Featured Posts

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 01)

Magic Series – Episode 01:

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!!

அறிமுகம்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்!

ஹதீஸ்களை இஷ்டத்துக்கு மறுத்துக் கொண்டிருக்கும் த.த.ஜ. மற்றும் ஸ்ரீ.ல.த.ஜ. போன்றவர்கள், தமது செயற்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்கும் முகமாக மார்க்கத்தில் ஏதாவது ஆதாரம் கிடைக்குமா என்று மார்க்க மூலாதாரங்களில் தேடிப் பார்த்தார்கள். ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆகவே, மூடலான சொற்பிரயோகங்களைக் கொண்ட சில மார்க்க ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, அவற்றுக்குத் தமது மனோ இச்சைக்கு ஏற்ப மாறுபட்ட விளக்கங்களைக் கொடுத்தார்கள்.

இவ்வாறு மாற்று விளக்கங்கள் மூலம், தமக்கு சார்பாக வளைக்கப் பட்ட இந்த ஆதாரங்களையே தமது ஹதீஸ் மறுப்புக் கோட்பாட்டுக்கு ஆதாரமாகவும் முன்வைத்து வருகிறார்கள்.

அதாவது, இருக்கும் சில ஆதாரங்களுக்கு மனோ இச்சையின் அடிப்படையில், அது சொல்லாத வியாக்கியானங்களைக் கொடுப்பதன் மூலம், இல்லாத ஆதாரங்களைப் புதிதாக உருவாக்கியிருக்கிறார்கள். இவ்வாறு உருவாக்கப்பட்ட போலி ஆதாரங்களை முட்டுக் கொடுப்பதன் மூலம் தமது வாதங்களை நிலைநாட்டவும் பாடுபடுகிறார்கள்.

இவ்வாறு புது வியாக்கியானங்களைக் கொடுத்து, ஆதாரங்களைத் தமக்கு சார்பாக வளைப்பதற்கு வசதியாக, பல மூடலான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஓர் அம்சம் இவர்களுக்குக் கிடைத்தது. அது தான் சூனியம்.

ஓர் உண்மையை இங்கு நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். சூனியத்தை மறுப்பதன் மூலம் உண்மையில் ஹதீஸ் மறுப்பாளர்கள் மறுப்பதும், எதிர்ப்பதும் சூனியத்தை அல்ல. இவர்களின் அடிப்படை நோக்கம் ஹதீஸ்களை மறுப்பது தான்.

ஹதீஸ்களை மறுக்கும் அந்த செயல்பாட்டுக்கு நியாயம் கற்பிக்க இவர்களுக்கு சில ஆதாரங்கள் தேவை. அந்த ஆதாரங்களை உருவாக்கிக் கொள்ளும் நோக்கத்தில் தான் சூனியத்தை விடாப்பிடியாக இந்தப் பிடி பிடித்துக் கொண்டு எதிர்த்து வருகிறார்கள். இது தான் உண்மை. இதை நான் வெறும் அனுமானத்தில் சொல்லவில்லை. சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும் இது தெளிவாகப் புரியும்.

இதை இன்னும் கொஞ்சம் விளங்கிக் கொள்ளும் முகமாக நான் சொல்லப் போவதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

நமது அன்றாட வாழ்க்கை பற்றிக் கூறும் ஹதீஸ்களை எடுத்த எடுப்பிலேயே இவர்கள் மறுக்கப் போனால், மக்கள் அது விசயத்தில் பல எதிர்வாதங்களை வைக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், அன்றாட வாழ்வின் நிகழ்வுகள் பற்றி ஒவ்வொருவருக்கும் தெரியும். எனவே, தாம் ஏற்கனவே அறிந்திருக்கும் விபரங்களை வைத்து மக்களில் ஒவ்வொருவரும் வித விதமான எதிர்வாதங்களை இதில் முன்வைக்கப் பல முகாந்திரங்கள் இருக்கின்றன.

ஆனால், சூனியம் என்பது இவ்வாறானதோர் அம்சம் அல்ல. சூனியம் என்பதே மறைவான அம்சங்கள் சார்ந்த ஒரு விசயம். மேலும், சூனியம் என்பது மக்களில் அனேகமானோர் அருகில் கூட நெருங்க விரும்பாத ஒரு விசயமாக இருப்பதனால், இது பற்றிய ஞானம் அனேகமானோருக்கு இல்லை.

இதன் விளைவாக, சூனியம் பற்றி யாராவது ஒரு வாதத்தை முன்வைத்தால், அதற்கு எதிர்வாதம் வைக்கும் அறிவும், வசதியும் அனேகமான மக்களுக்கு இல்லை. சூனியம் என்றால் என்ன? அதை யார் செய்கிறார்கள்? எப்படி செய்கிறார்கள்? அதன் ஆழ, அகலம் என்ன? என்பன போன்ற எந்த அடிப்படை அறிவும் அனேகமான மக்களிடம் இல்லை.

எனவே, இவ்வாறான ஒரு மறைவான விசயத்தின் மூலம், ஹதீஸ் மறுப்பாளர்கள் தமது வாதங்களை ஆரம்பித்தால், அது பற்றி அறிந்திருக்கும் ஒருசிலரைத் தவிர, ஏனைய பெரும்பாலான மக்களுக்கு இவர்களின் வாதங்களை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. இது தான் ஹதீஸ் மறுப்பாளர்களுக்கு சூனியத்தில் இருக்கும் ஒரு பெரிய வசதி. இந்த வசதி தான் இவர்களை சூனியத்தை மறுக்கும் வாதங்களின் பால் இட்டுச் சென்றது.

இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், இது தான் உண்மையென்பதை ஹதீஸ் மறுப்பாளர்களுள் பல தாயீக்கள் கூட அறியாமலிருக்கிறார்கள் என்பது தான்.

இது ஒரு சதித்திட்டம். உண்மையில் இந்தச் சதித்திட்டத்தை வகுத்தது ஹதீஸ் மறுப்பாளர்களோ, சகோதரர் பீஜேயோ அல்ல; இந்த ஜமாஅத்தை வழிகேட்டின் பால் நிலைத்திருக்க வைக்கும் நோக்கில் ஷைத்தானும், அவனது சந்ததிகளும் வகுத்து, வரைந்து, அரங்கேற்றிக் கொண்டிருக்கும் ஒரு பாரிய சதித்திட்டம் இது.

ஷைத்தானின் இந்த சதி நாடகத்தில் ஹதீஸ் மறுப்பாளர்களும், சகோதரர் பீஜே போன்றவர்களும் வெறும் கருவிகள் மட்டுமே. இந்தப் பேருண்மையை உணர்த்துவது தான் இந்தத் தொடரின் அடிப்படை நோக்கம்.

சூனியத்தை மறுக்கும் ஹதீஸ் மறுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பல தவறான, ஆதாரமற்ற, மனோ இச்சையை அடிப்படையாகக் கொண்ட பிரச்சாரங்களை மிகவும் வீரியமாக முன்னெடுத்துச் செல்கிறார்கள். இந்தப் பிரச்சாரங்களுக்குள் முழுக்கமுழுக்க பொய்யும், பித்தலாட்டங்களும் மட்டுமே நிறைந்து காணப்படுகின்றன.

இவர்களது பித்தலாட்டங்களையெல்லாம் உண்மையென்று நம்பிக் கொண்டு ஆயிரக்கணக்கான மக்கள் இவர்களைப் பின்பற்றுகிறார்கள். உண்மையில் இவர்களைப் பின்பற்றுவதன் மூலம் வழிகேட்டின் பால் தாம் இட்டுச் செல்லப்படுவதை இந்த மக்கள் கூட அறியாத நிலையில் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு உண்மையை உணர்த்தும் நோக்கத்துடனும், சூனியம் பற்றிய மார்க்கத்தின் உண்மையான நிலைபாடு என்ன என்பதை விளக்கும் நோக்கத்துடனும் இந்தத் தொடர் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது.

இதில், ஹதீஸ் மறுப்பாளர்களது பித்தலாட்டங்கள் நிறைந்த வாதங்களுக்குத் தகுந்த தர்க்க ரீதியான பதில்கள் வழங்கப்படும் இன் ஷா அல்லாஹ்.

அத்தோடு, சூனியம் என்றால் என்ன? நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட சம்பவத்தின் உண்மை நிலை என்ன? ஸூரத்துல் பகரா 102 வசனத்தின் சரியான விளக்கம் என்ன? ஹாரூத் மாரூத் என்போர் யார்? போன்ற பல கேள்விகளுக்கும் சரியான பதில்களும் வழங்கப் படும் இன் ஷா அல்லாஹ்.

முதலில், சூனியம் பற்றிய எனது நிலைபாடு என்னவென்பதை சுருக்கமாக சொல்லி விடுகிறேன். அதன் பிறகு வாதப் பிரதிவாதங்களையும், விளக்கங்களையும் தொடர்கிறேன்.

சூனியம் பற்றிய எனது நிலைபாடு:

1. சூனியம் என்பது வெறும் ஏமாற்று வித்தையல்ல. சூனியத்துக்குத் தாக்கம் உண்டு. யார் யாருக்கு என்னென்ன அளவில் அது தாக்கம் செலுத்த வேண்டுமென்பதை அல்லாஹ் மட்டுமே தீர்மாணிக்கிறான்.

2. புறச்சாதனம் எதுவுமில்லாமல் எந்த மனிதனாலும் யாருக்கும் எந்தத் தாக்கமும் ஏற்படுத்த முடியாது. அது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான பண்பு.

3. சூனியம் என்பது புறச்சாதனம் எதுவும் இல்லாமல், வெறும் மந்திரத்தின் மூலம் மட்டும் செய்யப்படுவதல்ல. சூனியத்திலும் புறச்சாதனம் உண்டு. அந்தப் புறச்சாதனம் தான் ஜின்கள். ஜின்கள் என்ற படைப்பின் தலையீடு இல்லாமல் உலகில் எவனாலும் சூனியம் செய்ய முடியாது; அப்படியே செய்தாலும், அது பலிப்பதுமில்லை.

4. சூனியக்காரன் செய்யும் சூனியத்தின் தன்மைக்கு ஏற்ப, சூனியம் செய்யப்பட்டவரின் உடலையோ, உள்ளத்தையோ வெவ்வேறு விதங்களில் ஜின்களே தாக்குகின்றன. ஜின்கள் தொடுக்கும் இந்தத் தாக்குதல்களையே நாம் சூனியத்தினால் ஏற்படும் தாக்கம் என்று சொல்கிறோம்.

5. ஜின்களை வசப்படுத்தி, வேலை வாங்குவதன் மூலம் சூனியம் செய்யப்படுவதில்லை. எந்த மனிதனாலும் ஜின்களை வசப்படுத்தி வேலை வாங்க முடியாது. மாறாக, ஜின்களை வணங்கி, வழிபட்டு, அவற்றின் உதவியைப் பெற்றுக் கொள்வதன் மூலமே சூனியம் செய்யப்படுகிறது.

6. சூனியத்துக்கு இருக்கும் ஆற்றலின் எல்லை என்பது, அதைப் பலிக்கச் செய்யும் ஜின்களின் ஆற்றலின் எல்லை வரை தான் இருக்கும்; அதைத் தாண்டிய ஆற்றல் கிடையாது. அதாவது, ஜின்களால் மனிதர்களுக்கு அதிகபட்சம் என்னென்ன கெடுதல் செய்ய முடியுமோ, அந்த அளவு கெடுதல் தான் சூனியத்தாலும் அதிகபட்சம் ஒரு மனிதனுக்குச் செய்ய முடியும்; அதைத் தாண்டிய கெடுதலைச் செய்ய முடியாது.

சூனியம் பற்றிய எனது நிலைபாடுகளின் சுருக்கம் இது தான். இந்த நிலைபாடுகளை நான் என்னென்ன ஆதாரங்களின் அடிப்படையில் எடுத்திருக்கிறேன் என்ற விவரங்களெல்லாம் இந்தத் தொடரிலும், மேலும் இதன் பிறகு வர இருக்கும் ஜின்கள் பற்றிய தொடரிலும் சொல்லப்படும் இன் ஷா அல்லாஹ்.

இந்த ஆய்வின் அவசியமும், அணுகுமுறையும்:

சூனியத்தை மறுக்கும் ஹதீஸ் மறுப்பாளர்கள் இதுவரை முன்வைத்திருக்கும் வாதங்களையெல்லாம் கவனமாக அவதானித்தவரையில், ஓர் உண்மையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சூனியம் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? அதன் யதார்த்தம் தான் என்ன? என்பன பற்றிய அடிப்படை அறிவு கூட இவர்கள் யாரிடமும் கிடையாது; சகோதரர் பீஜே கூட இதற்கு விதிவிலக்கு இல்லை. அவரிடம் கூட இது பற்றிய தெளிவான ஞானம் இருப்பதாகத் தெரியவில்லை.

நான் சொல்வதில் சந்தேகமிருந்தால், ஹதீஸ் மறுப்பாளர்களில் யாரிடம் வேண்டுமானாலும் சென்று “சூனியம் என்றால் என்னவென்பதை எனக்கு விளக்குங்கள்” என்று கேட்டுப் பாருங்கள்; அவர்கள் சொல்லும் பதிலை வைத்தே, நான் சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

சூனியத்தைக் கற்க வேண்டிய எந்தத் தேவையும் நமக்கு இல்லை; ஒவ்வொரு முஸ்லிமும் அடியோடு வெறுத்து ஒதுக்க வேண்டிய ஒன்று அது. ஆனால், சூனியத்தை ஒரு கருவியாக உபயோகித்து ஹதீஸ் மறுப்பாளர்கள் இன்று முன்னெடுத்துச் செல்லும் பிரச்சாரங்களினுள் இருக்கும் பல பித்தலாட்டங்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டுமென்றால், சூனியம் என்றால் என்னவென்பது பற்றிய சில அடிப்படைகளையேனும் சொல்லித் தான் ஆக வேண்டும். இது ஒரு நிர்ப்பந்தம்.

இந்த நிர்ப்பந்தத்தை வைத்தும், அசத்தியத்தை மக்களுக்குத் தோலுரித்துக் காட்ட வேண்டுமென்ற தேவையை முன்னிறுத்தியும் சூனியம் பற்றிய சில அடிப்படை உண்மைகளையும் இந்தத் தொடரின் பிற்பகுதியில் இன் ஷா அல்லாஹ் விரிவாக நோக்கவிருக்கிறோம்.

அதற்கு முன், சூனியத்தை மறுப்பதற்கு ஹதீஸ் மறுப்பாளர்கள் முன்வைக்கும் வாதங்கள் என்னென்னவென்பதையும், அவற்றுள் ஒளிந்திருக்கும் அறியாமை கலந்த பித்தலாட்டங்கள் என்னென்னவென்பதையும் முதலில் ஒவ்வொன்றாகப் பார்த்து விடலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்…

– அபூ மலிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *