Featured Posts

நீங்கள் புகைத்தல் போதைப்பொருள் பாவனையாளரா?

இன்றைய உலகின் பாரியசவால்களில் ஒன்றாக புகைத்தல், போதைப் பொருட்பாவனை காணப்படுகின்றது. சிறியவர், பெரியவர், படித்தவர், பாமரர் என்ற பாகுபாடுகளின்றி வயது வித்தியாசமின்றி எல்லோரும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டு சீரழிவதனை பல்வேறு சம்பவங்கள் எமக்கு சான்றுபகர்கின்றன.

உலக சனத்தொகையில் சுமார் நூறு கோடிபேர் புகைப்பழக்கத்திற்கு பழக்கபட்டுள்ளனர். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் 30 விகித மக்களும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் 50 விகித மக்களும் புகைப்பிடித்தலில் ஈடுபடுகின்றனர். தினமும் சுமார் 250 மில்லியன் பெண்கள் புகைப்பிடித்தலில் ஈடுபடுகின்றனர். (அபிவிருத்தி அடைந்த நாடுகளில் 22விகிதம் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் 0.9 விகிதம்).

உலகின் மொத்த சிகரட் உற்பத்தியில் 37 விகிதத்தனை சீனர்களே கொள்வனவு செய்வதுடன் 300 மில்லியன் மக்கள் சீனாவில்; புகைப்பிடித்தலில் ஈடுபடுகின்றனர்.

பல சமூக விரோதச் செயல்களுக்கும் பல குடும்பங்களின் சீரழிவிற்கும், பிரிவுகளுக்கும் பல மாணவர்களின் கல்வி இடைவிலகல்களுக்கும் பாரிய காரணமாக புகைத்தல், போதைப்பொருள் பாவனை அமைகிறது.

போதைப்பொருட் பாவனைகள் காரணமாக போதையினால் பகுத்தறிவினை இழந்து பல்வேறு விதமான சமூக, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது பற்றிய பல குற்ற சம்பவங்களை தினமும் நாம் நாளிதழ்கள், சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிய கிடைக்கின்றது. இவ்வாறு போதைப்பொருள் பாவனையின் காரணமாக சமூகத்தில் எத்தனையோ குற்றச்செயல்கள் நாளாந்தம் நடைபெறுகின்றன.

ஒருவன் போதையில்; இருக்கும் போது தன்னிலை மறந்து தான் இருக்கும் இடத்தினை மறந்து யாருடன் பேசுறான் என்பதனை மறந்து என்ன விடயத்தை பேசுகிறான் என்பதனை மறந்து செயற்படுகிறான். இவ்வாறு தனது செயல்களை அனைத்தினையும் ஒட்டு மொத்தமாக மறக்கச்செய்யும் போதைப் பொருட்களை பகுத்தறிவினை அடகுவைத்து பணம் கொடுத்து கொள்வனவு செய்து போதையில் சமூக, சட்ட விரோத குற்றங்களில் ஈடுபடுகிறான். ஆக ஒட்டு மொத்தத்தில் போதை இவ்வாரன குற்றச்செயல்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கின்றது என்பதனை யாராலும் மறுக்க முடியாது.

ஒரு குடும்பத்தில் போதைப் பொருட்களின் விளைவுகளைப் பார்க்கின்ற போது பல குடும்பங்களை பிரிக்கும் பல உயிர்களைப் பரிக்கும் சம்பவங்களுக்கு களம் அமைக்கின்றது. தனது சம்பாத்தியங்களை கொண்டு மகிழ்ச்சியாக குடும்ப வாழ்வினை வாழ்வதனை விட்டுவிட்டு சொந்தப் பணத்தில் சூனியம் வைக்க நாள் பூராக வியர்வை சிந்தி உழைத்து அந்தப் பணத்தை கொண்டு போதைப் பொருட்களை கொள்வனவு செய்து போதையில் கனவன்,மனைவி பிரச்சினைகளுக்கும் பெற்றார் பிள்ளைகள் பிரச்சினைகளுக்கும் குடும்ப உறவுகளுக்கிடையிலான பிரச்சினைகளுக்கும் போதைப்பொருட்கள் வழிவகுக்கின்றன.

“இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்” என்பர் ஆனால் இன்று இவ்வாரான வாசகங்களெல்லாம் செல்லாக் காசுகளைப் போல் பெறுமதி அற்றவைகளாக ஆகிவிடுமோ என அஞ்சுமளவு எமது மாணவ சமூகத்தின் நிலையைப் பற்றியும் இத்தருனத்தில் குறிப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயமாக ஆகியுள்ளது. காரணம் மாணவர்களுக்கு மத்தியிலும் இளைஞர்களுக்கு மத்தியிலும் போதைப்பொருள் பாவனை ஊடுருவியுள்ளது என்றால் யாரும் மறுப்பதுக்கில்லை!

1000 இற்கு 1 என்ற அடிப்படையில் மாணவர்கள் புகைத்தல் பாவனைக்கு பழக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் மூலம் அறியமுடிகின்றது. இலங்கையில் 13-15 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களில் 11 விகிதத்தினர் புகைத்தல் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக உலக சுகாதார திணைக்களம் தெரிவிக்கின்றது.

போதைப் பொருட்கள் என்றவுடன் நாம் எல்லோரும் சிகரட், பீடி, கஞ்சா, சாராயம், பிஸ்கி, பிரான்டி, பியர், பீடா, பாபுல், பான்பராக், மாவா, சாதா…..போன்றவைகளைத்தான் நினைப்பதுண்டு. இன்றைய தலைமுறையினர் இவைகளையெல்லாம் தான்டி புதிய யுத்திகள் மூலம் பல புதிய போதைப் பொருட்கள் பயன்படுத்துகிறார்கள்! இவை இளைஞர்கள் மத்தியில் ஒரு சில சமூக விரோதிகளால் சந்தைப்படுகின்றது.

அன்மைக்காலமாக இலங்கையின் சில பகுதிகளில் மாணவர்கள் மத்தியில் போதை மாத்திரைகள் (வில்லைகள்) பயன்பாடு அதிகரித்து காணப்படுகின்றது. மருத்துவப் பயன்பாட்டிற்கான மருந்து வகைளும் வில்லைகளும், சிகை அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும் ஜெல், கிரீம் வகைகளும் போதைக்காக பயன்படுத்தப்படுகின்றன.

இப்படி சமூகமாக இருக்கட்டும் குடும்பமாக இருக்கட்டும் மாணவர்கள், இளைஞர்களாக இருக்கட்டும் எல்லா மட்டங்களிலும் போதைப்பொருள் பாவனை ஊடுருவியுள்ளது. புகைத்தல் பொருட்கள் தயாரிக்கும் போது 4000 வகையான இரசாயண பதரார்த்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் நிகோடின் என்ற இரசாயணப்பதார்த்தம் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகும். அதனுடன் எத்னால், நெப்திலோமின், ஹைரஜன் சயனைடு, பைரின், கார்பன் மோனக்சைட்டு, அமோனியா கேட்மியம், பெரோனியம் 2-10 வினைல் குளோரைடு, தார், கரிமியல் வாயு போன்றவைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

புகைத்தல், போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் விபரீதங்களை அடையாளப்படுத்ததினால் எண்ணிலடங்கா பல விபரீதங்களை அடையாளப்படுத்தலாம்.

உடலியல் ரீதியான விபரீதங்கள் என்று அடையாளப்படுத்தும் போது முதலில் எல்லோருக்கும் ஞாபகம் வருவது புற்றுநோய்தான். காரணம் புகைத்தலுக்கான பயன்படுத்தப்படும் பொருட்களின் பெட்டிகளிலேயே அவை குறிக்கப்பட்டிருக்கும் (Smoking causes cancer, smoking is injurious to Health) புற்று நேயை ஏற்றபடுத்தும் உயிரைக் கொள்ளும் என்ற வாசகங்களை படித்துக்கொண்டே அதனை பயன்படுத்துகின்றனர்!

ஓர் ஆண்டிற்கு நுரையீரல் புற்று நோயினால் சுமார் 22.1 விகிதமானோர் மரணிப்பதாக அறிக்கைகள் தெறிவிக்கின்றன. ஒரு சிகரட் மனித ஆயுளில் 11 செக்கன்களை குறைக்கிறது. அன்னலவான மதிப்பீட்டின் பிரகாரம் ஆண்கள் தமது வாழ்நாளில் சுமார் 13.2 ஆண்டுகளையும் பெண்கள் 14.5 ஆண்டுகளையும் இழப்பதாக கணிப்பிடப்படுகிறது.

இலங்கையில் புகைத்தல், போதைப்பொருட் பாவனையின் காரணமாக நாளொன்றிற்கு 100 பேர் மரணிப்பதாக இலங்கை மது மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் 2015 ஆம் ஆண்டு அறிக்கை விடுத்துள்ளது. (புகைத்தலினால் 60 பேர் மதுவினால் 40 பேர்) அறிக்கையின் பிரகாரம் புகைத்தலில் புதிதாக ஈடுபடுவதற்காக ஒரு நாளில் 80 சிறுவர்கள் முயற்சிப்பதாகவும் அறியமுடிகிறது. இந்தியாவில் சுமார் 11 கோடி மக்கள் போதைப் பொருள் பாவனையில் சிக்கிதவிப்பதாகவும் அறியப்பட்டுள்ளது!

புற்று நோய் தவிர்ந்த காச நோய், ஆஸ்துமா, பார்வைக் கோளாறு, செவிட்டுத் தன்மை, மலட்டுத் தன்மை, வயிற்றுப்புன், முடி உதிர்வு, தோல் சுருக்கம், பல் சொத்தை போன்ற பல்வேறு நோய்களையும் தாக்கங்களையும் போதைப்பொருட் பாவனையின் மூலம் ஏற்படும் உடலியல் ரீதியான குறைபாடுகளாக அடையாளப் படுத்தலாம். இது தவிர்ந்த இன்னும் பல நோய்களும் உள்ளன.

சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்ட்ட ஆய்வின் பிரகாரம் பல்வேறு காரணங்களை போதைப்பொருள் பாவனையாளர்கள் கூறுவதாக குறிப்பிடப்படுகிறது. அவற்றின் விகிதாசாரம் பின்வருமாரு.

கௌரவத்திற்காக- 31.7 விகிதம், அறிவின்மை- 0.6 விகிதம், பரீட்சிக்கும் நோக்கில்-24 விகிதம் மனக்கசப்பினால்- 16.1 விகிதம், தொழில் நிமித்தம்- 02.8 விகிதம், விருந்துபசாரங்களில்- 06.1 விகிதம், காரணங்களின்றி- 08 விகிதம், பிரச்சினைகளால்- 04.4 விகிதம், ஏனைய காரணங்களால்- 05.5 விகிதம்.

இவ்வாறு சர்வதேச ரீதியில் பல்வேறு காரணங்களை கூறிக்கொண்டும் காரணங்கள் எதுவுமின்றியும் இத்துர்நடத்தைக்கு பழக்கப்பட்டுள்ளனர்.

இது போன்ற ஆய்வொன்றினை இலங்கையில் நடாத்திய சந்தர்ப்பத்தில் அதன் விகிதாசாரம் பின்வருமாரு அமைந்தது.

பல்கலைக்கழகங்களில்- 21 விகிதம், தனிமையிலிருந்து விடுபட- 07.5 விகிதம், மகிழ்ச்சிக்காக- 21 விகிதம், ஓய்விற்காக- 03.3 விகிதம், பரீட்சிக்க- 07.6 விகிதம், நண்பர்களுடன் நேரம் கழிக்க- 08.2 விகிதம், நண்பர்களின் அழுத்தம்- 07.6 விகிதம், பிரச்சினைகளிலிருந்து விடுபட- 03.3 விகிதம், புகைத்தலை விட முடியாமை என்பதனால்- 22.7 விகிதம் என இப்படி பல்வேறு காரணங்களின் அடிப்படையிலும் புகைத்தல் பாவனை இலங்கைத் திருநபாட;டில் பல்லாயிரம் இதயங்களை சாம்பலாக்கி கொண்டிருக்கிறது.

இதனை மாவட்ட ரீதியான விகிதாசாரத்தினை கணிப்பிடும் போது பின்வருமாரு மதிப்பிடப்படுகின்றது. காலி- 44.2 விகிதம், கம்பஹா- 29.8 விகிதம், அநுராதபுரம்- 27.9 விகிதம், கேகாலை- 24.5 விகிதம், கொழும்பு- 20.4 விகிதம், குருனாகல்- 17.1 விகிதம் எனவும் ஏனைய மாவட்டங்கள் இதற்கு இடைப்பட்ட அளவிலான விகிதாசாரத்தில் காணப்படுகின்றன.

இப்படி காரணம் கற்பித்து தமது தீய செயலை சரிகாண முயற்சிக்கும் முட்டாள்கள் போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபட முயற்சிப்பது கிடையாது. தமது கரங்களினாலேயே தம்மை அழித்து கொள்கின்றனர்.

அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறிக்காட்டுகின்றான்.

(وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة واحسنوا ان الله يحب المحسنين)

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள் மேலும் உங்களது கரங்களை நீங்களே அழிவின்பால் கொண்டு செல்லாதீர்கள், மேலும் நன்மை செய்வோரக இருங்கள் அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கிறான் (அல்குர்ஆன் 2:195)

மேலுள்ள திருமறை வசனத்தின் பிரகாரம் பார்க்கும் போது தனக்குரிய புதை குழியை போதைப்பொருள் பாவனையாளர்கள் தாமாகவே தோன்டுகின்றார்கள். தமது கரங்களாலேயே தங்களை அழிக்க முயற்சிக்கிறார்கள். போதைப்பொருள் பாவனை என்பது ஒரு Slow Poison அருந்தும் செயலே தவிரவேறில்லலை.

அல்லாஹ் என்னையும் உங்களையும் பொருந்திக் கொள்ள வேண்டும். நல்லமல்கள் நாளை மறுமையில் நன்மையின் தராசுகளை கனக்கச்செய்யும் தீய செயல்கள் தீமையின் தராசுகளை கனக்கச்செய்யும். நன்மையின் தராசு கனத்து நாம் சுவனத்து சொந்தக்காரர்களாக ஆக பிரார்த்திக்கிறேன்.

– மௌலவி. MSM.ஹில்மி(ஸலாமி), BA(Reading) SEUSL,
DIP.IN.LIBRARY AND INFORMATION SCIENCE

One comment

  1. Shisha Use pannuwazu Kuduma?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *