டமாகச் சொல்வது போல், ஹதீஸ் கலை விதிகள் என்பது இமாம்கள் சுயமாக வகுத்துக் கொண்டதல்ல; மாறாக நபி (ஸல்) அவர்களது வழிகாட்டுதலின் படி ஸஹாபாக்களால் வகுக்கப்பட்ட விதிகள் அவை. இதற்கான மார்க்க ஆதாரங்கள் என்னென்னவென்பதை இன் ஷா அல்லாஹ் இன்னொரு பதிவில் பிரசுரிக்க இருக்கிறேன். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள்.
சாராம்சம்:
சுருங்கக் கூறினால், ஹதீஸ் என்பது குர்ஆனின் இன்னொரு வடிவம் தான். குர்ஆனுக்கு அல்லாஹ்வே வழங்கியிருக்கும் தப்ஸீர் தான் ஹதீஸ். அருளப்பட்ட வடிவத்தில் மட்டுமே இரண்டும் வேறுபட்டிருக்கின்றன. ஒன்று அல்லாஹ்வின் நேரடியான பேச்சு; மற்றது மறைமுகமான பேச்சு. இவ்வளவு தான் வித்தியாசம். மற்றப்படி இரண்டும் ஒன்று தான்; வெவ்வேறல்ல. ஒன்றை வைத்து இன்னொன்றை விளங்கும் விதமாகத் தான் இந்த இரண்டு மூலாதாரங்களும் வேறுபட்ட அமைப்பில் அருளப்பட்டிருக்கின்றன; ஏற்றத்தாழ்வு காட்டும் நோக்கத்தில் அல்ல.
இந்தக் கருத்தை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக அல்லாஹ் பல சந்தர்ப்பங்களில், குர்ஆன் வசனங்களையே ஹதீஸ் என்று குர்ஆனிலேயே குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கலாம்:
அழகிய ஹதீஸை (செய்தியை) அல்லாஹ்வே அருளினான். அது திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், ஒன்றையொன்று ஒத்த வேதமாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. – (39:23)
இந்த ஹதீஸை (செய்தியை) அவர்கள் நம்பாவிட்டால் அவர்களுக்காகக் கவலைப்பட்டு உம்மையே அழித்துக் கொள்வீர் போலும். – (18:6)
அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஒரு ஹதீஸை (செய்தியை) அவர்கள் கொண்டு வரட்டும். – (52:34)
குர்ஆனின் இன்னொரு (விரிவான) வடிவம் தான் ஹதீஸ் என்பது இங்கு மறுக்க முடியாதவாறு நிரூபணமாகிறது. ஆகவே, குர்ஆனின் பாதுகாப்புக்கு என்னென்ன உத்தரவாதங்களை அல்லாஹ் வழங்கினானோ, அதே உத்தரவாதங்கள் ஹதீஸ்களின் பாதுகாப்புக்கும் சேர்த்து வழங்கப் பட்டவை தான் என்பது இங்கு தெளிவு.
இதை மறுத்து வாதம் வைப்பவர், இங்கு முன்வைக்கப்பட்டிருக்கும் ஆதாரங்களையெல்லாம் உடைத்தெறியும் விதமாக வலுவான ஆதாரங்களோடு முன்வர வேண்டும். அதுவரை இந்தக் கருத்துக்கள் நியாய உணர்வோடு சிந்திப்போரின் உள்ளங்களில் கண்டிப்பாக அசையாத இடத்தைப் பிடித்திருக்கும்.
இன் ஷா அல்லாஹ் தொடரும்…
வஸ்ஸலாம்
– அபூ மலிக்
கட்டுரையில் ‘நபியவர்களின் துணைவியார் ஹஃப்ஸா (ரழி) என்பது தவறாக ‘அஸ்மா என இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
சரி செய்தல் நலம்.
வஸ்ஸலாம்.
corrected as ஹஃப்ஸா (ரழி).
Jazakallah Khair