-மௌலவி அன்சார் (தப்லீகி)-
இத்தலைப்பின் கீழ் முஸ்லிம் சமூகத்தில் அவர்களின் நம்பிக்கையில் வணக்க வழிபாடுகளில் மற்றும் அனைத்து விடயங்களிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ள ஹதீஸ்களை ஆரம்பத்தில் பார்ப்போம்.
01. ஆதம் (அலை) குற்றமிழைத்த போது (யாஅல்லாஹ்) முஹம்மது (ஸல்) அவர்களின் பொருட்டால் கேட்கின்றேன். எனது பாவத்தை மன்னிப்பாயாக என பிரார்த்தித்தார். அப்போது ஆதமே! நான் இன்னும் அவரைப்படைக்கவில்லை. நீ எப்படி அவரை அறிந்தாய் என அல்லாஹ் கேட்டான். அதற்கு (எனது இரட்சகனே! நீ என்னை உனது கையால் படைத்து என்னில் உனது உயிரிலிருந்து ஊதிய போது எனது தலையை உயர்த்தினேன்.
அப்போது அர்ஷின் கால்களில் (லாயிலாஹ இல்லல்லாஹூ முஹம்மதுர்ரஸூலுல்லாஹ்) என எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன். அதனால் உன்னிடத்தில் படைப்பினத்தில் மிகவும் விருப்பமானவரைத் தவிர உனது பெயருடன் நீ இணைத்துக் கொள்ளமாட்டாய் என நான் புரிந்து கொண்டேன் என ஆதம் (அலை) கூறினார்கள். அதற்கு அல்லாஹ் (ஆதமே! நீ உண்மை கூறினாய். அவரே படைப்பினத்தில் என்னிடத்தில் மிகவும் விருப்பமானவர். எனவே முஹம்மதின் பொருட்டால் என்னிடத்தில் பிரார்த்திப்பாயாக. உனது பாவத்தை நான் மன்னித்து விட்டேன். முஹம்மது இல்லையென்றால் உன்னைப் படைத்திருக்கமாட்டேன் எனக் கூறினான்.
விபரங்கள்
இந்த ஹதீஸ் நபிகளாரின் மீது இட்டுக்கட்டப்பட்ட ஓர் பொய்யான செய்தியாகும். ஹதீஸ் கலை மேதாவிகளான இமாம் தஹபி(தல்கீசுல் முஸ்தத்ரக்) எனும் கிரந்தத்திலும் மற்றும் இப்னு ஹஜர் (ரஹ்) (லிஸானுல் மீஸான் எனும் கிரந்தத்திலும் அவ்வாறே குறிப்பிட்டுள்ளார்கள்.
அறிவிப்பாளரின் விபரம்
இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ஓர் அறிவிப்பாளர் அப்துர்ரஹ்மான் பின் சைத் என்பவர். இவர் மிகவும் பலஹீனமானவர். ஹதீஸ் கலை இமாம்களால் மிகவும் பலவீனமானவராகக் கருதப்பட்டவர். இந்த ஹதீஸை தவறுதலாக ஆதாரமானது எனக் கூறிய இமாம் ஹாகிம் என்பவர் கூட இவரை பலவீனமானவர்கள் பட்டியலில் மற்றொரு கிரந்தத்தில் குறிப்பிடுகின்றார். மேலும் இவர் தன் தகப்பனைத் தொட்டும் பல இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவித்துள்ளார் எனவும் தனது மற்றொரு கிரந்தமான (மத்கல்) என்பதில் குறிப்பிட்டுள்ளார்.
மற்றுமொரு அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் முஸ்லிம்..
இவர் பொய்யான ஹதீஸை அறிவித்துள்ளார் என இமாம் தஹபியும் இப்னு ஹஜரும் அவர்களின் கிரந்தஙகளில் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் இந்த ஹதீஸிற்கு மற்றுமொரு அறிவிப்பாளர் வரிஸை இமாம் தப்ரானியின் (மூஹ்ஜம்) எனும் கிரந்தத்தில் வருகிறது. அதன் அறிவிப்பாளர் தொடரில் பல இனங்காணப்படாத அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். மொத்தத்தில் எந்தவொரு ஆதாரபூர்வமான அறிவிப்புக்களும் இதற்கு கிடையாது.
அல்குர்ஆனுடன் மோதுதல்
ஆதம் (அலை) அவர்களின் பாவம் மன்னிக்கப்ட்ட விடயத்தை இரண்டு இடங்களில் பின்வருமாறு அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
(ஆதம் தம் ரப்பிடமிருந்து சில வார்த்தைகளைக் கற்றுக்கொண்டார். (அல்லாஹ்) அவரின் தௌபாவை ஏற்றுக்கொண்டான் (அல்பகறா 37)
எவ்வார்த்தையைக் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள் என்பதை மற்றுமொரு வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
(அவ்விருவரும் கூறினார்கள் எங்களின் இரட்சகனே எங்களுக்கு நாங்களே அனியாயம் இழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து அருள்புரியவில்லையென்றால் திடனாக நாங்கள் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவோம்.) (அல்அஹ்ராப் 23)
இவ்வாறு திருக்குர்ஆனில் தெளிவாக சொல்லப்பட்ட விடயத்திற்கு .. இந்த பொய்யான ஹதீஸ் முற்றிலும் முரண்படுகின்றது. இந்த பொய்யான ஹதீஸின் விபரீதங்கள்..
பிரார்த்தனை என்பது வணக்கம் – வணக்கம் அல்லாஹ்விற்கு மட்டும் செய்யப்பட வேண்டும். வணக்கமான பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலின் பிரகாரமே செய்ய வேண்டும். அவர்களின் தூய்மையான வழிகாட்டலை விட்டும் வெளியாகும் போது அது பித்அத் என்ற வழிகேடாக மாறிவிடும்.
இன்று பலரின் பிரார்த்தனை நபிகளாரின் பொருட்டால் என்பதற்கும் அப்பால் இறந்துபோன மனிதர்களின் பெயர்களைக் கூறி அவர்களின் பொருட்டால் பிரார்த்திக்கின்ற வழிகேடான முறையில் நம் சமூகத்தில் சர்வசாதாரணமாக பரவியிருப்பதை அவதானிக்கின்றோம். இதற்கும் அப்பால் ஒருபடி மேல் சென்று அல்லாஹ்வை விட்டுவிட்டு இறந்துபோனவர்களிடமே நேரடியாகத் தம் தேவைகளைக் கேட்டு பிரார்த்திப்பதை அவதானிக்கின்றோம். இவ்வாறான வழிகேடுகளுக்கு இதுபோன்ற பொய்யான செய்திகளும் காரணமாக அமைந்துள்ளன. இவ்வாறான வழிகேடுகள் அனைத்தை விட்டும் முஸ்லிம் சமூகம் வெளியாகி உண்மையான நபி (ஸல்) அவர்களின் வழியின் மீது நடந்திட அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக..